வைகோ உரை பகத்சிங் நூற்றாண்டு விழா 07.10.2008
விவகாரங்கள்: மனித உரிமை, இலக்கியம், தேசிய, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: என்றும் இனியவை, சொற்பொழிவுகள்
வைகோ உரை
பகத்சிங் நூற்றாண்டு விழா
07.10.2008
கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆருயிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக்கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, இந்த அக்டோபர் 7 ஆம் தேதியை நாங்கள் தேர்ந்து எடுத்தோம்.
இந்த அக்டோபர் 7 கடந்த ஆண்டில் நூற்றாண்டு விழா தொடக்கம் நடத்தப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறுகிற இடம், மண்டபம், நேரம், கலந்து கொள்பவர்களின் பட்டியல் என எல்லாம் அறிவிக்கப்பட்டு, ஏடுகளில் செய்தி வந்து, மகானுபாவர் கலந்து கொள்கிற நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு மண்டபத்தில் கூட்டம் வரவில்லை என்று, அந்தக் கூட்டம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் வீரத்தை, மானத்தை, தியாகத்தை மதிக்கின்ற கூட்டம்தான் தமிழர்களின் கூட்டம் என்பதை நாங்கள் நிலைநாட்டுவதற்காகத்தான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
பாஞ்சாலத்தில் இருந்த பகத்சிங்குக்குத் தமிழகத்தில் விழா. அவன் பொது உடைமை இயக்க வீரன். நாத்திகன். அகில இந்தியாவும் போற்றுகின்ற ஒரு தியாகத் திருவிளக்கு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என்ன அவ்வளவு அக்கறை வந்துவிட்டது என்று எதிலும் குதர்க்கம் காண்கின்ற சில மேதாவிகள் இதைப்பற்றி விமர்சிக்க துணிவார்களானால் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். தூக்கில் இடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பகத்சிங்கை அதே சிறையில் இருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரன் மிகுந்த சிரமப்பட்டு அவன் கொட்டடியில் போய்ச் சந்திப்பதற்கு அங்கே இருக்கக்கூடிய சில அதிகாரிகளின் துணையோடு பல நாள்கள் முயற்சித்து, பகத்சிங்கை கொட்டடியில் சந்தித்துப் பேசினார்.
பாபா ரண்வீர் சிங் என்கின்ற அந்த சீக்கிய சுதந்திரப் போராட்ட வீரன், பகத் சிங் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக,‘நீ மரண தண்டனை பெற்று, தூக்குத் தண்டனைக்குச் செல்லப் போகிறாய்; வாழ்நாளெல்லாம் நீ ஆண்டவனை வழிபடாமல் நாத்திகம் பேசி வந்தாய்; எனவே, இந்தக் கடைசி நேரத்திலாவது நீ கிரந்தங்களைப் படிக்க வேண்டும், நீ இறைவனை நெருங்க வேண்டும், கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வாதாடினார்.
இருவருக்கும் இடையில் நீண்டநேரம் விவாதம் நடைபெற்றது. அந்தக் கருத்தை பகத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆத்திரப்பட்டு தன் கருத்தை ஏற்கவில்லை இவன், கடைசிநேரத்தில்கூடக் கடவுளை நாடவில்லை என்பதால், புகழ் போதை உன் கண்ணை மறைக்கிறது, அதனால் ஏற்பட்ட திமிர் உனக்கு அகந்தையைத் தந்து இருக்கிறது, கடவுளுக்கும் உனக்கும் இடையில் அந்த அகந்தையும் திமிரும் கருந்திரையாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கொட்டடியைவிட்டு ரண்வீர் சிங் பாபா வெளியே போய்விட்டார்.
இதன் காரணமாகத்தான் “Why I became an atheist"நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்று பகத் சிங் எழுதுகிறார். அதே சொற்களின் தாக்கம்தான், நீங்கள் படித்தீர்களானால் தெரியும். போதையினாலோ புகழ் போதையினாலோ அகந்தையினாலோ அல்ல என்று ரண்வீர் சிங் பாபா எழுப்பிய கேள்விக்குப் பதில். அவர் உள்ளத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளன் பகத்சிங். தீர்க்கமான சிந்தனையாளன். ஆகவேதான் நான் ஏன் நாத்திகன் என்று ஆங்கிலத்தில் எழுதினான். ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன் பகத்சிங்.
அவன் எழுதிய நூல் கையெழுத்துப் பிரதியாக சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டது. அப்படிக் கடத்தப்பட்ட நூல்கள் மொத்தம் ஆறு. மரண தண்டனைக்குமுன்பு அவர் எழுதிய ஆறு நூல்கள் வெளியே கடத்தப்பட்டன. அதில் ஒன்று நான் ஏன் நாத்திகன். அடுத்தது ‘கனவுலகத்துக்கு ஒரு அறிமுகம்.’ இந்த இரண்டு நூல்கள்தான் கிடைத்தன. இன்றைக்கு இருக்கிறது. அவர் எழுதிய இன்னொரு நூல், ‘இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு.’ கிடைக்கவில்லை, எவரிடமும் இல்லை. ‘சோஷலிச கோட்பாடு’ எனும் நூல் பகத்சிங் எழுதியது கிடைக்கவில்லை. பகத்சிங் தன்னுடைய “சுயசரிதை” என்ற பெயரில் எழுதிய நூல் கிடைக்கவில்லை. “At the door of Death” மரண வாசலில் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம். அதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த ஆறு நூல்களும் சிறையில் இருந்து ரகசியமாக வெளியே அனுப்பப்பட்டன. இந்த நான்கு புத்தகங்களும் சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரில் இருந்த குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் அவற்றை 1939 இல் விஜய்குமார் சின்கா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். 1939 இல் உலகப்போர் மூண்டதும் தன் வீடு சோதனையிடப்படலாம் என்று எண்ணி - பகத்சிங் எழுதிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூறி ஒப்படைத்தார். ஆனால், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில் அடக்குமுறைக்கு அஞ்சிய அந்த நண்பர் அக்கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டார்.
அப்படி எழுதப்பட்ட நூல் நான் ஏன் நாத்திகன் என்ற நூல். பகத்சிங் 1931 மார்ச் 23 ஆம் தேதி முன்னிரவுப் பொழுதில் தூக்கில் இடப்பட்டபிறகு, அதே ஆண்டில் செப்டம்பர் 27 ஆம் தேதி, அன்று லாகூரில் The People 'மக்கள்' என்ற பெயருள்ள ஆங்கில வாரப் பத்திரிகையில் வெளியானது. அந்த நூல் தமிழ்நாட்டில் தமிழில் பிரசுரம் செய்யப்படவில்லை. பகத்சிங் பொதுவுடைமையாளர். நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தந்தை பெரியார் இந்தியா என்ற அமைப்பை ஏற்காதவர். அவர் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேவந்து, சுயமரியாதை இயக்கம் கண்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் அமைப்பை ஏற்காதவர். காங்கிரஸ்சை ஒழித்துக் கட்டுவேன் என்று கர்ஜித்தவர்.
இன்றைய உலகமல்ல, இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். நான் குறிப்பிடுகின்ற காலகட்டம் 1930 களில் தந்தை பெரியார் சோவியத் ரக்ஷ்யாவுக்குச் சென்றுவந்த தந்தை பெரியார், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணித்த பெரியார், எங்கள் பாட்டன், எங்கள் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், இந்தத் தமிழகத்தில் எவருக்கும் ஏற்படாத சிந்தனை அவருக்கு ஏற்பட்டதன் விளைவாக, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று, இந்தப் புத்தகத்தைத் தமிழில் தோழர் ப.ஜீவானந்தம் மொழியாக்கம் செய்ததை, ‘உண்மை விளக்கம்’ என்ற அச்சகத்தின் சார்பில் வெளியிட்டார்.
அதற்குப்பிறகு ஈ.வே.கிருக்ஷ்ணசாமி வெளியிட்டார். தந்தை பெரியாரின் தமையனார். ஈ.வே.கே. சம்பத்தின் தந்தையார். அதை மொழிபெயர்த்துத் தந்தவர் ஜீவானந்தம். ஆகவே, திராவிட இயக்கத்தில், திராவிடர் கழகத்தில், பின்னாளில் திராவிடர் கழகமாக உதித்த எங்கள் இயக்கம், நாங்கள் அதற்குச் சொந்தக்காரர்கள். ஆக, பாட்டன் செய்ததை இந்தப் பேரப்பிள்ளைகள் செய்கின்ற உணர்வோடுதான், இந்த விழாவை நடத்துகிறோம் அன்றைக்கு யாரும் செய்ய முடியாததை தந்தை பெரியாரின் கூட்டம் செய்தது.
பகத்சிங்கின் நூல் வெளியிட்டதற்காக ஜீவாவுக்கும் தண்டனை - ஈ.வே.கிருக்ஷ்ணசாமிக்கும் தண்டனை. பகத்சிங் எழுதிய நூலை தமிழில் தருகின்ற எண்ணம் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது. ஆகவேதான் பகத்சிங் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு நாங்கள் முன்வந்து இருக்கிறோம். அதிலும், தியாக உணர்வும் - போராட்ட நெஞ்சமும் தமிழக இளைஞர்க ளுக்குத் தேவை என்பதால், எதைச் சொன்னால் அந்த உணர்ச்சி கூர்மைப்படுத்தப்படுமோ, அதற்காக பகத்சிங்கை நாங்கள் நினைவு கொள்கிறோம். பகத்சிங் கண்டங்களைக் கடந்தவன் - எல்லைகளைக் கடந்தவன். நாடு மொழி இனம் என எல்லைகளைக் கடந்தவன்.
அந்த மாவீரன் பகத்சிங் பிறந்தது செப்டம்பர் 28 என்று சொல்பவரும் உண்டு. ஆனால், பலரும் அக்டோபர் 7 என்று பதிவு செய்துள்ள காரணத்தால், அந்த அக்டோபர் 7 என்பது, புரட்சி இயக்கத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் என்பதால், Oh October thy name is Lenin என்று அக்டோபர் 7 ஐ அகிலம் கொண்டாடுகிற காரணத்தால், பெரும்பாலானோரின் கருத்தை ஏற்று, அந்த அக்டோபர் 7 ஆம் நாளையே பகத்சிங்கின் பிறந்த நாளாகக் கருதி, நூற்றாண்டு நிறைவு பெறுகிற நேரத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துகிறோம்.
பகத்சிங்கின் குடும்பத்தில் தந்தை பாட்டனார் அனைவருமே போராட்ட உணர்வுக்காரர்கள். நாட்டின் விடுதலைக்குத் தங்களைத் தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிக்ஷ்ன் சிங், அவருடைய சகோதரர் அஜீத் சிங், பாட்டனார் அர்ஜூன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம்தான். பகத்சிங் பிறந்த அன்றுதான் தந்தையின் சகோதரர் அஜீத் சிங் மகிழ்ச்சியோடு நீண்ட நாட்களுக்குப்பிறகு வீட்டுக்கு வருகிறார்.
வித்யா கெளர் என்கின்ற பகத் சிங்கின் தாயார் மடியிலே குழந்தை கிடக்கிறபோது, இது அதிர்க்ஷ்டக்காரன் என்று இரண்டு மூன்று பெயர்களைச் சொல்கிறார்கள். அதிர்க்ஷ்டக்காரன் என்ற பெயரில், பகத் சிங் என்று பெயர் சூட்டுகிறார்கள்.
பகத்சிங்கின் 12 வயதிலே ஒரு பைசாகி நாள். 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13. மைக்கேல் டயர் என்கின்ற லெப்டினட் கவர்னர் உத்தரவின்பேரிலே, ஜெனரல் டயர் ஜாலியன் வாலாபாக்கில் 1650 ரவுண்டுகள் சுட்டான். 400 க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே குண்டடிபட்டு இறந்தனர். கிணற்றுக்கு உள்ளே குதித்துச் செத்துப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றார்கள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது ஜாலியன் வாலாபாக்கில்.
நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டதைப்போல, அந்த இரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு ஜாடியில் போட்டுக் கொண்டு, 12 வயதுச் சிறுவன் பகத்சிங் வீட்டுக்கு வருகிறான். சிறியவயது. அந்த ஜாடிக்குமேல் பூக்களை வைத்துக் கொண்டு வருகிறான். ஒரு பூங்கொத்தைப் போலக் கொண்டுவருகிறான். தன் தங்கையை அழைக்கிறான். ‘இந்த ஜாடியைத் தொட்டு பூஜித்துக் கும்பிடு’ என்கிறான். கடவுளின் படத்தைப் பார்த்துக் கும்பிடுவதைப்போல, வணங்குவதைப்போல, பூஜிப்பதைப்போல, அவள் வணங்குகிறாள். இவனும் வணங்குகிறான். இரத்தம் தோய்ந்த மண்ணை ஜாடியில் வைத்து வணங்கச் சொன்னானே, அந்த பகத்சிங்கின் நிகழ்ச்சியை ஆயுதபூஜை நேரத்தில் நடத்துவதுதானே ரொம்பப் பொருத்தம்.
ஆயுத பூஜைக்காக ஆங்காங்கே தெருக்களில் வாழை மரங்களைக் கட்டி எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்து, கோலமிட்டு நமது மங்கையர் நவராத்திரி விழா கொண்டாடுகிறபோது, அவரவர் தங்கள் கருவிகளைப் பூஜை செய்வதற்கு ஆயுதம் வாங்குகிறார்கள் என்றால், இந்திய விடுதலையின் மகத்தான ஆயுதத்தின் பெயர்தான் பகத் சிங். ஆகவேதான், நாங்கள் நல்லநேரத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
அதற்குப்பிறகு 2 ஆண்டுகள் கழித்து, 14 ஆவது வயதில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்ட எழுத்துகளைக் கையால் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டுபோய் சுவர்களில் ஒட்டுகிறான் பகத்சிங். போலிஸ் பிடித்துக் கொண்டுபோய் காவல் நிலையத்தில் நையப் புடைக்கிறார்கள். ஆனால், கைது செய்து சிறையில் அடைக்கவில்லை. அவனை அடித்துச் சித்ரவதை செய்து அனுப்பி விடுகிறார்கள். இப்படித்தான் தயராகிறான் பகத்சிங். சின்ன வயதிலேயே தயாராகிறான் பகத் சிங்.
பகத் சிங் பிறந்த ஊருக்குப் பெயர் கட்கர் கலான். நான் கண்ணப்பன் அவர்கள், மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கும் பஞ்சாபில் முதல் அமைச்சராக இருந்த அகாலிதள தலைவர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்களின் அழைப்பினை ஏற்று, பகத்சிங் பிறந்த ஊருக்கு சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரத்தைத் தருகின்ற திட்டத்தை நீங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை பெரிய பெருமிதமாகக் கருதி, அந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியதால், அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சிக்கு அமைச்சரோடு என்னையும் சேர்த்து பிரகாக்ஷ் சிங் பாதல் அழைத்து இருந்தார்.
நான் கட்கர் கலானுக்குச் சென்றேன். ஒரு புனிதமான மண்ணைத் தரிசிக்கப் போகிறோம் என்ற உணர்ச்சியோடு சென்றேன். எந்த ஜாலியன் வாலாபாக்கின் இரத்தம் தோய்ந்த மண்ணை வீட்டு ஜாடியில் எடுத்துவந்து பூஜித்தானோ, அவன் பிறந்த கிராமத்துக்குச் சென்று, எந்தச் சகோதரன்மீது அவர் மிகப்பெரிய நேசத்தை உயிராகக் கருதினானோ அந்த குல்தார் சிங் என் பக்கத்தில் நிற்க, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அன்று மாலைப்பொழுதில் பாகிஸ்தான் எல்லையில் இருக்கக் கூடிய பகத் சிங், சுகதேவ், ராஜகுரு நினைவாலயத்துக்கு முதலமைச்சர் பாதல் எங்களை அழைத்துச் சென்றபோது, இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் என்னைப்பேச அழைத்து, அறிமுகம் செய்து வைத்தார் பாதல். ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துவைத்துவிட்டு என் பெயரையும் சொல்லி, எனக்கு இல்லாத பெருமைகளை எல்லாம் சூட்டி என்னைப் பேசச்சொன்னார்.
நான் எழுந்து பேசுகிறபோது, ‘எந்த உணர்ச்சியோடு பகத்சிங் அந்த மண்ணை எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் வைத்துப் பூஜித்தானோ, நான் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் மண்ணை பூஜிக்கத்தக்க மண்ணாகக் கருதி, என் கையில் எடுத்துகொண்டு வந்து இருந்தேன். அந்த மண்ணைக் காட்டி, அதற்கு முத்தமிட்டுவிட்டுத்தான் நான் பேசினேன். அந்த மண்ணையும் வைத்து இருக்கிறேன். வல்வெட்டித் துறை மண்ணையும் வன்னிக்காட்டு மண்ணையும் நான் வைத்து இருக்கிறேன்.
பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றில், நிகழ்வுகளை நான் இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புவது, இது ஒலிநாடாவில், ஒளிநாடாவில், ஏடுகளில் நூலாக பதிவுசெய்ய விரும்புவது, வருங்காலத் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும், ஏன் எங்கள் இயக்கத் தோழர்களுக்கும், தியாக உணர்வு மேலும் தீட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த விழாவை நடத்துகின்றோம்.
எந்தச் சம்பவம் அவன் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல இன்னொரு சம்பவம் தான் லாகூர் சம்பவமாகும். 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் சைமன் கமிஷனை எதிர்த்து நாடெங்கும் போர்க்களம். கிளர்ச்சிக் களம் அமைந்தபோது, லாகூரில் சைமன் கமிஷனை எதிர்த்து, ‘சைமனே திரும்பிப்போ’ என்று முழங்கி வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கிவந்த பஞ்சாப் சிங்கம் பாஞ்சாலத்துச் சிங்கம், லாலா லஜபதி ராயின் உச்சந்தலையில் தன் குண்டாந்தடியால் ஓங்கி அடித்தான் ஸ்காட் என்கின்ற அதிகாரி. தலை உடைந்து இரத்தம் கொட்டியது. லஜபதிராய் கீழேவிழுந்தார். துடித்தார். அதற்குப்பிறகு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். நவம்பர் 17 ஆம் தேதி அன்று லஜபதிராய் இறந்தார். 17 நாட்கள் கழித்து லஜபதி ராய் இறந்துபோனார்.
அவரது உடலை ரவி நதிக்கரையில் தகனம் செய்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள். சிதையில் லஜபதி ராயின் உடல்வைக்கப்பட்டு அதற்குத் தீ மூட்டப்பட்ட பிறகு மக்கள் எல்லாம் கலைந்து சென்றனர். அப்பொழுது சில இளைஞர்கள் அங்கே வந்தார்கள். எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் மீது தங்கள் கைகளை வைத்தார்கள். ‘பழிக்குப் பழி’ என்று சத்தியம் செய்தார்கள். அவர்களுள் ஒருவன்தான் பகத்சிங் - அவர்களுள் ஒருவன்தான் சுகதேவ் - அவர்களுள் ஒருவன்தான் ராஜகுரு.
பழிக்குப்பழி என்று முடிவெடுத்தபிறகு, அதற்குத் திட்டம் வகுக்கின்ற காலத்தில், ஏற்கனவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புச் சற்று மந்தமாக இருந்த நிலைமையில், மீண்டும் எழுச்சி ஊட்டி, புதிய பெயரைச்சேர்த்து, ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியசேன்’ என்ற பெயரை, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேசன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு ஒரு ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு சந்திரசேகர் ஆசாத் தலைவர் ஆனார்.
இதில் பகத் சிங் ஆயுதம் ஏந்தினானா இல்லையா என்ற கேள்வி வருகிறது. அந்த அமைப்புக்கு ஒரு ஆயுதப்படை அணி உருவாக்கப்பட்டு சந்திரசேகர் ஆசாத் தலைவராக ஆக்கப்பட்டார். எந்த ஸ்காட் என்கின்ற அதிகாரி லஜபதி ராயின் மண்டையை உடைத்து அவர் சாவுக்குக் காரணமாக இருந்தானோ, அவனைச் சுட்டுக் கொல்வது என்று முடிவு எடுத்தார்கள். அதன் காரணமாகத்தான் அந்த சம்பவத்துக்குப்பிறகு இயக்கத்தை இரகசியமாக நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். சீக்கியர்கள் வழக்கமாக வளர்க்கின்ற தலைக்கொண்டையை எளிதில் அகற்றுவதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் சீக்கியர்கள்.
ஆனால், இந்த இரகசிய இயக்கத்தை நடத்துவதற்காகத்தான் பகத்சிங் அவருடைய தலைமுடி அத்தனையையும் ,தாடியையும் எடுத்து விடுகிறார். தோற்றம் மாறிவிட்டது.
நவம்பர் 17 ஆம் தேதி லஜபதிராய் இறந்துபோனார். டிசம்பர் 17 ஆம் தேதி நாள் குறித்தார்கள். சரியாக 30 நாட்கள் கழித்து. திட்டம் வகுக்கப்பட்டது. பின்னால் அப்ரூவராக மாறினான் ஜெயகோபால் என்கின்ற துரோகி. அப்பொழுதே கருணாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. நான் அங்கே இருக்கிற கருணாவைச் சொல்கிறேன். அவனுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட், போலிஸ் ஸ்டேசனில் இருந்து ஸ்காட் புறப்பட்டவுடன் தகவல் சொல்ல வேண்டும். பகத் சிங் சுடுவது என்ற முடிவு. ராஜகுரு பக்கத்தில் நின்று அரணாக உடனிருக்க வேண்டும். அதில் கொஞ்சம் தவறினால், - குண்டுகள் தவறினால் இவன் சுட வேண்டும். அதேநேரத்தில் Scott is killed என்று ஊரெல்லாம் ஒட்டி விடுவது. ஒட்டுகிற தாளை முதலிலேயே எழுதி விட்டார்கள். வழக்கில் இதுதான் பின்னாளில் சாட்சியாக ஆகிறது. அந்தத் தாளில் கைப்பட எழுதியது பகத்சிங். சிவப்பு எழுத்தில் எழுதுகிறான். Scott is killed என்று. இதை ஆங்காங்கு ஒட்டிவிடுவது, இது முடிவு.
குறிப்பிட்ட தேதியில், ஸ்காட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் இலண்டனில் இருந்து வருகின்ற காரணத்தினால், எதிர்பாராமல் அவன் விடுமுறை எடுத்துவிட்டான். அவன் அன்றைக்கு வரவில்லை. அவனுடைய உதவியாளர் ஏ.வி.எஸ்.சாண்டர்ஸ் போலிஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான். லஜபதி ராயைக் கொன்றவன் ஸ்காட் - உடன் இருந்தவன் சாண்டர்ஸ். சாண்டர்ஸ் காவல்நிலையத்தில் இருந்து வெளியேவந்து மோட்டார் சைக்கிளில்தான் புறப்படுகின்றான். அப்பொழுது ஜெயகோபாலுக்கு ஸ்காட்டுக்கும் சாண்டர்சுக்கும் வித்தியாசம் தெரியாமல், திருப்பதிக்குப்போனால் மொட்டை போட்டவன் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் தெரிவான் அல்லவா, அதுபோல, அவன் வெள்ளைக்காரன் அல்லவா, இவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
‘ஸ்காட் புறப்பட்டாயிற்று’ என்று இவன் சிக்னல் கொடுக்கிறான். பக்கத்தில் நெருங்கிவருகிற போது பகத்சிங் சுடுவதற்கு முன் முதல் தோட்டாவை ராஜகுரு சுட்டுவிட்டான். ராஜகுருவின் குண்டு உடம்பில் பாய்வதற்கு உள்ளாக பகத்சிங் ‘No No Not this man’ என்று சத்தம் போடுகிறான். ‘இவன் இல்லை’ என சத்தம் போடுகிறான். அதற்குள் குண்டு பாய்ந்து விட்டது.
சரி, சுட்டாயிற்று. இனி விடக்கூடாது என்று, அடுத்தடுத்த குண்டுகளைப் பகத்சிங் செலுத்துகிறான். இந்தக் குண்டுகள் தாக்கி அவன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்திலேயே அவன் உயிர்போய் விட்டது. புரட்சியாளர்கள் தப்பிச் சென்று விட்டார்கள். அங்கிருந்து தலைமறைவாக கொல்கத்தாவுக்குச் செல்கிறார்கள். இதுதான் மிக முக்கியமான நேரம். கல்கத்தாவுக்குச்சென்று அங்கே உள்ள புரட்சிக்காரர்களோடு தொடர்புகொள்கிறார்கள், இதைப் படிக்கின்றபோது எனக்குக்கூட ரொம்ப விநோதமாக இருந்தது.
கல்கத்தா காங்கிரஸ் மாநாடு அங்கே நடக்கிறது. அதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அங்கே செல்கிறார் பகத் சிங். சலிப்புத் தட்டுகிறது. அங்கே உள்ள தீர்மானங்கள், நடவடிக்கைகள், சில பேச்சுகள் சலிப்புத் தட்டுகிறது. காங்கிரஸ் மாநாட்டைவிட்டு வெளியே வருகிறார். அவர் சொல்கிறார். ‘அப்பொழுது எங்கே செல்வது என்று நான் கருதினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத் துயர வரலாற்றை விவரிக்கின்ற Uncle Toms Cabin என்கின்ற திரைப்படம் நடப்பதைக் கேள்விப்பட்டு, நான் அங்கே சென்றேன்’ என்று பகத்சிங் சொல்கிறார்.
இதற்குப்பிறகுதான், நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என்று முடிவு எடுக்கப்படுகிறது. யார் குண்டு வீசுவது என்று தீர்மானிக்கிறார்கள். முதலில் பகத்சிங் வேண்டாம் என்கிறான் சுகதேவ். பகத் சிங் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியவன், அவனைக் கொண்டுபோய் இந்தப் பரீட்சையில் ஈடுபடுத்தக் கூடாது என்கிறார்கள். வாதாடி, கடைசியில் தானே செல்வது என்று பகத்சிங் வற்புறுத்துகிறான். பகத்சிங், டட் என்ற இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்துக்கு உள்ளே, மத்திய பாராளுமன்றம் நடக்கின்ற மண்டபத்தின் பார்வையாளர் அரங்கத்திற்கு பகத்சிங்கும், டட்டும் சென்று உட்காருகிறார்கள். 11 மணி அடிக்கிறது. சபை கூடுகிறது. மோதிலால் நேரு சபையில் உட்கார்ந்து இருக்கிறார். முகமது அலி ஜின்னா சபையில் உட்கார்ந்து இருக்கிறார். இரண்டு குண்டுகள் வீசுகிறார்கள். எதற்கு என்றால் இரண்டு மசோதா அங்கு நிறைவேற்றப்படுகிறது. ஒன்று, ‘விசாரணை இன்றிக் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம்’ என்கின்ற ஒரு மசோதா. இன்னொன்று தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கின்ற மசோதா.
இந்த இரண்டு மசோதாக்களையும், நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிமுகம் செய்கிறார். அப்பொழுது மேலே இருந்து குண்டை வீசுகிறான் பகத்சிங். குண்டு வீசும்போது எவர்மீதும் பட்டுவிடாமல், யாருக்கும் காயம் ஏற்படுத்தி விடாமல் நாடாளுமன்றத்தில் எது வெற்றிடமாக இருக்கிறதோ, அதைப் பார்த்துக் குண்டை வீசுகிறான். உடனே அங்கே எல்லோருக்கும் பதட்டம் ஏற்படுகிறது. ஆனால், மோதிலால் நேருவோ, ஜின்னாவோ அங்கு இருந்த மற்றவர்களுக்கோ பதட்டம் இல்லை. அவர்கள் சலனமற்று இருக்கிறார்கள்.
இதில் இன்னும் விநோதமான செய்தி என்னவென்றால் எந்த சைமனை எதிர்த்து லஜபதி ராய் குண்டாந் தடிக்கு ஆளாகிக் கீழே விழுந்து உயிர் இழந்தாரோ, எந்த சைமனை வெளியே போ என்றார்களோ, அதே சைமன் பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்து இருக்கிறான். எல்லோரும் ஓடுகிறார்கள். காவலாளிகளுக்கு பகத்சிங் அருகில் போவதற்கு அச்சம். நெருங்கவில்லை, மற்ற பார்வையாளர்கள் எல்லோரும் போய் விட்டனர். காலரியில் இவர்கள் இருவரும் நின்று கொண்டே இருக்கின்றனர். அருகில் செல்கிறபோது பயந்து கொண்டே நின்றவர்களிடம், ‘நாங்கள் இந்த பிஸ்டலை ஒப்படைக்கிறோம்’ என்றார் பகத்சிங்.
அப்பொழுதுதான் பகத்சிங் சொன்னான். ‘வெள்ளை அரசின் செவிட்டுக் காதுகளில் விழுவதற்காகத் தான் இந்த பலத்த சத்தத்தை இந்த சுதந்திரப் போராட்டத்தில் நாங்கள் ஏற்படுத்தினோம்’ என்றான். கைது செய்யப்பட்டார்கள். அவர்கள்மீது வேகவேகமாக விசாரணை நடைபெற்றது.
1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள். மே 7 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. ஜூன் 12 ஆம் தேதி தீர்ப்பு. ஆயுள் தண்டனை. அந்தமானுக்கே அனுப்பலாம். ஆயுள்தண்டனை வந்து அந்த தண்டனையைத்தான் அனுபவிக்க இருக்கும் என்று கருதுகிற அந்த காலகட்டத்தில், ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றதில் பகத்சிங் குற்றவாளி என்று வழக்கு வருகிறது.
இதில் பல சாட்சியங்கள் - ஆவணங்கள் -பயன்படுத்திய பிஸ்டல். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஒப்படைக்கிறானே அதே பிஸ்டலைவைத்துத்தான் ஷாண்டர்ஸ்சைச் சுட்டான். அதற்கு அடுத்து, 1929 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆயுள் தண்டனை. ஜூலை 10 இல் ஷாண்டர்ஸ் கொலைவழக்கு விசாரணை. இந்த விசாரணையின்போதுதான் அவர்கள் போராடுகிறார்கள். கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் வந்து புரட்சி ஓங்குக என்று முழக்கமிடுகின்றனர்.
எங்களுக்கு விலங்கு போடக்கூடாது என்று எதிர்க்கிறார் பகத்சிங். பலாத்காரமாக விலங்கு போடுகிறார்கள். கோஷம் எழுப்புகிறான். இருவரையும் உதைத்து அடிக்கிறார்கள். நீதிபதியின் கண் முன்னால் அடிக்கிறார்கள். நீதிமன்றத்தில் இருந்து வெளியே இழுத்துக் கொண்டுவந்து குண்டாந் தடியால் அடிக்கிறார்கள் பகத்சிங்கையும் அவனுடைய தோழர்களையும். லாகூருக்கு மாற்றி லாகூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அங்குதான் உதம் சிங்கைச் சந்திக்கிறான் பகத்சிங். ஜாலியன் வாலா பாக்கில் இத்தனைபேரைச் சுட்டுக் கொல்வதற்குக் காரணமாக இருந்தானே லெப்டினட் கவர்னர் மைக்கேல் டயர், அவனை இலண்டனிலே சுட்டுக்கொன்ற உதம்சிங்கைச் சிறையில் சந்திக்கிறான்.
இந்தக் காலகட்டத்தில் பகத்சிங் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறார். எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று அவர் போராடுகிறார். உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த உண்ணாவிரதம் முதலில் கூடாது என்று சொன்ன ஜதீந்திரநாத் அவரே உண்ணாவிரதத்தின் மகத்தான தியாகி ஆனார்.
தோழர்களே, 63 நாள் கழித்து ஜதீந்தர்நாத் இறந்துபோனார். வங்கத்தில் அவன் ஒரு சிங்கம். இறந்து போன ஜதீந்தர்நாத்தின் சடலத்தை, கல்கத்தாவுக்குக் கொண்டு வருவதற்கு 600 ரூபாயை சுபாக்ஷ் சந்திர போஸ் அனுப்பி வைக்கிறார். அன்றைக்கு 600 ரூபாய் என்றால் இன்றைக்கு இலட்சத்தைத் தாண்டும். 6 இலட்சம்பேர் ஹவுரா ஸ்டேசனில் வழியெங்கும் கல்கத்தாவில் திரண்டு இருந்தனர். ஜதீந்தர்நாத்தின் உடலை வாங்குகிறபோது வங்காளத்தில் 6 இலட்சம்பேர் திரண்டு இருந்தார்கள்.
97 நாள்கள் ஐரீக்ஷ் விடுதலை இயக்கப் போராட்டக்காரன் உண்ணாவிரதம் இருந்த ரிகார்டு இருந்தது. பகத்சிங் உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் மீது அவருக்கு கருத்து வேறுபாடு உண்டு, காந்தியார்மீது. ஆனாலும்கூட, காங்கிரஸ் இயக்கம் பகத்சிங்கின் தந்தையாரை அழைத்து, இந்த வேண்டுகோளை தீர்மானமாக உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டும் என்று கொண்டுபோய்க் கொடுத்தார்கள். சில கோரிக்கைகளை அரசு ஏற்கச் செய்ய முடியும் என்று வற்புறுத்தினார்கள். தந்தையார் கொண்டுபோய் கொடுத்தார். 116 ஆவது நாள் பகத்சிங் உண்ணாவிரதத்தை முடித்தார்.
அதற்குப்பிறகு, 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 7 இதே அக்டோபர் 7. வரலாற்றில் வேடிக்கையான விசித்திரத்தைப் பாருங்கள். எந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று பகத்சிங் பிறந்தானோ, எந்த அக்டோபர் 7 ஆம் தேதியை 2008 ஆம் ஆண்டு இந்த மயிலாப்பூரில் நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோமோ, இதே அக்டோபர் 7 ஆம் தேதி தான் மரணதண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
லாகூர் சிறையில் மரணக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர் படித்த நூல்கள் ஏராளம் ஏராளம். அவருடைய அறிவுப் பசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை விதவிதமான புத்தகங்கள். கம்யூனிச புத்தகங்கள் அவர் மனதைக் கவர்ந்த புத்தகங்கள். லெனினைப் பற்றிய புத்தகங்கள். மார்க்சியத்தைப் பற்றிய புத்தகங்கள். அதைப் படித்தது மட்டுமல்ல ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. சின்கிலேர் எழுதிய ஒற்றன் என்ற ஒரு நாவல் அதுகூட அவர் கேட்கிறார்.
இவ்வளவு நூல்களையும் படித்த அந்த மகத்தான சிந்தனையாளனின் எண்ணத்தில், 1931 தூக்கில் இடப் படுவதற்கு ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்பு, பிப்ரவரி 2 ஆம் தேதி To the young political workers ‘இளைய அரசியல் ஊழியர்களுக்கு’ என்று எழுதுகிறார். இது எல்லா அரசியல் கட்சியிலும் இருப்பவர்களுக்கு தேவை என்பதால் சொல்கிறேன். எங்கள் இயக்கத்து இளைஞர்களுக்கும் இது தேவை என்பதால் நான் இதைச் சொல்கிறேன்.
அதில்தான் அருமையான கருத்துகளைச் சொல்கிறார். சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைமை ஒரு விடுதலை இயக்கத்துக்கு ஏற்படும் என்று இவர் சொல்கிறார். சமரசம் தேவையான ஆயுதம் ஆகும் என்று அவர் சொல்கிறார். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சமரசம் தேவைப்படுகிறது என்கிறார்.
அதுவரை எடுத்த முடிவுகளைப்பற்றி ஆய்வு செய்வதற்கு அவகாசம் கிடைக்கிறது. வெற்றி தோல்வி யைப்பற்றி ஆய்வு செய்வதற்கு அவகாசம் கிடைக்கிறது. தொடர்ந்து வலுவாகப் போராடுவதற்கு உரிய களத்தை அமைத்துக் கொள்ள முடிகிறது. ஆகவே, சமரசம் ஒரு போராட்டக் களத்திற்குத் தேவையான ஆயுதம் ஆகிறது என்கிறார். ஆனால், அடிப்படைக் குறிக்கோளில் இருந்து விலகிவிடக்கூடாது என்று சொல்லி இதற்கு உதாரணம் சொல்கிறார்.
1905 ஆம் ஆண்டு சோவியத் ரக்ஷ்யாவில் புரட்சி வெடித்தது. உடனடியாக வெளிநாட்டில் தலை மறைவாக இருந்த லெனின் ரக்ஷ்யாவுக்கு வந்தார். 1906 இல் டூமாவில், ரக்ஷ்ய நாடாளுமன்றத்துக்குச் செல்லக்கூடாது என்று சொன்ன லெனின், ஒரு வருடம் கழித்து 1907 இல், டூமாவில் பங்கேற்கலாம் என்றார். அது ஒன்றும் கொள்கையை விட்டுக்கொடுத்ததாகாது, போர்த்தந்திரம் என்று சொல்லிவிட்டு மீண்டும் சொல்கிறார். 1917 இல் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, ரக்ஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு கொடுங்கோலன் என்று உலகம் வர்ணித்துக் கொண்டு இருந்த ஜெர்மனியோடு ரக்ஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டது. பலரும் எதிர்த்தார்கள். லெனினை எதிர்த்தார்கள்.
அக்கிரமம் செய்து கொண்டு இருக்கிற ஜெர்மனியோடு நாம் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று. அவன் கொடியவன். சர்வாதிகாரி. அவனோடு நாம் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றபோது லெனின் சொன்னார் இப்பொழுது தேவை சமாதானம். போர் ஓய்வு ஏனென்றால் இப்பொழுது ரக்ஷ்யாவில் சில பகுதிகளை இழக்க நேரிட்டால்கூட பரவாயில்லை. ஜெர்மனியோடு போர்மூண்டால் போல்ஸ்விக் ஆட்சியே அழிந்து விடும் என்றார். இதை பகத்சிங் குறிப்பிடுகிறார். அவருடைய வாதப் பிரதிவாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
உரிமைக்காகப் போராடக்கூடிய உணர்வு, உயிர் போவதைப்பற்றிக் கவலைப்படவில்லை பகத்சிங். தனக்குத் தெரியாமல் தந்தை மேல்முறையீடு செய்துவிட்டார் என்பதற்காக, பகத்சிங் மிக வருத்தப் பட்டார். நீங்கள் எப்படி மேல்முறையீடு செய்யலாம்? என்று. அதற்கு அவர் உடன்பாடே கிடையாது. தூக்குத் தண்டனை எப்பொழுது நிறைவேற்றப்படும் தெரியவில்லை.
பண்டித ஜவஹர்லால் நேருவும் - சுபாக்ஷ் சந்திர போசும், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மரண தண்டனையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உண்மையான ஈடுபாட்டோடு விரும்பினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வைஸ்ராய் இர்வினைச் சந்திக்க மகாத்மா காந்தி போனார். என்ன நடந்தது? நான் பேசுவது எல்லாம் ஆவணங்களை வைத்து இருக்கிறேன். மகாத்மா காந்தி இர்வினுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார் என்றால்?
நாடு பூராவிலும் இவர்களைப்பற்றிய ஒரு கவலை ஏற்பட்டு இருக்கிறது, இந்த மரண தண்டனைக்கு எதிராக என்பதனால் அதைச் சுற்றி வளைத்துச் சொல்லிவிட்டு, ஒரு சிறு பிழை கூட, இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிறு தவறு கூட சட்டப் பூர்வமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சட்டப்பூர்வமாக இதை நிறைவேற்றுவது தவறு என்று, ஒரு சிறுவாய்ப்பு இருந்தால்கூட அதை நிறைவேற்றக்கூடாது என்ற அர்த்தத்தில் இவர் எழுதுகிறார். சட்டப்பூர்வமாக சிறுதவறுகூட ஏற்படக்கூடாது. இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில் என்றுதான் குறிப்பிடுகிறாரேதவிர, இந்தத் தண்டனையை இரத்து செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கவில்லை.
இர்வினைச் சந்தித்து வந்த காந்தியார் குறித்து, பண்டித நேரு அவரிடத்தில் கோபிக்கிறார். கதவைப் படாரென்று அடைத்துக் கொண்டு வெளியே போகிறார். இன்றைக்கு மெளன விரதம் காந்தி பேச மாட்டார் என்கிறார்கள். இதைப்பற்றி எழுதிக் காட்டுகிறார்கள்.
அப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தினர் அவரைப் பார்க்கக் கடைசியாக வருகிறார்கள். இதைப்படிக்கிறபோதே கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. ஈர உணர்ச்சி உள்ளவர்கள், தியாகத்தை மதிப்பவர்கள். சுகதேவ், ராஜகுருவுக்கு யாரும் வரவில்லை. ராஜகுரு எனக்கு யாரும் உறவினர்கள் இல்லை என்றான். சுகதேவ் என்னுடைய மாமா வருவார் என்று சொன்னான். ஆனால், மாமா வரவில்லை. இரண்டு பேரும் அவர்களது சிறிய கொட்டடி வாயிலில் நிற்கிறார்கள்.
கனத்த இதயத்தோடு, தன்னோடு இருக்கிற இரண்டு சக கைதிகள் தூக்கிலிடப் போகிறார்கள் அவர்களைப் பார்க்க யாரும் வரவில்லையே என்று மனதில் அழுத்தத்தோடு பகத்சிங் நேர்காணல் அறைக்குப் போகிறார்.சிறையில் இருந்தவர்களுக்குத்தான் அந்த அனுபவம் தெரியும். இண்டர் வியூவுக்குப் போகும்போது, கூட இருக்கின்ற சகாக்கள் எப்படியும் நம்மை அனுப்பி வைப்பார்கள் என்று,நேர்காணல் அறைக்கு வருகிறார் பகத்சிங். அங்கே அவர் தாத்தா அர்ஜூன் சிங் வந்து இருக்கிறார். தகப்பனார் கிஷன் சிங் வந்து இருக்கிறார். அம்மா வித்யா கெளர் வந்து இருக்கிறார். இரு சகோதரர்கள் வந்து இருக்கிறார் குல்பீர்சிங் - குல்தார் சிங். மூன்று சகோதரிகள் அந்த மூவரும் வந்து இருக்கிறார்கள். அமர் கெளர் - சுமித்ரா கெளர் - கெளசல்யா கெளர் மூன்று சகோதரிகளின் பெயர். இண்டர்வியூ அறைக்கு உள்ளே வந்தவுடன் கூட்டிக் கொண்டு போகிறவர் தலைமை வார்டன் கத்தார்சிங். அவில்தார் கத்தார்சிங்குக்கு அவரை அறியாமல் பகத்சிங் மேல் ஒரு ஈடுபாடு.
உள்ளே போனவுடன் அவர் தாத்தா கண்களில் கண்ணீர் பொங்குகிறது. அழுகிறார். அவர் தந்தையின் கண்ணீரால் அவரது தாடியெல்லாம் நனைந்து இருக்கிறது அம்மாவைப் பார்க்கிறான், அம்மாவின் கண்களில் கண்ணீர் வட்டமிடுகிறது. இரு சகோதரர்களும் அழுகிறார்கள். சகோதரிகளும் அழுகிறார்கள். அம்மாவிடம் பகத்சிங் சொல்கிறான், ‘அம்மா நீங்கள் என்னைக் கடைசியாகப் பார்க்கிறபோது நீங்கள் அழுது என்னைக் கக்ஷ்டப்படுத்தி விடாதீர்கள். என் மனதுக்குக் கடைசியில் கக்ஷ்டத்தைக் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அழக்கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்’ என்றார்.
இந்தநேரத்தில் மகாத்மா காந்தி மீது அவர் அப்பாவுக்கு நல்ல மரியாதை. கொஞ்ச நேரத்தில் இதைப் பற்றிப் பேச்சு வருகிறது. பகத்சிங் நினைக்கிறான் அப்பாவை ஏன் கக்ஷ்டப்படுத்த வேண்டும், அவர் காந்தி மேல் ரொம்ப மதிப்பு வைத்து இருக்கிறார். அவரிடம் போய் ஏன் விவாதம் செய்ய வேண்டும் என்று ,ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு மகாத்மா காந்தி ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொன்னவுடன், அவர் அப்பாவுக்கு மகன் வாயால் இதைக் கேட்டேனே என்று மகிழ்ச்சி அடைகிறார்.
நேர்காணல் அறையில் அடுத்த காட்சி. பகத் சிங் ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றவுடன் தலைமுடியைக், கொண்டையை எல்லாம் எடுத்துவிட்டார் அல்லவா? தாடி கிடையாது. சிறையில் மீண்டும் கொண்டை வளர்ந்துவிட்டது. சீக்கியர்களுக்கே உரியது அல்லவா, அந்தக் கொண்டையை மேலே முடிச்சுப்போட்டு வைத்து இருக்கிறார். அம்மா பக்கத்தில் கூப்பிட்டு மார்போடு அணைத்துக்கொண்டு அந்தக் கொண்டையைத் தடவிக் கொடுக்கிறார்கள். என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவளை அறியாமல் கண்ணீர் பொங்குகிறது.
அப்பொழுது பகத்சிங் சொல்கிறார்: ‘அம்மா நான் இறந்து போவேன் என்று பகத் சிங் தாயார் அழுதார் என்று வெளி உலகம் நினைக்கக்கூடாது. அவர் தாய் தைரியமாக அதை ஏற்றுக் கொண்டார் என்று உலகம் போற்ற வேண்டும். நீங்கள் கண்ணீர் விட்டதாக இந்த உலகம் நினைக்கக்கூடாது’ என்று தன் தாயாரிடத்தில் சொல்கிறார்.
கடைசியாக விடைபெற்றுப்போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவனுடைய தாயார் சொல்கிறார் உன்னைத் தூக்கில் போடும்போது, ‘நீ புரட்சி ஓங்குக என்று முழக்கம் செய்’ என்று அவனது அம்மா சொல்கிறாள்.
கடைசியாக விடைபெற்று வெளியேவருகிறபோது, ‘நான் போய்விட்டு வருகிறேன். நீங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருங்கள்’ என்பதுதான் பகத்சிங் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.
இது மார்ச் 3 ஆம் தேதி நடக்கிறது. மார்ச் 24 ஆம் தேதிதான் தூக்கு என முதலில் தீர்மானமாயிற்று. இதற்கு மத்தியில் இந்தப் பேச்சுவரும்போது, என்னமோ எப்ப விடுதலை வரும்? எப்ப நம் ஊரில் என்னென்ன நடக்கும்? என்று நாம் சிறையில் பேசுகிற மாதிரி, அவர் எங்களை எப்பொழுது அப்பா தூக்கில் போடுவார்கள்? என்று கேட்கிறான். அவன் தந்தை சொல்கிறார், கராச்சியில் காங்கிரஸ் மாநாடு மார்ச் 29 ஆம் தேதி. அந்த நேரம் உன்னைத் தூக்கில் போட்டுவிடக்கூடாது என்று அதற்கு முன்னரே போட்டுவிடுவது மாதிரி சொல்கிறார்கள். மகாத்மா காந்திகூட, போடுகிறமாதிரி இருந்தால் அதற்கு முந்தி போட்டு விடட்டும் என்று நினைக்கிறாராம் என்று பகத்சிங்கின் தந்தை சொல்கிறார்.
உடனே பகத்சிங் மகிழ்ச்சியாகச் சொல்கிறான் ‘நல்லவேளை, இந்த கோடை வெயிலில் வெந்து கொண்டு சிறையில் இருப்பதைவிட, வெயில் காலத்துக்கு முன்னரே எங்களுக்கு இப்பூமியில் இருந்து விடுதலை கொடுத்து விடுகிறார்களா? ரொம்ப மகிழ்ச்சி’ என்று பகத்சிங் சொல்கிறார்.
அந்த நேர்காணல் முடிந்த இரவு மார்ச் 3 ஆம் தேதி தன் தம்பி குல்தாருக்கு எழுதிய கடிதம் பாசஉணர்ச்சி பொங்கும் மடலாகும்.
“அன்புள்ள குல்தார்.
இன்று உன் கண்களில் கண்ணீரைப் பார்த்து அளவு கடந்த வேதனை அடைந்தேன். இன்று உன் குரலில் ஆழமான வேதனை இருந்தது. உன் கண்களில் வழிந்த கண்ணீரை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தம்பி, மன உறுதியுடன் உன் படிப்பைத் தொடர். உன் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்.
கட்சியின் நண்பர்களே
என் உயிர் மூச்சுக்கு இருப்பது இன்னும் ஒருசில சுவாசங்கள் மட்டுமே அணையப்போகும் விடியற்காலை விளக்கு நான். நாங்கள் போய்வருகிறோம்”
உனது அண்ணன்
பகத்சிங்.
பகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற்கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.
அதில் பகத்சிங் கூறுகிறார்.
“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.
ஒரு சிறைக் கைதியாகவோ, நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகி உள்ளது.
துணிச்சலோடும், புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால் அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் உயிர்த் தியாகம் செய்ய சித்தமாவோர் எண்ணிக்கை பெருகும். புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.
மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சிலகுறிக்கோள்களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கடைசிக் கட்டத்துக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் தோழன்
பகத்சிங்
பகத்சிங்கின் சிறைக்குறிப்புகளாக அம்மாவீரன் எழுதியவற்றில் சிலவற்றை வாசிக்கும்போதே மெய்சிலிர்க்கும். தியாக சிகரமான அந்த வரலாற்று நாயகனின் உள்ளக்கிடக்கையை உணரமுடியும்.
அவர் மனம் கவர்ந்த நூல்களின் வாசகங்களை குறிப்பாக எழுதிடும் வழக்கம் பலவற்றைப் பதிவு செய்துள்ளது.
வால்ட் விம்மனின் ‘விடுதலை’ பற்றிய கவிதை வரிகளை எழுதிவைத்துள்ளார்.
“தூக்கில் தொங்கிய அந்தத் தியாகிகள்
களரீயம் துளைத்த அந்த இதயங்கள்
இளைஞரது அச்சடலங்கள்
சில்லிட்டு அசைவற்றுக் கிடப்பதாகத் தோன்றினாலும்
ஒடுக்க முடியாத விரயத்துடன்
அவை எங்கோ வாழ்கின்றன
மற்ற இளைஞரிடம் அவை வாழ்கின்றன
விடுதலைக்காகக் கொலையுண்டோரின்
சமாதியல்ல இது
விடுதலைக்காக துளிர்க்கும்
மீண்டும் வித்தினை உண்டாக்கும்
அதனைக்காத்து ஏந்திச்சென்று மீண்டும்
விதைக்கும், மழையும் பனியும் அதனை வளர்க்கும்”
சர்வதேச கீதம் எனும் தலைப்பில் பகத்சிங் குறித்தது ......
“புதியதொரு பூமி பூத்துக்குலுங்கும்
ஏதுமற்ற நாம் எல்லாமும் பெறுவோம்”
‘யுத்தத்தை’ குறித்து பகத்சிங் எழுதியது
யுத்தம் யுத்தமே - வருவது வரட்டும் தயக்கமோ, காலவிரயமோ இருக்கக்கூடாது.
ஒரு தேசத்தில் பிரஜை, எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஸ்பார்ட்டா வரலாற்றில் படித்து பகத்சிங் பதிவு செய்கிறார்.
பிரஜையும் மனிதனும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதுகிறார் இதோ!
தெர்மாப்பிளே யுத்தத்துக்கான 300 பேர் உள்ள குழுவில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு ஸ்பார்ட்டா நகரத்துக்கு பெடார்க்டெஸ் விண்ணப்பித்தான். அவன் மறுதலிக்கப்பட்டான். தன்னைக் காட்டிலும் மேலான 300 ஸ்பார்ட்டா நகரத்தார்கள் இருப்பதாக மகிழ்ந்து கொண்டு சென்றுவிட்டான்.
அவன் உண்மையாகவே அப்படிச் செய்தான் எனக் கருதுகிறேன். அதைச் சந்தேகிக்க இடமில்லை. அவன் ஒரு பிரஜை.
ஸ்பார்ட்டா நகரத்துத் தாய் ஒருத்தியின் ஐந்து பிள்ளைகளும் இராணுவத்தில் இருந்தனர். “உனது பிள்ளைகள் ஐவரும் கொல்லப்பட்டு விட்டனர்” என ஒருவன் செய்தி கொண்டு வந்தான்.
“மோசமான அடிமையே அதுவா நான் உன்னிடம் வினவியது?”
நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் - அவனது தெய்வங்களுக்கு நன்றி சொல்வதற்காக அவள் கோயிலுக்கு விரைந்தாள்
அவள் ஒரு பிரஜை.
இதோ இறுதிநேரம் வந்துவிட்டது. தூக்கில் போடப்பட வேண்டிய நாள் 24. 22 ஆம் தேதி வரை ஆணை வரவில்லை. 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறையில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஆறு மணிக்குத்தான் கைதிகள் கொட்டடிக்கு உள்ளே செல்ல வேண்டும்.
திடீரென்று 4 மணிக்கு கத்தார் சிங் வந்து, ‘எல்லோரும் அறைக்குச் செல்லுங்கள் அறைக்குச் செல்லுங்கள். நாங்கள் எல்லா பிளாக்கையும் பூட்டப் போகிறோம்’ என்கிறார். எப்பொழுதும் ஆறு மணிக்குத்தான் செல்லைப் பூட்டுவார்கள், இன்றைக்கு 4 மணிக்கே பூட்டப் போகிறோம் என்கிறார்களே என்று ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலைமை வார்டன்மேல் அனைவருக்கும் மரியாதை. அவர் சொன்னால் சரியாக இருக்கும். அவர் நல்ல மனிதர். எல்லோரும் கொட்டடிக்குள் சென்று விடுகிறார்கள்.
அப்பொழுது பிரேம்நாத் மேத்தா என்கின்ற பகத்சிங்கின் வக்கீலுக்கு அங்கே நேர்காணலுக்கு அனுமதி கிடைக்கிறது. அவர்தான் பகத்சிங்கைக் கடைசியாகச் சந்தித்தவர். அவர் இண்டர்வியூ அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு. பிரேம்நாத்தான் பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு இரண்டுமணி நேரத்துக்கு முன் சந்தித்தவர்.
பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வந்த உடன் பகத்சிங், ‘நான் கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்? கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
‘புத்தகம் கிடைத்தது’ என்று கையில் கொடுக்கிறார் வழக்கறிஞர் மேத்தா. உடனே பகத்சிங் மிகவும் மகிழ்ச்சியுற்று அங்கேயே அதைப்படிக்க ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, சொல்கிறார் ‘அநேகமாக நாளைக்குக் காலையில் தூக்கில் போட்டாலும் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்கிறபோது, ஜவஹர் லால் நேருவுக்கும், சுபாக்ஷ் சந்திர போசுக்கும் அவர்கள் நான் சிறையில் இருந்தபோது கவலைப்பட்டு என் வழக்கில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இரண்டுபேருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்’ என்று வக்கீலிடம் சொல்லிவிடுகிறான் பகத்சிங். திரும்ப கொட்டடிக்கு கொண்டு போனார்கள் பகத்சிங்கை.
அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுது, ‘சாகேப் சாகேப்’ என்கிறார்கள். சிறையில் எல்லாம் கம்பிபோட்ட கதவு கிடையாது. இப்பொழுது எங்களுக்கு எல்லாம் கொட்டடியில் கம்பி போட்ட கதவு இருந்தது. எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதில் கதவைத் தகரத்தைப்போட்டு மூடிவிட்டான். உள்ளே இருக்கிறார். பகத்சிங் இருக்கின்ற அறைக்குவந்து, ‘சாகேப் சாகேப் கதவைத் திற’ என்கிறார்கள். பகத்சிங்கோ, ‘இப்பொழுது என்னை இடையூறு செய்யாதே. நான் ஒரு புரட்சிக் காரனைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்கிறார்.
முக்கியமான புரட்சிக்காரனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றவுடன் பயந்து, மேலே சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு ஓடி, அங்கு இருந்து பெரிய படை அணிகளோடு வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் திறந்து பார்க்கிறார்கள் புரட்சிக்கார லெனின் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறார் பகத்சிங். என்னவென்று கேட்கிறார். ‘உங்களைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்கிறார்கள். ‘நாளைக்குக் காலையில்தானே எங்களுக்குத் தூக்கு. இன்னும் பதினொரு மணிநேரம் இருக்கிறதே?’ என்கிறார். ‘இல்லை பைனல் ஆர்டர் வந்து விட்டது. இன்றைக்கே தூக்கில் போடவேண்டும்’ என்கிறார்கள்.
பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தியைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகிறான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.
அதன்பிறகு, மாலை ஆறரை மணி அளவில் அவர்களை குளிக்கச் சொல்கிறார்கள். கடைசியாக பகத்சிங் அவனுக்கு மிகவும் பிடித்தமான ரசகுல்லா சாப்பிடுகிறார். மூவரையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அதற்குமுன்பு கடைசியாக தலைமை வார்டன் இருக்கிறார் அல்லவா? அவரும் ராணா .... சிங் மாதிரி அப்பா கடைசியிலாவது நமது கிரந்தங்களின் அடிப்படையில் நீ சாமி கும்பிட்டு விடலாமே என்கிறபோது பகத்சிங் சொல்கிறார், என்ன கத்தார்சிங் உன் கடவுளே என்னைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரே? என்னைக் கோழை என்று நினைத்து விடுவாரே? கடைசிவரை நாத்திகனாக இருந்து, சாவு வருகிறது என்றவுடன் பயந்து ஆத்திகத்துக்குப் போய்விட்டான் என்று என்னைப்பற்றி நினைக்க மாட்டாரா? அப்படி ஒரு பெயர் எனக்கு வராதா?
ஆகையினால், நான் கடைசிவரை மத நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து விடுகிறேன். ஆனால், 10 ஆவது குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் வாசகங்கள்தான் என் மனதில் இருக்கின்றன. குரு கோவிந்த் சிங் சொன்னார், சிட்டுக்குருவிகளை வல்லூறுகளோடு மோதச் செய்யாவிட்டால், எனக்கு குருகோவிந்த் சிங் என்ற பெயர் இருந்து பயன் இல்லை. வல்லூறுகளை எதிர்த்து சிட்டுக்குருவிகளைப் போராட வைக்க முடியும். இந்த வாசகம் குருகோவிந்த் சிங்கின் வாசகம் என் மனதைக்கவர்ந்த வாசகம் என்று சொன்னார்.
தூக்குமேடைக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். கைகளைப் பின்பக்கமாகக் கட்டினார்கள். கருப்புத் துணியை முகத்தில் போர்த்தினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 21 ஆம் தேதி, கவர்னருக்கு இந்த மூவரும் கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தில்தான் குறிப்பிட்டார்கள். ‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்கள். ஆனால், அதை கவர்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இப்பொழுது அவரைத் தூக்குமேடைக்குக் கொண்டுசெல்லும்போது கடைசி விருப்பத்தைக் கேட்கிறான் அதிகாரி. அப்பொழுதும் சொல்கிறான் “நாங்கள் யுத்தக் கைதிகள். எங்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். எங்கள் இரத்தம் இந்த மண்ணில் சிந்தட்டும்.” என்கிறான்.
‘அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை’ என்கிறான் அந்த அதிகாரி.
‘அப்படியானால் எங்கள் கண்களின் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். நாங்கள் பிறந்த மண்ணை நாங்கள் மகிழ்ச்சியாக பார்த்துச் சிரித்துக்கொண்டே சாக விரும்புகிறோம்’ என்கிறான். மீண்டும் இந்த மண்ணில் பிறக்க விரும்புகிற நாங்கள் இந்த மண்ணைத் தரிசித்தவாறே சாக விரும்புகிறோம் என்கிறான் பகத்சிங்.
உடனே அந்த அதிகாரி, தனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, கண் கட்டுகளை அவிழ்த்து விடச்சொன்னான். கலகலவெனச் சிரித்தான் பகத்சிங். ‘ஏன் சிரிக்கிறாய்? என்றான். ,b>மகிழ்ச்சியாக இந்த மண்ணைத் தரிசித்தவாறே நான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாங்கள் சாகின்ற காட்சியைப் பார்க்கின்ற பாக்கியம், உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனுக்கும் கிடைக்கவில்லை’ என்று சொன்னான். மூவரையும் தனித்தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜகுரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக்கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், இது எதுவுமே தெரியாமல் நாளைக் காலையில் தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக ஒருதடவைப் பார்த்துவிடலாமா என்ற ஏக்கத்தில், பகத்சிங்கின் தாயும் தந்தையும் கிஷன்சிங்கும் வித்யாவதி கெளரும் சிறை வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஏழரை மணிக்கே தூக்கில் போட்டு விட்டார்கள் என்பது தெரியாமல் அவர்கள் வாசலிலேயே நிற்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒருமுறை மகனைப் பார்க்க முடியுமா? என்று கேட்கிறபோது, ‘சிறை அதிகாரி அலுவலகத்தில் இல்லை. நாளை காலையில் வாருங்கள்’ என்று அவர்களை பகத்சிங்கைத் தூக்கில் போடுகிற அதே நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.
தூக்கில் போட்ட உடன் சிறைக்குப் பின்வாசல் வழியாக இந்த மூன்று பேருடைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுருவையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போனார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.
சட்லஜ் நதிக்கரையில் ஒரே சிதையில் மூன்று பேரின் உடலையும் வைக்கிறார்கள். அப்பொழுது சீக்கிய மதகுரு நந்தா சிங் கிரஞ்சா சொல்கிறார்; ‘எங்கள் சீக்கிய மத வழக்கப்படி இருட்டியபிறகு ஈமச்சடங்கு செய்யக்கூடாது, இருட்டியபிறகு தகனம் செய்யக்கூடாது’ என்றவுடன், காவல்துறை அதிகாரி அவரைப் பார்த்து மிரட்டுகிறார். ‘வாயை மூடிக்கொண்டு இரு’ என்கிறார். பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுகிறார். அதற்குப்பிறகு சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள். எங்கள் மத வழக்கப்படி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கக்கூடாது என்கிறார். அப்பொழுதும் மிரட்டுகிறார்.
மூன்றுபேரையும் ஒரேசிதையில் வைத்தவுடன், இந்து மதகுரு ஜெகநாத ஆச்சார்யா சொல்கிறார். ஒரு சிதையில் ஒரு பிரேதத்தைத்தான் வைக்கவேண்டும். மூன்று பிரேதத்தையும் ஒரே சிதையில் வைக்கக் கூடாது என்கிறார். அவரையும் மிரட்டுகிறார்கள். இரவு 11.45 தீயை வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் எரிகிறது. நள்ளிரவு கடந்து 2.15 மணிக்குப் பார்க்கிறார்கள். இன்னும் சில பகுதிகள் உடம்பு எரிந்தும் எரியாமலும் இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்றால் எரியாமல் இருக்கின்ற பகுதிகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டு கிறார்கள். மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அதற்குப்பிறகு துண்டும் துணுக்குகளுமாகக் கிடந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சட்லஜ் நதியில் போடுகிறார்கள்.
இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்டது. காலையில் போய் பகத்சிங்கை பார்க்கலாம் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், லாகூர் வீதிகளில், பிரிட்டிக்ஷ் அரசு காவல்துறையை வைத்தே ஒரு சுவரொட்டியை ஒட்டுகிறது எல்லா இடங்களிலும். ‘பகத் சிங் - ராஜ குரு - சுகதேவ் நேற்று இரவிலேயே தூக்கிலிடப்பட்டு அவர்களது அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது’ என்று சுவரொட்டிகளை எல்லா இடங்களிலும் ஒட்டிவிட்டார்கள். இதை அறிந்த மக்களின் உள்ளம் எரிமலையாயிற்று. கிளர்ச்சி வெடித்தது. மக்கள் பொங்கி எழுந்தார்கள்.
இதை எல்லாம் நான் விவரிப்பதற்குக் காரணம். தன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரையில் இலட்சியத்தை நேசித்து, மரணம் நிச்சயம் என்று தெரிந்ததற்குப்பிறகும்கூட எந்தக் கொள்கையை நேசித்தார்களோ அதற்காக வாழ்ந்த மாவீரன் அப்படிப்பட்ட மாவீரன் பகத்சிங். அந்த பகத்சிங்கின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது நான் சொல்கிறேன். பகத்சிங்கின் வீரத்தை நான் ஏடுகளில் பார்த்தேன். பகத்சிங்கின் வீரத்தை நான் புத்தகங்களில் படித்தேன். இன்றைக்குப் பகத்சிங்கின் வீரத்தை வன்னிக் காடுகளில் பார்க்கிறேன்.
நமக்கு உலகத்தில் வேறுநாடுகளில் வீராதிவீரர்கள் தோன்றினால் கைதட்டிப் பழக்கப்பட்டவர்கள். இந்த இனத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்தால் பண்பால் நேர்மையால் தனிமனித ஒழுக்கத்தால் தன் சாகசத்தால் ஒரு இனத்தை மீட்பதற்கு களத்தில் நிற்கிறான். அவர்களுடைய போராட்டம் உங்களில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் ஆயுதக் கிளர்ச்சி உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
நான் மத்திய அரசைக் கேட்கிறேன். மாநில அரசைக் கேட்கிறேன். புலிகளின் போர்முறை உங்களுக்கு உடன்பாடல்ல. சரி. அவர்கள் ஆயுதம் ஏந்துவது உங்களுக்கு உடன்பாடு அல்ல. சரி. அவர்கள் துப்பாக்கி ஏந்துவது உங்களுக்கு உடன்பாடு அல்ல சரி. நீங்கள் கைராட்டினமும் தக்கடியும் வைத்துத்தான் நாம் போராடி வெற்றிபெற்றோம் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் எப்படி ஆயுதம் ஏந்தலாம் என்று சொல்லலாம். அது உங்கள் உரிமை.
ஆனால், அவன் மண்ணில் அவன் நாட்டில் அவன் தாயகத்தை விடுவிப்பதற்குப் போராடுகிற வேளையில் அழிக்க நினைக்கின்ற சிங்களக் கொடியவனுக்கு நீ ஆயுதம் எப்படி கொடுக்கலாம். முதலமைச்சர் அவர்கள் மாங்கொல்லையில் புளித்துப்போன வசனத்தை முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பேசியது ,இருப்பது ஒரு உயிர்தான் போகப்போவதும் ஒருமுறைதான். நூறு உயிர் இருக்கும் என்று எவனும் நினைக்கவில்லை. ஒரு உயிர்தான் எல்லோருக்கும் இருக்கிறது. அது ஒருதடவைதான் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். அதை எத்தனை தடவை சொல்வீர்கள். நான் கூறுகிறேன். இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தியது உலகம் பூராவிலும் அல்ல. அவர் வாழ்வில் இதுவரை இல்லாத துரோகத்தைச் செய்த பழிக்கு ஆளாகி இருப்பதனால் இந்தப் பழிநேர்ந்து விட்டது என்கின்ற பயத்தின் காரணமாக மக்களை ஏமாற்றுவதற்கு மாங்கொல்லையில் கூட்டம் போடுகிறார்.
நான் குற்றம் சாட்டுகிறேன். ரேடார்களைக் கொடுத்தது உங்களுக்குத் தெரியாதா? செஞ்சோலையிலே துடிக்கத் துடிக்க 61 குழந்தைகள் கொல்லப்பட்டார்களே அதற்கு இந்திய இராணுவ விமானத்தின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? தெரியும். இந்தியா ஆயுதம் கொடுப்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் அரசு நீங்கள் அங்கம் வகிக்கின்ற அரசு. நான் ஒவ்வொரு வார்த்தை யையும் கவனத்தோடு பயன்படுத்துகிறேன். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நான் கடுமையாக சொல்லி இருக்கிறேன். உங்கள் அரசு உங்கள் அரசில் பங்குவகிக்கின்ற கட்சிகள் தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் அரசும் அரசில் இருக்கக்கூடிய கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழர்களே, உறக்கத்தில் இருக்கின்ற தமிழர்களே! உங்களுக்கு இதைச்சொல்கிறேன். எந்த இனம் இதை சகிக்கும். எந்த மாநிலம் இதை சகிக்கும். நான் கேட்கிறேன். திடீரென்று நேற்றைக்கு முன்தினம் அனுப்பி விட்டாரா மன்மோகன் சிங் ஆதரவை. திடீரென்று நேர்ந்துவிட்டதா முதலமைச்சர் அவர்களே, மூன்று ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்தியா உதவிசெய்கிறது. ஆயுதம் தருகிறது. ரேடார் தருகிறது என்று. இது அனைத்தும் உங்களுக்குத் தெரியும். தெரியாது என்று சொன்னால், தெரியாவிட்டால் நீங்கள் முதலமைச்சராக இருப்பதற்கு லாயக்கு இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் முதல்வர், உங்கள் உளவுத்துறை இருக்கிறது - ஸ்பெஷல் பிராஞ்ச் இருக்கிறது - தில்லியில் உங்களுக்கு ஏழு மந்திரிகள் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியும். இந்தியா உதவுவது தெரியும். ஒவ்வொரு முறையும் இலங்கைக்குப் போய்விட்டுவந்து அங்கே இருக்கக்கூடிய சிங்கள இராணுவ நடவடிக்கைக்கு இனப்படுகொலைக்கு உடன் இருந்து எல்லா ஏற்பாட்டையும் செய்து கொடுத்து வருகின்ற புரோக்கர் நாராயணன் உங்களை வந்து ஒவ்வொருதடவையும் பார்த்துவிட்டுப் போனார்.
முதலமைச்சர் அவர்களே! உங்களிடம் கேட்டார்கள், ஈழத்தமிழர்கள் மடிகிறார்களே! இந்தியா உதவி செய்வதாக சொல்கிறார்களே என்று. நீங்கள் என்னசொன்னீர்கள்? மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்றீர்கள். மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்று முந்தாநாள் சொல்லிவிட்டு இப்பொழுது மதராஸ் வீதிகளில் மத்திய அரசே நிறுத்து என்று யாரை ஏமாற்ற பித்தலாட்ட போஸ்டர் ஒட்டுகிறீர்கள். மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை என்றீர்கள் - கூட்டு ரோந்து வேண்டும் என்றீர்கள். கொதித்தெழுந்த அண்ணன் நெடுமாறனும், நானும் அறிக்கை விட்டோம். கூட்டுரோந்து என்பது கூட்டுச் சதி என்று சொன்னோம்.
மீனவர்களைச் சுட்டுக் கொல்கின்ற இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை கங்காணி வேலை செய்கிறது என்று சொன்னோம். பிறகு என்ன செய்தீர்கள். பிரச்சனை வெடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் கூட்டுரோந்து வேண்டுமா வேண்டாமா என்று மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஐந்துநாள் கழித்து நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது என்று சொன்னவுடன் அது எலி தவளை கதையாகி விடும் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆகவே கூட்டு ரோந்து வேண்டாம் என்றீர்கள். இப்பொழுது சொல்கிறார் கூட்டுரோந்து வேண்டாம் என்று. அரசு எடுத்த முடிவிற்கு இணங்க நீங்கள் முடிவை மாற்றிக் கொண்டீர்கள் என்று.
இந்த ஜெகஜாலபுரட்டு வார்த்தைகளை மாற்றி செய்த தவறுகளை அப்படியே மறைப்பது ரொம்ப நாளைக்கு நடக்காது. ரேடார்களைக் கொடுத்தது இந்தியா என்று உங்களுக்குத் தெரியும். ரேடார்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா? ஆயுதம் கொடுத்தது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும். ஆயுதங்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா?
அதெல்லாம் போகட்டும். முதலமைச்சர் அவர்களே, பசியால் சாகிறான், நோயால் சாகிறான். எங்கள் பிள்ளைகள் பட்டினி கிடக்கிறார்கள். எங்கள் குழந்தைகள் பாலின்றி சாகிறார்கள். எங்கள் தாய்த் தமிழகத்து மக்கள் வேதனைப்படுகிறோம். எங்கள் தமிழ்ச் சகோதர சகோதரிகள் காடுகளில் மரங்களுக்கு கீழேநின்று அகதிகளாக ஏதிலிகளாக கதறித் துடிக்கிறார்கள். உலகம் பூராவிலும் அனுதாபம் பிறக்கிறது. போப்பாண்டவருக்குக் கூட அனுதாபம் பிறந்தது. ஐ.நா.சபை தலைவருக்குக்கூட அனுதாபம் பிறந்தது.
ஆனால், அவர்களுக்கு உணவும், மருந்தும் கொடுக்க வேண்டும் என்று பசியோடு வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய மணிமேகலை உலவிய இந்தத் தமிழகத்தில் இருந்து பசித்த வயிறுகளுக்கு சோறுபோட வேண்டும் என்ற பண்பாட்டை உலகத்தில் நிலைநாட்டிய எங்கள் தாய்த்தமிழகத்திலே இருந்து எங்கள் சொந்த சகோதர, சகோதரிகள் துன்பத்தில் சாதல் கண்டு நாங்கள் வாளாக இருக்க மாட்டோம் என்று தந்த உணவையும், மருந்தையும் இந்தியா அனுப்ப மறுத்தது ஏன்? ஏன் அனுப்பவில்லை?
ஒரு பக்கத்தில் குண்டுவீசிக் கொல்கிறான். அப்பாவி மக்களையும் கொல்கிறான். படை அணிகளை அழிப்பதாகச் சொல்லி குண்டுவீசிக் கொண்டே இருக்கிறான். குண்டு வீசியதைப்போல பட்டினி போட்டுக் கொல்வது எதற்குத் தெரியுமா? இந்தப் பிள்ளைகள் நாளைக்குப் போராளிகளாக வந்துவிடக் கூடாது என்பதற்காக. இனத்தை அழிப்பது என்பது இதுதான். இனத்தின் கருவை அழிப்பது. இனத்தை பூண்டோடு அழிப்பது.
நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த இனக்கொலையில் உங்களுக்கு பங்கு உண்டு என்று குற்றம் சாட்டுகிறேன். பட்டினி கிடக்கிற மக்களை குரல்வளையை நெறிப்பதற்கு, உணவும் மருந்தும் அண்ணன் நெடுமாறன் மக்களுக்குத் திரட்டிக்கொடுத்த உணவையும் மருந்தையும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கொடுக்கக்கூடாது என்று தடுக்க நீங்கள் காரணம். மத்திய அரசை சொல்கிறேன். அங்கே உள்ள மக்களை பட்டினிப் போட்டு கொல்வதற்குத்தானே நீ உணவும், மருந்தும் அனுப்பவில்லை. குண்டு வீசி கொல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பட்டினிபோட்டுக் கொல்ல வேண்டும் என்று இராஜபக்சேவின் திட்டத்துக்கு நீங்கள் உடந்தையாவீர்கள்.
இந்தப் பழியும் பாவமும் உங்கள் தலைமீது விழும் என்று தெரிந்ததற்குப்பிறகு அதிலும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தியாவின் அரசு கூட்டுச்சதி செய்கிறது. இந்தக் கொலையில் பங்காளிகள் கூட்டாளிகள் என்று சொன்னபிறகு தமிழக மக்கள் மத்தியில் இனத்துரோகம் முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக மாங்கொல்லையில் கூட்டம்போட்டு நாம் எல்லோரும் செத்துப்போவோம் என்கிறீர்கள். என்ன சொல்கிறீர்கள்?
நாங்கள் சாகத்தயாராக இல்லை. நாங்கள் ஏன் சாகவேண்டும். அங்கே எங்கள் மக்களைக் காப்பாற்ற நாங்கள் துடிக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக சாகவேண்டும் என்று என்ன வசனம் பேசுகிறீர்கள்? தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக செத்துப்போவோம் என்று ஏன் சொல்கிறீர்கள்? சாகிற தமிழனைக்காக்க இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களைத் திரும்பவாங்கு என்று சொல்வதற்கு வக்கில்லை. வகையில்லை. சூடு இல்லை. சொரணையில்லை. மொத்தத் தமிழ்மக்களும் செத்துப் போகவேண்டும் என்றீர்களே.
ஊரிலே தீவைத்துவிட்டு தீ நன்றாகப் பிடித்திருக்கிறதா என்றுபார்த்து பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு நன்றாக காற்றடிக்கின்ற நேரமாக பார்த்து மேற்கே இருந்து கிழக்கு பார்த்து காற்றடிக்கின்ற நேரம் மேற்கே தீயைவைத்துவிட்டால் கிழக்கே நோக்கி பிடிக்கும். அங்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு பனைமர உயரத்துக்கு நெருப்பு எழுந்துவிட்டது இனி அணைக்கவே முடியாது என்று தெரிந்த உடன் தீவைத்தவன் ஊர் மந்தைக்குவந்து அய்யோ ஓடிவாருங்கள் ஓடிவாருங்கள் ஊரெல்லாம் தீப்பிடித்து எரிகிறது வீட்டுக்கு ஒருவன் குடத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள். நானும் ஒரு குடத்தோடு வருகிறேன். தண்ணீர் ஊற்றி அணைப்போம் என்று சொல்வதற்கும் கலைஞர் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் நான் கேட்க விரும்புகிறேன்.
நான் இந்த நேரத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன். இந்தப் போரில் புலிகள் பின்னடைவதாகவும் எல்லா இடங்களையும் கைப்பற்றுவதாகவும் சரத் பொன்சேகா சொல்கிறான். இனி அவர்கள் வெளியே ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்கிறான். இவ்வளவும் நடத்திக் கொண்டிருக்கின்ற சரத் பொன்சேகாவுக்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் கடன் கொடுத்தீர்கள். அடுத்தவாரம் பாகிஸ்தான் சென்று ஆயுதம் வாங்கிவிட்டான். எங்கள் வரிப்பணத்தில் இருந்து பணம் கொடுப்பீர்கள். அவன் வாங்கிக்கொண்டு பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கி எங்கள் மக்களைக் கொல்வான். அதற்கு ஒரு அரசு இங்கே. அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.
இத்தனைக்குப்பிறகு அங்கே இலங்கைத் தீவு பூராவிலும் இன்றைக்கு நாங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்கிறானே. நான் சொல்கிறேன். அந்த யுத்தத்தை பின்னால் இருந்து நடத்துவதே இந்திய இராணுவம் - இந்தியக் கடற்படை - இந்திய அதிகாரிகள். இப்படிப் பேசுவது தேசத்துரோகம் என்றால் வைகோ அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எது தேசத்துரோகம்? நீ சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்து எங்கள் மக்களைக் கொல்வது தேசபக்தியா? இதைக் குற்றம் என்று சொல்வது தேசத்துரோகமா? விடுதலைப்புலிகளின் பத்து போர்க்கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இலங்கைக் கடற்படை அல்ல. இந்தியக் கடற்படை. நான் குற்றம் சாட்டுகிறேன்.
உனக்கும் அவனுக்கும் சண்டையில்லையே? அவர்களுக்குள் அல்லவா சண்டை. நீ எதற்காக இலங்கையுடன் சேர்ந்து சண்டைபோடுகிறாய்? தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என்று ஒன்று போட்டார்கள். துப்புகொடுப்பது. வேவுசொல்வது அவர்கள் படை முகாம்களை அடையாளம் காட்டுவது. அவர்களுடைய நடவடிக்கைகளை தடுப்பது. இது மட்டுமல்ல இவர்களே ஈடுபடுகிறார்கள். இதை எப்படி நம்பமுடியும் என்று சொன்னால் சிந்தாமணி ரவுத், ஏ.கே.தாகூர் என்று இருவர் அடிபட்டுக் கிடக்கிறார்களே. அவர்கள் இந்திய இராணுவத்தினர். 265 இந்திய இராணுவத்தினர் அங்கே இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி சொல்லியிருக்கிறான்.
யாரைக்கேட்டு நீங்கள் அனுப்பினீர்கள்? அவர்கள் சிவிலியன்- ஒருவன் சொன்னானாம். அப்படி என்றால் சிவிலியனை அங்கே சண்டைபோட அனுப்பி இருக்கிறீர்களா? சிங்களத்துக்காரனுக்கு ஆதரவாக இங்கு இருந்து சிவிலியனை எல்லாம் நீங்கள் சண்டைபோட அனுப்பினால் தமிழன் போகமாட்டானா? அதைத்தானே நெடுமாறன் கேட்டார். ஆக, இவர்கள் செய்த உதவிகள் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்தியா துரோகம் செய்திருக்கிறது.
இப்பொழுது முந்தாநாள் கடைசியாக ஒப்பந்தம். இது இங்கு எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. இந்தியா - இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு வரை போட்டிருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் ஒரு இனத்தை அழிக்கக்கூடிய, இவர்களது நோக்கம் சொல்கிறேன் அங்கே இருக்கக்கூடிய போராளி இயக்கத்தை அழித்து விட வேண்டும். அவர்களை அடிமைகளாக்கிவிட வேண்டும். அதற்குப்பிறகு இவர்கள் சொல்கிற யோசனையைக் கேட்டு அவர்கள் இலங்கை அரசுடன் ஏதாவது பேசிக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான். இந்தியப் பிரதமர் இராணுவத்துக்கு உதவி செய்யவில்லை என்று இங்கே இருந்து கருணாநிதி சொல்லமுடியாது.
இந்தியப் பிரதமர் அக்டோபர் 2 ஆம் தேதி எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறுகிறார். நீ எழுதிய கடிதம் என் மனதைக் காயப்படுத்தி இருக்கிறது என்று சொல்லிவிட்டு இலங்கையின் ஒருமைப் பாட்டைக் காக்க நாங்கள் உதவிசெய்கிறோம். ஆகவே, இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்திருக்கிறோம். இலங்கைக்கு ஓரளவு இராணுவ உதவி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள் செய்திருக்கிறோம் என்று நேற்றைக்கு எனக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அப்படியானால், நான் கேட்கிறேன். அந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க நீங்கள் இராணுவம் அனுப்புகிறீர்கள். பாகிஸ்தான் ஒருமைப்பாட்டைக் காக்கத்தான் இராணுவம் அனுப்பினார்களா? மானக்ஷொ தலைமையில். அன்றைக்கு கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததே? இன்று இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க என்கிறாயே அங்கு தமிழர்கள் அடிமைகளாக நாயைவிட மோசமாக நடத்தப்படுவதால் அவர்களது பூர்வீக உரிமையில் தங்களுக்கு என்று தமிழ் ஈழம் கேட்கிறார்கள். சுயநிர்ணய உரிமை அனைவருக்கும் பிறப்புரிமை. அதில் நீ எப்படி அவர்களது ஒருமைப்பாட்டைக்காக்க இராணுவ உதவி செய்கிறேன் என்பாய்?
அந்த இராணுவ உதவியைக் கொண்டுதானே சிங்களவன் இவ்வளவு மக்களைக் கொல்கிறான். எனவே, இந்திய அரசு தமிழினத்துக்குத் துரோகம் செய்துவிட்ட அரசு. கண்ணி வெடிகளை வைக்க அனுமதிதந்த அரசு. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுக்காத அரசு? மன்மோகன் சிங் அரசு தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துவிட்ட அரசு. அதில் அங்கம் வகிக்கின்ற கருணாநிதி தலைமையிலான கட்சியும் இந்தத் துரோகத்தில் பங்கேற்க வேண்டும்.
இந்தப் பழிவந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் மாங்கொல்லையில் கூட்டம் போட்டு விட்டு ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். 7 மந்திரிகள் இருக்கிறார்களே! இராணுவ உதவி செய்யாதே! செய்தால் எங்கள் ஆதரவு கிடையாது என்று சொன்னார்களா? இராணுவத் தாக்குதல் வேகமாக நடக்கட்டும். உணவும் மருந்தும் போகாமல் இருக்கட்டும். அங்கு இருக்கின்ற போராளிகள் மடியட்டும் என்கின்ற எண்ணத்தில்தான் நீங்கள் வேண்டும் என்றே மன்மோகன் சிங் அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்து இருக்கிறீர்கள் என்று தமிழகத்தின் முதலமைச்சரை நான் குற்றம் சாட்டுகிறேன்.
மாவீரன் பகத்சிங்கின் நூற்றாண்டு நிறைவுபெறும் நேரத்தில் பகத்சிங் எந்தக் கொள்கைகளுக்காக வாழ்ந்தானோ, எந்த இலட்சியங்களுக்காக வாழ்ந்தானோ அவன் மரணத்தைத் துச்சமாக கருதி போராடினான். அதே உணர்வோடு, அப்படிப்பட்ட எண்ணத்தோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் பதவிகளுக்காக இயக்கம் நடத்தவில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவையும் நடத்துவதற்கு மனம் இல்லாதவர்கள் அவர்கள். தமிழர்களைப்பற்றி இன்றைக்குக் கவலைப்படப்போவதில்லை. தமிழர்கள் விட்ட கண்ணீர்தான் கடல் நீராக மாறியிருக்கிறது என்றார் அண்ணா. அண்ணா நூற்றாண்டு விழா நடத்திய அதேவேளையில்தான் பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவையும் நடத்துகிறோம்.
வாழ்க பகத்சிங்கின் புகழ்!
வளர்க பகத்சிங்கின் வீர உணர்ச்சி!

