கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் திண்டுக்கல் மாவட்டக் கொடிப்பயணம்! தி.மு.இராசேந்திரன் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்
விவகாரங்கள்: அரசியல், புறநகர்
மாவட்டம்: திண்டுக்கல்
செய்தித்துறை: தொகுப்புகள்
கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில்
திண்டுக்கல் மாவட்டக் கொடிப்பயணம்!
தி.மு.இராசேந்திரன்
மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆழமாக வேரூன்றுவதற்கு அடித் தளம் அமைத்துத் தந்ததன் மூலம் திராவிட இயக்கச் சரித்திரத்தில் திருப்பத் தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டத் தில், மறுமலர்ச்சிக் கொடிப் பயணம் மா பெரும் வெற்றிப் பயணமாக அமைந்தது. வேறெந்த கொடிப் பயணங்களைக் காட்டிலும் வலிமையான திட்டமிடல், நேர்த்தியான ஏற்பாடு, பத்திரிக்கை விளம்பரம், கார்களின் அணிவகுப்பு, ஒவ்வொரு கிராமத்து நிகழ்ச்சிக்கும் தனித்தனியாகத் துண்டுப்பிரசுரம், ஒரு ஊரிலும் விடுபடாத வகையில் தியாகி களின் திருப்பெயர் தாங்கிய கல்வெட்டு கள், எல்லாவற்றுக்கும் மேலாக பொங்கு மாங்கடலென நம் தலைவர் வைகோ அவர்களைப் பார்ப்பதற்கும் பேச்சைக் கேட்பதற்கும் அடங்காத ஆர்வத்தோடு ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமென மூன்று நாள் மறுமலர்ச்சிக் கொடிப் பயணம் எழுச்சிப் பண்பாடும் இயக்கத் திருவிழா வாகவே நடைபெற்றுத் திகைக்க வைத்தது.
செயலில் புயலின் வேகம் கொண்ட மாவட்டக் கழகத்தின் செயலாளர் என்.செல்வராகவன் அவர்கள், ஏப்ரல் 8ஆம் தேதி நண்பகலில் பாண்டியன் மூதுhரில் இருந்து பயணப்பட்டு வந்த நம் இலட்சியத்தலைவரை வரவேற்று தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகர் அவர்களின் செங்கல் தொழிற் கூடத்துடன் இணைந்த விவசாயப் பண்ணை வீட்டில் உணவருந்தச் செய்தார். சிறிது ஓய்வுக்கும் வாய்ப்பின்றி பிற்பகல் 3.30 மணிக்கெல்லாம் முதல் நாள் வடமதுரை ஒன்றியத்தின் கொடி ஏற்று நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. மாவட்டப் பொருளாளர் பி.கே.சுதர்சனன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் பாலசந்திரனும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரும் எங்கும் எழிற் கோலமும் எழுச்சிக்கோலமும் பூணச் செய்திருந்தனர்.
குளத்துhரில் உப்பிலியாபுரம் வீரப்பன் நினைவு கொடிக்கம்பத்திலும், சுந்தரபுரி யில் கவிஞர் குடியரசு நினைவுக் கம்பத் திலும், மோளப்பாடியூரில் கே.பி.கே நினைவுக் கம்பத்திலும் கழகக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார் தலை வர். இங்கு தே.மு.தி.க தோழர்கள் சக்தி வேல், முத்துசாமி, முத்துராஜ் ஆகியோர் கழகத்தில் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்து விராலிபட்டி ஊருக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு இன்ப அதிர்ச்சி. காங்கிரஸ் கரை போட்ட வேட்டி துண்டு அணிந்த அக்கட்சித் தோழர் தம் மனைவி மக்கள் குடும்பத்தினருடன் வைகோவை வரவேற்று பொன்னாடை அணிவித்துப் பூரித்தார். “விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு உங்களைவிட்டா யார் இருக்கா? நன்றாகப் பேசுங்கள்” என்று வாழ்த்தினார். நமது தலைவரின் குரல் எங்கெல்லாம் ஊடுருவி நன்மதிப்பைப் பெற்று வருகின்றது என்பதற்கு அத்தாட்சியாக அமைந்தது காங்கிரஸ் தோழர் சொன்ன வார்த்தைகள்.
ஓங்கி எழும் மேளச் சத்தத்தின் ஒலியை வெல்லும் கணீர் குரலில் ஈட்டிமுனை இளமாறனின் முழக்கம் தலைவரின் வருகையை எதிர்நோக்குவோர் ஆவலைக் கூட்டியது. விராலிபட்டி வெள்ளப் பொம்மன்பட்டியில் நொச்சிபட்டி தண்டபாணி நினைவுக் கம்பத்தில் கொடி ஏற்றி, அண்ணல் காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உரையாற்றினார். கட்டுக்கடங்காத கூட்டம். மாவட்டப் பிரதிநிதி நடராசன் எழுச்சி ஏற்பாட்டில் ஊரே குலுங்கியது.
வெங்கடேசன்-தேன்மொழி தம்பதியரின் ஆண் மகவுக்கு வீர பிரபாகரன் எனப் பெயரிட்டு புறப்பட்டார் தலைவர். வேல்வார் கோட்டை காஜாமைதீன் நினைவுக் கம்பத்திலும், ஒன்றியத்தின் தலைநகரான வடமதுரை மூன்று சாலை சந்திப்பில் செயல்வீரர் தர்மன் நினைவுக் கம்பத்திலும் கொடி ஏற்றினார்.
வடமதுரையில் சாலைகளின் எந்தத் திசையிலும் வாகனங்கள் செல்ல இயலாத வகையில் மக்கள் திரள் அடர்த்தியாகவும், ஆரவாரத்துடன் திரண்டு கூட்டம் கேட்டனர். மோர்பாட்டியில் மேலப்பாளையம் ஜகாங்கீர் நினைவுக் கம்பத்திலும், காளப்பாடியில் முத்துக்குமார் நினைவுக் கம்பத்திலும், கொல்லப்பட்டியில் ஏழுமலை நினைவுக் கம்பத்திலும் தலைவர் வைகோ கொடி ஏற்றி வைத்துப் பேசினார். பி.ஜே.பி. கட்சியின் நகர செயலாளர் நாகப்பன் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
பிலாத்து கிராமத்தில் துறைமுகம் செல்வராசன் எம்.எல்.ஏ., நினைவுக் கம்பத்திலும், தென்னவன்பட்டியில் இடிமழை உதயன் நினைவுக் கம்பத்திலும், ஆண்டியாபட்டியில் வீர. இளவரசன் நினைவுக் கம்பத்திலும், பாகா நத்தத்தில் கோவை பாலன் நினைவுக் கம்பத்திலும் கொடி ஏற்றி உரையாற்றி முடிக்க நேரமும் இரவு 10 மணியைத் தாண்ட பயணம் தொடர்கின்றது. வழியில் 50க்கும் மேற்பட்ட தொண்டர் அணியினர் தத்தமது குடும்பத்தினருடன் குவிந்திருந்தனர். மலைப்பட்டி வந்துவிட்டதை நமக்கு உணர்த்தியது . இவ்வூரில் மட்டும் ஐம்பது தொண்டரணியினர் உள்ளனர் என்பது ஆச்சர்யம் அளிக்கும் செய்தியாகும். பெற்றோர், மனைவி, அண்ணன், தம்பி, குழந்தைகள் என அம்மன் கோவில் திருவிழாவிற்கு குதூகலத்துடன் திரண்டு நிற்பதைப் போல், ஊரார் அன்புத் தலைவர் வைகோ -வை வரவேற்க பரவசத்துடன் திரண்டிருந்த காட்சி இன்னமும் கண்களில் இருந்து விடுபட மறுக்கிறது. தம்மை நேசிக்கும் அந்த பாசத்தம்பிகளின் நேசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து மதுரை நாச்சியப்பன் கொடிக் கம்பத்தில் கொடியேற்றிப் பேசி விடைபெற்றார்.
கொம்பேறிபட்டியில் நரி என்ற கோவிந்தசாமி-ஆண்டிச்சாமி நினைவு கொடிக்கம்பத்திலும், சித்துவார்பட்டியில் ஈரோடு மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் அ.கணேசமூர்த்தி அவர்களின் அருமைத் துணைவியார் மாதரசி பாலாமணி அம்மையார் நினைவுக் கம்பத்திலும், குருந்தம் பட்டியில் தந்தை பெரியார் நினைவுக் கம்பத்திலும், பூசாரிபட்டியில் நத்தம் செல்லம் நினைவுக் கம்பத்திலும், காக்கயனூரில் அழகன் அம்பலம் - வெள்ளைச்சாமி நினைவுக் கம்பத்திலும் கொடியேற்றி பேசி முடித்து, புத்தூர் வந்தபோது 12 மணி ஆகிவிட்டது.
கலையரங்க மேடையில் ஏறிய தலைவர் வைகோ அவர்களே திகைத்துப் போனார்கள். ஊரே இரவு 8.30 மணி முதல் திரண்டு காத்திருப்பதை அறிந்து, நிறைவான உரை நிகழ்த்தி மாவட்டக் கழகப் பொருளாளர் பி.கே.எஸ். அவர்களின் சொந்த ஊரான வி.குரும் பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவுக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி திரண்டிருந்த மக்களிடையே பேசிவிட்டு மறுநாளின் முன்காலை வேளையில் அவரது இல்லத்தில் இரவு உணவை முடித்து திண்டுக்கல் வந்தடைந்தபோது அதிகாலை 3 மணி ஆகிவிட்டது.
இரண்டாம் நாள் (09.04.2010) பொழுது விடிந்தது. ஓய்வு என்ற சொல்லுக்கும் நமது தலைவருக்கும் என்ன விரோதமோ தெரியவில்லை. பழநிக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊரைச்சேர்ந்த தொண்டரணிக்கு புதிதாக தேர்வாகியிருக்கின்ற தம்பி பிரபு நேற்று மாலை நடந்த சாலைவிபத்தில் பலியாகிவிட்டார் என்ற துயரச் செய்தி வந்தது. தமக்கு நேரடியாக அறிமுகமில்லாத தம்பிதான் என்றாலும், மனது கேட்கவில்லை தலைவருக்கு. பழநி அரசு மருத்துவமனை பிரேத அறையில் கிடத்தப்பட்டிருந்த அந்த 22 வயதே ஆன வாலிப வேங்கையின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
“இன்னைக்கு பழநிக்கு தலைவர் வாராரும்மா... பார்க்கப் போகணும் என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாவே உன்னை பார்க்க தலைவரே வந்திருக்கிறார் தெரியலையா?” என்று பெருங்குரலில் அழுத அந்த தம்பியின் அம்மாவிற்கு தம் கண்களில் இருந்து பொல பொலவெனக் கொட்டிய கண்ணீரையே காணிக்கையாக்கிவிட்டு திண்டுக்கல் திரும்பினார் தலைவர் வைகோ.
பழநியில் இருந்து ஆயக்குடி தாண்டி சத்திரப்பட்டி நுழைவதற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னால் புதுபாலம் பேருந்து நிறுத்தம் அருகே 10 பேர் சுற்றிலும் நிற்க ஒரு பெண் விபத்தில் அடிபட்டது போல கிடக்கிறதே ... என்று நினைத்த நொடியில் காரில் இருந்து இறங்கி எதிர் திசைக்கு ஓடினார் தலைவர் வைகோ. பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பே ஓடும் சிற்றுந்தில் இருந்து அவசரமாக அந்தப் பெண் (வயல் காட்டில் வேலை செய்யும் தன் கணவருக்கு சாப்பாடு எடுத்து வந்த நிலையில்) இறங்கியதன் விளைவாக இவ்விபத்து நடந்ததாகவும், சுமார் 30 நிமிடங்கள் கடந்து விட்டதாகவும், அருகில் இருந்தோர் கூறினர்.
உயிர் இருப்பதாக உணர்ந்த தலைவர் வைகோ முதுகில் கை வைத்துப் பார்த்தபோது அந்த பெண் சற்று அசைந்து தலையை உயரே தூக்கினார். அடுத்த நொடியிலேயே சுதாரித்துக் கொண்ட மனிதநேயரான நம் தலைவர் வைகோ உடன்வந்த தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி அவர்களின் காரில் ஏற்றி நான்கு தொண்டரணியினரையும் உடன் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு மூன்றே நிமிடங்களில் முடிந்துவிட்டது.
இன்றைய சுற்றுப்பயண ஏற்பாடுகளை கவனிக்க எங்கோ பயணப் பாதையில் இருந்த மாவட்டச் செயலாளர் செல்வராகவன் அவர்களை உடனே பழநி மருத்துவமனைக்கு திரும்பி மருத்துவர்களை ஆயத்தமாக வைத்திருந்து அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிட விரைந்து கடமையாற்றுமாறு பணித்தார். ஒரு மணி நேரம் கடந்தது. திருமதி பழநி அம்மாள் என்ற அந்தப் பெண் இறந்துவிட்ட செய்தி வந்தது. தம்மால் முடிந்த உதவியைச் செய்திட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்தினார் வைகோ. சில நிமிடங்கள் கடந்தன.
இறந்த பெண்ணின் கணவர் ரெங்கசாமி தலைவரிடம் பேச வேண்டுமென எனது அலைபேசிக்கு அழைத்தார். “அய்யா, என் மனைவியைக் காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்து காரில் அனுப்பி வைத்தீர்கள். என் விதி. அவள் போய்விட்டாள்... நீங்க செய்த இந்த உதவியை நானும் என் பிள்ளைகளும் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம் அய்யா” என்று மனைவியை பறிகொடுத்த பத்தாவது நிமிடத்திலேயே நன்றி சொல்லி பேசிய ஏழை விவசாயி ரெங்கசாமியிடம், “என்னதான் நான் முயற்சித்தாலும் உங்கள் மனைவியைக் காப்பாற்ற இயலவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று அவருக்கு மறுமொழி பகன்று ஆறுதல் சொல்லி இரண்டாம் நாள் பயணத்திற்காக ஆயத்தமாகிவிட்டார் வைகோ. முதல்நாள் ஓய்வுக்கு விடிகாலை 3 மணிக்கு வந்து மறுநாள் முற்பகல் நிகழ்வுகள் இப்படியாக ஓய்வின்றி தொடர்கிறது பயணம். அதனால்தான் தலைவருக்கும் ஓய்விற்கும் என்ன பகையோ என்று குறிப்பிட்டேன்.
நண்பர்கள் பலர், கழக முன்னணியினர், தலைவருடன் இருக்கின்ற நீங்கள் எல்லாம் தலைவர் தேவையான போது ஓய்வெடுக்க வேண்டுமென்று சொல்ல மாட்டீர்களா? என்று என்னைப் போன்றவர்களை கடிந்து கொள்வதுண்டு. இந்த நிகழ்வில் பாருங்கள்... இறந்த தொண்டரணி தம்பி பிரபு தலைவருக்கு நேரடியாக அறிமுகமானவர் இல்லை. “அங்கே ஒரு கட்சி தம்பி இறந்து கிடக்கின்ற போது .. அதே மாவட்டத்தில் எப்படி இங்கே நம்மால் இருக்க முடியும்!
என்று நினைக்கின்ற மலரினும் மெல்லிய மனதுக்காரர் நம் தலைவர். இது ஒரு காரணம். இதுபோன்ற தவிர்க்க இயலாத காரணங்களால்தான் பல நேரங்களில் ஓய்வு வாய்ப்பு கிடைப்பதில்லை. இரத்தத்தின் ரத்தமாக தொண்டர் களுடன் இரண்டர கலந்து இருக்கின்ற அவர்களின் இயற்கையான உணர்வையும், இயல்பையும் மாற்றுவது என்பது இயலாத காரியம் என்பதால் தான் பல நேரங்களில் அவர்களை ஓய்வுக்காக வலியுறுத்த முடியவில்லை. எனினும், நிறைவேற்றித் தீர வேண்டிய பல கடமைகளும் முடித்து வைக்கப்பட வேண்டிய பல அரசியல் கணக்குகளும் என் தலைவனுக்கு முன்னால் வரிசை கட்டி நிற்கின்ற காரணத்தால் அவர்கள் தேவையான ஓய்வினை அன்றாடம் மேற்கொண்டு உடல்நலம் பேணி பணியாற்ற வேண்டுமென்பதே கட்டுரையாளனைப் போன்ற இலட்சோப இலட்சம் கண்மணிகளின் வேண்டு தலாகும் (தலைவரே மனதில் கொள்ளுங்கள்).
பிற்பகல் கொளுத்திக் கொண்டிருக்கின்ற வெயிலிலும் ரெட்டியார் சத்திரத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டது மக்கள் கூட்டம். தியாகச் செம்மல் முத்துக்குமார் நினைவுக் கம்பத்தில கொடியேற்றி மே 28 கேரள சாலை மறியல் அறப்போருக்கான நியாயங்களை அடுக்கி உரையாற்றி விடைபெற்றார் தலைவர். ரெட்டியார் சத்திரம் ஒன்றியச் செயலாளர் எல்.எÞ.செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் தனுஷ்கோடி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.பழநிச் சாமி ஆகியோரின் சீரிய ஒத்துழைப்போடு நிகழ்ச்சியை நன்கு வடிவமைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு உதவிய மறுமலர்ச்சித் தொழிற்சங்க நிர்வாகி மணி என்ற முத்துசாமி - மணிமேகலை தம்பதியினரின் மகளுக்கு கண்ணகி என தலைவர் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியச் சுற்றுப் பயணம் எÞ.புதூரில் தொடங்கிற்று. ஒன்றியச் செயலாளர்கள் தமிழ்வேந்தன், எல்.எஸ். பழநிசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் சத்திரப்பட்டி பழநிசாமி, அக்கா நளதமயந்தி ஆகியோரின் ஒத்துழைப்போடு விரைந்து கடமையாற்றி வெற்றிப் பயணமாக்கி மாற்றாரும் போற்றிடும் பேறு பெற்றனர். இங்கு அத்திகோம்பை சுந்தரம் என்ற பெருமாள்சாமி நினைவுக் கம்பத்தில் கொடி ஏற்றி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றினார். தென்நாட்டின் மிகப்பெரும் காய்கறிச் சந்தை ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது மாவட்டத் துணைச் செயலாளர் சத்திரப்பட்டி பழநிசாமி தலைவருக்கு அணிவித்த காய்கறிகளால் தொடுக்கப்பட்ட மாலை.
இங்கு தாமரை செல்வன் - அமுதா தம்பதியரின் குழந்தைக்கு வீர பிரபாகரன் என்ற பெயரைச் சூட்டினார் தவைர்
ஒட்டன்சத்திரம் பேரூர் எல்லை சோதனைச் சாவடியில் பேரூர்க் கழக நிர்வாகிகள் மோகன்குமார், பரமானந்தம் ஏற்பாட்டில், கே.பி.கே. நினைவுக் கம்பத்திலும், பேருந்து நிலையம் முன்பு முத்துக்குமார் நினைவுக்கம்பத்திலும், தும்மிச்சான்பட்டி பிரிவில் நொச்சிப்பட்டி தண்டபாணி நினைவுக் கம்பத்திலும், அரசு மருத்துவமனை முன்பு ஓடைப்பட்டி செல்வராஜ் நினைவுக் கம்பத்திலும் கொடியேற்றி உரையாற்றினார் வைகோ.
இங்கு மேலும் ஒரு துயரச் சம்பவம். இன்று நடைபெறவிருந்த வீரலப்பட்டி கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதாக துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கழகத் தோழர் நாராயணசாமி இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவ மனையில் இருப்பது அறிந்து கனத்த இதயத்தோடும் கலங்கிய கண்களோடும் அவருக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டார் தலைவர் வைகோ. தொடர்ந்து அரசபிள்ளை பட்டியில் க.பாலமணி அம்மையார் நினைவுக் கம்பத்தில் கொடி ஏற்றி, சின்னக் கரட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் எÞ.பி. ராமராஜ் நினைவுத் தூணைத் திறந்து வைத்து அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற இப்பொது நிகழ்வில் பங்கேற்று, அப்பெருமகனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஊர் மக்கள் சார்பில் நடத்தப்பட்ட தேவராட்ட வரவேற்புகளையும் ஏற்று பெரிய கரட்டுப் பட்டி கு.கிருட்டிணசாமி நினைவுக் கம்பத்திலும், பெரிய கோட்டை கண்ணன் (எ) சீனிவாசன் நினைவுக் கம்பத்திலும், ரெட்டியபட்டியில் இடிமழை உதயன் நினைவுக் கம்பத்திலும், வீரலப்பட்டியில் நாராயணசாமி மறைவைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ரத்து செய்ய தலைவரே கேட்டுக் கொண்ட போதிலும் அவசியம் தலைவர் ஊருக்கு வரவேண்டுமென ஒட்டு மொத்த ஊர் மக்களும் வலியுறுத் தியதற்கு இணங்க அரைக்கம்பத்தில் கொடியைப் பறக்கவிட்டு இரங்கல் உரை நிகழ்த்திவிட்டு சத்திரப்பட்டி பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டத்தின் ஊடே நொச்சிப்பட்டி தண்டபாணி நினைவுக் கம்பத்தில் கொடியேற்றி முடித்துவிட்டு, மாலை 6.30 மணிக்கெல்லாம் சென்று சேரத் திட்டமிட்டிருந்த பழநி ஒன்றியத்தின் பச்சலநாயக்கன்பட்டிக்குள் தலைவர் நுழைந்த போது மணி இரவு 9.00 ஆகிவிட்டது.
ஒன்றியச் செயலாளர் மனோகரன், கழகச் சொற்பொழிவாளர் பழநி குமணன், விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளர் நடராசன், தீர்மானக்குழு உறுப்பினர் துரை. சுப்பராயலு ஆகியோர் தம் ஒத்துழைப்போடு ஒன்றியச் சுற்றுப்பயணத்தை வெகு சிறப்பாக வடிவமைத்து தலைவர் சிந்தையில் நிறைந்தார்.
வள்ளலுக்கெல்லாம் வள்ளலான குமணன் பிறந்த கொழுமம் இந்தப் பகுதியிலேதான் இருக்கிறது. பழநி வட்டாரம் வையாபுரி நாடு என்றே அழைக்கப்படுகிறது. அறுபடைவீடுகளில் ஒன்றான குன்றிலாடும் குமரன் மேற்கு நோக்கி காட்சி தருகின்ற தனிச் சிறப்புக்கும் உரிய பழநி மலை மின் ஒளியில் தகதகப்பது கண்களுக்கு தெரிகிறது.
பச்சலநாயக்கன்பட்டியில் ஏ.இராமசாமி-எÞ.முத்துசாமி நினைவுக் கம்பத்திலும், பழைய ஆயக்குடியில் மகுடீஸ்வரன் நினைவுக்கம்பத்திலும், திருநகர் சிவகிரிபட்டியில் கே.பி.கே. நினைவுக் கம்பத்திலும் கொடியேற்றி பழநி மலையை ஒட்டி அமைந்துள்ள பாலசமுத்திரம் பேரூரில் கலையரங்க மேடைக்கு வந்தபோது 11 மணி ஆகிவிட்டது. பேரூர் செயலாளர் துரைராஜ் பிரமாண்ட ஏற்பாடு செய்திருந்தார். தலைவருக்கும் எங்களுக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த மைதானத்தில் எள் விழ இடமில்லாத அளவிற்கு ஆரவாரித்து நின்ற கூட்டம். அங்கே பேசி மறுமலர்ச்சிக் கொடிப்பயண நினைவுக் கொடி மரத்தில் கொடியேற்றி கலிக்கநாயக்கன்பட்டிக்கு வந்தோம். இதுவும் பழநிமலையின் இன்னொரு அடிவாரப் பகுதியில் உள்ள ஊர்தான். 90 சதவீதம் ஆதிதிராவிட மக்கள் வாழும் இவ்வூரில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் தோளில் கருப்புத் துண்டு அணிந்து இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 100 “செயல்படும்” உறுப்பினர்களைக் கொண்ட கிளைக்கழகம் இயங்குவதாகத் தெரிவித்தனர். 15 ஆயிரம் ரூபாய் அவர்களுக்குள்ளேயே வசூல் செய்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் குழல் விளக்குகள் அமைத்து போர்டுகள் பல வைத்திருந்தனர். சின்னஞ்சிறு ஊரே திரண்டிருக்க கவிஞர் குடியரசு நினைவுக்கம்பத்தில் கொடியேற்றி நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது பயணம்.
அ.கலையம்புத்தூர் , நெய்க்காரன் பட்டியிலும் முத்துக்குமார் நினைவுக் கம்பங்களில் கொடியேற்றி நள்ளிரவு 12.00 மணிக்கு பாப்பாம்பட்டி அண்ணா நினைவு கம்பத்தில் கொடியேற்றி மேடைக்கு வந்தார். கோவை மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆர்.டி.எம். அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊர் என்பதால் அவர்களும் கோவை மாவட்டத் தோழர்கள் பலரும் வந்திருந்தனர். அண்ணன் பேசி முடிக்க தலைவர் உரையாற்றினார். 3000 பேருக்கு குறையாமல் இருக்கக்கூடிய அந்த மைதானத்தில் ஒரு கார் நிறுத்துகின்ற அளவுக்கு கூட இடம் இல்லை என்கிற அளவிற்கு நள்ளிரவு தாண்டியும் ஊரே திரண்டிருந்து தலைவர் உரை கேட்டனர். எழுச்சி உரையைத் தலைவர் வழங்கிட சின்னக்கலையம் புத்தூரில் அதிகாலை 1 மணிக்கு நூற்றுக்கணக்கான மில் தொழிலாளர்கள் விழித்திருந்து வரவேற்க, முத்துக்குமார் நினைவுக் கம்பத்தில் கொடியேற்றி கழக விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளர் அண்ணன் நடராசன் அவர்கள் இல்லத்தில் உணவு அருந்தி மூன்றாம் நாள் கொடைக்கானலில் காலை 9 மணிக்கெல்லாம் பிரச்சாரத் தைத் தொடங்க வேண்டும் என்பதை அசைபோட்டவாறு கலையம்புத்தூரில் விடை பெற்றபோது அதிகாலை மணி 2.00. கொடைக்கானல் மலையேறும் அடி வாரத்தில் கழகக் கண்மணி பால சமுத் திரம் பேரூர் செயலாளர் துரைராஜ் வீட் டில் தேநீர் உபசரிப்பு. கொடைக் கானல் மலை ஏறத் தொடங்கும் பகுதியில் வீடு உள்ளது. இரண்டு முறை பேரூராட்சி உறுப்பினர். தற்போது இவரது துணை வியார் உத்தமி துரைராஜ் பேரூராட்சி உறுப்பினர். தாயகம் என்ற பெயரிடப் பட்ட வீட்டின்மேல் கழக மணிக் கொடி பறக்கிறது. அதிகார வர்க்கத்தின் அச் சுறுத்தல்கள் அவ்வப்போது எழுகின்ற போதிலும் அஞ்சாமல் நம் பாசறையின் படைவீரனாய் கடமையாற்றுவதை உணர்ச்சி பொங்கத் தலைவரிடம் விவரித்தபோது, அந்தக் கொள்கை வேங்கையின் தோள் அணைத்து அன்பை வெளிப்படுத்திப் புறப்பட்டார்.
கொடைக்கானல் அடைந்தபோது அதி காலை 4.30 மணி. நகரச் செயலாளர் தாவூ தும் தோழர்களும் வரவேற்றனர். மலை நகரின் எழிலுக்கும், அழகுக்கும் ஈடு கொடுத்து அசைந்தாடியது பல மைல் தூரத்துக்கு நம் வண்ண மணிக்கொடி. தியாகத் தலைவரின் சிறப்புகளைச் சித்தரிக்கும் வண்ண போர்டுகளை திரும்புகிற திசை எல்லாம் நிறுவி கொடைக்கானல் மக்களை மாத்திரம் அல்ல, பல்லாயிரம் சுற்றுலாப் பயணி களின் கவனத்தையும் நம் பக்கம் திருப்பி வெற்றி கண்டனர், நகரச் செயலாளர் தாவூதும், உறங்காத உத்தமத் தோழர் களும். கொடைக்கானல் நகரில் தலைவர் மீது எல்லையற்ற பற்று கொண்ட பெருமகன் பாண்டிச்சேரி ஆர்.தங்கராஜ் முதலியார் அவர்கள் தமது பொறுப்பில் இயங்கும் வைகையின் தங்கும் விடுதி யை தலைவர் வருகையை முன்னிட்டு, மின் விளக்குகளால் அலங்கரித்து வைத்து இருந்தார். இரண்டு வேளையும் நூற்றுக்கணக்கான கழகக் கண்மணி களுக்கு, தாமே சமையல் அறையில் நின்று உணவு தயாரித்து வழங்கிய காட்சி ஒன்றே, நமது இயக்கத்தின் குடும் பப் பாச உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
அண்ணா நகரில் கொடியேற்றி பேருந்து நிலையம் முன்பு மக்கள் வரவேற்பு முடித்து உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றிய சி.எஸ்.ஐ. புனர்வாழ்வு மையத் தைப் பார்வையிட்டார்கள். கண்கள் தெரியாத பிஞ்சுகளும், கால், கைகள் செயல் இழந்த, மனவளம் குன்றிய குழந்தைகளையும், வாலிப வயதுடைய இருபால் பிரிவினரையும் நேரடியாகச் சந்தித்து நெக்குருகி நின்றார் நம் தலைவர். அவர்களுக்கு வாழ்த்துச் சொன்னார் நம் தலைவர். கிறித்தவப் பாடல்களையும், ஒவ்வொரு பூக்களுமே உள்ளிட்டத் திரைப்படப் பாடல்களையும் மிக அழகாகப் பாடி மகிழ்ந்தனர். அவர்களின் ஒரு நாள் உணவுக்காக ரூபாய் ஐயாயிரம் நிதியினைத் தந்து அங்கிருந்து விடை பெற்று அண்ணா சாலை கே.பி.கே. நினைவுக் கம்பத்தில் கொடியேற்றி, மூஞ்சிக்கல் முத்துக்குமார் நினைவுக் கம்பத்தில் கொடியேற்றி அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி உரிமை முழக்கமிட்டார். தொடர்ந்து அண்ணா நகரில் பி.எம். சாகுல் அமீது நினைவுக் கம்பத்தில் கொடி ஏற்றி திருவள்ளூர் மாவட்டத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள மேட்டுக் குப்பம் மணி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, நேநீர் அருந்தி வாழ்த்திவிட்டு விடுதிக் குத் திரும்பி 3.30 மணிக்கெல்லாம் பிற்பகல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி விட்டார்.
கொடைக்கானல் செண்பகனூரில் தொண்டரணி ஆல்பர்ட் நினைவுக் கம்பத்தில் கொடியேற்றி, கழகத் தோழர் ஒருவரின் இல்லத் திறப்புவிழாவில் பங்கேற்று, கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்களுக்குச் சொந்தமான இல்லத்தில் தேநீர் பருகி, அங்கு சதீÞவரன்-மணிமாது தம்பதியரின் குழந்தைக்கு மணிமேகலை என பெயர்சூட்டி, தம்மீது நன்மதிப்பு கொண்ட கொடைக்கானல் நகர்மன்ற முன்னாள் தலைவரும், சிறந்த கல்வி நிறுவனங்களின் தாளாளருமான குரியன் ஆப்ரகாம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அளவளாவினார். தலைவர் பயணம் தொடர்ந்தது.
வத்தலக்குண்டு செல்லும் வழியில் தேனி மாவட்ட எல்லை அம்சாபுரத்தில் மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் இலட்சுமிபுரம் சந்திரன் அவ்ரகளின் எழுச்சி ஏற்பாட்டில் கொடி ஏற்றிவிட்டு வத்தலக்குண்டுக்கு 5.30 மணிக்கு வந்தபோது, திண்டுக்கல்-பெரியகுளம் பிரதானச் சாலையில் போக்குவரத்தே தடைபடும் வகையில் ஆர்ப்பரித்து நின்றது கூட்டம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நமது நாவரசு நாஞ்சில் சம்பத் அவர்களின் சொல்வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அவரை தாக்கி, இரத்தம் சிந்த வைத்த அதிகார வர்க்கத்தின் ஆணவம் எல்லாம் தரைமட்டமாக தகர்க்கப்பட்டுக் கிடக்கிறதோ என்று நினைக்க வைத்தது, திகைக்க வைத்தது அந்தக் கூட்டம். மாவட்ட அவைத்தலைவர் அண்ணன் அருள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் பேரூர் செயலாளர் நèம், ஒன்றியச் செயலாளர் சுரேஷ் கடமையாற்றி செயல்முடித்து மனதில் நிறைந்தனர். உரிமைப் போரை விளக்கிப்பேசிவிட்டு திண்டுக்கல் நகருக்குள் நுழைந்தபோது எட்டு மணி ஆகிவிட்டது. அண்ணன் அ.கணேசமூர்த்தி எம்.பி,. அவர்களும் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்டார்கள். நகரச் செயலாளர் பரசுராமன் அவர்கள் அலைமோதும் ஆர்வத்துடன் ஏற்பாடுகளைச் செய்திருந்த பாங்கு இயக்கத்திற்கு பெருமை சேர்த்தது.
நகரில் செளரியார்பாளையம், ஜின்னா நகர், பேகம்பூர், பேருந்துநிலையம் மறுமலர்ச்சிக் கொடிப்பயண கொடிக் கம்பங்களில் கொடியேற்றி, மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் யூஜின் அவர்களின் பிரமாண்ட ஏற்பாட்டில் வீர.இளவரசன் நினைவுக்கம்பத்தில் கொடி உயர்த்தி, ஒய்.எம்.ஆர். பட்டியில் அமைக்கப்பட்ட மேடையில் பேசினார் தலைவர். பெருமளவு பெண்கள் குழுமியிருந்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் வைகோவின் உரையைக் கேட்கக் கூடியவர்களை கவனிக்கின்ற போது அவர்கள் தலையாட்டுவது போன்ற செய்கைகள் இவர் நமக்காக, நமது உரிமைக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை, நம்பிக்கையை அவர்தம் உள்ளத்தில் ஊட்டுவதை உணரமுடிகிறது.
சாணார்பட்டி ஒன்றியத்திற்குள் நுழைந்த போது ஐம்பது ஆண்டுக்காலமாக திராவிட இயக்கத்தை பல்வேறு பொறுப்புகளில் இருந்து நடத்தி வருகின்ற அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அண்ணன் கி. இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றியச் செயலாளர்கள் அழ.பாலகுரு-அழகரசு, பொதுக்குழு சந்திரசேகர் ஆகியோர் வைகோவின் பந்தயப் புரவிகள் என்பதை நிருபிக்கும் வகையில் இயங்கி பாராட்டும் விதமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நொச்சிஓடைப்பட்டியில் இதே நாளில் 1973 ஆம் ஆண்டு, போலீÞ துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன விவசாயி ஆரோக்கியசாமி நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து வணங்கி நொச்சிப்பட்டி தண்டபாணி நினைவுக் கம்பத்திலும், விராலிப்பட்டி ஏழுமலை நினைவுக் கம்பத்திலும் , கொசவபட்டியில் கவிஞர் குடியரசு நினைவுக் கம்பத்திலும், சாணார்பட்டியில் அரசுப் பணியாளராக இருந்த இ.ஓ.பி. சீத்தாராமன் அவர்களின் நினைவுக்கம்பத்திலும், மேட்டுக்கடையில் கே.பி.கே. நினைவுக் கம்பத்திலும் கொடி ஏற்றி முடித்து, வி.குரும்பபட்டி வந்தார் தலைவர். இங்கு விஜயன் நினைவுக்கம்பத்தில் கொடியேற்றினார். நமது தலைவரின் தலைப்பிள்ளை துரை வையாபுரி அவர்களின் மாமனார்தான் விஜயன் அவர்கள் என்பதையும் அப்பெயரைத் தான் அவ்வூர் மக்கள் தலைவர் கொடியேற்றிய கொடிக்கம்பத்திற்கு சூட்டியிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது.
நிறைவாக கோபால்பட்டி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தபோது பத்து மணியைத் தாண்டி விட்டது. ஒரத்தநாடு கோபு இசை நிகழ்த்தி முடித்து, கழக இளைஞரணிச் செயலாளர் க. அழகுசுந்தரம் பேசிக்கொண்டிருந்தார். 9.00 மணிக்கு மேல் வந்தால் கூட்டம் இருக்காது. எல்லோரும் போய்விடுவார்கள் என்று பலரும் பயமுறுத்தியதற்கு மாறாக பெருங்கூட்டம் கூடியிருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் கோபால்பட்டி இப்படி ஒரு கூட்டத்தைச் சந்தித்தது இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக) சொன்னது ஒன்றே கூட்டத்தின் சிறப்பை உணர்த்தும் சான்றாகும். அதிமுக மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் உடல்நலம் குன்றியிருந்ததால் நிகழ்வில் பங்கேற்ற அவரது மாப்பிள்ளையும் நத்தம் தொகுதிச் செயலாளருமான ஆர்.வி.ஆர். கண்ணன் அவர்களின் ஒத்துழைப்போடு கழகக் கண்மணிகள் வென்று காட்டியிருந்தனர். மாவட்டச் செயலாளர்கள் புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், வீர. தமிழ்செல்வன், தேனி சந்திரன், பரணி மணி, பாலவாக்கம் சோமு உள்ளிட்ட முன்னணியினரும் மாநில மகளிரணி துணைச் செலயலாளர் சந்திரா ஜெகநாதன், தொண்டரணி சக்திவேல் உள்ளிட்டத் தோழர்களும், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் தமிழ்வென்றி ஆகியோரும் வருகைதந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.
ஒன்றியக் கழகச் செயலாளர்களான நத்தம் ஜெயராஜ், அழகேசன், திண்டுக் கல் மோகன், எல்லையா, வேடசந்தூர் இராமசாமி, குஜ்லியம்பாறை குண சேகரன், மாவட்டக் கவுன்சிலர் தொப்பம் பட்டி இராசேந்திரன், ஆத்தூர் ஜெயக் குமார், நிலக்கோட்டை இராஜா - பாண்டி யன், மூர்த்தி ரெட்டியார்சத்திரம், மாவட் டத் துணைச் செயலாளர் முனியாண்டி, நகரச் செயலாளர் பழநி சீனிவாசன், பொதுக்குழு கண்ணன், நல்லசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர்கள் வழக்கறிஞர் முத்துக்கிருஷ் ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலா, தொண்டரணி கார்த்திகேயன், சொற்பொழிவாளர் திண்டுக்கல் அருள்தாÞ, வேடசந்தூர் இராசேந்திரன், மகளிரணி முத்தம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகளும்,தோழர்களும் சுற்றுப்பயணத்தில் பங்ககேற்று அதன் சிறப்புக்கு உதவினர்.
பொதுக்கூட்டம் முடித்து அருகில் உள்ள இராமராசபுரத்தில் அண்ணன் கி.இராம சாமி அவர்கள் இல்லத்தில் உணவருந்தி நாளை (11.04.2010) காலையில், புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் அவர்கள் இல்ல விழாவில் பங்ககேற்க இராமராசபுரத்தில் விடை பெற்றபோது, வழக்கம்போல் அதிகாலை 2.00 மணி ஆகியிருந்தது. ஆருயிர் தலைவரை வழியனுப்பிவிட்டு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் புதூர் பூமிநாதன் காரில் மதுரை வந்து, நெல்லைக்கு பேருந்தில் சென்று கொண் டிருந்தேன். தலைவர் அலைபேசியில் அழைத்தார். அதிகாலை 3.30 மணி. நீங்கள் தூங்கவில்லையா? இந்த அதிகாலை நேரத்தில் அழைக்கிறீர் களே! என்று கேட்டேன். தூக்கம் வர வில்லை என்று சொல்லிவிட்டு மூன்று நாட்களின் பயணச் சிறப்பை சங்கொலிக்கு கட்டுரையாக எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு சுற்றுப்பயணத்தின் மாட்சியைச் சொல்லி மகிழ்ந்தார். அந்த ஊரில் இப்படி இருந்தது... இந்த ஊரில் இப்படி இருந்தது என்று கூறியதோடு, அதை ஏற்பாடு செய்த கிளைக்கழகத் தோழர்கள் சிலரின் பெயர்களையும் கூட அலைபேசி உரையாடலில் சொன்னது அவரது நினைவாற்றல் குறித்து எப்போதும் வியந்து நிற்கின்ற எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.
நான் நினைத்துப்பார்க்கிறேன். நம்மை அழிக்க நினைக்கின்ற பகைவர்கள் அதி காரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின், நினைப்புகளில் எல்லாம் வைகோவை ஒழிப்பது எப்படி என்ற ஓர் அம்ச சிந்தனைதான். ஆனால், அவரை எவரும் அழிக்க முடியாது என்பதற்கு இப்படி இரவும், பகலும் தூக்கத்தை மறந்து, சொந்த சுகங்களை மறுதலித்து காலம் கையில் தந்த கட்சியை வெற்றிச் சமவெளியில் கொண்டுவந்து நிறுத்து வதற்கு இந்தியாவில் எந்தத் தலைவரி டமும் காணற்கரிய இந்த ஈடில்லா உழைப்பே முதல் காரணமாக இருக்கிறது. எதிரிகள் எத்தகையவர்களாக இருந்தா லும் அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகின்ற அரசியல் ஞானமும், கொள்கை அடர்த்தியும் முற்றாகக் குடி கொண்டிருக்கும் போது என் தலைவனை எவர் அழித்திட முடியும்? தமிழினத்தின் விடியலுக்காக இடையறாது ஒலிக்கும் வேழத்தின் பிளிறலை எவர் நிறுத்திட இயலும்?

