தமிழக அரசா? நில விற்பனைத் தரகரா? விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்! வைகோ அறிக்கை!

விவகாரங்கள்: விவசாயம், புறநகர்

மாவட்டம்: தூத்துக்குடி, தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Thu, 12/11/2009

தமிழக அரசா? நில விற்பனைத் தரகரா?
விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை
உடனே நிறுத்த வேண்டும்!

வைகோ அறிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட, மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், தெற்கு ஆவரங்காடு, இராமச்சந்திராபுரம், சுப்பிரமணியபுரம், லட்சுமிபுரம், மேட்டூர், முப்பிலிப்பட்டி, ஆகிய 8 கிராமங்களை உள்ளடக்கிய 1700 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப் போவதாகத் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தொழிற்சாலைகளைக் கட்டக்கூடாது என்பது நம் கருத்து அல்ல. ஆனால், தொழிற்சாலைகளைக் கட்டுவதற்காக விளைநிலங்களை அழிக்கிற போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தண்ணீர் வசதி இல்லாத தரிசு நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. ஆனால், அங்கே தொழிற்சாலைகளைக் கட்டி, அவற்றுக்குத் தேவையான தண்ணீரைக் குழாய்களில் கொண்டு போகலாம்; இன்னபிற வசதிகளையெல்லாம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் முப்போகம் விளைந்த நிலை மாறி, இப்போது ஒருபோகம் என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கின்ற விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளைக் கட்டிவிட்டால், தமிழகம் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படும்.

ஏற்கனவே, தொழிற்சாலைகளைக் கட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, 1984 இல், மீளவிட்டான் பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தையும், 1999 இல் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் 1625 ஏக்கர் நிலத்தையும், தமிழக அரசு கையகப்படுத்தியது. நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு 80,000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாகச் சொல்லி ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு, அதில் மேற்கொண்டு எந்தவொரு வசதிகளும் செய்யாமல், ஒரு ஏக்கர் நிலம் 12 இலட்சத்து 500 ரூபாய் என்ற விலைக்கு, தனியார் தொழிற்சாலை அமைப்பதற்கு, 436 ஏக்கரை, சுமார் 50 கோடி ரூபாய்க்குத் தமிழக அரசு விற்று இருக்கிறது.

தமிழகத்தில் அரசாங்கம் நடக்கிறதா? அல்லது ஏழை எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கி, மிகமிக அதிக லாபத்துக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நிலத்தரகராக அரசு வேலை பார்க்கிறதா?

இவ்வளவு வருமானம் ஈட்டியபோதிலும், இன்னமும் நில உரிமையாளர்களுக்குப் பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை. பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், நிலத்தை விற்பதாக ஒப்புக்கொண்ட விவசாயிகளைக் கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு விவசாயம் செய்யவும் அனுமதிக்கவில்லை. அவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இந்தியாவின் விளைநிலங்களையெல்லாம் பெருமுதலாளிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, ஏழை எளிய மக்களைக் கூலித்தொழிலாளிகளாக அவர்களிடம் கையேந்த வைப்பதற்கான திட்டங்களையே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தமிழகத்தின் தி.மு.க. அரசும் மேற்கொண்டு வருகின்றன. ஆட்சி அதிகாரம், காவல்துறை துணையுடன், இப்போது கொள்ளை லாபம் ஈட்டும் நில விற்பனைத் தரகர்களாகவும் மாறி விட்டார்கள். உழைக்கும் மக்களின் விவசாய நிலங்களைப் பறித்தபோது, மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமம், சிங்குர் ஆகிய இடங்களில், பொங்கி எழுந்து போராடி, நிலத்தைப் பாதுகாத்தார்கள்.

தனியார் நிறுவனத்திடம் 50 கோடி ரூபாய் வாங்கிக் கொண்ட தமிழக அரசு, நில உரிமையாளர்களுக்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும், மேலும் காலம் கடத்தாமல் மொத்தத் தொகையையும் உடனே வழங்க வேண்டும் என்று கோரி, 29.5.2007 இல் தூத்துக்குடியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அந்தப் போராட்டத்தில் பங்கு ஏற்றது. ஆனால், இன்றுவரையிலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இப்போது, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒட்டப்பிடாரம் வட்டத்தில் நிலங்களைக் கையகப்படுத்துகின்ற முயற்சிகளைத் தமிழக அரசு உடனே கைவிடாவிட்டால், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களைத் திரட்டி, எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’
சென்னை-8
11.11.2009

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)