பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு.

விவகாரங்கள்: இலக்கியம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

பொன்னியின் செல்வன்
வைகோ திறனாய்வு

அனைவருக்கும் வணக்கம்.

‘சோழமண்டல இயல் இசை நாடக மன்றத்தினர் விழா எடுப்பதாகவும், அதில் ‘இயல்’ குறித்து உரையாற்றிட வேண்டும் என்றும் அழைத்த நேரத்தில், கலை வளர்த்த தரணியில், இசை வளர்த்த தஞ்சையில், தமிழர்களின் மகோன்னதமான மன்றத்தில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பு எனக் கருதி அகமகிழ்ந்து, நான் இசைவு அளித்தேன்.

கல்விக் காவலர், மாட்சிமைக்கு உரிய துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று, உதயகுமாரும், துரை. பாலகிருக்ஷ்ணனும் என்னிடத்தில் கூறியபோது, அது திகட்டாத தேறலாக என் நெஞ்சில் இனித்தது. என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து அவரை மதிக்கின்றவன் நான். இன்றுதான் முதன்முதலாக அவர்களோடு ஒரு மேடையில் பங்கு ஏற்கின்ற பேறு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இசைவு அளித்தமைக்கும், அரிய உரை தந்தமைக்கும், இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்கி படைத்த காவியம்

சோழ நாட்டின் பெருமையை முறையாக வரலாற்றுச் சுவடிகளில் பதிவு செய்ய நமது முன்னோர்கள் தவறி இருந்தாலும், செப்பு ஏடுகளில், கல்வெட்டுகளில் தமிழ் மக்கள் குறித்து வைத்து இருக்கிற செய்திக் குறிப்புகளைக் கொண்டு ஒரு காவியம் படைத்தார் கல்கி ஆசிரியர். ‘பொன்னியின் செல்வன்’ எனும் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார்.

இசை பிறந்தது, கூத்து பிறந்தது. பின்னால் இயல் வளர்ந்தது. நான் காலத்தின் அருமை கருதி இந்த இயல், உரைநடை இலக்கியம் எப்படிப் பரிணமித்தது என்பதைப் பிரித்துக்கூற இயலாது. குறுங்கதையும் நெடுங்கதையும் உரைநடை இலக்கியத்தின் பகுதிகளாக வளர்ந்து வந்த காலத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்களின் உன்னதமான சரிதத்தை, போற்றிய நெறிகளை, கல்கி ஆசிரியர் சரித்திர நவீனங்களாகத் தந்தார். நான் மிகச்சிறிய வயதில், பள்ளி மாணவனாக இருந்த பருவத்தில் , என் இல்லத்திற்கு நாளேடாக ‘சுதேசிமித்திரனும்’, வார ஏடாக ‘கல்கி’யும் வந்த காரணத்தால், ‘பாத்திபன் கனவு - சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வன்’ தொடர்கள் தொகுக்கப்பட்ட பைண்டு வால்யூம்களை நான் ஆர்வத்துடன் படித்தேன், அதில் இலயித்துப்போனேன்.

உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து.

சோழ வள நாடு

சோழ நாட்டின் சிறப்புகளைப் பற்றிக் கல்கி ஆசிரியர் பொன்னியின் செல்வனில் தருகிறார். சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

“அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது.

அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.

இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டிய ஆலயம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற, இந்தத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இன்றைக்கும் இருக்கிறது.

அந்தக் கோவில் கல்வெட்டில்,

‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய
ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’

என்று கல்வெட்டு இருக்கிறது.

அதுதான் இன்றைக்கு பிரகதீக்ஷ்வரர் ஆலயத்தில் காணப்படுகிறது . ஆயிரக்கணக்கான கழனிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூமி, மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் குடும்பம், இன்றைக்கு அந்தப் பெயரிலேயே கல்லூரி அமைத்து, வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்கும் கல்வியைத் தருகிறார்கள். அந்தப் பூண்டி மண்டலத்தைத்தான் ‘நித்தவிநோத வளநாட்டு வெண்ணி கூற்றத்துக் கீழ்ப்பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேரித மங்கலம்’ என்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுக் கூறுகிறது. பூக்கள் மண்டி கிடந்ததாலே பூ மண்டி - ‘பூண்டி’ ஆயிற்று.

எத்தனைப் பூக்கள் குறிஞ்சிப் பாட்டிலே கபிலன் தருகின்ற பூக்கள்! அப்படிப் பூக்கள் மண்டிய பூமியாம் பூண்டியின் காவலர், இவ்விழாவின் ஏற்றமிகு தலைவர்!

துணிவும், நம்பிக்கையும்

நம் அய்யா வாண்டையார் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அதில், கண்ணன் தூது சென்றபோது விசுவரூபம் காட்டியபோதும், அரவக்கொடியோன் துரியோதனன் அஞ்சவில்லை என்று கூறினார். அப்போது 11 அக்ரோணி சேனைகள் இருந்தன, பீக்ஷ்மர் - கர்ணன் - தரோணர் - கிருபர் - அஸ்வத்தாமன் - பூரிஸ்ரவஸ் - பகத தத்தன் - படைகள் இருந்தன, இத்தனையும் இருந்தது. நெஞ்சில் துணிவும் நம்பிக்கையும் இருந்தது. ஆகவே, போர் முனையிலே சந்திப்பதைப்பற்றிக் கலங்காமல் எதிர்கொள்வதாகச் சொன்னான். 11 அக்ரோணி சேனைகளும் மகாரதர்களும் பக்கத்தில் இருக்கிற போது, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், துரியோதனன் போருக்கு எழுந்தான்.

அர்ஜூனன் பக்கத்தில் கண்ணன் இருக்கிறான் என்ற தன்னம்பிக்கையோடு, அவனுடைய வீரத்தில் நம்பிக்கை கொண்டு பாண்டவர்கள் களத்திற்கு வந்தனர். ஆனால், பீக்ஷ்மர் , துரோணர், கர்ணன் ஆகியோர் வீழ்ந்ததற்குப்பிறகு, கடைசிகட்டத்தில் சல்லியன் சேனாதிபதியாகி அவனும் வீழ்ந்ததற்குப் பிறகு, மகாரதர்கள் எல்லாம் அழிக்கப்பட்டதற்குப்பிறகு, படைபரிவாரம் சேனைகள் அழிந்ததற்குப்பிறகு அனைத்தையும் யுத்த களத்தில் இழந்து, கெளரவர் படைகள் தோற்றனர். அவர்களின் தோல்விக்குக் காரணம், வீரத்தின் வெற்றியா? சூழ்ச்சியா? என்ற விளக்கங்களுக்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

ஒவ்வொரு மகாரதர்களும் கண்ணனின் சூழ்ச்சியால்தான் வீழ்த்தப்பட்டார்கள். ஒவ்வொரு சேனாதிபதியும் கண்ணனின் சூழ்ச்சியால்தான் வீழ்த்தப்பட்டார்கள். அனைத்தையும் இழந்து படுகாயமுற்று நீர்நிலைக்கு உள்ளே சென்று, துரியோதனன் மோன நிலையில் தவம் இருக்கத் தொடங்கியபோது, அவன் மீண்டும் உரம் பெற்று வந்துவிடக்கூடாது என்று, கண்ணன் பாண்டவர்களை அவன் இருக்கும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறான். நீர்நிலைக்கு உள்ளே இருந்து, அவனை வெளியே வா என்று அழைக்கிறார்கள். ‘நான் களைத்துப்போய் இருக்கிறேன்’ என்கிறான் துரியோதனன்.

இழிவாகப் பேசுகிறார்கள். உங்களில் யார் ஒருவனோடும் சண்டை செய்யத் தயார் என்கிறான் துரியோதனன். பீமன், துரியோதனனோடு போருக்குச் செல்கிறான். கதாயுத யுத்தம் நடக்கிறது. களைத்துக் கயாம்பட்ட நிலையிலும், கதாயுத யுத்தத்தில் துரியோதனன் கை ஓங்குகிறது. இவருவரும் சமகாலத்தில் பாலராமனிடத்தில் கதாயுதப் பயிற்சி பெற்றவர்கள். நாபிக்குக் கீழே கதாயுதத்தால் அடிக்கக்கூடாது, இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது போர்முறை.
சிரசில் அடிவாங்குகிறபோது பீமன் தடுமாறுகிறான். தலையில் அடிவாங்குகிற போது துரியோதனனுக்குத் தடுமாற்றம் இல்லை. இந்தத் தடுமாற்றத்தின் போதுதான், கண்ணன் தெடையைத் தட்டிக் காண்பித்து, ‘தொடையில் அடித்து எலும்பை முறி’ என்பதுபோல சூசகமாகச் சொன்னதைப் புரிந்துகொண்டு, பீமன் தொடைமீது தாக்கினான். தொடை எலும்பு முறிந்து கீழே விழுந்து புரண்டான் துரியோதணன். கலப்பையோடு வந்த பலராமன் கோபித்தான். அதற்குப் பின்னர் உயிர்போகும் தறுவாயில், துரியோதணன் தலைமீது ஏறி பீமன் குதித்தான். மிகக் கோரமான காட்சி. தலைமீது கூத்து ஆடுகிறான் பீமன். அப்போது, மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு துரியோதணன் சொன்னான். அவனிடத்தில் பல தவறுகள் உண்டு, தவறுகள் செய்து இருக்கிறான். அதெல்லாம் போகட்டும்.

ஆனால், மரணத்தை அவன் சுத்த வீரனாகத் தழுவினான் என்பதற்கு அவன் சொன்ன வார்த்தைகள்தான் சான்று. கண்ணனைத்தான் அவன் ஏசினான். கண்ணனைத்தான் அவன் கடுமையாக நி்ந்தித்தான். ‘பீமா! நீ என் தலையில் ஏறி மிதிக்கிறாய். நான் வருத்தப்படவில்லை. இன்னும் சற்றுநேரத்தில் காக்கைகளும் கழுகுகளும் கொத்தப்போகின்ற இந்தத் தலை மீது உன் பாதம்பட்டுத் துள்ளி ஆடுவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை’ என்கிறான். இங்கே அய்யா வாண்டையார் அவர்கள், துரியோதணனின் வீரத்தைப் பற்றிச் சொன்னவுடனே, அதைத்தான் நான் எண்ணிப்பார்த்தேன். அத்தகைய வீரம் அவனுக்கு இருந்தது.

வீர நாராயணம் ஏரி

கல்கி ஆசிரியர், மான உணர்வு கொண்ட , தலைசிறந்த வீரனைக் கதாநாயகனாகக் கொண்டு வருகிறார். பொன்னியின் செல்வன் தொடக்க அத்தியாயம், முதல் பாகம். ‘புது வெள்ளம்.’ காவிரி பொங்கிப் பெருகி வருகிற சோழர் பூமி அல்லவா? அதனால்தானே, ‘பொன்னியின் செல்வன்’ என்று இதற்குப் பெயர் சூட்டினார். ராஜராஜனின் பெயர்தானே அருள்மொழிவர்மன்! அவனைத்தானே, ‘பொன்னியின் செல்வன்’ என்று வைத்தார். ஆனால், பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் முழுமையாக ஆக்கிரமித்தவன் வல்லவராயன் வந்தியத்தேவன்தான்.

இயற்கை எழில் கொஞ்சிக் கிடக்கிற சோழ நாடுக்கு உள்ளே, கல்கி ஆசிரியர் நம்மை அழைத்து வருகிறார். வீர நாராயணம் ஏரியை விவரிக்கின்றார் கல்கி. ஒன்றைரக் காதம் தென்வடலாகவும், அரைக்காதம் கிழமேலாகவும் இருக்ககூடியது இந்த வீர நாராயணம் ஏரி. இதுதான் பின்னர் ‘வீராணம் ஏரி’ என்று ஆயிற்று.

தக்கோலப் போர்

இந்த வீர நாராயணம் ஏரி, கடல்போல் இருக்கிறது. இந்த ஏரியை அமைத்த பராந்தகச் சக்கரவர்த்தியின் வீர மைந்தன் இளவரசர் இராஜதித்தயர் என்று, முதல் அத்யாத்திலேயே இராஜதித்தயரின் தக்கோலப் போரைப் பற்றிச் சொல்கிறார்.

வீரநாராயணம் என்று இந்த ஏரிக்கு எப்படி பெயர் வந்தது. பராந்தகச் சோழனின் பல பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்டுகிறார். ‘தக்கோலப் போர்’ சோழர்கள் வரலாற்றிலேயே மிகப் பிரசித்திப் பெற்ற யுத்தம். அப்போது சோழர் குலம் கொஞ்சம் புகழ் மங்கி இருந்த காலம். பல்லவ மன்னனுக்குத் துணையாகச் செல்கிறபோது, அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்ற இடத்தில், சோழப் படைகளுக்கும், இரட்டை மண்டலத்து படைகளுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. இரட்டை மண்டலத்துக் கன்னரதேவன் பெரும் படையுடன் மோதினான்.

கடல்போன்ற அவனது படையை எதிர்த்து, இராஜதித்தயர் செல்கிறார். வெற்றிமேல் வெற்றி பெறுகிறார். அவர் வாள் வீசுகிற இடங்களில், எதிரிகளின் தலைகள் பறக்கின்றன. வெற்றிக்கொடி நாட்டுகிறார். புலிக்கொடி முன்னாலே செல்கிறது.

அப்போது, எதிரிப் படைகளில் வந்த கங்கநாட்டு மன்னன் பூதுகன் வஞ்சகமாக வெள்ளைக்கொடி தாங்கி, யானை மீது வருகிறான். எதற்கு வருகிறான்? சண்டைக்கா? சமாதானத்திற்காகவா? என்று இராஜதித்தயர் திகைக்கிறார். யானையை அருகில் விடுகிறார்கள் மெய்க்காவலர்கள். அவன் முதலில் கைகூப்பிப் கும்பிடுகிறான். சேக்கிழார் பெருமான் சொன்னார் அல்லவா?

‘மைபொதி விளக்கே அன்ன மனதினில் கருப்பு வைத்து
கைதனில் படைசரந்த புத்தகக் கவளி ஏந்தி புகுந்தனன் முத்தநாதன்’

என்று மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில், அதைப்போல அருகில் வந்து வணக்கம் செலுத்திவிட்டு, வில்லை வளைத்து விஷம் தோய்ந்த பாணத்தை தொடுக்கிறான்.

இராஜதித்தயர் மார்பை ஊடுருவுகிறது அம்பு. அந்த யானையின் மீதே இராஜதித்தயர் விழுகிறார். இது தக்கோலத்தின் போர்க்களக் காட்சி.

அந்த இராஜதித்தயரின் உடன்பிறந்த சகோதரர்தான் அரிஞ்சய சோழர். அவருடைய இன்னொரு சகோதரர்தான் கண்டராதித்தன். இன்னொரு தம்பிதான் அழகில் மன்மதனைப் போன்றவர் என்று கல்கி வர்ணித்த சுந்தரச்சோழர்.

கண்டராதித்தன் சிவஞானச்செல்வர். அவர் முழுக்க முழுக்க சிவாலாய வழிபாட்டிலேயே இருக்கிறார். அரசாளும் ஆசை இல்லை. எனவேதான் கண்டாரதித்தன் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கிறபோதே, அப்போது அரிஞ்சய சோழர் மன்னர் ஆனார். சுந்தரச்சோழர் இளவரசரைக் கொண்டுவந்து பட்டம் சூட்டுகிறார் மன்னர் கண்டராதித்தர். பராந்தகச் சக்கரவர்த்தி விருப்பப்படி அரிஞ்சயருக்குப் பட்டம் சூட்டுகிறார். அவர்களுக்குப்பின் சுந்தரச்சோழரும், அவர்வழிப் பிள்ளைகளும்தான் பட்டத்துக்கு வரவேண்டும் என்று சொல்கிறார்.

ஆதித்த கரிகாலனின் ஓலை

சுந்தர சோழருடைய பிள்ளைகளில் மூத்தவன்தான் ஆதித்த கரிகாலன். இரண்டாவது பிள்ளை அருள்மொழிவர்மன். இந்தக் கதை ஆரம்பிக்கிறபோது, காஞ்சியில் இருக்கிற ஆதித்த கரிகாலனிடம் இருந்து வந்தியத்தேவன் ஓலை கொண்டு வருகிறான். ‘பொன் மாளிகை கட்டி இருக்கிறேன்; தந்தை சுந்தரச்சோழர் காஞ்சிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுக்கிற கடிதத்தை, ஆதித்த கரிகாலனிடம் இருந்து வந்தியத்தேவன் சுந்தரச்சோழச் சக்கரவர்த்திக்குக் கொண்டு வருகிறான். இன்னொரு கடிதம் - கரிகாலன் தன் தமக்கை குந்தவைப் பிராட்டிக்கு தந்தது’ எந்தக் காரியத்தையும் வந்தியத்தேவனிடம் நம்பி ஒப்படைக்கலாம் நீ பயன்படுத்திக்கொள்” எனும் கடிதம்.

கடம்பூர் சதி

முதல் அத்தியாயமே, சதி ஆலோசனை நடக்கிற இடத்தைத்தான் விவரிக்கிறது. அந்த இரவிலே, கடம்பூர் சம்புவராயர் மாளிகையிலே சதி ஆலோசனை நடக்கிறது. சம்புவராயர் மகன் கந்தமாறனுக்கு வந்தியத்தேவன் நண்பன். ஒருசேர வாள் வீசியவர்கள். ஆகவே அவன் வந்தான். அங்கே சதி ஆலோசனை நடக்கிறது. சோழ நாட்டின் குறுநில மன்னர்கள், சக்கரவர்த்திக்கு உடன் இருக்கிற மன்னர்கள், இருகூறாகப் பிரிகிறார்கள். பழுவேட்டரையர்கள், சம்புவராயர்கள், மழபாடியாரும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து, கண்டராதித்தன் பிள்ளை மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்ட வேண்டும். அதுதான் பட்டத்து உரிமை. சுந்தரச்சோழரின் பிள்ளைகள் பட்டத்திற்கு வரக்கூடாது என்று அங்கே சதித்திட்டம் வகுக்கப்படுகிறது.

இதுதான் முதல் காட்சி.

இப்படி எடுத்த எடுப்பிலேயே முதலில் இந்த சதி ஆலோசனைக் காட்சியை மறைத்திருந்து பார்த்துவிட்டு, அங்கு இருந்து வந்தியத்தேவன் வருகிறான். வந்தியத்தேவன் மாவீரன். அகட விகட சாமர்த்தியம் அனைத்தும் கொண்டவன். இந்த நவீனத்தைப் படிக்கிற போது எந்த அளவுக்கு அதில் நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறார் கல்கி என்று படித்தால்தான் தெரியும். எந்த இடத்திலேயும் பேசுகிறபோது வந்தியத்தேவனின் பதில் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

இசையும், கலையும்

இசை வளர்த்த இடம் இந்த தஞ்சை மண்டலம். இங்கேதான், மாரிமுத்தா பிள்ளையும் அருணாசல கவிராயரும் - முத்துத் தாண்டவரும் வாழ்ந்தார்கள். இந்தத் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதர், ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற அற்புதமான ஒரு இசைக்காவியத்தைத் தந்து இருக்கிறார். இந்த நூலிலும் கூட, கல்கி ஆசிரியர் பழைய செய்திகளை எல்லாம் சொல்கிறார்.

காவிரி வளத்தைச் சொல்கிறார். இசையின் சிறப்பைச் சொல்கிறபோது

‘கொன்றைன் தீங்குழல் கேளாமோ தோழி
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி’

என்கின்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகளைப் பாட வைக்கிறார்.

இந்தத் தீங்குழல் என்பது, புல்லாங்குழல் என்று சொன்னார்கள் அல்லவா? அந்தக் குழலில் நாதம் பிறக்கிறது. இந்தக் குழல் மட்டும் அல்ல, தோலினால் செய்யப்பட்ட இசைக் கருவிகள், நரம்பினால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், யாழ் கருவிகள், 5000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பயின்ற கருவிகள் - மொகஞ்சதாரோ ஹராப்பா அகழ்வு ஆராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டன. இன்றைக்கு இலண்டன் நகர அருங்காட்சியகத்தில், தமிழர்கள் பயன்படுத்திய யாழ் இருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. நமது இசைப் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.

வந்தியத்தேவனின் தந்திரம்

இங்கே, சோழப் பேரரசின் சபைக்கு வந்தியத்தேவன் வருகிறான். அந்தக் காட்சிகள், ரொம்ப அற்புதமாக இருக்கும். எப்படி தப்பித்து வருகிறான் - கோட்டைக்கு உள்ளே வருகிறான். இந்தக் கோட்டையைக் காக்கின்ற படைவீரர்களைப்பற்றிச் சொல்கிறபோது, வேளக்காரப் படையினர் மன்னருக்காகத் தலைகளை வெட்டி, உயிர்களைத் தரக்கூடிய வீரர்கள். அந்த வேளக்காரப் படையினர் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். இவன் அரண்மணைக்கு உள்ளே வருகிறான். ஆதித்த கரிகாலனின் ஓலையை, சுந்தரச் சோழச் சக்கரவர்த்தியிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வந்தியத்வேன் ரொம்பத் திறமையாக, கெட்டிக்காரத்தனமாக உள்ளே நுழைகிறான். அதை எல்லாம் எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்.

ஓலையை கொடுக்கிறபோது சக்கரவர்த்தியிடம் அவன் பேசுகிற திறமையைப்பற்றி வானவன் மாதேவி - அவள் திருக்கோவிலூர் மலையமான் திருமுடிக்காரி என்கிற மாபெரும் மன்னனின் மரபில் வந்தவள், அவள் கூறுகிறாள், ‘இந்தப் பிள்ளையின் நாவில் சரஸ்வதி தேவியே குடிகொண்டு இருக்கிறாளே’ என்கிறாள். அப்பொழுது புலவர்கள் எல்லாம், சுந்தரச்சோழர் குறித்துப் பாடுகிறார்கள். சுந்தரச்சோழர் ஒரு குறிப்பை கொடுத்து, அதை எல்லோரையும் பாடச் சொல்கிறார். ஒரு புலவர் வந்து பாடுகிறார். அந்தப் பாட்டை எல்லோரும் ரசிக்கிறார்கள்.

அந்தப் பாடலில் சுந்தரச்சோழர் புகழப்படுகிறார். இந்திரனுக்குக் கரி அளித்தார், பரி அளித்தார். யாருக்கு? செந்நிற மேனி தினகரனுக்கு.

“இந்திரன் ஏற்க கரி அளித்தார்
பரி ஏழளித்தார் செந்திரு மேனித்தினகரற்கு
சிவனார் மணத்துப் பைந்துகிலேளப் பல்லக்களித்தார்
பழையாறை நகர்ச்
சுந்தரச் சோழரை யாவரொப்பார்கள்
இத்தொன்னிலத்தே!”

இது அந்தப்புலவர் பாடியது.

அதற்கு விளக்கம் தருகிறார்கள். என்னவென்றால், “தேவேந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் யுத்தம் வந்து விட்டது. விருத்தாசுரன் தாக்குதலில், தேவேந்திரனின் ஐராவதம் செத்துப்போய்விட்டது. யுத்த களத்தில் ஏறிச்செல்வதற்கு யானை இல்லையே என்று அவன் கவலைப்பட்டபோது, சுந்தரச்சோழரிடம் வந்தான். சுந்தரச்சோழர் தன் யானை லாயத்திற்கு அழைத்துப் போனார். ‘இங்கே நிற்கக்கூடிய போர் யானைகளில் உனக்கு எந்த யானை வேண்டும்? என்று கேட்டார்.
தேவேந்திரன் திகைத்து விட்டான். ‘எந்த யானையைத் தேர்ந்து எடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை’ என்கிறான்.
உடனே சுந்தரச்சோழ சக்கரவர்த்தி, சரியான போர் யானையைக் கொடுத்து, ‘இதை வைத்து விருத்தாசுரனிடம் சண்டைக்குபோ’ என்றார்.

அப்போது, இதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது - இதை அடக்குவதற்கு என்னிடத்திலே வஜ்ராயுதம் இல்லையே’ என்றான்.

பரி (குதிரை) அளித்தார் தினகரனுக்கு. எதற்கு? இராகுவுக்கும், சூரியனுக்கும் சண்டை வந்தது. சூரியனின் வெப்பத்திலே இராகு தளர்ந்தாலும்கூட, இராகுவின் விஷயத்தில் சூரியனின் ஏழுகுதிரைகளும் இறந்து விட்டன. சூரியன் திகைத்தான். நாம் பயணம் செய்ய முடியாதே?
என்ன செய்வது என்று, அவனும் சுத்ரச் சோழரிடம் மனு போட்டான். ‘கவலைப்படாதே. நான் என் ரதத்தில் பூட்டப்படுகிற ஏழு குதிரைகளை அனுப்பி வைக்கிறேன். நீ பயப்படாமல் போய் உன் பயத்தைத் தொடர்’ என்று சொன்னான். அனுப்பியும் வைத்தான்.

அடுத்து சிவனுக்கும் - பார்வதிக்கும் திருமணம் நடக்கிறது. அவசரத்தில் பெண் வீட்டார் பல்லக்குக் கொண்டு வரவில்லை. என்ன செய்வத என்று திகைத்துச் சுந்தரச்சோழரிடம் வந்தார்கள். ’நாங்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டோம்’ என்றார்கள். அதற்கு அவர், ‘நான் முத்துப் பல்லக்கை அனுப்பி வைக்கிறேன். சிறப்பாக நடைபெறட்டும் வரவேற்பு வைபவம் என்று முத்துப் பல்லக்கை அனுப்பி வைத்தான்.

இதையெல்லாம் சொல்லி, இப்படி எல்லாம் அனுப்புவதற்குச் சுந்தரச் சோழனைவிட வேறு யாரால் முடியும்? என்று அந்தப் புலவர் பாடினார். உடனே சுந்தரச் சோழர் கேட்கிறார். ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று தெரியுமா?’ உடனே புலவர் பெருமக்கள் எல்லாம், யார் இந்த அற்புதமான பாட்டை எழுதியவர்? என்று யோசிக்கிறார்கள்.

உடனே சுந்தரச்சோழர் சொல்கிறார். ‘நான்கு வரிகளுக்கு உள்ளே இவ்வளவு பொய்யைச் சொன்னவன், வெட்கப்பட்டு பெயரைச் சொல்லாமல் போய் விட்டான். யார் எழுதியது?’ என்று தெரியவில்லை.

இந்த நேரத்தில் திடீரென்று வந்தியத்தேவன் உள்ளே நுழைகிறான். ‘மன்னா, இதைப் பொய் என்று இழிவுபடுத்தக் கூடாது. இது இல்பொருள் உவமை அணி பாராட்டவது வழக்கம்.’

யார் இந்தப் பிள்ளை, ரொம்ப சூட்டிகையாகப் பேசுகிறானே என்று நினைத்து ’யார் இந்தப் பாடலை எழுதியது?’ என்று கேட்கிறார்கள்.

‘இவ்வளவு பொய் சொல்லி எழுதியது வேறு யாரும் இல்லை, அடியேன் தான் எழுதினேன்’ என்கிறார் சுந்தரச்சோழர்.
காரணம் சொல்ல வேண்டும் அல்லவா?

இயற்றியது யார்?

சோழ சாம்ராஜ்யத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார். சோழ மன்னர்களின் வரலாற்றில் பெருமைக்கு உரியவர். குந்தவை பிராட்டி சிறிய வயதில் இருக்கிறபோது புலவர்கள் வந்து பாடி விட்டுப் போன உடனே, குந்தவை சொல்கிறார். ‘அப்பா, புலவர்கள் உங்களை பற்றிப் பாடிய பாடல்கள் ரொம்ப நல்லா இருந்ததே?’ என்கிறாள்.

உடன் மன்னர், ‘அப்படியா நானே என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடட்டுமா?’ என்று கேட்க, ‘பாடு’ என்றவுடன், இந்தப் பாட்டைப் பாடிவிட்டு ‘எப்படி இருக்கிறது?’ என்று கேட்டேன். என் முதுகில் ஏறி உட்கார்ந்து, என் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள்’ என்று சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டை யாரிடமோ குந்தவை சொல்லி இருக்கிறாள், அந்தப்புலவன் எழுதிக் கொண்டுவந்து இங்கே பாடி இருக்கிறான்’ என்கிறார்.

இவ்வளவு நகைச்சுவையைக் கூறிவிட்டு, அடுத்துச் சொல்கிறார். ‘இன்றைக்கு இந்தப் பாடலை எழுதுவதாக இருந்தால், இதோடு இன்னும் ஒரு அடியையும் சேர்த்து இருப்பேன். இந்திரனுக்கு யானை தந்தார் - சூரியனுக்குக் குதிரை தந்தார் - சிவனுக்கும் பார்வதிக்கும் பல்லக்கத் தந்தார் சுந்தரசோழர்’ என்று அதோடு நிறுத்தி இருக்க மாட்டேன். இன்றைக்கப் பாடினால், ‘மறலியை உதைத்தார் சிவபெருமான், மார்க்கண்டேயனைக் காப்பதற்கு எமனை உதைத்தார் சிவன், எமன் தப்பித்துக் கொண்டான். எருமைக் கிடா இறந்துவிட்டது. சிவன் உதைத்ததில், எமன் தப்பித்தான் - எருமை இறந்துவிட்டது. என்னடா செய்வது? என்று திகைத்துப் போய் நிற்கும்போது, எமன் சுந்தரச் சோழரைப் பார்க்கிறார். ‘உனக்கு நான் ஒரு எருமைக்கிடா அனுப்புகிறேன் என்று சுந்தரச்சோழர் அனுப்புகிறார்.

அந்த எருமை மீது ஏறி, எமன் வந்துகொண்டு இருக்கிறான். கோட்டைக்கு உள்ளே சின்னப் பழுவேட்டரையர், காலந்தக கண்டராலும், அந்த எமதர்மராஜனைத் தடுக்க முடியாது. அதாவது எனக்குச் சாவு வந்துவிட்டது என்று சுந்தரச்சோழர் இவ்வளவு நகைச்சுவைக்கு மத்தியில். ‘எமன் இப்பொழுது என்னை நோக்கி வருகிறான், சின்னப் பழுவேட்டரையர், காலந்தக கண்டராலும் இதைத் தடுக்க முடியாது’ என்று சொன்னவுடன், அருகில் இருந்த வானவன்மாதேவியின் கண்களில் இருந்து கண்ணீர் மழையாக கொட்டுகிறது.

இப்படி எழுத, கல்கியைத் தவிர இனி வேறு எவரால் முடியும்?

காவியத்தின் கரு

இதன்பிறகு நிகழ்ச்சிகள் வேகமாக நடக்கின்றன. சதி ஆலோசனை நடந்து அல்லவா? அதற்குப்பிறகு தென்னாட்டில், பாண்டிய நாட்டு மன்னனாக இருந்த வீரபாண்டியன், சேவூர் போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனால் கொல்லப்பட்டார். ‘வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலச் சோழன்’ வாழ்க என்று கோஷம் போடுகிறார்கள். 12 ஆவது வயதில் போர்க்களத்திற்குச் சென்று 16 ஆவது வயதில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டித் தூக்கிக் கொண்டு வருகிறான். இது நடந்த சம்பம். கற்பனை அல்ல. இதுதான் இந்தக் காவியத்தின் உயிர்க் கருவான நிகழ்ச்சி.

ஆதித்த கரிகாலனையும், சோழ குல வம்சத்தையும் பழிவாங்க வேண்டும், என்று பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் முடிவு செய்து திட்டமிட்டு, அவர்கள் இங்கே வருகிறார்கள். பெரிய பழுவேட்டையருடைய தர்ம பத்தினியாகிய பழுவூர் ராணி நந்தினிதேவி இந்தக் காவியத்தில் ஒரு அருமையான பாத்திரம். நந்தினி தேவியைப் பற்றிச் சொல்கிற போது. அவளைப் பார்த்தமாத்திரத்தில் பழுவேட்டரையர் மட்டும் அல்ல, வீராதி வீரரும் வீழ்ந்து விடுகிறார்கள் என்றார்.

நந்தினியின் சபதம்

ஆதித்த கரிகாலன் நெஞ்சில், நந்தினிதேவி மீது சிறிய வயதில் அன்பு உருவாகி, காதலாகி வளர்ந்த விட்டது. இதுதான் நிலைமை. ஆனால், சேவூர் போர்க்களத்தில் வீரபாண்டியனை வெட்டுகிறபோது காயப்பட்ட கரிகாலனுக்கு பக்கத்தில் இருந்து பணிவிடை செய்துகொண்டு இருந்த நந்தினி, காலில் விழுந்து, ‘இவரை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று மன்றாடுகிறாள். அவளை உதைத்துத் தள்ளி விட்டு, தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான் கரிகாலன். ஆகவே, அவள் மனதில் எரிமலையாக இருக்கிறது அந்தச் சம்பவம்.

அதற்குப்பிறகு, பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் அவளைக் கொண்டு போய், ‘நீ பககத்தில் இருக்கும் போது தானே இந்தச் சம்பவம் நடந்தது’ என்று, வீரபாண்டியன் உடல் எரிகிற சிதைநெருப்பில் அவளைத் தள்ளிவிட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள்.

‘என்னை விட்டுவிடுங்கள்; நான் பழி வாங்குகிறேன்’ என்று நந்தினி சபதம் செய்கிறாள்.

அதற்குப்பிறகு, பாதை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த நந்தினியைக் கண்டு, அவள் அழகிலே மயங்கிய பெரிய பழுவேட்டரையர், அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், நந்தினியும் - பெரிய பழுவேட்டரையரும் மணவாழ்க்கை நடத்தவே இல்லை. அவள் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறாள். இல்லற வாழ்க்கையை நடத்தவே இல்லை.

பெரிய பழுவேட்டரையர் சின்னப் பழுவேட்டரையர் இருவரும் பழுவூர் மன்னர்கள்.பெரிய பழுவேட்டரையர் நிதி மந்திரி. கோட்டைக் காவல் யாரிடம்? சின்னப் பழுவேட்டரையரிடம். அவர்கள் சோழ மன்னருக்காக உயிர்களைத் தியாகம் செய்த பரம்பரையினர்.

அதற்கு அடுத்த கட்டம். சோழ நாட்டுக்கு ஒரு முதல் அமைச்சர் இருக்கிறார். அவர்தான் அன்பில் அநிருத்த பிரமராயர். ஒரு முதல் அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு, அன்றைக்கு மன்னர் காலத்தில் இருந்தார்கள். எல்லாவிதமான ஆற்றல், சூழ்ச்சி, ஒற்றர்களைப் பயன்படுத்துகிற தன்மை அவர்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஒற்றன்தான் ஆழ்வார்க்கு அடியான் நம்பி.

விஜயாலயச் சோழனின் வீரம்

இந்தச் சூழலில், சோழ மன்னர் குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்டமிடுகிற பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் , ஒரு இடத்தில் கூடுகிறார்கள், அந்த இடம்தான் திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவில். இப்பவும் இருக்கிறது திருப்புறம்பியம். அங்குதான் சதி நடக்கிறது. இந்தத் திரும்புறம்பியத்திற்கு, ஒரு வரலாறு இருக்கிறது. இந்தத் திருப்புறம்பியம் போர்க்களம் தான் விஜயாலயச் சோழனின் வீரத்தைப் பறை சாற்றியது. விஜயாலயச் சோழனுக்கு 96 விழுப்புண்கள். ‘90ம் சுமந்தோன்’ என விஜயாலயச் சோழனுக்கு ஒரு பெயர் உண்டு.

“எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலுமிரு மூன்று
புண்கொண்ட வெற்றிப் புரவலன்”

என்பது பாடல்!

விஜயாலாயச் சோழன் ஒரு சிறிய மன்னன். சோழ சாம்ராஜ்யம் அப்போது அமையவில்லை. பிற்காலச் சோழ சாம்ராஜயத்திற்கு அடிகோலியவனே இந்த விஜயாலயச் சோழன்தான். அந்தப் போர்க்களம்தான் ‘திருப்புறம்பியம் போர்.’ வரகுண பாண்டியனுக்கும் - அபாராஜித பல்லவனுக்கும் யுத்தம் நடக்கிறது. அபராஜிதனுக்குச் சோழர்கள் துணையாகப் போகிறார்கள். காங்க நாட்டுப் பிரதிவீபதி துணையாக வருகிறான். போர்க்களத்திலே பிரதிவீபதி மிகப்பெரும் ஆற்றலைக் காட்டி யுத்தம் செய்துவிட்டு, வீரமரணம் அடைகிறான்.

பல்லவர் படையும்-சோழர் படையும் தோற்று ஓடிவருகிறது. அப்பொழுது விஜயாலயச் சோழன்அந்தப் போர்க்களத்திற்கு வருகிறான். இரண்டு காலும் நடக்க முடியாத நிலைமையில் வருகிறான். படைகள் தோற்றுப் பின்வாங்கி வருகிற போது நினைக்கிறான். இதோடு சோழ நாடு அழிந்து போய்விடும். இந்தப் போரில் தோற்றால் இனி எழ முடியாது. இது ஒரு திருப்புமுனை. இதில் வென்றால்தான், இனி சோழர் குலம் தழைக்கும் என்று முடிவு எடுத்து, இரண்டு கால்களும் இயங்காத அந்த நிலைமையில்தான் அவன் வேளக்காரப் படையினரை அழைக்கிறான்.

ஒரு யானை கொண்டுவாருங்கள்’ என்றான். யானைப்படையும் அழிந்துவிட்டது என்றனர். ஒரு குதிரை கொண்டு வாருங்கள்’ ஏறிச்செல்கிறேன் என்கிறான். குதிரைகள் எல்லாம் இறந்து விட்டன என்றனர். ‘அப்படியா? சோழநாட்டுச் சுத்த வீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்’ என்றார் விஜயாலயன்.

இருவருக்குப் பதிலாக இருநூறு பேர் முன்னால் வந்தார்கள். “பீமசேனர்களைப்போன்ற உடல் ஆகிருதி பெற்ற வீரர்கள் வாருங்கள். இரண்டிரண்டு பேராக நில்லுங்கள். என்னை உங்கள் தோள்களில் தூக்கிச் கொள்ளுங்கள். எனது பாட்டன் காலத்தில் வீசிய வீர வாள்களை நான் ஏந்தி வருகிறேன். என்னைத் தூக்கி வருகிற வீரர்கள், அம்பு பாய்ந்து-வெட்டுப்பட்டுச் சாய்ந்தால், அடுத்த இரண்டு பேர் தூக்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார்.

அப்படித் தூக்கிக் கொண்டு உள்ளே போகிறபோது சக்ரஹாரமாக விஜயாலயன் வாள் சுழன்றாதால். தோற்று ஓடிய படை, உணர்வு பெற்றுத் திரும்பச் செல்கிறது.

தளபதியின் உறுதி

எந்த யுத்தமும் தலைவனைப் பொறுத்துத்தான் வெற்றி பெற முடியும். உலகம் முழுவதும் இதுதான். எந்தப் போர்க்களமாக இருக்கட்டும். அலெக்சாண்டர் காலத்தில் இருந்து - நெப்போலியன் காலத்தில் இருந்து - அன்னிபால் காலத்தில் இருந்து - எந்த யுத்தகளத்திலும் தலைமை தாங்கிச் செல்கிறவனைப் பொறுத்துத்தான் வெற்றி இருக்கிறது. அந்த உணர்ச்சியை ஊட்டமுடியும். சிறிய படையை வைத்துக்கொண்டு, அலெக்சாண்டர் பாரசீகப் பெரும்படையை வென்ற வரலாற்றை நான் படித்து இருந்தேன்.

அவனே முன்னே செல்வான். செல்லும்போது, தலையில் இருக்கிற கிரீடத்தில், சிவப்பு நிறத்திலே பறவை இறகுகளால் செய்யப்பட்ட கொண்டை, உயர்ந்த இடத்தில் இருக்கும். அவனுடைய துணைத்தளபதிகள் செல்வார்கள், ‘நீங்கள் முன்னால் செல்கிறீர்கள், உங்கள் உயிருக்கு ஆபத்து, என்று.

அலெக்சாண்டர் சொல்வார்: ‘நானே முன்னிலையில் சென்று மரணத்தோடு போராடுவதைப் பார்த்தால்தான், என் வீரர்கள் இன்னும் உறுதியாகப் போராடுவார்கள்’ என்றான். அப்படித்தான் ஒவ்வொரு களத்திலும் அவன் வெற்றி பெற்றான்.

திருப்புறம்பியம் சதி

அதைப்போல, விஜயாலயச் சோழனே இப்படி வாள்வீசி வந்தவுடன், அனைத்துச் சோழ-பல்லவ வீரர்களுக்கும் வீரம் வந்தது. அந்தச் சண்டையில் வெற்றி பெற்றார்கள். கங்க நாட்டுப் பிரதிவீபதி இறந்துபோனானே, அவனுக்கு நடுக்கல்லாக அமைக்கப்பட்டதுதான் பள்ளிப்படை கோவில் திருப்புறம்பியத்தில்! அங்குதான் சதி ஆலோசனை நடக்கிறது. பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள், பாண்டிய மன்னனுக்காகத் தலைகளை வெட்டிக் கொள்வோம் என்று சத்தியம் செய்தவர்கள், அவர்கள்தான் இங்கே வந்து, சோழர் குலத்தை அழிக்க வேண்டும் என்று சதி செய்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில், இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் இருக்கிறார். இந்த நிலைமையில், சக்கரவர்தியிடம் அருள்மொழிவர்மரைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும், அழைத்து வந்துவிட வேண்டும் என்று குந்தவைப் பிராட்டி முடிவு செய்கிறாள். காரணம், சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி. அதற்கு என்ன செய்வது என்பது பற்றி யோசிக்கும்போது, வந்தியத்தேவனை அனுப்ப முடிவு செய்தார்கள்.

குந்தவைப் பிராட்டியும் - வானதி தேவியும், வந்தியத்தேவனைச் சந்திக்கிற இடமே, குடந்தை சோதிடர் வீட்டில்தான். கொடும்பளூர் பராந்தகன் பெரிய வேளார், யுத்தகளத்தில் இறந்து போனாள். அவருடைய மகள்தான் இந்த வானதி. இது எல்லாம் சரித்திரம்.

இலங்கையில் நடைபெற்ற சண்டையில், சோழ நாட்டு ரகுநாத மன்னன் காலத்தில் வர்ணகுலத்தான் சென்றான் சங்கிலி மன்னனுக்கு உதவியாக என்று சொல்வார்கள். அதுபோல இங்கிருந்து சென்ற சோழ நாட்டுப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளர் பூதி விக்கிரமகேசரி அவர் அந்தச் சண்டையில் இறந்து விட்டார். இவரின் மகள்தான் வானதி தேவி. பின்னாளில், ராஜராஜனின் மனைவியானார்.

குந்தவைப் பிராட்டியும் - வானதி தேவியும் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் குடந்தை சோதிடர் வீட்டுக்கு வருகிறார்கள். வந்தியத்தேவனும் வருகிறான். விவகாரம் பிடித்த ஆள் வந்தியத்தேவன். ஆனால், குந்தவைப் பிராட்டியாரின் நெஞ்சில் இடம் பெறுகிறான். பின்னாளில், குந்தவையின் கணவன் ஆகிறான். இது கல்வெட்டில் இருக்கிறது. திருவாலங்காட்டுச் செப்பு ஏடுகளில் இருக்கிறது. அந்த வந்தியத்தேவன் இலங்கைக்குச் செல்கிறான்.

இதில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதும் அங்கே போர் நடந்தது, நான் பேசிகொண்டு இருக்கிற இந்த நேரத்திலும், இலங்கையில் போர் நடக்கிறது. இந்த மண்டபத்துக் உள்ளே இருக்கிற சகோதர்களுக்குச் சொல்வேன், உங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்கு பாட்டன் காலத்தில், உங்கள் முன்னோர்கள் வேலும் வாளும் தாங்கிச் சென்று ஈழத்தில் போர் புரிந்தார்கள்.

அதனால்தான், காலாந்த கண்டனார் சின்னப் பழுவேட்டரையர் இந்த இடத்திற்கு வந்து, நல்லன்சாத்தனார் என்ற கவிஞரை அழைத்து, சின்னப் பழுவேட்டரையரே, ‘நீ ஒரு பாடல் பாடு’ என்கிறார். அந்தப் பாட்டு,

உருத்திரங்கண்ணனாரின் பாடலைத் திரும்ப எடுத்துப் பாடுகிறார்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடலைப் பிறந்த பொன்னும் மணியும்
குமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
ஈழத்து உணவும் காளத்து ஆக்கமும்

என்று பாடுகிறார் கவிஞர்.

‘உடனே நிறுத்து’ எனச் சொல்கிறார் சுந்தரச் சோழர். ஈழத்தில் இருந்து அப்போது நமக்கு உணவு வந்தது. இன்றைக்கு இருக்கிற உணவை எல்லாம் அங்கே இருக்கிற ஈழ நாட்டில் போர் புரிகிற சோழப்படைகளுக்கு அனுப்புவதால் இங்கே பஞ்சம் வந்து விட்டது என்று பிரச்சாரம் நடக்கிறது. பூங்குழலி படகு ஓட்டிக்கொண்ட போகிறாள்.

‘அலைகடல்தான் ஓய்ந்து இருக்க
அகக்கடல்தான் பொங்குவது ஏன்?’

என்று பாடுகிறாள். தியாகவிடங்கர் மகள் பூங்குழலி, இலங்கைக்குப் போகிறாள். அருமையான நிகழ்ச்சி!

வாள் பறந்தது-நட்பு பிறந்தது

வந்தியத்தேவன் சொல்கிறான். அருள்மொழிவர்மனை எப்படிச் சந்திக்கிறான் தெரியுமா? இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் மல்யுத்தம் செய்கிறார்கள். அருள்மொழித்தேவனும் - வந்தியத்தேவனும் மல்யுத்தம் செய்கிறார்கள். இரண்டு பேரும் சமநிலையில் யுத்தம் புரிகிறார்கள். அருள்மொழித்தேவர் போர்க் கலையில் வல்லவர். வந்தியத்தேவனும் அசகாய சூரன்தான். இருந்தாலும் கொஞ்சம் அசந்து விட்டான். இரண்டு பேரும் வாள் யுத்தம் செய்கிறார்கள். அதில்கூட அருள்மொழிவர்மர் எப்படி வெற்றி பெறுகிறார் என்று கல்கி கூறுகிறார் என்றால், ‘வந்தியத்தேவன் கவனம் சிதறியது, வாள் பறந்தது’ என்று எழுதுகிறார்.

இலங்கையில் இருந்து திரும்பி வருகிறபோது, கடலில் கப்பல் மூழ்குகிறது. அந்தக் கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். முரட்டு அராபியர்கள் அவனைக் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அங்கே பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் இருக்கிறார்கள். வந்தியத்தேவன் உயிருக்கு ஆபத்து. அவனை மரத்தில் கட்டி வைத்து இருக்கிறார்கள். கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

தன் கண்ணுக்கு எதிரே கப்பல் எரிந்துகொண்ட இருப்பதைப் பார்க்கிறார் அருள்மொழிவர்மர். என் நண்பன் அதில் இருக்கிறான், வல்லவராயன் வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் இருக்கிறான். அது நெருப்பு பிடித்து எரிகிறது, அதனால் இறந்து விடுவான் வாணர்குல வீரன் வந்தியத்தேவன் என்பதானல், சுழல் காற்றும் சூறைக்காற்றும் அடிக்க, பனை மர உயரத்திற்கு அலைகள் பொங்கி எழ, உயிருக்கு ஆபத்தான நிலையில் எவர் தடுத்தும் கேளாமல் கடலில் குதிக்கிறார் அருள்மொழிவர்மர்.

இன்னொரு கப்பல் மூழ்குகிறபோது, அந்தக் கப்பலுக்குள் சென்று, வந்தியத்தேவனைக் காக்க என் உயிரைத் தருவேன் என்கிறார். யார்? சோழர் குலத்தின் இளவரசன், நாடாள பிறந்தவர். அவர் அந்தக் கடலில் குதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. உயிரோடு திரும்பிவர முடியாது என்று தெரிந்து, அந்தக் கடலில் குதித்து அவனைக் காப்பதற்காகக் குதிக்கிறார். இளவரசர் இறந்து விட்டார் என சோழ நாடு முழுவதம் செய்தி பரவுகிறது. கொந்தளிக்கிறது சோழ நாடு. அதற்குப்பிறகு இளவரசரும் உயிர் பிழைத்து, வந்தியத்தேவனும் காப்பாற்றப்பட்டு, படகில் ஏறி நாகப்பட்டணம் வந்து, சூளாமணி விகாரத்திலே வந்து தங்குகிறார்கள். இதெல்லாம் கதை.

ஆழ்வார்க்கு அடியான் நம்பி

இந்த வரலாற்று நவீனத்தில் நம் நெஞ்சில் பதிகிற முக்கியமான பாத்திரங்களில் ஒருவன்தான் ஆழ்வர்க்கடியான் நம்பி எனும் திருமலையப்பன். முதல் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரம்மராயரின் பிரதான ஒற்றன் இவன். புகை நுழைய முடியாத இடத்தில்கூட நுழைந்துவிடும் அதிசாமர்த்தியசாலி - தீவரி வைணவ பக்தன் . சிவனடியார்களுக்கும், இவனுக்கும் நடக்கும் வாதங்கிளில் ஆழ்வார்க்கடியான் பேச்சைப் படிக்கும் போதே விலாநோகச் சிரிப்பு வரும். பாண்டிய நாட்டு சதிகாரர்கள், இவனைக் கொல்வதே முதல்வேலை எனக் கருதுகிறார்கள். கதையின் திருப்பங்களுக்கு இவனும் காரணமானவன்.

சதி வென்றதா?

இந்தக்கட்டத்தில், ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண்டும் என்ற முடிவு எடுத்து விட்டார்கள் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள். கடம்பூர் சம்புவராயர் மாளிகைக்கு அவரை வரவழைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவிலில் வைத்து தான் சபதம் எடுக்கிறார்கள். வீரபாண்டியனின் ஐந்து வயது மகனைக் கொண்டுவந்து நாற்காலியில் உட்காரவைத்து, அவனுக்கு கிரீடம் சூட்டுகிறார்கள். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தகதகக்கின்ற வாளை எடுத்து, இந்த வாளால் ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண்டும் என்று, ஐந்து வயதுக் குழந்தையிடம் வாளைக் கொடுத்து, இந்த வாளை நீ யாரிடம் கொடுக்கிறாயோ, அவர்கள் இந்த சபதத்தை நிறைவேற்றட்டும் என்று சொல்லும்போது, அந்தப் பிள்ளை நந்தினியிடம் அந்த வாளைக் கொடுக்கிறது. அவள் பெற்றுக் கொள்கிறாள்.

கரிகாலன் கதையை முடிப்பது என்கிறபோது அவர்கள் ஒரு கணக்குப் போட்டு வெள்ளிக்கிழமை நாளைத் தேர்ந்து எடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆதித்தகரிகாலனையும் -அருள்மொழிவர்மனையும்-சுந்தரச்சோழரையும் கொல்ல வேண்டும். மொத்தத்தில் சோழர் குலத்தையே கருவறுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். இந்தத் திட்டம் நிறை வேறுவதற்கு ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவராயர் மாளிகைக்கு அழைத்து வருகின்ற பொறுப்பை அவர் மகன் கந்தமாறனிடம் நந்தினி ஒப்படைக்கிறாள்.

மனம் எரிமலையாக இருக்கிற ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வருகிறார். அவன் பாட்டன் திருக்கோவிலூர் மலையமான் வீராதிவீரர். அவர் தன் பேரனிடம், “தக்கோலப்போரில் போர் புரிந்த இராஜதித்தயரைப்போன்ற வீரன் நீ; வடதிசை சென்று, நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்று கனவு காண்கிறேன்” என்று பேரப் பிள்ளையிடம் சொல்லுகிறார். அவன் பிறந்த நாள் விழாவில் எவ்வளவு ஆசையோடு தூக்கிக் கொஞ்சியதையெல்லாம் வர்ணிக்கிறார்.

கடம்பூர் மாளிகைக்கு கரிகாலன் வருகிறார். இந்த நவீனத்திலேயே மிக உணர்ச்சி மயமான கட்டம் இதுதான். கரிகாலனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு, பாண்டியன் ஆபத்து உதவிகள், அந்த மாளிகைக்கு உள்ளே வேட்டை மண்டபத்தில் ஒளிந்து இருக்கிறார்கள். சுந்தரச்சோழர் சக்கரவர்தியைக் கொல்வதற்கு பழுவேட்டரையர் மாளிகையில் இருக்கக்கூடிய பொக்கிஷ அறைக்குப் போகிற சுரங்கப்பாதை நந்தினிக்குத் தெரியும். அந்தப் பாதையில் சதிக்கூட்டத் தலைவன் ரவிதாசன், இன்னொரு சதிகாரனான சோமன் சாம்பவனுக்கு அந்த வழியைக் காண்பித்து, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டு படுத்து இருக்கிறாரே, அதற்குச் சரியாக மேல்மாடத்தில் இருந்து வேல் எறிந்தால் இறந்து விடுவார்’ என்று சொல்லி ஏற்பாடு செய்கிறான்.

இந்த நேரத்தில் இளவரசன் அருள்மொழிவர்மர் நாகப்பட்டணத்தில் இருக்கிறார் அல்லவா, அவர் அங்கிருந்து யானை மீது ஏறி வருகிறார். இருக்கிற யானைப் பாகனை அனுப்பிவிட்டு, சதிகாரனாக இருக்கக்கூடிய ஆபத்து உதவிகளில் ஒருவனான ரேவதாசன் எனும் கிரமவித்தனை அனுப்புகிறார்கள். அவன் பாகனாக வந்து, யானையில் வருகிறபோதே அருள்மொழிவர்மரைக் குத்திக் கொன்றுவிட வேண்டும் என்பது திட்டம். இந்த மூன்றும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும், வெள்ளிக்கிழமை இரவு.

இந்தத் திட்டம் எப்படி நடக்கிறது?

இளவரசர் அருள்மொழிவர்மர் யானை மீது யாரும் கண்டுகொள்ள முடியாதபடி தலைப்பாகை கட்டிக்கொண்டு, வெளியில் யார் என்று தெரியாத வண்ணம் வருகிறார். இந்தச் சதிகாரனும் வருகிறான். கூர்ந்த அறிவு பெற்ற யானை, சதிகாரன் நம்முடைய பாகன் இல்லையே என்று அவனைத் தும்பிக்கையால் தூக்கி அடித்து வீசுகிறது.

அருள்மொழிவர்மர் புரிந்து கொண்டார். அவர் யானைக்கு உத்தரவிடும் ஆற்றல் பெற்றவர். அவர் காதோடு காதாக ஒரு உத்தரவு இடுகிறார். யானை மதம் பிடித்ததைப்போல ஓடுகிறது, சதி தோற்றது. அருள்மொழிவர்மர் தப்பித்தார்.

இங்கே அரண்மணைக்கு உள்ளே சதிகாரன் வருகிறான். சுந்தரச்சோழர் இளம்பிராயத்தில் இலங்கைக்குப்போய் இருந்த நேரத்தில், மனம்பறிகொடுத்த ஊமைராணி என்று அழைக்கப்படுகிற மந்தாகினி இறந்து விட்டார் என்று எண்ணி மனம் உடைந்த நேரத்தில், அந்த ஊமைராணி மந்தாகினியே காப்பாற்ற வருகிறார். அந்த நிலவறைக்கு உள்ளே வந்து வேல் வீசுகிறபோது குறுக்கே பாய்ந்து வேலைத் தாங்கிக்கொண்டு மந்தாகினி மடிகிறார், சக்கரவர்த்தி பிழைக்கிறார். இப்படி இரண்டு திட்டங்களும் தோற்றது.

மூன்றாவது, கரிகாலனை வீழ்த்துவது. ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறபோது, வந்தியத்தேவனைப் பக்கத்தில் இருக்கவிடக்கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள். கடம்பூர் சம்புவராயர் மாளிகைக்குக் கரிகாலன் வந்து விட்டார். அப்போது பழுவேட்டரையரை அங்கிருந்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று, ‘நீங்கள் மதுராந்தகத் தேவரை அழைத்து வாருங்கள்’ என்று அனுப்பி விடுகிறார்கள்.

ஆதித்த கரிகாலன் படுகொலை

கரிகாலனும் நந்தினியும் சந்திக்கிறார்கள். இப்பொழுது முக்கியமான ரகசியத்தைக் கரிகாலனிடம், நந்தினியிடமும் கூறுகிறான் வந்தியத்தேவன், இவர்கள் சொல்லி அனுப்பியதை. அது என்னவென்றால், நந்தினி வேறு யாருமில்லை. சுந்தரச்சோழரின் மகள்தான் நந்தினியாம், உனக்குத் தங்கை முறைதான் என்று சொல்கிறபோது இது அவள் மனதை அலைக்கழிக்கிறது. வேட்டை மண்டபத்திற்கு உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கிற சதிகாரர்கள் வருகிறார்கள். நந்தினியின் அறைக்கு உள்ளே கரிகாலன் வருகிறார்.

நந்தினிக்கும், கரிகாலனுக்கும் வாதம் நடக்கிறது.

‘என்னைக் கொலை செய்யவேண்டும் என்று தானே இங்கு வரவழைத்தாய்? உன் கையில் இருக்கும் மீன் சின்னம் பொறித்த வாள், என்னைக் கொல்வதற்குத்தானே? என்னைக் கொன்று விடு’ என்று சொல்கிறான்.

நந்தினி கூறுகிறாள்: கொலை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், எனக்குக் கடைசியாகக் கிடைத்த தகவல், ஊமைராணி மந்தாகினியின் மகள் நான் என்றும், என் தந்தை யார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதை நினைக்கிறபோது, அந்த எண்ணம் எல்லாம் விட்டுவிட்டேன் என்கிறாள்.

கரிகாலனும், ‘நீ காலில் விழுந்து மன்றாடியும், அதைப் புறக்கணித்துவிட்டு நான் வீரபாண்டியன் தலையை வெட்டினேன். அன்றுமுதல் என் மனதில், வாழ்வில், அமைதி இல்லை. எனவே எனக்கு என் உயிரைப் போக்கிக் கொள்வது ஒன்றுதான் பிராயச்சித்தம்’ என்று கரிகாலன் சொல்கிறான்.

இந்த நேரத்தில், வந்தியத்தேவன் விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்று ஓடி வருகிறான். இரு கரங்கள் அவன் கழுத்தைப் பிடித்து நெரிக்கின்றன. வஜ்ர வலிமை பெற்ற இரு கரங்கள் கழுத்தை நெரிக்கின்றன, மயங்கி விழுகிறான். சதிகாரன் ரவிதாசன் அறைக்குள் நுழைகிறான். சோழர் குலத்தைக் காப்பாற்ற வருகிறார் பெரிய பழுவேட்டரையர். அந்த நேரத்தில் விளக்கு அணைகிறது. ‘ஆ’ என்ற அலறல் சத்தம் கேட்கிறது. அதன்பிறகு பார்த்தால், ஆதித்த கரிகாலன் இறந்து கிடக்கிறான்.

கொன்றது யார்?

இதை ஏன் கல்கி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்றால், கரிகாலன் சம்புவராயர் மாளிகையில் கொல்லப்பட்டார் என்றுதான் செய்தி. கொலைக்குக் காரணமான ரவிதாசன், சோமன் இடும்பன்காரி, பரமேஸ்வரன், கிரமவித்தன் என்று கல்வெட்டில் பெயர் இருக்கிறது. யார் கொலை செய்தார்கள் என்று சரியாகத் தெரியாது. ஆகவே, இந்த இடத்தை நான் ஒரு 20 தடவைப் படித்து இருப்பேன். இன்றுவரையில் யார் கொலை செய்து இருப்பார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கரிகாலன் கையில் வாள் இருந்தது என்கிறார். அடுத்து கரிகாலன் உடம்பில் அந்த வாள் பாய்ந்து இருக்கிறது. அப்படியானால், அவனே தற்கொலை செய்து கொண்டானா? காளாமுகத்தோற்றத்திலே வந்த பழுவேட்டரையர் திருகு கத்தியை வீசி எறிகிறபோது, அது தவறி கரிகாலன் மேல் விழுந்துவிட்டதா? ரவிதாசனே கரிகாலனைக் கொன்று விட்டானா, நந்தினி கொல்லவில்லை. இது சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. நான் பலமுறை படித்தும் இதன் மர்மம் தீரவில்லை.

இதற்குப் பிறகு சதிகாரர்கள் தப்பிச்செல்கிறார்கள். வந்தியத்தேவன் மிது பழி விழுகிறது. சபையில் விவாதம் வருகிறது. மதுராந்தகத் தேவர் உண்மையான இளவரசர் அல்ல. ஆம், அதாவது நான் குறிப்பிட்டேன் அல்லவா, அரசு உரிமைக்கு யார் உரியவர்? என்று பார்க்கிறபோது, மதுராந்தகத்தேவர் அல்ல. பூ தொடுத்துக்கொண்டு இருந்த சேந்தன் அமுதன்தான் உண்மையான அரசு உரிமைப் பிள்ளை.

சிவாலயங்களுக்கு எல்லாம் விரும்பிச் செல்லக்கூடியவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிற அய்யா அவர்கள்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னர் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே
என்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

என்கிறாரே, இதில், ‘மழபாடியுள் மாணிக்கமே’ என்கிற வரியை இதில் எழுதுகிறார் கல்கி. மழவரையர்கள் கொஞ்சகாலம் வேற்றுமையாக இருந்தார்கள், பின்னாளில் அந்த மாவரையர் குலத்தில் பிறந்த மகளை, சிவன் மேல் பற்றுக்கொண்ட அந்தப் பெண்ணை, கண்டராதித்தர் மணம் செய்து கொண்டார். ஆகவேதன், ‘மழபாடியுள் மாணிக்கமே’ என்று சொல்கிறார்கள்.

நம்பியாண்டார் நம்பி அவர்கள் திருப்பதிகங்களை தொகுத்தார்கள். இந்த நூலில், நம்பியாண்டார் நம்பியை அவ்வளவு உயர்வாகக் காட்டுகிறார் கல்கி ஆசிரியர். கண்டராதித்தரும், அவருடைய துணைவியார் செம்பியன்மாதேவியும், இவர்களது பிள்ளைதான் சேந்தன் அமுதன்.

பொன்னியின் செல்வனில், முதல்பாகம், புது வெள்ளம் - இரண்டாம் பாகம் சுழல் காற்று - மூன்றாம் பாகம், கொலைவாள் - அடுத்த பாகம், மணிமகுடம் - கடைசி பாகம் தியாக சிகரம். தியாக சிகரத்தின் கடைசிக் கட்டத்தில், கரிகாலனின் உயிரைக் காப்பாற்றத் தவறி விட்டேன். என்னால்தான் அவர் மடிந்தார், என்னை வெட்டிக்கொண்டு மாய்வேன் என்று பழுவேட்டரையர் வாளை வீசப் போகிறார். அப்படி வீசப்போகின்றபோது, அருள்மொழிவர்மர் கையைப் பிடித்து நிறுத்துகிறார். மேலும் விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது.

திருகு கத்திதான் அவர் மீது பாய்ந்தது என்கிறபோது, அது இடும்பன்காரியின் கத்தி என்கிறார்கள். ‘அந்தக் கத்தியை நான்தான் நந்தினியின் மீது வீசினேன். அது கரிகாலன் மீது விழுந்து இருக்கலாம். எனவே, சோழர் குலத்தைக் காக்க வேண்டி துர்காபரமேஸ்வரி கோவிலில் நான் எடுத்த சத்தியம் என்ன ஆவது? என் உயிரைக் கொடுப்பேன் என்கிறபோது, சின்னப் பழுவேட்டரையர், ‘நானே உன் கையை வெட்டுகிறேன்’ என்கிறார்.

மருதுபாண்டியர்களைப் போல, அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் இருவரும், 'சோழர் குலத்தைக் காக்கத் தவறிய உன் கைகளை நான் வெட்டுகிறேன்’ என்று கத்தியை எடுத்துக்கொண்டு, சின்ன பழுவேட்டரையர் வருகிறார் அண்ணனை நெருங்கி!

‘சுந்தரச் சோழர் வேண்டாம் வேண்டாம்’ என அலறுகிறார்.

இந்தத் திருகுக் கத்தியை எடுத்து நானே மடிகிறேன் என்று, பழுவேட்டரையர் மார்பில் குத்திக் கொண்டு கீழே விழுகிறார். தேவதாரு மரம் சாய்ந்ததைப்போல, பழுவேட்டரையர் கீழே விழுந்து மடிகிறார்.

வாரிசு யார்?

யாருக்குப் பட்டாபிஷேகம் நடத்துவது, அருள்மொழிவர்மருக்கு மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள் இதுதான் கடைசிக் கட்டம். அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். தனக்குக் கிரீடம் வேண்டும் என்று இவர் நினைக்கவில்லை.

அந்த சேந்தன் அமுதன்தான் உத்தமச்சோழர். உத்தமச்சோழரும் பெயர் பெற்றார். பின்னாளில், அருள்மொழிவர்மன் சோழ நாட்டின் மன்னன் ஆனான். கடல் கடந்து சென்று, கீழ்த்திசையில் பல நாடுகளை வென்றார்.

நாடாளுமன்றத்தின் வெளிச்சுவற்றில், இந்த நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்களக் காட்சிகள் இந்த நாட்டுச் சரித்திரத்தின் புகழ்மிக்க காட்சிகள் அழகிய அஜெந்தா வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இருக்கின்றன.

நான் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உரையாற்றும்போது சொன்னேன்: அதோ பாருங்கள்! ஈழத்தில் எங்கள் மக்கள் மடிகிறார்கள். எங்கள் தமிழ்க்குல மக்கள் மடிகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் தென்திசையை ஆண்டவர்கள் எங்கள் சோழ மன்னர்கள். பண்டித ஜவஹர்லால் நேரு சொன்னார், சோழ மாமன்னர்களிடம் கப்பல் படை இருந்தது. போர் யானைகளை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்கள், இந்தியாவில் வேறு எவனிடமும் கிடையாது. நான் இந்தியத் தேசத்தைத் போற்றக்கூடிய ஒரு குடிமகன்தான்.

ஆனால், சரித்திரம் என்று பார்க்கிறபோது, இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து, வெளிநாடுகளுக்குப் படை எடுத்துச் சென்றவர்கள் சோழர்கள் மட்டும்தானே தவிர, வங்காளிகளோ மராட்டியர்களோ பஞ்சாபிகளோ கிடையாது. இது வரலாறு. நேரு எழுதுகிறார்: “வலிமை வாய்ந்த சோழ சாம்ராஜ்யம் கடல் கொள்ளைக்காரர்களை அடக்கி, கீழ்திசை நாடுகளில் எல்லாம், புலிக்கொடியை வெற்றிக்கொடியாகப் பறக்க விட்டார்கள்” என்று எழுதி இருக்கிறார். அதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் சொன்னேன். இந்த நாடாளுமன்றத்தின் வெளிச் சுவற்றில், 56 ஆம் எண் கொண்ட அந்தச் சித்திரத்தை பாருங்கள். கரையில் நிற்கின்றான் ராஜராஜசோழன். அவன் ஏவுகிறான். கையில் வேல் ஏவுகிற தோற்றம் இருக்கிறது. மரக்கலங்களில் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களது கைகளில் வேலும் வாளும் இருக்கிறது. கப்பலில் புலிக்கொடி பறக்கிறது. இதுதான் எங்கள் வரலாறு என்று நாடாளுமன்றத்தில் சொன்னேன்.

ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்று சொன்னேன். அடுத்த 10 ஆவது நாள், இந்திய நாடாளுமன்றச் வெளிச்சுவற்றில் ராஜராஜசோழன் படை எடுத்துச் செல்கிற அந்த அழகான ஓவியம் அகற்றப்பட்டு விட்டது. இன்றுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா ஓவியமும் இருக்கிறது அதை மட்டும் காணோம். ஏன்? ஏன்?

அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி!

பண்பாட்டைக் காப்போம்

‘பொன்னியின் செல்வன்’ போன்ற காவியங்கள் எதற்காக? சோழ மன்னர்களின் உயர்வைப்பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல. இந்தக் காவியத்தில், ‘கலைகள் வளர்ந்தன, மன்னனும் குடிமகனும் ஒன்றே என்பதற்கான காட்சிகள் இருக்கின்றன. ஒழுக்கம் என்று சொன்னார்கள் அல்லவா, ஆதித்த கரிகாலன் சொல்கிறான் ‘பிறன்மனை விரும்பும் தவறை இந்தக் குலத்தில் நாங்கள் செய்ய மாட்டோம்’ என்று சொல்கிறார்.

இவை எல்லாம் காலம்காலமாகப் போற்றப்பட்ட பண்பாடுகள். இவற்றை எல்லாம் இந்தப் பொன்னியின் செல்வனில் படிக்கிறபோது, பல்லாயிரக்கணக்கான மேடைகளில் ஏற்படுத்த முடியாத உணர்வுகளை, இந்த நூல் கோடானகோடி மக்கள் மனதில் ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட அற்புதமான காவியம் ‘பொன்னியின் செல்வன்’. இதைத் தந்த கல்கி மறைந்து விட்டார், அருள்மொழிவர்மர் மறைந்து விட்டார். ஆனால், பொன்னியின் செல்வன் காட்சிகள், அந்தப் பழைய சோழ நாட்டையே கொண்டு வந்து கண்ணுக்கு முன்னால் நிறுத்துகிறது.

சோழர் குலத்தின் புகழ் வாழ்க!

அவர்கள் போற்றி வளர்த்த இசையும் பெருமையும் வாழ்க! வளர்க!

தமிழர் பண்பாடு வெல்க!

அரிய வாய்ப்புக்கு, நன்றி வணக்கம்.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)