சட்டப்பேரவையில் ஜனநாயகக் கொலை

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

சட்டப்பேரவையில் ஜனநாயகக் கொலை

தமிழகத்திலே ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மக்கள் மன்றத்திலும் ஜனநாயகம் இல்லை, சட்டமன்றத்திலும் ஜனநாயகம் இல்லை. சட்டமன்றத்தை நடத்திக் கொண்டு இருக்கின்ற பேரவைத் தலைவர், ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கிறார். ஜனநாயகத்தின் குரல்வளையைச் சாகடிக்கிறார். சபாநாயகர் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு நாளும் ஜனநாயகத்தைச் சிதைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற அவையிலே இருந்து நீக்கி இருக்கிறார்களே, நியாயம்தானா? அதே சட்டமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞர் கருணாநிதியின் கண் சாடைக்குக் கட்டுப்பட்டுக் கலவரம் செய்யவும் தயாராக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் காலணிகளை எடுத்துக் காட்டினார்கள். செருப்புகளை எடுத்துக் காட்டினார்கள். தகாத சொற்களை பேசினார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். அந்த மன்றத்தில் தங்களுடைய உரிமைக் குரலைப் பதிய வைக்க வேண்டும் என்றதற்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை நீக்கியது நியாயம்தானா? ஆக, சட்டமன்றத்திலே ஜனநாயகம் சாகடிக்கப்படுகின்றது. சட்டமன்றம் என்பது மக்களின் இருதயம் போன்றது. மக்கள் ஆட்சியின் இருதயம் போன்றது. அங்கே கருத்துகளைச் சொல்ல அனுமதி இருக்கிறதா?

விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்திலே நான் குறிப்பிட்டதைப் போல, இந்த மேடையிலே எங்கள் பக்கத்திலே இருந்து அழகு செய்ய வேண்டிய எங்கள் கண்ணியத்திற்கு உரிய சீமாபஷீர் இல்லையே என்று நான் கவலைப் பட்டேனே, அந்த அப்பழுக்கற்றவனை, குற்றமற்றவனை, குன்றிமணி அளவும் எவருக்கும் கேடு செய்யாதவனை, அபாண்டமான அக்கிரமமான பொய் வழக்குப் போட்டு, இன்றைக்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலே அவரைச் சிறைக்கொட்டடியிலே பூட்டி இருக்கின்றது பாசிச வெறி பிடித்த சர்வாதிகார வெறி பிடித்த அரசு. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. போடப்பட்டு இருக்கின்ற வழக்கு நூற்றுக்குநூறு பொய் வழக்கு. ஒரு சதவீதம்கூட உண்மை கிடையாது. என்ன காரணத்திற்காக? விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் ஆயுத உதவி செய்கிறோம் என்று குற்றம் சாட்டி.

முதல் தகவல் அறிக்கை என்ன சொல்கிறது? விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுப்பதற்காக, வெடிகுண்டுகள் வாங்குவதற்காக, சீமா பஷீர் பணம் கொடுத்தார் என்று காவல்துறை வழக்கைச் ஜோடித்து இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு பால்ரஸ் குண்டுகள் வாங்குவதற்கு பணம் கொடுத்தார் என்று ஒரு பச்சைப் பொய்யை அக்கிரமமாக சொல்லி இருக்கிறார்கள். மறுமலர்ச்சி தி.மு.க.வினரைச் சிறையிலே தள்ள வேண்டும், விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்று சொல்லி உள்ளே தள்ள வேண்டும் என்பதற்காக இந்த வழக்குப் போட்டார்கள்.

சட்டமன்றத்திலே காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பேசுகிறார். ‘விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி செய்தார் மறுமலர்ச்சி தி.மு.க.வைச் சேர்ந்த சீமா பஷீர், ஆகவே, அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்’ என்று சபாக்ஷ் போடுகிறார் அரசாங்கத்துக்கு. அதற்கு அனுமதி அளிக்கிறது சட்டமன்றம். அதற்கு அனுமதி அளிக்கின்றார் அவைத்தலைவர்.

‘அது நியாயம் அல்ல. எங்கள் பஷீர் குற்றம் செய்யவில்லை. குற்றம் இழைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் நாங்கள் தரவில்லை. முழுக்க முழுக்கப் பொய் வழக்கு. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேசியது நியாயம் அல்ல’ என்று மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வீர.இளவரசன் பேசுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. கருத்துக்குக் கருத்து, சொல்லுக்குச் சொல், வாதத்துக்கு வாதம் இதுதானே மக்கள் ஆட்சித் தத்துவம். உங்களிடம் அதிகாரம் இருக்கிறது. உங்களிடத்திலே ரத,கஜ,துரக, பதாதிகள் இருக்கின்றது. காவல்துறை இருக்கிறது. நீங்கள் உங்கள் விருப்பப்படி சிறைச்சாலையில் எவரையும் பூட்டலாம்.

இப்படி ஒரு குற்றச்சாட்டை எங்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேசியதற்கு, வீர இளவரசன் எழுந்து, ‘இது அபாண்டமான குற்றச்சாட்டு. மறுமலர்ச்சி தி.மு.க.வினுடைய சீமா பஷீர் தவறு செய்யவில்லை. அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவினார் என்று சொல்வது உண்மை அல்ல’ என்று பேசுவதை ஏன் பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மதிப்பிற்கு உரிய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களே, நீங்களா இப்படிப் பேசுவது? அண்ணாவின் அருகிலே இருந்து அரசியல் பயின்ற நீங்களா இப்படிப் பேசுவது?

எதற்கும் நாங்கள் அஞ்சவில்லை. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் என்றைக்கும் துணையாக இருப்பவர்கள்தான். அவர்கள் நடத்தும் உரிமைப் போருக்கு நாங்கள் துணையாக இருப்பவர்கள்தான். இதில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது. ஆனால், நாங்கள் தமிழ்நாட்டில் சட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது கிடையாது. அது நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை. இது பயத்தினால் சொல்லப்படும் கருத்து அல்ல. பொறுப்பு உணர்ச்சியோடு சொல்லப்படுகின்ற கருத்து. நான் எந்தக் காலத்திலும் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லை, ஈடுபடப்போவதும் இல்லை. ஆனால், ஈழத்திலே நடக்கின்ற போராட்டத்தை நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம்.

ஆம், மலரட்டும் தமிழ் ஈழம். இதுவே எங்கள் குறிக்கோள். போர்க்களத்திலே நிற்கிற புலிகள் வெல்லட்டும், இதுவே எங்கள் இதயத்து வேட்கை. இப்படிப் பேசக்கூடாதா? பேசுவோம்.

சட்டமன்றத்திலே எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். அவரை ஏவி விட்டது யார்? ஒவ்வொரு நாளும் யாரிடத்தில் யோசனை கேட்கிறார்? நான் வருத்தப்படுகிறேன், அனுதாபப்படுகிறேன் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்காக. ஏற்கனவே தயார் செய்து வைத்து, இந்த இந்தக் குற்றச் சாட்டுகளைப்பேசுங்கள் என்று சொல்லி, யாரோ ஏவி விடுகிற காரணத்தினாலே அந்த ஏவலுக்குத் துணை போய் நீங்கள் பேசினீர்கள். பேசிவிட்டுப் போங்கள். பதில் சொல்ல எங்களுக்கு ஏன் உரிமை இல்லை? இது நீதிமன்றத்திலே இருக்கிற வழக்கு. வீர.இளவரசன் பேசியதை, சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சொன்னாரே, நியாயம்தானா?

அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கி
செற்றமும் அறமும் சிதையாது காத்து,
ஞமன்கோல் அனைசீர்
.....வாழ்ந்த நாடு இந்த நாடு
ஞமன் கோல் அன்ன சீர்மைத்தாகி

சமன் செய்து சீர் தூக்கும்கோல் போல் நடுநிலைத் தவறாமல் இருக்க வேண்டும் சபாநாயகர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேசியது சபைக் குறிப்பிலே இருக்கிறதே, அது நீக்கப்பட்டு விட்டதா? அதற்குப் பதில் சொல்லி மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர் பேசியது சபைக் குறிப்பிலே சேர்க்கக் கூடாதா? அதை மறுத்துப் பேசியதற்காக, இன்னொரு உறுப்பினர் சட்டமன்றத்திலே சொல்லுகிறாராம், ‘வைகோவையும் கொலை செய்தால் தான் இவர்களுக்குத் தெரியும்’ என்று. அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. இதையும் சட்டமன்றத்திலே எங்கள் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டு இருக்கவேண்டுமா? அந்த மன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர், ‘அவனையும் கொலை செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தின் அவைக்கு உள்ளே பேசுகிறார்.

அப்படிப் பேசுகிறபோது மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர்கள் இதயத்திலே நெருப்பு விழுந்ததைப் போலத் துடிக்கிறார்கள். மீண்டும் சபை கூடுகிறது மறுநாள். இதைப் பற்றிப் பேச அனுமதி மறுக்கிறார் சபாநாயகர். ‘நீதிமன்றத்தில் இருக்கிறது வழக்கு இருக்கிறது’ என்கிறார்கள். சீமா பஷீர் மீது நீங்கள் பொய் வழக்குப்போட்டு இருக்கிறீர்கள். நோக்கத்தோடு போட்டு இருக்கிறீர்கள்.

நாங்கள் மனிதநேயம் உள்ளவர்கள். ஊனமுற்ற தங்கை அமிர்தவள்ளிக்கு மூன்று சக்கர வாகனம் கொடுத்தார்கள். நாங்கள் 18 ஆயிரம் ஊனமுற்றவர்களுக்கு நாங்கள் வாழ்வு கொடுத்தோம், எங்கள் சக்திக்கு மீறி. 75 ஆயிரம் யூனிட் இரத்தம் கொடுத்து இருக்கிறோம் இலவசமாக. யாருக்கு? எந்தக் கட்சி என்று எங்களுக்குத் தெரியாது. ஜாதி, மதம், கட்சி இதைக் கடந்து, நோயினால் துன்பப்பட்டவர்களுக்கு, மரணத்தின் பிடியிலே சிக்கிப் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு, மருத்துவமனையிலே நான்கு பாட்டில் இரத்தம் உடனடியாக வேண்டும் என்று தவித்தவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. இரத்ததானக் கழகத்திற்குத் தகவல் கொடுத்தால், அடுத்த நான்கு மணி நேரத்திற்கு உள்ளே என் தம்பிமார்கள், தோழர்கள் அங்கே போய் நிற்கிறார்கள். இரத்தம் கொடுக்கிறார்கள். நாங்கள் விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கிறோமா? 75 ஆயிரம் யூனிட் இரத்தம் கொடுத்து இருக்கிறோமே, ஏதாவது பத்திரிகையில் விளம்பரப்படுத்தியது உண்டா? செய்தி உண்டா?

மறுமலர்ச்சி தி.மு.க. நாட்டுக்குத் தேவையான கட்சி. இங்கே பலர் வந்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை நீங்கள் ஆதரிக்கலாம். வாக்கு அளிக்கலாம், வாக்கு அளிக்காமல் இருக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த இயக்கம் தமிழகத்துக்குத் தேவையான இயக்கம். மனித நேயம் மிகுந்த இயக்கம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற இயக்கம், கலவரம் செய்யாத இயக்கம், பொது நல நோக்கோடு செயல்படுகின்ற இயக்கம், சாதிமத வேறுபாடுகளைக் கடந்த இயக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோரும் ஓர் குடும்பம் என்று கருதுகிற அண்ணாவின் கொள்கைகளை வளர்க்கிற இயக்கம். எல்லோரும் அண்ணன் தம்பி என்று இயங்குவது நம் இயக்கம்.

இங்கு சுயநலம் இல்லை, சொந்தக் குடும்பத்தைக் கொண்டு வந்து முன்னிறுத்துகின்ற இயக்கம் இல்லை. நாங்கள் எல்லோரும் ஓர் குடும்பம். எல்லோரும் அண்ணன் தம்பிகள். இதைத்தான் அண்ணா காட்டினார். அவருடைய பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவருக்குச் சொல்வேன். அண்ணாவின் பிள்ளைகள் அவருடைய முதல் அமைச்சர் அலுவலகத்தைப் பார்த்தது உண்டா? அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள் அவர் அமர்ந்து இருந்த முதல் அமைச்சர் அலுவலகத்தைப் பார்த்தது உண்டா? அவர் குடும்பத்தினர் அரசாங்க நிர்வாகத் தாழ்வாரத்தில் ஒதுங்கியது உண்டா?

கேட்டால், சொல்லுகிறார் முதல் அமைச்சர், ‘எனக்கு ஆண்மை இருக்கிறது. எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்’ என்கிறார். இதுதான் பண்பாடா? எனக்கு சக்தி இருக்கிறது. எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதுதான் பண்பாடா? பெரியாரைக் கேலி பேசுகிறீர்களா? அண்ணாவைக் கேலி பேசுகிறீர்களா? தியாகச் சுடர் காமராஜரைக் கேலி பேசுகிறீர்களா? பசும்பொன் தேவர் திருமகனாரைக் கேலி பேசுகிறீர்களா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைக் கேலி பேசுகிறீர்களா? எந்த அடிப்படையிலே பேசுகின்றீர்கள்?

ஒரு பெரிய பொறுப்பிலே நீங்கள் இருக்கின்றீர்கள். முதல் அமைச்சர் பொறுப்பிலே இருக்கின்றீர்கள். எத்தனை ஆண்டுகள் உங்களுக்கு அரசியல் அனுபவம் என்று நீங்களே சொல்கிறீர்கள். எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை தாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைக் குறித்து விமர்சனம் செய்தால், விமர்சனத்திற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ய வேண்டும். அதுதான் சரியான போர்முறை. அதுதான் வீரர்கள் தொடுக்கின்ற போர்முறை. ஆனால், பதிலாக அவரைக் கொச்சைப்படுத்துகிறார், இழிவுபடுத்துகிறார்.

அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஒரு பெண்மணி. அவர்கள் கேட்ட கேள்வி, நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, அரசு இதழில் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்று சொன்னதற்கு, என்ன உதாரணம் சொல்கிறீர்கள்? புதன் கிழமை வந்து விடும் பட்டுப்புடவை. அதுபோல இறுதித் தீர்ப்பு வரும். ஆனால், புதன் கிழமை வரும் என்பதற்காக இன்றைக்கே அம்மணமாக நிற்கின்ற அம்மணி என்றா எழுதுவது?

இதுதான் பண்பாடா? குறளோவியமும், சங்கத் தமிழும் தீட்டிய முதல் அமைச்சர் அவர்களே, நான் மிகமிகச் சாதாரணமானவன். மிகுந்த நொந்து போன உள்ளத்தோடு கேட்கின்றேன். இதுதான் உங்கள் பதிலா? முப்பது கோடி இருந்தால், வைகோவையே நான் விலைக்கு வாங்கிவிடுவேன் என்று சொன்னீர்கள். இதற்கு அதிகார மமதைக் காரணமா? உங்களைப் பொறுத்த மட்டிலே எங்களை அழிக்க நினைக்கலாம், அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த நாட்டிலே நாங்கள் இயங்கிக் கொண்டே இருப்போம்.

பதினைந்தாம் தேதி காவிரிப் பிரச்சினையிலே அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்கிறீர்கள். ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினீர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் நாட்டு நலனைக் கருதி, வாழ்வு ஆதாரப் பிரச்சினை என்பதால் பங்கேற்றோம்.

இந்த மக்கள் மன்றத்தில் நான் கேட்கிறேன். நடுநிலையாளர்கள் இருக்கிறார்கள். அரசியல் வாதிகள், பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்து இருக்கிறார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்து, நிர்வாகப் பொறுப்பிலே இருந்து துரோகம் செய்தார்கள் என்று நீக்கப்பட்டவர்களை இந்தக்கூட்டத்திற்கு அழைப்பதற்கு எப்படி அவருக்கு உரிமை இருக்கிறது? இது நியாயம்தானா? அறிவாலயத்திலே கட்சிக் கூட்டம் நடத்துங்கள். அழைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆட்சேபனை இல்லை. அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் முகவரி கொடுங்கள். எப்படியானாலும் அவர்களை விளம்பரப்படுத்திக் கொள்ளுங்கள். அதை நான் விமர்ச்சிக்கத் தயாராக இல்லை. ஆனால், ஆறரைக் கோடி மக்களுக்குத் தலைமை தாங்குகிற முதல் அமைச்சர் பொறுப்பிலே நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா? விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட இடத்தில், காய்த்தல் உவத்தல் இன்றித்தானே நீங்கள் செயல்பட வேண்டும்?

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்து நீக்கப்பட்ட இருவரும், எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள்? நாட்டுக்குச் சொல்ல நீங்கள் தயார்தானா? அவர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியா? அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா? தேர்தல் ஆணையம் அவர்களைப் பதிவு செய்யப்பட்ட கட்சி என்று அறிவித்து இருக்கிறதா? மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்.

எந்த அடிப்படையிலே நீங்கள் அழைத்தீர்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலா? அப்படியானால், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் இருக்கின்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பீர்களா? தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புக் கொடுத்தீர்களா? காவிரிப் பிரச்சினைக்காகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காகவும், முத்தமிழ்நாட்டின் உரிமைக்குப் போராடுகிற பழ.நெடுமாறனுக்கு அழைப்பு இல்லை. தமிழர் உரிமைக்குப் போராடுகின்ற எத்தனையோ அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. உங்களுக்கு உரிய பூசாரிகளுக்கு நீங்கள் அழைப்பு கொடுத்து இருக்கிறீர்களே. எது நியாயம்?

என் ஆருயிர்ச் சகோதரர்கள் சத்யாவும், ராதாகிருக்ஷ்ணனும் இது அதிகாரப் துக்ஷ்பிரயோகம், முதல் அமைச்சர் அதிகாரத் துக்ஷ்பிரயோகம் செய்து இருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்து வெளியில் வந்தார்கள். மீண்டும் கூட்டம். 3 நாள்களுக்கு முன்னாலே 15 ஆம் தேதி கூட்டம். இந்தக் கூட்டத்துக்கும் முதல் அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு அனுப்புகிறாரே, அது நியாயம்தானா? அவர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையிலே அழைக்கப்பட்டார்கள்? கட்சியை உடைப்பதற்கு, அழிப்பதற்கு நீங்கள் திட்டமிட்டீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. நீங்கள்தான் ஏவிவிட்டீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. நடக்காது. ஒருக்காலும் நடக்காது. இந்தக் கட்சியை அழிக்க முடியாது. இது இரத்தத் தடாகத்திலே, தியாகத் தடாகத்திலே உருவானது. இதை அழிக்க முடியாது. ஒவ்வொரு சகோதரும் இந்தக் கட்சிலே ஏழைதான். வசதி அற்றவன்தான். நடுத்தரக் குடும்பம்தான். இலட்ச ரூபாய் வாழ்க்கைப் பார்க்காதவன்தான். ஒருசேர பத்தாயிரம் ரூபாயைப் பார்க்காதவன்தான். அவன் வாசலிலே மூன்று இலட்சத்தைக் கொண்டு வந்து நீட்டீனார்களே. அதை என் கால் தூசுக்கு சமம் என்று சொன்னார்களே என் தோழர்கள். 15 கோடி ரூபாய் தருகிறோம் என்று ஒதுக்கப்பட்ட மக்களினுடைய கொள்கைச் சிங்கமாக இருக்கிற என் சகோதரர் பொள்ளாச்சி கிருக்ஷ்ணன் வாசலில் போய் நின்றீர்களே, 15 கோடி என்று. அது வெறும் 15 காசுக்குச் சமம் என்று சொன்னாரே, என் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன் டாக்டர் கிருக்ஷ்ணனை.

மாடிமனை வேண்டாம். மாட மாளிகை வேண்டாம். சொத்து சுகம் வேண்டாம். கொண்ட கொள்கைக்கு, நம்பியர்வர்களுக்காகத் தலை கொடுக்கிற வீரர்கள் நாங்கள் என்று என்னோடு இருக்கிறார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்கள். மறுமலர்ச்சி தி.மு.க.வில் பாயாது. உங்கள் பணத்தை வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிட முடியாது. எத்தனை கோடிகள் ஏவிவிட்டுப் பார்த்தீர்கள் ஒன்றும் நடக்கவில்லை. ஆயிரத்து முன்}றுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வந்தார்கள். சரித்திரம் காணாத கூட்டத்தை அண்ணாநகரிலே எங்கள் வேளச்சேரி மணிமாறன் பொதுக் குழுவை நடத்தினார். அதற்குப்பிறகுதான் கோவையில் மாநாடு. திரண்டு எழுந்தது சிதம்பரம் பூங்கா. பார்த்தது இல்லை அப்படியொரு கூட்டத்தை. வசதியற்றவர்கள்தான் - ஒரு வேன் பிடிக்க வசதி கிடையாது என் தோழர்களுக்கு. மறுமலர்ச்சி தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு தோழனும், அவனுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்து, ஊதியத்தைச் செலவழித்து, கடன் வாங்கி செலவழித்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறான். அதனால் யாராலும் அழிக்க முடியாது.

(ஏழுமலை 13 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் (18.4.2007)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)