ஈழத்தமிழனே! நீ மட்டும் தான் வரலாறு படைக்கின்றாய்.

செய்தித்துறை: அபிப்ராயம்

விவகாரங்கள்: மனித உரிமை

Date: 
Tue, 12/05/2009

ஈழத்தமிழனே !
இந்தியத் தமிழனை மன்னித்துவிடாதே !

உலக நாடுகளில் புலம் பெயர்ந்து
வாழும் தமிழர்கள் அனைவரும்
ஆர்ப்பரிப்புகளுடன், ஆவேசமாய் உனக்காக
சிலிர்த்து எழுகின்ற பொழுது -
நாங்கள் மட்டும் வெறும்
வார்த்தைகளால் வருத்தப்பட்டும்
மனதால் புழுங்கிக்கொண்டும் -
உமது உரிமைக்கான போரை
மாறுபட்டும் விமர்சிக்கின்றோம்.

ஒரு சிலர் மட்டும்
ஆற்றாமையால் தன் உயிரை
மாய்த்துக்கொள்ளும்
வேதனையும் தொடர்கின்றது.

அன்று ஆழிப்பேரலை (சுனாமி)
தாக்கியபோது,
அகிலத்தில் உள்ள மனித நேய
ஆர்வலர்கள் மற்றும் நாடுகள்
அனைவரும் உம்மை அரவணைத்தனர்.

ஆனால் .. இன்று அரசாங்கமே
கொத்துக் கொத்தாக
இரசாயன குண்டுகளை வீசி
மனித உயிர்களைக் கொல்லும்
மனித சுனாமி தனைப்
பார்த்தும் பாரமுகமாய் உள்ளனர்.

ஏன் தெரியுமா ? - அதிகாரப்போட்டியில்
நாடுகளுக்கு மற்றும் அரசுகளுக்கு
இடையே நிலவும் தள்ளு முள்ளுதான்.

நீ..முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக
இரத்தம் சிந்தி, உரிமைப்போர் நடத்தி
தலை நிமிர்ந்து நின்றாலும் - யா ம்
உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து -
உமக்கு உறுதுணையாய் இருக்கவே
ஈகோ பார்க்கின்றோம்.

இன்று..
தனியொருவரைத் தேடுகின்றோம் - எனும்
வேகத்துடன் தமிழ் இனம்
அங்கே அலைக்கழிக்கப்பட்டு
கொலைக்களமாக தமிழர்களும்,
தமிழச்சிகளும்
கூண்டோடு அழிக்கப்படும்
மாபெரும் மனித சோகம் என
ஈழத்தின் கொடுமைதனைக் காண்கின்றோம்.

ஆனாலும் இங்கே
உண்மை நிலையினை
உலகுக்குச் சொல்லவே
ஊடகங்கள் தயக்கம் காட்டுவதும்
உறுதியான தகவல்களை மறைப்பதுமான
மாபாதகச் செயலினையும் அறிகின்றோம்.
ஆனாலும் மௌனம்தான் காக்கின்றோம்.

ஏனெனில் .. நாங்கள் சமூகநீதி பேசுவோம்.,
ஆனால் சாதிமட்டும் வளர்ப்போம்.

சுயமரியாதை என்போம்.,
சுயநலன் மட்டுமே காப்போம்.
இன ஒற்றுமை வேண்டுவோம்.,
சமூக ஒற்றுமை \ குடும்ப ஒற்றுமை
காணவே தவிப்போம்.

எமக்கு.. மதம் பெரியது.,
அதன்வழி பேணும்
சாதி பெரியது..,
கிடைக்கும் பணமும் பதவியும்
அனைத்திலும் பெரியது.

ஏனெனில்
நாங்கள் நேற்றைய மரபுகளையோ
இன்றைய நெறிப்பாடுகளையோ -
நாளைய பார்வை குறித்த சிந்தனைப்
பற்றியோ கவலை கொள்வதே இல்லை.

இன்று மட்டும் நாங்கள் அதிகார பலமுடன்
ஆனந்தமாய் இருந்தால் போதும் என்கிறோம்.

பணி எனும் சேவைக்கான
பதவி என்பது இல்லாது,
பணம் தேடலுக்கான
தேர்தல்வழி பதவியினால்
மனித நெறிகள் அழிந்து
பகுத்தறிவு பாழ்படும் - எனச் சொல்லி
சமூகநீதிக் கோட்பாடுகளுடன்
சமுத்துவ நோக்கில்
மனிதனை நினை எனும் பெரியவரின் அரிய
சிந்தனையைக்கூட சிலை
ஆக்கி பேசாத கல்லென
சந்தியில் நிற்க வைத்துள்ளோம்.

ஈழத்தமிழனே!
நீ மட்டும் தான்
வரலாறு படைக்கின்றாய்.
நீ.. இன்று நடத்தும்
உரிமைக்கான போர்,
உலகத்தமிழ் இனத்தின்
வரலாற்று ஏடுகளில்
கறை காண மறையாத சுவடு.

உரிமையின் களம் கண்டு,
உலகெல்லாம் ஒன்று பட்டு
ஓங்கிய மரபுகளுடன்,
அவலங்களை எதிர்கொண்டு
இலட்சியப் போர் புரிகின்றாய்!
நீ மட்டும் தான் புறநானூறு பகரும்
மறத்தமிழனாய் மிளிர்கின்றாய்.

உரிமைக்கான குரல்,
உலகில் இதுவரை
முடங்கிப் போனதாக வரலாறு இல்லை.
உன்குரலும் இன்று ஓங்கி ஒலிக்கின்றது.
உனது இலட்சியம் நிச்சயம் வெல்லும்.

ஆனாலும்.. அப்போதும் .. நீ !
இந்தியத் தமிழனை மன்னித்து விடாதே!

நன்றி ! வணக்கம்.

மனிதம் நினைப்போம்..
மனித நேயம் வளர்ப்போம்

எழுத்து . மனிதம் இராசாமணி

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)