வைகோ உரை வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்” உரை நூல் வெளியீட்டு விழா .திருநெல்வேலி - 22.08.2008

விவகாரங்கள்: இலக்கியம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்

வைகோ உரை
வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்”
உரை நூல் வெளியீட்டு விழா
திருநெல்வேலி - 22.08.2008

இந்த நாள் என் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். தியாக மணிவிளக்காக காலங்களைக் கடந்தும் ஒளிவீசிக் கொண்டு இருக்கின்ற ஒரு மாபெரும் தலைவன் வழங்கிய நூல்களுள் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வருகின்ற அரிய பணியில் திவான் ஈடுபட்டு இருக்கின்றார். செக்கு இழுத்த செம்மல்- ஒரு சிறந்த இலக்கியவாதியும்கூட என்பதை இன்னும் எண்ணற்றவர்கள் அறிகின்ற வகையில், வரவேண்டிய பல நூல்கள் வரலாற்றின் பார்வையில் வராமலே இருக்கின்ற கவலையோடு, அவற்றை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திவான் ஈடுபட்டு இருக்கிறார்.

இங்கே திரளான கூட்டத்தைப் பார்க்கிறேன். ஒரு இலக்கிய விழாவுக்கு இவ்வளவு திரளாக மக்கள் வந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது என்று திவான் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். செக்கு இழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு பிடித்தமான நூல்கள் மூன்று.

1.நீதி நூலான “திருக்குறள்”. 2. சித்தாந்த நூலான “சிவஞான போதம்”. 3. வேதாந்த நூலான கைவல்ய சுவாமிகளின் “நவநீதம்”.

இந்த மூன்றும் அவருடைய உள்ளத்தை ஈர்த்தன. இந்த “சிவஞான போதம்” என்பது, மெய்ப்பொருளை உணர்த்துகிற நூல். இது 12 சூத்திரங்களை உள்ளடக்கியது. 40 வரிகளைக் கொண்டது. 216 சொற்கள் நிரம்பியது. காப்பு உள்ளிட்டு, 12 சூத்திரங்கள். அவன் அவள் அது அவை எனும் .......யாலும் ஆலயம் தானும் .................. தொழுமே என்று தொடங்கி முடிகின்ற இந்த 12 சூத்திரங்களைப்பற்றி எண்ணற்றவர்கள் விளக்கங்கள் தந்து இருக்கிறார்கள்.

இந்தத் தெற்குச்சீமையில்தான், நதிகள் பாய்கின்ற நம் மண்ணில்தான், பொதிகைத் தென்றல் வீசுகின்ற இத்தென்னகத்தில்தான் மிகச்சிறந்த ஞானிகள் தோன்றினார்கள். மாதவ சிவஞான முனிவர் விக்கிரம சிங்கபுரத்தில் பிறந்தவர். அவர் தந்தது ‘சிவஞான மாபாடியம்.’ அதைத் ‘திராவிட மாபாடியம்’ என்பாரும் உண்டு. இதோ அமர்ந்து இருக்கின்ற அடிகாளரைப்போலத் தமிழுக்குத் தொண்டு செய்த துறவியாக உலவிய அன்றைய குன்றக்குடி அடிகளார் அவர்கள், சிறந்த தமிழ் அறிஞர்.

கடைசி வரையிலும் குடத்து விளக்காகவே இருந்து மறைந்த, என்றும் என் உள்ளத்தைவிட்டு அகலாத அண்ணன் சிசு மணி அவர்கள் தீட்டிய, ‘திராவிட மாபாடியம்’ என்கின்ற நூலை, 14 ஆண்டுகளுக்கு முன்பு 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் நாள், நெல்லை சங்கீதா சபாவில், குன்றக்குடி அடிகளார் வெளியிட்டார்கள். அந்த விழாவுக்குத் தலைமை ஏற்கின்ற பெரும்பேறு எளியவனாகிய எனக்குக் கிடைத்தது.

வீர சிதம்பரம் பிள்ளை எழுதிய “சிவஞான போத” உரையை திவான் பதிப்பித்து இருக்கிறார். அவர் நன்றி சொல்லும்போது, ஒரு சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார். 15 ஆவது நூலாக, வ.உ.சி.யின் நூலாகத் தருகிறேன் என்றார். இன்னும் வெளிவராத வ.உ.சி. நூல்கள் பல உள்ளன.

சிவஞான போதத்தைத் தந்த மெய்கண்ட தேவனார் பிறப்பு வளர்ப்பு வரலாற்றை அடிகளார் சொன்னார். தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட நடுநாடாகிய திருமுனைப்பாடி நாட்டில், பெண்ணாகடம் என்கின்ற ஊரில் அச்சுதகளிப்பர் தவம் இருந்து பெற்ற பிள்ளையாகப் பிறந்த அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் ஸ்வேதனப் பெருமாள். அவர் திருவெண்காட்டில் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்றாலும், தாய்மாமன் ஊரில் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தார். அங்கோ அவருக்கு பரஞ்சோதி முனிவர் அருள் செய்தார். மெய்ப்பொருளை உணர்த்தினார். ‘மெய்கண்ட தேவன்’ என்று பெயரும் சூட்டினார். அந்த மெய்கண்ட தேவன் தந்து இருக்கின்ற சூத்திரங்கள் 12.

இந்த 12 சூத்திரங்களுக்கும் எண்ணற்றவர்கள் விளக்கம் தந்து இருக்கிறார்கள். அதனுடைய நுண்மான் நுழைபுலப் பொருளை ஆய்ந்து அதைப் பகுத்துச் சொல்லக் கூடிய ஆற்றல் எனக்குக் கிடையாது. சுவாமிகள் போன்றவர்கள்தான் தரமுடியும். ஆனால், அந்த மெய்ப்பொருளில் என் மனதைக் கவர்ந்த சூத்திரங்கள் இரண்டு. ஒன்று ஆறாவது சூத்திரம். இன்னொன்று பத்தாவது சூத்திரம்.

ஆறாவது சூத்திரம், ‘அறிவு என்கின்ற மெய்ப்பொருளே, உண்மை கடவுள் என்பதுதான் ஆறாவது சூத்திரத்தின் சாரம். பத்தாவது சூத்திரம், ‘யான்’ என்பதை விட்டு விலகிய உடன், நான், எனது, என்னைச் சார்ந்தது என்ற நிலையில் இருந்து விடுபட்டவுடன் அந்த உயிரே இறைவன் என்கின்ற நிலையை அடைந்து விடுகிறது என்பதாகும்.

பெரியாழ்வார் சொன்னார்.பிரபஞ்சத்தை உள்ளடக்கிய கோடான கோடி கிரகங்களை இயக்குகின்ற இறைவனும் என் நெஞ்சத்துக்கு உள்ளே இருப்பதால், நானே பெரியவன் என்று சொன்னார். ஞான் என்பதை மறுப்பது எப்படி? .................

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், சமயவாதிகள் கூடுகின்ற மாநாட்டில் சிகாகோ நகரில், இந்தியாவில் இருந்து சென்ற விவேகானந்தருடைய ஆடைத்தோற்றத்தைக் கண்டு பலபேர் ஏளனமும் பரிகாசமும் செய்தவேளையில், Ladies and Gentlemen என்று பேசுகின்ற அரங்கில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த அவரது குரல் அந்த அரங்கத்தில் அனைவருக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இராமநாதபுரம் மன்னர்தான் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். விவேகானந்தரின் அற்புதமான கணீரென்ற ஆங்கிலச் சொற்களில் தவழ்ந்துவந்த கருத்துப் பிரவாகத்தில் அனைவரும் சொக்கிப்போனார்கள்.

அப்பொழுது இதைச் சொன்னார். இந்த பத்தாம் சூத்திரத்தின் கருத்துதான் அந்தக் கருத்து. ‘நான் என்பதை மறுத்துவிடு’ என்று அந்த அரங்கில் அவர் ஒரு அருமையான விளக்கத்தைத் தந்தார். அங்கு இருக்கும் பலகையில் நான் என்று ஒரு கோடைப்போட்டார். நான் என்று ஒரு கோடு, இதை மறுத்துவிடு. குறுக்கே ஒரு கோடைப்போட்டார் ‘This is Cross'. இதுதான் சிலுவை’ என்று சொன்னார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இன்றைக்குக் கோடானகோடி மக்கள் அந்தச் சிலுவையை வணங்குகிறார்கள், கவலையைப் போக்குகிறார்கள். எந்தச் சிலுவையில் இயேசு பெருமானின் இரத்தம் வழிந்ததோ, அந்தச் சிலுவையை நெஞ்சில் நினைக்கிறபோது, தங்கள் கவலைகளில் இருந்து விடுபட முடியும் என்று மக்கள் வழிபடுகிறார்களே, அந்தச்சிலுவைக்கு அவர் விளக்கம் தருகிறபோது, ‘நான் என்பதை மறுத்துவிட வேண்டும்’ என்றார். உடனே கூட்டத்தில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் எழுந்து, ‘இது மிகத்தவறான விளக்கம்’ என்றார். உடனே விவேகானந்தர் சொன்னார், “அவர் கிழக்கில் இருந்து வருகிறார். எங்களைச் சேர்ந்தவர். உங்களைவிட எங்களுக்குத் தெரியும்” என்றார்.

இந்த சிவஞான போத சூத்திர விளக்கங்களுக்கு உள்ளே நான் இன்னும் அதிகமாக செல்ல விரும்பவில்லை. தூத்துக்குடியில் இருக்கின்ற சைவ சித்தாந்த சபையின் செயலாளராகிய சுப்பிரமணிய பிள்ளை என்பவர், ஒருநாள் வ.உ.சி. யைச் சந்தித்தார்.

‘சிதம்பரம் பிள்ளை அவர்களே, நீங்கள் சிறந்த வழக்கறிஞர். உங்கள் வாதங்களைக் கேட்க மக்கள் கூடுகிறார்கள். உங்கள் கருத்துகள் மனித மனங்களைக் கவர்கின்றன. நீங்கள் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களையும் விளக்கமாக பிரசங்கம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்காக இந்த சூத்திரங்களைப்பற்றி இன்னும் ஆழமாகப் படித்து, சைவ சித்தாந்த சபையில் போய் வ.உ.சி. அவர்கள் பேசினார்கள். இதை அவரே எழுதுகிறார்.

நான் பேசினேன். அதற்குப்பிறகு அதை மறந்து விட்டேன். ஆனால், அது ஒரு ஞானக் கடல். ஞானம் நிறைந்த நூல் என்று நான் உணர்ந்து கொண்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நான் நெல்லையில் வண்ணாரப்பேட்டை பகுதிக்குச் சென்றேன். டி.கே.சிதம்பர நாத முதலியார் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது இந்த சிவஞான போதத்தைப் பற்றிய ஒரு விவாதம் வந்தது. ஒரு வடமொழிப் பண்டிதர் ஒருவர், டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் இருந்தார். அவரிடம், வடமொழியில் இருக்கக்கூடிய 12 சூத்திரங்களையும் தமிழில் மொழி பெயர்க்கச் சொன்னேன். அந்தப் பண்டிதர்க்கு தமிழும் பாண்டித்யம். வடமொழியும் பாண்டித்யம். அந்த வடமொழிச் சூத்திரங்களை தமிழில் அவர் மொழி பெயர்த்தார். தமிழில் உள்ளதுதான் வடமொழியில் இருக்கிறது. வடமொழியில் இருக்கிறது தமிழில் இருக்கிறது என்பதைவிட, தமிழில் உள்ளதுதான் வடமொழியில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, வ.உ.சி அவர் மனதுக்குள், ‘ தமிழ்தான் மூலம் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது.’ இது என் கருத்து.

ஆனால், அன்றைய காலகட்டத்தில் அதைச் சொல்லாமல், இதில் எது மூலம்? எது அதில் இருந்து வந்தது என்று நான் கருத்துச் சொல்லவிரும்பவில்லை. தமிழில் உள்ளதுதான் வடமொழி சூத்திரத்திலும் இருக்கிறது என்று இந்த சர்ச்சைக்கு உள்ளே போகாமல் கருத்தை வெளியிடுகிறார். மாதவ சிவஞான முனிவர் வடமொழியில் இருந்து சூத்திரங்களின் மொழிபெயர்ப்புதான் இந்த தமிழ் சிவஞான போதம் என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், கா.சு.பிள்ளை அதை ஏற்கவில்லை. மறைமலை அடிகள் அதை ஏற்கவில்லை. சிறந்த தமிழ் அறிஞரான கா.சு.பிள்ளை அவர்களும் - மறைமலை அடிகளும், ‘ இந்த 12 தமிழ் சூத்திரங்கள்தான் மூலம். இதில் வடமொழியில் இது வந்ததல்ல’ என்பதற்கு நிறைய விளக்கங்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இதே கருத்தைத்தான் தமிழ் அறிஞர் சி.சு.மணி அவர்கள், தன் ‘திராவிட மாபாடியம் என்கின்ற நூலில் விளக்கம் தருகிறார். நடுநாட்டில் திருமுனைப்பாடியில் சுவேதனப் பெருமாளாக இருந்த மெய்கண்ட தேவர்,அருமையான சிவஞான போதத்தைத் தந்தாரே அவர் 12 சூத்திரங்கள் தந்து இருக்கிறார். என்ன ஒற்றுமை பாருங்கள்! திருமுறைகளும் 12 தான். ஞானசம்பந்தர் அருளிய திருமுறைகள் - நாவுக்கரசர் அருளிய தேவாரத் திருமுறைகள் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசக திருமுறைகள் - திருமூலர் தந்த திருமந்திரம் - சேக்கிழார் சுவாமிகள் தந்த பெரியபுராணம் - இவை எல்லாமே 12 திருமுறைகளுக்குள் வருவதுதான்.

திருநாவுக்கரசர் இதே கருத்தையே சொல்கிறார்.

ஞானத்தால் தொழுகின்றவர்களைக் கண்டு
ஞானத்தாய் நினை ஞானும் தொழுகிலேனே.

ஞானத்தைத்தான் தொழுகிறேன் என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

ஞானம்தன்னை, நலனை முன்னிறுத்துகின்ற நன்மை என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

ஞானசம்பந்தரும் ஞானத்தையே சொல்கிறார். ஞானத்தால் பேருருவாகக் காட்சி அளிக்கின்ற பெருமான்.

இதையேதான் திருமூலரும், ‘ஞானத்தை நோக்கினும் ஞானத்தைவிடச் சிறந்த அறம் நாட்டிலே இல்லை’ என்கிறார்.

ஞானத்தை விட சிறந்த சமயம் நாட்டிலே இல்லை.

ஞானத்திலே மிக்கார் நரரிலும் மிக்காரே’

ஞானத்தில் மிக்கவர்கள் என்றால் மனிதர்களில் மிக்கவர்கள்.

இது திருமூலர் திருமந்திரத்தில் 1440 ஆவது பாடல். ஆக, இதுதான் மொத்த சாரம்.

சிவஞான போதத்தைத் தந்த வ.உ.சி. அவர்களின் பெருமையைப் பேசுகின்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. இந்த நூலை பதிப்பித்துத் தந்திருக்கின்ற திவான் அவர்களுக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது. நம் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர். பொதிகைத் தென்றல் வீசும் குற்றால மலைக்கு அருகே பிறந்த இந்த மாபெரும் ஆராய்ச்சி அறிவாளர், எத்தனை நூல்களை வெளியே கொண்டுவந்து இருக்கிறார். ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி அவர்கள் இல்லத்தில் அரசுக் குறிப்பில் இருக்கிறது. அந்த நூல்களுள் பல வ.உ.சி. எழுதியவை. அவைகள் அச்சில் ஏறவில்லை, மக்கள் மன்றத்துக்கு வரவில்லை என்கிறார் திவான்.

என்னென்ன நூல்கள்?

முதல் நூலாக, ‘அழகும் ஆரோக்கியமும் - ஆயுளை நீடிக்க வழி - ஆயுளை நீடிக்கும் ஆறு - ஊழை வெல்லும் உபாயம் - சிவமதம் - இது வ.உ.சி. எழுதியது. யாருக்கும் தெரியாது. ‘விக்ஷ்ணு மதம்’ ‘புத்த மதம்’, ‘கிறிஸ்தவமதம்’, ‘இஸ்லாம் மதம்’ வ.உ.சி.எழுதியது. யாருடைய கண்களுக்கும் படவில்லை. அச்சேறவில்லை. எவரும் இன்றைக்குப் படிக்க வாய்ப்பு இல்லை. Universal ..... வ.உ.சி. எழுதியது அச்சேறவில்லை. ‘முக்திபேறு’ ‘திருக்குறளின் பொருட்பால்,’ ‘இன்பத்துப்பால்’ ‘திலக மகரிஷி’ என பல நூல்கள், வ.உ.சி. எழுதியது, எவருக்கும் தெரியாது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது அல்ல. உ.வே.சா. தேடித்திரிந்தாரே தமிழ் இலக்கியங்கள், அதைப்போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்கள் அல்ல. இதோ எழுதியவரின் திருமகன் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார். எழுதிய அந்த மாபெரும் தலைவனின் மகன் வாலேஸ்வரன் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தவும் அவர்கள் இருக்கின்ற மேடையில் பேசுவதும் ஆகும். அரசியல் மேடைகள் ஆயிரம் கிடைக்கலாம். எத்தனையோ மன்றங்களில் நான் பேசலாம் ஆனால், இந்த நாட்டுக்காகவே தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்த தலைவனின் பிள்ளைக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசுவது எனக்குப் பெருமை.

வ.உ.சி. அவர்களின் நூல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அல்ல. உ.வே.சா. தேடித்திரிந்தாரே தமிழ் இலக்கியங்கள், அதைப்போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்கள் அல்ல. இந்த நூல்கள் நூறாண்டுகளைக்கூட கடக்கவில்லையே! வ.உ.சி. மறைந்து எண்பது ஆண்டுகள் கூட முடியவில்லையே? அந்த நூல்கள் என்ன ஆயிற்று? ஏன் பதிப்பிக்கவில்லை? என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? ஒவ்வொரு நூலாகத் தேடிக்கொண்டு வருகிறார் திவான். திருக்குறளின் அறத்துப்பால் மாத்திரம் பதிப்பித்து இருக்கிறார்கள். பொருட்பால் - இன்பத்துப்பால் ஆகியவை கிடைக்கவில்லை. வ.உ.சி. எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு, எழுதிய விளக்க உரையை திவான் தான் பதிப்பித்து வெளியிட்டார்.

இன்றைக்கு என்ன நடக்கும்?

திவான் பதிப்பித்து இலவசமாக வெளியிட வேண்டியது. எழுத்துத் திருடர்கள் சிலர் இருக்கிறார்கள். இப்படிப் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தை எல்லாம் சேகரித்து, ஒரே புத்தகமாகப் போட்டு நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். ராயல்டி எல்லாம் ஒன்றும் கிடையாது. இவர் அதைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. வ.உ.சி.யின் நூல்கள், நாட்டு மக்கள் மத்தியில் வந்தால் நல்லது என்று நினைக்கிறார் திவான்.

வ.உ.சி. எழுதிய அழகும் ஆரோக்கியமும் என்ற புத்தகத்தைக் கண்டுபிடிப்பதற்கு இவர் அலைகிறார், அலைகிறார். திவானுடைய வீட்டிலேயே ஐம்பது ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. நூலகங்களில் இல்லாத அரிய நூல்கள் கூட திவானின் நூலகத்தில் இருக்கின்றன. அவர் ஒரு நடமாடும் கணினி. கருத்துக் களஞ்சியம். பத்து நிமிடங்களுக்குள் இருபது பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூடிய ஆற்றல் இவருக்கு இருக்கிறது. நான் பல ஆண்டுகளாகப் பார்த்து இருக்கிறேன்.

ஒருநாள் தெற்குக்கடை பஜாரில் அவருக்கு வேண்டிய நண்பர் அருணாசலத்தின் பழைய புத்தகக் கடையில் போய் உட்கார்ந்து இருக்கிறார் திவான். அப்போது அவரது கண்ணில்படுகிறது உத்தம பாளையத்தில் இருந்து 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ‘பாரதி’ என்கின்ற மாத இதழ். அதைப் புரட்டுகிறார். அந்தப் பத்திரிகையில் இவருக்கு ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதில் வ.உ.சி. எழுதிய, ‘அழகும் ஆரோக்கியமும்’ என்கின்ற மூன்று பகுதி, பாரதி ஏட்டில் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவருக்கு மகிழ்ச்சி. மேலும் தேடுகிறார். இரண்டாவது பகுதியும் மூன்றாவது பகுதியும் அவருக்குக் கிடைக்கிறது. முதல் பகுதி கிடைக்கவில்லை.

இவரது நண்பர் முகமது அலியின் மூலமாக முயற்சிக்கிறார். உத்தமபாளையத்தில், முகமது இஸ்மாயில் என்பவரது வீட்டில், பாரதி இதழ்கள் பைண்ட் வால்யூம்களாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இவர் உத்தமபாளையத்துக்குச் செல்கிறார். முதலில் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அங்கே சென்று அவரது இல்லத்தில் இருக்கின்ற நூலகத்தில் தேடிப் பார்த்தால், குறிப்பு இருக்கிறதே தவிர, அந்த வால்யூம்கள் அங்கே இல்லை.

ஏமாற்றம் அடைந்து, பல இடங்களில் தேடித்திரிகிறார். எங்கும் கிடைக்கவில்லை. சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய அரசு ஆவணக் காப்பகத்துக்குச் சென்று, பழைய இதழ்கள் எல்லாவற்றையும் புரட்டுகிறார். பாரதி இதழ்கள் அங்கு இருக்கின்றன. எல்லா இதழ்களையும் பார்க்கிறார். வரிசையாகப் பார்த்துக் கொண்டே வருகிறார் அந்த முதல் பகுதி இல்லை. பாரதி இதழ் முழுவதும் பார்த்து முடித்தாயிற்று. இன்னும் ஒரே ஒரு இதழ் பாக்கி.

அவர் நினைக்கிறார். இறைவனே அந்தக் கடைசி இதழ் எங்கே இருக்கிறது? அந்த முதல் பகுதி இருக்க நீ அருள் செய்ய மாட்டாயா? என்று எண்ணிக்கொண்டே அந்த இதழைப் புரட்டியதாகவும், அதில் அந்த முதல் பகுதி இருந்ததாகவும், தன் வாழ்நாளிலேயே என்றும் ஏற்படாத மகிழ்ச்சியை தான் பெற்றதாகவும் அவர் எழுதுகிறார். எவ்வளவு சிரமங்களைத் தாங்கி இருக்கிறார்? அழகும் ஆரோக்கியமும் வெளியிடப்பட்டு விட்டது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நூல்கள் எல்லாம் வ.உ.சி. எழுதியவை. பதிப்புக்கு வரவில்லை. அவர் எழுதிய அற்புதமான கருத்துகள் வெளியே வரவில்லை.
இந்தப் பிரச்சனையில் என்ன தீர்வு? எப்படி இந்த நூல்களைக் கண்டுபிடிப்பது? தமிழர்களுடைய சொத்துகளை தமிழர்களே அறிவது கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தந்த இலக்கியங்கள், உ.வே.சாமிநாதஅய்யர் இல்லாவிட்டால் கிடையாது. நம்முடைய சொத்துகளை நாம் பாதுகாத்துக் கொள்ள மறந்துவிட்டோம். எந்த ஒரு இனம், எந்த ஒரு நாடு தியாகத்தை மதிக்கிறதோ அந்த நாடுதான் வாழும். எந்த ஒரு சமுதாயம் தன்னுடைய பூர்வீகக் கலையை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை, தங்கள் சொத்துகள் எனப் பாதுகாக்கிறதோ அந்த இனம்தான் வாழும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சுவடிகள் பல இன்றைக்கு நம்மிடம் இல்லை. குமரிக் கடல் பொங்கி அழித்துக் கொண்டுபோனது வேறு. கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்த லெமூரியாக் கண்டத்திலே தமிழகம் அழிந்தது வேறு. கடல்கோளால் கபாடபுரம் அழிந்தது. அதிலே எத்தனையோ நூல்கள் அழிந்து போய் இருக்கும். மண்ணுக்கு இரையாகக் கொடுக்கப்பட்ட நூல்கள் எத்தனை?

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் இங்கு திருநெல்வேலிக்கு வந்தார். பொருநராற்றுப் படையும், திருமுருகாற்றுப்படையும், திருநெல்வேலி தெற்குப்புதூர் தெருவில் இருக்கின்ற வீடுகளில்தான் கிடைத்தது. இந்தத் திருநெல்வேலிச் சீமை, வீரத்தை மட்டும் அல்ல, தமிழ் இலக்கியத்தை வளர்த்த சீமை. ஆகவேதான் இங்கே அவர் தேடினார். ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்கு உள்ள ஒரு தமிழ் அன்பர் வீட்டில்தான் பத்துப்பாட்டில் முல்லைப் பாட்டு கிடைத்தது.

அதைப்பற்றிச் சொல்கிறார். கையில் ஏடுகிடைத்தது. அன்றைக்கு முழு நிலவு நாள். நிலவின் வெளிச்சத்தில் அதைப் பார்த்தேன். முல்லைப் பாட்டு என்று கண்டேன். மகிழ்ச்சியால் என் மனம் துள்ளியது. உ.வே.சா. எழுதுகிறார். கலைமகள் இதழில், ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ்த்தாத்தா உ.வே.சா. இல்லாவிடில் சிலப்பதிகாரம் இல்லை. புறநாநூறு இல்லை. அகநாநூறு இல்லை. திருமுருகாற்றுப் படை இல்லை. பொருநராற்றுப்படை இல்லை. பத்துப்பாட்டு இல்லை. முல்லைப் பாட்டு இல்லை. அவர் தந்த அருட்கொடைதான் இந்த நூல்கள்.

வரகுண பாண்டியன் புகழ் சொல்கின்ற ஆலயம் கட்டப்பட்டு இருக்கின்ற கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்றார். வரகுண பாண்டியன் காலத்து ஏடுகள் அங்கே இருப்பதாக அறிந்து கேட்டார். அங்கு சொன்னார்கள். ‘சில நாள்களுக்கு முன்னர்தான் பெரிய குழியை வெட்டி, அக்னி வளர்த்து அந்த நெருப்புக்கு இரையாக்கி விட்டோம்’ என்றார்கள். அற்புதமான ஏடுகளை, கருவூலங்களை இப்படி அக்னிக்கு இரையாக்கி விட்டார்களே கரிவலம் வந்த நல்லூரில். இந்தத் தமிழகம் வாழுமா? இந்தத் தமிழகத்தை வாழ வைக்க முடியுமா? என்று மனம்கலங்கி அழுது கொண்டே அவர் எழுதி இருக்கிறார்.

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா செய்த பணியை, இன்றைக்கு திவான் செய்து கொண்டு இருக்கிறார். சாகித்ய அகாடெமி போன்ற விருதுகளுக்கு அவர் தகுதி உடையவரா என்றால் ஆம், என்பேன். இவருக்குக் கொடுத்தால் அந்த விருதுக்குத் தகுதி என்று கருதுகிறவன் நான். 70 புத்தகங்களுக்கு மேல் அவர் தந்து இருக்கிறார். என்ன அருமையான ஆராய்ச்சி! அவர் எம்.பில். பட்டம் பெற்றதேகூட. ஆக்ஷ் கொலைவழக்கை ஆய்வு செய்ததை வைத்துத்தான் பரிசு பெற்றார், விருதுபெற்றார்.

செக்கு இழுத்த செம்மல் சிதம்பரம் பிள்ளை இந்த ம.தி.தா. இந்து பள்ளியில்தான் படித்தார். முண்டாசுக் கவிஞன் பாரதி இங்கேதான் படித்தார். அந்த நாள்களை நான் எண்ணிப் பார்க்கிறேன். வ.உ.சி. தொழிலாளர்களுக்காகப் போராடினார். கோரல் மில்லில் அவர் நடத்திய போராட்டம். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உணவு படைக்க தன் சொத்துகளைத் தந்தார். இந்தியாவிலேயே தொழிலாளர்களைத் திரட்டிப் போராட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தலைவர் அந்தக் காலகட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.யைத்தவிர வேறு யாரும் கிடையாது.
அப்படிப்பட்ட வ.உ.சி., எந்த நாளைத் தேர்ந்து எடுக்கிறார் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்குவதற்கு?

நமது மூதாதையர்கள் கடலில் கப்பலைச் செலுத்தினார்கள். வெள்ளைக்காரனுக்குக் கப்பம் கட்டிக் கிடப்பதா இந்த நாடு? நாம் மரக்கலம் செலுத்துவோம் என்று சுதேசிக் கம்பெனியைத் தொடங்கிய நாள் என்ன தெரியுமா? அக்டோபர் 16. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட நாள். மராட்டியத்துக்குச் சென்று, ‘சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமை’ என்று முழங்கிய திலகரைச் சந்தித்துத் திரும்பிய கப்பல் ஓட்டிய தமிழன், 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். வங்காளி தொடங்கவில்லை. பஞ்சாபியன் தொடங்கவில்லை. ஒரியக்காரன் தொடங்கவில்லை. மராட்டியர்கள் தொடங்கவில்லை. ஒரு தமிழன் தொடங்கினான். தெற்குச்சீமையில் வாழ்ந்த ஒட்டப்பிடாரத்து சிதம்பரம் தொடங்கினான். கப்பல் கம்பெனியைத் தொடங்கியதற்குப்பிறகு அவரது பெயரும், புகழும், அவரது வீர உரைகளும் பரவியது. அந்தக் காலகட்டத்தில் சுப்பிரமணிய சிவாவோடு சேர்ந்து விடுதலைக் கிளர்ச்சிக்காக அவர் ஆற்றிய உரைகள் வீர உரைகள்.

1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றார். இருதரப்பிலும் நாற்காலிகள் பறந்தன. அப்போதே நாற்காலிகள் பறந்திருக்கின்றன (பலத்த கைதட்டல்). இன்றைக்கும் அந்த மரபுகளை அப்படியே கொண்டு வருகின்றனர். இதை நான் சொல்லவில்லை, சரித்திரம். அந்த சரித்திரத்தில். திலகர் பக்கம் - தீவிரவாதிகள் பக்கம் நிற்கிறார் வ.உ.சி.

இதே நெல்லையில் தேசாபிமானிகள் சங்கத்தை அதற்கு அடுத்த வருடத்தில் தொடங்குகிறார். 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் எழுப்புகின்ற கிளர்ச்சி உணர்ச்சி 7, 8, 9 தேதிகளில் பரவுகிறது. 12 ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். குதிரை வண்டியில் விலங்குபோட்டு கொண்டுபோனார்கள். சாலை ஓரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து வந்து இருந்த நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்த்தார். துப்பாக்கி பிடித்த போலிசுக்குப் பக்கத்தில், வண்டியில் இருந்தவாறு வ.உ.சி. பலத்த குரல் கொடுத்து, ‘ பிரம்மச்சாரி இங்கேயே இருங்கள். போய்விடாதீர்கள்’ என்கிறார்.

அதற்குப்பிறகு வ.உ.சிக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப் படுகிறார். வ.உ.சி. கைது செய்யப்பட்டபோது ஆக்டிங் கலெக்டராக இருந்தவன் தூத்துக்குடியில் துணை கலெக்டராக இருந்த ஆக்ஷ். இங்கே திருநெல்வேலியில் போராட்டம் வெடித்தது. வெள்ளைக்காரன் துப்பாக்கிக்குப் பயப்படாதவர்கள் என்பதை நெற்கட்டான் செவலிலும், பாஞ்சாலங்குறிச்சியிலும் நிரூபித்த மண் அல்லவா? பீரங்கிகளுக்கே பயப்படாதவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட வீரர்கள், பிரிட்டிக்ஷ்காரன் லத்திக் கம்புகளுக்கும், துப்பாக்கி களுக்கும் பயப்படாமல் மறுநாள் போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒரு தலித் இளைஞர், ஒரு இஸ்லாமிய இளைஞர் உட்பட நான்கு பேர். எண்ணற்றவர்கள் படுகாயமுற்றார்கள். அந்த உணர்ச்சி இன்று எங்கே?

பஞ்சாப்பில் இன்றைக்கு முதல்வராக இருக்கின்ற மாட்சிமை தங்கிய பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து, என்மீது அளவற்ற அன்பைக் கொண்டவர். சமீபத்தில்கூட ஒரு மாதத்துக்கு முன்னர் அவருடைய வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு வந்தேன். அவர் ஒரு முறை பகத்சிங்கின் பிறந்த நாளில் அவருடைய ஊருக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார். நானும், அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்த கண்ணப்பன் அவர்களும், சென்று இருந்தோம். அவர் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந்ததால் சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தருகின்ற திட்டத்தை பகத்சிங் பிறந்த ஊருக்குத் தருகின்ற திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் போயிருந்தோம். முதல்வர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்கள் என்னையும் அழைத்து இருந்தார்கள். நான் சென்று இருந்தேன்.

அங்கிருந்து இந்திய எல்லை பாகிஸ்தான் எல்லை இரண்டு நாடுகளும் சந்திக்கின்ற எல்லையில் பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவாலயம் இருக்கிறது. அங்கே போவோம் என்றார்கள். லாகூர் சிறைக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அவர்களைத் தூக்கில் போட்டு, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒருவருக்கும் தெரியாமல் கொண்டுவந்து நதிக்கரையில் தீ வைத்தார்கள் பிரிட்டிக்ஷ்காரர்கள்.

அவர்களது சாம்பலைக் கொண்டுவந்து நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். பகத் சிங்கின் தாயாரின் கல்லறையும் அங்கே இருக்கிறது. அந்த இடத்துக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார்கள். அன்புக்கு உரியவர்களே, அப்படி ஒரு காட்சியை நான் இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பார்த்து இருக்கிறேன்.

கிட்டத்தட்ட 200 கி.மீட்டர் நான் பயணம் செய்தேன். இலட்சக்கணக்கான மக்கள் அந்த நினைவாலயத்தை நோக்கி வந்துகொண்டேஇருக்கிறார்கள். ஆணும், பெண்ணும், வாலிபர்களும், வயோதிகர்களும், கூட்டம் கூட்டமாக எனக்குத் தெரிய தேசத்துக்கு பாடுபட்ட உயிர்நீத்த தியாகியை, இந்த அளவுக்கு இந்தியாவில் வேறு எந்தப் பகுதி மக்களும் மதிப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுவல்லவா உணர்ச்சி! அந்த நிகழ்ச்சியில் என்னை அறிமுகப்படுத்திவைத்து பேசச் சொன்னார். அப்போது பேசும்போது ஒன்றைச் சொன்னேன்.

நான் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலான் என்ற ஊருக்கு இன்றைக்குக் காலையில் சென்று இருந்தேன். அந்த வீரமிக்க மண்ணைத் தொடுகிற பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன் என்று சொல்லிவிட்டு அந்த மண்ணை நான் எடுத்து வந்து இருந்தேன். அந்த மண்ணை எடுத்துக்காட்டி உயர்த்திக் காண்பித்து முத்தமிட்டு வணங்கிவிட்டு நான் பேசினேன். இங்கும் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை நெற்றியில் பூசினால் பிள்ளைக்கு வீரம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கை இந்த நாட்டு மக்களிடத்தில் இருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிக்கு, அங்கே கொடுக்கப்பட்ட வேலையின் காரணமாக உள்ளங்கை கிழிந்து பார்ப்பதற்குக் கொப்புளம் கொப்புளமாக கக்ஷ்டப்படுகிற நேரத்தில், அந்தச் சிறை அதிகாரி அதற்கு மேலும் கொளுத்துகின்ற வெயிலில், அவருடைய முதுகில் மாட்டைக் கட்டுவதைப்போல கயிறு கட்டி அவருடைய தோளிலும் முதுகிலும் கயிற்றினைக்கட்டி செக்கு இழுக்கச் சொன்னார்கள். அவர் செக்கு இழுத்தார்.

சிறைவாசிகள் வீரசிதம்பரத்துக்காக போராடுகிறார்கள். கலவரம் நடக்கிறது. அதில் ஒருவன் கொல்லப்படுகிறான். இந்த வீரஉணர்ச்சி பொங்கி எழுகிறது அல்லவா? ‘கண்டேன் காட்சியை கொண்டேன் உவகையை’ என்று வ.உ.சி. எழுதுகிறார். அங்கிருந்து கண்ணனூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். இதெல்லாம் அவரது சுயசரிதையில் அவர் எழுதியது.அவருடைய கவிதை

ஓர் இரவினிலே ஆறு இருமணிக்கு என் அரங்கினுள் யான் நன்கு உறங்குங்கால் அவன் செறிந்து மிஸ்டர் சிதம்பரம்பிள்ளை என்று உரைத்த சப்தம் ஒன்று அநேகதடவை விழித்துப் பார்த்தேன். அரங்குமுன் ஜூனியர் அசிஸ்டண்ட் சர்ஜன் நின்று செளக்கியம் உசாலி கலெக்டர் ஆஸ் தெரியுமா என்றான். தெரியும் என்றேன். எப்படி என்றான். யான் இவண் ஏகியதற்கும் தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி செத்தொழிந்ததற்கும் அவனே காரணம் என்றேன். நேற்று மணியாச்சி ஜங்கஷனில் அவனை ஒருவன் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான் என்றான்.

நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய் என்றேன். இவ்வாண்டு காரனேசனில் உனக்கு விடுதலை இல்லை என்றான். விடுதலை என்றும் இல்லை எனினும் நன்றே என்றேன்.

கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்றானே வீரன் வாஞ்சிநாதன். இதோ இங்கே இருக்கின்ற ரயில்வே ஸ்டேஷனில் இருந்துதான் புறப்பட்டுப் போனான். இங்கெல்லாம் வந்து இருப்பான். இந்த மண் வீரம் செறிந்த மண். இங்கிருந்து மணியாச்சி டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் இரயிலில் போயிருக்கிறான். அவன் வைத்து இருந்த கைத் துப்பாக்கியில் இரண்டு குண்டுதான் வைத்து இருந்தான். எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். ஆறு குண்டு போடுகின்ற டய ரிவால்வரில் இரண்டு குண்டுதான் போட்டு இருந்தான்.

அண்ணா எழுதிய ‘இரும்பாரம்’ என்ற நூலை நான் படித்து இருக்கிறேன். வில்லியம் டெல் என்கின்ற மாவீரன், தன் அம்புறாத் தூளியில் இரண்டு அம்புகள்தான் வைத்து இருந்தான். அவனுடைய மகனின் தலைமீது ஆப்பிள் பழத்தை வைத்து அந்த நாட்டின் சர்வாதிகாரி கெஸ்லர் சொல்கிறான். ‘நீ புரட்சி செய்வதற்குத் திட்டமிடுகிறாய். உன் ஒரே மகன் பத்துவயது பாலகனை எதிரே நிறுத்தி வைத்து இருக்கிறோம். அவன் தலைமீது ஒரு ஆப்பிள்பழம். நீ அம்பு எய்து அந்த ஆப்பிள் பழத்தைப் பிளக்க வேண்டும். அம்பு தவறினால் உன் மகன் உயிரைக் குடிக்கும்’ என்று இராணுவ சர்வாதிகாரி கட்டளை இடுகிறான்.

வில்லியம் டெல் அம்பைத் தொடுத்தான். நூறு கெஜ தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவன் மகனை நோக்கி அம்பு பாய்ந்து சென்றது. ஆப்பிள் பழம் இரண்டாகப் பிளந்தது. கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது.

சர்வாதிகாரி கேட்டான். வில்லியம் டெல், உன்னை அம்பைத் தொடுக்கச் சொன்னேன். உன் அம்புறாத் தூளியில் இரண்டாவது அம்பை எதற்காக வைத்து இருக்கிறாய்? என்று கேட்டார். அவன் சொன்னான், ‘முதல் அம்பு என் மகன் தலைமீது வைத்த ஆப்பிளுக்குக் குறி வைக்க. குறி தவறினால் அடுத்த அம்பு உன் மார்பைத் துளைக்க’ என்று சொன்னான்.

அவன் கைது செய்யப்பட்டு கைவிலங்கு பூட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டான். புயல் வீசியது. கப்பல் கவிழ்ந்துவிடும் நிலையில், இவனுடைய விலங்குகளையும் அகற்றினார்கள். கப்பலைச் செலுத்தச் சொன்னார்கள். கப்பலைச் செலுத்தி கரையும் சேர்த்தான். புரட்சியை நடத்தினான்.

அதுபோலத்தான், வாஞ்சிநாதன் ஆறு குண்டு போடவில்லை. இரண்டே குண்டுதான் இருந்தது அவன் துப்பாக்கியில். பதட்டம் இல்லாமல் குறிபார்த்து சுடுகிறபோது ஒரு குண்டில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவன் சென்றான். அதே இரயிலில்தான் ஆக்டிங் கலெக்டர் ஆக்ஷ் போகிறான். அவனுடைய சீமாட்டியும் உடன் வருகிறாள். மணியாச்சி ஜங்ஷனில் இரயில் நிற்கிறது. இதில் ஒரு குறிப்பைச் சொல்கிறேன். பாஞ்சாலங்குறிச்சி வம்சாவளியைச் சேர்ந்த ஜமீன்தார் குடும்பத்தினர் அதே ஸ்டேஷனில் வந்து இருக்கிறார்கள். என்ன அடிப்படை? இது முன்கூட்டியே தெரியுமா? எனக்குத் தெரியாது.

அவர்களும் முன்னும் பின்னும் அந்த பிளாட்பாரத்தில் கம்பீரமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவன் முன்னும் பின்னும் சற்று நடந்துவிட்டு, பெட்டியில் ஏறுகிறான் ஒரே குண்டுதான் பயன்படுத்தினான். ஆக்ஷ் மார்பைத் துளைத்தது. இறங்கி ஓடுகிறான். தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு எடுக்கிறான். அங்கே இருக்கின்ற கழிப்பறையை நோக்கிப் போகிறான். பெண்கள் கழிப்பறை என்று போட்டு இருக்கிறது. உள்ளே போக கதவு வரை சென்றவன், பெண்கள் கழிப்பறை என்றவுடன் வெளியே வருகிறான். உயிர் பிரியப் போகிற நேரத்தில்கூட அவன் காத்தப் பண்பாட்டைப் பாருங்கள். அடுத்து ஆண்கள் கழிப்பறைக்குச் சென்று, உயிர் பிழைத்துவிடக் கூடாது என்று வாய்க்கு உள்ளே கைத்துப்பாக்கியை வைத்துச் சுட்டான். அவன் உயிர் பிரிந்தது.

இந்தக் காலகட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும், இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்கும் சிறையிலே இருந்த சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன் சொத்தை விற்று இராஜபாளையத்தில் இருந்த சுப்பையா முதலியார் என்பவர் மூலம் பாண்டிச்சேரிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அங்கு ஒட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளையைச் சந்திக்கிறார். அன்றைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் இன்றைக்கு பத்து இலட்சம். அதைவிட அதிகம்.

சிறையில் இருந்தவாறே தகவல் கொடுத்து, ஆயிரம் ரூபாய் பணம் ஏற்பாடு செய்து இந்தப் பணத்தை வழக்கு சம்பந்தப்பட்டவரிடத்தில் பாண்டிச்சேரியில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஒன்றல்ல பல ஆதாரங்கள் இருக்கின்றன.

நன்றி மறக்காதவர் சிதம்பரம் பிள்ளை. அவர் தன் மூத்த மகனுக்கு தன் தந்தையின் பெயரான உலகநாதன் என்று பெயர் சூட்டினார். அவர் அதிக நாள் வாழவில்லை. சிறிய வயதிலேயே மறைந்து விட்டார். அடுத்த மகனுக்கு ஆறுமுகம் என்று பெயர் சூட்டினார். காரணம். தூத்துக்குடியில் கப்பல் கம்பெனியைத் தொடங்குகின்ற காலத்தில் ஆறுமுகம் பிள்ளை என்பவர் பேருதவி செய்தவர். பல பேர் விதித்த தடைகளை எதிர்த்து இடையூறுகளை அகற்றுவதற்கு உதவி செய்தவர் பெயரை ஆறுமுகம் என்ற பெயரை தனது இன்னொரு மகனுக்கு வைத்தார்.

மற்றொரு மகனுக்கு திவான் போய் சந்தித்தாரே, வ.உ.சி. சுப்பிரமணியன் என்ற பெயரை வாலேஸ்வரனின் அண்ணனை, அவர் சொன்னார் அல்லவா? அப்பாவின் நூல்கள் எங்கே கிடைக்குமோ முயற்சித்துப் பாருங்கள் என்று சொன்னதாக எழுதி இருக்கிறாரே. அந்த சுப்பிரமணியன் என்ற பெயரை ஏன் வைத்தார் தெரியுமா? இவர் கோயம்புத்தூர் சிறையில் இருந்த போது பெரியபுராண நூலுக்கு பதவுரை போட்டு வெளியிட்டாரே, சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவர்தான் வ.உ.சி. அவர்களுக்குப் பேருதவி செய்தவர். வ.உ.சி.யின் துணைவியார் வருகிறபோது, அவரை சிறைக்கு அழைத்துப்போவது, இண்டர்வியூவுக்கு அழைத்துப்போவது, வழக்கு சம்பந்தமாக பல்வேறு விதங்களில் உதவுவது என எல்லாவற்றையும் செய்த அந்த சுப்பிரமணிய முதலியாருக்கு நன்றி தெரிவிக்கத்தான் தன் பிள்ளைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தார்.

அதன்பிறகு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் 11 மாதம் 12 நாட்கள் சிறையில் கழித்து விட்டு வெளியே வந்தபிறகு அரிசி விற்றார், நெய் விற்றார். எல்லா சொத்துகளையும் விற்றாயிற்று. வறுமை கக்ஷ்டம். மீண்டும் வக்கீல் தொழில் செய்வதற்கு சன்னத் யார் தந்தார்? ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரன் வாலேஸ் என்பவன் தந்தான். அந்த நன்றியை மறக்காமல்தான் தனக்கு சன்னத் தந்த நீதிபதியின் பெயரை வைத்துத்தான் ‘வாலேஸ்வரன்’ என்று இவர்களுக்குப் பெயர் சூட்டினார்.

அவருடைய மகள்களுக்கு ஆனந்த வல்லி, மரகதவல்லி, வேத வல்லி, ஞான வல்லி என்று பெயர்கள் சூட்டினார். வேதவல்லி என ஏன் பெயர் வைத்தார்? தென் ஆப்பிரிக்காவில் வேதியப்பப் பிள்ளை என்று நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெரும் தீரர். அந்தக் காலத்தில் வ.உ.சி. படுகிற கக்ஷ்டங்களை கேள்விப்பட்டு அவர் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார். அது வ.உ.சி. க்கு வந்து சேரவேயில்லை. பிறகு ஒரு கட்டத்தில் வட்டிப்போட்டுத் தருகிறேன் என்றார். வேண்டாம் என்று விட்டார். தேவைப்பட்ட காலத்தில் பணம் வரவில்லை, கப்பல் கம்பெனியைத் தொடங்கி இவ்வளவு கக்ஷ்டப்பட்டு இவ்வளவு போராடிய இந்தப் பெருமகனுக்கு.

எந்தக் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரவாதியாக இருந்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடினாரோ அந்த இயக்கம் அவரை மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைவிட்டு அவர் வெளியேறினார். 1927 ஆம் ஆண்டு அவர் சேலத்துக்குச் சென்றார். சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாட்டில் பெரியார் கலந்து கொள்கின்ற அந்த மாநாட்டில் வ.உ.சி. கலந்து கொள்கிறார். அவர்தான் மாநாட்டுத் தலைவர்.

அந்த மாநாட்டில் பேச்சை எப்படித் தொடங்குகிறார் தெரியுமா? ‘நான் தேசாபிமானம் அற்றவன் என்றும் தேசபக்தி இல்லாதவன் என்றும் சிலர் புண்மொழி கூறியதையும், நாட்டில் சாத்வீகப் போராட்டம் நடத்தி, விடுதலை சுதந்திரம் கிடைக்க தேச அரசாட்சிக்குப் பலர் போராடும்போது, நீங்கள் பயந்து அச்சப்பட்டு பின்வாங்கி ஓடி விட்டீர்களே என்று ஒரு பாரிஸ்டர் என்னைப் பார்த்துப் புண்மொழி கூறியதையும், அதை எல்லாவற்றையும்விட பிரிட்டிக்ஷ் அரசிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு நான் தேசத் துரோகத்தில் ஈடுபடுகிறேன் என்று ஒருபத்திரிகை எழுதியதையும் நான் மறக்க முடியுமா?’ என்று சேலத்தில் பேசுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் நாட்டுக்காகவே தன்னைத்தந்த உத்தமனைக்கூட களங்கம் சுமத்துவதற்கு சிலபேர் இருந்திருக்கிறார்களே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். அவரது உள்ளம் எவ்வளவு சுக்கல் சுக்கலாக வெடித்து இருக்கும்?

அடுத்த ஆண்டு நாகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அங்கே இருக்கின்ற தேசபந்து சமாஜத்தின் ஏழாவது ஆண்டு விழா. அதற்குத் தலைவர் யார்? நமது வ.உ.சி. அவர் கலந்து கொள்ளும் அந்த விழாவை, பெரியாரின் குடியரசுப் பத்திரிகை வெளியிடுகிறது “சுயமரியாதை வீரர்களுக்கு ஆடம்பர வரவேற்பு வ.உ. சிதம்பரம் பிள்ளை அக்ராசனம்’’ என்று படம் போட்டு வெளியிட்டது.

வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை. பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங்கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர்தானே?

1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடியரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது. அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென்றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத்தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.

இவ்வளவு தியாகம் செய்தாரே! நாட்டுக்காகப் போராடினாரே! அப்படிப்பட்ட தீரர் எழுதிக் குவித்தவை, இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடி அவர் செய்திருக்கிற மகத்தான தியாகம் இதை மதிக்க வேண்டும் நாம் உணர்வுகள் பெறுவதற்கு.

சிவஞான போதத்தில் இவர் என்ன விளக்க உரை எழுதுகிறார் தெரியுமா? அவர் சொல்கிறார். மற்ற உரைகளில் இருந்து என் உரை மாறுபட்டது. மற்ற உரைகளில் பிற சமயங்களைக் குறித்த கண்டனம் இருக்கிறது. அவருடைய குறிப்பு அதுதான். பிற சமயங்களைப்பற்றி எந்த விமர்சனமும் செய்ய அவர் விரும்பவில்லை. பொய்யான உயர்வு தாழ்வு பற்றி நான் பேச விரும்பவில்லை. வேறு எந்த மதத்தைப்பற்றியும் விமர்சிக்கத் தயாராக இல்லை என்கிறார்.

நான் பேசுவது 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள். அவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, 1935 ஆம் ஆண்டில் சொல்கிறார். ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வேற்றுமைகளை ஏற்படுத்துகிறவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேச பக்திக்கு தீங்கு செய்கின்றவர்கள் என்று அவர் எழுதுகிறார்.அதைவிட இந்தக் காலகட்டத்தில் பகை உணர்ச்சியும் வேற்றுமை உணர்ச்சியும் வளர்க்கப்பட்டு அப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நூலை வெளியிடும் போது இந்தக் கருத்தை வெளியிடுகிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்களை அவர் சகோதரர்களாகப் பாவித்தவர். விருதுநகரைச் சேர்ந்த இராமையா தேசிகர் என்பவர் ஒரு தலித். கண் பார்வை இல்லாதவர். அவரை வீட்டிலே வைத்து உணவு அருந்தச்சொல்லி வள்ளியம்மையே உணவு ஊட்டுகிறார். ஒரு தலித் இனத்தைச் சேர்ந்தவரை தன் வீட்டிலேயே வைத்துப் பராமரித்து அரவணைத்துக் கொள்கிற இயல்பு வ.உ.சி. க்கு இருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வு இருந்தது. தன் மனைவி வள்ளியம்மையைப்பற்றியும் வ.உ.சி. நூல் எழுதி இருக்கிறார்.

அவருடைய உணர்வு எப்படிப்பட்டது? காரைக்குடிக்குப் போகிறார் ஜீவாவின் ஆசிரமத்துக்கு. அங்கு ராட்டைகளாக இருக்கிறது. அப்பொழுது ஜீவா கொஞ்சம் அகிம்சாவாதி. தீவிர கம்யூனிசத்துக்கு வரவில்லை. வ.உ.சி. ஜீவாவிடம் கேட்கிறார். இதெல்லாம் என்ன? இதுதான் ராட்டைகள், நூற்பதற்கு என்கிறார். வாள் ஏந்த வேண்டிய கைகளில் கொண்டுபோய் ராட்டைகளைக் கொடுத்து இருக்கிறீர்கள்? என்று இவர் சொல்கிறார். - ஆதாரம் இல்லாமல் நான் பேச மாட்டேன்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் கூட்டம். காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் வரதராஜுலு நாயுடு வந்து இருக்கிறார். அந்தக் கூட்டத்துக்கு இவர் பார்வையாளராகப் போகிறார். அந்தக் கூட்டத்தில் ஒருவர் பேசுகிறார். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கதர் சட்டைப் போடாமல் வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது என்று பேசி விடுகிறார். எதிரே உட்கார்ந்து இருக்கிறார் சிதம்பரம் பிள்ளை. ஆவேசப் பிழம்பு அல்லவா? மேடை ஏறுகிறார். நான் அணிந்து இருப்பது கதர் அல்ல. கைத்தறி. ‘நான் காந்தியின் கதர் தொண்டன் சிதம்பரம் பிள்ளை அல்ல, நான் சுதேசி சிதம்பரம் பிள்ளை’ என்றார்.

அவர் திருக்குறளுக்கு அறத்துப்பால் வெளியிட்டார் அல்லவா? முழுக்க முழுக்க அந்தத் தாள் அனைத்தும் இந்த மண்ணில் உற்பத்தியான பொருட்களில் செய்தது. இந்த உணர்வு அவருடைய ஊனோடும் உதிரத்தோடும் கலந்தது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர், இந்த மண்ணுக்குப் பெருமை தேடிக்கொடுத்த தலைவர், நாட்டின் விடுதலைக்குப் போராடிய தலைவரின் குடும்பத்தினர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

இங்கே வந்து இருக்கின்ற வாலேஸ்வரன் அவர்களைப் பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். பொன்னும் பொருளும் நிலையல்ல. மாடமாளிகைகள் நிலையல்ல. இந்த மண் இருக்கின்றவரை உங்கள் தந்தையின் புகழ் இருக்கும். இந்த பூமி இருக்கின்ற வரை அவரது தியாகம் இருக்கும்.

தியாகிகளின் உன்னதமான தியாகத்தில்தான் இந்த நாடு வாழுகிறது. அந்தத் தியாகத்தை நான் மதிக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு உணர்ச்சியும், எங்களுக்குச் சோதனைகள் சூழ்கிறபோது நெஞ்சில் உறுதியும் ஏற்படுவதற்குக் காரணம் இப்படிப்பட்ட தீரர்களை நினைக்கிற போதுதான். அவருக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்றார் குட்டி அவர்கள். எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த அந்தத் தலைவனுக்கு சிலை எழுப்பும் நிகழ்ச்சிக்கு நீங்கள் எடுக்கின்ற எல்லா முயற்சிக்கும், எளியவன் எந்த விதத்தில் உதவ வேண்டுமோ எல்லா உதவியும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

கட்சி, ஜாதி, மதஎல்லைகளைக் கடந்து ஒளிவீசும்நட்சத்திரமாக என்றைக்கும் திகழ்கிற வீரசிதம்பரம் பிள்ளையின் புகழ் வாழ்க!

வளர்க திவானின் எழுத்துப் பணிகள்! வெல்க அவரது முயற்சிகள்.

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)