புதிய சட்டசபை பரிசு! மக்கள் நலன் புறக்கணிப்பு . வைகோ கருத்து!

விவகாரங்கள்: பொருளாதாரம், தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Sat, 20/03/2010

புதிய சட்டசபை பரிசு!
மக்கள் நலன் புறக்கணிப்பு .

வைகோ கருத்து!

அனைத்து உணவுப் பொருள்களின் விலையும், வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. பருப்பு, பயிறு உள்ளிட்ட உணவு தானியங்கள் விலைதாறுமாறாக உயர்ந்துவருவதை தடுக்க முடியாத தமிழக அரசு, சில பொருள்களுக்கு மட்டும் கண்துடைப்பு வரிகுறைப்பு செய்து உள்ளது ஏமாற்றம் தருகிறது. விலைவாசியைக் குறைப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ எந்தவிதமான அறிவிப்புகளும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இல்லை.


தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களிலும் வெகுவாகக் குறைந்து வருவது குறித்து தி.மு.க. அரசு அக்கறை கொள்ளவில்லை. தமிழக ஆறுகளில் ஆளும்கட்சியினரின் ஆதரவுடன் நடைபெறும் மாபெரும் மணல் கொள்ளையைத் தடுக்காமல், நிலத்தடி நீர்மட்டம் பெருக நிதி ஒதுக்கீடு செய்து பலன் இல்லை.


கரும்பு வெட்டுக்கூலியை உயர்த்தித் தரவும், டன் ஒன்றுக்கு 2500 ரூபாய் விலை கோரியும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், நெல் கொள்முதல் விலையில் ரூ 50 மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளதும், கரும்பு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிர்ணயம் செய்து உள்ளதும் எதிர்பார்த்த விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.


உரவிலை உயர்வு குறித்தோ, மரபு அணு மாற்றுக் கத்திரிக்கு அனுமதி வழங்குவது குறித்தோ, அரசின் தெளிவான கருத்தைக் காணமுடியவில்லை. ஆனால், இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பரிசு என்று ஏமாற்றுத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளைத் திசைதிருப்புகிறது.


கொங்கு மண்டலத்தில் தென்னை விவசாயிகளின் கள் இயக்கத்தின் கோரிக்கையும் அலட்சியப்படுத்தி உள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தால் தமிழக விவசாயிகள் சந்தித்துவரும் நெருக்கடிகளை அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லை.


கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. மின்வெட்டு காரணமாக விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் சந்தித்துவரும் நெருக்கடிகள், பொதுமக்கள் பெற்றுவரும் துன்பங்களைக் கண்டும் காணாமலும் இருந்த அரசு, இப்போதுதான் மின்உற்பத்தி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதுவும் வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான்.


தி.மு.க அரசு தென் மாவட்டங்களுக்கு அறிவித்த தொழில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இதுவரையிலும் நடைமுறைக்கு வரவில்லை. தென்மாவட்டங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.


மத்திய அரசில் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தி வரும் தி.மு.க., முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மத்திய அரசின் துரோகத்துக்குத் துணை போனது மட்டுமின்றி, சரியான புரிதல் இன்றி அலட்சியமாக இருந்ததால்தான் முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு எதிரான நிலை உருவானது.


தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு வரும் அக்கிரமத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசு, மீனவர்களை ஏமாற்ற திட்டங்களை அறிவித்து உள்ளதைத் தமிழக மீனவர்கள் ஏற்க மாட்டார்கள்.


படித்து வேலையின்றித் தவிக்கும் ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தோ பட்ஜெட்டில் தெளிவாக அறிவிப்பு இல்லை.


மணிக்கு ஒரு திருட்டு, ஒரு நாளில் பல கொலைகள் என, சீர்கெட்டுக் கிடக்கும் தமிழக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கும் கோரமான சாலை விபத்துகளைத் தடுக்கவும் நிதி ஒதுக்கீடு மட்டும் போதாது; அரசின் ஆக்கபூர்வமான செயல்பாட்டையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கொலைக் குற்றவாளிகள் உடனடியாக நீதிமன்றத்தில் சரண் அடைந்து பாதுகாப்பு பெறுகிறார்கள். ஏனெனில், தமிழக நீதிமன்றங்களில் கொலை வழக்குகளில் தண்டனை பெறும் விகிதம் மிகவும் குறைந்து விட்டது. எனவே, கொலைகாரர்களுக்குப் பயம் அற்றுப் போய்விட்டது.


முதல் அமைச்சரின் குடும்பத் தொலைக்காட்சிகளுக்கு வருமானத்தை ஈட்டும் இலவசத் தொலைக்காட்சித் திட்டத்து
க்கு, இந்த ஆண்டும் 500 கோடி ரூபாய் அரசு முதலீட்டை ஒதுக்கிக் கொண்டு உள்ளனர். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிக் கட்டடங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன. இருக்கைகள் உடைந்து போய்விட்டன. கிராமப்புறப் பள்ளிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றைச் சீர்படுத்துவதற்குப் போதிய நிதி ஒதுக்கும் எண்ணமே அரசுக்கு இல்லை.


குடும்ப வாரிசுகளுக்குப் பல்லாயிரம் கோடிகளைக் குவித்துக்கொண்டு, நாளுக்கு ஒரு பாராட்டு விழா கொண்டாடும் சீமான் கருணாநிதியின் அரசு, எப்படியும் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், தமிழகத்தை முன்னேற்றவோ, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவோ செயல்திட்டங்கள் அற்ற - தொலைநோக்குப் பார்வை இல்லாத நிதிநிலை அறிக்கையை தமிழக மக்களுக்குப் ‘புதிய சட்டசபைப் பரிசாக’ வழங்கி இருக்கிறது.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)