இந்தியக் கடற்படை, இந்திய மீனவர்களை , இந்திய மக்களைக் காப்பாற்றவில்லை. இலங்கைக் கடற்படைக்கு கங்காணி வேலைசெய்கிறது.

விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய, அரசியல், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

மனிதநேயத்தின் அடையாளமான பேட்ரிக்கை உச்சிமேல் வைத்துப் போற்றுகிறேன்

மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பேட்ரிக் ஏற்பாடு செய்து இருக்கிற இந்தக் கூட்டத்தில், பல்வேறு உணர்வுகள் நெஞ்சில் அலைமோத உங்கள் முன்னால் நிற்கிறேன். ஒரு பக்கத்தில் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருக்கிற பேட்ரிக் அவர்களைப் பாராட்ட வேண்டும் என்கிற பரவசம் உணர்ச்சி நெஞ்சில் அலைமோதுகிறது. இன்னொரு பக்கத்தில்,கடல் அலைகளின் இரைச்சலோடு தங்களின் ஓலக்குரலையும் சேர்த்து எழுப்புகின்ற மீனவ சமுதாய மக்களின் கதறலும் கண்ணீரும் என் இதயத்தில் பல்வேறு விதமான வேதனைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

நான் நீண்ட நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து இருக்கிறேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஓடி மறைகிற நேரத்தில், கழகத்தோழர்கள் திரண்டு, சென்னை தீவுத் திடலில் சென்னை மண்டல மாநாட்டில் கலந்து கொள்ளும் நேரத்தில், பேட்ரிக்கின் அழைப்பின் பேரில் பாம்பனுக்கு வந்து இருக்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில், இராமநாதபுரம் மாவட்டம் இன்றைக்குச் சிலிர்த்து எழுந்து நிற்கிறது.

காய்தல் உவத்தல் அகற்றி, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, எவரிடத்திலும் கடுஞ்சொல் பேசாமல், இந்த இயக்கத்தை உயிராக நேசித்துப் பாதுகாக்கக்கூடிய ஒரு உத்தமன் நென்மேனி ஜெயராமன், இன்று மாவட்டச் செயலாளராக எங்களுக்குக் கிடைத்து இருக்கிறார். அவரது தலைமையில், கழகத் தோழர்கள் இந்த மாவட்டத்தில் கழகத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இன்று கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தம்பி வி.கே.சுரேக்ஷ் அவர்களுடைய திருமணத்தை ஒரு மாநாட்டைப்போல நடத்தி முடித்து விட்டு, இயக்கத்துக்குத் தொண்டர் படையைத் தேர்வுசெய்து விட்டு நான் நேராக தங்கச்சி மடத்துக்குச் சென்றேன்.

அங்கே அண்மையில் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்று இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தியாகுவின் வீட்டுக்குச் சென்றேன். அழுது கதறுகிற அவருடைய தாய்-தந்தையைக் கண்டேன். வாழ்வு வெறுமையாகி விட்டதை எண்ணிக் கதறும் அவருடைய உடன்பிறந்த சகோதரிகள், தம்பியைப் பறிகொடுத்து வேதனையில் துடிக்கும் அண்ணன் உற்றார் உறவினர்கள் என தங்கச்சி மடத்தில் ஆயிரக் கணக்கானோர் அங்கே திரண்டு விட்டார்கள். ஏராளமான சகோதரிகள் அங்கே கூடிக் கதறினார்கள்.

நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? தான் மறைந்தபிறகு பிள்ளை தன்னைக் கல்லறையில் போட்டு, ஜெபத்தோடு புதைகுழிக்கு அனுப்புவான் என்று எதிர்பார்த்த நேரத்தில், அந்தப் பிள்ளையைச் சாவுக்குப் பறிகொடுத்துவிட்டுக் கல்லறையில் போட்டு மூடுவதற்கு எந்தத் தகப்பனால் முடியும்? அந்த வேதனையை நான் பகிர்ந்து கொள்கிறேன். அவரது கண்ணீரில் நான் பங்கு ஏற்கிறேன்.

ஆமையைவிட மலிவா?

அந்தத் தாய்மார்கள் என்ன சொல்லிக் கதறினார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்களுடைய கண்ணீரும், கதறலும், வேதனைப் புலம்பலும் உங்கள் செவிகளிலும் விழட்டும். நடக்கின்ற கொடுமைக்கு என்ன முடிவு என்று விவாதிக்க நான் இந்த மக்களிடம் வந்து உள்ளேன். பெருந்திரளான கூட்டம். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். பேட்ரிக் செய்து இருக்கின்ற ஏற்பாடுகளால், நான் பேசும் பேச்சு அனைத்துத் திசைகளிலும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

மிகுந்த மனஅழுத்தத்தோடு உங்கள் முன்னால் நான் நிற்கிறேன். அந்த ஏழைச் சகோதரிகள் அழுது புலம்பும்போது கேட்டார்கள். கடலில் வசிக்கும் அரிய உயிரினங்களை, கடல் ஆமைகளைக்கூடக் கொன்று விடக்கூடாது என்று அரசும் ஆராய்ச்சியாளர்களும் துடிக்கிறார்களே, எங்கள் மீனவர்களின் உயிர்கள் அதைவிட மலிவாகப் போய்விட்டதா? என்கிறார்கள். ஒவ்வொரு நாளும், கடலுக்குப் போன கணவன் உயிரோடு திரும்பி வருவானா? கடலுக்கு உள்ளே சென்ற பிள்ளை திரும்பி வருவானா? தகப்பன், அண்ணன், தம்பி உயிரோடு திரும்பி வருவானா? என்று ஒவ்வொரு குடும்பமும் ஏங்கித்தவிக்கிறது.

தாயின் மடி

சுறா மீன் தாக்குதலைக் கண்டு கலக்கமா? சுழன்றடிக்கும் சூறைக்காற்று அவர்கள் உயிரைப் பறித்து விடுமே என்கின்ற அச்சமா? இல்லை, ஒருக்காலும் இல்லை. சுறா மீன்களின் தாக்குதலுக்கும் சூறாவளியின் சீற்றத்துக்கும் அஞ்சாது மரக்கலத்தைச் செலுத்தக்கூடிய வல்லமை உள்ளவர்கள் மீனவர்கள். கடல் அவர்களைப் பயமுறுத்தியது இல்லை. கடல் அவர்களுக்குத் தாயின் மடி. கடல் அவர்களுக்குப் பந்தய மைதானம். அலைகடல் அவர்களை அச்சுறுத்தியது இல்லை. பனைமர உயரத்துக்குச்சீறிய அலைகளுக்கு மத்தியில்கூட படகைச் செலுத்தும் வல்லமை பெற்றவர்கள் அவர்கள்.

அவர்களது உடலில் வலிமை இருக்கிறது, உள்ளத்தில் கள்ளம் இல்லை. கடலோடு போராடி அதில் கிடைப்பதைக் கொண்டு வாழ்வு நடத்து கிறவர்களுக்கு ஏன் இந்த வேதனை? ஏன் இந்தக் கலக்கம்? எதனால் இந்தக் கண்ணீர்? தங்கச்சிமடம் சகோதரிகளின் வேதனைப் புலம்பலை, அவர்கள் கதறிக் கண்ணீர்விட்டதை, ஓலக்குரலை இன்று நான் பாம்பனில் பேசுகிறேன். இனி நாடெங்கும் பேசுவேன். மக்கள் மன்றங்களில் பேசுவேன். நியாயம் கேட்பேன். நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் பேசி இருக்கிறேன்.

நாதி இல்லையா?

மீனவர்கள் என்னிடம் கேட்டார்கள். எங்களுக்கு வேறு என்ன தொழில் இருக்கிறது? காடு இருக்கிறதா? கழனி இருக்கிறதா? வேளாண்மை இருக்கிறதா? நாங்கள் எப்படி வாழ்வோம்? கடலை நம்பித்தானே நாங்கள் வாழ்கிறோம். அப்படிக் கடலுக்குச் செல்கிற எங்களை, சிங்களக் கடற்படை சுடுகிறானே, வள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறானே, தொழில் பாதிக்கப்படுகிறதே, அங்கு கொண்டு சென்று அடிக்கிறானே, சிறையில் அடைக்கிறானே, பட்டினி போடுகிறானே, இதைக் கேட்பதற்கு எங்களுக்கு நாதி கிடையாதா? என்று கேட்கிறார்கள்.

நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களின் கதறலைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். கடலில் மீன்பிடிக்கச் செல்கிறபோது திரும்பி வருவது உறுதி இல்லை. ‘ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்றுதான் மக்கள் திலகம் அன்று இவர்களைப்பற்றிப் பாடினார். ‘வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்றார்.

பிரச்சினை என்ன?

இன்று இருக்கிற பிரச்சனை கடலின் சீற்றம் அல்ல. அண்டை நாடு என்று சொல்லப்படுகின்ற சுண்டைக்காய் நாடு இலங்கை. அங்குள்ள தமிழர்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களை மானபங்கம் செய்யும் சிங்களப் பேரினவாத அரசு, இனப்படுகொலை செய்கின்ற இரத்த வெறி பிடித்த இராஜபக்ஷே அரசு, இலங்கையில் இருந்து கடற்படையை அனுப்பி தமிழக மீனவர்களையும் கொல்கிறான். தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்கள் - இங்கு உள்ள ஆறரைக் கோடி மக்கள், கோபத்தில் ஒரு பெருமூச்சுவிட்டால் விட்டால் போதும், இருக்கிற இடம் தெரியாமல் பறந்துபோய் விடுவானே! கையில் உமியை வைத்துக் கொண்டு, எதிரிகளை உமிப்பதர்களைப்போல நான் ஊதிவிடுவேன் என்று ஊமைத்துரை ஊதிக்காட்டி எச்சரித்ததாக நான் பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் படித்து இருக்கிறேன்.

அப்படி, ஆறரைக் கோடி தமிழ் மக்களும் பலமாக மூச்சு விட்டால் தாக்குப்பிடிப்பானா அந்தச் சிங்களத்தான்? என்ன துணிச்சல் இருந்தால் இங்கே வந்து சுடுவான்? ஒரு மானங்கெட்ட மத்திய அரசு இங்கே இருப்பதால் சுடுகிறான். தமிழனுக்கு நாதி அற்றுப் போய் விட்டது என்பதால் சுடுகிறான். அங்கு கொலை செய்துவிட்டு, இங்கேயும் வருகிற தைரியம் இருக்குமா? என்ன ஆணவம் இருந்தால் நமது கடல் எல்லைக்கு உள்ளேயே வந்து நமது மீனவர்களைச் சுடுவான்? அண்மையில் கிறிஸ்டி சுட்டுக் கொல்லப்பட்டார். நான் பிரதமருக்குக் கண்டனம் தெரிவித்தேன். நீங்கள் அரசா நடத்துகிறீர்கள்? என்று கேட்டேன்.

இந்தியக் கடற்படை, இந்திய மீனவர்களைக் காப்பாற்ற இந்திய மக்களைக் காப்பாற்றவில்லை. இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை கங்காணி வேலைசெய்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். இதன் விளைவு, சந்தியாகு என்ற இளம் மீனவன் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு எச்சரிக்கைக்கூட செய்யாமல் இலங்கைக் கடற்படை திடீரென்று வந்து சுட்டுக் கொன்று விட்டான். இப்பொழுது நான் கேட்கிறேன், இந்தியா - இலங்கை போட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவை ஒட்டி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம்- வலைகளை உலர்த்தலாம் என்ற பிரிவு இருக்கிறதே, அது என்ன ஆயிற்று?

நம் மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடிக்க உரிமை உண்டு என்று சொன்னபிறகு, சுடுவதற்கு அவனுக்கு என்ன அதிகாரம்? குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே சென்றார்கள். பாகிஸ்தான்காரன் சுடவில்லை. பாகிஸ்தானும் நாமும் பங்காளிகள். ஐந்து தடவை சண்டையும் போட்டாயிற்று. ஆனாலும்கூட, இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுடவில்லையே? சில வேளைகளில் மீனவர்கள் எல்லை மீறி வந்தால் எச்சரித்து, நாகரிகமாக அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்களே?

இரவு 12 மணிக்கு நான் வீட்டுக்கு வருகிறேன். அந்த நேரத்தில் பேட்ரிக் என்னிடத்தில் பேசுகிறார்.
‘‘ அண்ணா இன்றும் ஒரு அக்கிரமம் நடந்துவிட்டது, இராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர் சந்தியாகுவைச் சுட்டுக்கொன்று விட்டனர் பாவிகள்’ என்று கதறிய போது, ‘நீங்கள் முழுவிவரத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டு, அந்த இரவிலேயே பிரதமருக்குக் கண்டனக் கடிதம் தயாரித்து, காலையில் அனுப்பினேன். நாங்கள் எங்கள் கடமையைச் செய்வதைத்தான் இங்கே மதுரைச் சகோதரர் அலெக்ஸாண்டர் வீரமுழக்கம் இட்டு பேசினார்.

நான் நார்வே சென்றுவந்த பிறகு நேரிடையாக பிரதமரிடத்தில் கேட்டேன். ‘பிரதமர் அவர்களே இலங்கைக்கு நீங்கள் ஆயுதம் கொடுக்கிறீர்கள், அங்கு உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு என்றேன்’ ‘இல்லை’ என மறுத்தார். ஆனால், இலங்கை இராணுவத்தினர் சொல்கிறார்களே, இந்தியா எங்களுக்கு ஆயுதம் வழங்குகிறது’ என்று கேட்டேன். ‘அது பொய்’ என்றார். இலங்கைக் கடற்படை நமது எல்லைக்கு உள்ளே வந்து, நமது மீனவர்களைச் சுடுகிறானே? அதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை? என்றேன். இலங்கை அரசுக்குச் சொல்லி இருக்கிறோம்’ என்றார்.

என்ன சொல்லி இருக்கிறீர்கள்? ஒருநாள் விட்டு ஒருநாள் சுடுங்கள் என்று சொல்லி இருக்கிறீர்களா? நான் கேட்கிறேன்.
நம் கடல் எல்லையில், பன்னாட்டுக் கடல்பரப்பில் கண்ணி வெடியை வைத்து இருக்கிறது இலங்கைக் கடற்படை. இது சுற்றுப்புறச்சூழலை, கடல்வாழ் உயிரினங்களை அழிக்காதா? உலகத்தில் எந்த நாடு ஒப்புக்கொள்ளும்? கண்ணி வெடிகள் போடுவதை எந்த நாடும் ஏற்காது. கண்ணிவெடிகளைப் போட்டது மட்டும் அல்ல, ‘தமிழ்நாட்டு மீனவர்களே! இந்தப் பக்கம் வராதீர்கள். வந்தால் கண்ணிவெடியில் சிக்கி, படகுகள் சிதறிக் கொல்லப்படுவீர்கள்’ என்று இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை எச்சரிக்கிறது. இதைவிடக் கேவலம் ஒன்றும் கிடையாதே?

அதைக்கேட்டு இந்தியக் கடற்படையும் சொல்கிறது, ‘தமிழக மீனவர்களே இப்பக்கம் மீன்பிடிக்க வராதீர்கள்’ என்று. எங்கள் வரிப்பணத்தில்தான் நீங்கள் சம்பளம் வாங்குகிறீர்களே தவிர, சிங்களத்தானிடம் நீங்கள் சம்பளம் வாங்கவில்லை.

இதேபோன்ற ஒரு நிலைமை முன்பு ஏற்பட்டது. அப்போது ரக்ஷ்யா உடையவில்லை. உலக வல்லரசாக இருந்தது. அட்லாண்டிக் கடலில் சோவியத் நாட்டுக் கப்பல்கள் வந்து கொண்டு இருந்தன. இன்று எப்படி உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றாரோ பாரக் ஒபாமா, அதைப் போல அன்று உலகமக்கள் மனதில் உயர்ந்து நின்ற ஜான் கென்னடி சொன்னார், ‘ரக்ஷ்யக் கப்பலை, நடுக்கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மறிக்கும்’ என்றார்.

‘பன்னாட்டுக் கடல் பரப்பில்தானே அந்தக் கப்பல் செல்லுகிறது. நீ எப்படி மறிக்கலாம்?’ என்றார்கள்.

‘பன்னாட்டுக் கடல் எல்லைதான். ஆனால் அவன் கியூபாவுக்கு ஏவுகணைகளைக் கொண்டு செல்கிறான். எதிர்காலத்தில் கியூபாவில் இருந்து எங்கள் மீது தாக்குதல் நடக்கும். அந்த ஆபத்தைத் தடுக்க இன்றைக்கே மறிக்கிறோம். வருகிற சண்டை இன்றே வரட்டும்’ என்றார் கென்னடி. உலகப் போர் மூளும் என்று கருதினார்கள்.சோவியத் ரக்ஷ்யா தன் கப்பல்களைப் பின்வாங்கிக் கொண்டு போனது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு நாடு தன் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 1000 தடவைகளுக்குமேல் துப்பாக்கியால் சுட்டு, 360 மீனவர்களைக் கொன்று விட்டானே, ஒரு குடிமகன் உயிருக்காக இங்கிலாந்து நாடு எப்படி நடந்து கொண்டது?

மார்க்கெரட் தாட்சர் இங்கிலாந்து பிரதமராக இருந்தார். லண்டனில் உள்ள லிபியா நாட்டுத் தூதரகத்தின் எதிரில், லிபியாக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவன் நாட்டுப் பிரச்சனைக்காக, அவன் நாட்டுத் தூதரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம். துப்பாக்கிச் சூடு நடந்தது. தூதரகத்தின் உள்ளே இருந்து துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுடும்போது, தவறுதலாக காவல் வேலையில் இருந்த பிரிட்டிக்ஷ் காவல்துறையைச் சேர்ந்த காவல்துறை பெண்மணி மீது குண்டு பாய்ந்து அந்தப் பெண்மணி இறந்து விட்டார்.

ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக இங்கிலாந்து பிரதமர் மார்க்கரட் தாட்சர் சொன்னார்: ‘என் நாட்டுக் குடிமகளைச் சுட்டுக் கொன்றதால் உன் நாட்டு உறவுகளை இதோடு அறுத்துக் கொள்கிறேன்; இந்த ஊரை விட்டு நீங்கள் அத்தனை பேரும் வெளியே செல்ல வேண்டும் என்றார்.

அவரல்லவா பிரதமர்? அதுவல்லவா உணர்வு? வேண்டும் என்றேகூட அல்ல, தவறுதலாகப் பட்ட குண்டுக்காக அந்த நடவடிக்கை.

ஆனால், இங்கே நாள் தவறாமல் சுடுகிறான், கொல்கிறான். அதுமட்டும் அல்ல, மே மாதத் தொடக்கத்தில் மீன் பிடிக்கச் சென்ற நமது 19 மீனவர்களை, கடலில் இருந்து கைது செய்து கொண்டு போனார்கள். அதற்கும் நான் கண்டனம் தெரிவித்து, பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். 19 மீனவர்களையும் கொண்டுபோய், அநுராதபுர சிறையில் வைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைக் கட்டி அடித்தார்கள். பட்டினி போட்டார்கள். கடைசியில் அவர்களை அனுப்பும்போது, ‘நீங்கள் திரும்ப இங்கு வந்துதான் உங்கள் தொழிலுக்குப் போகிற படகு, இன்ஜின், வலை எல்லவாற்றையும் வாங்க வேண்டும்’ என்று பிடுங்கி வைத்துக்கொண்டான். இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் யாராவது படகு வாங்க முடியுமா? ஒரு படகு போனால், அந்தப் படகை நம்பி இருக்கின்ற குடும்பத்தின் வாழ்வு என்ன? இப்படித் தொடர் நிகழ்ச்சிகள். இன்னும் அவர்களது படகும், வலையும் அங்குதான் இருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்த 15 ஆவது நாளில், இப்போது மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், 19 பேர்களுள் இரண்டு பேர் 14 வயது சிறிய பையன்கள். விடுமுறையில் கடலுக்குப் போய்வருவோம் என்று போனவர்களையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தகப்பன் கதறுகிறான். இதுபோல இந்தியாவில் வேறு மாநிலத்தில் நடக்க விடுவானா? அரசு அமைச்சர்கள் வெளியே வரமுடியுமா? மத்திய அரசை அவர்கள் உலுக்கி எடுக்க மாட்டார்களா? நான் ஒவ்வொரு தமிழனையும் கேட்கிறேன்.

இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்து நடக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல;எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு. அப்பொழுது நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தேன்.என்னைக் கழகத்தில் இருந்து நீக்க கலைஞர் கருணாநிதி அவர்கள் துடித்துக் கொண்டு இருந்த நேரம். நாடாளுமன்றம் கூடுகிறது. நவம்பர் 25 ஆம் தேதி, அன்று திங்கள் கிழமை வாரத்தின் முதல்நாள். அன்று இருக்கும் கேள்வி நேரத்தில் நட்சத்திரக் கேள்வி, முதல் கேள்வி என்னுடையது.

படித்தவர்கள் இங்கே இருக்கலாம். நாடாளுமன்றப் பதிவு ஏடுகளை, வீட்டில் இருந்தே இணையத்தில் பார்த்து விடலாம். நான் தேதியைச் சொல்கிறேன், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 1991 நவம்பர் 25 ஆம் தேதி. மாநிலங்களவையின் கேள்வி நேரம். முதல் கேள்வி என்னுடையது. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான், அடுத்த கேள்விக்குப் போகவேண்டும்.

சங்கர்தயாள் சர்மா அப்பொழுது சபாநாயகர். அவர்தான் கேள்வி கேட்க அழைப்பார். இந்தக் கேள்வியில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முதல்நாள் இரவு நான் தில்லிக்குச் சென்றேன். இந்தக் கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அமைச்சர் பதில் சொல்கிறார். கேள்வி இதுதான்:

‘‘இலங்கைக் கடற்படையினரால், இதுவரை தமிழக மீனவர்கள் எத்தனை முறை சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்? தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’’

இந்தக் கேள்விக்கு அமைச்சர் பொத்தாம்பொதுவாகப் பதில் சொன்னார்.

நான் உடனே புள்ளி விபரத்தோடு, இத்தனை முறை சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இத்தனைமுறை மீனவர்கள் படகுகள் நாசமாக்கப்பட்டு இருக்கிறது, இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டேன். அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. சங்கர் தயாள் சர்மாக வழக்கமாக இதில் குறுக்கிட மாட்டார். ஆனால், அன்று குறுக்கிட்டுக் கேட்டார். ‘‘அமைச்சர் அவர்களே, அவர் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லையே?’’ என்றார்.

அன்று முதல் இன்றுவரை எண்ணிப் பார்க்கிறேன். வேதாரண்யத்துக்குப் பக்கத்தில், ஆறுகாட்டுத் துறையில், நம் எல்லைக்கு உள்ளே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கைக் கடற்படை விமானத்தில் இருந்து தாழ்வாகப் பறந்து குண்டு வீசினான். படகு அப்படியே சிதறி, நம் மீனவர்கள் ஆறு பேர் உடல் துண்டு துண்டாகச் சிதறி இறந்தார்கள்.

எந்தக் கடலில் ராஜராஜச் சோழன் கலம் செலுத்தினானோ, எந்தக் கடலில் கரிகாற் பெருவளத்தான் கலம் செலுத்தினானோ, அந்தக் கடலில் தமிழக மீனவர்கள் ஆறுபேர் துண்டுதுண்டாகச் சிதறினார்கள். அவர்களது உடல் மீன்களுக்கு உணவாக ஆயிற்று. இதைக் கேள்விப்பட்ட உடனே நான் ஆறுகாட்டுத்துறைக்குச் சென்று, ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று நடந்ததைக் கேட்டேன்.

‘எப்படி நடந்தது? என்றேன். நடந்ததை விவரித்தார்கள். இந்தியக் கடற்படையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால், இந்தியக் கடற்படை வீரர்கள் அன்று மது குடித்து விட்டு கேளிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். புகாரை வாங்க மறுத்து விரட்டி விட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நான் தில்லிக்கு விரைந்து சென்றேன். அப்பொழுது பிரதமர் ஐ.கே.குஜ்ரால். அவரிடத்தில் நேரிடையாகச் சென்று நான் மனு கொடுத்தேன். நேற்று முன்தினம் கொடுத்த கடிதத்தில் எழுதி இருந்த அதே வரிகளைத்தான் அதிலும் எழுதி இருந்தேன். நம் எல்லைக்கு உள்ளே வந்து, ஆறுகாட்டுத் துறையில் குண்டு வீசி நம் குடிமக்கள் ஆறு பேரைக் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான். உலகில் வேறு எங்காவது நடக்குமா? நம் எல்லைக்கு உள்ளே வந்து குண்டுவீசிச் சென்றான் என்றால் அந்த அரசை உடனடியாக எச்சரிக்க வேண்டாமா?
இதற்குப்பிறகும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இந்தியக் கடற்படை, நொண்டி வாத்தைப்போலக் கடலில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறதே?
என்று சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. எனவே, என்னிடத்தில் நீண்டநேரம் பேச விரும்பியவர், ‘சரி நான் என்னவென்று பார்க்கிறேன்’ என்றார். நான் வெளியே வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தேன்.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், இது தொடர்கதையாகிக் கொண்டு இருக்கிறது. எத்தனை தடவை அறிக்கை கொடுப்பது? பிரதமருக்கு இதுவரை எத்தனையோ தடவை கடிதமும் கொடுத்து இருக்கிறேன் - நேரில் சந்தித்தும் பேசி இருக்கிறேன். இதற்கெல்லாம் என்ன முடிவு?

இங்கே இருக்கின்ற மீனவ சமுதாய மக்களை நான் வன்முறைக்குத் தூண்டவில்லை. கொஞ்சம் எண்ணிப் பார்க்கட்டும் அரசு. இதுவரை அமைதியாக இருக்கின்ற இந்த மீனவர்கள் பொங்கி எழுந்தால், என்ன கதியாகும்? மீனவர்கள் என்ன போலீசுக்கும் துப்பாக்கிக்கும் பயப்படுவார்களா? சுறா மீனுக்கும், சுழல் காற்றுக்கும் பயப்படாமல், மரக்கலங்களைச் செலுத்துகின்ற அளவுக்கு உடல்வலிமை உள்ளவர்கள் மீனவர்கள். அவர்கள் பொங்கி எழுந்தால், நீங்கள் தாக்குப் பிடிப்பீர்களா? இதுவரை வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார்களா? யோசிக்க வேண்டும், மத்திய அரசும், மாநில அரசும்.

ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு கட்டத்தில் பொறுமை வெடித்து விடும். எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்? இன்றைக்கும் சொல்கிறேன் என் அருமைத் தோழர்களே, வாலிபர்களே, இளைஞர்களே பொறுமையைக் காப்பாற்றுங்கள். உங்களது போராட்டங்கள் அறவழியில் போகட்டும். வன்முறைக்குப் போய்விட வேண்டாம்.

உங்கள் துயரத்தில் நான் பங்கேற்கிறேன். உங்களுக்காகக் குரல் கொடுக்கிறேன். எந்தெந்த இடங்களில் உங்களுக்காக என் குரல் ஒலிக்க வேண்டுமோ, அந்த இடங்களில் என் குரல் ஒலிக்கும். இதற்கு என்ன தீர்வு என்ற அந்தச் சகோதரிகளுக்குச் சொல்வேன். இந்த இடத்தில் சொல்கிறேன், நாங்கள் இந்தப் பிரச்சனையை விட்டுவிடப் போவது இல்லை. மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்வோம்.

இன்னும் ஆறேழு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. தமிழக மக்களை, தமிழக மீனவர்களைக் காக்கத் தவறிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கி எறிய வேண்டும் மக்கள். ஒரு இடத்தில்கூட அவர்கள் வெற்றி பெறக்கூடாது. அவர்கள் செய்த இரண்டகத்துக்குத் தண்டனை அளியுங்கள்.

என் அருமைச் சகோதரர் பேட்ரிக், மனிதாபிமான உணர்வோடு மருத்துவ ஊர்தியை வழங்கி இருக்கிறார். திடீரென்று இருதய நோயால் பாதிக்கப்படுகிறவர்களை, குறித்த நேரத்துக்குள் தகுந்த மருத்துவமனைக்குக் கொண்டு போய் தக்க உதவிகள் செய்தால், அந்த உயிரைக் காப்பாற்றலாம். பேட்ரிக்கை, நான் மனதார வாழ்த்துகிறேன். அவரை நான் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மனிதனின் கண்ணீரைத் துடைப்பதற்கு சகமனிதன் முன் வர வேண்டும். அதுதான் மனிதநேயம். மனிதாபிமானம். இதில் கட்சி, ஜாதி, மதம் எதுவும் கிடையாது.

இந்த உடனடி மருத்துவ உதவி ஊர்தி மறுமலர்ச்சி அறக்கட்டளையின் சார்பான வண்டியாக இருந்தாலும், நோயாளிகள் யாராக இருப்பினும், எந்தக் கட்சி - எந்த மதம் - எந்த ஜாதி என்ற எந்தக் கணக்கும் கிடையாது. செஞ்சிலுவைச் சங்கம் எப்படி இயங்குகிறதோ, அதைப்போல இந்த ஊர்தி, பாதிக்கப்படுகிறவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உதவும். இதில் அரசியல் வேறுபாடு கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகமா - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா - பொதுவுடைமை இயக்கமா - காங்கிரஸா - பாரதிய ஜனாதவா - முஸ்லிம் முன்னேற்றக் கழகமா எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி அதைப்போல இந்துவா - முஸ்லிமா - கிறிஸ்தவரா - யாராக இருப்பினும் சரி, ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த ஊர்தியை அனுப்புங்கள்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இந்தக் கடமையைச் செய்ய முன்வந்து இருக்கும் பேட்ரிக் அவர்களை நான் உச்சிமேல் வைத்துப் போற்றுகிறேன். இதற்கு நிதி கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு, இதற்கு நிதி கொடுத்த மீனவ சமுதாயப் பெருமக்கள், வணிகர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். சில வேளைகளில் நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் - அவர்களுக்கு, உயிர்மூச்சுக் காற்றைச் (ஆக்சிஜன்) செலுத்த வேண்டியது வரும். அதற்கும் உரிய கருவிகளை (சிலிண்டர்) உள்ளே வைக்க ஏற்பாடு செய்யுங்கள். இது உயிர்காக்கும் ஊர்தியாகச் செயல்படட்டும்.

நாம் இவ்வளவு கக்ஷ்டப்படுகிறோம், எதிர்க்கட்சிக்காரனுக்கு மருத்துவ ஊர்தியை அனுப்பினாயே என்று பேட்ரிக்கை யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் என்னிடத்தில் அப்படிக் கேட்டவர்கள் உண்டு. நான் மஞ்சள் காமாலை தடுப்பு முகாம் நடத்தினேன். 65,000 குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி குத்தினோம். கழகத் தோழர்கள் சிலர் கேட்டார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு ஊசி போடுவதற்கு நீங்கள் பதிவு செய்யவில்லை, ஆனால், நம்மைக் காலம் எல்லாம் எதிர்க்கின்ற தி.மு.க. வீட்டுப் பிள்ளைகளுக்கு ஊசி போடப் பதிவு செய்து இருக்கிறார்கள்’ என்றனர்.

நான் சொன்னேன்: இரண்டு வயது பச்சைக்குழந்தைகளைத் தாய்மார்கள் தூக்கிக்கொண்டு வரும்போது, எந்தக் கட்சி என்று கேட்டுக் கொண்டா அங்கு பதிவு செய்வது? யார் வந்து பதிவு செய்தார்களோ அவர்களுக்கு ஊசி குத்துகிறோம். நீங்கள் பதிவு செய்யவில்லை, அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றேன். இதில் கட்சி எங்கே இருக்கிறது? குழந்தைகளிடம் கட்சியா இருக்கிறது? சிவகாசியில் அந்த முகாம் நடந்த இடத்தில் கட்சிக் கொடிகளை கட்ட நான் அனுமதிக்கவில்லை. கட்சியின் சின்னத்தை வைக்க ஒப்புக் கொள்ளவில்லை.

அதைப்போல இந்த மருத்துவ ஊர்தியும் மனிதநேயத்தின் அடையாளமாக உலவ வேண்டும். இப்படி ஒரு நல்ல கடமையைச் செய்கிற பேட்ரிக்தான், தங்கச்சி மடம் - பாம்பன் - இராமேஸ்வரம் பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படும் ஒவ்வொரு தடவையும் என்னிடம் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார் - பேக்ஸ் கொடுக்கிறார். பேட்ரிக் சில வேளைகளில் வேறு இடத்தில் இருந்தால், தம்பி கராத்தே பழனிசாமி மூலம் தகவல் கொடுக்கிறார். மாவட்டச் செயலாளர் ஜெயராமன் மூலம் தகவல்களை உடனுக்குடன் கொடுக்கிறார்.

பேட்ரிக் தகவல் கொடுத்தவுடன், நான் மத்திய அரசைக் கண்டிக்கிறேன், மாநில அரசைக் கண்டிக்கிறேன். செய்தி வருகிறது. இதை நெடு நாட்களாகக் கவனித்துக் கொண்டு இருந்தனர் சி.பி.சி.ஐ.டி போலிஸார். இன்று இங்கே கியூ பிராஞ்ச், ஸ்பெஷல் பிராஞ்ச், ஐ.பி. என அனைவரும் வந்து இருக்கிறார்கள். எனக்குத் தெரியும். நீங்கள் வந்து இருப்பதால்தான் நான் பேசுகிறேன். இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன், இதை அரசிடம் சொல்லிவிடுங்கள்.
இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை கங்காணி வேலை பார்க்கிறது என்று வைகோ சொல்கிறானே, இந்தியத் தளபதிகள் இலங்கைக்குச் செல்வது, அங்கே இராஜபக்ஷே போடுகிற விருந்தைச் சாப்பிடுவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது, பிறகு இலங்கைக்கு ஆதரவாக அறிக்கை தருவதை எல்லாம் வைகோ சொல்கிறானே, குற்றம் சாட்டுகிறானே இதற்கெல்லாம் பேட்ரிக்தானே காரணம்?

எனவே, பேட்ரிக்கை எப்படி முடக்குவது எனத் திட்டமிட்டு, ஏதாவது ஒரு பொய் வழக்குப் போட்டு பேட்ரிக்கைச் சிறையில் தள்ள அரசு முடிவு எடுத்து இருக்கிறது.

நான் முதல்வருக்குச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க. மாவட்டச் செயலாளரைக் கொன்று, அந்த வழக்கில் அத்தனை சாட்சிகளையும் பிறழ் சாட்சிகளாக ஆக்கி, குற்றவாளிகள் வெளியே வந்தபிறகு பிறகு, ‘அவர் குற்றம் அற்றவர்’ என்று முதல் அமைச்சர் அறிக்கை விடுகிறார். மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீவைத்து மூன்று ஊழியர்களைக் கொன்றார்கள். அதற்குக் காரணம் முதல்வரின் மதுரை மகன் என்று இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியது, அதன்மீது வழக்குப் போட்டீர்களா?

ஆனால், இங்கோ ஒருபாவமும் அறியாமல், மனிதநேயப் பணியை ஆற்றும் பேட்ரிக்கை, மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அவர் என்னிடம் சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்மீது பொய் வழக்குப் புனைவதற்குத் திட்டமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கிறவர்களுக்கு இவர் பண உதவி செய்கிறார் என பொய்க் குற்றச்சாட்டைச் சொல்லி, பேட்ரிக்கைக் கைது செய்ய அரசு திட்டமிடுகிறது என்று நான் கேள்விப்படுகிறேன்.

எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். முதல்வருக்குச் சொல்ல விரும்புகிறேன். இது உங்கள் அபார மூளையில் தோன்றிய திட்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இதன் மூலமாக வேறொரு அரசியல் கணக்கை நீங்கள் போடுவீர்கள் என்றும் எனக்குத் தெரியும். உங்கள் சூழ்ச்சி வலைகள் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டு வந்து இருக்கிறான் வைகோ. இனி நீங்கள் அனைத்திலும் தோற்பீர்கள்.

தி.மு.க. தலைவர் அன்பழகனை எதிர்த்து, வெறும் 400 ஓட்டுகள் குறைவாகப் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்த சீமா பஷீர், புலிகளுக்கு உதவி செய்தார் என்று வழக்குப் போட்டீர்கள். நீதிமன்றத்தில் போராடி பிணையில் வெளியே வந்து இருக்கிறார். அதைப்போல, இப்பொழுது பேட்ரிக் மீதும் பொய்வழக்குப் போட முயற்சித்தால், அதை எதிர்த்து நாங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கிப் போராடுவோம்.

பேட்ரிக் என்றால், இப்பொழுது மேற்கு மண்டபம், கிழக்கு மண்டபம், தங்கச்சிமடம் இராமேஸ்வரம் மட்டும்தான் தெரியும். ஆனால், நீங்கள் அவரைச் சிறையில் அடைத்தால், தமிழகத்தில் இருக்கின்ற இலட்சக்கணக்கான கண்மணிகள் உள்ளத்தில் பேட்ரிக்குக்குத் தனி இடம் கிடைக்கும். அது மட்டும் அல்ல, தமிழ்ச் சமுதாய மக்களுள் ஒருவனாகச் சொல்கிறேன். குற்றம் அற்ற, தவறு செய்யாத ஒருவரை, கையில் காவல்துறை இருக்கிறது என்பதற்காக பொய்வழக்குப் போட முனைந்தால், அதற்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பீர்கள். ‘வினையை விதைத்தால் வினையைத்தான் அறுப்பீர்கள். உங்களது சதித்திட்டங்களை எங்களால் எதிர்கொள்ள முடியும்.

மக்களுக்கு ஒன்றுசொல்ல விரும்புகிறேன். ஏற்கனவே ஏறி இருக்கிற விலைவாசி உயர்வால் கொதித்துப் போய் இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும். அதற்கான இடம்தான் வரப்போகும் தேர்தல்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி - குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன் - மடியில் விழுந்த புறாவுக்குத் தன் சதையை கொடுத்தவன் சிபிச் சக்கரவர்த்தி - தவறு நேர்ந்தது என்பதற்காகக் காராம்பசுவின் கண்ணீருக்காக தன் ஒரே மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனுநீதிச்சோழன். இதை எல்லாம் சொல்லும்போது, ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பாலஸ்தீனத்தில் போர் நடைபெறுகிறது. அப்துல்லா என்பவரின் எட்டு வயது மகன், பொம்மைத் துப்பாக்கியை வைத்து இருப்பதைப் பார்த்த இஸ்ரேலின் யூதப்படை வீரர்கள் சுட்டு, அவன் அங்கே விழுந்து இறந்தான்.

ஒரேமகனை இழந்த அப்துல்லா அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள், ‘ஏற்கனவே இங்கே அடிபட்டு யூதப்பிள்ளைகள் கிடக்கிறார்கள்’ என்றனர் அப்போது அந்த அப்துல்லா சொன்னான், ‘அந்த யூத வீட்டுப்பிள்ளைகளுக்கு என் பிள்ளையின் சிறுநீரகங்கள், கண்கள், என எல்லா உறுப்புகளையும் எடுத்து கொடுங்கள்’ என்றான். இதுதான் மனிதநேயம்.

அந்த மனிதநேய அடிப்படையில்தான் பேட்ரிக் தலைமையில் மறுமலர்ச்சி அறக்கட்டளை இங்கே செயல்படுகிறது. அதற்குத்தான் உடனடி மருத்துவ உதவிக்கான ஊர்தியை வழங்கி இருக்கிறோம். மனிதநேயம் தழைக்கட்டும். இதுபோன்ற மனிதநேயப் பணிகள் தொடரட்டும்!

(6.6.2008 அன்று, பாம்பனில் மறுமலர்ச்சி அறக்கட்டளை சார்பில் மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.பேட்ரிக் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மருத்துவ ஊர்தியை வழங்கினார். விழாவில் அவர் ஆற்றிய உரை)

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)