முல்லைப் பெரியாறு.நீதியை நிலைநாட்டுக! தமிழக உரிமையை மீட்டுத் தருக!
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய, அரசியல்
மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்
முல்லைப் பெரியாறு
நீதியை நிலைநாட்டுக
தமிழக உரிமையை மீட்டுத் தருக,
இந்த மாபெரும் பேரணியின் நோக்கத்தைத் திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்ற விதத்தில், கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் - எனது ஆருயிர்ச்சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள் முன்மொழிய, கடலெனத் திரண்டு இருக்கின்ற தமிழர் கூட்டம் அதை வழிமொழிய, இந்தத் தீர்மானம் நடுவண் அரசின் கவனத்திற்கும், கேரள அரசாங்கத்தின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.
பல்லாயிரக்கணக்கிலே திரண்டு இருக்கின்ற இந்த மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் ஒன்றை நான் தெளிவுபடுத்திக் கூற விரும்புகின்றேன். இந்தப் பேரணி அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்ற பேரணி அல்ல. குறுகிய அரசியல் இலாப நோக்கம் கொண்ட பேரணி அல்ல. எவர் மீதும் கோபதாபங்களைக் காட்டுவதற்காகத் திரட்டப்பட்டு இருக்கின்ற பேரணி அல்ல. தமிழகத்தை வளைத்து வருகின்ற கேடுகளைச் சுட்டிக்காட்டி, அந்த ஆபத்திலே இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகின்ற பேரணி ஆகும்.
இந்தப் பேரணிக்கு வருகை தந்து இருக்கின்ற அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து நம்முடைய கே.அப்பாஸ் அவர்களைப் போல, பெருமளவிலே திரண்டு வந்த தமிழ் மக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாசி வீதிகளின் சந்திப்பிலே இருந்து அடிவயிறு வலிக்க முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வந்த சிங்க ஏறுகளாம் தமிழ் மக்களுக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற வழியெல்லாம் மதில் வைத்தாற்போல் நின்று தமிழ் மக்கள் இந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்கினார்களே, அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
1886 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29 ஆம் நாள் அன்றைய திருவாங்கூர் சமஸ்தான அரசாங்கத்திற்கும் - பிரிட்டிக்ஷ் அரசாங்கத்திற்கும் இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் ஆகும். 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன் தொடங்கி வைத்தான் என்றால், சரியாக ஏறத்தாழ பன்னிரண்டு மாதம் கழித்து 1886 இல் ஆங்கிலேயருடைய முயற்சியாலே போடப்பட்ட ஒப்பந்தம் முல்லைப் பெரியாறு அணை குறித்த ஒப்பந்தம் ஆகும். அதனுடைய உரிமைகளைக் காப்பதற்கு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் 19 ஆம் தேதியில் இங்கே நாம் திரண்டு இருக்கிறோம்.
செப்டம்பர் 19 இன் சிறப்புகள்!
இந்தச் செப்டம்பர் 19 ஆம் நாளின் சிறப்புகளை எண்ணிப் பார்க்கிறேன். இதே நாளில்தான், 1945 ஆம் ஆண்டு இந்திய நாட்டிலே பறந்து கொண்டு இருந்த - டெல்லியிலே பறந்து கொண்டு இருந்த யூனியன் ஜாக் கொடி அகற்றப்படுவதற்கும், இந்த நாட்டின் விடுதலைக் கொடி உயர்வதற்கும், உறுதிமொழி வழங்கப்பட்ட நாள் இந்தச் செப்டம்பர் 19 ஆகும். அதைப் போலவே, ‘இந்தியா - பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிக்கப்படக் கூடாது. என்னுடைய பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இந்த மண்ணிலே இருந்து பிளவுபட்டுச் செல்ல முடியும்’ என்று அண்ணல் காந்தி அடிகள் கூறினார். ஆனால், அதற்கு மாறாக ‘அடைந்தால் பாகிஸ்தான் இல்லாவிடில் கபர்ஸ்தான்’ என்று முழங்கிய ஜின்னாவின் வீரர்கள் பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டதற்குப் பிறகு, பகை பாராட்டிக் கொண்டு இருந்த இந்தியாவும் - பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு, இதே செப்டம்பர் 19 ஆம் நாள் சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றிய நாள் என்பதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். அதற்குப் பிறகு, எத்தனையோ போர்கள் மூண்டு இருக்கின்றன சகோதரர்களான நமக்கு இடையில். ஆனாலும்கூட, நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் இன்றுவரை பாகிஸ்தானத்திற்கும் - இந்தியாவுக்கும் எந்த மோதலும் இல்லை. கசப்பு இல்லை. வெறுப்பு இல்லை. வேற்றுமை இல்லை. தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதிலே பங்காளிச் சண்டை இல்லை.
ஆனால், நம் சொந்தச் சகோதரர்கள் - ஒரே நாட்டின் குடிமக்களாக இருக்கின்ற நம்முடைய அருமைச் சகோதரர்கள், திராவிட இனத்தின் ஒரு மூல வேரில் இருந்து வந்ததுதானே திராவிடம். அந்தத் திராவிடத்தின் சகோதரர்கள் எங்கள் மலையாள நாட்டின் அன்பு பாசமிக்க சகோதரர்கள் - அண்ணனும் தம்பியுமாக வாழ வேண்டிய நமக்கு உள்ளே மோதல் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை. மோதலுக்கு வித்து ஊன்றுகிற கூட்டமும் இல்லை இந்தக் கூட்டம். மோதலுக்கு வித்து ஊன்றுகின்ற பேரணியும் அல்ல இந்தப் பேரணி. எனது அன்புக்கு உரிய கேரள மாநிலத்திலே இருந்து வந்து இருக்கின்ற செய்தியாளர்களே, உங்கள் மூலமாக நான் கேரள மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். பாடிச் செல்லுகின்ற பறவைகள் மூலமாக எங்கள் உணர்வுகளைச் சொல்லுவோம் என்று காதலர்கள் சொல்வதைப்போல, மிதந்து செல்லுகின்ற மேகக்கூட்டம் எங்கள் நட்பு உறவைச் சொல்லட்டும் கோப்பெருஞ் சோழனிடம் என்று தெற்குச் சீமை புலவன் சொன்னதைப் போல, செய்தியாளர்கள் மூலமாக, தொலைக்காட்சிகளின் மூலமாக கேரள மாநிலத்திலே வாழுகின்ற சகோதர சகோதரிகளுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். பகை உணர்ச்சியை வளர்ப்பதற்கு அல்ல, பாச உணர்ச்சி பட்டுப்போகாமல் பாதுகாக்க விழைகிறேன்.
கலவர வித்து ஊன்றுவோர்!
கேரள மாநிலத்தோடு எங்கள் உணர்வுகள் சகோதர பாசமிக்க உணர்வுகளாகவே வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். ஏன், இதைக் கூறுகிறேன் எனில், அச்சத்தை ஊட்டுவதும், ஆபத்து விளையும் என்று விபரீதமான எண்ணங்கள் விளைவதும், கலவரத்திற்கு வித்து ஊன்றுவதுமான வேலைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்பதை நான் வருத்தத்தோடு தெரிவிக்க விரும்புகின்றேன். அவர்கள் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்யவில்லை. குறுகிய உணர்வுகளுக்குத் தூபம் இட்டு, அந்த உணர்வுகளைத் தாலாட்டி வளர்த்து, அதன் மூலமாக வெறுப்பு மண்டிக் கிடக்கவேண்டும் அவர்கள் மனங்களிலே என்று கருதுவது நியாயம்தானா?
கேரள மாநிலத்தில் வாழும் மக்களுக்கு - ஐந்து மாவட்ட மக்களுக்கு எந்தக் கேடும் ஏற்படப் போவது இல்லை. அவர்களுக்கு ஊறு விளைவித்துவிட்டு நாங்கள் வாழ வேண்டும் என்றா நாங்கள் விரும்புகின்றோம்? ஒருக்காலும் இல்லை. அவர்களும் எங்களுடைய சகோதரர்களே. அங்கு வாழுகின்ற மக்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஒரு கடுகு அளவு ஊறு நேருமானாலும் நாங்கள் இந்தப் பிரச்சினையை இப்படி முன் வைக்க மாட்டோம். ஊறு நேரப் போவது இல்லை. அதற்கு வாய்ப்பே கிடையாது.
வைகோ பேரணி நடத்துகிறாராமே? மறுமலர்ச்சி தி.மு.க. பேரணி நடத்துகிறதாமே? சல்லடம் கட்டுகிறார்களோ - எங்கே மதுரையம்பதியிலே. பாண்டியன் திருநகரிலே - வீரம் நிறைந்த மதுரைச் சீமையிலே, ஏதோ தகராறுக்கு வழிவகுக்கிறார்களோ என்று எவரும் கருதிவிடக் கூடாது. கேரள மக்கள் கருதிவிடக்கூடாது. இங்கே வந்து இருக்கின்ற கேரள அரசாங்கத்தின் புலனாய்வுத் துறை நண்பர்கள் மூலமாக, அந்த மாநில அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இந்த நாட்டினுடைய ஒற்றுமையை விரும்புகிறோம். இந்தியாவின் ஒற்றுமையை விரும்புகிறோம். நட்பை விரும்புகிறோம். விரோதத்தை அல்ல.
முல்லைப் பெரியாறு அணை உரிமை 999 ஆண்டுகளுக்கு எங்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கி இருக்கின்ற எவராலும் அசைக்கமுடியாத - மறுக்க முடியாத உரிமை. நாங்கள் ஒன்றும் பிச்சைக் கேட்கவில்லை. யாசகம் கேட்கவில்லை. 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு, அன்றைய பிரிட்டிக்ஷ் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 999 ஆண்டுகள் முடிந்ததற்குப் பின்னரும், அதே உரிமைகளை மேலும் 999 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய சரத்தை உள்ளடக்கிய ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசுக்கு உரிமை கிடையாது. அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இது திட்டவட்டமாக எடுக்கப்பட்ட முடிவு. உச்சநீதிமன்றத்தின் முன் இந்தப் பிரச்சனை முன்வைக்கப்பட்டு - உச்சநீதிமன்றம் விருப்புவெறுப்பு அற்று துலாக்கோல் நிலையிலே இருந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டு, இரண்டு மாநில அரசுகளின் தரப்பிலே வைக்கப்பட்ட வாதங்களை ஆய்வு செய்து, வல்லுநர் குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து, எடுத்து வைக்கப்பட்ட கேரள அரசாங்கத்தின் எதிர்ப்புக் கருத்துகளை ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நீதி வழங்கி இருக்கிறது.
இந்த மதுரை நீதிக்குப் பெயர்பெற்ற இடம். என்னுடைய அருமை கேரள நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதியை நிலைநாட்டிய இடம் எங்கள் மதுரை. ஆம் எங்கள் உரிமைக்கு உரிய பத்தினித் தெய்வம் கண்ணகி, எங்கள் மண்ணுக்குள் - எங்கள் எல்லைக்குள் இருக்கவேண்டிய பத்தினி தெய்வம் கண்ணகி ஒரு வணிகர் குலத்துப்பெண். அந்தப் பெண்ணுக்கு ஒரு கேடு விளைவிக்கப்பட்டது. குற்றம் செய்யாத அவளுடைய கணவன் படுகொலை செய்யப்பட்டான். அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொண்டு கண்ணகிப் பெருந்தேவி மன்னனிடம் போய் முறையிட்டாள். மன்னன் தன்னுடைய உயிரைக் கொடுத்து நீதியை நிலைநாட்டினான். நீதி நிலைநாட்டப்பட்ட இடம் இந்த மதுரையம்பதி.
நீதியை நிலைநாட்டிய இடம்!
மன்னனும், குடிமக்களும் ஒன்றுதான் என்று நீதியை நிலைநாட்டிய இடம்தான் எங்கள் பாண்டிய மண்டலம். ஆகவேதான், இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றம் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கின்றது. நாங்கள் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் கேட்கின்றோம். தம்பி சம்பத் அவர்கள் சொன்னதைப் போல, இங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது தடி எடுத்தவன் தண்டல்காரனா? சட்டத்தின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்பட்டால், பிறகு கலவரம்தான் மிஞ்சும். சட்டத்தின் ஆட்சிதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்ற முடியும். சட்டத்தின் ஆட்சி நடப்பது உண்மையானால், உச்ச நீதி மன்றம் தீர்ப்புச் சொல்லி இருக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி உச்சநிதிமன்றத்தின் தலைமை நீதிபதி சபர்வால் உட்பட இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாக்கர், ஜஸ்டிஸ் பாலசுப்பிரமணியம் மொத்தம் மூவர் இந்த நீதிபதிகள் வழங்கி இருக்கின்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறில் நீரை உயர்த்திக் கொள்ளலாம். அணையை மேலும் வலுப்படுத்துகின்ற எந்த வேலைகளையும் தமிழ்நாடு அரசு செய்யலாம். இதற்கு முட்டுக்கட்டையாகக் கேரள அரசு எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறது.
என்னுடைய அன்புக்கு உரியவர்களே, கேரளத்திலே விபரீதமான எண்ணங்களை வளர்ப்பதற்கு - தவறான தகவல்களைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டு இருப்பவர்களுக்குச் சொல்லுகிறேன். கேரள மக்களிடத்திலே உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அணைக்கு ஆபத்து இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் ஆபத்து இல்லை. இதுவரைக்கும் ஏற்பட்ட அத்தனை நிலநடுக்கங்களாலும், அணைக்கு எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தாது. இதைவிட இரண்டு மடங்கு ரிக்டர் அளவு உள்ள நிலநடுக்கங்கள், பூகம்பங்கள் ஏற்பட்டபோதும், எந்த அணையும் இந்தியாவில் பாதிக்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை. எந்தக் கேடும் வரப்போவது இல்லை.
எங்கள்தமிழர் வாழ்வு பறிபோய்விடுமே? இரண்டு இலட்சம் ஏக்கர் பாழாகி விடுமே? ஏற்கனவே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனத்தை இழந்து விட்டதே? 152 அடி வரை நீரை உயர்த்தலாம் என்ற சரத்து இருந்த நிலையில், 1979 ஆம் ஆண்டு அணைக்கு ஆபத்து என்ற ஒரு பொய்யான செய்தியை சிலர் வேண்டுமென்றே கேரளத்தில் எழுப்பினார்கள். நான் பெயர்களை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. பெயர்களைச் சொல்லி எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை. யார் இதற்குப் பின்னனி என்பதை எல்லாம் இப்பொழுது நான் பேச விரும்பவில்லை.
ஆனால், வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்ற இடம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உள்ளேயே கிடையாது. அப்போது, அது தமிழ்நாட்டில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் அந்த இடம் இருப்பதாகக் கருதிக் கொண்டு பிரிட்டிக்ஷ் அதிகாரி கடிதம் எழுதி விட்டான். இல்லாத ஒன்றை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று அவன் கவனிக்கவில்லை. திரும்பவும் கடிதம் எழுதுகிறபோது, சரி இல்லாத அதிகாரத்தைத் தருகிறார்களே என்று அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சரி போகட்டும் - அது முடிந்து விட்டது. அப்பொழுதெல்லாம் இந்த அணையிலே இருந்து பாய்ந்து ஓடும் தண்ணீரிலே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முதலில் உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 1953 ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் முதல் அமைச்சராக இருந்தார். அவர் முதலாளித்துவக் கொள்கைக்காக முரசு கொட்டியவர். அப்போது, இந்த மதுரை மண்டலத்தில் பொது உடைமை இயக்க வீரராக வலம்வந்தவர், அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிக்ஷ் சிறைகளிலே வாடியவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலே என்றைக்கும் மதிப்பிற்கு உரியவர், இதே மதுரை மக்களாலே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர், தோழர் இராமமூர்த்தி. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர். அப்படிப்பட்ட இராமமூர்த்தி அவர்களை அழைத்து, இராஜாஜி அவர்கள் தன்னுடைய தூதராக கேரளத்திற்கு அனுப்பி வைத்தார். பட்டம் தாணுப்பிள்ளை அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபொழுது, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி அதன் விளைவாக மின்சார உற்பத்தியும் செய்து கொள்ளலாம் என்று பல்வேறு உரிமைகளை அன்றைக்குப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இந்தப் பெரியாறு அணை நீர்த்தேக்கம் அமைந்து இருக்கின்ற பகுதிகளிலே எண்ணாயிரம் ஏக்கர் தமிழகத்திற்கு உரிமை. அதோடு சேர்ந்த மற்றக் கட்டுமானப் பணிகளைச் செய்வதற்கு இன்னும் ஒரு 100 ஏக்கர். எண்ணாயிரத்து நூறு ஏக்கர். ஏக்கருக்கு எவ்வளவு குத்தகை? ஐந்து ரூபாய். 1970 ஆம் ஆண்டு திரும்பவும் ஒரு ஒப்பந்தம் போடுகிறபோது, ஐந்து ரூபாய் என்பது ஏக்கருக்கு முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதுவரை நீர்நிலைகளிலே மீன்பிடிக்கக்கூடிய உரிமைகளையும் கேரளத்திற்குக் கொடுத்துவிட்டு, இருதரப்பிலும் நல்ல நட்பு உறவோடு பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், என்ன ஆயிற்று இப்பொழுது? திடீரென்று 1979 இல் அணைக்கு ஆபத்து என்ற கூக்குரலைத் திட்டமிட்டுச் சிலர் கிளப்பினார்கள். பிரச்சினை பெரிதாகி விட்டது. நடுவண் அரசின் நீர்வளத் துறையின் ஆணையாளர் கே.சி.தாமஸ் அவர்கள் விரைந்து ஓடி வந்தார்கள். அவர் நவம்பர் 24 ஆம் தேதி அணையைப் பார்வையிடச் செல்கிறபோது, அங்கே ஒரு கலவரச் சூழ்நிலை ஏற்பட்டது. அதை அவர் சமாதானம் செய்து கொண்டு மறுநாள் திருவனந்தபுரத்தில் கேரள - தமிழ் நாடு அரசுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்திலே ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன் விளைவாக, அன்றைக்கே நமக்கு அது நியாயமற்றது என்றாலும், தமிழ்நாடு அன்றைக்கு ஏதோ ஒரு வழியில் அதை ஏற்றுக் கொண்டு விட்டது. 136 அடியாக தண்ணீர் மட்டத்தை வைத்துக் கொள்வது என்றும், அணை வலுப்படுத்தும் முதற்கட்டப் பணிகள் முடிந்தபிறகு 145 அடி ஆக்குவது என்றும், இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததற்குப் பிறகு 152 அடி ஆக்குவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. கேரள அரசும் ஒப்புக் கொண்டது.
ஆனால், பணிகளை நடத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. வேலை நடக்க விடவில்லை. பிரச்சினை வளர்ந்து கொண்டே போயிற்று. முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டே போனார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நம் உரிமைகளை இழந்தோம். முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கின்ற உரிமை, போலீஸ் பந்தோபஸ்து உரிமை தமிழ்நாட்டுக்குத்தான் இருந்தது. இன்றைக்கு என்ன நிலைமை? எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய் விட்டது. கேரளா பேலீசார் அங்கே இருக்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அது. அந்தப் பகுதிகளைப் பார்வையிடுவதற்குப் படகில்தான் செல்லவேண்டுமா? நம்மிடம் படகு இல்லை. ஒரே ஒரு ஓட்டைப்படகு. அதுவும்கூட இயங்குவது இல்லை. கேரள அரசின் சுற்றுலாத் துறை படகுகள் - வனத்துறைப் படகுகள் - கேரள அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த நிலை இருக்கிறது.
அணையை வலுப்படுத்தியதற்குப் பிறகு 145 அடி ஆக்கி இருக்க வேண்டும் அல்லவா? கேரள அரசு ஒப்புக் கொள்ளவில்லை. பிரச்சினை அதற்குப் பிறகு நீதிமன்றம் செல்லுகிறது. நீதிமன்றத்திலே வாதிக்கப்படுகிறது. கடைசியாக நீதிமன்றம் அதனுடைய தீர்ப்பைத் தருகின்றது. இதுபற்றிய முழு விவரங்களுக்கு உள்ளே செல்ல எனக்கு நேரம் இல்லை. ஏராளமான புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
10,800 கோடி ரூபாய்!
இருப்பினும், நான் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். இந்தப் பாதிப்பு எப்படிப்பட்ட பாதிப்பு? நம்முடைய அப்பாஸ் அவர்கள் சொன்னார்கள் அல்லவா? மதுரையம்பதியிலே சிவகங்கையிலே - மேலூரிலே ஏன் இந்த மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுற்றுப்புறப் பகுதிகளிலே சோழவந்தானிலே - வாடிப்பட்டியிலே உசிலம்பட்டியிலே - கம்பம் பள்ளத்தாக்கிலே இத்தனைப் பகுதிகளுக்கும், நீர்ப்பாசனத் தண்ணீரும், குடி தண்ணீரும் இந்த முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வருகின்ற தண்ணீர்தான் என்றும், வைகையும் அடியோடு வறண்டு போகும். வைகையில் ஏற்கனவே படர்தாமரை இருக்கின்ற கொடுமை பார்த்தீர்களா? இனி நம்முடைய நிலைமை அதோ கதியாக ஆகிவிடும். முல்லைப் பெரியாறின் உரிமையை நாம் இழந்தால் 2 இலட்சம் ஏக்கர் பாசனத்தை இழப்பது மட்டும் அல்ல, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.விவசாயத்திலே இழப்பு. மின் உற்பத்திலே இழப்பு - 400 கோடி ரூபாய் ஓராண்டுக்கு இழப்பு என்றால், ஏறத்தாழ 27 ஆண்டுகளில் 10,800 கோடி ரூபாய் நமக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
இனி நிலைமை இதைவிட மோசமானதாக மாறக் கூடும். அணையை மொத்தமாகவே கைப்பற்றிக் கொள்வதற்கு கேரளத்திலே சிலர் முயற்சிப்பது அக்கிரமமானது - அநீதியானது. அப்படியானால் பசியோடும், பட்டினியோடும் நாங்கள் அழியத்தான் வேண்டுமா? ஏற்கனவே காவிரியின் உரிமைகளைப் பறிகொடுத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த உரிமையை கர்நாடகம் கபçகரம் செய்து கொண்டு, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஆணையை இன்று வரை நிறைவேற்றாமல், இனி நிரந்தர ஆணை வந்தாலும் அதை நிறைவேற்றித் தரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல், எதிர்காலம் பாலைவனமாகிவிடுமோ என்ற கேள்விக்குறியாக நிற்கிறதே - தமிழகத்தின் பெரும்பகுதி காவிரிப் பாசனப் பகுதி பஞ்சப் பிரதேசமாக மாறிவிட்டால், சகாரா பாலைவனமாக ஆகிவிட்டால் எங்கள் வாழ்வு என்ன ஆவது?
எங்கள் தென்மாவட்டங்களிலே, ஐந்து மாவட்டங்களிலே எங்கள் விவசாயிகளின் வாழ்வு என்ன ஆவது? பசியோடும், பட்டினியோடும் பஞ்சத்தில் அடிபட்டு நாங்கள் துடிக்கத்தான் வேண்டுமா? கேரளத்துச் சகோதரர்களைக் கேட்கிறேன். கேரள மலைகளிலே ஓடுகிற தண்ணீர் 2000 டி.எம்.சி. அரபிக் கடலிலே கலந்து வீணாகிறதே, அதில் 200 டி.எம்.சி தண்ணீர்தானே எங்களுக்குக் கொடுக்கச் சொல்லுகிறோம். எங்களுக்குத் தருவதால் எங்களுக்கு உயர்வுதானே, அள்ளித் தருவோம் - அட்சய பாத்திரத்தில் இருந்து மணிமேகலை தந்ததைப் போல உணவை நாங்கள் உங்களுக்கு அள்ளித் தருவோம் - ஏற்கனவே தந்து கொண்டு இருக்கிறோம். பால், காய்கறிகள், மின்சாரம் எல்லாம் தமிழகத்திலே இருந்து அன்போடு பாசத்தோடு உங்களுக்கு அள்ளித் தருகின்றோம்.
எங்கே இருக்கும் ஒருமைப்பாடு?
வீணாகப் போகிற தண்ணீர் எங்களுக்கு வரட்டும். நீங்கள் உயர்ந்த வாழ்வு நடத்துவதற்கு நாங்கள் எல்லாம் தருகிறோம். ஏன் இந்த உணர்வு உங்களுக்கு இல்லை? நீதிபதி கிருக்ஷ்ண அய்யருக்கு இருந்ததே இந்த உணர்வு. அந்த உணர்வைத்தான் நான் இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்தப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்தத் தீர்ப்பை எதிர்த்துக் கேரள சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. கேரள சட்டமன்றம் அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என்றால், ஒரு மாநில உரிமையை இன்னொரு மாநிலம் பறித்துக் கொள்வதற்கு - உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாநிலம் சட்டம் இயற்றலாம் என்றால், ஒவ்வொரு மாநிலமும் அப்படிச் சட்டம் இயற்றினால், எங்கே இருக்கும் இந்திய ஒருமைப்பாடு? நான் இந்திய அரசைக் கேட்கிறேன். மாண்புமிகு தலைமை அமைச்சரைக் கேட்கிறேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது.
கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் தியாகம் செய்து இருக்கிறார். போராடி இருக்கிறார். அவருடைய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை நான் மதிக்கிறேன். ஆனால், நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். பரந்த அகில உலகப் பார்வை கொண்டு இருக்க வேண்டிய அந்தத் தலைவர் அச்சுதானந்தன், என்ன காரணத்தினாலோ இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்குக் கொடுக்கக்கூடாது என்று தொடக்கத்திலே இருந்து ஒரு மாநில உணர்வோடுதான் செயல்பட்டு வந்து இருக்கிறார் என்பது வேதனைக்கு உரிய ஒன்று.
தோழர் அச்சுதானந்தன் மூத்த அரசியல்வாதி. அவரே இப்படி சொல்வதால், கேரளாவிலே எந்த அரசியல்வாதியும் அவருக்கு மாறிச் சொல்வது கிடையாது. அவர் சொல்வது நியாயம் இல்லை என்று நினைத்தால்கூட,கேரளாவில் இருக்கின்ற எந்தக் கட்சித் தலைவர்களும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் உட்பட அச்சுதானந்தன் சொன்னதற்கு மாறாகச் சொன்னால், கேரள மக்களுக்கு எதிரான கருத்து என்று நினைத்து, யாரும் நியாயத்தைக்கூடச் சொல்வதுகிடையாது. இப்படிப்பட்ட உணர்வை அவர் கடைப்பிடித்துக்கொண்டு வந்தால், அது இன்னொரு மாநிலத்திற்குக் கேடாக முடியக்கூடாது அல்லவா?
கேரள மாநிலம் நிறைவேற்றிய சட்டத்தின்படி கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகாரம் தருகிறார்கள். நான் கேட்கிறேன் - கேரள அணைகளின் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தை விட அதிகாரம் நிறைந்ததா? நடுவண் அரசு சொல்ல வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுகிறார்களே, இது சரிதானா?
அன்பிற்கு உரியவர்களே, எவ்வளவு பெரிய ஆபத்து வந்து இருக்கிறது தெரியுமா? இந்தப் பேரணியை நடத்துவதற்குக் காரணம் - நம்மை சுற்றி வளைக்கின்ற அபாயத்தை நாம் உணர வேண்டும். என்ன கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் தெரியுமா? முல்லைப் பெரியாறு அணையின் மொத்தக் கட்டுப்பாட்டையும், அணை நிர்வாகத்தையும், பராமரிப்பையும் கேரளாவிடம் ஒப்படைக்க வேண்டும். இது நியாயம்தானா? இது நீதிதானா? 999 ஆண்டுகளுக்கு எங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற உரிமையை நீங்கள் பறிக்க நினைக்கிறீர்களே - அணையையே நீங்கள் கைப்பற்ற நினைக்கிறீர்களே. அதை உங்களிடத்தில் எப்படி தருவது? அதைப் பரிசீசிலிப்பதற்கு நடுவண் அரசு முனையக் கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீங்களும் மதிக்க மாட்டீர்களா? உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கேரள அரசை நீங்களும் கண்டிக்கத் தவறினால் இதுபோல பிரச்சினைகள் ஒவ்வொரு மாகாணத்திலும் எழுந்தால் - இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து சிதறிவிடும் என்பதை நான் கவலையோடு எச்சரிக்கின்றேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பு திட்டவட்டமாக இருக்கிறதே. கேரள அரசு கொடுத்து இருக்கின்ற அத்தனை சான்று ஆவணங்களையும் பார்த்தோம். சொல்வது யார்? உச்சநீதிமன்ற உயர் நீதிபதி.
மிகத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. There is no report to suggest that the safety of the dam would be jeopardized ,if the water level is raised to 142 ft.
அதாவது, தண்ணீர் மட்டத்தை உயர்த்தினால் அணைக்கு ஆபத்து வரும் என்று சொல்லுவதை நம்ப எந்த ஆதாரமும் கிடையாது - வைகோ சொல்லவில்லை - உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. அதற்கு மாறாக, அணை வலுவாக இருக்கிறது என்றுதான் இங்கே அறிக்கை இருக்கிறது. ஆகவே, உச்சநீதிமன்றம் இன்னும் சொல்லுகிறது. We see no reason for the state of Kerala to cause any obstruction under the aforesaid circumstances .We permit the state of Tamilnadu to carryout the strengthening measures as suggested by the Central Water Commission .We hope that the state of Kerala would co-operate in this matter .The state of Kerala and its officers are restrained from causing any obstruction.
எந்த முட்டுக்கட்டையும் கேரளா போடக்கூடாது - நான் சொல்லவில்லை - உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. எந்த முட்டுக்கட்டையும் போட கேரளா அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொன்ன வாசகங்கள்.
The writ petition and the connected matters are disposed off by permitting of water level of Mullai Periyar dam being raised to 142 ft by permitting the further strengthening of the dam.
தமிழா, இன்னுமா உறக்கம்?
142 அடி உயர்த்துவதற்கு உத்தரவு இடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. மேற்கொண்டு அணையை வலுப்படுத்தும் மராமத்துப் பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. இந்தத் தீர்ப்பை மதிக்காமல், காலில் போட்டு மிதிக்கிறது - கேரள சட்டமன்றம் சட்டம் இயற்றுகிறது. அணையையே தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லுகிறார்களே, இன்னுமா தமிழர்களே உறக்கம்? நான் பகையை வளர்ப்பதற்காகச் சொல்லவில்லை. நம் உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக. அரசியலுக்காக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. தமிழர் விழிப்பு உணர்வுக்காக நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தின் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இராதாகிருக்ஷ்ணன் எட்டு நாள்களுக்கு முன்னால் - இந்த மாதம் 11 ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையைத் தேவைப்பட்டால் உடைப்பதற்கும் எங்களுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்லி இருக்கிறார். இது சரிதானா? நியாயம்தானா? இன்னொருவர் - அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவராம் - நீதிமன்றத்திலே உட்கார்ந்து இருந்தவராம் - பெயர் சசிதரனாம் - நம்முடைய அப்பாஸ் அவர்கள் சொன்னதைப்போல,குடைக்கம்பியைக்கொண்டு தட்டிச் சுரண்டிப்பார்த்து, அணைக்கு வலு இருக்கிறதா? என்று பார்த்து இருக்கிறார். ஏன் எங்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறீர்கள்?
நான் பொது உடைமைத் தோழர்களைக் கேட்கிறேன் - இது பேச்சுவார்த்தையில் தீர்க்க வேண்டிய பிரச்சினையா? எங்கே போய்ப் பேசுவது? பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறீர்களே - இது நியாயம்தானா? தமிழ்நாட்டிலே நாங்கள் நியாயத்தைக் கேட்கிறோம். இது சரிதானா? உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? மனச்சாட்சி உள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் உள்ளத்திலே நிச்சயமாக கவலை ஏற்பட வேண்டும்.
நடுவண் அரசுக்குச் சொல்வேன். கேரள அரசு நிறைவேற்றிய சட்டம் சட்டவிரோதமானது என்று நீங்கள் அறிவிக்க வேண்டும். கேரள மாநிலத்தின் நடவடிக்கைகளை நீங்கள் தடுக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு உரிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். கேரள முதல் அமைச்சரும், அனைத்துக் கட்சிக் குழுவினரும் கொடுத்த நியாயம் அற்ற கோரிக்கையை நீங்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
அணைக்கான போலீஸ் பாதுகாப்பை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுகிறார். கேரள போலீசாரிடம் இல்லாத திறமையா? என்று அச்சுதானந்தன் பதில் எழுதுகிறார். தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடானுகோடித் தமிழர்களின் எதிர்கால வாழ்வு பாழாகிவிடக்கூடாது. கூட்டணிகளால் ஏற்படக்கூடிய குறுகிய அரசியல் லாபங்களைக் கடந்து, தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு.
இம்மி அளவும் நம் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த விழிப்பு உணர்வு வளரட்டும் ஆங்காங்கு உள்ள பேராசிரியர்கள், அறிஞர்கள், மக்கள் இதைப்பற்றி விவாதிக்கட்டும் - விழிப்பு உணர்வு எங்கும் பரவட்டும். எங்களைச் சந்திப்பதற்காக வருகை தந்த கேரளத்துச் சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பேரணிக்கு வருகை தந்த தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவரின் காலடிகளிலும் என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
19.09.2006 அன்று மதுரையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற
முல்லைப் பெரியாறு உரிமை பாதுகாப்புப் பேரணியில் வைகோ பேச்சு .
முல்லைப் பெரியாறு உரிமை பாதுகாப்புப் பேரணி
தீர்மானம்
1886 ஆம் ஆண்டு போடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கும் உரிமை உண்டு. ஆனால், கேரள அரசு உண்மைக்கு மாறான நியாயமற்ற ஆட்சேபங்களைத் தெரிவித்ததன் விளைவாக 1979 இல் மத்திய நீர்வள ஆணையம் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் வழங்கிய ஆலோசனைப்படி அணையில் 136 அடி உயரத்திற்குத் தண்ணீரை தேக்குவதென்றும் அணையை வலுப்படுத்தும் முதற்கட்ட பணிகள் முடிந்தபின் 145 அடி உயரம் தேக்கலாம் என்றும், அனைத்துப் பணிகளும் முடிந்தபின் 152 அடி தேக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், முதற்கட்ட பணிகள் முடிவு பெற்ற பின்னரும் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்குமேல் உயர்த்துவதற்குக் கேரளம் நியாயமற்ற எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. இருமாநில அரசுகளின் விவாதங்களைக் கேட்டு உச்சநீதிமன்றம் 27.02.2006 அன்று வழங்கிய தீர்ப்பில் முல்லை பெரியார் அணையில் 136 அடி நீர் மட்டத்தை 142 அடியாகத் தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை மேலும் வலுப்படுத்தத் தேவையான பணிகளைத் தமிழக அரசு செய்து கொள்ளலாம் என்றும் இதற்கு கேரள அரசு எவ்விதத்திலும் முட்டுக்கட்டைப் போடக்கூடாது என்றும் திட்டவட்டமான தீர்ப்பைத் தந்தது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கேரள அரசு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
கேரள மாநில முதல் அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் குழு ஆகஸ்ட் 31 அன்று இந்திய பிரதமரைச் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு நிர்வாகம் அனைத்தையும் கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும்என்று விடுத்திருக்கின்ற கோரிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான கோரிக்கையாகும். எனவே, இந்த கோரிக்கையை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பணிகளை முழுமையாக தமிழக அரசிடம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை எந்தக் குந்தகமும் இன்றி செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை முல்லைப் பெரியாறு உரிமைப் பாதுகாப்புப் பேரணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மதுரை
19.09.2006

