கையாலாகாத மத்திய அரசின் பகல் கொள்ளை! வைகோ கண்டனம் -அண்டை நாடுகளான சீனாவில் பெட்ரோல் விலை இந்தியாவைவிட 50 விழுக்காடு குறைவாகவும், பாகிஸ்தானில் 48 விழுக்காடு குறைவாகவும், பங்களாதேசில் 52 விழுக்காடு குறைவாகவும் உள்ளதே?
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், தேசிய, வறுமை, புறநகர், போக்குவரத்து
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
4 நவம்பர் 2011 - கையாலாகாத மத்திய அரசின் பகல் கொள்ளை!
வைகோ கண்டனம்
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு எல்லை இல்லாமல் தொடர்வதைத்தான் பெட்ரோல் விலை உயர்வு உணர்த்துகின்றது. கடந்த பத்து மாத காலத்தில் மட்டும், 23 விழுக்காடு உயர்த்தி இருக்கின்றார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் மட்டும், ஐந்தாவது முறையாக உயர்த்தி இருக்கின்றார்கள்.கடந்த செப்டம்பரில்தான் லிட்டருக்கு 3.14 அதிகரிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள்ளாக ரூ.1.80 உயர்த்துவதை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாட்டின் பணவீக்க விகிதம் 9.72 விழுக்காடு ஆகவும், உணவுப்பொருள் பணவீக்கம் 12.21 விழுக்காடு ஆகவும் அதிகரித்து உள்ள நிலையில், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகின்றது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 15 ஆயிரம்கோடி இழப்பீட்டுத் தொகை மத்திய அரசு வழங்கி உள்ள நிலையில், அவை நட்டம் அடைவதாக எப்படிக் கூற முடியும்? இரண்டு மாதத்தில் என்ன பெரிய நட்டம் வந்து விடப் போகின்றது?
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் மாறுபாடுதான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்றால், அண்டை நாடுகளான சீனாவில் பெட்ரோல் விலை இந்தியாவைவிட 50 விழுக்காடு குறைவாகவும், பாகிஸ்தானில் 48 விழுக்காடு குறைவாகவும், பங்களாதேசில் 52 விழுக்காடு குறைவாகவும் உள்ளதே?
கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இயலாத, கையாலாகாத காங்கிரஸ் அரசு, பெட்ரோல் விலையை உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கின்றது. அடித்தட்டு ஏழை எளிய மக்களை உடனடியாகப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.11.2011

