இனத்தைக் காக்க இயக்கம் கண்டார் அண்ணா! இனத்துக்குத் துரோகம் இழைத்தார் கருணாநிதி! தமிழன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் வைகோ
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, அரசியல், புறநகர், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
இனத்தைக் காக்க
இயக்கம் கண்டார் அண்ணா!
இனத்துக்குத் துரோகம்
இழைத்தார் கருணாநிதி!
தமிழன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் வைகோ
ம.தி.மு.க.வும், பா.ம.கவும் ஏறக்குறைய சம காலத்தில் தொடங்கப்பட்டன. நீங்கள் இருவரும் சேர்ந்து சுமார் பத்து சதவீத வாக்குபலத்தைப் பெற்றீர்கள். அந்தநிலை இன்னும் தொடர்கிறதா?
எங்களுக்கு ஆறு சதவீத வாக்குகள் இருக்கின்றன. அதில் எந்தக் குறையும் கிடையாது. இப்போது இந்தச் சதவீதம் எங்களைப் பொறுத்தமட்டில் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், இடைவிடாத என் சுற்றுப்பயணத்தில் உணர்வுபூர்வமாக எனக்காகக் கூடும் மக்களைவைத்து இதைச் சொல்கிறேன். ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்க்காமல் அன்போடு என்னை கைகூப்பி வரவேற்கிறார்கள். ம.தி.மு.க. தொடங்கிய போது இருந்த நிலையை இப்போது நான் பார்க்கிறேன். பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு எல்லா மாவட்டங் களிலும் இருக்கிறது; எல்லா ஜாதிகளிலும் இருக்கிறது. இவர்கள் காசு, பணம் சம்பாதிக்கவில்லை. தமிழக மக்களுக்காகவும், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கா கவும் உண்மையிலேயே போராடுகிறார்கள் என்ற நம்பிக்கை ம.தி.மு.க. மீது வந்திருப்பதே இதற்குக் காரணம். இப்படியொரு நல்லெண்ணம் ம.தி.மு.க. மீது ஏற்பட்டுள்ளதை பெரும் சொத்தாகவே நான் கருதுகிறேன்.
அண்ணா வளர்த்த திராவிட இயக்கத்தின் நோக்கங் களை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று மூன்று இயக்கங்களாக தனித்தனியே பிரிந்து நின்று நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?
இந்தப் பிரிவுகளுக்கே கலைஞர்தானே காரணம்? இந்தச் சரிவிற்கும், வீழ்ச்சிக்கும் கலைஞர்தான் பொறுப்பேற்க வேண்டும். அண்ணா மறைவிற்குப்பிறகு கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை இரண்டையுமே அவருக் குக் கட்சி கொடுத்தது. எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனை வரும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் எல்லோருமே அவரைத்தான் தலைவராக ஏற்றுக் கொண்டோம். அந்த வாய்ப்பு யாருக்குக் கிடைத் தது? திறமை, ஆற்றல், பேச்சாற்றல், உழைப்பு எல்லாம் அவரிடம் (கலைஞரிடம்) இருந்தது. அவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தது. எல்லோரையும் அண்ணா மாதிரி அரவணைத்துக் கொண்டுபோய், தன் குடும்பத்தை முன்னிறுத்தாமல் கட்சியைக் கொண்டு போயிருந்தால், இந்த இயக்கத்தை எவ்வளவு பெரிய உன்னதமான இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கலாம்...?
இன்றைக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய கேடு நடந்திருக்காது. தடுக்கும் அரணாக அல்லவா தமிழகம் இருந்திருக்கும்? ஆகவே இவ்வளவு சரிவிற்கும் அவர்தான் காரணம். தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று முன்னிலைப்படுத்திய அவரது அணுகுமுறைதான் காரணம்.
எம்.ஜி.ஆர். அவ்வளவு புகழோடும், செல்வாக்கோடும் இருந்தும் கலைஞரை சப்போர்ட் பண்ணினார். ஆனால், எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக திரைப்படத்தில் கலைஞர் மகனை இரட்டை வேடங்களில் நடிக்கவைத்து, கோபால புரத்தில் ‘அகில உலக மு.க.முத்து ரசிகர் மன்றம்’ என்று போர்டு மாட்டினார்கள். அதற்கான அவசியம் என்ன? அவரை (எம்.ஜி.ஆரை) புண்படுத்த வேண்டியது இல்லையே!
அக்டோபர் எட்டாம் தேதி லாயிட்ஸ் ரோட்டிலும், அதற்குமுன் திருக்கழுக்குன்றத்திலும் எம்.ஜி.ஆர். பேசுவதற்கு முன்பு ஏற்பட்ட சம்பவம்தான் இந்த போர்டு வைத்த சம்பவம். எத்தனை லட்சம் குடும்பங்கள் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றன? அவர்கள் எல்லோரையும் தன்னுடைய பிள்ளைகள், தன்னுடைய தம்பிமார்கள் என்று நினைத்துவிட்டுப் போக வேண்டியதுதானே?
அவர் மேல் துரும்பு விழக்கூடாது என்று துடித்துக் கொண்டு இருந்தவன்தானே இந்த வைகோ? அவர் மீது துரும்பு விழுந்திருந்தால் அவர் பிள்ளைகள் உயிரைக் கொடுத்திருக்க மாட்டார்கள்; நான் அல்லவா உயிரைக் கொடுத்திருப்பேன்! என்னை எதற்குக் கட்சியை விட்டுத் தூக்கி வெளியில் போட வேண்டும்?
நான் என்ன தவறு செய்தேன்? நானாக வெளியே வரவில்லையே? என்னைக் கட்சியை விட்டு நீக்கினார்களே.... தி.மு.க.வை விட்டு அதுவும் திட்டமிட்டு நீக்கினார்கள். நான் தவறு செய்யாமலேயே நீக்கப்பட்டேனே! ஆகவே, இப்படி திராவிட இயக்கம் தனித்தனியாக பிரிந்து கிடப்பதற்குக் கலைஞர்தான் காரணம்.
இதுவரை நீங்கள் அனுபவித்த சிறைவாசங்களில் உங்கள் மனதை ரொம்பவும் பாதித்தது எது?
நான் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது சிட்டிபாபு இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டுத் துடித்துப்போனேன். அந்தச் சிறைக் கொட்டடிக் குள்ளேயே கதறி அழுது சாப்பிடாமல் இருந்தேன். மனசு கஷ்டப்பட்டேன். துன்பப்பட்டேன். பக்கத்து செல்லில் இருந்த அண்ணன் கோ.சி.மணிதான் ‘நாம் என்ன செய்ய முடியும்?’ என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.
அடுத்து அரசியல் சட்டத்தை எரித்துவிட்டு சிறைக்குப் போனேன். ‘சட்ட வாசகங்களை எழுதிய தாளைக் கொளுத்தினோம்’ என்று எல்லோரும் வாக்குமூலம் கொடுத்து சிலர் சிறைக்குப் போனபோது நான் மட்டும் ‘அரசியல் சட்டத்தைக் கொளுத்தி சிறைக்குச் சென்றேன்’ என்று தனியாக சத்திய பிரமாண வாக்குமூலம் போட்டேன். அந்த நேரம் சிறையில் இருந்த போது என் விரலில் நகச்சுத்தி வந்து அவஸ்தைப்பட்டேன். என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘விரலில் ஆபரேசன் செய்ய வேண்டும்’ என்று பரிந்துரைத்தார்கள். அந்த ஆபரேஷ னுக்காக ஜெயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு எனக்கு செய்தித்தாள்கள் கூடக் கொடுக்காமல் கெடுபிடி செய்தார் ஜெயில் சூப்பிரண்ட். அவரை எதிர்த்து ஐந்து நாட்கள் மருத்துவமனையிலேயே உண்ணா விரதம் இருந்தேன். இது என் மனதில் நிற்கும் ஓர் விஷயம்.
பிறகு பொடா சிறையில் இருக்கும்போது எங்கள் அமைச்சர் ஒருவர் மீது களங்கக் குற்றச்சாட்டு வந்தபோது (செஞ்சி ராமச்சந்திரன்) நான் ரொம்பவும் துடித்துப் போய் விட்டேன். கட்சிக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடத்தை நினைத்து மனரீதியாக வேதனைப்பட்டேன்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விஷயம் தனக்கே நள்ளிரவில்தான் தெரியும் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?
கலைஞர் கருணாநிதி மாதிரி பொய்களை உண்மை என்று நம்ப வைக்கும் திறமை கோயபல்ஸ்க்குக் கூட கிடையாது. கலைஞரால் விளக்கம் கொடுக்க முடியாத சில கேள்விகளை இந்தவிஷயத்தில் கேட்கவிரும்பு கிறேன். பார்வதி அம்மாள் விமானம் இரவு 10.45 மணிக்கு வந்தது. 9.30 மணிக்கே தமிழக போலிஸ் பட்டாளத்தை விமான நிலையத்தில் குவிக்க வேண்டிய அவசியம் என்ன? போலிஸ் விடியோகிராபர்கள் வரவேண்டிய அவ சியம் என்ன? நானும், நெடுமாறனும் பார்வதி அம்மாளை வரவேற்கப் போகவில்லை. அப்படிச் செய்தால் சுதர்சனம் சொல்கிற கருத்தை (அரசியல் செய்யப் போய்விட்டார் கள்) இவரே சொல்வார் என்று எங்களுக்குத் தெரியும். அப்படியொரு சர்ச்சை அந்த அம்மா இங்கே இருந்து சிகிச்சை பார்ப்பதற்கே இடையூறாகப் போய்விடும் என்று கருதினோம். வீல் சேரில் வரும் பிரபாகரனின் தாயாரை ஒரு காரில் நெடுமாறன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, அதற்கு அடுத்த நாள் பெரிய மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ப்பது மட்டுமே எங்கள் திட்டம். நாங்கள் இருவர். எங்களுடன் இரு கட்சிக்காரர்கள்! மொத்தம் நான்குபேர் மட்டுமே அங்கு நின்றோம். ஆனால், போலிசார் கார் நிற்கும் இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள். இது முதலமைச்சருக்கும் தெரியாமல் நடந்ததா?
பார்வையாளர் பாஸ் இருந்தும், என் கையைப் பிடித்து இழுத்து, முறித்து பலாத்காரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஆகவே, இவருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்தது. பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் இவருக்குத் தெரிந்தே நடந்திருக்க வேண்டும். மற்றபடி பார்வதி அம்மாளை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை. நாங்கள் அவ்வளவு மட்டமான குணம் உள்ளவர்கள் அல்ல.
இலங்கையில் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அங்கு வாழும் தமிழர்களின் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
அங்கே தற்போது காரிருள், பேயிருள் சூழ்ந்துள்ளது. இருளுக்குப் பிறகு ஒரு வெளிச்சம் நிச்சயம் வரும். அது எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. வடக்கில் உள்ள மக்கள் 80 சதவிகிதம் பேர் தேர்தலைப் புறக்கணித்து உள்ளார்கள். கிழக்கிலும் பெரும்பாலான மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. இப்போது மாவீரன் துயிலகங்களை உடைக்கிறார்கள். மாவீரர்களின் எலும்பு களைக்கூட உடைத்து எறிகிறார்கள். எங்குமே நடக்காத பெருங்கொடுமையை அங்கே சிங்களவர்கள், தமிழர் களுக்குச் செய்துவிட்டார்கள். உலகம் முழுவதும் தமிழ் இனம் இருந்தும் இன்று அந்த இனம் நாதியற்றுத் தவிக் கிறது. எட்டுத் தமிழர்களின் கண்களைக் கட்டி நிர்வாண மாகக் கொண்டுவந்து சுட்டுக் கொன்ற காட்சி உலகம் முழுவதும் பரபரப்பானது. இது உண்மைச் சம்பவம் என்று ஐ.நா. ஆய்வாளர்கள் கூறிவிட்டார்கள். கருணாநிதியிடம் போய் பத்திரிக்கைகாரர்கள் கேட்டதற்கு, ‘இது ஒரு பழைய படம் மாதிரி தெரியுது’ என்று எகத்தாளமாய்ப் பதில் சொன்னார். தமிழ் இனத்திற்காக அண்ணா ஒரு இயக்கத்தை உருவாக்கி, எண்ணற்றவர்கள் ரத்தமும், கண்ணீரும் சிந்தி அந்தக் கட்சியை (தி.மு.க.வை) வளர்த்துக் கொண்டு வந்தார்கள். ஆனால், இவர் இந்த இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து உள்ளார். வரலாற்றில் இவர் புகழ்பெறவில்லை; பழிக்குத் தான் ஆளாகி இருக்கிறார். இதை எந்தக் காலத்திலும் இவரால் அழிக்க முடியாது.
இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது இந்திய அரசு. அதுமட்டுமின்றி இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையே காவு கொடுத்துவிட்டது. அங்கே சீனர்கள் வலுவாகக் காலூன்ற வழிவகுத்து விட்டது. நம் மீனவர்களை சீனப்படை தாக்குகிறது. இனிமேல் சீன ஆபத்து, இமயமலையைத் தாண்டி இந்தியாவுக்கு வரவேண்டாம்; இலங்கையில் இருந்தே நேரடியாக வரலாம். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தால் தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே அரணாக இருப்பார்கள். ஏன் என்றால் அது தொப்புள் கொடி உறவு. ஐ.நா. சபையில்கூட தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. ஆகவே, முதலில் இந்திய அரசு இந்தத் துரோகத்தை நிறுத்தட்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் என்னதான் நடக்கிறது?
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தென் தமிழ்நாடு வருங்காலத்தில் பெரிய சகாரா பாலைவனமாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அந்த வழக்கை முறையாக நடத்தியதன் விளைவாக நியாய மான, நீதியான ஒரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தமிழகத் திற்குக் கிடைத்தது. ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அச்சுதானந் தன் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு சட்டசபையில் மார்ச் 18 ஆம் தேதி ஒரு சட்டத்தைப்போட வைத்தார். இப்படிக் கொண்டுவந்த கேரள நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் பராமரிப்புச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையையும் சேர்த்தார். அதுவரை கேரள நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை இல்லை. அதுவும் முதல் பெயராக அந்தப் பட்டியலில் இடம் பெற்றது.
அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு விரோதமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என்று இடம் பெற வைத்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால் இந்த முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 22 அணைகளைப் பராமரிக்கவும், செயல் இழக்கச் செய்ய வும் இச்சட்டத்தின் மூலம் கேரள அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. செயல் இழக்கச் செய்வது என்றால் உடைத்துப் போடுவதுதானே! அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று வேறு ஒரு ஷரத்து சேர்க்கப்படுகிறது. இந்தியாவின் இறையாண்மையையும், மத்திய அரசையும் நாங்கள் துச்சமாக மதிக்கிறோம் என்ற நிலைக்குக் கேரள அரசு வந்துவிட்டது.
இச்சட்டம் வந்த 14 நாளில் இதை எதிர்த்து அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்திற்குப் போனது. அதன்பிறகு நடந்த தேர்தலில் இங்கு கலைஞர் ஆட்சி வந்தது. அங்கு அச்சுதானந்தன் ஆட்சி வந்தது. உடனே பிரதமரை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும். லட்சக்கணக்கான எங்கள் மக்கள் செத்துப்போய்விடுவார்கள். ஆகவே, அணையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அச்சுதானந்தன். கேரளா அநியா யமாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது என்பதைக் கண்டிக்க வேண்டிய பிரதம மந்திரி அச்சுதானந்தனின் கோரிக்கையை சட்ட அமைச்சகத்திற்கும், நீர்ப்பாசனத் துறை அமைச்சகத்திற்கும் ஆய்வுக்கு அனுப்பினார். இதுபற்றி கலைஞர் நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்பத்திற்கு மந்திரி பதவிகேட்டு டெல்லிபோன கலைஞர், கேரள அநியாயத்தைக் கண்டிக்க டெல்லி போகவில்லை.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரும்பவும் போனார் அச்சுதானந்தன். உடனே நான் பிரதமரைப் போய் பார்த்தேன். என் எம்.பி.க்களை பிரதமரிடம் அனுப்பிப்பேச வைத்தேன். இவர் அதன் பிறகுதான் செப்டம்பரில் கடிதம் எழுதினார். இதுதான் இவர் அணுகுமுறை!
நில நடுக்கமே ஏற்பட்டாலும் பென்னிகுயிக் கட்டிய இந்த அணைக்கு ஆபத்து வராது. நாம் மேற்கொண்ட பலப்படுத்தும் பணிகளால் அணையின் அடிமட்டமே 200 அடி அகலத்திற்கு இருக்கிறது. இவ்வளவு வலுவான அணை இந்தியாவிலேயே கிடையாது. பிரார் கமிட்டி, மிட்டல் கமிட்டி ஆகிய இரு கமிட்டிகள் இந்த அணை வலுவாக இருக்கிறது என்று கூறிவிட்டன. இந்த வழக்கில் 33 வாய்தாக்களை கேரள அரசு வாங்கியது. அதையும் நம் தரப்பில் தட்டிக் கேட்கவில்லை. மூன்று வருடங்கள் முடிந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு, ரொம்பவும் தந்திரமாக செயல்பட்டு, இப்போது ஐவர்குழு கமிட்டியில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ‘புதிதாக அணை கட்டினால் உங்களுக்கு என்ன ஆட்சேபணை’ என்று கேட்டார்கள் நீதிபதிகள். நம் வக்கீலோ, ‘அணை நிர்வா கத்தை எங்களிடம் ஒப்படைத்தால் போதும்’ என்றார். உடனே கேரளாவில் வெடிவெடித்தார்கள். ஐந்து மாவட்ட விவசாயிகளுக்காகப் போராடும் கே.எம்.அப்பாஸிடம் கேரளாவில் இருந்து சிலர் போன் பண்ணி, ‘நீங்களும், வைகோவும் புதுஅணை கட்டும் நிகழ்ச்சிக்கு வாருங்கள். சொர்ணமாலை போட்டு வரவேற்பு கொடுக்கிறோம்’ என்று கிண்டல் பண்ணியுள்ளார்கள்.
அடுத்து புதிய அணை, பள்ளத்தில் கட்டுகிறார்கள். அவர்களே நினைத்தாலும் நமக்கு தண்ணீர் கொடுக்க முடியாது. இந்த வாதத்தையும் எடுத்து வைக்கவில்லை. இது மாதிரி அணுகுமுறை குழப்பங்களால் இந்தப் புதுக் கமிட்டி வந்தது. உச்சநீதிமன்றத்தில் நமக்குக் கொடுக்கப் பட்ட நீதி பறிக்கப்பட்டதன் மர்மம் என்ன? அதை நான் சொல்ல விரும்பவில்லை. தமிழன் எக்ÞபிரÞ வாசகர்கள் இதை ஆழமாக யோசிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஏன் இப்படிச் செய்தது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அதற்கான பதிலை தமிழர்கள் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
புதிய ஐவர் கமிட்டிக்கு ஓய்வு பெற்ற நீதி அரசர் ஏ.ஆர்.லட்சுமணனை நியமிப்பதன் மூலம் நியாயம் கிடைக்கலாம் அல்லவா?
இந்தக் கமிட்டியில் நியாயம் கிடைக்காது. எங்களின் உறுதியான நிலைப்பாடும் அதுதான். இந்தக் கமிட்டி தேவையற்றது என்பதோடு மட்டுமின்றி, அநியாயமான நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ள கேரள அரசை ஆதரிப்பது போலிருக்கிறது. பிப்ரவரி 17 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் ஐவர் கமிட்டியை நியமித்தது. 19 ஆம் தேதி முரசொலியில், ‘கமிட்டி அமைத்துள்ளதால் கேரள அரசுக்கு சாதகமாக எந்தவிதமான முடிவும் வந்துவிட வில்லை; அதற்குள் சில அவசரக்காரர்கள் ஏதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது என்று கூறுவது அரசியல் பிரச் சாரமே’ என்று ‘கேள்வி - பதில்’ பகுதியில் கருணாநிதி தான் எழுதுகிறார்.
மறுநாள் தி.மு.க. பொதுக்குழு! அதில் ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பினை உதாசீனப்படுத்தும் வகையில் கேரள அரசு நிறைவேற்றிய திருத்தச் சட்டத் திற்கு உடன்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கு கின்ற அளவில், தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி, மீண்டும் ஓர் ஆய்வு நடத்துவோம் என்று ஓர் ஐவர் குழுவினை உச்சநீதிமன்றம் அறிவித்து இருக்கிறது’ என்கிறார்.
முதல் நாள் சொன்னதற்கும் மறுநாள் சொன்னதற்கும் இவர் இவ்வளவு முரண்படுகிறார்! என்னைப் பொறுத்த மட்டில் தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தான் சரி! அதில் இவர் நிற்க வேண்டும் அல்லவா? நிற்கவில்லையே? மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை நியமிப்பதாக இப்போது சொல்கிறார். ஓரவஞ்சகமாக நடக்கும் மத்திய அரசு சொல்வதை ஏன் நாம் கேட்க வேண்டும்?
உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை, கொடுக் கப்பட்ட நீதியைப் பறித்துக் கொண்ட அநீதியாகும்.
ம.தி.மு.க. இது தொடர்பாக அதிக போராட்டங்களை நடத்துவது ஏன்?
கேரள அரசு, அணை உடைகிறமாதிரி படம் உருவாக்கி (கிராஃபிக்ஸ் மூலம்), ஐந்து லட்சம் சி.டி.க்களை கேரளா முழுவதும் விநியோகம் பண்ணுகிறது. அம்மாநில முதல் அமைச்சரின் வெப்i[டிலேயே இந்தப் படக்காட்சி இருக்கிறது. வண்டிப் பெரியார் ஏரியாவில் இந்தப் படத்தை தியேட்டர்களிலும் போடுகிறார்கள். ‘அணையை உடைப்போம்!’ என்று அடிக்கடி மக்கள் ஊர்வலங்களை கேரள அரசே முன்னின்று நடத்துகிறது. அந்த அளவுக்கு கேரளா, மக்களின் மனதை தயார் பண்ணுகிறது. அணையை உடைக்க 2,10,000 டன் அளவிற்கு வெடிமருந்துகளும் தயார் பண்ணி ரெடியாக வைத்துள்ளார்கள்.
இப்படியொரு சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் நியாயத்தை எதிர்பார்க்கா தீர்கள் என்று தமிழக நலனில் அக்கறையுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகளே என்னிடம் வேதனையுடன் கூறுகிறார்கள். கேரளா பெரும் ஆபத்தில் இருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டில் சொல்லவே இப்படி தியேட்டர்களில் படம் போடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
என்னைப் பொறுத்தமட்டில், தமிழகம் கொந்தளிக்கிறது என்பதை உணர்த்தவே நான் ஐந்து வருடமாகப் போராடி வருகிறேன். இதில் நான் அரசியல் பண்ணவில்லை. எந்த ஊரிலும் தி.மு.க.வை நான் விமர்சிக்கவில்லை. மத்திய அரசைக் கண்டிப்பதும் கேரள அரசை எச்சரிப்பதுமே என் போராட்டம்! கம்பம் மறியலுக்கே தி.மு.க. தோழர்கள் நிறைய பேர் வந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங் கள். ஏனென்றால், தமிழகத்திலும் கொந்தளிப்பு ஏற்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் உணர்ந்தால் ஒழிய, தமிழகத்திற்கு வரும் பெரிய ஆபத்தைத் தடுக்கவே வழியில்லை.
பேரறிஞர் அண்ணாவைக் காட்டி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் திட்டங்களைப் பெற்றார் பெருந்தலைவர் காமராசர். அண்ணா ஓர் இமயம்!
அவருக்கு இணையாக என்னை ஒப்பிட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. நான் ஒரு சாதாரண ஆள். ஆகவே, உதாரணத்திற்கே இதைச் சொல்கிறேன். அதுபோல், தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுகிறது என்று எங்களைக் காட்டியாவது உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் கலைஞர் அரசு உணர்த்தட்டும்.
தமிழன் எக்ஸ்பிரஸ், 06.05.2010

