வைகோ உரை. இஃப்தார் நோன்பு திறப்பு விழா சிராஜ் மகால். 19.9.2008

விவகாரங்கள்: மனித உரிமை, இலக்கியம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்

மனங்களின் இணைப்பே
மதங்களின் சிறப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புனித இரமலான் நோன்பு திறக்கின்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு நான் அழைப்பு விடுத்து இருந்தேன். ஒரு சனிக்கிழமையாக அமைந்தால் அனைவரும் வருவதற்கு வாய்ப்பாக என்று சீமா பஷீர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த நாளையே நான் முதலில் ஏற்பாடு செய்யும்படிக் கூறினேன். ஆனால், ஆண்டுதோறும் இந்த சிராஜ் அரங்கத்தை நமக்கு அன்புடன் வழங்குகின்ற உரிமையாளர்கள், இந்த சனிக்கிழமை ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சிக்கு ஒப்புதல் தரப்பட்டு இருக்கிறது என்று கூறியதால், இன்று வெள்ளிக்கிழமை அன்றே இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

ஒருவகையில் நான் நினைத்துக் கொண்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால், அவரவர்கள் வணிகம், கடைகளை நடத்திவிட்டு இஸ்லாமிய மக்கள் வருவதற்கு சனிக்கிழமை வசதியாக இருக்கும் என்று சீமா பஷீர் சொன்னாலும், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு மிக ஏற்ற நாளாக இருக்கக்கூடிய இந்த நாள், எல்லாவிதத்திலும் சிறப்பாக அமைந்து, இந்தப் பரந்த மண்டபமும் இஸ்லாமிய மக்களால் நிறைந்து, மண்டபத்துக்கு வெளியிலும் பெருமளவில் நமது இஸ்லாமியச் சகோதரர்கள் திரண்டு இருப்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். என் உளம் நிறைந்த நன்றியை வருகைதந்த அனைத்துப் பெருமக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இஃப்தார் எதற்காக?

ஒரு புனிதமான நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றேன். அரசியல் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சியை நான் நடத்தவில்லை. நமது தோழமைக்கு உரிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், தேசிய லீக் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத் தலைவரும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள்.

நாட்டில் உருவாகி வருகின்ற நிலைமைகளைப் பற்றிய கவலைகளால், சமய நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையைக் கருதித்தான், இந்த இஃப்தார் நிகழ்ச்சியை நானே நடத்துகிறேன்.

கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையாக இன்றைக்கு மதத்தீவிரவாதம் இருக்கிறது. அது, குறிப்பிட்ட இந்த மதம்தான் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பல எல்லைகளைத் தாண்டி வளருவதும், அதன் விளைவாக வெறுப்பு வளர்வதும், ஆங்காங்கு கலவரங்கள், மோதல்கள் நிகழ்வதும் தொடர்கின்றன. அந்தக் கலவரத் தீ, நமது அன்னைத் தமிழகத்துக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்ற கவலையால், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து உருவாக்கி, கட்டிக்காத்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு பொது நல ஊழியன் என்ற முறையில் எனக்கு இருக்கிறது என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை நான் முன்னின்று நடத்துகிறேன்.

தேவை நல்லிணக்கம்

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல, கிறிஸ்து மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், மத நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்கள் அனைவருமே இந்த இஃப்தாரில் கலந்து கொள்கிறார்கள். அதைப்போல, அவரவர்கள் மதத்தைச் சார்ந்த விழாக்கள் சிறப்பாக நடக்கட்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தகாலத்தில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டார்களோ, அதைத்தான் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.

மதிப்புமிக்க மதுசூதனன் சுட்டிக்காட்டியதைப்போல, ‘நான் கைலி கட்டாத இஸ்லாமியன்; சிலுவை அணியாத கிறிஸ்தவன்; திருநீறு பூசாத சைவன்’ என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டதன் நோக்கம், அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். இன்றைக்கு ஒரிசாவில் கலவரம், வடமாநிலங்களில் சிலபகுதிகளில் கலவரம், ஆங்காங்கு குண்டுவீச்சுத் தாக்குதல், உயிர்ப்பலி. இந்த நிலைமைகள் வளர்ந்து வருவது மிகுந்த கவலை அளிக்கின்றது. வளருகின்ற இளம்தலைமுறையினரின் உள்ளம் ஆத்திரத்துக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

இந்தியா என்கின்ற இந்தத் துணைக்கண்டத்தில், இந்தப் பரந்த பூகோள நிலப்பரப்புக்கு உள்ளே எல்லா மதங்களும் இருக்கின்றன; எல்லா இனங்களும் இருக்கின்றன; அனைத்து மொழிகளும் இருக்கின்றன. இவையனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால், நல்லிணக்கமான சூழல் வளராவிடில் பேராபத்து சூழ்ந்துவிடும்.

வேற்றுமை மறையட்டும்

எனவேதான், பரவலான ஒருங்கிணைப்பு உணர்வு வளர்வதற்காகத்தான், இந்துக்களின் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளுங்கள்; கிறிஸ்தவர்களின் பண்டிகைளில் இந்துக்கள் கலந்து கொள்ளுங்கள்; இஸ்லாமியர்களின் விழாக்களில் மற்ற மதத்தினர் கலந்து கொள்ளுங்கள் என்று நாம் கருதுகிறோம். அப்படி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நகரத்திலும், துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் அந்தப் பகுதியில் இருக்கின்ற எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் போய்க் கலந்துகொள்கிறபோது ஒருங்கிணைப்பு வளருகிறது, வேற்றுமை மறைகிறது.

தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கட்டும், ஜெப ஒலி கேட்கட்டும்; பள்ளிவாசல்களில் பாங்கு சொல்கின்ற ஒலி கேட்கிறபோதெல்லாம் தொழுகையின் குரல் ஒலிக்கட்டும்; இந்துக் கோவில்களில் ஆறு கால பூஜை, அட்டியின்றி நடக்கட்டும்; குருத்துவாராக்களில் சீக்கியர்கள் வழிபாடு நடத்தட்டும்; பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள், அவர்களுடைய கருத்துகளைச் சொல்லட்டும்; ஜைன மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அவர்கள் கருத்தைச் சொல்லட்டும். ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ளாத பாதையில் சென்றுவிட வேண்டும்.

அண்ணாவின் அணுகுமுறை

அந்த அடிப்படையில்தான், இந்த இஃப்தார் நிகழ்ச்சியை நாங்கள் முன்னின்று நடத்துகிறோம். இஸ்லாமிய சகோதரர்களை உயிராக நேசிக்கின்ற உணர்வை, பேரறிஞர் அண்ணா அவர்கள் எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். அந்த உணர்வை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.

‘இஸ்லாம் மார்க்கம் ஒரு அழகிய முன்மாதிரி; எப்படி குழந்தை தாயிடம் தாவிச் செல்கிறதோ, பெற்றதாய் குழந்தையைத் தாவி அரவணைத்துக் கொள்கிறாளோ அதைப்போல, இஸ்லாம் மார்க்கத்தை இந்தத் தாய்த் தமிழகம் அரவணைத்து ஏற்றுக் கொண்டது’ என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலமாக என்ன கோட்பாடுகளைத் தமிழர்கள் போற்றி வந்தார்களோ அந்தக் கோட்பாடுகளுக்கு உகந்ததாக இருந்ததாலே, இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட செய்தியைச் சொன்னார்கள்.

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றதற்குப்பிறகு, கடற்கரையில் நன்றி தெரிவிக்க வந்தார். இது அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நேரம். செப்டெம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகின்ற நேரம். எனவேதான் நான் நினைவூட்டுகிறேன்.

அண்ணா அவர்கள் பேசிய கடற்கரை நன்றி அறிவிப்புக் கூட்டத்துக்குச் சென்ற இலட்சக்கணக்கான தோழர்களுள் நானும் ஒருவன். அந்த மேடையில் அண்ணா அவர்களுடன், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் இருந்தார்கள்; மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இருந்தார்கள்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ராமமூர்த்தி அவர்கள் இருந்தார்கள்; சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் இருந்தார்கள்; ‘நாம் தமிழர் இயக்கம்’ நடத்திவந்த சி.பா.ஆதித்தனார் அவர்கள் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தோழமைக்கட்சிகளும் இருந்த அந்த மேடையில், வீழ்த்த முடியாத இயக்கம் என்று கருதப்பட்ட காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே காங்கிரஸ்சை வீழ்த்திவிட்டு தனியாகவே ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருந்த சூழலில், கடற்கரையில் நன்றி தெரிவித்துப் பேசுகிறபோது தன்னடகத்தோடு பேசினார் அண்ணா. இவ்வளவு பெரிய வெற்றி பெற்று விட்டோம்; இதுவரை ஆண்டு கொண்டு இருந்த காங்கிரஸ்சை வீழ்த்திவிட்டோம் என்ற அகந்தை, துளியளவுகூட அவர் பேச்சில் இல்லை. மிகுந்த அடக்கத்தோடு சொன்னார்கள்.

‘நாங்கள் இன்று வெற்றி பெற்று வந்து இருக்கிறோம். சிட்டுக்குருவிகள் வலிமை இல்லாதவை. சிட்டுக் குருவிகளை விட வல்லூறு மிகவும் பலம் வாய்ந்தது. வல்லூறு கூரிய அலகுகளைக் கொண்டது. கொத்திக் கிழிக்கக்கூடிய வலிமையைப் பெற்றது. அப்படிப்பட்ட கூரிய அலகு இல்லாதது சிட்டுக்குருவி. ஆனால், சிட்டுக்குருவிகளும், வல்லூறுகளை வீழ்த்துகின்ற ஒரு காலம் வரும் என்று நான் முன்பு சொன்னேன். இன்று சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தி, நாங்கள் வெற்றிபெற்று வந்திருந்தாலும், ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்; இருபது ஆண்டுகள் மிக வலிமையாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது என்றால், நமக்கும் அந்த நிலை ஏற்பட எவ்வளவு நாளாகும்? என்பதை நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்’

என்று பேசினார் அண்ணா. இப்படி எந்தத் தலைவரும் பேசமாட்டார்கள். அவ்வளவு அடக்கத்தோடு அண்ணா அவர்கள் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்.

அல்லாமா இக்பாலின் கவிதை வரிகளைத்தான் இந்தச் சிட்டுக்குருவிகளையும், வல்லூறுகளையும் எடுத்துக்காட்டிச் சொன்னார்கள். அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் என்ன உணர்வுகளுக்காக தமிழகத்திலே சமய ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தாரோ, அந்த உணர்விலே நடைபோடுகின்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் இந்த இஃப்தார் நிகழ்ச்சியை நாங்கள் நடத்துகிறோம்.
ஐம்பெருங் கடமைகள்

இஸ்லாமியப் பெருமக்களின் ஐம்பெருங் கடமைகளுள் ஒன்றுதான் இந்த ரமலான் நோன்பு நோற்பது. இந்த ரமலான் நோன்பின் சிறப்புகளையெல்லாம் மதுசூதனன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஆம், ஏகத்துவத்தை நிலைநாட்டுகின்ற கலிம்மா. அதைப்போல ஐந்துவேளை தொழுகை நடத்துகின்ற கடமை. துன்புற்று வாடி வருபவர்களுக்குப் பசியைப் போக்குவதற்கு அள்ளிக் கொடுக்கின்ற ஜக்காத். அவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கின்ற கடமையை நிறைவேற்றுவதற்கான ரமலான் நோன்பு. ஆம், மக்காவுக்குப் பயணம் செய்கின்ற ஹஜ் யாத்திரை. இந்த ஐந்து பெருங்கடமைகளையும் நினைவூட்டினார்.

அப்படிப்பட்ட கடமைகளை நினைவூட்டுகின்ற நேரத்தில் ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைப் போற்றுகின்றோம். இஸ்லாமிய மக்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள், நேசித்து வருகிறார்கள். பாகிஸ்தான் போர் தொடுத்த நேரத்தில்கூட இந்திய நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று போர்முரசு கொட்டியவர் கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்கள். சீனம் படை எடுத்தபோது, தன் மகனைப் போர்முனைக்கு அனுப்பக் குரல் கொடுத்தவர் கண்ணியத்துக் குரிய காயிதேமில்லத் அவர்கள். இந்த நாட்டையும், மக்களையும் நேசித்தவராகவே காயிதே மில்லத் அவர்கள் இருந்தார்கள்.

காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்று

அவர்கள் ஹஜ் யாத்திரைக்குப் போனார்கள். நான் ஏற்கனவே ஒருமுறை இதைக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர் ஹஜ் யாத்திரை போவதற்குப் பயணமாகிறார் என்று தெரிந்து, சவூதி அரேபிய தூதரகத்தின் தலைமை அதிகாரி ஒரு கடிதம் கொடுத்தார், ‘இந்தக் கடிதம் மன்னருக்காக நான் கொடுத்து இருக்கிற கடிதம். அரேபிய நாட்டுக்கு உள்ளே நுழைந்தவுடன், உங்கள் கடவுச்சீட்டு இவற்றை எல்லாம் ஆய்வு செய்கிறபோது இந்தக் கடிதத்தைத் தாருங்கள்’ என்று சொல்லி, ‘மன்னருக்கு இவர் வருகிறார் என்று தெரிவிக்கின்ற கடிதத்தை அதோடு சேர்த்து, சவூதி அரேபியாவின் தூதர் கொடுத்து இருந்தார்.

இந்தக் கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டார் கண்ணியத்துக்கு உரிய காயிதேமில்லத் அவர்கள். ஆனால், சவூதி அரேபியாவுக்கு உள்ளே நுழைகிறபோது இவருடைய பாஸ்போர்ட், இவருடைய விசா இவை எல்லாம் பார்க்கிறபோது இந்தக் கடிதத்தை இவர் காட்டவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற மற்ற இஸ்லாமிய சகோதரர்களோடு சென்று எளிமையான முறையில் தங்கிவிட்டார். ஆனால், மன்னர் இவரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

“இந்தியாவில் வாழ்கின்ற கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் ஒருபெரும் தலைவர், மன்னருக்கு நிகரான செல்வாக்குப் பெற்ற மாபெரும் தலைவர், காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் அங்கே வருகிறார்கள்” என்று தகவல் ஏற்கனவே அரண்மனைக்குப் போய் இருக்கிறது. ஆனால், மன்னரின் அரண்மனைக்கு இன்னும் அவர் வந்து சேரவில்லை. மன்னர், தூதர்களை அனுப்பி விசாரிக்கிறார். ‘எவரும் வரவில்லை’ என்ற தகவல் கிடைக்கிறது. அவர் வந்தாரா இல்லையா? என்கிறார். ‘அவர் வந்ததாகத்தான் தெரிகிறது. யார் என்று தெரியவில்லை’ என்றவுடன், தீவிரமாக விசாரிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து சென்றவர்களிடமும், மற்ற இந்தியர்களிடமும் விசாரிக்கிறபோது காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் அங்கே இருப்பதை அறிந்துகொண்டார்கள். அவர் தங்கியிருந்த இடத்துக்கு இராணுவச் சிப்பாய்கள், காவல்துறை அதிகாரிகள், கனத்த பூட்ஸ் கால்களோடு துப்பாக்கி சகிதமாகச் செல்கிறார்கள். எளிமையே வடிவமான காயிதே மில்லத் அவர்கள், இந்த இடத்துக்கு இவ்வளவு பெரிய அதிகாரிகள் வர வேண்டிய தேவை என்ன? என்று கேட்கிறார்கள். ‘காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் நீங்கள்தானா? என்று கேட்கிறார்கள். இவர் தன்னடக்கத்தோடு, ‘ஆமாம்’ என்று பதில் சொல்கிறார்.

உங்களுடைய கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் நாங்கள் பார்வையிட வேண்டும் என்கிறார்கள். மற்றவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். அவர் அமைதியாக தன் கைப்பையை எடுத்துக் கொடுக்கிறார். அந்தக் கைப்பையைப் புரட்டிப் பார்க்கிறார்கள். மன்னருக்கு எழுதப்பட்ட பரிந்துரைக் கடிதம் அந்தப் பைக்கு உள்ளே இருக்கிறது.

உடனே அவர்கள் சொல்கிறார்கள்: ‘உங்களை எதிர்பார்த்து மன்னர் அரண்மனையில் காத்துக் கொண்டு இருக்கிறார். நீங்கள் இந்தக் கடிதத்தைக் கொடுக்காமலே வந்துவிட்டீர்களே? நீங்கள் மன்னரின் அழைப்பை ஏற்று அரண்மனைக்கு வர வேண்டும். மன்னரின் விருந்தினராக நீங்கள் அங்குதான் தங்க வேண்டும். அரண்மனையில் உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது’ என்று சொன்னபோது, ‘என் சகோதரர்களோடு நான் இங்கேயே தங்கி விடுகிறேனே’ என்கிறார்கள். இருப்பினும் மன்னரின் அழைப்பை ஏற்று, மரியாதை நிமித்தம் நான் அவரை வந்து சந்திக்கிறேன் என்று அரண்மனைக்குச் செல்கிறார். அரண்மனையில் மன்னர் இவரை வரவேற்கிறார். ‘நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம்’ என்றபோது, ‘இல்லை நான் சக இந்தியர்களோடு தங்கிக் கொள்கிறேன்’ என்று அங்கே வந்து தங்கிக் கொள்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்குத் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. கடுமையான காய்ச்சல். மருந்து கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை. பாகிஸ்தான் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தகவல் கிடைக்கிறது. பாகிஸ்தான் அரசு சார்பில், ஹஜ் பயணம் வருகின்ற பாகிஸ்தனியர்களுக்காக ஒரு சிறப்பு மருத்துவமனை அமைத்து இருக்கிறார்கள். அவர்கள் காயிதேமில்லத்தைச் சந்தித்து, நீங்கள் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். எங்களுடைய அரசு தகவல் கொடுத்து இருக்கிறது; உயர்ந்த மருத்துவத்தைச் செய்வதற்கு அங்கே மருத்துவர்கள் இருக்கிறார்கள்; எனவே, நீங்கள் அங்கு வரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவர் மறுத்து விடுகிறார்.

‘என் நாட்டு மருத்துவர்கள் தந்த மருந்து இருக்கிறது. ஆகவே, உங்களுடைய அழைப்புக்கு நன்றி. நான் இங்கேயே இருந்து சிகிச்சை பெறுவேன்’ என்று அந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.

இவை எல்லாம் சிறிய செய்திகள் அல்ல. இந்த நாட்டை உயிரினும் மேலாக நேசித்தவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதை நினைவூட்டுவதற்காகத்தான் இந்தச் செய்தியை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.

அரவணைத்த அண்ணல்

அதைப்போல ஒரு அரசுப் பொறுப்புக்கு வருகின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் கலிபாக்கள். கலிபாக்கள் என்றால், ஏறத்தாழ மன்னருக்கு நிகரான அதிகாரம் பெற்றவர்கள். ரஹ்மானின் அருள்மழை பொழிய வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இசை முரசுவின் எதிரொலியாக இருக்கின்ற என் பாசத்துக்குரிய அபுபக்கர் அந்தப் பாடலைப் பாடினார்.

நான் இரண்டு பாடல்களைப் பாடச் சொன்னேன். நீ ரகுமானைப்பற்றி ஒரு பாடல் பாடு. நான் விரும்பிக் கேட்கின்ற இன்னொரு பாடல்; ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’ என்ற பாடலையும் நீ பாடவேண்டும் என்று சொன்னேன். நேரமில்லை என்பதால், பாட முடியாமல் சென்று விட்டார். அந்தப் பாடல் உள்ளத்தை உருக்குகின்ற பாடல். அரேபிய வெளியில் உருவிய வாளோடு நின்று போராடிய நபிகள் நாயகம், எல்லா மதத்தினரையும் மதித்தார். யூத மதத்தினரை மதித்தார்கள். வேறு மார்க்கத்தைச் சேர்ந்தவர்களை மதித்தார்கள். எண்ணற்ற செய்திகள், சம்பவங்கள் உண்டு. காலத்தின் அருமைகருதி அவற்றை எல்லாம் விவரிக்க எனக்கு நேரம் இல்லை.

ஸல்லல்லாஹு அலைஹு வ ஸல்லம் அண்ணல் முகமது அவர்களிடம், எல்லோரையும் அரவணைக்கக்கூடிய தன்மை இருந்தது. அண்ணல் முகமது அப்படிப்பட்ட உணர்வோடுதான் வாளோடு நின்று போராடினார். எத்தனையோ போர்க்களங்கள். ஒவ்வொன்றும் ஒரு தியாக சரித்திரம். நான் கடந்தமுறை ரமலான் நிகழ்ச்சியில் சொன்னேன். சகபாக்களின் உயிரைக் காப்பதற்கு ஒவ்வொருவரும் எப்படி உயிர்த் தியாகம் செய்தார்கள் என்று சொன்னேன்.

அது கம்சுக் கோட்டை போர்க்களமாக இருக்கட்டும்; கைபர் கோட்டை போர்க்களமாக இருக்கட்டும்; பத்ரு போர்க்களமாக இருக்கட்டும்; அகழிச் சண்டையாக இருக்கட்டும். ஒவ்வொரு யுத்தகளத்திலும் அவர் நிலைநாட்டி இருக்கின்ற வீரம்,அவர் காட்டிய உறுதி. குறைந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு பெரும்படைகளைச் சிதறடித்து இருக்கின்றார். அவருக்குப் பின்னால் வாளோடு நின்றவர்கள், மரணத்துக்கு அஞ்சாது நின்று போராடி இருக்கிறார்கள். 70 பேர் சேர்ந்து தூக்க முடியாத கோட்டைக் கதவை ஒரு கையாலே பிடுங்கி எறியக்கூடிய ஆற்றல், மாவீரன் அலிக்கு இருந்தது என்று சொன்னால், ‘அதை இயக்கிய உரம் இறைவனுடையது. பயன்பட்ட கரம் அலியினுடையது’ என்று சொன்னார்கள்.

ஆட்சியாளரின் இலக்கணம்

அப்படிப்பட்ட அலி உள்பட 4 பேர் கலிபாக்களாக இருந்தார்கள். அபுபக்கர் ஒரு கலிபா. மாவீரன் அலி ஒரு கலிபா. உமர் ஒரு கலிபா. உதுமான் ஒரு கலிபா. இந்த நான்கு பேரும் கலிபாக்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, குற்றம் குறைகளுக்கு அப்பாற்பட்டு, தான் தனது தன் குடும்பம் என்ற எண்ணம் இன்றி இருக்க வேண்டும்.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.அரசுப் பொறுப்புக்கு வருகிறவன் தன் குடும்பத்தின் நன்மையைக் கருதி ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடாது. அதுதான் பின்பற்ற வேண்டிய ஒரு நெறிமுறை ஆகும்.

உமர் அவர்கள் கலிபாவாக இருந்தார்கள். உமரின் பிள்ளை கிழிந்த கால்சட்டையோடு பள்ளிக்கூடத்தில் இருந்து அழுது கொண்டே வருகிறான். ‘ஏன் அழுகிறாய் மகனே?’ என்று தாய் கேட்கிறாள். ‘என் கால்சட்டை கிழிந்து இருக்கிறது. எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள். இதைப்போட்டுக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு எப்படிப்போவேன்?’ என்று அழுகிறான். உமர் யோசிக்கிறார். இந்தப் பிள்ளையின் அழுகையும் கண்ணீரும் அவரை உலுக்குகிறது. கையில் பணம் இல்லை. கலிபாவுக்குக் கையில் பணம் இல்லை. கருவூல அதிகாரிக்கு எழுதுகிறார். ‘அடுத்த மாதம் கலிபாவுக்கு உரிய சம்பளத்தை நீங்கள் அனுப்பி வையுங்கள்’ என்று, பிள்ளைக்கு சட்டை அணிவிப்பதற்காகக் கேட்கிறார்.

அதற்கு, அந்தக் கருவூல அதிகாரி பதில் கடிதம் எழுதுகிறார். ‘கலிபா அவர்களே, அடுத்த மாதம் நீங்கள்தான் கலிபாவாக இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகையால் உங்களுக்கு அடுத்தமாதச் சம்பளத்தை இப்போது கொடுக்க முடியாது’ என்று எழுதுகிறார்.

கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இந்த உணர்வுகள் சாதாரணமானவை அல்ல.

பாட்டன் சொத்து அல்ல

அதைப் போலத்தான் ஸல்லல்லாஹு அலைஹு வ ஸல்லம், அந்த அரேபிய பெருவெளியின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தாரே அப்படிப்பட்ட அன்னல் முகமது அவர்களின் பேரப்பிள்ளை, அரசாங்கத்துக்குரிய பேரிச்சைப் பழங்களை எடுத்துச் சாப்பிட்டபோது உடனே கண்டித்தார். பேரப்பிள்ளை மீது அவருக்கு உயிர்தான். ஆனால், அந்தப் பிள்ளையைக் கண்டித்து, அதைத் தொடாதே இந்தப் பேரீச்சம்பழம், உன் பாட்டன் முகமதுவின் சொத்து அல்ல. அது அரசாங்கத்தைச் சேர்ந்தது. அதை நீ தொடக்கூடாது’ என்று சொன்னார், அத்தகைய உணர்வு அவரிடம் இருந்தது. அப்படித்தான் அவர்கள் அரசு நடத்தினார்கள்.

எந்த நாடாக இருக்கட்டும், எந்த மதமாக இருக்கட்டும், எந்த இனமாக இருக்கட்டும். எப்படி திருவள்ளுவரின் கருத்துகள் உலகப் பொதுமறையாக எல்லோராலும் பின்பற்றப்படுகிறதோ அதைப்போல இந்த உயரிய கருத்துகள் எல்லாக் காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற கருத்துகளாகத் திகழ்கின்றன.

குறிப்பிட்ட கலிபாக்களின் காலம் முடிந்தபிறகு, அடுத்து யார் கலிபாவாக வருவது? யார் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது? என்ற கேள்வி வருகிறபோது, நியாயமான முறைப்படிதான் வரவேண்டும். மக்களாட்சி முறைப்படிதான் வரவேண்டும் தகப்பனுக்குப் பிள்ளை கலிபா என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு விரோதமாக கலிபா மூவாவினுடைய மகனை தகப்பனுக்குப் பின்னால் கலிபாகவாக ஆக்க நினைத்தபோது, அதை எதிர்த்தார்கள்.

எதிர்த்தது யார்? அண்ணல் முகமதுவின் பேரப்பிள்ளைகள். அன்னை பாத்திமாவின் அருமைப்பிள்ளை இமாம் உசேன் அவரை எதிர்த்தார். எதிர்க்கிற அளவுக்குப் படை இல்லை. உயிர் போகும் என்று தெரிந்தும் எதிர்த்தார். அதுதான் கர்பலா யுத்தம்.

குருதி கொப்பளித்த கர்பலா போர்க்களம்

உலக வரலாற்றில் நெஞ்சை உலுக்குகின்ற போர்க்களக் காட்சிகளை நான் மறந்தது இல்லை. அப்படிப்பட்ட யுத்தகளக் காட்சிதான் கர்பலா யுத்தம். ஏறத்தாழ 20 மடங்கு அதிக எண்ணிக்கையுள்ள படைகளை எதிர்த்து, இமாம் உசேன் போருக்குச் சென்றார்.

அவர் போர்க்களத்தில் நிற்கிறபோது சுற்றிலும் வளைத்துக் கொண்டு தாக்கினார்கள். அவனை ஈடுகொடுக்க முடியவில்லை அந்தப் படை. உடன்வந்த சஹபாக்கள் கொல்லப்பட்டார்கள். இவர் மேனியெங்கும் காயப்பட்டு உடம்பெங்கும் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டு இருந்தது. உடம்பில் இருந்து இரத்தம் வெளியேறிவிட்டால், தாகம்தான் ஏற்படும். தண்ணீர் குடித்து தாகத்தைச் சரிசெய்து மீண்டும் போரிடலாம் என்று குதிரையை ஒரு நதிக்கரை நோக்கிச் செலுத்திக் கொண்டு போனான் இமாம் உசேன்.

அந்த நதியில் போய்நின்று குதிரையை விட்டுக் கீழே இறங்கி தண்ணீரை இரண்டு கைகளாலும் அள்ளிப் பருகுவதற்கு முனைந்தபோது, பாய்ந்துவந்த காட்டு ....... ஏவிய அம்பு நாக்கில் தாக்கியது. அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு, தண்ணீர் குடிக்காமல் மீண்டும் குதிரைமீது ஏறி யுத்தத்துக்குப் போனார். சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். உடம்பெங்கும் ஈட்டிகள் பாய்ந்து கீழே விழுந்தார் இமாம் உசேன். அவரது தலையைத் துண்டாக வெட்டினான் ....... என்பவன். அதற்குப்பிறகு அந்தத் தலையைத் தூக்கிப் போட்டு பந்து விளையாடுவதைப்போல மத்தளம் கொட்டிக்கொண்டு போனார்கள். இந்த கர்பலா யுத்தகள காட்சியை வரலாற்று ஆசிரியர் வர்ணிக்கின்றார்.

அண்ணல் முகமது எந்தப் பேரப்பிள்ளையை மடியிலேபோட்டுக்கொண்டு கொஞ்சினாரோ, எந்த பேரப்பிள்ளையை உதடுகளில் முத்தமிட்டு மகிழ்ந்தாரோ, அந்தப் பேரப்பிள்ளையின் தலை துண்டாக வெட்டப்பட்டு பந்தாடப்பட்டது. அதைத்தான்,

‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’

என்று இசை முரசு அந்தப் பாட்டைப் பாடினார்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், வாரிசு பராம்பரியம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை இஸ்லாம். அதைத்தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த உணர்வுகள் எங்களிடத்தில் விதைக்கப்பட்டவை.

அத்துமீறும் அமெரிக்கா

இன்றைக்கு உலகம் மாறி வருகிறது. இரண்டுவிதமான சூழல் உருவாகி வருகிறது. ஒரு பக்கத்தில் ஈராக்மீது போர் தொடுத்த அமெரிக்கா; ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்கா. ஈராக்கில் உள்ள 10 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் சாகக் காரணமான அமெரிக்கா. சதாம் உசேன் சர்வாதிகாரியா? ஜனநாயகவாதியா? நமக்கு அக்கறையில்லை. அவரது நடவடிக்கைகள் எனக்கு உடன்பாடு அல்ல. ஆனால், அந்த நாட்டுக்கு உள்ளே உனக்கு என்ன வேலை? இவனுக்கு அங்கு என்ன அதிகாரம்?

எனவேதான், ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, ‘இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது’ என்று நான் சிறையில் இருந்தே கடிதம் எழுதினேன் அன்றைய பிரதமருக்கு. அதைப்போல ஈராக்குக்கு இங்கே இருந்து செய்த உதவிகள் மன்னிக்க முடியாதவை. சதாம் உசேன் தூக்கில் இடப்பட்ட செய்தியும் மிகக்கொடூரமானது.ஆக, பத்து இலட்சம் குழந்தைகளையும் சாகடித்து, ஈராக்கில் இவ்வளவு உயிர்பலி ஏற்பட காரணமானதும் அமெரிக்காதான்.

நமது கவலை

இதன்விளைவாக, வளைகுடா நாடுகளில் வளரும் அப்பாவி இளைஞர்கள் உள்ளத்தில் ஆத்திரம் வளருகிறது. அதனால், கொடூரச் சம்பவங்கள் நடக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது நமக்கு. கிறிஸ்து மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற வெள்ளைக்காரனுக்கும், இஸ்லாமியத்தைப் பின்பற்றுகின்ற அராபிய மக்களுக்கும் இடைவெளி அதிகமாகி, பெரும் விபரீதமான சூழல் உருவாகி விடுமோ என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது.

இனிமேல் உலகத்தில் ஒருபகுதியில் நடக்கின்ற சம்பவத்தைப்பற்றி நாம் இங்கே அலட்சியமாக இருக்கமுடியாது. உலகத்தில் ஒருபகுதியில் நடக்கின்ற சம்பவம் இன்னொரு பகுதியைப் பாதிக்கும்.

ஒரு கடுமையான கெடுபிடிப்போர் உருவாகி விடுமோ என்று கவலை எழும்புகிறபோது ஆறுதலாக, பாலைவனத்தில் பயணம் செய்கிறபோது பேரிச்சம் பழ மரங்கள் நிறைந்த பசுஞ்சோலை கண்ணுக்குத் தெரிவதைப் போல ஆறுதலாக, ஒரு செய்தி தோழர்களே! ஈராக்கில் அமெரிக்கா படையெடுத்து, இஸ்லாமிய மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையில் கசப்புணர்வு வளர்ந்து இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்லவே?

மாறுகிறது நிலைமை

எதிர்காலத்தில் சிலுவைப் போர்களைப் போன்ற மோதல் வந்துவிடுமோ என்ற கவலை வருகிறபோது, அந்தக் கவலையைத் தீர்க்கின்ற மாமருந்தாக ஒரு செய்திவருகிறது. ஆம் நண்பர்களே, கென்யா நாட்டிலே பிறந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் பாரக் உசேன் ஒபாமா. அந்த நீக்ரோ முஸ்லிம். அவர் கல்லூரியில் படிக்கச் சென்ற இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் டன்ஹாம் என்கின்ற வெள்ளை இன மாதை காதலித்துத் திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் இன்றைக்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அமெரிக்கத் தேர்தல் களத்தில் நின்று கொண்டு இருக்கின்ற, பாரக் ஒபாமா. பலபேர் இதை அறிய மாட்டார்கள்.

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியுமா? அதிலும் கருப்பர். கருப்பர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், மனிதர்களாகவே நடத்தப்படாத அமெரிக்காவில், கருப்பர்கள் மனிதர்கள் அல்ல என்று ஒரு காலத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்ன அமெரிக்காவில், ஒரு கருப்பர். அதிலும் எப்படிப்பட்ட கருப்பர்? ஒரு முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த கருப்பர். இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை வெற்றிபெறவும்கூடும் நாளைக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக உட்காரவும்கூடும் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது என்றால் நான் முன்பு சொன்ன நிலைமை கவலை அளிக்கிறது - இந்த நிலைமை ஆறுதல் அளிக்கிறது.

ஆக, உலகம் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இது எவ்வளவு பெரிய மாற்றம்! ஜனாதிபதி வேட்பாளராக ஆனதே ஒரு அதிசயம் அல்லவா? தேர்தல் தீர்ப்பு ஒரு பக்கத்தில் இருக்கட்டும். நவம்பர் 4 ஆம் தேதி தெரியும். உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

மக்கள் ஆட்சியின் அடிப்படை

இவற்றை எல்லாம் பாடமாகக் கொண்டு, வேற்றுமைகளை மறைத்து, ஐக்கிய உணர்வோடு நாம் தமிழகத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.அந்தவகையில், எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் எல்லா காலத்திலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு அரணாகவே இருந்து வந்து இருக்கிறோம். பெரும்பான்மை மக்களுக்கு உரிமைள் தேவைதான்.சிறுபான்மை மக்களின் அரண் என்பது மக்கள் ஆட்சியின் அடிப்படை. இதுதான் என்னுடைய கருத்து.

ஆகவேதான், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடியவர்களாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. நாங்கள் தோழமை கொண்டு இருக்கக்கூடிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் நாங்கள் அரணாக இருப்போம். பாதுகாவலாக இருப்போம்.

இஃப்தார் நோன்பு திறக்கின்ற இந்த நல்ல நாளில், எளியவனின் அழைப்பை ஏற்று அன்போடுவந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது உங்களுக்குத் தேவை என்னுடைய ஆதரவு அல்ல. உங்களுடைய ஆசியும், அன்பும், வாழ்த்தும்தான் எனக்குத் தேவை.

இந்த நல்ல நேரத்தில் எனக்கு வலிமை ஏற்பட, என் தோள்களுக்கு வலிமையும், என் நெஞ்சில் உரமும் அநீதியை எதிர்த்துப் போராடுகிற எங்கள் போரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஆசியும் இஸ்லாமிய சமுதாயத்துப் பெருமக்கள் எனக்கும், எங்கள் இயக்கத்துக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு, அழைப்பை ஏற்று வந்த அண்ணா தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சியினருக்கு, நன்றி தெரிவித்து வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில்
வைகோ ஆற்றிய உரை

சிராஜ் மஹால், எழும்பூர், சென்னை. 19.9.2008)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)