இந்திய மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தாருங்கள்! - மும்பை எழுச்சி உரை - மற்றும் புகைப்படங்கள்

விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: பிற மாநிலங்கள்

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

Date: 
Sun, 15/03/2009

மும்பையில் உள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழு சார்பில் ஈழத் தமிழர் படுகொலைகளைக் கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் மும்பை நகரின் சயான் கோலிவாடாவில் 15.3.09 அன்று நடைபெற்றது. இந்த எழுச்சி மிகுக் கூட்டத்தில் பங்கு ஏற்ற வைகோவின் உணர்ச்சிகர உரையில் இருந்து...

1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து வீதிகளில் குற்றுயிரும் குலை உயிருமாகத் தமிழர்கள் கொல்லப் பட்ட துயரம் சூழ்ந்த அந்தநேரத்தில், இதே கோலிவாடாவில் நான் பொதுக் கூட்டம் பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது. இரண்டு மாதம் கழித்து இலண்டன் மாநகரில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் சென்றேன்.

இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கியபிறகு, ஈழத்து இளைஞர்கள் இருவர் என்னைக் காரில் அவர்களுடைய இல்லத்துக்குத் தங்குவதற்காக அழைத்துச் சென்றார்கள். நான் காரில் ஏறி உட்கார்ந்த உடன் திடுக்கிட்டுப் போனேன். ஆச்சர்யப்பட்டேன், திகைத்தேன். நான் அமர்ந்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அந்தக் காரில் பொருத்தப்பட்டு இருந்த டேப்ரிகார்டர் ஒலித்தது. என் பேச்சை நானே என் செவிகளில் உள்வாங்கிய போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது எங்கே எப்படி உங்களுக்குக் கிடைத்தது? என்று கேட்டேன். அந்தத் தம்பிகள் சொன்னார்கள். இது இது நீங்கள் பம்பாய் கோலி வாடாவில் பேசிய பேச்சு' என்றார்கள். நான் கோலிவாடாவில் பேசிய ஒலி நாடா என்னிடம்கூட இல்லை. அந்தப் பேச்சை அதற்குப்பிறகு வேறு எங்கும் கேட்கவும் இல்லை. நான் நெகிழ்ந்து போனேன்.

'இந்த இலண்டனிலும், ஐரோப்பிய நகரங்களிலும், ஒவ்வொரு ஈழத் தமிழனின் வீட்டிலும் இந்த ஒலிநாடா இருக்கிறது. நாங்கள் கேட்கிறோம். காயப்பட்ட எங்களது மனங்களுக்கு அது மருந்தாக இருக்கிறது' என்று அவர்கள் சொன்னார்கள்.

21 ஆண்டுகளுக்குப்பிறகு நான் மும்பைக்குப் பேச வந்து இருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய பொது வாழ்வு, என்னுடைய அரசியல் பயணம் எரிமலைகளுக்கு மத்தியில் - பிரளயங்களுக்கு மத்தியில் - அலைக்கழிக்கப்பட்டு, விமர்சனங்கள் பலவற்றுக்கு நான் ஆளாக்கப்பட்டு, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறது.

அண்மையில் ஒருநாள் தமிழ்ச்செல்வனிடம் இருந்து எனக்குத் தொலைபேசி வந்தது. பட்டுக்கோட்டை நகரமன்றத் தலைவராக இருந்த என் ஆருயிர் சகோதரர் விசுவநாதன் மறைந்துவிட்டார். விசுவநாதனின் துணைவியார் சகோதரி ஜெயபாரதி அவர்களும் பட்டுக்கோட்டை சேர்மனாக இருந்தவர்கள். என்னிடத்தில் தொலைபேசியில், 'அண்ணா, மும்பை நகரத்தில் தமிழ்ச்செல்வன் என்கின்ற ஒரு தம்பி இருக்கிறார். அவர் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்குழுவில் செயலாற்றுகிறார். நீங்கள் அங்கே பொதுக்கூட்டம் பேச வர வேண்டும் என்று விரும்புகிறார்' என்று கூறினார்.

நான் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, தமிழ்ச்செல்வனின் தொலைபேசி எண்ணை அந்தச் சகோதரியிடம் பெற்றுக்கொண்டு, நான் அவரிடம் உரையாடினேன். நீங்கள் கட்டாயம் மும்பை வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கட்சி சார்பு அற்ற முறையில் அரசியல் எல்லைகளைக் கடந்த முறையில் மும்பை நகரில்வாழும் தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பொதுக்கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அழைத்தார். நான் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அன்போடு உங்கள் சகோதரனை நீங்கள் வரவேற்றதில் நான் மிகுந்த மனநெகிழ்ச்சியோடு இருக்கிறேன். இந்த உங்களின் எல்லையற்ற பாசத்துக்கு நான் எந்தக் கைமாறும் செய்ய இயலாதவன். ஆனால், அன்புச் சகோதரர்களே, தொடர்ந்து தமிழர்களுக்காகப் போராடுவேன். இந்த உடம்பில் ஜீவன் இருக்கின்ற வரையில், உயிர் இருக்கின்றவரையில் என் நாக்குக்குப் பேசுகின்ற சக்தி இருக்கின்றவரையில் தமிழர்களுக்காகப் போராடுவேன்.

கடந்து ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இரவு இதே மும்பைக்கு வந்தேன். இலண்டனில் நடைபெறுகிற மாவீரர் நாள் கூட்டத்துக்கு என்னை அழைத்து இருந்தார்கள். இலண்டன் செல்வதற்காக, நான் இந்த மும்பை நகரத்தின் விமான நிலையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்துசேர்ந்தேன். வழக்கமாக இந்த மும்பை விமான நிலையத்தில் என்னை வரவேற்று ஒரு சகோதரனாக என்னை அன்புகாட்டி அனுப்பி வைக்கின்றவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த அருமைச் சகோதரர் பீட்டர் அவர்கள். அவர் இப்பொழுது ஓய்வு பெற்று விட்டார்.

நான் விமான நிலையத்தில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தனியாக வருகிறபோது விமான நிலையத்தில் பணியாற்றுகின்ற ஒரு இளைஞர் வேகமாக என்னை நோக்கி ஓடிவந்தார். 'அண்ணா நலமாக இருக்கின்றீர்களா? என்று கேட்டார். நான் பெயரைப் பார்த்தேன் அன்பழகன் என்று இருந்தது. அழகிய தமிழ்ப்பெயர். உடனே அவர் சொன்னார்: 'அண்ணா 21 ஆண்டுகளுக்குமுன்னால், 1988 ஆம் ஆண்டு நீங்கள் மும்பையில் கோலிவாடாவுக்குப் பேச வந்தபோது, உங்கள் அறையில் உங்களுக்கு உதவிகள் செய்த சிறுவன்தான் நான் என்றார். உடனே நான், தம்பி நீங்கள் பொற்கோவின் மகனா? என்று கேட்டேன்.

அவர் தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கலாம். ஆனாலும்கூட, அண்ணாவின் தம்பி, உண்மையான தம்பிகள் அண்ணாவின் கொள்கைக்கு வைகோ போராடுகிறான், அதற்காகப் பாடுபடுகிறான் என்ற உணர்வால், அவர் என்னைப் பாசத்துடன் வழி அனுப்பி வைத்தார். நான் இலண்டன் நகரத்துக்குப் போய்ச்சேர்ந்தேன்.

இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில், நான் எடுத்துவைத்த உண்மைகள் அவர்கள் இதயத்தை பிளந்தது. இந்த உரை, இங்கிலாந்து பாராளுமன்ற சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் சொன்னபோது என் தகுதிக்குமீறிய பாராட்டுரையாக நான் கூச்சப்பட்டேன். அது என் பேச்சுத் திறமை அல்ல.

அங்கே பேசும்போது நான் குறிப்பிட்டேன்: தமிழர்களுக்குத் தனி நாடு இருந்தது இலங்கையில். இலங்கையில் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டில் இருந்து பிழைக்கச் சென்றவர்கள் மட்டுமல்ல. அந்த நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற தமிழர்கள், அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள். இதை நான் சொல்கிறேன் என்பதைவிட, இந்தியாவின் புகழ் மிக்க பிரதமராக இருந்த உலக நாடுகள் மதிக்கத்தக்க பிரதமராக இருந்த மார்க்கெரட் தாட்சரைவிட செல்வாக்குப்பெற்றவராகத் திகழ்ந்த அம்மையார் இந்திரா காந்தி அவர்கள், 1983 ஆம் ஆண்டு இந்திய நாடாளு மன்றத்தில் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி இந்தக் கருத்தைப் பேசினார்.

வடக்கிலும்-கிழக்கிலும் உள்ள தமிழர்கள் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்கள். இன்னொருதரப்பினர், எங்கள் தமிழகத்தில் இருந்து வறுமை வாட்டியதால், ஏழ்மைதலை விரித்ததால் கடல்கடந்து சென்று வாழலாம் என்று இங்கே இருந்து சென்ற தமிழர்கள். அவர்கள் தங்கள் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, தேயிலைத் தோட்டங்களை இரப்பர் தோட்டங்களை பொன் கொழிக்கும் பூமியாக தேளுக்கும் நட்டுவாக் காலிக்கும், பாம்புக்கும் அஞ்சாமல் தங்கள் உயிர்களைத் தந்து இலங்கைத் தீவை செல்வ பூமியாக மாற்றியவர்கள். இவர்கள் இன்னொரு பிரிவினர். அவர்கள் இந்திய வம்சாவழியினர்.

இந்த உண்மையை, நான் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சொன்னேன்.

இலங்கைத் தீவில், வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து தமிழர்கள் தனி அரசு அமைத்து வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தனி நாடு இருந்தது. ஆனால், ஐரோப்பியர்கள் வந்தபிறகு, போர்ச்சு கீசியர்கள் வந்தபிறகு, டச்சுக்காரர்கள் வந்ததற்குப் பிறகு கடைசியாக பிரிட்டிஷ்காரர்களாகிய நீங்கள் மொத்த இலங்கையைக் காலனியாக்கிய பிறகு, இலங்கையை ஒரே நாடாக்கி நீங்கள் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சுதந்திரம் கொடுக்கிறபோது சிங்களவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள்.

தமிழர்களையும் சேர்த்து ஆட்சி செய்கின்ற அதிகாரத்தை சிங்களவர்கள் கையில் ஒப்படைத்தீர்கள். சமஉரிமையுள்ள மக்களாக இந்த சிங்களவர்கள் நம்மை நடத்துவார்கள், நாம் மானமுள்ள மனிதர்களாக வாழ முடியும் என்று தமிழர்கள் நம்பி னார்கள். ஆனால், வஞ்சிக்கப்பட்டார்கள். எடுத்த எடுப்பில் 10 இலட்சம் வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது; இங்கிருந்து சென்ற தமிழர்களின் குடியுரி மையை வாக்குரிமையைப் பறித்தார்கள்.

அதன்பின்னர், தங்கள் உரிமை களுக்காகப் பூர்வீகத் தமிழர்கள் போராடினார்கள். நீங்கள் சிங்களவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்ததன் விளைவாக, எங்கள் இனம் வஞ்சிக்கப்பட்டது. எங்கள் பெண்கள் நாசமாக்கப்பட்டார்கள். எங்கள் வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டன. எங்கள் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. எங்கள் சகோதரிகள் நடுத்தெருவில் நாசமாக்கப்பட்டார்கள். எங்கள் மக்கள் கொல்லப்பட்டார்கள். சத்தியாகிரக வழியில் போராடியவர்கள், காந்தியார் வழியில் போராடியவர்கள், அகிம்சை வழியில் போராடியவர்களின் தலைகளை குண்டந்தடிகள் பிளந்தன. அவர்களது கபாலங்கள் உடைக்கப்பட்டன. துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் மீது பாய்ந்தன. இதுபோலத் திரண்டு இருந்த உலகத்தமிழர் மாநாட்டுக்கு உள்ளே புகுந்து 11 பேரைக் கொன்றார்கள். சின்னஞ்சிறு சிசுக்களும் தப்பவில்லை. இவ்வளவு கொடுமை நடந்ததற்குப்பிறகுதான், அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு வந்தார்கள்.

ஆகவே, இங்கிலாந்து அரசாங்கமே, நீங்கள்தான் இன்றைய ஈழத்தமிழர்களின் துன்பத்துக்குக் காரணம். இப்பொழுது அந்தத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை எல்லா நாடுகளையும்விட இங்கிலாந்து நாட்டுக்குத்தான் இருக்கிறது. இனக் கொலையைத் தடுக்க முன்வாருங்கள் என்று நான் பேசினேன்.

நமது ஈழத்துத்தமிழர்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு என் பேச்சை மிகவிரும்பிக் கேட்டார்கள். அவர்கள் மனதில் பதிந்தது, கடமை ஆற்றினோம் என்ற மனநிறைவோடு வெளியே வந்தேன்.

அடுத்த நிமிடம் நான் தலையில் இடி விழுந்ததைப் போன்ற அந்தச்செய்தி வந்தது. மும்பை நகரத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த பகைவர்கள் தாக்குதல்; மும்பை நகரத்தின் கட்டடங்கள் பற்றி எரிகிறது; உயிர்கள் கொல்லப்படுகின்றன என்கிறார்கள். பதட்டம் எங்கும் நிலவுகிறது. எத்தனைபேர் இறந்தார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. சி.என்.என். பார்த்தாலும் சரி - பி.பி.சி. பார்த்தாலும் சரி - எந்தத் தொலைக்காட்சியை, சின்னத் திரையைப் பார்த்தாலும் சரி பற்றி எரிகின்ற மும்பை நகரத்துக் கட்டடங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள் குய்யோ முறையோ என அலறித்துடிக்கின்ற பெண்கள், குழந்தைகள் இரத்தக் காடாகக் கிடக்கின்ற மக்கள் இவற்றைத்தான் நான் பார்க்கமுடிந்தது.

அந்த நவம்பர் 26 ஆம் தேதி நிகழ்ச்சியை நான் இன்றைக்கு எண்ணிப்பார்க்கிறேன். அந்தக் கொடுமையான கலவரம் நடைபெற்றபோது, பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட பகைவர்கள், மும்பை நகரத்துக் கடலோர வழியாக உள்ளே நுழைந்து, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார்களே, அப்படிப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்த நேரத்தில், அதிலும் இரயில்வே நிலையத்தில் பயணத்துக்குக் காத்துக் கொண்டு இருந்த அப்பாவி மக்கள் மீது, அந்தக் கொடியவர்களில் இருவர் உள்ளே நுழைந்து கண்மண் தெரியாமல் இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்து கையெறி குண்டுகளை வீசினர்.

நூற்றுக்கணக்கில் பிணங்கள் விழுந்து கொண்டு இருந்தபோது, இரத்தம் வெள்ளமாக ஓடியபோது, அதைத் தூரத்தில் இருந்து பார்த்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் எல்லாத் திசைகளையும் நோக்கி ஓடிக் கொண்டு இருந்த நேரத்தில், கொடியவர்களின் கைகளில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகள் கனல் கக்கும் குண்டுகளை வீசிக்கொண்டு இருக்கின்றன, மக்கள் செத்து விழுந்து கொண்டு இருக்கிறார்கள், அதைக்கண்டு நாமும் கொல்லப்பட்டு விடுவோம், நம் உயிரும் பறிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சாமல், அந்தக் களத்துக்குச் சென்று, குண்டு மழைக்கு உள்ளே நுழைந்து, காயப்பட்டவர்களைத் தூக்கி, அங்கே இருந்து மருத்துவமனைக்கு கொண்டு போனான் ஒரு வீரத்தமிழன் என்று அறிகிறபோது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மரணத்துக்கு அவன் அஞ்சவில்லை; துப்பாக்கிக் குண்டுகளுக்கு அவன் அஞ்சவில்லை; தன் மனைவி மக்களோடுபோய் பாதுகாப்பாக வீட்டிலே இருந்து கொள்ளலாம் என்று நினைக்கவில்லை; எங்கோ தஞ்சைத் தரணியில் சோழமண்டலத்தில் பிறந்து வளர்ந்து, இந்த மும்பை நகரத்துக்கு வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிற நான், மனைவி மக்களோடு பாதுகாப்பாக இருந்தால்போதும் என்று அவன் நினைக்கவில்லை. இந்த மும்பை என்னை வாழ வைத்தது; இந்த மும்பை எங்களுக்கு வாழ்வு கொடுத்தது; இந்த மும்பை நகரத்து இந்திய மக்களைக் காப்பேன், அதற்காக என் உயிரையும் தருவேன் என்று ஓடிச்சென்று அத்தனை உயிர்களைப் பாதுகாத்து, நூற்றுக் கணக்கானவர்கள் செத்துவிழுந்த போது இறந்தவர்களின் உடல்களைக்கூட வண்டியில் தூக்கிக்கொண்டு ஓடினான் அந்த இளைஞன்.

ஒருநிமிடம் அந்தக் கொடியவர்களின் துப்பாக்கி இந்தப் பக்கம் திரும்பி இருந்தால், இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகின்ற அந்த வீரத்தமிழன் இன்றைக்கு உயிரோடு இருக்கப்போவது இல்லை. அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து 35 உயிர்களைக் காப்பாற்றினார் கேப்டன் தமிழ்ச்செல்வன் என்று கேள்விப்பட்டு, இந்த மாநிலத்தின் கவர்னர் எனது அருமை நண்பர் ஜமீர், அவர் நாகாலாந்து மாநில முதலமைச்சராக இருந்தவர், நாடாளுமன்றத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் இருந்த எனது இனிய நண்பர் ஜமீர், தமிழ்ச்செல்வனைப் பாராட்டி விருதுகொடுத்த படத்தைப் பார்த்தேன்.

இந்த மும்பை நகரத்து மக்கள் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வனைப் பாராட்டி விருது வழங்கிய சான்றிதழ்களையெல்லாம் பார்த்தேன். நான் பூரிப்பு அடைகிறேன். உயிர் எனக்கு வெல்லம் அல்ல என்று பாய்ந்து சென்று அத்தனைபேரைக் காப்பாற்றினாயே, அதில் ஒரு குடும்பமே இஸ்லாமியக் குடும்பம். கணவன், மனைவி, வயது முதிர்ந்த மூதாட்டி இரண்டு குழந்தைகள் என அந்த உயிர்களைக் காப்பாற்றியவன் தமிழ்ச்செல்வன் என்ற அறிகிறபோது ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து இந்திய மக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு, அன்றைக்கு உயிரைத் துச்சமாக மதித்து பாயும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முன்னால் சீறிச்சென்ற தமிழ்ச்செல்வன்தான் ஈழத் தமிழர்களைக் காக்க இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார் என்பதை நான் மராட்டிய மக்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

இது பாலகங்காதர திலகரின் பூமி. அவர் கர்ஜித்த மண். 'சுதந்திரம் எனது பிறப்பு உரிமை' என்று முழங்கிய பூமி. அப்படிப்பட்ட பாலகங்காதர திலகர், தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, பர்மாவில் மாண்டலே பாதாளச் சிறையில், 6 ஆண்டுகள் உடல் நலிய, நலிய, தேக ஆரோக்கியம் அழிய, சிறையில் வாடினார். அங்குதான், 'கீதா ரகசியம்' என்று பகவத் கீதைக்கு அவர் விளக்கம் எழுதினார். அவர் இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றி விடுதலை பெறவேண்டும் என்று போராடினார்.

இந்த மராட்டியத்தில் மும்பையில் இருக்கிற தலைவர்களுக்கு, இங்கு வாழக்கூடிய மராட்டிய மக்களுக்கு நான் ஒன்றைத் தெரிவிக்கின்றேன். மராட்டியத்தில் வாழும் சகோதரர்களே, நான் கட்சி எல்லைகளைக் கடந்து பேசுகிறேன். எங்கள் தமிழர்கள் எங்கிருந்தாலும் அந்த மண்ணை வாழ வைப்பதற்குப் போராடுவார்கள். எங்கள் தமிழர்கள் எங்கு சென்றாலும், அங்குள்ள மக்களுக்கு உதவுவார்கள். எங்கள் தமிழர்கள் ஜாவா, சுமத்ரா, போர்னியோ தீவுகளுக்குச் சென்றபோதும் சரி, பர்மா, இலங்கைக்குச் சென்ற போதும் சரி, இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி அந்த மண்ணை பொன் விளையும் பூமியாக ஆக்கினார்கள்.இது எங்கள் பழக்கம். இது எங்களுடைய நடவடிக்கை.

இந்த மும்பை நகரத்தில் வாழக்கூடிய மராட்டிய சகோதரர்களுக்குத் தெரிவிக்கின்றேன். நீங்கள் நினைக்கலாம். விடுதலைப் புலிகளை வீறுகொண்டு ஆதரிக்கிறானே தமிழ்ச்செல்வன். இந்தப் பேச்சு நாளை மராட்டிய மாநிலப் பத்திரிகைகளில் இந்தி ஏடுகளில் வரலாம். நான் செய்தியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வெளியிடுகிற செய்திகள் தணிக்கை செய்யப்படாத செய்திகளாக, ஏனெனில், என்னுடைய கருத்து அனைத்தும் நான் சொல்வதுதான் உண்மை ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

இதுவரை ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒருதரப்பு வாதத்தைத்தான் தில்லியில் இருந்து வருகின்ற ஏடுகளும், தில்லியில் இருந்து இயங்குகின்ற தொலைக் காட்சிகளும் ஒருதரப்பு செய்தியை - இந்திய அரசாங்கம் தருகிற செய்தியை - சிங்கள அரசு தருகிற செய்தியை - உண்மைக்கு மாறான செய்திகளைத் தந்து கொண்டு இருக்கிறது. இருதரப்பு வாதத்தையும் கேட்டால்தான் ஒரு நீதிபதி தக்க தீர்ப்பு அளிக்க முடியும்.

நான் இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் சார்பாக இங்கே இருப்பவர்களுக்காக அல்ல, இவர்கள் ஈழத் தமிழர்களைக் காக்க உயிர்களையும் கொடுப்போம் என்று வந்தவர்கள், இங்கே இருப்பவர்களுக்காக அல்ல. மராட்டியத்தில் மும்பையில் வாழக்கூடிய மக்களுக்காக நான் இதைத் தெரிவிக்கிறேன். இன்னொரு தரப்பையும், எங்கள் சோகக் கதையையும் கேளுங்கள். எங்கள் கண்ணீர்க் காவியத்தைக் கேளுங்கள், இதயத்தைப்பிளக்கின்ற துன்பச் செய்திகளைக் கேளுங்கள்.

மராட்டியத்தில் திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்னாரே, இந்த பூபாகத்திலேயே பிரிட்டிஷ்காரன் கடலை அடக்கி ஆண்டபோது, இந்தக் கடலில் கப்பலைச் செலுத்துகின்ற உரிமை எங்களுக்கும் உண்டு, நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே கலம் செலுத்தியவர்கள் எங்கள் கரிகாலன் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே; கப்பல் படை வைத்து இருந்தவன் ராஜராஜச் சோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கப்பல்படை வைத்து இருந்தவன் அவன் வழிவந்த தமிழன் நாங்கள் என்று கப்பலை ஓட்டியவன் எங்கள் வீர சிதம்பரம் பிள்ளை, எங்கள் தென்னாட்டு சிதம்பரம் பிள்ளை. அவர் மும்பை நகரத்தில் கப்பல் வாங்குப் போகும் நேரத்தில் ஒரு தடை வந்தது. முழுப் பணத்தையும் உடனே செலுத்த வேண்டும் என்று கம்பெனிக்காரனை வெள்ளைக்காரன் சொல்ல வைத்தான்.

தன் சொத்துகளை எல்லாம்விற்று, பாண்டித்துரைத் தேவர் போன்றர்கள் தந்த நிதிகளையும் திரட்டி, இங்கே கப்பல் வாங்குவதற்கு வந்த சிதம்பரம் பிள்ளைக்கு இடையூறுவந்த நேரத்தில், பால கங்காதர திலகரைத் தொடர்புகொண்டார். திலகர் அந்தக் கம்பெனிக்காரனை அழைத்தார். சிதம்பரம்பிள்ளை சொன்ன சொல் மாறாதவர். நீ கப்பலை ஒப்படைத்துவிடு' என்றார். சிதம்பரம் பிள்ளை கப்பலை வாங்கிக் கொண்டு போனார். நான் இன்றைக்கு அதே திலகர் வாழ்ந்த மண்ணில், சிதம்பரம் பிள்ளையின் பூமியான தெற்குச் சீமையில் இருந்து வந்து, மும்பை நகரத்திலே பேச வந்து இருக்கிறேன்.

ஒரு போராட்டக் களத்துக்குப் போகிறவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தன்னுடைய ஊரைப் பற்றிக் கவலைப்படாதவனாக இருக்க வேண்டும்.

இவரை நீங்கள் கேப்டன் தமிழ்ச்செல்வன் என்று அழைப்பதில் பொருத்தம் இருக்கிறது. ஏனென்றால், இதே மும்பை நகரம், ஒரு பெரும் போர்க்களத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த நேரத்தில், வங்கதேச யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிழக்குப் பாகிஸ்தானில் போர் மூண்டபோது, வீரமிக்க ஜெனரல் மானெக்ஷா தலைமையில் இந்தியப் படைகள் உள்ளே நுழைந்த போது, முக்தி வாகினிக்குத் துணைசெய்தபோது, பாகிஸ்தான் இரண்டாக உடைந்து, வங்கதேசம் உருவாக இந்திரா காந்தி அம்மையார் உதவி செய்தபோது அந்தப் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, இதே மும்பை நகரில் கடற்கரையில் இருந்த இந்தியக் கடற் படையைச் சேர்ந்த கப்பலை பாகிஸ்தான் கப்பற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியது. இந்தியக் கப்பல் தீப்பிடிக்க ஆரம்பித்தது. மூழ்க ஆரம்பித்தது.

அப்பொழுது அந்தக் கப்பலில் இருந்த கேப்டன், அந்தக் கப்பலுக்குள் இருந்து மூழ்கிய அனைவரையும் நீங்கள் தப்பிச்செல்லும் படகுகளில் குதித்து வெளியேறுங்கள். உயிர் காக்கும் படகுகளில் சென்று மீண்டும் நீங்கள் தாயகத்துக்கு பணியாற்றுங்கள் என்று அனைவரையும் படகுகளில் குதிக்கச் சொன்னான். ஆனால், அவன் அந்தக் கப்பலைவிட்டு நகலவில்லை.

அனைவரையும் காப்பாற்றி அனுப்பிவிட்டு, அந்தக் கப்பலின் மேல்தட்டில் சிரித்துக்கொண்டே நின்று கொண்டு இருந்தான். அவன் பெயர்தான் மகேந்திரநாத் முல்லா. நான் கப்பலின் கேப்டன், இந்தக் கப்பல் மூழ்கும்போது இதோடு சேர்ந்து நானும் மூழ்குவேன் என்று சொல்லி, கப்பலோடு சேர்ந்து தானும் உயிரோடு சமாதியான மகேந்திர நாத் முல்லாவின் உணர்வுதான் உலகத்தின் எந்த ஒரு படை வீரர் களுக்கும் தளகர்த்தன் ஆற்ற வேண்டியது. அந்தச் சம்பவம் இங்கேதான் நடைபெற்றது.

அதைப்போலத்தான் எங்கள் தமிழ்ச்செல்வனும். இராணுவத்தில் சேராத கேப்டனாக, கடற்படையில் சேராத கேப்டனாக, 35 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறான் என்று எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.

இதோ நான் மாலை சூட்டினேனே முத்துக் குமார். ஒரு இளம்சிறுத்தையாக வாலிபவயதில், வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையின் வசந்தங்களைத் தேடாமல் தீக்குளித்து இறந்துபோனான். தமிழகத்தில் இதுவரையிலும், ஒன்பது இளைஞர்கள் தீக்குளித்து மடிந்துவிட்டார்கள். ஈழத்தில் அழிகின்ற தங்கள் சொந்தச் சகோதரர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் அவர்கள் தீக்குளித்து மடிந்து இருக்கிறார்கள்.

மும்பையில் வாழும் அன்புக்குரிய தமிழர்களே, இந்த ஜனவரி மாதத்திற்குப்பிறகு இதுவரையிலும் 2800 தமிழர்கள் இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று வந்தவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 7500 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். மருத்துவ மனைகளில் குண்டுவீச்சுக்கு ஆளாகி பெண்களும், குழந்தைகளும் கொல் லப்பட்டு இருக்கிறார்கள். இதை யார் கண்டித்து இருக்கிறார்கள் தெரியுமா? ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவை கண்டித்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்து இருக்கிற அமெரிக்க வெளிவிவ காரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கண்டித்து இருக்கிறார். அவர் தெளிவாகச் சொன்னார் மருத்துவ மனைகள் மீது குண்டு வீசுவதை சிங்கள அரசு நிறுத்தட்டும். இருதரப்பும் போர் நிறுத்தம் செய்யட்டும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படட்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரட்டும்' என்றார்.

விடுதலைப்புலிகளைத் தடை செய்திருக்கிற இங்கிலாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் சான்னார். போரை நிறுத்துங்கள் இருதரப்பும் சண்டையை நிறுத்துங்கள். அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்றார். இருதரப்பும் போரை நிறுத்துங்கள் என்று அமெரிக்க சொல்லி விட்டது - இங்கிலாந்து சொல்லிவிட்டது - கருப்பர் உலகத்தின் விடிவெள்ளியான நெல்சன் மண்டேலா சொல்லி விட்டார் - ஆப்பிரிக்க தேசிய காங்கிரÞ தீர்மானம் போட்டுவிட்டது. உலகத்தில் பல நாடுகள் போரைநிறுத்தச் சொல்லிவிட்டன.

இத்தனை நாடுகள் போரை நிறுத்தச் சொன்னாலும் இந்தியஅரசு ஏன் சொல்லவில்லை? நான் இந்திய மக்களுக்குச் சொல்கிறேன் தமிழர்கள் பிரச்சனை என்று கருதாதீர்கள். நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், நாங்களும் இந்தியர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் 7 கோடி தமிழர்கள் இருக்கிறோம்.

எங்களது துன்பத்தில், துயரத்தில் இந்தியா பங்கெடுக்கத் தவறுமானால், எப்படி இங்கே இருக்கிற மராட்டியத்து சகோதரர்கள் துப்பாக்கி குண்டு மழையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த போது, எங்கள் தமிழர்கள் ஓடிச்சென்று காப்பாற்றினார்களோ, அதைப்போல எங்கள் மக்கள் கொல்லப்படுகிற போது இந்திய அரசு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். இந்திய மக்கள்மீது நாங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

photo of Tamilselvan attached.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)