தடை... சிறை... கால் தூசுக்குச் சமம்!! தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால் - புலிகளுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்! வைகோ
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், தேசிய, அரசியல், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: திருச்சி - மாநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்
தடை... சிறை... கால் தூசுக்குச் சமம்!!
தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால்
புலிகளுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்!
இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக் கோரியும் - இனப்படுகொலை செய்யும் சியங்கள அரசைக் கண்டித்தும் -இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், அக்டோபர் 27, 28, 29 ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவாக, அக்டோபர் 29ஆம் நாள், திருச்சியில், மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது, மருத்துவர் இராமதாசு, பழ.நெடுமாறன், ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன் மற்றும் இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற இப்பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தலைநகர் சென்னையில் இருந்து அய்யா மருத்துவர் இராமதாசு அவர்கள், தமிழர் நெஞ்சங்களில் தணலாக இருக்கின்ற உணர்ச்சிக்கு பயனுள்ள வடிவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து மாநகர் திருச்சிக்கு வந்து இருக்கிறார்.
மூன்று கடல்கள் சந்திக்கின்ற கன்னியாகுமரி முனையில் இருந்து, அண்ணன் நல்லகண்ணு அவர்கள் நெடுந்தொலைவுக்குத் திரண்டு இருந்த மக்களைச் சந்தித்து திருச்சிக்கு வந்து இருக்கிறார்.
தன்னலமற்றுத் தமிழர் நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிற, இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள், கொங்கு மண்டலத்தில் கோவை மாநகரில் புறப்பட்டு, ‘ஈழத்தமிழர்களைக் காக்க எழுக; கொலைபாதகன் ராஜபக்சேவைக் கூண்டிலே நிறுத்திட ஆர்த்தெழுக’ என்ற எண்ணங்களை வழி நெடுகிலும் மக்கள் மனங்களில் பதியவைத்து, இந்தத் திரளான கூட்டத்துக்குவந்து பங்கேற்று இருக்கிறார்.
அலைபாயும் கடல் ஓரத்தில், இராமேஸ்வரத்தில் இருந்து நான் புறப்பட்டு, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்துவிட்டு, இந்த மழை இரவில் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்.
பிஜித்தீவில் தமிழர்கள் சவுக்கடிபடுகிறார்கள், சாட்டையால் அடிக்கப்படுகிறார்கள், உழைக்கச் சென்ற தமிழர்கள் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்ற செய்தி பரவிய போது, இதயம் குமுறிய முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘மண்வெட்டிக் கூலிதின்னலாச்சே நம் வாள்வலியும் தோள்வலியும் போச்சே’ என்று பாடினான்.
நமது சொந்தச் சகோதரர்கள், தொப்பூழ் கொடி தமிழ் உறவுகள், குற்றுயிரும் குலையுயிருமாக வதைபடும்போது, கொலை செய்யப்படுகிறபோது, பச்சிளம் குழந்தைகளும் பாவிகளின் கொடும் கரங்களுக்குத் தப்பவில்லை என்கின்ற துன்பச் செய்தி நம் நெஞ்சில் வந்து மோதுகிறபோது, அதுகண்டு கொதித்து எழாமல் இருப்பவன் செம்மை மறந்தவன் என்று அன்றைக்கு அந்த மகா கவிஞன் சொன்னான்.
முள்வேலி முகாம்களில் மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் வதைபடு கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லை என்பது மட்டும் அல்ல, நரகவேதனையில் உழல்கின்றார்கள். இப்படிப்பட்ட வதை முகாம், இந்த உலகில் எந்தத் திக்கிலும் இல்லை என்று பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபை (Amnesty International) குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழர்களைப் பார்க்க அனுமதி மறுக்கப் படுகின்றது, இலங்கைத் தீவில் மனித உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படு கின்றன என்று ஐ.நா.மன்றத்தின் பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின் றனர். அங்கு சென்று பார்ப்பதற்கு ராஜபக்சே எங்களை அனுமதிக்கவில்லை என்று தொண்டு நிறுவனங்கள் புகார் தருகின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தையே வெளியேற்றி விட்டான். மனித உரிமைகளைப்பற்றி இந்த உலகம் கவலைப்படுகிறதா என்று நான் வெகுண்டது உண்டு. இப்போதுதான், உலக நாடுகளின் கண்கள் லேசாகத் திறக்க ஆரம்பித்து உள்ளன.
செவிடாகிப் போன செவிகளில் இப்பொழுது ஈழத் தமிழர்களின் ஓலக்குரல் லேசாக விழுகிறது. கொடுமை செய்தவனுக்கு, காலம் கடந்தாவது தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம், இந்த அகிலத்தின் பல பகுதிகளில் எழுந்தது.
அதன்விளைவாகத்தான், ஐரோப்பா கண்டத்தில் இருக்கிற தேசங்களின் ஒன்றிணைப்பு அமைப்பாகிய ‘ஐரோப்பிய ஒன்றியம்’ ( European Union ), இனி இலங்கையில் இருந்து வருகிற ஆயத்த ஆடைகளுக்கு கடந்த ஆண்டு தந்த வரிச்சலுகையை நாங்கள் இந்த ஆண்டு தருவதாக இல்லை என்று அறிவித்து உள்ளன. இதுவரையிலும் ஆயிரமாயிரம் கோடி ரூபாய் கொள்ளை இலாபம் கண்ட இலங்கைக்கு, இதனால் இழப்பு ஏற்படும். உன் நாட்டில் மனித உரிமைகள் அழிக்கப்பட்டு விட்டன. சித்ரவதை முகாம்களில் தமிழர்கள் துன்பத்தில் துடிக்கின்றார்கள். எனவே, ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத்தடை விதிக்கும்; கொடுத்த வரிச்சலுகையைப் பறிக்கும் என்று தீர்மானித்து உள்ளன.
இலங்கையின் கொட்டத்தை ஒடுக்கு கின்ற வகையிலே, பொருளாதார முற்றுகை இடலாம் என்று முடிவு எடுத்தபோதுதான், கொடியவன் ராஜபக்சே வழக்கம்போல தனக்கு உதவுகின்ற டாக்டர் மன்மோகன் சிங்கை அணுகினான். மன்மோகன் சிங்கின் எடுபிடிகள், எம்.கே.நாராயணன் போன்ற தமிழ்த்துரோகிகள் எடுத்துக் கொடுத்த யோசனையின்படி, தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்.
திட்டத்தைச் சரியாக வகுத்தார்கள் மன்மோகன் சிங்கும் ராஜபக்சேவும். நீங்கள் ஒரு குழுவை அனுப்புங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குச் சொல்லுகிறபோது, காட்டிக் கொடுக்கின்ற கங்காணி வேலை செய்கிற தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு ஏற்ற நபர்களை அனுப்பி வைப்பார் என்பது ராஜபக்சேவுக்குத் தெரியும்.
நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்கிறேன். உலக நாடுகளின் பிரதி நிதிகளை, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அனுமதிக்க மறுத்த, செஞ்சிலுவைச் சங்கத்தை முகாம் களுக்குள் சென்று பார்வையிட அனுமதி மறுத்த கொடியவன் ராஜபக்சே, எப்படி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்தான்?
சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்த ராஜபக்சே, எப்படி கருணாநிதி அனுப்பி வைத்த குழுவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து, தாம்பூலம் வைத்து, வரவழைத்தான்? இதிலேதான் சூட்சுமம் இருக்கிறது.
இவர்கள் பார்வையிட்டு வந்தபின்னர் தந்த அறிக்கையில், காங்கிரÞ கட்சியைச் சேர்ந்த ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளைப் பதிவு செய்து, இதோ பார் மனித உரிமை மறுக்கப்படுவதாகச் சொன்னாயே, உலகத்தின் சிறந்த ஜனநாயக நாடு என்று கருதப்படுகின்ற இந்தியாவின் பிரதிநிதியின் அறிக்கை யைப் பார், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பார் என்று, அகிலத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அவர்கள் போட இருந்த பொருளாதார முற்றுகையை உடைப்பதற்கு மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் சேர்ந்துபோட்ட சதித் திட்டத்தின்படிதான், இங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்தனர்.
நாஜிகளின் வதை முகாம்களைவிடக் கொடுமையான முள்வேலி முகாம்களில் இருந்து, நரகத்தில் உழன்று கொண்டு இருக்கின்ற நமது சொந்தச் சகோதர சகோதரிகள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் தாயக மண்ணில், உடைத்து நொறுக்கப்பட்ட தங்கள் வீடுகளில் மீளக் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இது ஒரு கோரிக்கை.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமல்ல, மனிதநேயத்தில் அக்கறை உள்ள அனைவரின் கோரிக்கையும் இதுதான். ஆனால், இதுவே நிரந்தரத் தீர்வு அல்ல, முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுகிற ஒன்று மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு அல்ல.
ஏனென்றால், இனி பிரச்சனையை திசை திருப்புவதற்குக் கருணாநிதி முயல்வார், மன்மோகன் சிங் முயல்வார். அதற்கு அச்சாரமாகத்தான், ‘நான்கு நாட்களில் இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்த மகானுபாவர் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கச் சொல்லி, அதைச் சுவரொட்டிகளாக மானங்கெட்ட ஜென்மங்கள் தமிழ்நாட்டு வீதிகளில் ஒட்டி இருக்கிறார்கள்.
முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது மட்டும் பிரச்சனைக்குத் தீர்வு ஆகாது. ஆறரைக் கோடி தமிழ்ச் சமுதாயம் இதை உணர வேண்டும். சிங்களவன் பூட்டிய அடிமை முள்வேலி உடைத்து எறியப்பட வேண்டும். இந்த முள்வேலி அல்ல. இது இப்பொழுது ஏற்பட்ட பிரச்சனை. ஆறு மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பிரச்சனை. ஐம்பது ஆண்டுகளாக இருக்கின்ற பிரச்சனையின் அடிப்படையை மறந்துவிடக்கூடாது. சிங்களவன் பூட்டிய அடிமை விலங்குகள் உடைத்து எறியப்பட வேண்டும்.
உடைத்து எறிகின்ற போர்க்களத்தை நடத்தி, ஏறத்தாழ அடிமை விலங்குகளை உடைத்து எறிந்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தைக் கட்டி எழுப்பினார் “மாவீரர் திலகம் பிரபாகரன்”. தந்தை செல்வா தனித் தமிழ் ஈழமே தீர்வு என வட்டக் கோட்டையில் பிரகடனம் செய்து, அடுத்து இளைஞர்கள் இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்ற வுடன், இளந்தலைமுறையினர் ஆயுதம் ஏந்திப் போராடினர், இரத்தம் சிந்தினர். உயிர்களைத் தாரைவார்த்துக் கொடுத்தனர்.
அப்படிப் போராடி, தங்களுக்கென்று அரசு அமைத்து, உலகம் அதை ஏற்கக் கூடிய கட்டத்துக்கு வந்த நிலையில், இந்தியா ஆயுதம் கொடுத்து அழித்தது.
இந்த முள்வேலி முகாம்களில் இத்தனை இலட்சம் தமிழர்கள் அடைபடுவதற்கு ராஜபக்சே மட்டுமே காரணம் அல்ல. நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன், இந்திய நாட்டின் துரைத் தனத்தை மேற்கொண்டு இருக்கின்ற டாக்டர் மன்மோகன் சிங் அரசு காரணம். அவரை ஆட்டிவைத்துக் கொண்டு இருக்கின்ற இத்தாலியில் பிறந்த சோனியா காரணம். முள்வேலி முகாம்கள் ஏற்பட இந்திய அரசுதான் காரணம்.
எப்படி முள்வேலி முகாம் வந்தது? போர்க்களத்தில் புலிகள் தோற்கடிக்கப் பட்டதால் வந்தது. புலிகள் தோற்க யார் காரணம்? விடுதலைப்புலிகளை சமர்க்களத்தில் இதற்கு முன்பு சிங்களவன் வென்றது உண்டா? 1996 க்குப்பிறகு, ‘ஓயாத அலை’களில் பிரபாகரன் படைக்கு எதிர்நிற்க முடியாமல், பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடினான். ‘அக்னி அலை’களில் ஆவேசங்கொண்டு புலிகள் தொடுத்த போருக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், சிங்களவன் ஓட்டம் பிடித்தான். யானைஇறவுச் சண்டையில் சிங்களவன் சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடினான்.
இப்படிப் போர்முனைகளில் தோற்றுக் கொண்டு இருந்த கொலைபாதக சிங்களக் கூட்டத்துக்கு, திட்டமிட்டு 2004 இல் தொடங்கி, ஆயுதங்களை வழங்கியது மன் மோகன் சிங் அரசுதான்.
இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நாங்கள் ஆயுதம் கொடுக்கிறோம் என்று ஒப்புக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேட்கிறேன். நீங்கள் கொடுத்த ஆயுதம் புலிகள்மீது மட்டும்தான் தாக்குதல் நடத்தியதா? நீங்கள் கொடுத்த ஆயுதம் புலிகள் மீது மட்டும்தான் வீசப்பட்டதா? யுத்தம் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை இராணுவத்துக்கும்தான். ஆகவே, நாங்கள் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதம் கொடுத்தோம் என்று நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. அதற்கே உங்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் அவர்களது தாயக விடுதலைக்கு ஆயுதம் ஏந்தினார்கள்.
நான் மன்மோகன் சிங்கைக் கேட்கிறேன். பச்சைக் குழந்தைகள் விடுதலைப் புலிகளா? எத்தனைப் பெண்கள் நாசமாக்கப்பட்டார்கள்? எத்தனை கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு கிழிக்கப்பட்டு அந்த சிசுக்கள் வெட்டி எடுத்து மண்ணில் போடப் பட்டது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் குற்றம் சாட்டினோம். ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. ஐ.நா.வின் பார்வை யாளர்கள் தந்த அறிக்கை.
அந்த தமிழ்ச் சகோதரிகள் விடுதலைப் புலிகளா? தமிழ்க் கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு சிங்களச் சிப்பாய்களின் துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்ட கூரிய கத்திகளால் கிழிக்கப்பட்டுச் செத்ததற்குப் பிறகும் அந்தக் கர்ப்பிணித் தாய்களின் கர்ப்பத்துக்குள்ளே இருந்த ஐந்து, ஆறுமாத சிசுக்களை வெட்டி மண்ணில் போட்டார்களே, இதுதான் இனக்கொலை. உலகில் வேறு எங்கும் இப்படிப்பட்ட இனக்கொலை நடக்கவில்லை.
நான் மன்மோகன் சிங்கைக் கேட்கிறேன், கர்ப்பிணித் தாய்மார்களின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்களை வெட்டி எறிந்து போடுகின்ற அளவுக்கு சிங்களவனுக்கு வலிமையைக் கொடுத்தாயே, அந்தப் பிஞ்சுகள் விடுதலைப்புலிகளா? இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று, தமிழ் இயனத்தையே கரு அறுக்கின்ற யுத்தத்தை நீங்கள் திட்டமிட்டு நடத்தினீர்கள்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது சோனியாவின் நோக்கம், மன்மோகன் சிங்கின் நோக்கம். இதற்கு கங்காணி வேலை பார்த்தவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
உலகில் தடைசெய்த ஆயுதங்களை அங்கே இலங்கையில் போர்முனையில் பயன்படுத்தி புலிகளைத் தோற்கடித்தார்கள். சமரில் நேருக்கு நேராகவா ஜெயித்தான் சிங்களவன்? போரில் புலிகள் பின்வாங்கினார்களா? இல்லை. சீனா கொடுத்த ஆயுதம், பாகிஸ்தான் கொடுத்த ஆயுதம், இஸ்ரேல் கொடுத்த ஆயுதம், ஈரான் கொடுத்த ஆயுதம், ரஷ்யா கொடுத்த ஆயுதம் என இத்தனை நாடுகளின் ஆயுதங்களையும் கொண்டுபோய், கொன்று குவிப்பதற்கு நீ 1000 கோடி பணம் கொடுத்தாய். நீ கொடுத்த பணத்தில் அவன் ஆயுதம் வாங்கினான்.
இப்போது, பிரச்சனையைத் திசைதிருப்பப் பார்க்கிறார் மதிப்புமிக்க தமிழக முதல்வர் கருணாநிதி. அவரிடம் அதிகாரம் இருக்கிறது. ஆள், அம்பு, படை பலம் இருக்கிறது. ஊடகங்கள் இருக்கின்றன, தொலைக்காட்சிகள் இருக்கின்றன. பத்திரிகைகள் மனதளவில் உண்மையைச் சொல்லவேண்டும் என்று துடித்தாலும், அவற்றின் கைகள் கட்டிப் போடப்பட்டு இருக்கின்றன. நியாயத்தைச் சொல்ல பத்திரிகைகளுக்கு இங்கே வாய்ப்பு இல்லை. இவ்வளவு அதிகாரத்தையும், இவ்வளவு செல்வாக்கையும் பெற்று இருக்கக்கூடிய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு இப்பொழுது எழுதுகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு கருணாநிதி அவர்கள் எழுதுகிறார்: ‘இன்ப நாளிது, இதயம் பாடுது’ இது முரசொலியில் மதிப்புமிக்க முதல்வரின் வாசகங்கள்.
எது இன்ப நாள்? சகோதர யுத்தம் ஓடி ஒளிந்தது எனக்கு இன்ப நாள். ஈழத்துத் தமிழர்கள், சகோதரச் சண்டையால் செத்து மடிந்தார்கள் இன்ப நாள் என்கிறார். முதலமைச்சர் அவர்களே, ஓரளவு உங்களை நான் அறிந்தவன். உங்களை முழுமையாக எவனும் உலகத்தில் கண்டுபிடிக்க முடியாது. (பலத்த கைதட்டல்) உங்கள் உள் மனதில் - ஆழ்மனதில் - அடிமனதில் - விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற வக்கிரபுத்தி என்றைக்கும் உண்டு. அது வெளியே வந்துவிட்டது.
சகோதரச் சண்டை ஒழிந்தது இன்ப நாள் என்கிறார். மூன்றரை இலட்சம் மக்கள் வதைபடுவது உங்களுக்கு இன்ப நாளா? பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்டார்களே, அது இன்ப நாளா?
சகோதரச் சண்டையைப் பற்றிச் சொல்கிறீர்களே? நீங்களா பேசுவது சகோதரச் சண்டையைப் பற்றி?. இந்த முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டுகள் விழும் என்று எந்தத் தலைவரை அண்ணா சொன்னாரோ, அந்தப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டுத் தூக்கி எறிந்தீர்கள்.
கட்சிதான் ஜீவன். திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்னுடைய உயிர்மூச்சு என்று கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக உலவிய என்னை, கொலைப் பழி சுமத்தி அதுவும் விடுதலைப் புலிகளும் நானும் சேர்ந்து இவரது உயிருக்கு ஆபத்து என்று கொலைப் பழிசுமத்தி, இயக்கத்தின் தொண்டனைத் தூக்கி எறிந்தீர்கள். சகோதரச் சண்டையைப் பற்றி நீங்களா பேசுவது?
நீங்கள் உடைக்க முயலாத கட்சி எது இந்தத் தமிழ்நாட்டில்? எந்தக் கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை? கம்யூனிஸ்ட்கள் தப்பியது உண்டா? பாட்டாளி மக்கள் கட்சியை நீங்கள் பதம் பார்க்காமல் இருந்தது உண்டா? முஸ்லிம் லீக்கை உடைக்காமல் இருந்தது உண்டா? எதையும் உடைத்துப் பழக்கப் பட்ட நீங்களா உபதேசம் செய்வது?
கட்சி எல்லைகளைக் கடந்த இளைஞர்கள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வோடு தமிழகத்து இளைஞர்கள் இருக்கிறார்கள். முத்துக்குமார் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அவனும் இணையதளத்தைப் பயன்படுத்தினான். கணினிகளைப் பயன்படுத் தினான். அதில்தான், தனது மரண வாக்குமூலத்தைத் தட்டச்சு செய்தான். தற்கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர்கள் தற்கொலை செய்தது நம் நெஞ்சைப் பிளக்கிறது. ஏ... தமிழ் இளைஞனே நீ தற்கொலை செய்து கொள்ளாதே... வாளெடுக்க வா! ஆயுதம் ஏந்த வா! ஈழத்தமிழனைக் காப்பாற்ற வா! என்று நாங்கள் அழைக்கிறோம்!
அப்படி கணினிகளைப் பயன்படுத்துகிற இளைஞர்கள், இன்றைக்குத் தங்கள் கைத்தொலை பேசியில்கூட ஒரு காட்சியைப் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். குறுந்தகடுகளாக உலவுகின்றன. தமிழர்களின் இதயத்தைப் பிளக்கின்ற காட்சிகள். அந்தக் குறுந்தகடுகளை வீடுவீடாகப் போட்டுப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தினரோடு பாருங்கள். உங்கள் வீதிகளில் போட்டுக் காட்டுங்கள்.
நாங்கள் ஆயிரம் கூட்டம் போடுவதை விட ஒவ்வொரு குறுந்தகடும் ஒரு வீட்டுக்குள் போனால் அந்த வீட்டுத் தமிழனின் உள்ளம் வெடிக்கும். காவல் துறை அதிகாரிகளே, நீங்களும் தமிழர்கள்தான். குறுந்தகடு கிடைத்த உடன் விநியோகித்தவன் யார் என்று தேடாதீர்கள். குறுந்தகட்டைப் பத்திர மாக ரகசியமாக வீடுகளுக்குக் கொண்டு செல்லுங்கள் (பலத்த கைதட்டல்) உங்கள் உடம்பிலும் தமிழ் இரத்தம்தான் ஓடுகிறது. உங்கள் தாய், உங்கள் தகப்பன், உங்கள் மாமன், உங்கள் மச்சான், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் குடும்பத்தினர், உங்கள் தெருமக்களோடு உட்கார்ந்து பாருங்கள்.
அண்ணன் நல்லகண்ணு சொன்னதைப் போல, வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, நானிலம் போற்ற வாழ்ந்த குடி, செங்குட்டுவன் வரலாறு, கரிகாலன் வரலாறு, ராஜராஜன் வரலாறு என்று பெருமை பேசிய இனத்தின் பிள்ளைகள் நாம். உலகத்துக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன், மான உணர்ச்சியைக் கற்றுக்கொடுத்தவன் தமிழன், வள்ளுவன் குறள்நெறியை வழங்கிய தமிழன், இளங்கோவின் ஜீவகாப்பியத்தைப் பாராட்டிய தமிழன்.
அப்படிப்பட்ட தமிழ் இளைஞன் ஆடை யற்ற கோலத்தில் இழுத்து வரப்படு கிறான். நிர்வாணக் கோலத்தில் இழுத்து வரப்படுகிறான். அவனது கைகளில் நீண்டகயிறு. அந்தக் கயிற்றை இழுத்துக் கொண்டுவருகிறான். சிங்களச் சிப்பாய் களின் கையில் துப்பாக்கி. எட்டி மிதிக் கிறான். 25 வயதுப் பிள்ளையை, நிர்வாணக் கோலத்தில் இருக்கிற உன் சகோதரனை - மொழியால், இனத்தால், கலையால், கலாச்சாரத்தால், பண்பாட் டால், நாகரிகத்தால், ஓடும் குருதி ஓட்டத்தால், நாடி நரம்புகளில் பின்னிக் கிடக்கும் இரத்த அணுக்களால் நம் நெஞ்சில் உறவாடும் நம் சொந்தச் சகோதரனை இழுத்துக் கொண்டு வருகிறான்.
எட்டி மிதிக்கிறான், மண்டிபோட்டு உட்கார வைக்கிறான். பிடறியில் துப்பாக் கியால் சுடுகிறான். கபாலம் பிளக்கிறது இரத்தம் கொட்டுகிறது சுருண்டு விழுந்து செத்து விழுகிறான். அடுத்த தமிழ் வாலிபன் அவனும் நிர்வாணக் கோலத்தில், அவனையும் எட்டிமிதித்து சுடுகிறான். இப்பொழுது வரிசையாக எட்டு பிணங்கள் இரத்த வெள்ளத்தில் நிர்வாணக் கோலத்தில் கிடக்கின்றன. இவை அனைத்தும் உண்மைச் சம்பவம் என்று அமெரிக்க நாட்டு ஆய்வாளர்கள் நேற்றைக்கு முன்தினம் சொல்கிறார்கள்.
தமிழா, இரத்தம் கொதிக்கவில்லையா? இந்தக் கொடுமை உலகத்தில் எந்த இனத்துக்கும் ஏற்படவில்லை! இதை முதலமைச்சரிடத்தில் கேட்டார்கள். இப்படிப்பட்ட நெஞ்சை நடுங்க வைக் கின்ற காட்சி வந்திருக்கின்றதே இணைய தளத்தில் படங்களாக என்றதற்கு முதலமைச்சர் சொல்கிறார் ‘அது பழைய படமாக இருக்கும்’ என்கிறார்.
உங்களுக்கு இரக்கம் இல்லையா? உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா? 14 பேர் தீக்குளித்தபோது ஒருவரி எழுதுவதற்கு முனையாத உங்கள் பேனா, அண்ணன் நெடுமாறனை, நெடுமரம் என்றும், எங்களை எட்டப்பர்கள் என்றும் எழுதுகிறதே? யார் எட்டப்பன்? யார் கருணா? என்பதை, இந்த உலகம் சொல்லும்.
ஆட்சி இருக்கலாம். அதிகாரம் இருக்கலாம். முதலமைச்சர் என்கின்ற மணிமகுடம் இருக்கலாம். உங்கள் பிள்ளைக்குத் துணைமுதல்வர் பதவி இருக்கலாம். அந்தப் பதவியோடு பவனி வரலாம், பவிசு இருக்கலாம். இன்னொரு பிள்ளை மத்திய மந்திரி ஆகலாம். குடும்பத்தைக் கொலு மண்டபத்தில் உட்கார வைத்து இருக்கலாம். உலகக் கோடீசுவர வரிசையில் உங்கள் குடும்பம் இன்றைக்கு இடம்பெற்று இருக்கலாம். ஆசியக் கோடீசுவரர்களாக ஐஸ்வரிய வான்களாக உலா வரலாம். பத்திரிகைகள் உங்களுக்குப் பல்லாண்டு பாடலாம். பத்துப் பதினைந்து வர கவிகளை, படிக்காசுத் தம்பிரான்களை, நிலைய வித்வான்களாகப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு நாள் தோறும் பாராட்டு மழையில் நனையலாம்.
எல்லாம் இருக்கிறது, செல்வம் இருக்கிறது - அதிகாரம் இருக்கிறது - விளம்பரம் இருக்கிறது - விழா நடத்த ஒரு கூட்டம் இருக்கிறது - பத்திரிகை இருக்கிறது - எல்லாம் இருக்கிறது உங்களுக்கு. ஆனால், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெடிய வரலாற்றில் இனத்துரோகி என்ற பெயர் இருக்கிறதே, காலம் ஒருபோதும் உங்களை மன்னிக்காது.
பண்டார நாயகா தராததை, ஜெயவர்த்தனா தராததை, சேனநாயகா தராததை, பிரேமதாசா தராததை, சந்திரிகா தராததை, ஹிட்லரைவிடக் கொடியவனான இந்தக் கொலை பாதகன், கேடுகெட்டபயல் ராஜபக்சேவா தரப்போகிறான்? ஒருபோதும் இல்லை.
தனித் தமிழ் ஈழம்; இது ஒன்றுதான் தீர்வு. நாம் வாழும் காலத்தில் இந்த அவலம் நடந்துவிட்டது. தொட்டுவிடும் தூரத்தில் ஆறரைக்கோடி மக்கள் நாம் இருந்தும் - உணர்ச்சி இருந்தும் - மானம் இருந்தும் - வீரம் இருந்தும் - எல்லாம் இருந்தும் வெறும் கூச்சலாகப் போய்விட்டது.
ஆகவே, இந்தக் கட்டத்தில் தமிழ் இளைஞர்களே! நீங்கள் முன்வாருங்கள். கட்சிகளைக் கடந்து நான் அழைக்கிறேன். இணையதளத்தில் பயில்கிற இளைஞர் கூட்டம் முன்வரட்டும். தமிழகத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு வழக்கறிஞர்கள் 60 நாட்கள் போராடினார்கள். தியாக உணர்வோடு போராடினார்கள். அவர்களது கைகால்களை உடைக்க, காட்டுமிராண்டித்தனமான தாக்கு தலுக்குக் காவல் துறையை ஏவிவிட்டார் கருணாநிதி. தீக்குளித்தவர்களைக் கொச்சைப்படுத்தினார் கருணாநிதி.
ஆகவே, இந்தக் கட்டத்தில் தமிழக இளைஞர்கள் நீங்கள் உணர்ச்சி பெறுங்கள். புலிகள் அழிந்து விட்டார்களே என்கிறார்கள். அட, முட்டாள்களே! யார் சொன்னது? (பலத்த கைதட்டல்)
ஈழத்தில் பிறக்கின்ற புல்பூண்டுகூட சிங்களவனை ஏற்காது. பிறக்கிற குழந்தைகூட நெஞ்சிலே பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டுதான் எழும். அவர்களை இயக்கும் சக்தியாக பிரபாகரன் இருப்பார்.
தமிழர்களே! ராஜபக்சே சொன்னான், பிரபாகரன் ஆவிகூட இங்கே உலவ முடியாது என்று. அட முட்டாளே! ஆவிகள் கல்லறைகளைக்கூட உடைத்துக் கொண்டுவந்து யுத்தம் நடத்தும் என்று ஒரு கவிஞன் எழுதினான். செத்துப் போனவர்களை நினைத்துக் கொண்டு போராடுகிற வீரர்கள் அங்கே!
கொலைகாரக் கொடியவன் ராஜபக்சேவோடு எப்படி கைகுலுக்கினீர்கள்? அவனோடு கை குலுக்குகிற போது, அவன் முகத்துக்குப் பின்னாலே கொல்லப்பட்ட குழந்தைகள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? சாகடிக்கப்பட்ட தமிழர்கள் முகம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? மானம், ரோசம் எந்த உணர்ச்சியும் உங்களிடம் இல்லையா? அவன் சக்கரவர்த்தியைப் போல உட்கார்ந்து கொள்கிறான். நீட்டி நிமிர்ந்து உடம்பை முறுக்கி, எவ்வளவு திமிரோடு உட்கார்ந்து இருக்கிறான். அங்கே அடிமைகளாக இவர்கள் கூனிக்குறுகி உட்கார்ந்து இருக்கிறார்கள்.
போரை நிறுத்த வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கூட்டம் நடத்தின. நாங்கள் கூட்டம் நடத்தினோம். ஏமாற்று வேலைக்கு, கருணாநிதி திறமையாக சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அண்ணா தி.மு.க உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் ஆதரித்தன. தீர்மானம் நிறைவேற்றப் பட்ட மூன்றாம் நாள் ராஜபக்சே தில்லி க்கு வந்து, இதே திமிரோடு சொன்னான். போர் நிறுத்தமா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்றான். அதற்குப் பத்து நாள் கழித்து பிரணாப் முகர்ஜி இங்கே வந்தார். முதல்வர் வீட்டுக்கு முன்னால் செய்தியாளர்கள் கேட்டார்கள் ‘போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்வீர்களா? என்று.
இது எங்கள் வேலையில்லை என்றார், அதே பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றுவந்தபின்னர், 48 மணிநேர போர் நிறுத்தம் வந்ததாக இதே கருணாநிதி எட்டுக்கால செய்தி போட வைத்தார். அதேபோன்ற பித்தலாட்ட வேலைகளை இப்பொழுதும் செய்வார். இன்றைக்கு 20,000 பேர் அனுப்பப்பட்டுவிட்டார்கள், நாளைக்கு 30,000 பேர் அனுப்பப்பட்டு விட்டார்கள் என பட்டியலிடுவார். இந்த கோயபல்ஸ் வேலையெல்லாம் அவருக்குக் கைவந்த கலை. ஆனால், தமிழர்கள் ஏமாற மாட்டார்கள், ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்.
கொலைகாரன் ராஜபக்சேவைக் கூண்டில் நிறுத்துவோம். செம்மணியில் தமிழர்க ளைக் கொன்று குவித்த கொடியவன் கொத்தபயா ராஜபக்சே, சரத்பொன் சேகாவைக் கூண்டில் நிறுத்துவோம். அந்த இரத்தப் பழிக்கு பரிகாரம் காணுகிற வரை மானம் உள்ள தமிழன் சாப்பிடுகிற சாப்பாடுகூட செரிக்காது.
ஆனால், அந்தக் கொலைகாரன் போட்ட சாப்பாட்டைத் தின்றுவிட்டு, அவன் சக்க ரவர்த்திபோல சிம்மாசனத்தில் உட்கார் ந்து இருக்கிறான். அவன் உடம்பை முறுக்கிக் கொண்டு கொலைகார பாவி ராஜபக்சே பேசுகிறான். இவர்கள் கூனிக் குறுகி 32 பல்லையும் இளித்துக்காட்டி அவன் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு மானம், வெட்கம், ரோசம் இல்லாமல் அங்கு கொடுத்த பரிசுப் பொருட்களை யும் வாங்கிக் கொண்டு வந்து நாங்கள் விருந்து சாப்பிடவில்லை, சம்சா தான் சாப்பிட்டோம் என்று சொல்கிறார்கள். ஈனப்பிறவிகளாகி விட்டார்கள்.
தமிழ்நாட்டில் உணர்ச்சி அழிந்து விடாது. இது மான மறவர்கள் பூமி. நாட்டின் விடுதலைப்போரில் தமிழர்களைப் போலத் தியாகம் செய்தவர்கள் இந்தியா விலேயே கிடையாது. அதை மறந்து விடாதீர்கள். இங்கேதான் செக்கு இழுத்த செம்மல், இங்கேதான் மருதுபாண்டியர் கள், இங்கேதான் பாஞ்சாலங்குறிச்சி, இங்கேதான் நெற்கட்டும்செவல். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
அந்த உணர்வோடு, தமிழகத்து தமிழர் கூட்டம் பொங்கி எழட்டும். உணர்ச்சி உள்ள தமிழர் கூட்டமாகப் பொங்கி எழட்டும். ஈழத்துத் தமிழர்களைக் காக்க இங்கே புறப்படட்டும்.
மன்மோகன் சிங் அரசே, நீ ஆயுதம் கொடுத்தாய்; உன் அரசு ஆயுதம் கொடுத்துத் தமிழனைக் கொன்றது. அந்தத் துரோகத்தை இனியும் நீ தொடர்ந்தால், புலிகளுக்கு நாங்கள் எல்லா உதவியும் செய்வோம். இது என்னுடைய கருத்து. (பலத்த கை தட்டல்). நான் சார்ந்து இருக்கின்ற இயக்கத்தின் கருத்து. உன் தடை, உன் சிறைச்சாலை உன் அடக்கு முறை, கால் தூசுக்குச் சமம். (பலத்த கைதட்டல்)
கொலைபாதகன் ராஜபக்சே கூட்டத்தைக் கரு அறுப்போம். எழட்டும்! தமிழ் ஈழம் எழட்டும்!
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

