நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, சுகுமார் முயற்சிக்கு வெற்றி! நேஃபட் நிர்ணயித்துள்ள விலைக்கே தேங்காயை கொள்முதல் செய்ய நடவடிக்கை. வைகோ பாராட்டு

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், தேசிய

மாவட்டம்: ஈரோடு, தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Fri, 12/03/2010

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, சுகுமார் முயற்சிக்கு வெற்றி! நேஃபட் நிர்ணயித்துள்ள விலைக்கே தேங்காயை கொள்முதல் செய்ய நடவடிக்கை.

வைகோ பாராட்டு


தென்னை விவசாயத்தில் கேரள மாநிலத்திற்கு இணையாகவும், கேரளாவை விஞ்சும் வகையிலும் தமிழ்நாட்டில் தென்னை விவசாயம் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தையே நம்பி உள்ளனர். பல்வேறு புறச் சூழல்களினால் வெளிச் சந்தையில் தேங்காய்க்கு உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காத காரணத்தால் தென்னை விவசாயம் பெரிய பாதிப்பிற்கும் அழிவிற்கும் உள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் இந்திய தேசிய விவசாயக் கூட்டுறவு சந்தை இணையம் (நேஃபட்) மூலம் கொள்முதல் செய்வது மிகவும் குறைவாகவே உள்ளது. கொள்முதல் செய்யப்படும் பருப்பில் ஈரப்பதம் அதிகம்; நிறம் சரியில்லை என்பன போன்ற பல காரணங்களைச் சொல்லி கொள்முதல் மறுக்கப்படுகிறது. இந்தக் குறையினைத் தவிர்க்க விவசாயிகளிடமிருந்து உரிதேங்காயை நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மறுமலர்ச்சி தி.மு.கழக ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அ. கணேசமூர்த்தி அவர்களும், பூஜ்ஜிய நேரத்தில் கேள்வி எண். 442/2009 மூலம் பொள்ளாச்சி நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. சுகுமார் அவர்களும் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். உரிய நடவடிக்கை எடுக்க வேளாண்துறை அமைச்சரும் உறுதி வழங்கியுள்ளார்.


மேலும், டெல்லியில் உள்ள இந்திய தேசிய விவசாய கூட்டுறவுச் சந்தை (நேஃபட்) இணைய நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் போஸ் அய்.ஏ.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து நேற்று (10.3.2010) இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனை ஏற்று நேஃபட் சென்னை கிளை மேலாளருக்கு விவசாயிகளிடமிருந்து உரிய தேங்காயை நேரடியாக நேஃபட் நிர்ணயித்துள்ள விலைக்கே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உடனடியாக உத்திரவிட்டு கடித நகலையும் வழங்கியுள்ளார்.


இந்த நடவடிக்கைகளுக்குக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கணேசமூர்த்திக்கும் திரு. சுகுமார் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நேஃபட்டின் நடவடிக்கையினை நடைமுறைபடுத்தும் வகையில் விவசாயிகளிடமிருந்து உரிதேங்காயைக் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)