அறப்போருக்கு அழைக்கிறேன்! வைகோ கடிதம் .
விவகாரங்கள்: விவசாயம், தேசிய, அரசியல்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: கடிதங்கள், தலைப்பு செய்திகள்
இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட
கண்ணின்மணிகளே!
தென்தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு உரிமைக்கு, பெரும் ஆபத்து நேர்ந்து உள்ளது. கேரள அரசின் திட்டமிட்ட, தீங்கான செயல்களாலும், மத்திய அரசின் ஓர வஞ்சகமான துரோகத்தாலும், இந்த அபாயம் நம்மை வளைத்து உள்ளது.
இந்த ஆபத்தைத் தடுக்கவும், கேரளத்தின் அக்கிரம நடவடிக்கைகளை முறியடிக்கவும், தென்தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கவும், ஒரு கடுமையான அறப்போருக்கு நாம் ஆயத்தம் ஆகவேண்டிய கடமை நம்மை அழைக்கிறது. அதற்கான, விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், தெற்குச்சீமை மக்களை ஆயத்தப்படுத்தவும், முதல்கட்டமாக, தேனியில் நவம்பர் 8 ஆம் நாள் கேடு செய்யும் கேரள அரசையும், துரோகம் இழைக்கும் மத்திய அரசையும், கடமை தவறிய தமிழக அரசையும் கண்டித்து, நம் இயக்கத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். நவம்பர் 14 இல், மதுரை மாநகரில் முல்லைப்பெரியாறு உரிமை காக்க, என்னுடைய தலைமையில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் உரிமைகளை நிர்மூலம் செய்ய, முற்பட்டுவிட்ட கேரள அரசின், அராஜகப் போக்கை முறியடிக்கின்ற சட்டரீதியான உரிமைப் போராட்டத்தை, தமிழகம் மேற்கொண்டபோதிலும், 2006 பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றம், தமிழகத்தின் நீதியையும் காத்து வழங்கிய தீர்ப்பைச் சற்றும் மதியாது, கேரள அரசும், அங்கு உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருசேரத் திரண்டு, இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டை மத்திய அரசு காக்கும் இறையாண்மையைச் சேதப்படுத்தும் வகையில், 2006 மார்ச் 17 ஆம் நாள், கேரளச் சட்டமன்றத்தில் அநீதியான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
அந்தச் சட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என, அண்ணா தி.மு.க. அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், 2006 மே திங்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது. மத்தியில் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும், தி.மு.க. பங்கு பெற்று இருந்தது. அந்த மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் தேவைப்பட்டதால், கேரளத்தில் ஆட்சிப்பொறுப்புக்குத் தலைமை ஏற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் அச்சுதானந்தன், தாம் பொறுப்பு ஏற்றவுடன், முதல் வேலையாக, முல்லைப்பெரியாறு பிரச்சினையில், அப்பட்டமான பொய்களை, மோசடியான ஆவணங்களாக ஆக்கி, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து நான்குமுறை சந்தித்து, முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றும், இலட்சக் கணக்கான கேரள மக்கள் உயிருக்கு ஆபத்து நேரும் என்றும், கேரளத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தினார்.
இந்தியப் பிரதமர், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளாமல், கேரள முதல்வரின் பொய்ப்புகார்கள் அடங்கிய கோரிக்கையை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும், சட்டத்துறை அமைச்சகமும் பரிசீலிப்பதற்கு அனுப்பி வைத்தார்.
இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமை களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை, தமிழக முதல்வர் செய்யவே இல்லை. தான் விரும்பிய இலாகாக்களை மத்திய அமைச்சகத்தில் பெறுவதற்குப் பல வகைகளிலும் நிர்பந்தித்த தமிழக முதல்வர், முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் வாழ்வாதா ரங்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. கேரள முதல்வர் நான்கு முறை பிரதமரைச் சந்தித்த காலகட்டங்களில், தமிழக முதல்வர் பிரதமரைச் சந்திக்கவும் இல்லை; ஒப்புக்கு ஒரு கடிதம்கூட எழுதவும் இல்லை.
தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் தீங்கைத் தடுக்க, நாம் மாநகர் மதுரையில் 2006 செப்டெம்பர் 19 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான கழகத்தோழர்களும், விவசாயிகளும் திரண்டு, முல்லைப்பெரியாறு உரிமை காக்கும் பேரணி நடத்தினோம்.
2006 டிசம்பர் 18 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களோடு மதுரை மாநகரில் இருந்து புறப்பட்டு, கூடலூர் வரையிலும் முல்லைப்பெரியாறு விழிப்பு உணர்வு நடைப்பயணத்தை நான் மேற்கொண்டேன்.
தொடர்ந்து முல்லைப் பெரியாறு உரிமை காக்க, விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்தினோம். 2007 ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ஆம் நாள், மதுரை மாநகரில் முல்லைப்பெரியாறு உரிமை காக்க, என்னுடைய தலைமையில், உண்ணாநிலை அறப்போர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
இந்தப் பிரச்சினை குறித்து, இதுவரை நடந்தது என்ன? தற்போது, நம் உரிமைக்கு நேர இருக்கும் ஆபத்து என்ன என்பதை, இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
முல்லைப்பெரியாறு, நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில், சிவகிரி சிகரத்தில் உற்பத்தி ஆகி, 44 கிலோமீட்டர் தொலைவு தமிழக எல்லைக்கு உள்ளேயே வடக்குநோக்கிப் பாய்ந்து, அதன்பின்னர்தான், முல்லை ஆறும், பெரியாறும் சந்தித்து, 244 கிலோமீட்டர் தொலைவு கேரளத்தின் வழியாக ஓடி, பாய்ந்தோடும் தண்ணீர், அரபிக் கடலில் வீணாவதைத் தடுத்து, தென்தமிழ்நாட்டுக்குப் பயன்படட்டும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் பென்னி குயிக் திட்டமிட்டார்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பருவமழை பொய்த்து பஞ்சம் நேரிட்டதால், அன்றைய ஆங்கிலேய அரசு, நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, வேளாண்மையை வளர்க்கத் திட்டமிட்டது. முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி, 1778 ஆம் ஆண்டிலேயே, கேப்டன் ஸ்மித் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து ஏறத்தாழ, 108 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை இராஜதானி அரசுக்கும், திருவிதாங்கூர் மன்னருக்கும் இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில், முல்லைப் பெரியாறு அணை கட்ட உத்தேசிக்கப்பட்ட பகுதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது அல்ல. அது தமிழ்நாட்டுப் பகுதி.
ஆனால், அது திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்ளே இருக்கிறது என்ற தவறான கணிப்பினால் தான், இல்லாத உரிமையை ஏற்றுக்கொண்டு திருவிதாங்கூரும்-சென்னை இராஜதானியும் ஒப்பந்தம் போட்டன. 1856 அக்டோபர் 29 ஆம் நாள், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகக் கையெழுத்து ஆனது.
1887 இல், சென்னை ஆளுநர் கன்னிமராவும், மதுரை கலெக்டரும், அணைக் கட்டுக்காக தேக்கடியில் சுரங்க வேலைகளைத் தொடங்கி வைத்தனர்.
1890 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், அணையின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. அணை கட்ட கூடுதல் தொகை செலவிட முடியாது என்று கூறி, அணைகட்டும் பணியை ஆங்கில அரசு நிறுத்தியது. இதனால் மனம் உடைந்த பென்னி குயிக், இங்கிலாந்துக்குச் சென்று, அங்கிருந்த தமது சொத்துகளையெல்லாம் விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து, அணை கட்டும் பணியை மீண்டும் தொடங்கினார். இரண்டாவது முறையாக, வெள்ளத்தால், அணை உடைந்துவிடக் கூடாது என்று, நீரின் வேகத்தைத் தணிக்க, 185 துணைத் தடுப்பு அணைகள் ஆங்காங்கு கட்டப்பட்டன. சுருக்கி, சுட்ட செங்கல், இஞ்சி, கடுக்காய், கருப்பட்டி, தேக்குமரப் பட்டை ஆகிய பொருள்களைக் கொண்டு, பெரியாறு அணை கட்டப்பட்டது. 1895 அக்டோபர் பத்தாம் நாள் அணை திறக்கப்பட்டது.
இந்த அணையின் கீழ்மட்ட அகலம் 144 அடி 6 அங்குலம் ஆகும்.
மேல்மட்ட அகலம், 10 அடி 6 அங்குலம். அணையின் நீளம் 1241 அடிகள் ஆகும். அணையின் மொத்த உயரம், 176 அடி.
நீரில் அலைகள் மோதும்போது ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்காக, நீர்த்தேக்க உயரம், 152 அடியாக நிர்ணயிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தினர், 1979 இல், அணை உடையும் ஆபத்து என்று நச்சுப் பிரச்சாரம் செய்த சூழலில், மத்திய நீர்வளக் கமிஷன் தலைவர் கே.சி. தாமÞ, 24.11.1979 இல், அணைக்கட்டைப் பார்வையிட வந்தபோது, மலையாளிகள் கூச்சலும் குழப்பமும் செய்தனர்.
மறுநாள், 25.11.79 இல், கே.சி. தாமÞ முன்னிலையில்,தமிழக அரசின் பிரதிநிதிகளும், கேரள அரசின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில், பெரியாறு அணையைத் தமிழக அரசு, 21 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் பலப்படுத்துவது என்றும், அந்தப் பணிகள் நிறைவுபெறும் வரையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது என்றும், பணிகள் முடிந்தபின்பு மீண்டும் 152 அடியாக உயர்த்தலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
1980 முதல் 2001 வரை, அணையைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே இருக்கின்ற அணைக்குப் பக்கத்தில் பக்கவாட்டுப் பாதுகாப்பு அணையாக, 56 அடி கீழ்மட்ட அகலமும், 10.6 அடி அகலம் மேல்மட்ட அகலமும் கொண்ட அணை ஒன்று கட்டப்பட்டது. மொத்தத்தில், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்மட்ட அகலம் 200 அடி, மேல்மட்ட அகலம் 21 அடி ஆகும். உலகில், இவ்வளவு அகலமான கீழ்மட்டக் கட்டுமானம் உள்ள அணை, இது ஒன்றுதான்.
எகிப்தில் உள்ள பிரமாண்டமான அணையான அÞவான் அணையின் கீழ்மட்ட அகலம்கூட 116 அடிதான்.
1976 ஆம் ஆண்டு, கேரளத்தினர் கட்டி உள்ள இடுக்கி அணையின் கீழ்மட்ட அகலம், வெறும் 56 அடிதான். ஆனால், உயரம், 555 அடி ஆகும். அதன் தண்ணீர் தேங்கும் பரப்பு , 26,865 ஆயிரம் சதுர ஏக்கர்; தேங்கும் தண்ணீர் கொள்ளளவு 72 டி.எம்.சி. ஆகும். இங்கு, 780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
ஆனால், முல்லைப்பெரியாறில் 152 அடி அளவுக்குத் தண்ணீரைத் தேக்கினால், 15.56 டி.எம்.சி. தண்ணீர்தான், 8,000 சதுர ஏக்கர் பரப்பில் தேங்கி நிற்கும்.
முல்லைப்பெரியாறில் பயன்படுத்த முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீர் (Dead Storage) 5 டி.எம்.சி. ஆகும். அதாவது 104 அடி உயரத்துக்குத் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது.
152 உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், 15.5 தண்ணீர் தேங்கும். அதில், 10.56 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்துக்குக் கிடைக்கும்.
145 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், 13.5. டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில், 8.5 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.
142 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், 12.7 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில், 7.7 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.
தற்போது உள்ள நிலவரப்படி, 136 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கி னால், 11.2 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில், தமிழகத்துக்கு வெறும் 6.2. டி.எம்.சி.தண்ணீர்தான் கிடைக்கும்.
ஏற்கெனவே, பெரியாறு தண்ணீர் போகிற பாதையில், கேரள அரசு, இடுக்கி அணை கட்டுவதற்கு முன்பே, 16 சிறு அணைகளைக் கட்டி இருக்கிறது.
மொத்தம், அவர்கள், 4,244 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர்.
இப்பொழுது பிரச்சினை ஏன் வந்தது தெரியுமா? இடுக்கி அணைக்குத் தண்ணீர் வேண்டும். முல்லைப் பெரியாறில், 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது. எனவேதான், இடுக்கி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற் காகவே, பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச்செய்தியை, முதலில் ‘மலையாள மனோரமா’ நாளிதழ் வெளியிட்டது.
1979 நவம்பரில், தமிழகத்துக்குப் பாதகமான முடிவு எடுக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் 38,000 ஏக்கர் நிலம் முழுக்கப் பாசனத்தை இழந்து தரிசாயின;
இருபோக சாகுபடி செய்த, 86,000 ஏக்கர் பரப்பு நிலங்கள்,ஒருபோக சாகுபடிக்கு மாறின;
53,000 ஏக்கர் பரப்பு நிலங்கள், தண்ணீர் வசதி இழந்து, ஆழ்குழாய் கிணற்று நீர் சாகுபடிக்கு மாறியது. இதனால், தமிழகத்துக்கு, ஆண்டு தோறும் 55 கோடியே 80 லட்சம் ரூபாய் விவசாய உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒப்பந்தத்தை மீறி, பெரியாறு அணை நீர்வரத்துப் பகுதியில், கேரள அரசு மேலும் 4 துணை அணைகளைக் கட்டி, நீர்வரத்தை, இடுக்கி அணைக்குத் திருப்பியது.
கரிகாலன் கட்டிய கல்லணையைப் போல், பென்னி குயிக் கட்டிய பெரியாறு அணை, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் வலுவாகவே இருக்கும். பெரியாறு அணை கட்டப் பட்ட நாள்முதல், கேரளம் பிரச்சினை ஏற்படுத்திய 1979 ஆம் ஆண்டு வரை, இந்த அணைப்பகுதியில் 30 முறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. 3.7 ரிக்டர் அளவு அதிர்ச்சி ஏற்பட்டும், அணைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணை கட்டிய காலத்தில், கட்டு மானப் பணி முடியும்வரை, நீர் வழிந்து செல்லுவதற்காக வெட்டப்பட்ட கால்வாயின் குறுக்கே, பேபி அணை 240 அடி நீளத்தில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற் காக, மேடான பகுதிகளையெல்லாம் வெடிவைத்துத் தகர்த்து, 5,765 அடி நீளத்துக்கு, திறந்தவெளிக் கால்வாய் வெட்டப்பட்டது. அணையில், 104 அடிக்கு மேல் தண்ணீர் வந்தால்தான், திறந்தவெளிக் வாய்க்காலுக்கே தண் ணீர் வர முடியும். இந்தக் கால்வாயின் ஆழம் 86 அடி, அகலம் 40 அடி ஆகும்.
இதன்பிறகு, 7 ஆயிரம் அடிக்கு மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டப்பட்டு, அதன் வழியாக வரும் தண்ணீர், வைரவன் வாய்க்காலில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும். அங்கிருந்து கம்பம் லோயர் கேம்புக்கு வரும். இங்குதான், பென்னி குயிக் ஏற்பாட்டின்படி, 17 கால்வாய்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.
1958 இல் வைகை அணை கட்டப்பட்டு, அங்கே தண்ணீர் தேக்கப்பட்டு, அங்கிருந்து பேரணைக்கு வந்து, வலது கால்வாய், இடது கால்வாய் வழியாக, தொண்டியில் கடலில் கலக்கிறது.
முல்லைப் பெரியாறு தண்ணீரால், உசிலம்பட்டி மற்றும் வைகை அணைப் பகுதியில் 10,580 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலுhர் பகுதியில், 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் ஒருபோகம் விளைகிறது. கம்பம் பள்ளத்தாக்கில், 14 ஆயிரத்து 777.5 ஏக்கர் இருபோக பாசனம் பெறுகிறது.
வைகை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், பேரணை கள்ளந்திரி வரை, 45 ஆயிரம் ஏக்கருக்குப் பாய்கிறது. மொத்தம், 2 இலட்சத்து 17ஆயிரம் ஏக்கர், முல்லைப் பெரியாறு தண்ணீரால் பாசன வசதியைப் பெறுகிறது. பெரியாறு அணையில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, இடுக்கி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத்தான், கேரளம், பெரியாறு அணையைக் குறித்து, அணைக்கு ஆபத்து, மக்கள் உயிருக்கு ஆபத்து என்று, பொய்க்கூச்சல் எழுப்புகிறது.
முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணையின் பலத்தைக் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, உச்சநீதி மன்றம், டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில், 15 நிபுணர்கள் கொண்ட குழுவை யும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்து, அணையின் பலத்தைப் பரிசோதித்து, அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டது.
அந்தக்குழுவினர் ஆய்வுகள் நடத்தி, அணை பலமாக உள்ளது என்றும், 145 அடிக்குத் தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்தியபின்பு, 152 அடியாக நீர்மட்டத்தை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்றும், ஆய்வு அறிக்கையை, 2001 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் தாழ்த்துகின்ற வேலையை கேரளம் செய்தது. பின்னர், 2006 பிப்ரவரி 27 இல், நீதிபதிகள் சபர் வால், தக்கர், பாலசுப்பிரமணியன் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் தீர்ப்பு வழங்கியது. இந்த விசாரணையின் போதுதான், நீதிபதி சபர்வால், கேரள அரசுக்குக் கிடுக்கிப்பிடி போட்டார். இடுக்கி அணைக்குத் தண்ணீர் கொண்டு போவதற்காகத்தானே, பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இறுதியில் நீதி வென்றது என்ற மனமகிழ்ச்சியைத் தமிழகத்துக்குத் தந்த அந்தத் தீர்ப்பில், திட்டவட்டமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒன்றைத் தெரிவித்தனர்.
அதாவது, தண்ணீர் மட்டத்தை உயர்த்தினால் அணைக்கு ஆபத்து வரும் என்று சொல்வதை நம்ப, எந்த ஆதாரமும் கிடையாது. அதற்கு மாறாக, அணை வலுவாக இருக்கிறது என்றுதான், ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அணையை வலுப்படுத்திக் கொள்ள, தமிழ்நாட்டுக்குச் சகல உரிமையும் உண்டு. எந்த முட்டுக்கட்டையும் போட கேரளத்துக்கு அதிகாரம் கிடை யாது’ என்று தெளிவாகக் கூறினர்.
இந்தத் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்துவிட்டுத்தான், கேரள அரசு, நதிகள் பாதுகாப்புச் சட்டத்தை, கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கேரளத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், அணைகள் குறித்து, கேரளம் நடவடிக்கை எடுக்கலாம் என்று, தான் தோன்றித்தனமான ஒரு அக்கிரமச் சட்டத்தை 2006 மார்ச் 17 ஆம் நாள் நிறைவேற்றியது. இந்தச் சட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று, அ.தி.மு.க. அரசு, உடனடியாக, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, கேரள அரசு தொடுத்த விண்ணப்பத்தையும், உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர், ஒவ் வொரு அமைப்பின் சார்பிலும், தனித் தனி மறு ஆய்வு மனுக்களைக் கேரளம் தாக்கல் செய்தபோதும், அனைத்தை யும் உச்சநீதிமன்றம் ஒதுக்கித் தள்ளி விட்டது. இதன்பிறகு தான், ‘புதிய அணை கட்டுவோம்’ என்ற அநியாய அறிவிப்பைக் கேரளம் செய்ய ஆரம்பித்தது.
2006 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 11 ஆம் நாள், கேரளத்தின் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன், ‘முல்லைப் பெரியாறு அணையை உடைப்ப தற்கும் எங்களுக்கு அதிகாரம் உண்டு’ என்று கூறினார்.
புதிய அணை கட்டினால் என்ன? என்று சிலர் நினைக்கலாம். தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணை யில் இருந்து பத்து கிலோ மீட்டருக்கு அப்பால், கேரளம் எத்தனை புதிய அணைகளைக் கட்டிக்கொண்டாலும், நமக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால், தற்போது கேரளம், ஒரு வஞ்சகத் திட்டத்தோடு புதிய அணை கட்ட வேண்டும் என்கிறது. அதுதான், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் திட்டம்.
கேரளம் திட்டமிடும் இடத்தில் புதிய அணை கட்ட வேண்டுமானால், புலிகள் காப்பகம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், பத்து கிலோ மீட்டருக்கு ரோடு போட வேண்டும். 12 முதல் 15 மீட்டர் அகலத்தில், மூன்று பாலங்கள் கட்ட வேண்டும். இதற்காக, 1 லட்சத்து 20 ஆயிரம் டன் பாறைகள் உடைக்கப்பட வேண்டும். சுமார், 1020 கிலோ கரிமருந்து பயன்படுத்தப்பட வேண்டும். கரிமருந்து வைத்து வெடிக் கும்போது எழுகிற புகை, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும்.
வனவிலங்குகள், குறிப்பாகப் புலிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் பறவைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்தப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
தற்போது கேரளம் கட்ட உத்தேசிக்கும் புதிய அணை, நமது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்டத் திட்ட மிடுகின்றனர். அதற்காக பாறைகளை உடைக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை தானாகவே உடையும் ஆபத்து ஏற்படும்.
2007 இல், முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தன்னிச்சையாக முடிவு செய்து, நீர்ப் பாசனத்துறை அமைச்சர் பிரேமச் சந்திரன், குமுளியில் செயற் பொறி யாளர் அலுவலகத் தையும், அணை கட்ட இருக்கும் முல்லைப் பெரியாறு வல்லக்கடவு பகுதியில், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்த முயன்று, குமுளியில் பொறியாளர் அலுவலக மும் திறக்கப்பட்டு விட்டது. ஆனால், பிடிஆர் எனப்படும், பெரியாறு புலிகள் காப்பகத்தில் அடிக்கல் நாட்ட, அன்றைய வனத்துறை அதிகாரி பத்மா மெகந்தி ஐ.எப்.எஸ் தடுத்து நிறுத்தி விட்டார். கேரள அரசு தில்லியில் புகார் செய்து, அவரை பீகாருக்கு மாற்றி விட்டார்கள்.
2006 ஆம் ஆண்டு இறுதியில், புதிய அணை கட்ட ஆய்வு செய்ய, கேரளம் அனுமதி கேட்டு, மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்ச கத்திடம் விண்ணப்பித்தது. அப்போது, மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக, தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் பொறுப்பில் இருந்தார்.
அப்போதே அவர், இந்த ஆய்வுக் கான அனுமதியை மறுத்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எதிர் காலத்தையே கேள்விக்குறி ஆக்கும் இந்தப் பிரச்சினை குறித்து, தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் அவர் தெரிவிக்க வில்லையா? அப்படித் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அது பச்சைத் துரோகம். ஆனால், அவர் தெரிவிக்கவே செய்து இருப்பார்.
அனுமதி கொடுக்க மறுத்து தமிழக உரிமையைக் காக்க வேண்டிய கடமையைச் செய்யவில்லை. தமிழக உரிமையைக் காவு கொடுத்தது மட்டும் அன்றி, வரப்போகும் தீமையை யும் தடுக்காமல் இருந்துவிட்டார் அவரது எஜமானர்.
2007 மே மாதத்துக்குப் பின்னர், அதே சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்ச ராக, தி.மு.க.வின் டி.ஆர்.பாலு பொறு ப்பு ஏற்றார். அவரும், கேரளத்துக்கு அனுமதி மறுக்கும் கடமையைச் செய்ய வில்லை. அன்றே, கேரளத்தின் விண் ணப்பத்தைத் தள்ளுபடி செய்து இருந்தால், இன்று ஜெய்ராம் ரமேஷ், கேரளம் ஆய்வு செய்ய அனுமதி கொடு க்கும் நிலை ஏற்பட்டு இருக்குமா?
உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, முல்லைப்பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று அறிவி த்து விட்டதால், கேரள அரசு, தன்னிச் சையாக ரூர்கி ஐ.ஐ.டி குழுவி னரைத் தன்னுடைய செலவில் அழைத்துக் கொண்டு போய், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை ஒரு மணி நேரம் பார்வையிட வைத்து, தாங்கள் விரும்பியவாறு அணை பலவீனம் என்று அவர்களிடம் இருந்து ஒரு பொய்யான அறிக்கை யைப் பெற்றது. இதையே உச்சநீதி மன்றத்தில் தங்கள் தரப்பு ஆவணமாக தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
‘புதிய அணா, புதிய கறார்’ (புதிய அணை; புதிய ஒப்பந்தம்) என்ற முழக்கத்தைக் கேரளம் முன் வைத்தது. சில மாதங்களுக்குப் பின்னர், ‘புதிய ஒப்பந்தம்’ என்ற வார்த்தையை எடுத்து விட்டது.
பெரியாறு அணையினால் கேரளத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பே கிடையாது. ஏனெனில், கடல் மட்டத்தில் இருந்து அணையின் உயரம் 2269 அடி. அணை உடைந்தால் பாதிக்கப்படும் என்று கூறப் படும் இடங்கள், 3500 அடி முதல் 4250 அடி உயரம் கொண்டவை. எனவே, அணை உடைந் தாலும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், உண்மையில் அணையின் பலம், நுhற்றுக்குநுhறு திடமாக உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
கேரளம் உத்தேசித்து இருக்கின்ற புதிய அணை கட்டப்படுமானால், முல்லைப் பெரியாறு அணையைச் சேதப்படுத்தி உடைக்கின்ற வேலையில் கேரளம் நிச்ச யமாக ஈடுபடும். ஏனெனில், ஏற்கனவே ‘அணையை உடைப்போம்’ என்று கேரள அமைச்சர் கள் கூறி உள்ளனர். 550 கோடி ரூபாயில் புதிய அணை கட்டத் திட்டமிட்டுச் செயல்படும் கேரள அரசு, ஒரு கோடி ரூபாய் செலவில் பேபி அணை யைப் பலப்படுத்து வதை ஏன் மறுக்க வேண்டும்?
முல்லைப்பெரியாறு அணை உடைக்கப்பட் டால், 999 ஆண்டுக்கால ஒப்பந்தம் என்பது பொருள் அற்றதாகி விடும். தற்போது, 2 லட்சத்து 40ஆயிரம் ரூபாய், கேரளத்துக்குக் குத்தகைப் பணமாகத் தருகிறோம். முல் லைப்பெரியாறு அணை உடைந்தால், புதிய அணையில் தண்ணீர் பெறுவதற்கு, வருடத் துக்கு 200 கோடி ரூபாய் வரை கேரளம் கேட்கும். நமது தேவைக்கு வேண்டிய அளவு தண்ணீரும் தரப்போவது இல்லை. தமிழக விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும். ஐந்து மாவட்ட மக்களுக்குக் குடிதண்ணீரும் கிடைக்காமல் போகும்.
கேரள அரசு அணை கட்ட ஆய்வு நடத்த, மத்திய மன் மோகன்சிங் அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அந்த அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கழகம், வாய்மூடிக் கிடந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல், திடீர் பூதமாகக் கிளம்பி, மத்திய புலனாய்வுத்துறை, விசாரணைச் சாட்டையை தி.மு.க. அமைச்சர் அலுவலகத்திலேயே சுழல விட்ட வுடன், திடீரென முழங்கிய கலைஞர் கருணாநிதி, மதுரையில், மத்திய இணை அமைச்சரைக் கண்டித் துப் பொதுக்கூட்டம் என்றார். இரண்டு நாள்கள் கழித்து, புதிய அணைக்கு எதிர்ப்புக் கூட்டம் என்றார். ஐந்து நாள்கள் கழித்து, சப்தநாடியும் ஒடுங்கியவராக, கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
எங்கோ லண்டனில் பிறந்த, இங்கிலாந்து நாட்டின் பென்னி குயிக், தென்தமிழ்நாட்டின் நலன் காக்க அணை கட்டினான்.
அந்த அணை கட்டப்பட்ட காலத்தில், காலரா, மலேரியா நோய்களால் இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரிகள் பலர் உயிர் இழந்தனர்.
இன்றோ, நம் கண் முன்னால், நமது உரிமைகளும், எதிர்காலமும் படுநாசமாக்கப்படும் ஆபத்து, தலைக்கு மேல் வட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், இறைச்சிக்குப் பயன்படும் கால்நடைகள், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தான், கேரளத்துக்குச் சென்றாக வேண்டும். சகோதர மாநிலம் என்ற உணர்வோடுதான், நாம் இவற்றைத் தடுக்காமல் இருக்கின்றோம்.
கேரளத்தின் எண்ணற்ற நதிப்படுகைகளில், ஒரு பிடி மணலை அள்ளுவதற்குக்கூட, அங்கே உள்ள அரசும், அரசியல் கட்சிகளும், ஏன் பொதுமக்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டின் ஆறுகள், நதிப்படுகைகளில் உள்ள மணலெல்லாம் தோண்டப்பட்டு, லாரி லாரியாகக் கேரளாவுக்கு நாள்தோறும் அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மணலும், சல்லிக்கற்களும், கேரளாவுக்கு உள்ளே செல்லாமல் தடுத்தாலே போதும்; கேரளம் தானாக வழிக்கு வரும்.
நம் எதிர்காலத்தை, நலன்களை நாசமாக்கக் கேரளம் துணியும்போது, நம் உரிமை காக்க நாம் பொருளாதார முற்றுகை போடுவதுதானே நியாயம்? எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசும், கேரளத்தோடு கூட்டுச்சதி புரிந்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்பதால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆயத்தம் ஆவோம்.
முல்லைப்பெரியாறு உரிமைகளைக் காக்க, முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் ந்து அயராது அர்ப்பணிப்போடு விவசாய சங்கத் தலைவர், உத்தமபாளையம் ஹாஜி கே.எம். அப்பாஸ், போராடி வருகிறார். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்ட உத்தமர் அவர். முல்லைப்பெரியாறு உரிமை காக்கவும், கேடு செய்யும் கேரளத் துக்கும் துணை போகும் மத்திய அரசுக்கும், கடமை தவறிய தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், நவம்பர் 8 ஆம் நாள் தேனியில், நமது இயக்கத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
அந்தக் கூட்டத்தில் நானும், துணைப் பொதுச் செயலாளர்கள் ஆருயிர்ச் சகோதரர் கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் ஆகியோரும், தேனி, மதுரை மாநகர், புறநகர், சிவகங்கை, விருதுநகர், இராமநாத புரம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்களும், முன்னணியினரும் கலந்து கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும், கண்ணியத்துக்குரிய கே.எம். அப்பாஸ் அவர்களும், கூட்டத்தில் பங்கு ஏற்று உரை ஆற்றுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட நோக்கத்துக்காக, நவம்பர் 14 இல் மதுரை மாநகரில் மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில், என்னுடைய தலைமையில், மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். இந்த அறப்போரை, கண்ணியம்மிக்க கே.எம். அப்பாஸ் தொடங்கி வைக்கிறார். அண்ணா தி.மு.க. பொருளாளர் அருமைச் சகோதரர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முடித்து வைக்கிறார்.
கண்ணின்மணிகளே,
ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலைநகர் டெல்லியில் நாம் உண்ணாநிலை அறப்போர் நடத்தியபோது, 5000 க்கும் மேற்பட்டவர்கள் டெல்லிக்கே வந்தீர்கள். சக்திக்கு மீறிச் செலவழித்து, ஏன் கடன் வாங்கியும்கூட வந்து, வாட்டுகிற குளிரில் உடலை வருத்திக் கொண்டு பங்கு ஏற்றீர்கள்.
எனவே, உரிமையோடும், அன்போடும் அழைக்கிறேன்; வாருங்கள், மதுரை மூதுhருக்கு வாருங்கள்; சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மீனக்கொடியோன் நகருக்கு வாருங்கள்; தமிழர் நலன் காக்கும், ஆட்பெரும் படைதான் நாம் என்பதை உணர்த்திட வாருங்கள்; கேரள, மத்திய அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிக்க, தெற்குச் சீமையைத் தட்டி எழுப்ப வாருங்கள்.
நவம்பர் 14; நான்மாடக்கூடலில் அறப்போர்க்களம். அங்கே, உங்களை எதிர்பார்க்கிறேன்!
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்
வைகோ

