தமிழகத்தை இருளில் தள்ளிய கருணாநிதி ஆட்சியைத் தூக்கி எறிவோம்...
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், அரசியல்
மாவட்டம்: தூத்துக்குடி, விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
தமிழகம் எங்கும் கடுமையான மின் வெட்டு, உரத் தட்டுப்பாடு, நெல் விவசாயிகளுக்கு அநீதி - எனத் தொடர்ச்சியாக மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 11.01.2008 அன்று கோவில்பட்டி நகரத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களும் கழகத் தோழர்களும் ஆயிரம், ஆயிரமாய்த் திரண்டு பங்கேற்ற இப்போராட்டத்தில், “கருணாநிதி ஆட்சியைத் தூக்கி எறிவோம்!” என்று சூளுரைத்தார் வைகோ. அவரது உரை வருமாறு...
2008 ஆம் ஆண்டு - ஜனவரி திங்கள் 11 ஆவது நாள், தெற்குச்சீமையின் அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படுகின்ற திருநாள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற என் இதயத்தின் எண்ண ஓட்டத்தைச் சொற்களில் வடிப்பதற்கு என்னால் இயலவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிச்செயலாளர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். நான் மதிக்கின்ற செய்தியாளர்கள் இன்று காலை 8.45 முதல் இந்த உண்ணாநிலை அறப்போர் நடைபெறுகிற இடத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதோ பாருங்கள். பல்லாயிரக்கணக்கில் அமர்ந்து இருக்கின்ற அன்புத் தாய்மார்களைப் பாருங்கள், எனது அருமைச் சகோதரிகளைப் பாருங்கள். வலதுபக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களை, செங்குருதியை வியர்வையாகக் கொட்டி நாட்டு மக்களுக்குச் சோறு போடுகின்ற வாழும் தெய்வங்களைப் பாருங்கள். அதோ இந்த நெடுஞ்சாலைக்கு எதிரே கட்டப்பட்டு வருகின்ற பாலத்தின் அடியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற பந்தலுக்குக்கீழ் அமர்ந்து இருப்பவர்களும், இன்று காலை முதல் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருக்கின்ற போராளிகள், ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருக்கிறார்கள்.
இவ்வளவு பிரமாண்டமான பந்தல் அமைத்தும் இடம் போதவில்லை. அவசரஅவசரமாக எதிரில் பந்தல் அமைக்கப்பட்டு, அந்தப் பந்தலில் அமர்ந்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கில் இந்த அறப்போராட்டத்துக்கு வருகை தந்து இருக்கின்ற விவசாயிகளுக்கு, தாய்மார்களுக்கு, கழகக் கண்மணிகளுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது? எந்தச் சொற்களைப் பயன்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை.
ஆயிரம் நாவுகள் ஆதிசேஷனுக்கு உண்டு என்று புராணம் கூறுகிறது. அப்படி ஆயிரம் நாவுகள் இருந்தாலும், இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் கழகத்தின் கண்மணிகளுக்கு நன்றி சொல்லி மாளாது என்னால். அந்த உணர்வோடுதான் நான் இங்கே நிற்கின்றேன்.
கட்டுப்பாட்டுக்கு என்ன பொருள், ஒழுங்குக்கு என்ன பொருள் அகராதியைப் புரட்டுவீர்களா? நான் சொல்வேன் கட்டுப்பாடு, ஒழுங்கு இதற்கு அகராதியில் நீங்கள் பொருள் தேட வேண்டாம் அதற்கு நேரே மறுமலர்ச்சி தி.மு.க. என்று எழுதிக் கொள்ளுங்கள். தியாகம் என்ற சொல்லுக்குரிய பொருள் மறுமலர்ச்சி தி.மு.க. என்று எழுதிக்கொள்ளுங்கள். நாடு வாழ நலிவு தீர தமிழகத்தில் இருக்கிற அத்தனைப் பகுதிமக்களையும் பாதுகாக்க நாங்கள் இயக்கம் நடத்துகிறோம். அதுதான் எங்கள் உறுதி.
அன்புத் தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நான் சொன்னேன். மதிப்புக்கு உரிய பொள்ளாச்சி ஜெயராமன் வந்தவுடன், சத்யா உள்ளிட்ட அனைவரது உரையும் நாம் நிறைவு செய்து விடுவோம். நான் சீக்கிரத்தில் பே சிமுடிக்க விரும்புகிறேன். ஏனெனில், வயது முதிர்ந்த தாய்மார்கள் வந்து இருக்கிறார்கள், கைக்குழந்தை களோடு சகோதரிகள் வந்து காலையில் இருந்து காத்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு நேரம் இந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அவர்கள் பசியைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பார்கள். ஆயினும் அவர்களை அவ்வளவு நேரம் சிரமத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. மற்ற இடங்களில் இரவு ஏழு மணி வரையில்கூட பேசி இருக்கிறேன். பொள்ளாச்சியில் நமது உண்ணாநிலை அறப்போரை முடிக்கின்றபோது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. அதுபோல இங்கே ஆகிவிடக்கூடாது என்று சொன்னேன்.
எனது அன்புத் தாய்மார்களே, பசி உங்களுக்குப் புதிது அல்ல. பெற்ற பிள்ளை பசியோடு இருந்தால் அதைப் பொறுக்க மாட்டாள் தாய். வறுமை இருக்கும் வீட்டில். இருக்கின்ற உணவைப் பிள்ளைக்குப் படைத்துவிட்டு, சட்டியில் இருக்கும் பருக்கைகளைத் தண்ணீரில் கலந்து பருகிக் கொள்வாள். எல்லோரையும் பாதுகாத்து, சிறிதுநேரம் மட்டுமே உறங்கி, விடிவதற்குமுன்பு, எல்லோரும் கண்விழிப்பதற்கு முன்பு, எழுந்து மீண்டும் கடமையைச் செய்கிறாளே அவள்தான் தாய். அந்தத் தாய்தான் தெய்வம் என்று, நபிகள் நாயகம் சொன்னார், நமது நாட்டில் நம் முன்னோர்களும் சொன்னார்கள்.
அப்படிப்பட்ட என் அருமைத் தாய்மார்களே, நீங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகின்ற இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கில் வருகை தந்து இருக்கிறீர்கள். இத்தனைத் தாய்மார்களின் இதய வாழ்த்துகள், அடிவயிற்றில் இருந்து பசியோடு இருக்கிற தாய்மார்கள் வாழ்த்துகிற வாழ்த்துகளோடு இந்த ஆண்டை நாங்கள் சந்திக்கப் போகிறோம்.
ஆம், இந்த ஆண்டு அரசியலில் திடுக்கிடும் திருப்பங்கள் வரலாம். அரசியலில் கொட்டம் அடித்துக் கொண்டு இருக்கின்ற, அராஜக, பாசிச திராவிட முன்னேற்றக் கழக மைனாரிட்டி ஆட்சியைத் தூக்கி எறியும் கட்டத்துக்கு மக்களைத் திரட்டுவதற்கு நாங்கள் இங்கே உறுதி எடுத்துக் கொள்கிறோம். சூளுரை மேற்கொள்வோம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரம் நிறைந்த வரலாற்றில், இந்த அறப்போராட்டம் என்ன நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என்பதை இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
தாய்மார்களே, இது மார்கழித் திங்கள். இன்னும் நான்கு நாளில் தைமகள் வருகிறாள், தமிழர்களின் தேசிய திருவிழா வருகிறது. உழவர்களின் திருவிழா. உலகத்தில் இப்படி இயற்கைக்கு படையல் படைக்கிற விழா தமிழனைத்தவிர வேறு எவரும் கொண்டாடவில்லை என்ற பெருமைக்கு உரிய, தமிழ்த்திருநாள் வருகிறது. அந்தத் தைப்பொங்கலில் உங்களது வீடுகளில் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். இஞ்சியும், மஞ்சளும், கன்னலும், செந்நெல்லும், களித்திடும் அந்தப் பொங்கலில், கவலைகள் மறந்து நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
இது மார்கழித் திங்கள். மாதங்களில் அவள் மார்கழி என்றானே கண்ணனை நினைவூட்டி, இந்த மார்கழியில் விடியாத காலைப்பொழுதில் பாவை நோன்பு நோற்கப்போகிற பெண்கள், இந்தக் குளிர்காலத்தில், பனி பொழிகிற வைகறைப் பொழுதில் கண்ணனைப் பாடிச் சென்றதாக சூடிக் கொடுத்த ஆண்டாள் பாடினாள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ‘பனிநீராடி பாவை நோன்பு நோற்றனர்’ என்று பரிபாடலில் நான் படித்து இருக்கிறேன்.
காலைவேளையில் நீராடச் செல்லுகின்ற பெண்கள் ஆண்டாள் குறிப்பிடுவதைப்போல அவர்கள், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து செந்நெல் விளையட்டும், கன்னல் விளையட்டும் மாதம் மும்மாரி பொழியட்டும் என்றுதான் பாவைநோன்பு நோற்கச் சென்ற பெண்கள் பாடி இருப்பதாக நான் படித்து இருக்கிறேன்.
ஆக, மார்கழித் திங்களில், அப்படி நாட்டின் நலம் விரும்பித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.
விவசாயிகளின் துயர் துடைக்கத்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். விவசாயிகளின் துன்பங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. என்ன நோக்கத்துக்கு இந்தப் போராட்டம் என்பதை இலட்சக்கணக்கான துண்டு அறிக்கைகள் அச்சிட்டு, விருதுநகர், நெல்லை, மதுரை மாவட்டங்களில், இந்தக் களம் அமைத்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்குத் தெரிவித்து இருக்கிறோம். இன்றைக்கு இந்தப் போராட்டத்துக்கு 25,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இங்குவராத இலட்சக் கணக்கான மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், அவர்களுக்காக நாங்கள் போராடுகிறோம்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு. இதற்குக் காரணம் தமிழக அரசாங்கம். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் போராட வந்து இருக்கிறோம். ஆனால், சென்னையில் மின்வெட்டே கிடையாது. மின்வெட்டின் அடையாளத்தைச் சென்னையில் காண்பிப்பது இல்லை. ஏனென்றால், தலைநகரில் முதல் அமைச்சர் இருக்கிறார். அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாடெங்கும் மின்வெட்டு இருக்கிறது. கிராமங்களில் இருக்கிறது. நகரங்களில் இருக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிறது.
பள்ளி, கல்லூரிக்குப் போகின்ற மாணவர்கள், மாணவிகள் படிக்க முடியவில்லை. வீடுகளில் விளக்கு எரியவில்லை. காடாவிளக்கை வைத்துக்கொண்டு படிக்கக் கூடிய நிலையும் இல்லை. இந்தச் சூழலில் மின்வெட்டு விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்து இருக்கிறது.
ஆனால், மின்வெட்டே இல்லை என்கிறார் மின்சார அமைச்சர். தமிழகத்தின் அத்தனைப் பகுதிகளிலும், ஏறத்தாழ 3500 கோடி ரூபாய் தொழிற்சாலைகளில் இந்த மூன்று மாத காலத்தில் மின்வெட்டுக் காரணமாக நட்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வளவு கடுமையான மின்வெட்டுக்கு என்ன காரணம்? நான் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் குற்றம்சாட்டுகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வந்த சாபக்கேடு, இந்த நாட்டைப் பிடித்த கேடு. 2006 நீங்கள் அரசபீடத்துக்கு வந்தீர்கள். அதற்கு முன்பு மின்வெட்டு இருந்ததா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே இந்த அவலம் இல்லை. இவர் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகுதான் இந்தக் கொடுமை. தமிழ்நாட்டில் 10,011 மெகாவாட் மின்சாரம் கருணாநிதி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன் தயாரிக்கப்பட்டது.
இன்றைக்கு அரசாங்கம் கொடுத்து இருக்கிற புள்ளிவிபரத்தின் அடிப்படையில் பேசுகிறேன். இவ்வளவு மின்உற்பத்தி நடந்து இருக்கிறது என்று கருணாநிதி அரசே ஒப்புக் கொண்டு இருக்கிறது. ஆனால், இன்றைக்கு 7500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி ஆவதாகச் சொல்கிறார்கள். 2511 மெகாவாட் மின்உற்பத்தி குறைந்தது ஏன்? தமிழகத்தின் உடனடித் தேவை 8800 மெகாவாட் மின்சாரம். எனவே, 1300 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு. இதற்குக் காரணம் கலைஞர் கருணாநிதியின் அரசு என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
மத்திய தொகுப்பில் இருந்து எங்களுக்கு வரவேண்டிய மின்சாரம் வரவில்லை, காற்றாலைகளில் இருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இது பச்சைப்பொய். காற்று ஆலைகளில் இருந்து எவ்வளவு மின்சாரம் நீங்கள் கணக்குப் போட்டீர்கள்? நீங்கள் திட்டமிட்டபடி எவ்வளவு மெகாவாட் மின்சாரம் கிடைக்காமற் போயிற்று? மின்சார நிலையங்களைப் பராமரிக்கவில்லை. கருவிகள் புதுப்பிக்கப்படவில்லை, காலி இடங்களை நிரப்பவில்லை. முறையான திட்டமிடுதல் உங்களிடம் இல்லை என்று நான் குற்றம்சாட்டுகிறேன். அதன் விளைவுதான் இந்த மின்வெட்டு.
தமிழகத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகள் - மாணவர்கள் - வணிகர்கள், டாக்டர் சதன் திருமலைக்குமார் சொன்னதைப்போல மருத்துவநிலையங்கள் என அனைத்துப் பகுதிகளும் இன்று வாடுவதற்குக் காரணம் தமிழக அரசு. விவசாயி ஜெனரேட்டர் வைத்து தண்ணீர் பாய்ச்ச முடியாது, கட்டுப்படியாகாது. மின்சாரம் வந்து விட்டது என்று நினைத்து மின்மோட்டாரை அழுத்துகிறான். பாத்திகளை தண்ணீர் எட்டுவதற்கு முன்பே மின்சாரம் நின்று போய் விடுகிறது. இதுதான் விவசாயிகளின் நிலைமை.
ஆகவேதான், இதற்குக் காரணமான அரசாங்கத்தைத் தூக்கி எறிய மக்களைத் திரட்டுவதற்குத்தான் இந்தப் போராட்டம். இந்த அரசாங்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் திரண்டு வந்து இருக்கிறோம். இது அறப்போராட்டம் தான். ஆனால், ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் பொங்கி எழுந்தால் அதற்குப்பிறகு அவர்களை யாராலும் தடுக்க முடியாது. விவசாயிகள் இன்றைக்கு அமைதியாக போராடுகிறார்கள். வேதனையோடு இருக்கிறார்கள். அவர்கள் வன்முறைக்குப் போகமாட்டார்கள். நான் முதல் அமைச்சருக்கு எச்சரிக்கை செய்கிறேன். விவசாயிகளின் வாழ்வில் மண்விழுவதற்கு நீங்கள்தான் காரணம்.
இங்கே இருக்கின்ற கிராமத்து விவசாயிகளுக்கு டி.ஏ.பி. உரம் கிடைக்கவில்லை என்று சொன்னால், அதற்கு ஏமாற்று அறிக்கையா? இனி உரம் கிடைத்துப் பயன் இல்லை. தேவையான கார்த்திகை, மார்கழி மாதங்களில் உரம் கிடைக்கவில்லை. கள்ளச்சந்தையில் 200 ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் கிடைத்தது. அரசாங்கக் கணக்குப்படி 486 ரூபாய் ஆனால், 650 ரூபாய் கொடுத்து கள்ளச்சந்தையில் வாங்க வேண்டிய நிலைமை. இதற்கு என்ன காரணம்? அரசாங்கத்தின் நிர்வாகக் கோளாறுதான் காரணம். இதற்கு யார் காரணம்? மத்திய அரசும் காரணம், மாநில அரசும் காரணம்.
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம், டி.ஏ.பி. உற்பத்தி செய்யாததற்கு என்ன காரணம்? அரசின் நிர்வாகக் கோளாறு காரணம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகை 500 கோடி ரூபாயை, வராக்கடன்களுக்கு சரிசெய்ய வங்கிகள் முயற்சித்தபோது அதைத்தடுக்காததின் விளைவாக அவர்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டது. நமது ஆர்.டி.மாரியப்பன் சொன்னார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று. நாங்கள் கேட்கின்ற உரம் ஒன்று. கொடுக்கின்ற உரம் ஒன்று.
இன்றைக்கு என்ன நிலைமை தெரியுமா? யூரியா உரம் தேவைதான். ஆனால், யூரியா கிடைக்கும் என்கிறார்கள். வழக்கமாக பயன்படுத்தப்படும் யூரியா அல்ல. இவர்கள் கொடுக்கும் கிருபா யூரியா என்பது மொச்சைக் கொட்டை அளவுக்கு இருக்கிறது. அது நிலத்தைப் பாழாக்குகிறது என்று சொன்னார்கள். ஆக, மின்வெட்டினால் பாதிப்பு, உரம் கிடைக்காமல் பாதிப்பு. இது போதாது என்று சில வேளைகளில் மழை பெய்யாமல் விவசாயியைப் பாதிக்கிறது சிலநேரங்களில் மழைபெய்து நாசமாக்குகிறது. சமீபத்தில் பெய்தமழையால் இந்தக் கரிசல் காட்டுப் பகுதியில் வாழும் விவசாயிகள், மக்காச்சோளம் விளையும் என்று நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அனைத்தும் பாழாய்ப்போயிற்று. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வீணாகப் போயிற்று. உளுந்து விளையவில்லை. பாசிப்பயிறு விளையவில்லை. கொஞ்சம் விளையும் என்று நினைத்தார்கள். வெள்ளம் அதையும் பறித்துக் கொண்டு போனது. மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு என எல்லாம் பாதிக்கப்பட்டது.
இன்றைக்குச் சிறுவிவசாயி என்றால் சிறிய கடன்காரன். பெருவிவசாயி என்றால் பெரிய கடன்காரன். முதலில் விவசாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? கேட்டால் நானே விவசாயி என்கிறார். என்ன விவசாயம் செய்தீர்கள்? விவசாயத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் இந்த மண்ணிலேயே போராடி வாழ்ந்தவர்கள். இந்த மண்ணில் வளர்ந்தவர்கள். மண்ணில் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளின் கண்ணீரை உணர்ந்தவர்கள். 5000 க்கு 10,000 மாக நக்ஷ்டஈடு கொடுங்கள், சிறுவிவசாயி பெருவிவசாயி என்று பேதம் பார்க்காதீர்கள். அனைவருக்கும் நக்ஷ்ட ஈடு தரவேண்டும். அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவிவசாயி பெரிய விவசாயி என்று பேதம்காட்டி ஏமாற்று மோசடிவேலையில் ஈடுபடாதீர்கள்.
நமது திருச்சி மாவட்டச் செயலாளர் மண்ணச்சநல்லூர் நடராசன் சொன்னார். இதற்குமேல் விவசாயம் செய்து என்ன பயன்? என்று கேட்டார். மற்றவர்கள் போனஸ் கிடைக்காவிட்டால் போராடுகிறார்கள். அது நியாயமான போராட்டம். அரசு ஊழியர்களின் போராட்டம். அதுவும் சரியான போராட்டம்தான். யாராக இருந்தாலும் போராட வேண்டியதுதான். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விவசாயி ஒன்றுசேர்ந்து போராடமாட்டான் என்ற திமிரில், அகம்பாவத்தில், மமதையில், விவசாயிகளைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைத்தால், அதற்குப்பிறகு விவசாயி ஸ்டிரைக் செய்தால் பிறகு யார் வீட்டிலும் அடுப்பு எரியாது.
விவசாயி உடம்பிலும் திறம் உண்டு. உள்ளத்திலும் திறம் உண்டு. சீறிவரும் நாகப்பாம்பைப் பற்றிக் கவலைப்படாமல், நள்ளிரவில் தோளில் மண்வெட்டியைப் போட்டுக்கொண்டு தண்ணீர் பாய்ச்சப் போகிறவன் விவசாயி. வேல்கம்பு, அரிவாளுக்கெல்லாம் பயப்படாதவர்கள். அப்படிப்பட்டவர்களை மொத்தமாகத் திரட்டிக் கொண்டுவந்து நிறுத்தினால், துப்பாக்கியைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். இந்தப்பகுதி அப்படிப்பட்ட பகுதி.
இங்குதான் அகிலாண்டபுரம் இருதயஜோசப் ரெட்டியார் துப்பாக்கிச் சூட்டில் செத்துப் போனார். இங்குதான் வெங்கடாசலபுரம் எத்திராஜ் நாயக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது நான் தில்லிப் பட்டணத்தில் இருந்தேன். தம்பி சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘விபரீதம் நிகழ்ந்து விட்டது. இருள் சூழ்ந்துவிட்டது. விவசாயிகள் செத்துக் கிடக்கிறார்கள்’’ என்றார். நான் உடனே புறப்பட்டு இரவோடு இரவாக ஓடி வந்தேன். விவசாயிகள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டபோது இரண்டுபேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். ஆனால், மரணம் மறைக்கப்பட்டு, இருதயஜோசப் ரெட்டியார் புதைக்கப்பட்ட பிறகு, அருமைச் சகோதரர் கே.எஸ்.இராதாகிருக்ஷ்ணனின் முயற்சியோடு அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலம் இருந்த அந்த நீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடுத்தோம்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அப்படிப்பட்ட போராட்டக்களம் அமைந்த இந்த கோவில்பட்டி பகுதியில், வீரம் செறிந்த பழைய வரலாறுகளை எல்லாம் நினைவூட்டினார்கள். கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு பூட்டி, புதுக்கோட்டையில் இருந்து கயத்தாறுக்கு இந்த வழியாகத்தான் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனை இழுத்துக்கொண்டு போனார்கள் என்று எனக்கு முன்பு பேசிய இராதாகிருக்ஷ்ணன் ஞாபகப்படுத்தினார்.
நாங்கள் தமிழக மக்களின் நலனுக்காகப் போராட வந்து இருக்கிறோம். இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் மக்கள். நான் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் இதய ஏடுகள் ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கும். இன்றைக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்துகிறோம். போக்குவரத்துக்கு இடையூறு உண்டா? ஒரு இடையூறும் இருக்காது. ஆனால், இவர்கள் மாநாடு நடத்தினார்களே, நான்கு வார காலம் திருநெல்வேலி முற்றுகை இடப்பட்டது. கல்லூரிகள் மூடப்பட்டன, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன, மாணவர் விடுதிகளைப் பிடித்துக்கொண்டார்கள். தனியார் நிறுவனங்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். இப்படி ஒரு நிலைமை தமிழக அரசியலில் இதுவரை இல்லை.
போக்குவரத்தை நிறுத்தி, ஒரு ஊதாரி மாநாட்டை நடத்தினார்கள். மாநாட்டுக்கு வருகிற ஒவ்வொருவருக்கும் 500, 1000 ரூபாய் என கொடுத்து, இங்கே சொன்னதுபோல, மானிய விலையில் டாஸ்மாக்கில் மதுவிற்பனை செய்த ஈனத்தனமான வேலையை, கருணாநிதி அரசைத்தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.
அந்த ஊதாரி மாநாட்டில் அத்தனை பேருக்கும் உணவு, ஆயிரம் ரூபாய், பாட்டில், இதர பல வசதிகள் என இத்தனையும் வழங்கி அழைத்துக்கொண்டு போய், நாங்கள் சீனத்துப் பட்டைக் கொண்டு வந்து இருக்கிறோம். ராஜாஸ்தானில் இருந்து பளிங்குக்கற்களைக் கொண்டு வந்து இருக்கிறோம் இப்படி ஒரு மாநாட்டு அழகு காட்சியை எங்கும் பார்க்க முடியாது’ என்றாரே 50 கோடி செலவழித்து மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த மாநாட்டில் மாலையில் கருணாநிதி பேசப்போகிறார் ஆனால், காலை 10 மணிக்கெல்லாம் வாகனங்கள் வடக்கே போய்விட்டன. நானே பார்த்தேன். அப்படியானால் கூலிக்கு அழைத்துக் கொண்டு வந்த கூட்டம் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிவிடும்.
இதைப்பார். பட்டினி கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கூட்டம். இது தியாகத்துக்காக இருக்கின்ற கூட்டம். மரணத்துக்கும் அஞ்சாத கூட்டம் எந்தக் கக்ஷ்டம் வந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாத கூட்டம். இந்த இரண்டையும் எண்ணிப் பாருங்கள்.
பிள்ளைக்கு முடி சூட்டுவதற்காக ஒரு மாநாடு. தன் குடும்ப ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு ஒரு மாநாடு.ஆனால், விவசாயிகளுக்காக மக்களுக்காக எங்களை நாங்களே வருத்திக்கொண்டு இங்கே போராட்டம் நடத்துகிறோம்.
நெல்லுக்கு ஆயிரம் ருபாய் வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்து இருக்கிறோம். விவசாயிகள் ஒன்றுதிரண்டு தில்லியில் போராட்டம் நடத்தினார்கள். வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட நமது அருமைத் தோழர்களும் சென்றார்கள். நாடாளுமன்றத்துக்கு எதிரே கோரிக்கைகளை முழங்கினார்கள். கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் ஆதாரவிலை உறுதி செய்து இருக்கிறாயே, ஏன் நெல்லுக்கு இல்லை? 1995வரை இந்தப் பாகுபாடு இல்லையே? இப்பொழுது ஏன் இந்தப் பாகுபாடு? நெல் விளைவிக்கின்ற செய்கின்ற விவசாயிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? கோதுமைக்குத் தருகிறாயே, நெல்லுக்கு ஏன் தர மறுக்கிறாய்? இந்தக் கேள்வியை நாம் முன்வைக்கிறோம்.
நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காததைத் கருணாநிதி கண்டித்தாரா? ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு மத்தியில் இருக்கிற அரசை வலியுறுத்தி என்ன முடிவு எடுத்தீர்கள் உங்கள் மாநாட்டில்?
ஆகவேதான், விவசாயிகளின் நலன்களை முன்நிறுத்தி, எப்படி முல்லைப்பெரியாறு உரிமைக்காக மதுரையில் போராடினோமோ, வஞ்சிக்கப்படுகின்ற தமிழகத்தின் உரிமைகளை மீட்கப் போராடினோமோ அதைப்போல இன்று கோவில்பட்டியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
தமிழகத்தைச் சீரழித்துக்கொண்டு கொண்டு இருக்கின்ற மணற்கொள்ளைக்குக் காரணமான, கலைஞர் கருணாநிதியின் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக, மக்களைத் திரட்டுவதற்குத்தான் இந்தப் போராட்டம். அதற்காக என்னை நானே வருத்திக் கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று நான் பேசுகிறேன். 1200 கி.மீட்டர் நானும் என் தொண்டர் படைத் தம்பிகளும் கால்கடுக்க நடந்து வந்தோமே, இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நடந்து வந்தோமே, கொளுத்துகிற வெயிலில் நடந்து வந்தோமே, அப்பொழுது உங்களிடம் நான் என்ன சொன்னேன்.
உங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து உங்களிடம் இருக்கின்ற நிலத்தை விற்று விடாதீர்கள். அதுதான் உங்களுக்குச் சொத்து. அதை விற்றால் என்ன ஆறு மாதச் செலவுக்கு வருமா? விற்காதீர்கள். இந்த நிலம் உங்களைப் பாதுகாக்கும். இன்றையக் கடனுக்காக, தேவைகளுக்காக நீங்கள் விற்று விடாதீர்கள். இது கோமேதகத்தைவிட செல்வத்தைக் கொழிக்கச் செய்யும். தமிழ்நாட்டில் உள்ள நிலங்களைக் கைப்பற்றுவதற்காகப் பல பேர் பணமூட்டைகளுடன் வருகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்றேன்.
இப்பொழுது என்னிடம் வந்து சொல்கிறார்கள். அன்றைக்கே நமது வைகோ சொன்னார், ‘ நிலத்தை விற்காதீர்கள்’ என்றார். நான் குறைந்த விலைக்கு விற்று விட்டேன். இன்று நான்கு இலட்சம் ஐந்து இலட்சம் என்று போகிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன். இன்று நான்கு இலட்சத்துக்குக் கேட்டாலும் விற்காதீர்கள். விவசாயிகளின் துயரை நீக்கும் அரசுகள் உருவாகும். அரபு நாடுகளின் எண்ணெய்க் கிணறுகளைப் போல, என் அருமை உழவர் பெருங்குடி மக்களே, உங்கள் நிலம் உங்களை வாழ வைக்கின்ற காலம் வரும். எனவே விற்காதீர்கள்.
இன்றைக்கு நதிகளை இணைக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தது மட்டும் அல்ல, நாடெங்கும் சுற்றி வந்து பேசினேன். மக்கள் பிரச்சனைகளுக்காக என் உடம்பில் வலு இருக்கின்ற வரை நடப்பேன் என்று நடந்தேன்.
மணல்கொள்ளை
இன்றைக்குத் தமிழகத்தில் எப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கின்றன என்று இங்கே சொன்னார்கள். நம் கண்ணுக்கு முன்னாலேயே பகற்கொள்ளை நடக்கிறது. நான் முதல்வரைக் கேட்கிறேன். நாளுக்கு ஒரு விழா நடத்துகிறீர்களே, இன்று உங்களது ஆட்சியில் தமிழகமே சுரண்டப்படுகிறதே! மணல் சுரண்டப்படுகிறது. தென்மாவட்டங்களில் விளாத்திகுளம் பகுதிகளில் நமது விவசாய மக்களும் போராடிவருகிறார்கள். மணலுக்கு என்ன விலை உறுதி செய்து இருக்கிறீர்கள்?
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சில கட்டுப்பாடுகளை வைத்து இருந்தார்கள். அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுவிட்டன. இரண்டு யூனிட் மணலுக்கு என்ன விலை? 627 ரூபாய். ஆனால், இந்த விலைக்கு மணல் கிடைக்கிறதா? இந்த நாட்டில் யாராவது சொல்லட்டும். 4,200 ரூபாய் என போகிறது.
அப்படியானால், 627 ரூபாய்க்கு பில்போட்டுவிட்டு 4000 க்கு இரண்டு யூனிட் மணல் விற்கிறார்களே - அப்படிக் கொள்ளை அடிக்கிற பணம் யாருக்குப் போகிறது? கருணாநிதியின் குடும்பத்துக்குப் போகிறது என்று நான் சொல்லவில்லை, என் எதிரே இருக்கிற மக்கள் சொல்கிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகிறது. இந்த நாட்டை ஆளும் உயர்ந்த பதவியில் இருக்கின்ற குடும்பத்துக்குப் பங்கு போட்டு போகிறது. இது இந்தத் தமிழகத்துக்கே தெரியும். அதிகாரிகளுக்குத் தெரியும். இப்படிப்பட்ட பயங்கர மணற்கொள்ளை தமிழக வரலாற்றில் நடந்தது கிடையாது.
20 யூனிட்டுக்குப் பில் போட்டு, 200 யூனிட் அள்ளுகிறார்கள். 3 அடி ஆழத்துக்குக் கீழே மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறதா? செய்தியாளர்கள் சென்று பார்க்கட்டும். எல்லா இடங்களிலும் படுபயங்கரமான ஆழங்களுக்கு மணல் தோண்டப்படுகிறது. 15 அடி 20 அடி என சுரங்கம்போல் ஆற்றில் தோண்டுகிறார்கள். 500 மீட்டர் தொலைவுக்குள் விவசாயக்கிணறு இருந்தால், குடிநீர் கிணறு இருந்தால் அங்கே குழாய் அமைக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால், அந்த விதி கருணாநிதி அரசால் கடைப்பிடிக்கப்படுகிறதா? கிடையாது. விதி எல்லாம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது.
உங்களை யார் குவாரி இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் குடிநீர் கிணறு அமைக்கச் சொன்னது? என்று ஒரு கலெக்டர் கேட்டாராம். உன் அதிகாரம் மக்களுக்காகவா? இல்லை மணற் கொள்ளையர்களுக்காகவா? வழிப்பறிக் கொள்ளைக்காரன் பசியால் திருடுகிறான். அந்தத் திருட்டைக்கூட மன்னிக்கலாம். காரணம், அவன் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டு. இவர்களை மன்னிக்க முடியாது.
மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கின்ற, மக்கள் ஆட்சியின் குரல் வளையை நெரிக்கின்ற, கேடுகெட்ட கருணாநிதியின் அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கு மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும். ஆகவேதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தக் கருத்துகளை முன்வைத்து, மணற்கொள்ளை, நாட்டுமக்களை வாட்டி வதைக்கின்ற மின்வெட்டு, விவசாயிகளின் அடிப்படைத் தேவையான உரத்தைக் கொடுக்காத இந்தஅரசால் துன்பப்படுகிற விவசாயிகளை ஒருசேர திரட்டித்தான் இன்றைக்கு இந்த உண்ணாவிரதத்தை கோவில்பட்டியில் நடத்துகிறோம்.
எத்தனை விவசாயிகளின் வீடுகளில் பொங்கலுக்குப் புதுத்துணி எடுப்பதற்கு கையில் பணம் இருக்கிறது? எத்தனை விவசாயி வீடுகளுக்கு வெள்ளை அடிப்பதற்குக் காசு இருக்கிறது? விவசாயி வறுமையில் வாடிக் கொண்டு இருக்கிறான். அவன் மேனி கறுத்துக்கிடக்கிறது. கோவணம் கட்டிக்கொண்டு நெஞ்சில் வேதனையோடும் கையில் கலப்பையோடும் போகிற ஏழை விவசாயியைப்பார்த்துத்தான், மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி வைகை நதி நீரில் தான் அணிந்து இருந்த ஆடைகளை வீசி எறிந்ததாக வரலாறு கூறுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் மக்கள் வறுமையில் பாதிக்கப்பட்டபோது, பருத்தி வந்து காப்பாற்றியது. ஒரு 20 ஆண்டுகள் எழுந்து நின்றார்கள். இன்றைக்கு மீண்டும் நொறுங்கிக் கிடக்கிறார்கள். பருத்தி விளைவிக்கின்றார்கள் விவசாயிகள். அதில் இருந்து நூல் எடுத்து ஆடை நெய்கிறார்கள். ஆனால் அவன் உடுத்துவதற்கு நல்ல ஆடை இல்லை.
விவசாயி மானத்துக்குப் பயந்தவன். மானத்துக்குக் கேடு வந்தால், வாழ மாட்டான். அதைவிட செத்துப்போவான். இங்கே நம் செந்திலதிபன் சொன்னதைப்போல நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் கொடுத்த குறிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துபோய் விட்டார்கள். பிறருக்குச் சோறு போடும் விவசாயி உணவு உற்பத்தி செய்யும் விவசாயி, பசியைப்போக்குகிற விவசாயி, மணிமேகலையின் அமுதசுரபியைப் போல, தன் உழைப்பினால் அன்னத்தை வழங்கும் விவசாயி அவன் இனி நான் வாழத் தேவை இல்லை என்று தற்கொலை செய்கிறானே. நான் பல்லடம் மாநாட்டில் சொன்னேன்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புகூட விவசாயி தன் நிலத்துக்குத்தான் போகிறான். என்ன காரணம்? நிலம் விளையாவிட்டாலும் சரி, தரிசாக கிடந்தாலும் சரி, பட்டுப்போனாலும் சரி, மழை பெய்தாலும் சரி, நிலத்தைப் போய்ப்பார்த்து, பிள்ளை நோய்வாய்ப்படுகிற போது தாய் துடிதுடிப்பதைப்போல, அந்த மண்ணைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான். மண்ணை அவன் தாயாக நினைக்கிறான். அதனால்தான் சாவதற்கு முன்புகூட தன் நிலத்துக்குச் சென்று மண்ணைத் தொட்டு முத்தமிட்டு பாலிடாலைக் குடித்து நிலத்தில் விழுந்து இறக்கிறான்.
இன்றைக்கு இந்தப் போராட்டத்துக்குவந்த பல்லாயிரக்கணக்கானவர்களைப் பார்க்கிறபோது இன்று பகல்பொழுதில் மேடையில் இருந்தபோது என் மனதில் பட்ட எண்ணம் இதுதான். நான் பெரிய அதிகாரப்பொறுப்பில் எதுவும் இல்லை. எங்கள் இயக்கத்தை அழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் கருணாநிதி. எங்கே இருக்கிறது ம.தி.மு.க. என்று கூட கேட்டார். ஆனால், எளியவர்களாகிய நாங்கள் நடத்துகிற இந்த உண்ணாவிரதப் அறப்போராட்டத்துக்கு பல்லாயிரக் கணக்கில் திரண்டு வந்த தாய்மார்களையும், பெரியவர்களையும் நினைக்கிறபோது இவர்களுக்கு எப்படி நன்றிகாட்டுவது என்று தெரியவில்லை. எங்களுக்கு கையில் காசு இல்லை. பணவசதி இல்லை. இப்பொழுது எல்லாம் யாரும் லாரிகளில், டிராக்டர்களில், ஓபன் லாரிகளில் போகிறதே கிடையாது. ஆனால், பல கிராமங்களில் இருந்து திறந்த ஓபன் லாரிகளில் டிராக்டர்களில் வந்து இருக்கிறீர்களே, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.
நாங்கள் அழைத்தவுடன், வைகோ கக்ஷ்டப்படுகிறான். அவனிடம் பணம் இல்லை. நாம் போவோம் என வந்து இருக்கிறீர்களே இதற்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன். ஏற்கனவே நான் வேளச்சேரி மணிமாறன் நிகழ்ச்சியில் சொன்னதைப்போல இந்த உடம்பில் உயிர் இருக்கிறவரைக்கும் சுயநலம் இல்லாமல் உங்களுக்காகவே உழைப்பேன்.விவசாயிகளுக்காகப் போராடும் நாங்கள் விவசாயிகளை கக்ஷ்டப்படவிட மாட்டோம். விவசாயிகளைக் கொண்டுபோய் போராட்டத்தில்விட்டு துப்பாக்கிச் சூட்டில்விட்டு இரத்தம் சிந்தட்டும் என்று ஒருக்காலும் செய்யமாட்டோம். அப்படி ஒரு நிலைமைவந்தால் விவசாயிகளுக்காகப் பலியாவதற்கும் அவர்களுக்காகப் போராடுவதற்கு வைகோவும் அவனது சகாக்களும் வருவார்கள். விவசாயிகளுக்காக, நலிந்த மக்களுக்காக என் சக்திக்குமீறிய வகையில் இந்த உடம்பில் உதிரமும், உயிரும் இருக்கிறவரையில் என்னையே அர்ப்பணித்து உழைப்பேன். விவசாயிகள் துயர்துடைப்பதற்கு நாங்கள் சூளுரை மேற்கொள்கிறோம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் நம்மை வாழ்த்த தூதர்களை அனுப்பி வைத்ததற்கு டாக்டர் புரட்சித்தலைவி அவர்களுக்கும் அண்ணா தி.மு.க.வின் தேர்தல் பணிச்செயலாளருக்கும், மாவட்டச் செயலாளருக்கும் இந்த மாபெரும் மக்கள் கடல்வாயிலாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அருமைச் சகோதரிகளுக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்வது. பசியோடு இருந்துவிட்டு எங்கே போகிறீர்கள்? இந்த ஆட்சியை ஒழிப்பதற்கான போர்க்களத்துக்குச் செல்லுகிறீர்கள். எப்படிப் போகிறீர்கள்? ஒரு சிங்கத்தைப் போலப் போகிறீர்கள். திருப்பாவையில் ஒரு பாடல். மழைக்காலத்தில் சிங்கம் பசியோடு குகைக்கு உள்ளே படுத்து இருக்கிறது. அது இரைதேடிச் செல்கிறபோது சோம்பல் முறித்து சிங்கம் கர்ஜனை புரிந்துபோகிறது.
அப்படி அந்தச் சிங்கம் புறப்படுவதைப்போல, இந்தப் போராட்டத்துக்கு வந்து பசியோடு இருக்கும் சிங்கங்களே, பெண் சிங்கங்களே, நீங்களும் தமிழகத்தை வாழவைக்கின்ற போராட்டத்துக்கு சிங்கத்தின் உறுதியோடு புறப்பட்டுச் செல்லுங்கள். நாங்களும் சிங்கத்தின் உறுதியோடு புறப்பட்டுச் செல்கிறோம். கேடுகெட்ட அரசை மக்கள் சக்தியைத் திரட்டித் தூக்கி எறிவதற்குச் சபதம் ஏற்றுச் செல்கிறோம்.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு அரும்பாடுபட்டவர் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல் அவர்கள். நம் இயக்கத்தில் தெற்குச் சீமையில் ஜொலிக்கும் கருப்பு வைரமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பிரகாசிக்கிறார். அதனால்தான் Jewel of Tuticorin என்று சொன்னேன். அவருக்குத் துணைநின்ற அத்தனை தோழர்களுக்கும், பாடுபட்ட அத்தனை கண்மணிகளுக்கும், கொடிகட்டியவர்களுக்கும், சுவர் விளம்பரம் செய்தவர்களுக்கும், இந்த அறப்போருக்கு ஆதரவுத் திரட்ட ஊர்ஊராகப் போய் பிரச்சாரம் செய்த நமது கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் வரதராசன், டாக்டர் சதன்திருமலைக்குமார், ஞானதாஸ் அவர்களுக்கும், தம்பிகள் மணிவேந்தன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்ட பிரச்சார வீரர்களுக்கும், இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும், காவல்துறையினருக்கும், செய்தியாளர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியாக, மெதுவாகச் செல்லுங்கள். ஓட்டுநர்கள் மெதுவாக ஓட்டிச் சென்று பத்திரமாக நீங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். வருகின்ற தைப் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். இந்தத் தை, புதிய விடியலுக்கு மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வழிவகுக்கும்.
கழகப் பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

