தமிழ்நாட்டில், நீதிமன்றத் தீர்ப்புக்கே மதிப்பு இல்லை! நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் தி.மு.க. அரசு! கோவையில் காவல்துறை அராஜகத்தின் உச்சகட்டம்! வைகோ கடும் கண்டனம்!

விவகாரங்கள்: தொழிலாளர், சட்ட ஒழுங்கு, தேசிய

மாவட்டம்: கோயம்புத்தூர் - மாநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Tue, 04/05/2010

தமிழ்நாட்டில், நீதிமன்றத் தீர்ப்புக்கே மதிப்பு இல்லை!


நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் தி.மு.க. அரசு!


கோவையில் காவல்துறை அராஜகத்தின் உச்சகட்டம்!


வைகோ கடும் கண்டனம்!


சட்டத்தையும், நீதியையும் அடியோடு ஒழித்துக்கட்டும் வேலையில், மைனாரிட்டி தி.மு.க. அரசு, காவல்துறையைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. கோவை-பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சு ஆலை முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகம், மறுமலர்ச்சி தி.மு.க. வின் அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளரான திருப்பூர் துரைசாமி தலைமையில் முறைப்படி இயங்கி வருகிறது. ஆனால், 1997 இல் தி.மு.க. ஆட்சியில் தொழிற்சங்கக் கட்டடத்தை ஆளும் தி.மு.க.வினர் ஆக்கிரமிக்க முனைந்து, காவல்துறையையும், வருவாய்த் துறை அதிகாரிகளையும் பயன்படுத்தி, ம.தி.ம.க. நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு, கட்டடத்தைப் பூட்டுப் போட்டனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க. வழக்குத் தொடுத்ததன் பேரில், உயர்நீதிமன்ற நீதிபதி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குக் கண்டனம் தெரிவித்து, கட்டடத்தை மீண்டும் திருப்பூர் துரைசாமி அவர்களிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்துத் தீர்ப்பு அளித்தார்.


ஏற்கனவே கோவையில் இந்தப் பிரச்சினை குறித்துத் தொடரப்பட்டு வழக்குகளில், கோவையில் உள்ள இரண்டு நீதிமன்றங்கள், திருப்பூர் துரைசாமியின் நிர்வாகத்தில்தான், தொழிற்சங்கமும், கட்டடமும் இயங்கும் என்று, தீர்ப்பு வழங்கின. அதை எதிர்த்து, தி.மு.க.வினர் தொடுத்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்தப் பின்னணியில், இந்த ஆண்டு மார்ச் 6 ஆம் நாள், திருப்பூர் துரைசாமி அவர்களின் கையெழுத்தைப் போர்ஜரியாக பொய்க் கையெழுத்து இட்டு, ஒரு சுற்று அறிக்கை அனுப்பி, மார்ச் 24 ஆம் நாள் ஒரு நிர்வாகிகள் நடந்ததாக, மோசடி ஆவணங்களைத் தயார் செய்து, அதில் 58 பேர் கலந்து கொண்டதாகக் கூறி, 24 பேர்களுடைய கையெழுத்தை, போர்ஜரியாகப் போட்டு, 17 பேர் கையெழுத்து இடாமலேயே, அவர்களது பெயர்களை மட்டும் எழுதிக் கொண்டு, மற்றும் தி.மு.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 14 பேர்களை அதில் கையெழுத்து இட வைத்து, மிகப்பெரிய மோசடியைச் செய்து, அந்த பொய்யான ஆவணங்களைக் கொண்டு, மார்ச் கடைசியில், கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், தேர்வு செய்ததாக மோசடியாக அறிவிக்கப்பட்டவர்களிடம், நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று, ம.தி.மு.க. தரப்புக்குத் தெரிவிக்காமலேயே ஒருதரப்பாக, நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது.


இது முழுக்க முழுக்க மோசடியாக நடைபெற்ற செயல் என்பதையும், இந்த அராஜகமான நடவடிக்கையைக் கண்டித்தும், தி.மு.க. தவிர்த்த அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களும் அறிக்கை தந்ததோடு, அநீதிக்கு இடம் அளிக்காதீர்கள் என்று முதல் அமைச்சருக்குக் கடிதமும் அனுப்பினர்.

அப்படி இருந்தும், காவல்துறையின் துணையோடு, ஆளுங்கட்சியினர் தொழிற்சங்கக் கட்டடத்தை ஆக்கிரமித்தனர். இதைக் கண்டித்து, கோவையில் என்னுடைய தலைமையில் ஏப்ரல் 15 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு ஏற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. அதில், தி.மு.க. தவிர்த்த பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த அநீதியைக் கண்டித்தும், கட்டடத்தை துரைசாமி அவர்களின் நிர்வாகத்தில் ஒப்படைக்கக் கோரியும் உரை ஆற்றினர்.


இதுகுறித்து, திருப்பூர் துரைசாமி அவர்கள், வழக்குத் தொடுத்ததில், கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, நியாயத்தை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கியது. எதிர்த்தரப்புக்கும் வாய்ப்புக் கொடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு, பஞ்சு ஆலை தொழிற்சங்கம் திருப்பூர் துரைசாமி அவர்களின் தலைமையில் செயல்படுவதற்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது. தி.மு.கழகத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பைத் தந்த நீதிமன்றத்தை விட உயர் அதிகாரம் பெற்ற கூடுதல் மாவட்ட நீதிமன்றம், இப்போது தீர்ப்பு அளித்து உள்ளது.


தனது தரப்பு நியாயத்தை, காவல்துறை அதிகாரிகளிடம் திருப்பூர் துரைசாமி அவர்கள், மே ஒன்றாம் தேதி அன்று காலையில் சந்தித்து, முறையாக எடுத்துச் சொல்லி, தொழிற்சங்கத்தில், நாங்கள் செயல்படுவதற்கு, சட்டப்படியும், நீதிமன்றத் தீர்ப்பின்படியும் எங்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையில், அக்கட்டடத்தில் நாங்கள் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். காவல்துறையினர், இதற்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும் என்று கேட்டபோது, ‘உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது, தீர்ப்பும் இருக்கிறது. எதற்கும் ஒருநாள் அவகாசம் தாருங்கள்’ என்று, கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள், தெரிவித்தனர்.


அதனால், 1,2 தேதிகளில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், இன்று காலையில் தங்களுக்கு உரிமையான தொழிற்சங்கக் கட்டடத்துக்குச் செல்வதற்குத் திட்டமிட்டு இருந்த நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரை, கோவை மாநகரில் உள்ள மாவட்ட ம.தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவகத்தின் வாயிலிலேயே காவல்துறை கைது செய்து உள்ளது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி, கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன், விவசாய அணிச் செயலாளர் சூலூர் பொன்னுசாமி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அர்ஜூன்ராஜ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


சட்டத்தையும், நீதியையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மோசடியாக ஆக்கிரமிப்புச் செய்தவர்களுக்குச் சாதகமாக, காவல்துறையையும் தொழிற்சங்கக் கட்டடத்தைச் சுற்றி நிறுத்திவிட்டு, ம.தி.மு.க. அலுவலக வாயிலிலேயே கழகத்தின் முன்னணியினரையும், தொண்டர்களையும் கைது செய்தது, சகிக்க முடியாத அக்கிரமச் செயல் ஆகும்.


மோசடி ஆவணங்களை ஆளுங்கட்சியினர் தயார் செய்த நடவடிக்கைகள் அனைத்தும் முதல் அமைச்சருக்கு நன்றாகவே தெரியும். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பும், மறுமலர்ச்சி தி.மு.க.வின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக்காட்டிய பின்னரும், காவல்துறையை ஏவிவிட்டு, நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலை காவல்துறை அரங்கு ஏற்றியதற்கு, முழுக்க முழுக்க முதல் அமைச்சரே பொறுப்பாளி ஆவார்.


தமிழ்நாட்டில், நீதிமன்றத் தீர்ப்புக்கே மதிப்பு இல்லை. சட்டத்துக்குப் பாதுகாப்பு இல்லை. ஜனநாயக உரிமைகளுக்கு, இதைவிடப் பேராபத்து வேறு ஒன்று இருக்க முடியாது.


உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வன்முறையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தபோது, ‘நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?’ என்று தன் அமைச்சர்களை ஏவிவிட்டு வசைபாட வைத்தவர்தான் இன்றைய முதல் அமைச்சர்.


கோவையில் நடத்தப்பட்ட தி.மு.க. அரசின் அக்கிரமத்தையும், காவல்துறையின் கைது நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தொழிற்சங்கக் கட்டடத்தை, திருப்பூர் துரைசாமி நிர்வகிப்பதற்கு, சட்டப்படி உள்ள உரிமையை நிலைநாட்டி, ஆளுங்கட்சி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


தமிழகத்தில், சட்டத்துக்கும் நீதிக்கும் எதிராக அராஜக வெறியாட்டத்தை, ஆளுங்கட்சியே காவல்துறையின் துணையோடு நடத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நாஜிகளும், பாசிஸ்டுகளும் நடத்திய சர்வாதிகார காட்டு ஆட்சியின் பிடியில், தமிழகத்தை நாசமாக்கும் விபரீதம் வேகமாக உருவாகி வருகிறது என்பதை, ஜனநாயகத்தில் அக்கறை உள்ள அனைவரும் எண்ணிப் பார்த்து, இந்தக் காட்டுத் தர்பாரைத் தடுப்பதற்கு, வெகுண்டு எழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)