மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிக்கும் முடிவைமத்திய அரசு கைவிட வேண்டும் வைகோ அறிக்கை

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், விவசாயம், மருத்துவம், மனித உரிமை, தொழிலாளர், தேசிய, அரசியல், வறுமை, புறநகர், அறிவியல் தொழில்நுட்பம்

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 15/05/2017

 

 

 

 

மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிக்கும் முடிவை
மத்திய அரசு கைவிட வேண்டும்

வைகோ அறிக்கை

 

இந்தியாவில் மரபணு மாற்று கடுகு பயிரிடுவதற்கு, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee -GEAC) மே 11 ஆம் தேதி அனுமதி அளித்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பி உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மரபணு மாற்று கடுகு சாகுபடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, 25 அக்டோபர் 2016 இல் தலைமை நீதிபதி டி.ஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மரபணு மாற்று கடுகு வர்த்தக அனுமதிக்கு தடை விதித்தனர். அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மரபணு மாற்று கடுகு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி மரபணு மாற்று கடுகு வர்த்தகப் பயன்பாட்டிற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?

டெல்லி பல்கலைக் கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து, அதற்கு தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11(DMH-11)” என பெயர் சூட்டியது. மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடிக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உணவுப் பயிரில்லாத மரபணு மாற்று பி.டி.பருத்தி பயிரிட அனுமதிக்கப்பட்ட பிறகு, பாரம்பரிய பருத்தி ரகங்கள் அழிந்தது மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ, பி.டி.பருத்தி விதை சந்தையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிக விளைச்சலைக் கொடுக்கும், பூச்சிக்கொல்லி செலவுகள் இருக்காது. உற்பத்தி அதிகரிக்கும், லாபகரமாக இருக்கும் என்றெல்லாம் மான்சாண்டோ நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, பி.டி.பருத்தி சாகுபடி செய்து, நட்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரை மாய்த்துககொண்டனர்.

மரபணு மாற்று பி.டி.கத்திரிக்காய் சாகுபடிக்கு 2010 இல் மத்திய அரசு அனுமதி அளித்தபோது, எழுந்த கடும் எதிர்ப்புகளால் பி.டி.கத்தரி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிப்பதன் மூலம் முதல் முறையாக உணவுப் பயிருக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளன. இதன் பின்னர் இன்னும் நூற்றுக்கணக்கான மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கும் ஆபத்து நேரிடும்.

டெல்லி பல்கலைக் கழகம் ஆய்வு செய்துள்ள மரபணு மாற்று கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் ஆகிய மரபு அணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்கு பேயர்போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்று உள்ளன. பார்னேஸ் மரபணு, ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் என்பதால் உலக வேளாண் அமைப்பு இதனை தடை செய்துள்ளது. மரபணு மாற்று கடுகு ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. கடுகில் செலுத்தப்பட்டுள்ள பார்னேஸ் மற்றும் பார்ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் களைக்கொல்லி தாங்குதிறன் தரும் என்று கூறப்படுகின்ற பார்மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. மரபணு மாற்றுக் கடுகு பயிரிடப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள பகுதிகளில் தேனீக்கள் அழிந்து வருகின்றன. பேயர் நிறுவனத்தின் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்களால் உயிர்ச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என்று உண்மையான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. மரபணு விதைகளை உற்பத்தி செய்யும் மன்சாண்டோநிறுவனத்தின் ஆய்வகம் வழங்கும் ஆய்வு முடிவுகளை அப்படியே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மறுக்க முடியாது. வேளாண்மைத் துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் மத்திய அரசு முடிவுகளைத் திணிப்பதை ஏற்க முடியாது.

இந்தியாவின் மரபு வகை மண்ணுக்கு ஏற்ற உணவுப் பயிர்கள் உற்பத்தியை அழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு ஊக்கம் அளிக்கும் மரபணு மாற்று கடுகு உள்ளிட்ட எந்தவித உணவுப் பயிர்கள் உற்பத்திக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனறு வலியுறுத்துகின்றேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

 

தாயகம்                                            தலைமை நிலையம்
சென்னை - 8                                        மறுமலர்ச்சி தி.மு..
15.05.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)