தி.மு.க.வின் அடுத்த தலைமையைப் பற்றிய சிந்தனையோ, கேள்வியோ இல்லாத காலத்தில் ‘அடுத்த தலைவர் நான்தான்’ என்று சொல்ல, ஆர்க்காடு வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் பைத்தியமா பிடித்து இருந்தது? அப்படிச் சொல்லி இருந்தால், அவர்கள்தாம் கருணாநிதிக்குத் துரோகிகள்! வைகோ

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Sun, 29/03/2009

தி.மு.க.வின் அடுத்த தலைமையைப் பற்றிய சிந்தனையோ, கேள்வியோ இல்லாத காலத்தில்
‘அடுத்த தலைவர் நான்தான்’ என்று சொல்ல, ஆர்க்காடு வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் பைத்தியமா பிடித்து இருந்தது?

அப்படிச் சொல்லி இருந்தால், அவர்கள்தாம்
கருணாநிதிக்குத் துரோகிகள்!

வைகோ அறிக்கை!

அந்தநாள் ஞாபகம் வந்தது என்றும், கட்சித் தலைமையைக் கைப்பற்றும் நோக்கத்தில், தான் பெயர் சொல்ல விரும்பாத, குட்டைமனப் பேராசை கொண்ட ஒருவன் செயல்பட்டது தெரிந்தது என்றும், கவிதைக் கடிதம் என்ற பெயரில், முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி, நஞ்சு எனும் கோடாரி கொண்டு என்னைத் தாக்கி உள்ளார்.

என் வாழ்விலும் என்றுமே மறக்க முடியாத துன்பமும் துயரமும் சூழ்ந்த நாள்களில் மிக முக்கியமான நாள்தான், 1993 அக்டோபர் 3 ஆம் தேதி ஆகும்.

‘வை.கோபால்சாமியின் ஆதாயத்துக்காக, விடுதலைப் புலிகள் கலைஞர் கருணாநிதியைத் தீர்த்துக்கட்ட சதிசெய்து உள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வந்து உள்ளதாக, மத்திய உளவுத்துறை அனுப்பிய செய்தியை, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அண்ணா தி.மு.க. அரசு, அக்டோபர் 2 ஆம் தேதி கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தபோது, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னைவந்து சேருவதற்கு முன்பாகவே, என்னிடமும் விளக்கம் எதுவும் கேட்காமல், அக்டோபர் 3 ஆம் தேதி காலையில், செய்தியாளர்களை அழைத்து, அந்தச் செய்தியை, கலைஞர் கருணாநிதி வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்கள், உங்களை விடுதலைப்புலிகள் எதற்காகக் கொலை செய்ய வேண்டும்? என்று கேட்டவுடன், ‘காரணம்தான் அந்தச் செய்தியிலேயே இருக்கிறதே’ என்று கூறினார்.

செய்தியாளர்கள் அந்த அறையை விட்டு வெளியேறும் தருணத்தில் அவர்களை மீண்டும் அழைத்து, ‘தான் கூறிய பதிலைப் பிரசுரிக்க வேண்டாம்’ என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

நினைவில் வாழும் தினகரன் கே.பி.கே. அவர்களின் நிர்வாகத்தில் தினகரன் ஏடும், கோவை, சேலம் மாலை முரசு ஏடுகளும் இருந்ததால், செய்தியாளர்கள் சந்திப்பில் கலைஞர் கருணாநிதி கூறியதை அப்படியே வெளியிடுமாறு கே.பி.கே. அவர்கள் கூறியதன்பேரில், கலைஞரின் பேட்டியைத் தணிக்கை செய்யாமல் பிரசுரித்தன.

மறுநாள், 4 ஆம் தேதி அன்று, சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கூட்டி, தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அவசரமாகக் கூட்டி, அக்கூட்டங்களில் ‘தி.மு.க. தலைவரைக் கொலை செய்யச் சதிசெய்யும் துரோகி வை.கோபால்சாமியை, தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கலைஞர் கருணாநிதி வடித்துக் கொடுத்த தீர்மானத்தை, அக்கூட்டங்களில் நிறைவேற்றச் செய்தார்.

அப்போது சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் தா.கிருஷ்ணன். பின்னாளில், தான் கொலைசெய்யப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, தனது உற்ற நண்பர்களிடம், ஒரு பாவமும் அறியாத வைகோவை, கொலைப்பழி சுமத்தி வெளியேற்றுவதற்கு தன் மனசாட்சிக்கு விரோதமாகத் தாம் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்தப் பாவத்தைத்தாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பதாகவும், வேதனையோடு கூறிஉள்ளார்.

அக்டோபர் 5 ஆம் தேதி, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி, ‘ஒரு குகையில் இரண்டு சிங்கங்கள் இருக்கமுடியாது’ என்றும், ‘ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது’ என்றும்கூறி, என்னைத் தி.மு.கழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறிய கருத்துக்கு, அக்கூட்டத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால், ‘இதுபற்றி கட்சித் தலைவரும், பொதுச்செயலாளரும் முடிவு எடுப்பார்கள்’ என்று அறிவித்தார்.

அதன்பின், ‘கட்சியில் போட்டித் தலைவராக நான் முயற்சிப்பதாகத் தலைப்பு இட்டு, அபாண்டமான பல பொய்க்குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தி எழுதிய உடன்பிறப்பு மடல், ஏழாம் தேதி காலையில் வெளியாயிற்று,
கட்சியில் தலைமைப்பதவி என்பதை நான் கனவிலும் எண்ணியது இல்லை, கற்பனையிலும் கூடக் கருதியது இல்லை,
என்மீது சுமத்தப்பட்ட கொடும்பழியால், வேதனையில் கொதித்த தி.மு.கழகத் தோழர்கள் ஐவர், தீக்குளித்து மடிந்தார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தைச் சிதைப்பதற்கும், அழிப்பதற்கும் அவர் எடுத்துக்கொண்ட பல முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனதால், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிர்வாகிகள் இருவரைக் கைவசப்படுத்திக் கொண்டு, கோடிகோடியாகப் பணத்தை வாரி இறைத்தும், ‘தி.மு.க.வுக்கு வந்தால் பதவி கொடுக்கப்படும்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தும்கூட, அந்த முயற்சியும் தோற்றபின், கடைசியாக ‘ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரைத் துரோகிகள் ஆக்கி, தன்னோடு சேர்த்துக் கொண்டபின், மறுமலர்ச்சி தி.மு.க.வை எவ்விதத்திலாவது நிர்மூலம் செய்துவிட வேண்டும் என்று எண்ணி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்மீது சுமத்திய கொடும்பழியை, நியாயப்படுத்த முனைந்துதான், பொய்யிலேயே வடிக்கப்பட்ட கவிதையை, நேற்று எழுதி இருக்கிறார்.

1991 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கூட்டப்பட்ட தி.மு.க. செயற்குழுவில், என்னைக் கட்சியில் இருந்து நீக்க, அவர் மேற்கொண்ட முயற்சி தோற்றதற்குப்பின், இயக்கத்தில் பலவகையிலும் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அழைத்து நிகழ்ச்சி நடத்தியவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், 1993 ஏப்ரல் 14இல், நாகர்கோவிலிலும், 15இல் தூத்துக்குடியிலும், தி.மு.க. தலைவரின் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு ஆகி இருந்தன. ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு, ஆர்க்காடு வீராசாமி அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘குமரி மாவட்டத்தில் கலைஞருக்கான வரவேற்புச் சுவரொட்டிகள் சிலவற்றில், உங்கள் படத்தையும் சேர்த்துப் போட்டு, ஒட்டப்பட்டு இருக்கிறதாமே? கலைஞர் ரொம்பக் கோபத்தில் இருக்கிறார். சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்வதாகக் கூறுகிறார்’ என்றார். அதிர்ச்சிக்கு உள்ளான நான், அதுபற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. அப்படிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்கிறேன்’ என்றேன்.

தி.மு.க. தொண்டர்படைத் தோழர்கள் பத்துப்பேரையும், அப்போதைய நெல்லை மாவட்ட மாணவர் தி.மு.க செயலாளர் சேக் தாவூது அவர்களையும், இரண்டு கார்களில் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி, கலைஞர் படத்தோடு என் படமும் இடம் பெற்று இருக்கும் சுவரொட்டிகளைக் கிழித்து அகற்றச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர்கள் குமரி மாவட்டத்துக்குச் சென்று, அத்தகைய சுவரொட்டிகளை அகற்றியபோது, உள்ளூர் தி.மு.க. தோழர்களுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ‘நாங்கள் ஒட்டிய போஸ்டர்களை, நீங்கள் எப்படிக் கிழிக்கலாம்?’ என்று, தடுத்ததில், பிரச்சனை ஏற்பட்டது.

‘நீங்கள் இப்படிச் சுவரொட்டி போட்டதில், வைகோ மீதுதான் பழி வருகிறது. அவருக்கு ஏன் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறீர்கள்? என்று வாதாடி, அந்தச் சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்றினார்கள்.

12 ஆம் தேதி மாலையில், ஆர்க்காடு வீராச்சாமி அவர்களிடம் தொலைபேசியில் நான், ‘கட்சித் தலைவரின் மனதைப் புண்படுத்துவதாக நீங்கள் கூறிய சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டன’ என்றேன்.

14 ஆம் தேதி இரவு நாகர்கோவிலில் தி.மு.க. தலைவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், நானும் பேசினேன். நான் மிகவும் மனம் புண்பட்டு இருந்ததை உணர்ந்து, அன்று இரவு, ஆர்க்காடு வீராச்சாமி அவர்களும், துரைமுருகன் அவர்களும் என் அறைக்கு வந்து சந்தித்தனர்.

என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நான் ஒருபோதும் ஆசைப்படவில்லையே? அதே நேரத்தில், தி.மு.க. தலைவரின் மகனை, வருங்காலத் தலைவராகச் சித்தரித்து, நாடெங்கும் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், என்னை வரவேற்று போஸ்டர் ஒட்டிய தொண்டர்களை, மதுரை மாவட்டத்தில் கட்சியை விட்டு நீக்கி விட்டீர்களே? இது நியாயமா?’ என்று கேட்டேன்.

இதில், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியரைக் குறித்த எந்த வார்த்தையும் நான் சொல்லவில்லை.

தி.மு.க. தலைவரின் மகனை, பேராசிரியரே புகழ்ந்து உரைப்பதாக நான் சொல்லாத ஒன்றை, இட்டுக்கட்டி துரைமுருகனும், ஆர்க்காடு வீராசாமியும் கூறியதாகக் கலைஞர் கருணாநிதி திட்டமிட்டு எழுதி உள்ளார்.

அந்தக் காலத்திலேயே அவரது மகனை பொதுச்செயலாளர் பேராசிரியர் உயர்த்தினார் என்றும், தலைவருக்கு உரிய தகுதி தன் மகனுக்கு உண்டு என்றும் நிலைநாட்ட முயல்கிறார்.

‘தமக்குப்பிறகு கலைஞர், உம்மைத்தான் இயக்கத்துக்குக் தலைவர் ஆக்குவார்’ என்று வீராச்சாமியும் துரைமுருகனும் நம்பிக்கை தெரிவித்ததாகவும். அதனால் பெயர் சொல்ல விரும்பாத தம்பியின், (என்று என்னைக் குறிப்பிட்டு) முகத்தில் ஒளி பிறக்கச் செய்ததாகவும், கலைஞர் கூறுகிறார்.

நிதான புத்தி உடைய எவரும், மூளை குழம்பாத எவரும், இந்த வாதத்தை ஏற்க மாட்டார்கள்.

அடுத்த தலைவர் என்ற சிந்தனையிலேயே நான் இல்லை. அந்த எண்ணத்திலும் கட்சி இல்லை.

அப்படி இருக்கையில், வீராச்சாமியும், துரைமுருகனும் என்னை அடுத்த தலைவர் என்று கூறுவதற்கு, அவர்களுக்குப் பைத்தியமா பிடித்து இருந்தது?

அப்படிச் சொல்லி இருந்தால், கட்சிக்கும், தலைமைக்கும் அவர்கள்தான் துரோகிகள்.

வக்கரித்துப் போன கலைஞரின் பேனா. அடுத்து ஒரு விஷ அம்பை வீசுகிறது?

கலைஞருக்குப் பிறகு தலைவர் ஆவேன் என்கிறீர்களே, ஒருவேளை நமது கலைஞர் பெரியாரைப்போல, ராஜாஜியைப் போல 90 வயதுக்கு மேல் வாழ்ந்துவிட்டால், தலைவனாவதற்கு எத்தனை ஆண்டுகள் நான் காத்து இருப்பது? என்று நான் கேட்டதாகவும், தேள் கொட்டிய விஷமாக எண்ணி இந்தச் செய்தியைத் தலைவரிடம் சொல்வது இல்லை’ என்று சத்தியம் செய்து கொண்டார்களாம்.

கடைந்து எடுத்த அப்பட்டமான பொய்களைப் புனைந்து உரைப்பதில், கலைஞருக்கு நிகராக எவரும் இருக்க முடியாது.
தி.மு.கழகத்தில் நான் இருந்தபோதே, அக்கட்சித் தலைவரின் உயிர் எப்போது முடியும்? எப்போது தலைவன் ஆகலாம்? என்று நான் திட்டமிட்டதாக, இப்போது பழி சுமத்துவதன் நோக்கம் என்னவென்றால், இந்த அடிப்படையில்தான்.
அவரைத் தீர்த்துக்கட்ட விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற உறுதிப்படாத அந்தச் செய்தியை, உறுதிப்படுத்த முயற்சிக்கிறார்.

2005 ஆம் ஆண்டு, திண்டுக்கல்லில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், அப்போது அந்தக் கூட்டணியில் இருந்த நான், ‘இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு, என் அரசியல் வாழ்வில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உரை ஆற்றினேன்.

‘மதுரையில் இருந்து சென்னை வரை, இரவு முழுக்க புகைவண்டிப் பயணத்தில், கட்சித் தலைவருக்குச் சிறு ஊறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர் பயணித்த பெட்டியின் வாசலில், இரவு முழுவதும் கால்கடுக்க நின்று காவல் புரிந்ததையும், இராதாபுரத்தில் அவர் மீது உளி வீசியவனை ஓடிச்சென்று பிடித்து, நையப்புடைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்ததையும் சுட்டிக்காட்டினேன்.

இன்னொருவரின் வாழ்வு முடியவேண்டும்’ என்று நினைக்கின்ற கொடூர சித்தம் என் நிழலைக் கூடத் தீண்டாது. ஆனால், இலங்கைத் தீவில் வன்னிக்காட்டில், என் உயிர் முடியவில்லையே, என் அரசியல் பயணம் சமாதி ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர் யார்? என்பது, சம்பந்தப்பட்டவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அது அறியும்.

வாதத்துக்காக ஒன்றைக் கேட்கிறேன்.

1993 இல் என்மீது கொலைப்பழி சுமத்தியபின்பு, போட்டித் தலைவராக முயற்சிக்கிறேன் என்று குற்றச்சாட்டு வீசியபோது, அவற்றை நான் பல ஆதாரங்களோடு ஆணித்தரமாக மறுத்தேன்.

நாகர்கோவிலில் நள்ளிரவில் தற்போது குறிப்பிடப்படும் உரையாடல் நடைபெற்று இருக்குமானால், அப்போதே நிச்சயமாக வீராசாமியும், துரைமுருகனும் சொல்லி இருப்பார்களே?

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, நியாயப்படுத்த முயற்சித்து இருப்பார்களே?

அவர்கள் செய்துகொண்டதாகச் சொல்லப்படும் சத்தியமா அவர்களைக் கட்டுப்படுத்தி இருக்கும்?

நான் இதயத்தில் பூசிக்கும் அறிஞர் அண்ணா மீதும், என் உயிரினும் மேலாகப் போற்றும் தாயகமாம் தமிழ் மண்ணின் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்:

இன்றைய முதல் அமைச்சர் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டும், வீசும் பழிச்சொல்லும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள்.

1989 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி இரவே, அலைகடலில் அவர் சொல்லும் கள்ளத் தோணியில், பிரபாகரனைச் சந்திக்க வன்னிக்காட்டுக்குப் போனேன். பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சென்று, பிரதமர் ராஜீவ்காந்தியைச் சந்தித்து 9 ஆம் தேதி திரும்பிய கலைஞர் கருணாநிதி, அவரை வன்னிக்காட்டுக்குப் போகுமாறு ராஜீவ்காந்தி சொன்னதைத் தெரிந்துகொண்டு, நான் முன்கூட்டி, விளம்பரத்துக்காகச் சென்று, காரியத்தைக் கெடுத்துவிட்டேன்’ என்று சொன்னது பொய் என்பதை, உடனே என்னால் நிரூபிக்க முடிந்தது.

இப்போது என்மீது சுமத்தப்படும் நிந்தையும் பழியும், பெரிய பதவியில் இருப்பவர், அதிகார பலத்தால் ஆட்டிப் படைக்கும் ஊடகங்கள், ஏடுகள் மூலம், என்னையும் எங்கள் இயக்கத்தையும் அழிப்பதற்காகவே ஏவி உள்ளார் என்பதைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.

என்னை இழிவுபடுத்த எண்ணி, திருக்குறள் ஒன்றையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.

ஆனால், இன்றைய முதல் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவரைப் போன்றவர்களை எண்ணித்தான் திருவள்ளுவர் பொருட்பாலின் கடைசி அதிகாரமான ‘கயமை’ எனும் அதிகாரத்தில், முதலாம் குறட்பாவை எழுதி இருக்கிறார்.

‘மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாங் கண்டது இல்’

மக்களே போல் இருப்பர் கயவர்; அவர், மக்களை ஒத்திருப்பதைப் போன்ற ஒப்புமையை, வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டது இல்லை’ என்கிறார்.

இன்றைய முதல் அமைச்சருக்குத்தான் இந்தத் திருக்குறள் முற்றிலும் பொருந்தும்!

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

‘தாயகம்’
சென்னை - 8
29.03.2009

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)