எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு; உடனே திரும்பப் பெற வேண்டும் வைகோ அறிக்கை

விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Sat, 26/11/2011

 

 

 

 

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும்
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு;
உடனே திரும்பப் பெற வேண்டும்

வைகோ அறிக்கை

புதியபொருளாதார கொள்கை என்ற பெயரால் இருபது ஆண்டுகளில் நாட்டை சீரழித்து, மக்களின் நல்வாழ்வை சூறையாடிய மத்திய காங்கிரஸ் அரசு, மீண்டும் தனது கொடிய கரங்களால் சிறு வணிகத்தை நம்பி உள்ள மக்களின் கழுத்தை நெறித்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு 51 விழுக்காடு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு, ஏதேச்சதிகார கடும் கண்டனத்திற்கு உரிய நடவடிக்கை ஆகும்.

விவசாயத்துறைக்கு அடுத்து ஒன்றரை கோடி சிறு வணிக நிறுவனங்கள் மூலம், சுமார் 20 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சில்லரை வர்த்தகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சில்லரை வர்த்தகத்தில் உலகின் நான்காது பெரிய சந்தையைக் கொண்ட இந்தியா விற்பனையை கைப்பற்ற துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் ‘வால்மார்ட்’, பிரிட்டனின் ‘டெஸ்கோ’, பிரான்சின் ‘கேரி ஃபோர்’ ஜெர்மனியின் ‘மெட்ரோ’ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பியவாறு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் இருபத்து இரண்டு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சில்லரை விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சிறுவணிகத்தை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துள்ளது காங்கிரஸ் அரசு. ஏற்கனவே உள்நாட்டு பெரும் நிறுவனங்கள் சில்லரை விற்பனையில் நுழைந்ததால், சிறுவணிகர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

அந்நிய நேரடி முதலீடு வந்தால், நுகர்வோருக்கு வாய்ப்புகள் பெருகும். நல்ல தரமான பொருட்கள் கிடைக்கும். விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் வியாக்கியானம் செய்துள்ளார். ஆனால், உண்மை நிலையோ வேறு. வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை விற்பனையில் இறங்கினால், பல சிறிய போட்டியாளர்களை களத்திலிருந்து விரட்டியடித்து ஏகபோக நிலையை உருவாக்கி விடுவார்கள். பிறகு அவர்கள் விருப்பப்படி தான் தரமும், விலையும் நிர்ணயிக்கப்படும்.

தமது விற்பனைக்கு உள்நாட்டு விவசாயிகள் மட்டுமின்றி பிற நாடுகளிலிருந்தும் பெரும் நிறுவனங்கள் கொள்முதல் செய்தால், இங்குள்ள விவசாயிகள் நிலைமை இன்னும் மோசமாகும். சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் சிறு வணிக கடைகளின் விற்பனை சரியும் என்பது மட்டுமல்ல, நாட்டின் உணவு தானிய உற்பத்தி, காய்கனி, மலர் உற்பத்தி மற்றும் விவசாயம், தொழில்துறை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் ஆபத்து உருவாகிவிடும்.

சில்லரை வர்த்தகம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். மாநில அரசுகளின் கருத்தையும் கேட்காமல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.

வாழ்க்கையில் நொடிந்து போனவர்கள், ‘பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக்கொள்வர்’என்பது தமிழ்நாட்டின் மரபுவழிச் சொல் ஆகும். இப்பொழுது பெட்டிக்கடை பிழைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

சாதாரண எளிய மக்களின் வாழ்வாதாரத்தை விழுங்க வரும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மத்திய அரச உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                       வைகோ
சென்னை - 8                                 பொதுச் செயலாளர்,
26.11.2011                                      மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)