வைகோவின் செய்தியாளர் சந்திப்பு - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க. போட்டியிடும்! மதுரையில் (02.11.2011) அன்று செய்தியாளர்களிடம் வைகோ.

விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, சர்வதேசம், சட்ட ஒழுங்கு, தேசிய, புறநகர், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Thu, 03/11/2011

 

 


 


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்
மறுமலர்ச்சி தி.மு.. போட்டியிடும்!
மதுரையில் (02.11.2011) அன்று செய்தியாளர்களிடம் வைகோ.

 

ன் அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்து இருக்கின்ற செய்தியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உள்ளாட்சித் தேர்தலில், நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், மக்கள் ஆதரவைப் பெற்று இருக்கின்றது. கழகத்தின் கட்டுமானப் பணிகளை, மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், வருகின்ற 10 ஆம் தேதி, சென்னையில், தலைமைக் கழக அலுவலகமாம் தாயகத்தில் நடைபெற இருக்கின்றது. காலை 9 மணிக்கு, உயர்நிலைக் குழுக் கூட்டம், அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது. அதனைத்தொடர்ந்து பத்து மணி அளவில், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகின்றது.


19 ஆம் தேதியன்று, திருச்சியில், தமிழகம் எங்கும் உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு,வெற்றி பெற்றோர், வாய்ப்பு இழந்தவர்கள்அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகின்றது. அன்று மாலையில், குளித்தலையில் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள பல்லவிராஜா அவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்றோருக்கும் பாராட்டும், வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்ற பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சிகளில், நானும், தலைமைக் கழக நிர்வாகிகளும் பங்கு ஏற்கின்றோம். கரூர் மாவட்டச் செயலாளர் பரணி மணி அவர்கள் தலைமை ஏற்கின்றார்கள்.

இன்று, பிற்பகலில் தொலைக்காட்சியில் பார்த்த செய்திகளின்படி, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, அந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டு, அங்கே குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப் போவதாகவும், நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கும், எழும்பூருக்கும் இடையில் உள்ள அறிவுசார் பூங்கா என்ற இடத்துக்குக் கொண்டு செல்ல, தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துவிட்டதாகவும் வந்த செய்தியைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த முடிவு, மிகவும் கண்டனத்துக்கு உரியது.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் அந்த நூலகம் அமைந்து இருக்கின்றது. அதை அமைத்தது எந்த அரசு என்று பார்க்கக்கூடாது. அது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

பெரும்பணத்தைச் செலவழித்துக் கட்டப்பட்டு இருக்கின்றது. எட்டு ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்பது மாடிக் கட்டடமாக, ஏறத்தாழ 600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

12 இலட்சம் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. தற்போது, ஐந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் புத்தகங்கள் அங்கே சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் ஆர்வத்தோடு, மக்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி இருக்கின்றார்கள். தரைத்தளத்தில், பார்வை அற்றோர் படிக்கக்கூடிய பிரெய்லி எழுத்து முறையிலான புத்தகங்கள் உள்ளன. அதற்கு உரிய சாதனங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதுபோல ஒரு தளம் முழுமையும் மருத்துவ நூல்களும், மற்றொரு தளத்தில் பொறியியல் துறை சார்ந்த நூல்களும் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு தளம் முழுமையும் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. பெரிய அரங்கங்கள் இருக்கின்றன. ஆவணப்படங்களைத் திரையிட்டுப் பார்ப்பதற்கான வசதிகள் உள்ளன.


கடந்த ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் நாள் திறக்கப்பட்டது. இப்போது, ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் அங்கே வந்து பயன் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆசியக் கண்டத்திலேயே சிறந்த நூலகமாக அது அமைந்து இருக்கின்றது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன், அந்த நூலகத்துக்கு வந்து பார்வையிட்டு, அங்கே உரை ஆற்றுகின்றபோது, இந்த நூலகத்தைப் பாராட்டிப் பேசி இருக்கின்றார்.


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பதற்காக, இந்த நூலகத்தை அங்கிருந்து அகற்ற முடிவு எடுத்து இருப்பது, தான்தோன்றித்தனமான முடிவு. இது துக்ளக் தர்பார் என்பதற்கு, இதைவிட வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவை இல்லை.


கடந்த ஆட்சிக்காலத்தில், கடற்கரையில் இருந்த பத்தினித் தெய்வம் கண்ணகியின் சிலையை இரவோடு இரவாக அகற்றிவிட்டு, ஒரே நாள் இரவில் அங்கே புதிய  தார்ச்சாலையையும் அமைத்து விட்டார்கள். கண்ணகி சிலையை, அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் மூலையில் போட்டு விட்டார்கள். அப்போது, முதல் கண்டன அறிக்கை கொடுத்தவன் நான்.


புதிய சட்டமன்றக் கட்டடம் தேவை என்கின்ற நிலையில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதில் முறைகேடுகள் இருப்பின், அதற்கான விசாரணையை மேற்கொண்டு, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.


முறைகேடுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அது மக்கள் சொத்து. அதைப் பூட்டி வைத்து விட்டு, மீண்டும் பழைய கோட்டையிலேயே சட்டமன்றத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.


புதிய கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றுவோம் என்றார்கள். மருத்துவமனை என்பது, அதற்கு உரிய முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட வேண்டும். நோயாளிகள் படுக்கைகள், ஆபரேசன் தியேட்டர்கள், ஸ்ட்ரெச்சர்களைக் கொண்டு செல்ல, சாய்தளப் படிக்கட்டுகள் என இப்படி ஒவ்வொரு வசதியும் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்ய வேண்டும்.


இப்போது, நூலகத்துக்காகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை, குழந்தைகள் நல மருத்துவமனையாக ஆக்கப் போகின்றோம் என்று சொல்வது, அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு ஆகும். மறுபரிசீலனை செய்ய வேண்டும். எந்த இடையூறும் இன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தொடர்ந்து அங்கேயே இயங்க வேண்டும். முந்தைய அரசு அமைத்த சாலைகள் என்பதற்காக, அதில் போகாமல் இருப்பார்களா?


அதேபோலத்தான், சமச்சீர் கல்வியைத் தடுத்ததால், ஒன்றரை மாதங்கள் பள்ளிக்கூடம் திறக்கவில்லை. 300 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களைக் கொடுக்கவில்லை. பாழானது பிள்ளைகள் படிப்பு அல்லவா? இன்றுவரை, அந்தக் குழப்பம் தீரவில்லை. பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்து இருக்கின்றார்கள்.


அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக விரோதமான போக்காகவே தொடர்ந்து அமையும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு அரசின் முடிவுகள் அமையக்கூடாது.


நல்லது செய்தால் வரவேற்போம்; தவறு செய்தால் விமர்சிப்போம், கண்டிப்போம்.


முல்லைப்பெரியாறு


எதிர்காலத் தமிழகத்தை மிகவும் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று, இந்த மதுரையை உள்ளடக்கிய முல்லைப்பெரியாறு பிரச்சினை. தமிழகத்தின் தலைக்கு மேலே கத்தி தொங்குகின்றது. பென்னி குக் கட்டிய அணையை உடைக்க, 40 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டோம் என்று கேரள அரசு அறிவித்திட, எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? இந்தியாவில் ஒரு நடுவண் அரசு இருப்பதாகவே நான் கருதவில்லை. அப்படி அவர்கள் அணையை உடைத்தால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, இந்த மதுரை மாவட்டம்தான்.


குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. 2,17,000 ஏக்கர் பாசனத்தை, அடியோடு இழக்க நேரிடும். பஞ்சப் பிரதேசமாக, பாலைவனமாக ஆகிவிடும். ஏற்கனவே நிலத்தடி நீர்வளம் மிகவும் குறைந்து விட்டது. இப்போது, இருப்பதையும் இழக்கின்ற வகையில், இந்த அணையை உடைக்கத் திட்டமிடுகின்றார்கள். அது கேரளத்துக்கும் கேடாகவே முடியும். அப்படி உடைத்தால், அதற்குப்பிறகு, தமிழகத்தில் இருந்து எந்தப் பொருளும் அங்கே போகாது. நிரந்தரப் பகை மூளும்.


எனவே, கேரள அரசுக்கு எச்சரிக்கை செய்து, அணையில் கைவைக்காதே என்று தடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், தமிழக அரசு ஈடுபட வேண்டும். அணையிலே கைவைத்து, இந்திய ஒருமைப்பாட்டை உடைத்துவிடாதே என்று, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஓரவஞ்சகமாகவே செயல்படுகின்றது.


மத்திய அரசு கொண்டு வரத் தீர்மானித்து உள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை வரையறுத்தவரே பரமேஸ்வரன் நாயர்தான். அதன்படி, ஒவ்வொரு மாநிலமும், தங்கள் எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கின்றார்கள். இதனால், பெரும் பாதிப்பு தமிழகத்துக்குத்தான். உலகம் முழுவதும் நாடுகள் அனுபவித்து வருகின்ற நதிநீர் உரிமையை நாம் இழக்கப்போகின்றோம். ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாட்டுக்குப் பாய்கின்ற தண்ணீரைத் தடுக்கக் கூடாது என்று, ஹெல்சிங்கி விதிகள் சொல்லுகின்றன. ஆனால், இங்கே கேரள அணைகளை உடைக்கச் சட்டம் போட்டு இருக்கின்றார்கள். அதை மத்திய அரசு கண்டிக்கவில்லை. இது பெரும் ஆபத்து. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம், போராடுவோம்.


அடுத்தது, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை. அதற்கு ஆதரவான கருத்துகளை அரசே திட்டமிட்டுப் பரப்பி வருகின்றது. அணுசக்தித்துறைத் தலைவர், அயல்நாட்டுச் சக்திகளின் தூண்டுதலால் போராட்டம் நடைபெறுகின்றது என்று கூறியது அக்கிரமமானது. அவர், தமது வரம்பு எல்லையைத் தாண்டி, இப்படிப் பேசுகின்றார்.


வெளிநாட்டுச் சக்திகளுக்குத் துணைபோவது என்றால், அது தேசத்துரோகம் அல்லவா? மீனவ மக்களைக் கொச்சைப்படுத்துவதா? கிறித்துவ மிஷனரிகளையும் விமர்சிக்கின்றார்கள்.


ஒரு காயலாங்கடைச் சரக்கைக் கொண்டு வந்து இவர்கள் அமைப்பார்கள்; அதை எதிர்க்கக்கூடாதா?


ரஷ்யாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களே அவை காயலாங்கடைச் சரக்கு என்று சொல்லிவிட்டார்கள்.


பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் செலவழித்து விட்டோம் என்கின்றார்கள். அப்படிச் செலவிட்டு அமைத்த அணு உலைகளைத்தான் மூடப்போகின்றோம் என்று , ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்து விட்டன. புதிதாக அமைக்கப் போவது இல்லை என்றும் முடிவு எடுத்து விட்டார்கள்.

புகுசிமா விபத்து இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. தென்தமிழகத்தைப் பாதுகாக்க மக்கள் போராடுகின்றார்கள்.


(நாடாளுமன்ற விவாதம் உண்ணாநிலை அறிக்கையில் முழுமையாக வெளிவருகின்றது)


ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் அள்ளிக் கொடுத்தார்கள். இப்படி அனைத்து வழிகளிலும், தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு துரோகம் இழைத்து வருகின்றது.


மற்றொரு கவலை அளிக்கின்ற செய்தி, ஊழல் என்ற சுழலுக்கு உள்ளே தமிழ் நாடு சிக்கிக்கொண்டு இருக்கின்றது.


இங்கு வாக்குகள் விற்கப்படும். இதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை. அப்படி விற்காத வாக்காளர்களும் இருக்கின்றார்கள். பணம் வேண்டாம் என்று மறுக்கின்ற, ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய ஏழைகளும் இருக்கின்றார்கள். நான் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், அண்ணா தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரி இறைத்தன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில்,தேர்தல் ஆணையர் நேர்மையாக நடந்து கொண்டார். அவர் நேர்மையான அதிகாரி. ஆனால், இந்தப் பண வினியோகத்தையும், அவர்களால் தடுக்க முடியவில்லை. வீடுவீடாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடங்களில், ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே அதிகாரிகள் நடந்துகொண்டு இருக்கின்றார்கள்.


திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர், நாங்கள் வெற்றி பெற்ற இடம். ஆனால், எண்ணிக்கையின்போது, அதிகாரிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எண்ணுகின்றபோதே, இடையில் ஐந்து மணி நேரம் எண்ணாமல் நிறுத்திவிட்டு, ஒரு ஓட்டில் எங்கள் வேட்பாளர் தோற்றதாக அறிவிக்கின்றார்கள். நாங்கள் அனுப்பிய 6 அஞ்சல் வாக்குகள், பஞ்சாயத்தில் சரியாக விழுந்து இருக்கின்றன. ஒன்றியக்குழு உறுப்பினருக்கு, அதில் 5 வாக்குகள் செல்லாதது என்றும், ஒரு வாக்கில் நாங்கள் தோற்றதாகவும் அறிவித்தார்கள்.


சாத்தூர் ஒன்றியத்தில், எங்கள் வேட்பாளர் மூன்று வாக்குகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதைத் திரும்ப எண்ணி, மூன்று வாக்குகளில் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தவறுகள், அதிகாரிகளின் துணையோடு தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்று இருக்கின்றன. ஒரு முடிவை அறிவித்தபின்னர், தேர்தல் ஆணையம் அதில் தலையிட்டு, மறு தேர்தல் அறிவிக்க முடியாது. இனி, நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். எங்களால் முடியாது என்கிறார்கள்.


அரசியல் பொதுவாழ்வு ஊழல்மயமாகிக் கொண்டு இருக்கின்றது. எனவே, இளைஞர்கள் வெறுப்புற்று இருக்கின்றார்கள். ஊழல் அற்ற அரசியல் வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றார்கள். நாங்கள், ஊழல் அற்ற அரசியலைக் கொண்டு வர நினைக்கின்றோம். எங்களுடைய குருவிகுளம் ஒன்றியத்தில் 96 முதல், தொடர்ந்து நாங்கள்தான் வெற்றி பெற்று வருகின்றோம். அங்கே, 20 உறுப்பினர்கள். நாங்கள் ஏழு பேர் வெற்றி பெற்று இருக்கின்றோம். பத்து இடங்கள் அண்ணா தி.மு.க.வும். புதிய தமிழகம், தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளன. அங்கே நாங்கள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அண்ணா தி.மு.க. தவிர்த்த கட்சிகளின் வாக்குகளைப் பெற முயற்சிக்கவில்லை.


ஏனெனில், பணம் கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் போட்டியிடவே இல்லை. இப்படித்தான் நாங்கள் ஊழலை ஒழிக்கப் பாடுபடுகின்றோம்.


சட்டமன்றத் தேர்தலில் போட்டி இடவில்லை என்ற முடிவால் கட்சி வலு இழந்து விடும் என்று கருதினார்கள்.


ஆனால், அந்த முடிவுதான், கட்சிக்குப் புதிய வலிவைக் கொடுத்து இருக்கின்றது. தேர்தலில் போட்டி இடவில்லை என்றாலும், மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணு உலை,ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருக்கின்றோம்.


தமிழகத்தின் எந்தத் தரப்பினருக்கும் எங்கள் மீது வெறுப்போ, அவநம்பிக்கையோ கிடையாது. எங்கள் நம்பகத்தன்மையை நாங்கள் காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றோம். எனவே, எங்கள் மீது மக்கள் கவனம் திரும்பி இருக்கின்றது. தமிழக அரசியலில் தூய்மையான பொதுவாழ்வை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடுவோம்.


அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சாதி மத மோதல்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். அதனால்தான், பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை உடனடியாகக் கண்டித்தோம். ஏழு தலித் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது கடுமையான கண்டனத்துக்கு உரியது. அந்தக் காவல்துறை அதிகாரிகளைப் பணி
இடம் செய்து இருக்க வேண்டும். ஐம்பது இலட்சம் கொடுத்தாலும், பறித்த உயிர்களைத் திரும்பத்தர முடியாது.


ஒரு இலட்சம் அறிவித்து இருக்கின்றார்கள். குறைந்தது ஐந்து இலட்சம் வழங்க வேண்டும். நான் அறிவித்ததை மாற்ற மாட்டேன் என்று எண்ணக்கூடாது. அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்யாமல், நீதி விசாரணை நடத்தினால், அதில் என்ன நியாயம் கிடைக்கும்? அரசின் அணுகுமுறை மிகத் தவறானது. இமானுவேல் சேகரன் புகழ் அஞ்சலிக் கூட்டத்துக்கு ஜான் பாண்டியனை அனுமதித்து இருக்க வேண்டும். காக்கை, குருவியைக் கூடச் சுட முடியாது. உள்ளே போக நேரிடும். ஆனால், மனிதர்களை, தலித் இளைஞர்களை அக்கிரமமாகச் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள்.


மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை. படுக்கையே கொடுக்கவில்லை. மனிதாபிமானத்தோடு நடக்கவில்லை. துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் நின்று கொண்டு இருக்கின்றார்கள். மதியம் குண்டு பாய்ந்து இருக்கின்றது. இரவு வரையிலும் ஜெயப்பிரசாந்த் என்ற இளைஞனை ஸ்கேன் எடுக்கவில்லை. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதித்தான், நான் கொண்டு போய் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தேன். இப்போது, இளைஞர்கள் சாதிய மோதல் உணர்வோடு இல்லை. தென்மாவட்டங்களில் நிலைமை மாறி இருக்கின்றது, மனதுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கின்றது. படிக்கவேண்டும், முன்னேற வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து இருக்கின்றது. அது மேலும் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நாங்கள் பாடுபடுவோம்.


செய்தியாளர்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகின்றது. அதில் ம.தி.மு.க.வின் நிலை என்ன?


வைகோ: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாகப் போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, இனி கட்சியின் கட்டுமானப் பணிகளை வலுவாக மேற்கொள்ளவும், மக்கள் மன்றத்தில் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தவும் நாங்கள் முடிவு எடுத்து இருக்கின்றோம். நான் முதலில் கூறியவாறு, பல பிரச்சினைகளில் தமிழக அரசின் போக்கு கவலை அளிக்கின்றது.


அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு செயல்படுகின்றார்கள். அதை எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம். இன்று காலையில் இங்கே கூடிய தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் கலந்து பேசி, இந்த முடிவை எடுத்து இருக்கின்றோம்.


கேள்வி: தனித்துப் போட்டி இடுவீர்களா? கூட்டணியா?


வைகோ: மறுமலர்ச்சி தி.மு.க. போட்டியிடும்.


செய்தியாளர்: கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடினால், மின்சாரத்துக்கு என்ன செய்வது?


வைகோ: இப்படிப்பட்ட விமர்சனத்தைத்தான் ஜப்பானிலும் வைத்தார்கள். உயிர்கள்தான் முக்கியம். அதற்குப் பிறகுதான் மின்சாரம் என்று ஜப்பான் பிரதமர் அறிவித்து விட்டார். ஜெர்மனியிலும் அப்படித்தான் அறிவித்தார்கள். இத்தாலியில் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். 90 விழுக்காடு மக்கள் அணு உலை வேண்டாம் என்று வாக்கு அளித்து விட்டார்கள். மின்சாரம் தயாரிக்க வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.


இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும் தளம் அமைத்து விட்டார்கள். அங்கிருந்து தாக்கினால், பாதிக்கப்படுவது தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் வலுவாக இருந்தால், இந்தியாவுக்கு அது ஒரு அரண் என்று இந்திரா காந்தி கருதினார். அத்தகைய தொலைநோக்கு இன்றைய காங்கிரஸ் தலைவர்களிடம் இல்லை. சோனியா காந்தியின் யோசனையின்பேரில், தமிழ் இனப்படுகொலையை நடத்தி விட்டார்கள். சிங்களர்களை வலுப்படுத்திவிட்டார்கள். அவர்கள், சீனாவுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றார்கள்.


இயற்கையாகவே, கடல்கோளால் ஆபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. புவி வெப்பமாவதால், புயல், சுனாமி வருகின்றது. ஸ்டெர்லைட்டால் காற்று மண்டலம் மாசுபடுகின்றது. இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாக புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன.


செர்னோபில்லில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்றுவரையிலும் அணுக்கதிர்வீச்சு இருக்கின்றது.


புகுசிமாவில் இருந்து மூன்றரை இலட்சம் பேர் வெளியேறி விட்டார்கள். பத்தாயிரம் பேர் இறந்துவிட்டார்கள்.


உயர்ந்த தொழில்நுட்பம் வைத்து இருக்கின்ற அவர்களாலேயே தடுக்க முடியவில்லையே?


செய்தியாளர்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து...


வைகோ: அதை உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றது. சிபிஐ தாக்கல் செய்கின்ற அறிக்கையைப் பார்த்துத்தான் அடுத்த கருத்துச் சொல்ல முடியும்.


செய்தியாளர்: மூன்று இளைஞர்கள் தூக்கு தொடர்பாக, கலைஞர் கருணாநிதி உங்களை விமர்சித்து இருக்கின்றாரே?


வைகோ: நளினிக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது, மூன்று தமிழ் இளைஞர்களைத் தூக்கில் போட வேண்டும் என முடிவு எடுத்ததே கலைஞர் கருணாநிதி அரசுதானே? 2000 ஏப்ரல் 19 ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கும் பரிந்துரை செய்தார்கள். அந்த அடிப்படையில்தான், சாந்தன்,முருகன்,பேரறிவாளனின் கருணை மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி தள்ளுபடி செய்தார். அதன்பிறகுதான், அவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு விண்ணப்பித்தார்கள்.


இன்றைக்குத் தி.மு.க. தொண்டர்களை ஏமாற்ற, தமிழ் இன உணர்வாளர்களை ஏமாற்ற, மொத்தத்தில் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம் என்று நான் முடிவு எடுத்ததைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். இவரைப் பின்பற்றினால், மூன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்பதுதான் பொருள். திரும்பத்திரும்பப் பொய்களைச் சொல்லி, தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுவதற்காக உடன்பிறப்பு மடல் எழுதுகின்றார். அதை நான் கேட்டால், வைகோ திருந்தவே மாட்டார் என்கிறார், அவ்வளவுதான்.


‘தாயகம்’                                     தலைமை நிலையம்
சென்னை-8                                  மறுமலர்ச்சி தி.மு.க.
03.11.2011

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)