வைகோ உரை. இலக்கிய அணி விழா .17.01.2009
விவகாரங்கள்: இலக்கியம்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
வைகோ உரை
இலக்கிய அணி விழா
17.01.2009
வைப்பாற்றின் வடகரையிலும் உப்போடையின் தென்கரையிலும் சமசதுரமாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டு இருக்கும் சாத்தூர் எனும் இத்திருநகரில் பாண்டிய மன்னர்களின் படைகள் உலவிய பாராட்டுக்குரிய பெருமை பெற்று இருக்கிற இந்த சாத்தூரில் இலக்கிய அணியின் விழாவை தமிழர் திருநாளாகக் கொண்டாடிட வேண்டும் என்று கோமகன் கேட்டமாத்திரத்தில், சிரமங்களைத் தாங்க வேண்டியது இருக்குமே என்றாலும் அதை ஏற்பதற்குத் துணிந்து வருகின்ற ஒரு மாவட்டச் செயலாளரும் அவருக்குத் துணைநிற்கின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தின் நிர்வாகிகளும் இருக்கின்ற காரணத்தினால் தயக்கம் இன்றி அங்கு நடத்திக் கொள்ளலாம் என்றேன்.
இன்று இந்த விழா காலைமுதல் மிகச்சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. கருத்தாழமிக்க உரைகளை பட்டிமன்றத்தில் தீட்டி தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த நடுவராக இருந்த நாஞ்சில் கூறியதைப்போல இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஆற்றல்மிக்க படைக் கருவிகள். தேடக்கிடைக்காத கருவூலங்கள். எவர் பேச்சு விஞ்சியது என்று எனக்குள் நானே கேட்கிறபோது ஒரு முடிவுக்கு நானே வரமுடியவில்லை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து
என்று ஒவ்வொருவரும் சொல்லைத் தொடுக்கின்றனர். சரம் சரமாகத் தொடுக்கின்றனர். கூர்த்தமதியோடு கருத்துகளை முன்வைக்கின்றனர். அதிலே இலட்சியதாகம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. தன்னலம் அற்ற அணுகுமுறை இருக்கிறது. உறுதி இருக்கிறது. இப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு படை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதை எண்ணி நான் இறும்பூது அடைகிறேன்.
இந்தப் படையை அழிப்பதற்கு எவனும் பிறக்கவில்லை, இனிபிறக்கப்போவதும் இல்லை. தேர்தல் தோல்விகள் ஒரு சராசரி சம்பவம். அது வந்துபோகக்கூடியது. தோற்றவர் வெல்வார். வென்றவர் தோற்பார். சக்கரம் சுழலும். மேலது கீழாகும். கீழது மேலாகும். இது அரசியல் பயணத்தில் நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு இருக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.
வெற்றிதோல்விகளைப்பற்றி ஒரு அரசியல் கட்சி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எத்தனையோ தோல்விகளைக் கண்டவர்கள். இலட்சியத்தில் தோற்றதில்லை. கொள்கையில் தோற்றதில்லை. எங்கள் படைவீரர்கள் தோற்றதாக ஒருபோதும் கருதுவது இல்லை.
எங்கள் நெஞ்சில் துணிவும், எங்களுடைய நாவுக்கு குரலின் ஓசையும் இருக்கிற வரையில் நாங்கள் எங்கள் பணியைச்செய்வோம். ஒருவீரனின் கைவாள் அவன் உடலில் உயிர் இருக்கின்ற வரையில் சுழன்றுகொண்டு இருக்கும். அதைப்போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன் கடமையைச் செய்யும்.
இந்த அரங்கம் என்பது ஒரு சிந்தனைக்கூடம். இலக்கியக்கூடம். இலக்கிய அணி கொண்டாடும் விழா நடக்கும் இடம் சாத்தூர் நகரம். இது 1910 ஆம் ஆண்டு வரை நெல்லை மாவட்டத்தின் ஒருபகுதி. இந்தப் பகுதி 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய மன்னன் மாறன் வல்லபதேவன் என்கின்ற மன்னனின் நேர் ஆட்சியின் கீழ் இருந்தது. அவன் இருக்கன்குடியில் கடல் போன்ற ஒரு ஏரியை அமைத்தான். கண்மாயை அமைத்தான். அந்த இருக்கன்குடியின் தண்ணீர் பாய்ந்ததால் சோலைகள் இங்கு செழித்து இருந்தன என்று இருஞ்சோலை என்று அழைக்கப்பட்ட பகுதி. பின்னாளில் சோலைகள் இல்லை. வயல்வெளிகள் இல்லை. நதியில் தண்ணீர் இல்லை. வேளாண்மை இல்லை. நெல் அதிகமாக விளையவில்லை.
பின்னாளில் ஒரு புலவன் சொன்னான். வேற்றூர் அரிசியும், வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூரைப்போல செளகர்யமான ஊர் வேறொன்று இல்லை என்று. சாத்தூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அதனால்தான் நாவுக்கு காரச்சுவை தருகின்ற காராச்சேவும். சங்கிலி வளையம்போல் காட்சி அளிக்கின்ற சீனி மிட்டாயும் சாத்தூரின் பெருமையைப் போகின்ற இடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்ற அளவுக்கு சிறப்புப் பெற்றிருக்கக்கூடிய சாத்தூர் நகரம்.
இந்த நுழைவுவாயிலுக்கு நடிகமணி டி.வி.நாராயணசாமியின் பெயரை கவிஞர் சூட்டியிருக்கிறார். துரைசாமிபுரம் வீரசாமி நாயக்கரின் மகன் நாராயணசாமி. அவர்தான் டி.வி.என். என்றானார். அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கு நடிகமணி என்று பட்டம் சூட்டினார். அவர்மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தார். வாசந்த... என்கின்ற நாடகத்தை சினிமாவாக எடுக்கவேண்டும் என்று அறிஞர் அண்ணாவிடம் சொல்லி நீங்கள் உரையாடல் எழுதித்தர வேண்டும் என்று கேட்டார்கள். அண்ணா சொன்னார், நான் கதை வசனம் எழுதித் தருகிறேன். கதாநாயகனாக நடிகமணி நாராயணசாமியை நீங்கள் போடவேண்டும் என்றார்.
அவர்கள் அதற்கு உடனடியாக மறுப்பு சொல்லாமல் சரிஎன்று சொல்லிவிட்டு பின்னர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. வேறு ஒருவரை நடிக்கச் சொல்வதாக தெரிவித்தார்கள். அண்ணா அவர்கள் நான் கதைவசனம் எழுதமாட்டேன் என்று கூறிவிட்டார். ஒருஇலட்சியவாதியாக டி.வி.என். வாழ்ந்தார். அறிஞர் அண்ணாவின் உயிர்பிரிந்த கோடானகோடி தமிழர்களின் தலையில் பேரிடி விழுந்த அந்த நேரத்தில் அண்ணாவின் பூதஉடலில் பொருத்தப்பட்டு இருந்த குழாய்கள் அகற்றப்பட்டு ஒருமூலையில் புரட்சித் தலைவர் அழுதுகொண்டிருந்த மாதவனை தட்டிக் கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லி அவரும் ஒருமூலையில் தரையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்த நேரத்தில் மன்னையும் மற்றவர்களும் வந்து அண்ணாவின் உடலை நாவலர் கலைஞரோடு வேனில் ஏற்றிச்சென்றதற்குப் பின்னர் நான் அங்கே திகைத்துப்போய் மிகுந்த வேதனையோடு நின்று கொண்டு இருந்தபோது என்னை மிகநன்றாகத் தெரிந்தவர் அறிந்தவர் என்னை அழைத்துக் கொண்டு எஸ்.எஸ்.ஆர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோனார்.
அந்த நடிகமணியின் பெயரால் அமைக்கப்பட்டு இருக்கும் நுழைவாயிலில், நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாலவநத்தம் ஜமீன்தார் சேதுபதி மன்னர்கள் பரம்பரையில் வந்த பாண்டித்துரைத் தேவர் பெயரால் அமைக்கப்பட்டு இருக்கிற அரங்கத்தில் இந்த விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பாண்டித்துரைத் தேவர் அவர்கள் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவினார். பாண்டித்துரைத் தேவருக்கு அவரது பெற்றோர் முதலில் சூட்டியபெயர் உக்கிரபாண்டியன். ஆனால், உக்கிர பாண்டியன் என்று யாரும் அழைக்காமல் பாண்டித்துரை பாண்டித்துரை என அழைத்து அதுவே பெயராகி விட்டது.
அவரது பெற்றோருக்கு மூன்று ஆண்பிள்ளைகள். அதற்கு ஒரு பாடலாக ஒரு புலவன் சொன்னான். பேச்சிலே பெரியசாமி பெருமையிலே சீமைச்சாமி அழகிலே பாண்டித்துரை அமைந்தால் பொன்னுசாமி மக்கள் என்று ஒருபாடலைப் பாடினார். அப்படிப்பட்ட பாண்டித் துரைத் தேவர் தமிழ்ச்சங்கம் அமைத்ததோடு மட்டுமல்ல செக்கிழுத்த செம்மல் சிதம்பரம் தொடங்கிய கப்பலுக்கு நிதியும்தந்து அதற்குத் தலைவராகவும் இருந்தார். அந்தப் பாண்டித்துரைத் தேவருக்குப் பெருமை சேர்க்கின்ற விதத்தில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நகரத்துக்கு தெற்கே ஓடுகின்ற கரிவலம் வரையில் ........... அதற்குப்பிறகு வைப்பாறாக பெயர் பெற்று இருக்கின்ற வைப்பாறுக்கு தெற்கே இரயில் தடத்துக்கு அருகிலே பூமிக்குள் ஒரு நகரம் புதைந்து இருந்து நல்லமநாயக்கன் கோட்டை என்று பெயர் பெற்று இருந்த அந்தப் பகுதிக்குள் அகழ்வாராய்ச்சி நடத்தினால் உள்ளே ஒரு நகரம் இருக்கிறது. புத்தரின் சிலை தோண்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. புத்தர் காலத்து நாணயங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நகரத்தில் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றின் வடகரையில் அமைந்து இருக்கின்ற கோயிலில் இருக்கும் இறைவன் பெயர் சாத்தூருப்பசாமி. சாத்தான் என்பதை வழிபாட்டுக்கு உரிய அப்பொழுது பலதெய்வ வழிபாடு இருந்ததால் வழிபாட்டுக்கு உரியவனாக கருதினால் சாத்தன் என்பவனை தெய்வமாக வழிபட்ட காரணத்தினால் இது சாத்தூர் என்று பெயர் வந்தது.
அப்படிப்பட்ட சாத்தூரில் 1920 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடங்கியவர் டி.எஸ்.கந்தசாமி முதலியார். ஆகவே சாத்தூரில் இலக்கிய விழா நடத்துவதற்கு காரணம் உண்டு. டி.எஸ் .கந்தசாமி முதலியார் தொடங்கி வைத்த தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்பட்டன. பழைய இலக்கியங்கள் நடத்தப்பட்டன. வ.உ.சிதம்பரம் பிள்ளை மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு இதே சாத்தூர் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர் திருக்குறள் உரை நிகழ்த்தி இருக்கிறார்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்த சாத்தூரில் இந்த இலக்கியப் பெருவிழாவை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த சாத்தூர் இசையிலும் பெருமை பெற்று இருக்கிறது. அதனால்தான் சங்கீதபூசணம் ஏ.எஸ்.சுப்பிரமணியம் என்கின்ற இசைமேதை வாழ்ந்த ஊர் சாத்தூர். இந்த மண்ணிலே இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறைசென்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அய்ய நாடார். ஒருவர் ராமசாமி நாயக்கர் இன்னொருவர் குப்பா நாயுடு. இன்னொருவர் செல்லையாத் தேவர். இன்னொருவர் கூடலிங்கத்தேவர். இன்னொருவர் அதிக நாட்கள் சிறையில் இருந்த சி.ஏ.வெங்கடசாமி நாயக்கர். இவர்கள் சாத்தூரைச் சேர்ந்தவர்கள். விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய சாத்தூரில்தான் நாம் இன்றைக்கு இலக்கிய அணி விழாவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல இந்தக் கரிசல் மண்ணுக்குப் பெருமை சேர்ந்த பிதாமகர்களாக எழுத்துலகில் ஒளிவீசிக் கொண்டு இருப்பவர்கள் இடைசெவலில் பிறந்த கு.அழகிரிசாமி அவர்களும், கி.ராஜநாராயணன் அவர்களும். அவர்கள் மனித வாழ்வின் அவலங்களை துயர்படும் மக்களை உழவர் பெருங்குடி மக்களின் துயரத்தை, ஒடுக்கப்பட்டோரின் துயரத்தை, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை அவர்களின் சிதைந்துபோன கனவுகளை, நொறுங்கிப்போன உள்ளங்களை அத்தனைக்கும் மத்தியிலும் உயிர்த்துக் கொண்டு இருந்த மனிதநேயத்தை அவர்களுடைய ஏடுகளில், கதைகளில் சித்திரித்தார்கள்.
அந்தவரிசையில்தான் நம்முடைய மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இன்றைக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்று இருக்கிறார் என்று சொன்னால் அது நமக்குப் பெருமை. இந்தக் கரிசல் காட்டு மண்ணுக்குப் பெருமை. எனக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் கிராமிய மண்ணின் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். எதார்த்தமான சிந்தனைக்குக் கிடைத்த அங்கீகாரம். அவர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார். பெண்ணியத்தின் பெருமை பேசுகின்ற விதத்தில் வதைபடும் பெண்களின் துன்பத்தை சித்தரிக்கின்றார்.
வாழ்விழந்த பெண்கள் மாங்கல்யபாக்கியம் இழந்தபிறகு துன்பத்தின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்ற பெண்கள். அவர்களின் அமங்கலவாழ்வு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சமூகத்தை எதிர்த்து மறுமணம் செய்து கொள்கின்ற பெண்கள் சந்திக்கின்ற போராட்டக் களங்கள். இவை எல்லாவற்றையும் சித்தரிப்பதோடு ஜாதிக்கொடுமைகளை இவற்றைத்தான் சிறுகதைத் தொகுப்புகளாக 24 சிறுகதைகளை ஆறு நாவல்களை ஆறு குறுநாவல் தொகுப்புகளை ஒரு கட்டுரைத் தொகுப்பை இத்தனையும் பலசரக்குக் கடையில் இருந்து கொண்டு எழுதுகின்ற ஆற்றல் நமது மேலாண்மை பொன்னுசாமிக்கு இருக்கிறது என்று சொன்னால், எதையும் சாதிக்க முடியும்.
ஐந்தாவது படிப்புக்கு மேலே படிக்க இயலவில்லை, பத்துவயதில் தந்தையை இழந்து பதினான்கு வயதில் தாயை இழந்து, தம்பி கரிகாலனோடு வறுமையை எதிர்த்துப் போராடுகிற வாழ்க்கை. திராவிட இயக்கக்குடும்பம். அதனால்தான் கரிகாலன் என்று அவரது தந்தையார் இவரது தம்பிக்கு பெயர் சூட்டியிருக்கிறார். அதன்பிறகு தஞ்சைக்குச்சென்று மிதிவண்டியில் பொருட்கள், திண்பண்டங்களைக் கொண்டுபோய் வீதிவீதியாக விற்றுப்பார்த்து வாழ்க்கைக்கு அது வழிகொடுக்குமா என்று போராடிப் பார்த்த வாழ்க்கை. அவருடைய கிராமத்தில் இருந்து நடந்து வருவார்கள் சில சமயங்களில் சைக்கிளில் வருவார்கள்.
அவரது மிகநெருங்கிய உறவுக்காரர்கள் என்னுடைய பள்ளிக்கூடத்தில் படித்த ஒரே வகுப்பு மாணவர்கள். அவர்கள் மேலாண்மறை நாட்டில் இருந்து ஆமநாடு என்று சொல்லி அழைப்பது தான் வழக்கம். பேச்சுவழக்கம். மேலாம நாடு - கீழாம நாடு. அங்கிருந்து நடந்து வருவார்கள். முத்தையா என்பவர் என்னுடைய பள்ளித்தோழர். பத்தாவது வகுப்புவரை நானும் அவரும் ஒரே வகுப்பில் ஒன்றாக இருந்தோம். அவரும் இவரும் மிகநெருங்கிய உறவினர்.
அந்தக்கிராமத்தில் இருந்து சென்று அதன்பிறகு இவரது வாழ்க்கையை சவாலாக எடுத்துக் கொள்கிறார். நான் நுழையமுடியாத பள்ளிக்கூடத்திற்குள் என் நூல் செல்கிறது. நான் பிரவேசிக்க முடியாத பல்கலைக்கழகத்திற்குள் என் நூல் பாடப் புத்தகமாக ஆகிறது. ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது. மலைகளையும் அசைக்கமுடியும் பந்தாட முடியும் தன்னம்பிக்கை இருக்குமானால் என்பதற்கு மேலாண்மை பொன்னுசாமி எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
ஐந்தாவது வகுப்பைத் தாண்ட முடியாத மேலாண்மை பொன்னுசாமி தில்லியின் சிந்தனையாளர்களின் நெஞ்சைக் குலுக்குகின்ற சாகித்ய அகாடெமி விருதினைப் பெறமுடிகிறது என்றால் மறுமலர்ச்சி தி.மு.க. வால் முடியாதா என்ன? ஒரு முன் உதாரணம். உங்களைப் போன்றவர்கள் போராடுகிறவனுக்கு ஒரு முன் உதாரணம். எந்தத் துறையாக இருந்தாலும்.
அவரது சிறுகதை முதன்முதலாக செம்மலரில் வெளிவருகிறது. 1972 ஆம் ஆண்டு. அதற்குப் பெயர் பரிசு. எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். முதல் சிறுகதைக்குப் பெயர் பரிசு. இன்றைக்கு தமிழர்களுக்கே பரிசாக வாய்த்து இருக்கின்ற நமது பொன்னுசாமிக்கு சாகித்யஅகாடெமி பரிசுகிடைத்து இருக்கிறது. அதன்பிறகு இவரது முதல் தொகுப்பை வெளியிடுவதற்கு பதிப்பகங்களைத் தேடித்தேடி அலைகிறார். முயற்சிக்கிறார். எழுதிப் போடுகிறார். எந்தப் பதிப்பகமும் இவரது நூலை வெளியிட முன்வரவில்லை.
மானுடம் வெல்லும் எனும் தலைப்பில் இவருடைய நூலை வெளியிடுவதற்கு இவரே முயற்சிக்கிறார். இதுதான் எழுத்தாளனின் வைராக்கியம். ஆன்மபலத்தோடு உள்ளுணர்வோடு எழுத்தும் தெய்வம், என் எழுதுகோலும் தெய்வம் என்று எண்ணக்கூடிய உணர்வோடு இருக்கிறவனுக்கு இது பெரிய சோதனை அல்ல. வெள்ளாடு வெள்ளாட்டங்கிடா என வீட்டில் இருந்த எல்லாவற்றையும் விற்று மானுடம் வெல்லும் என்னும் புத்தகத்தை இவரே வெளியிடுகிறார்.
நண்பர்கள் சொல்கிறார்கள், நாங்கள் புத்தகத்தை விற்றுக் கொடுத்து விடுகிறோம் என்று. அனைவரையும் நம்பி அத்தனை புத்தகங்களையும் கொடுத்தார். ஒரு சல்லி காசு யாரும் கொடுக்கவில்லை. பாருங்கள் இன்றைக்கு நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது. இந்த எழுத்தாளர் நமது பகுதிமக்களின் வாழ்வை சித்தரிக்கக்கூடிய எழுத்தாளர். எதார்த்த நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டக் கூடிய எழுத்தாளரைப் பார்க்கிறேன்.
ஏன், இலக்கிய விழா நடத்துகிறோம்? எந்த ஒரு சமுதாயம் இலக்கியத்தை கலையை செம்மையான முறையில் போற்றி அதன் வழிநடக்கிறதோ அந்தச் சமுதாயம் சீர்படும். எங்கே அது நலிந்து போகிறதோ அதுதானாகவே வீழ்ந்து பள்ளத்தில் உருண்டுபோய்விடும். தமிழர் நாகரிகத்தில் கலைகள் உயர்ந்து இருந்தன. உலகம் கண்டிராத இலக்கியங்களைத் தமிழர்கள்தான் படைத்தார்கள். எந்தச் சிந்தனையாளனும் தராதவற்றை நாம்தான் தந்தோம்.
கலையால், பண்பால், இலக்கியத்தால், நாகரிகத்தால், வளர்ந்த ஒரு இனம் தமிழ் இனம். தன்னுடைய முகவரியை இழந்துவிட்டு இன்றைக்குத் தவிப்பதற்கு என்ன காரணம்? நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற நிலை நாசமாகிக் கொண்டு வருகிற நேரத்தில் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பணியில் நாம் ஈடுபட்டு இருக்கிறோம்.
ஒரு நாடகம் என்பது மனிதமனத்தை ஈர்க்கக்கூடியது. அறிஞர் அண்ணா அவர்கள் சிறியவயதில் அரைக்கால் சட்டைபோட்ட மாணவனாக இருக்கிற போது தெருக்கூத்து எங்கே நடந்தாலும் அதைப்பார்க்கப் போய் விடுவாராம். அதில் ஒரு கருத்து இருக்கிறது. ஒரு கலை இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு இவரே பக்கத்து மாட்டுத் தொழுவத்தில் தெருக்கூத்து நடத்துகிறார். பத்து பையன்களைச் சேர்த்துக் கொண்டு.
எங்கே இலக்கியம் உயரும்? துன்பப்படுகிறவர்களுக்கு மத்தியில் உயரும். பொன்னுசாமியை சுற்றிவளைத்த வறுமை அவரைச் சுற்றிவளைத்த சோதனைகள் அவரது எழுதுகோலை கூர்மை படுத்திற்று. நான் இதைச் சொல்வதற்குக் காரணம் அண்ணாவின் எழுத்தும் டி.கே.சீனிவாசனின் எழுத்தும் எனக்கு ஆரம்பகாலத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தின என்று தன்னுடைய பேட்டியில் சொல்கிறார் மேலாண்மை பொன்னுசாமி.
இலக்கிய உலகில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்ல. இந்தத் தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்வதற்குக் காரணம் ஆனார். இராஜராஜ சோழன் இலங்கைக்குப் படை எடுத்துச் சென்று மும்முடிச் சோழனாக முடிசூடித் திரும்பியபோது சிங்களத்துக் காரனோ அவனது ஆதரவுப்படைகளோ இங்கு வந்துவிடக்கூடாது என்று நிலைகொண்ட படைகளை நிறுத்திவைத்து அதற்கு ஏற்பாடு செய்த அந்த வழிகளில் வந்தவர்கள் தான் சேதுபதி மன்னர்கள். சேதுபதி சீமை மரபில் வழிவழி வந்தவர்களில் ஒருவர்தான் பாலவநத்தம் பாண்டித் துரைத்தேவர்.
இராணிமங்கம்மாள் இந்த வைப்பாற்றில் முதல் பாலம் கட்டியவர். அவள்தான் சாத்தூரில் மங்கம்மாள் சத்திரம் கட்டிவைத்தாள். பாஞ்சாலங்குறிச்சி படைகள் மங்கம்மாள் சத்திரத்தில் வந்து தங்கி இருந்து உணவு சாப்பிட்டு அவர்கள் ஆதரவைப் பெற்றுப் போய் இருக்கிறார்கள். பின்னால் பிரிட்டிக்ஷ்காரன் இந்த மங்கம்மாள் சத்திரத்தை தாலுகா அலுவலகமாக்கிவிட்டான். மங்கம்மாள் கட்டிய விநாயகர் கோயிலை கருவூலமாக்கிவிட்டான்.
இந்த வரலாறுகளை நான் சொல்வதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாவின் உணர்வுகள், அவர் ஏற்படுத்திய எண்ணங்கள் என் இதயத்தில் இருக்கிறது. இன்றைக்கு உயிரோட்டம் உள்ள இலக்கியம் எங்கே மலர்கிறது என்று சொன்னால் ஈழத்தில் மலர்கிறது. புதுவை இரத்தினதுறையின் பாடல்களை இங்கே சொன்னார்கள். அது உயிர்ச்சக்தி உள்ள பாடல்களாக, சிறுகதைகளாக மனதைச் சுண்டி இழுக்கக்கூடியவையாக இருக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
என் அன்புக்கு உரியவர்களே, இந்தப் பொங்கல் திருநாளில் இலக்கியத்துக்கு மகுடம் சூட்டுகின்ற இந்தத் திருவிழாவில் நம் மண்ணுக்குப் பெருமைசேர்த்த பொன்னுசாமி இன்னும் எண்ணற்ற படைப்புகளைத்தந்து உலகளாவிய விருதுகளைப் பெறவேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அனைவருக்கும் நன்றிகூறி இந்த விழா சிறக்கப் பாடுபட்ட கண்ணனுக்கும், குணசேகரனுக்கும், அவர்களுக்குத் துணைநின்ற அனைவருக்கும் கோமகன் கோட்டைசாமி உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்தும், பாராட்டும்.

