மே 28 - கேரளச் சாலைகளை மறிப்போம் வாரீர்! வைகோ அறைகூவல்!
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், புறநகர்
மாவட்டம்: நீலகிரி, தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
மே 28 - கேரளச் சாலைகளை மறிப்போம் வாரீர்! வைகோ அறைகூவல்!
உதகையில் 22.03.2010 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக இருந்த நேரத்தில், இதே உதகை நகரில் உங்களைச் சந்தித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று நீண்டநேரம் உரையாற்றிவிட்டுச் சென்ற நான், இன்று மீண்டும் உதகைக்கு வந்து இருக்கிறேன். இப்பொழுது தேர்தல் காலமல்ல. நான் வாக்குக்கேட்டும் வரவில்லை. நிதானமாக எதையும் சிந்தித்து மக்கள் முடிவுக்கு வரவேண்டிய ஒரு காலகட்டத்தில் வந்து இருக்கிறேன்.
இங்கு உரையாற்றிய மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், ‘உதகையின் எதிர்காலம் பாழாகி விடும்; இருப்பதை இழக்க நேரிடும்; எழில் குறைகிறது; இயற்கையின் வண்ணம் மாறுகிறது, இந்த உதகைக்கு உரிய சிறப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கின்றன என்று கவலை மேலிடப் பேசினார். உதகை மட்டும் அல்ல, இன்றைக்கு உலகம் முழுவதும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன.
அறிவின் துணைகொண்டு நாம் அமைக்கின்ற தொழிற்கூடங்கள், நாம் எடுக்கின்ற பல முயற்சி கள், இயற்கையின் அமைப்பைச் சீர்குலைக் கின்ற வகையில் அமைந்து இருக்கின்றன. தொடர்ந்து இயற்கையின் மீது நாம் தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கின்றோம். எனவே, ஒரு பேராபத்து உலகத்தைச் சூழ்ந்து இருக்கிறது.
இந்த உதகை,கண்ணுக்குக் குளிர்ச்சி யாகவும், கருத்துக்கு இனிமையாகவும் இருப்பதால்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், அவர் கள் தேடிக் கண்டுபிடித்து இங்கே வந்தார்கள். கொடைக்கானலுக்கு வந்தார்கள். எங்கு பார்த் தாலும் பச்சைப்பசேல் என மரகதக் கம்பளத்தை ஒரு குன்றின் மீது போர்த்தியது போன்ற இயற்கை எழிலார்ந்த தோற்றம், வானுயர்ந்த மரங்கள் என இருந்தது ஒரு காலம். இன்றைக் குக் கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் வெட்டி, பொட்டல் காடாக மாறிக் கொண்டு வருகிறது. புதியபுதிய கட்டடங்களே அந்த மரகதக் கம்பளத்தைத் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டு இருக்கின்றன.
இயற்கையின் வனப்பு பாழாகிக் கொண்டு இருக்கிறது. குளிர்ந்த காற்று வீசினாலும் கூட, நான் வெப்பத்தை உணர்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், இதே நகரில், இதே மார்ச் திங்களில் நான் பேசுகிற போது, இதைவிடக் குளிர்ந்த காற்று வீசியதை உணர்ந்து இருக்கிறேன். பகல் ஒரு மணிக்குப் பேசும்போதுகூட, வெயில் தெரியவில்லை, வெப்பத்தை நான் உணரவில்லை. இன்றைக்கு அந்தத் தண்மையும், குளிரும் குறைந்து, வெப்பம் அதிகரித்து விட்டது. ஈஸ்வரன் இங்கே குறிப்பிட்டதைப்போல, இயற்கையை எதிர்த்து நாம் கேடுகள் செய்து கொண்டு இருக்கிறோம். தொழிற் கூடங்களில் இருந்து வெளியேறுகின்ற கரியமில வாயு காற்றோடு கலந்து, வெப்பத்தை அதிகரிக்கிறது. எனவே, இமயத்தில் உள்ள பனிப்பாறைகள் கூட உருகக் கூடும். அது எத்தனை ஆண்டு களுக்கு உள்ளாக நடக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், உறுதியாக உருகும். இன்றைக்கு நாம் பார்க்கின்ற இமயத்தின் தோற்றம் மாறிவிடும்.
அங்கே உள்ள பனிப்பாறைகள் உருகும் போது, பாய்ந்து ஓடுகின்ற பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை நதிகளில் ஒரு கட்டத்தில் வெள்ளம்போல, பிரளயம் போலப் பொங்கி வரும். அதன்பிறகு, எல்லாம் அழிந்துபோகும். கடல் நீரின் மட்டம் உயரும். அப்போது, கடல் ஓரத்தில் இருக்கின்ற நிலப்பகுதிகள், ஊர்கள் எல்லாம் கடலால் விழுங்கப்படும், சுனாமி வந்ததைப் போல. அப்படிப்பட்ட பேராபத்து, உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அதனுடைய தாக்கம், இந்த நீலகிரியையும் சாடுகிறதே என்ற கவலையையே இங்கே பேசிய கழக முன்னோடிகள் தெரிவித்தார்கள்.
நம் எல்லோருக்கும் பிடித்தமான இடம் இந்த நீலகிரி. புதிதாக மணம் முடித்த தம்பதிகள், தேன் நிலவுக்கு எங்கே போவது என்றால், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களுக்குப் போக முடியுமா? காஷ்மீருக்குப் போக முடியுமா? அதற்கு வசதி இருக்காது. ஊட்டிக்குப் போவோம் என்று தேடி வருகிறார்கள். திருமணத்துக்கு முன்பே, காதலர்கள் தேடி வருவதும் உதகைதான். இயற்கையிலேயே குளிராக இருப்பதால், கோடை காலத்தில் எல்லோரும் வந்து குவிகிறார்கள். எனவே, வணிகம் வளர்ந்தது. அதனால், ஒரு பகுதி செழிப்புற்றது.
ஆனால், இந்த உதகைக்கு, மூல ஆதாரமாகத் திகழ்கின்ற தேயிலைத் தோட்டங்களின் நிலை என்ன? என்று மாவட்டச் செயலாளர் கேட்டார். இந்த மண்ணின் மைந்தர்களுக்கு, 25 செண்டுக்கு மேல், சொந்த நிலங்கள் இல்லை. ஆனால், பிர்லா நிறுவனத்துக்கு 29,000 ஏக்கர் இருக்கிறது. பெருந் தொழில் அதிபர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி இருக்கிறார் கள். ஆனால், இந்த மண்ணின் மைந்தர் களில் யாருக்கும் 25 செண்டு நிலத்துக்கு மேல் இல்லை.
அது மட்டும் அல்ல. அரை ஏக்கர் கால் ஏக்கர் நிலத்தில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அதிலே கிடைக் கின்ற வருமானத்தைக் கொண்டுதான் வாழ்வு என்ற நிலையில், இந்தத் தேயிலையை நம்பி இருக்கின்ற மக்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை. தேயிலையை விளைவிப்பதற்கான செலவு, அதைப் பறிப்பதற்கான கூலி இதையெல்லாம் ஈடு கட்ட, பச்சைத் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் கிடைத்தால்தான், நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற கோரிக்கையை இந்தப் பகுதி வாழ் மக்கள், தேயிலையை நம்பி வாழுகிற மக்கள் சொல்கிறார்கள்.
1998 ஆம் ஆண்டு, 2 ரூபாய் கலால் வரி விதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து அட்டாரி நஞ்சன் அவர்களும், பல அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், டெல்லிக்குப் படை எடுத்து வந்தார்கள். அப்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இந்தியாவின் தலைமை அமைச்சராக அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இருந்தார்கள். எனது இனிய நண்பர் யஷ்வந்த் சின்ஹா அவர்கள் நிதி அமைச்சராக இருந்தார்கள். இவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு, அவர்களிடம் சென்றேன். நீலகிரி மாவட்ட மக்களின் துன்பங்களை எடுத்துச் சொல்லி, கலால் வரியை நீக்க வேண்டும் என்பதற்கான நியாயத்தை உணர்த்தியபோது, அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அந்தக் கலால் வரியை நீக்கிய செய்தியை நம்முடைய மாவட்டச் செயலாளர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.
இந்த மண்ணின் மைந்தர்கள் படுக இன மக்கள். அவர்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதும், நெடுநாளைய கோரிக்கை ஆகும். அவர்களுக்கு என்று தனித்துவமான பண்பாடு, பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வருகின்ற அந்தக் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதுபவன் நான். அவர்கள், என்னை வரவேற்கும்போதுகூட, நான் வேறு எங்கும் காண முடியாத வகையில், அவர்கள் எழுப்புகின்ற முழக்கம், எனக்குப் புரியாது. ஆனால், இருதயத்தின் அடிவாரத்தில் இருந்து அன்போடு குரல் எழுப்பி வரவேற்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நான் வலியுறுத்தினேன்.
இந்திய அரசு, இவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, படுகர் இன மக்களைப் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதில் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏதும் இல்லை.
இந்தப் பகுதி வாழ் மக்களின் நலனில் அக்கறை உடையவர்களாக, நீலகிரி மலையிலே வாழுகின்ற மக்களின் எதிர் காலத்தைப் பற்றிக் கவலை கொண்டவர் களாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம் செயல்பட்டு வருகிறது.
என்னுடைய உரையின் தொடக்கத்தில் பாவேந்தரின் பாடலை நான் குறிப்பிட் டேன். தமிழகத்தில் இயற்கையின் அனைத்து வளங்களும் இருக்கின்றன. உலகிலே எல்லா நாடுகளிலும் இத்தகைய வளம் கிடையாது. சில நாடுகள், முழுவதும் பனி படர்ந்து கிடக்கும். அங்கே சூரியனின் கதிர்களைப் பார்க்கவே முடியாது. வேறு சில நாடுகள் பாலைவனமாகக் கிடக்கும். அங்கே தகிக்கின்ற வெப்பத்தைத் தாங்கவே முடியாது. தென்றலின் குளுமையை அங்கே உணர முடியாது. ஆனால், நம் இன்பத் தமிழகத்தில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களும் உண்டு.
மலைக்காடுகளும், நதி வளமும், மருத நிலத்தின் செழிப்பும், கடல் அலைகளின் ஓசையும் எல்லாம் இருக்கிறது. சந்தன மணம் கமழும், இந்தக் குறிஞ்சி மண் ணின் வளங்களைப் பாதுகாக்க வேண் டும். இங்கே வாழுகின்ற மக்களின் நல னில் அக்கறை உள்ளவர்களாக நான் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.
கேரளத்தைச் சேர்ந்த மக்கள் இங்கே நிரம்ப வாழுகிறார்கள். இந்த ஊட்டி நகரத்தில் மட்டும் அல்ல, இந்த மாவட் டம் முழுவதும் நிரம்ப வாழுகிறார்கள். நீண்ட காலமாக வசிக்கிறார்கள். ஈழவ சமுதாயத்து மக்கள், தேர்தல் பிரச்சாரத் தின்போது என்னிடத்தில் ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தார்கள். பிற்படுத்தப் பட்டோரின் பட்டியலில் முன்பு அவர்கள் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், இப்போது நீக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார் கள். 1930 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசு ஆணைகளை எல்லாம் என்னிடம் காட்டினார்கள். இந்தமேடையிலும், மலையாள மக்களின் சார்பாக என்னிடம் ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக் கையை முழுமையாக ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். அந்த மக்களுடைய கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டவனாக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன்.
வடமாநிலங்களில் இருந்தும் இங்கே வந்து கடை வைத்து இருக்கிறார்கள். விடுதிகள் நடத்துகிறார்கள். கேரளத் தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், கூடலுhருக்கு அருகில் நமது தமிழக எல்லைக்கு உள்ளே வசிக்கிறார்கள். அவர்களை நான் நேசிக்கிறேன். யாரும் நமக்கு எதிரிகள் அல்ல.
இன்றைக்கு நான் இங்கே பேசுவதற்குக் காரணம், வருகிற மே 28 ஆம் நாள், கேரளத்துக்குச் செல்லுகின்ற சாலை களை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் மறிக்கும்; போக்குவரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறோம்.
ஆனால், மீண்டும் சொல்கிறேன். நாம் கேரள மக்களுக்கு எதிரிகள் அல்ல. அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் இங்கே பேசுகிறேன். செய்தி யாளர்களின் வழியாக, இந்த எல்லைக்கு அப்பால் இருக்கின்ற கேரளத்துச் சகோதர, சகோதரிகளுக்கும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் நேசிக்கிறோம். தமிழில் இருந்து கிளைத்து எழுந்ததுதான் மலையாள மொழி. இதை யாரும் மறுக்க முடியாது. அதில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், மலையாளம் என்பது செந்தமிழே என்றார் தந்தை பெரியார்.
என்னுடைய மலையாளத்துச் சகோதர, சகோதரிகளுக்குச் சொல்லுகிறேன். உங்கள் மாநிலத்தின் வழியாக, 2000 டி.எம்.சி. தண்ணீர் அரபிக் கடலில் கலந்து வீணாகின்றதே?
ஒப்பந்தப்படி, சட்டப்படி எங்களுக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடுப்பது நியாயம்தானா அச்சுதானந்தன் அரசு? கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் எனக்கு நல்ல நண்பர்தான். நாடாளுமன்றத்தில் இருவரும் ஒன்றாகப் பழகி இருக்கிறோம். பல விவாதங்களில் ஒன்றாகப் பேசி இருக்கிறோம். ஆனால், இன்றைக்கு, எவ்வளவு ஆணவத்தோடு பேசுகிறார்? குமுதம் ஏட்டுக்கு இந்த வாரம் பேட்டி கொடுத்து இருக்கிறார். ‘நாங்கள் நினைத்தால்தான் தண்ணீர் கொடுப்போம்’ என்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், நாங்கள் கொடுக்க மாட்டோம். கேரளத்தில் ஐந்து மாவட்ட மக்கள் அழிந்து போவதா? என்று கேட்கிறார்.
கேரள மக்கள் அழிய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோமா? கிடையாது. பொய் பேசக் கூடாது. அச்சுதானந்தனும், பிரேமச்சந்திரனும், கோயபெல்ஸ் பாணியில் பொய்ப் பிரச்சாரம் செய்யக் கூடாது. பென்னி குயிக் கட்டிய அணை, பூகம்பமே வந்தாலும் இடியவே இடியாது. கேரள மாநிலத்தில் இருக்கின்ற அத்தனை அணைகளும் இடிந்தாலும்கூட, பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை இடியாது. அத்தனை வலுவாகக் கட்டி இருக்கிறார். அடித்தளமே 200 அடி அகலம். மேலும்மேலும், வலுப்படுத்தப்பட்டு இருக்கிறது. எந்த அதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை பெற்று இருக்கிறது.
வாதத்துக்குச் சொல்லுகிறேன். அப்படியே அந்த அணைக்கு ஆபத்து ஏற்பட்டாலும், அதனால் வெள்ளம் பாய்ந்தாலும், பள்ளத்தை நோக்கித்தானே பாயும்? மேட்டுக்குப் பாயுமா?
அதைவிட உயர்ந்த பகுதிகளில்தானே கேரள மக்கள் வாழுகிறார்கள்? இவர் சொல்லுகின்ற பகுதிகள் எல்லாமே, தண்ணீர் பாய்கின்ற இடத்தைவிட உயர்ந்த இடம்தான். எனவே, ஆபத்து ஏதும் இல்லை. அடிப்படை உண்மைகளை வேண்டுமென்றே, திட்டமிட்டே மறைக்கிறார்கள். என்ன காரணம்? நமக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதற்காகத்தான் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்கிறார்கள்.
2010 மார்ச் 22 ஆம் நாள், உதகையில் பேசுகிறேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ‘வருமுன் காப்பவன்தான் அறிவாளி. வந்தபின்பு, புலம்புவது பேதைமை.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்றார் வள்ளுவர். வரப்போகின்ற ஆபத்தைத் தடுக்கத் திராணி அற்றவன் வாழ்க்கை, நொடிப்பொழுதில் நெருப்பில் பொசுங்கும் வைக்கோல் போல அழிந்து விடும் என்கிறார்.
அப்படி ஒரு நிலைமைக்கு நாம் ஆளாக வேண்டுமா?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அணையை நாங்கள் உடைத்து இருந்தால், யார் என்ன செய்து இருக்க முடியும்? என்று பிரேமச்சந்திரன் கேட்கிறார். இவர்கள் திட்டமிட்டுத்தான், அணையை உடைப்போம் என்ற பிரச்சாரத்தை, கேரள மக்களைத் தூண்டி, கடப்பாரையை எடுத்துக் கொண்டு வரச்சொல்லி, மாதத்துக்கு ஒரு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
அணையை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே வருகிறார்கள். அணையை உடைப்பது எப்படி? என்று, சில நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
நீங்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டால், ஐந்து மாவட்டங் களில் எங்கள் மக்களின் வாழ்க்கை அழிந்தே போகும். 2,17,000 ஏக்கர் பாசனத்துக்குத் தண்ணீர் இருக்காது. 65 லட்சம் மக்களுக்குக் குடிக்கச் சொட்டுத் தண்ணீர் கிடைக்காது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக்கூடல் மதுரை மாநகரத்துக்கும் குடிநீர் கிடைக்காது. சஹாரா பாலைவனம் போல ஐந்து மாவட்ட விளைநிலங்களும் வெடித்துப் போகும்.
அவர்கள்தான் புதிதாக ஒரு அணை கட்டத் திட்டமிட்டு இருக்கிறார்களே? அதில் இருந்து தண்ணீர் கொடுப்பதாக பிரேமச்சந்திரன் சொல்லுகிறாரே? ஏன் வைகோ வீண் விவகாரத்தை வளர்க்கிறான் என்று சிலர் நினைக்கலாம். நான் அந்த நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். தோழர்களே, அங்கே புதிய அணை கட்ட முடியாது. கட்டினாலும், நிற்காது.
அவர்கள் கட்ட நினைக்கின்ற இடத்தில் பாறைகள் வலுவாக இல்லை. அணை கட்டப் போகிறோம் என்று சொல்லி அங்கே உள்ள பாறைகளையெல்லாம் வெடி வைத்துத் தகர்க்கப் போகிறார்கள். அப்படி, 2,10,000 டன் பாறையை உடைக்கப் போகிறார்கள். அப்போது, பென்னி குயிக் கட்டிய அணையில் கீறல் ஏற்பட்டு விடும்.
மேலும், புதிய அணை கட்டத் திட்டமிட்டு இருக்கின்ற இடம் இதைவிடப் பள்ளம். அதில் இருந்து மேலே உள்ள இடத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. யார் நினைத்தாலும் கொடுக்க முடியாது. இந்தப் பேராபத்து நம்மைச் சூழ்ந்து இருக்கிறது.
நான் பிறந்த தமிழகத்துக்குக் கடமை ஆற்ற வேண்டும். நம் கண்முன்னாலேயே ஆபத்து வருகிறதே? இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம்.
அதோடு அவர்கள் நிற்கவில்லை. பாம்பாற்றுக்குக் குறுக்கே அணை கட்டப் போகிறார்கள். அமராவதி ஆற்றுக்கு வருகின்ற தண்ணீரைத் தடுக்கப் போகிறார்கள். 78,000 ஏக்கர் பாசனத்தை, கொங்குச் சீமை இழக்கும். கரூர், தாராபுரத்துக்குக் குடிதண்ணீர் கிடைக்காது.
தெற்கே குமரி மாவட்டத்தில் நெய்யாற்றுக்கு வந்து கொண்டு இருந்த தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். 28,000 ஏக்கர் பாசனத்தை இழந்து விட்டோம். திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்புச் சுவரைப் பழுதுபார்க்க அனுமதிக்காததால், அங்கே 30,000 ஏக்கர் பாசனத்தை இழந்து விட்டோம். ஆகவேதான் சொல்லுகிறேன். கேரள நண்பர்கள் இங்கே இருந்தால், கேரளத்தில் உள்ள நண்பர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். போனில் பேசுங்கள், குறுஞ்செய்திகளை அனுப்புங்கள். நீங்கள் இப்படிக் கேடு செய்தால், அதனால் எங்கள் வாழ்வு அழிந்து விட்டதே என்ற கோபம் இளைஞர் களுக்கு வருமானால், அதன்பிறகு ஏற்படுகின்ற விபரீத விளைவுகளை எண்ணிப் பாருங்கள்.
மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தமிழ் நாட்டிலே வாழுகின்ற கேரள மக்களை, சொந்தச் சகோதரர்களாகத் தானே நாங்கள் பாவிக்கிறோம். நீங்கள் நன்றாக வாழுங்கள். ஒரு கணம் சிந்தியுங்கள். கேரளத்தில் விளை நிலங்கள் இருக்கிறதா? நெல் விளைய வைக்க முடியுமா? நீர் நிரம்பிய நதிகள் இருக்கின் றன. ஆனால், நிலம் இல்லை.
எனவே, அந்தத் தண்ணீர் அரபிக் கடலில் வீணாகிறது. அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் நாங்கள் தருகிறோமே? அதுமட்டும் அல்ல, தமிழகத்தின் ஆற்று மணலை எல்லாம் அள்ளிக் கொண்டு போகிறீர்களே? கேரள ஆறுகளில் மணல் அள்ள முடியுமா?
எல்லாவற்றையும் எண்ணிப் பாருங்கள். அரிசி, பருப்பு, பால், காய்கறி எல்லாம் அனுப்புகின்ற நாங்கள், தொடர்ந்து அனுப்புவோம். அதற்குத் தயாராக இருக்கிறோம். எனவே, எண்ணிப் பாருங்கள். எங்களுக்கு நீங்கள் கேடு செய்தால், இதையெல்லாம் நிரந்தரமாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு விடுமே? உங்களுக்கு அதனால் என்ன லாபம்?
உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். தண்ணீரை நீங்கள் தடுத்தால், அதற்குப்பிறகு, உங்கள் தயவு எங்களுக்கு எதற்கு?
1998 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டில் 45 நாள்கள் சுற்றுப்பயணம் செய்வதற்கு, அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் சென்ற, ஏழு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன். அந்தக் குழுவின் தலைவராக என்னைத் தேர்ந்து எடுத்தார்கள்.
அந்தக் குழுவில், கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஜார்ஜ் ஈடனும் இடம் பெற்று இருந்தார். எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். பதினைந்து நாள்கள் கழித்து, நாங்கள் ஒஹையோ மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் சற்று உடல்நலக்குறைவால், தொடர்ந்து இரண்டு நாள்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மூன்றாவது நாள் அமெரிக்க அதிகாரிகள் இவரிடம் பேசினார்கள். மிக நல்ல மனிதர். கள்ளங்கபடம் அற்றவர். சிகாகோவில் இருக்கின்ற உறவினர்களைப் பார்க்க ஒருநாள் போய் வரலாமா? என்று அவர்களிடம் கேட்டு இருக்கிறார்.
ஏற்கனவே அவர் இரண்டு நாள்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், இவர்கள் ஒரு திட்டம் போட்டு, அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்து விட்டார்கள். அப்படி அனுப்பினால், அது அவமானப்படுத்தி அனுப்பியதாக அர்த்தம். பயணச் செலவு முழுவதையும் இவர் கட்ட வேண்டிய நிலைமை ஏற்படும். இந்தச் செய்தி, இரவு பத்து மணிக்கு எனக்குத் தெரிய வந்தது. நான் அந்த அதிகாரிகள் இருந்த அறைக்குப் போனேன். ‘எங்கள் உறுப்பினர் ஜார்ஜ் ஈடனை, இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப நீங்கள் முடிவு எடுத்து இருக்கிறீர்களாமே? என்று கேட்டேன். ‘ஆமாம். அவர் எங்களோடு ஒத்துழைக்கவில்லை. இப்போது சிகாகோ போக வேண்டும்’ என்கிறார் என்று சொன்னார்கள்.
நான் சொன்னேன்: அவர் உங்களிடம் அதற்கு அனுமதி கேட்டபோது, நீங்கள்தானே போகச் சொல்லி இருக்கிறீர்கள்? இன்றைக்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று சொல்லுகிறீர்களே என்ற போது, அவரைப்பற்றி ஒரு தவறான வார்த்தையை அவர்கள் சொன்னார்கள். நான் உடனே சொன்னேன்: வெள்ளை மாளிகைப் பணிப் பெண்ணிடமே தவறாக நடந்து கொண்ட ஒருவரை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு, எங்களைப் பற்றிக் குறை சொல்லுகிறீர்களே? என்று கேட்டேன். அவர்களுக்குக் கண்கள் சிவந்து விட்டன.
எவ்வளவு துணிச்சல் இருந்தால், எங்கள் ஜனாதிபதியைக் குறை சொல்லுவீர்கள்? என்று கேட்டார். ‘ஒருவரை நீங்கள் திருப்பி அனுப்பினால், அதைக் கண்டித்து அறிக்கை கொடுத்துவிட்டு, நாங்கள் ஏழு பேருமே இந்தியாவுக்குத் திரும்பப் போய்விடுவோம்’ என்று சொன்னேன். அலறிவிட்டார்கள். ‘அவசரப்படாதீர்கள், நாங்கள் எங்கள் முடிவை மாற்றிக் கொள்கிறோம்’ என்று சொல்லி விட்டார்கள்.
நடந்ததை அறிந்த ஜார்ஜ் ஈடன், என் அறைக்கு வந்து, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். அவருக்காக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் போராடவில்லை. அவரது மதிப்பைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வைகோ போராடினான். அவரை என் சொந்தச் சகோதரனாகக் கருதினேன். இதுவரையிலும், இந்தச் சம்பவத்தை, எந்தக் கூட்டத்திலும் நான் பேசியது இல்லை. இப்போது எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நீங்கள் எனது சகோதரர்கள். ஏன் இந்த விபரீத விளையாட்டிலே உங்கள் அரசு ஈடுபடுகிறது? என்றுதான் கேட்கிறேன்.
உங்கள் ஊர் வழியாக ஆறு ஓடுகிறது; அதனால் மறிக்கிறோம் என்று நீங்கள் சொன்னால், எங்கள் ஊர் வழியாக வருகின்ற சாலைகளை நாங்கள் மறிக்க மாட்டோமா? மே 28 போராட்டம் என்பது எச்சரிப்பதற்காகத்தான். அதையும் மீறி நீங்கள் அணையை உடைத்தால், மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்குமானால், எச்சரிக்கிறேன். இந்திய ஒருமைப் பாட்டுக்கு வேட்டு வைக்கின்ற வேலை அன்றைக்குத்தான் தொடங்கும். அமெரிக்க வல்லரசுக்கு அறைகூவல் விடுகின்ற வல்லமை பெற்று இருந்த இராணுவத்தைக் கொண்டு இருந்த சோவியத் ரஷ்ய ஒன்றியத்தின் கதி என்ன ஆயிற்று என்பதை நீ மறந்துவிடாதே.
ரஷ்யா உடையும் என்று யாரும் சொல்லாத காலத்தில், நான் பேசினேன். உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில், திருச்சி மாநாட்டில் பேசும்போது சொன்னேன். இதோ, சோவியத் ரஷ்யாவுக்கு உள்ளே குமுறல். மாÞகோ மீது குமுறல். இந்த நிலை நீடிக்குமானால், பதினைந்து துண்டுகளாக ரஷ்யா உடைந்து சிதறும் என்று பேசினேன். அன்றைக்கே பலர், என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? என்று கேட்டார்கள். நடக்கப்போவதைப் பாருங்கள் என்று சொன்னேன்.
அடுத்த இரண்டே ஆண்டுகளுக்கு உள்ளே, சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியது. 15 நாடுகளாகப் பிரிந்து போனது. கார்ல் மார்க்சின் கொள்கை அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் கட்டுமானமே உடைந்து போயிற்று. செஞ்சேனை அதைக் காப்பாற்ற முடியவில்லை என்று சொன்னால், இந்தியா என்றைக்கு ஒன்றாக இருந்தது என்று நாங்கள் கேட்க மாட்டோமா?
இன்றைக்கு இந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இருநுhறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. வரலாறு தெரியாமல் பேசாதீர்கள். இப்படிப்பட்ட அநீதிகளையெல்லாம் மத்திய அரசு அனுமதித்துக் கொண்டே இருந்தால், கண்டும் காணாமல் இருந்தால், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று ஒவ்வொரு மாநிலமும் அக்கிரமம் செய்ய முனைந்தால், அதன்பிறகு, மாநிலங்கள் துண்டுதுண்டாக உடைந்து போவதை யாரும் தடுக்க முடியாது. ஆகையால்தான் நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். மே 28 போராட்டம் அதற்காகத்தான் நடைபெறுகிறது. அணி திரண்டு வாருங்கள் என்று அழைக்கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கப் போராடுகிறது.
ஈழத்தமிழர் நலன் காக்கப் பாடுபடுகிறது.
அண்ணா எந்த ஜனநாயக தீபத்தை உயர்த்திப் பிடித்தாரோ, அதைப் பாதுகாக்கப் பாடுபடுகிறது.
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

