சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! வைகோ அறிக்கை
விவகாரங்கள்: பொருளாதாரம்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட
மீனவர்களுக்கு உரிய நிவாரணம்
வழங்க வேண்டும்!
வைகோ அறிக்கை
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் தாக்கப்பட்டு, படகுகள் உடைக்கப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, பல பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, கடலில் மீன் பிடிக்கச் செல்ல இயலாதத் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்றிரவு கடலில் வீசிய சூறாவளியினால் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 80 நாட்டுப் படகுகள் சேதமடைந்துள்ளன. அதில் 18 படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 60 இலட்சம் ஆகும். அதேபோன்று மண்டபம் துறைமுகத்தில் 86 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடியே 20 இலட்சம் ஆகும்.
கடன் வாங்கி, படகுகளை வைத்து மீன்பிடித்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்ற மீனவர்களுக்கு இது தாங்க முடியாதத் துயரம் ஆகும்.
எனவே, மீனவர்களின் துயரத்தைக் கவனத்தில் கொண்டு முழுமையாகச் சேதமடைந்த நாட்டுப் படகுகளுக்கு ரூ. 1 இலட்சம் வீதமும், முழுமையாகச் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 2 இலட்சம் வீதமும், பாதிப்புக்குள்ளான நாட்டுப் படகுகளுக்கும், விசைப்படகுகளுக்கும் சேதத்திற்கு ஏற்றவாறும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பொதுச்செயலாளர் வைகோ 19.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

