மார்ச் 8 - மகளிர் தினம் -வைகோ வாழ்த்து.
விவகாரங்கள்: தேசிய, பெண்ணுரிமை
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மார்ச் 8 - மகளிர் தினம் -வைகோ வாழ்த்து.
மார்ச் 8 - நூறாண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அடக்குமுறையை எதிர்த்தும், ஆதிக்கத்தை எதிர்த்தும் உரிமைக் கொடியை உயர்த்திப் போராடிய மார்ச் - 8 ஆம் நாளை, உலக மகளிர் நாளாக அகிலம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
அனைத்துத் துறைகளிலும் மகளிர் சம உரிமை பெற நடத்தப்பட்ட போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. வாக்குரிமைக்காகப் போராடினர்; வென்றனர். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கையும் வெற்றிபெற இருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்தை ராஜாராம் மோகன்ராய் ஒழிப்பதில் வெற்றி கண்டார். தந்தை பெரியார் அவர்கள் பெண்ணுரிமைச் சங்கநாதம் எழுப்பினார். உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர்.
இத்தனை வெற்றிகள் பெற்றிருப்பினும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகள், வன்முறை, அநீதி தொடர்வது மிகவும் வேதனை அளிக்கிறது. அச்சமின்றி பெண்கள் எங்கும் செயல்படுவதற்கும் பயணிப்பதற்கும் உரிய பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும்.
மகளிர்க்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்.

