மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானங்கள் .
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், வறுமை, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் 16.3.2010 அன்று சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண்: 1
தமிழக நதிநீர் உரிமைகளை மறுக்கும், கேரள மாநிலத்துக்குச் செல்லும் எல்லைகளில் முற்றுகைப் போர்!
மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழகத்தின் நதிநீர் வாழ்வாதாரங்கள் அனைத்தையும், கேரள மாநிலம் பறித்து வருகிறது.
தியாகச் சுடர் காமராசர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், செண்பகவல்லி தடுப்பு அணைச் சுவரில் ஏற்பட்ட பழுதைச் சரிபார்ப்பதற்கு, இன்றுவரை கேரளம் நம்மை அனுமதிக்கவில்லை. இதனால், முப்பது ஆயிரம் ஏக்கர் பாசன இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாற்றில் வந்துகொண்டு இருந்த தண்ணீரைக் கேரளம் தடுத்து நிறுத்தியதால், 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.
கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்ட கேரளம் முயற்சித்து வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு வருகின்ற தண்ணீர் தடுக்கப்பட்டு விடும்.
கரூர் குடி தண்ணீர் இன்றித் தவிக்கும். தாராபுரம் பஞ்சத்துக்கு உள்ளாகும்.
தமிழகத்தில் இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை வதைக்கவும், தெற்குச்சீமையில் ஐந்து மாவட்டங்கள் பாசன வசதி இன்றிப் பாழ்படவும், மூர்க்கத்தனமான முடிவினை மேற்கொண்டு வருகின்ற கேரள அரசுக்கு எச்சரிக்கை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லுகின்ற வழியில், கம்பம் கூடலூரில் ம.தி.மு.க. மறியல் அறப்போர் நடத்தியது.
பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அதற்குப்பின்னரும், கேரள அரசின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பைக் கேரளம் காலில் போட்டு மிதித்துவிட்டது. அதுமட்டும் அன்றி, முல்லைப்பெரியாறு அணையை உடைக்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்று கேரளச் சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். கேரளத்தின் நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக ஆதரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆகி உள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற வழக்கை இழுத்தடித்துக் காலம் கடத்தும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வல்லுநர் குழு, முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு, அணையின் பாதுகாப்பை உறுதி செய்து உள்ள நிலையில், கேரளத்தின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அணையைப் பார்வையிட புதிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்து உள்ளது. இதனால், உச்சநீதிமன்றம் முன்பு தமிழகத்துக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று கேரள அரசு கூறி வருகிறது.
முல்லைப்பெரியாறில் தமிழகத்துக்கு 999 ஆண்டுகள் தமிழகத்துக்கு உரிமை உள்ள, தற்போது இருக்கின்ற அணையைப் பலவீனப்படுத்தி உடைப்பதற்காகத்தான், புதிய அணை கட்டப் போவதாகக் கேரளம் கூறுகிறது. தற்போது இருக்கின்ற அணையை விடப் பள்ளத்தில் கட்டப்போகும் அணையில் இருந்து, அவர்கள் நினைத்தாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது.
எனவே, ‘தமிழகத்துக்கு வருகிற தண்ணீரை மறித்தால், தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லுகின்ற பொருள்களைக் கொண்டு செல்வதைத் தடுப்போம்; நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு ஆளாகாதீர்கள்’ என கேரள அரசை எச்சரிக்கின்ற வகையில், மே மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்குச் செல்கிற அனைத்துச் சாலைகளையும் மறிப்பது என, மறுமலர்ச்சி தி.மு.கழகம் அறிவித்து உள்ளது.
பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், கம்பம் அப்பாஸ் அவர்களின் தலைமையிலான ஐந்து மாவட்ட முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கள் இறக்குவோர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், கழகம் நடத்த இருக்கின்ற போராட்டத்தை ஆதரித்து உள்ளனர். மேலும், தமிழ் இன உணர்வாளர்கள், பொதுநல அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவது என்றும், போரட்டத்துக்கான பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என்றும், இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 2
தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு!
மாநில அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற நாள்முதல், தமிழகம் இருண்டு விட்டது. வரலாறு காணாத மின்வெட்டால், விவசாயப் பணிகள் முடங்கிப் போய்விட்டன. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தொழில் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து உள்ளனர். பள்ளி இறுதித் தேர்வுக்கு மாணவர்கள் படிக்க முடியவில்லை. குடிநீர் வழங்குகின்ற கருவிகள் மின்வெட்டால் செயல் இழந்து விட்டதால், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் குடிநீர் வழங்கல் சீர்குலைந்து, மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நாளுக்கு ஒரு விருது, மாலைப் பொழுதுகளுக்கு ஒரு பாராட்டு விழா என, முதல்வருக்காக மின்னொளியில் ஆடம்பர விழாக்களை நடத்துவதில் காட்டிய அக்கறையை, மின்சார உற்பத்தியை மேம்படுத்துவதில் காட்டவில்லை. அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் தமக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மின்னொளி அலங்காரத்தைப் போலத் தாம் வேறு எங்கும் கண்டதே இல்லை என்று முதல் அமைச்சர் கருணாநிதி புளகாங்கிதம் அடைந்தார்.
முதல்வரின் மதுரை மகன் பிறந்த நாள் ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்காக, மதுரை நகரின் பல இடங்களில் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடியதால், சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழக மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
துணை முதல்வரின் பிறந்தநாளுக்காக, இரண்டு மாதங்களாக, சென்னை நகரில் 2000 அணிகள் பங்கு ஏற்கின்ற மின்னொளி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி, மின்சாரத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
மின் உற்பத்தியைப் பெருக்காமல், தமிழகத்தை இருளில் தள்ளிய, செயல் இழந்த தி.மு.க. அரசைக் கண்டிக்கின்ற வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும், ஏப்ரல் 7 ஆம் நாள் புதன்கிழமை அன்று, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 3
மறுமலர்ச்சி கொடிப்பயணம்!
கழகத்தின் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்துகின்ற வகையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, புதிய கொடிக்கம்பங்களை அமைத்து கழகக் கொடிகளை ஏற்றுகின்ற வகையில், ‘மறுமலர்ச்சி கொடிப்பயணம்’ நடத்துவது எனத் தீர்மானித்தபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிய பயணத்துக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து கரூர், மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, நுhற்றுக்கணக்கான இடங்களில் கழகக் கொடிகளை ஏற்றிவைத்து, இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து இருக்கிறார்கள். மறுமலர்ச்சி கொடிப்பயணம் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறது. தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும், மறுமலர்ச்சி கொடிப்பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 4
கழக அமைப்புத் தேர்தல்கள்!
கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் நிறைவு பெற்று, உறுப்பினர் அட்டைகள் அச்சிடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. உறுப்பினர் அட்டைகளை வழங்கிடும் பணியை நிறைவு செய்தபின்னர், கழகத்தின் அமைப்புத் தேர்தல்களை நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

