மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் 26.03.2010 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல்

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தமிழ்நாடு

செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Sat, 27/03/2010

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கலந்துரையாடல் கூட்டம் 26.03.2010 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வழக்கறிஞர் இரா. அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் அ. குமணராஜா நன்றியுரை ஆற்றினார். இக்கலந்துரையாடல் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் எம்.டி. அருணன், இரா. நடராசன், சு. அறிவழகன், இராம. சிவசங்கர், ப. சுப்பிரமணி, எல். முருகேசன், இரா. கோவிந்தராசு, அரசு கணேசன், பம்மல் சு. வேல்முருகன், கான்சியஸ் இளங்கோ, எஸ். சீனிவாசன், ந. மலைசரவணன், ஆர். இராமகிருஷ்ணன், க. அன்பழகன், மா. இராஜா, எல். சங்கரன், நா. பூவனலிங்கம், திருமதி பி.வி.ஜெயகுமாரி விசு, உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் எண். 1


சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 28.07.2010 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்காக அடிக்கல் நாட்டினார். மேலும் இவ்விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாண்புமிகு நீதிபதிகள் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதாக இருந்த தமிழக முதல்வர் கடைசி நிமிடத்தில் பங்கேற்காமல் போனதற்கு விழா மேடையில் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய காரணம் வேறாக இருப்பினும், விழா மேடையின் பின்புலத்தில் ( back drop ) முதல்வரின் பெயர் இடம் பெறாததே காரணம் என்று விழாவுக்கு முதல்நாள் இரவில் அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது.


மேற்படி விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ஒரு செங்கல் எடுத்து வைக்கக் கூட முயற்சிகள் மேற்கொள்ளாத தமிழக அரசு, 18 மாதங்களுக்குள் சட்டமன்றத் தலைமைச் செயலகத்திற்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளது. தனி மனித காரணங்களுக்காக எழும்பூர் நீதிமன்றக் கட்டிடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அடிக்கல் நாட்டப்பட்ட எழும்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண். 2


எந்த வரன்முறையும் இல்லாமல் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கொடுக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்யுமாறு மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் வழக்கறிஞர்களின் சங்கங்களைக் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண். 3


உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழில் வாதிடுவதற்கு அனுமதி அளித்தது போல் சென்னை உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண். 4


வழக்கறிஞர் சேமநல நிதியை ரூபாய் பத்து இலட்சமாக உடனடியாக உயர்த்த வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண். 5


தமிழகத்தின் நலனுக்கு முரணாக -- தமிழகத்திற்கு உள்ள இயற்கையான உரிமைகளை மறுத்து, முல்லைப் பெரியாறில் பழைய அணைக்குக் கேடு செய்யும் வகையில் புதிய அணை கட்டுகின்ற முயற்சியையும், பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகின்ற முயற்சியையும் கைவிடக் கோரி கேரள அரசையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கையும் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகிற மே 28-ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வாகனங்களின் மூலமாகக் கொண்டு செல்லப்படுகின்ற உணவுப் பொருள்களைத் தடுத்து நிறுத்த தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் தடுத்து மறியல் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளார்.


மே 28-ஆம் தேதி நடைபெறுகின்ற மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் உள்ள கழக வழக்கறிஞர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய பாடுபடுவோம் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தலைமைக் கழகம்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’
சென்னை-8
26.03.2010

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)