அதிகார வரம்பை மீறிய ஆளுநரின் செயல்! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 15/11/2017

 

 

 

 

அதிகார வரம்பை மீறிய ஆளுநரின் செயல்!

வைகோ அறிக்கை

 

ந்திய தேசிய காங்கிரசின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான ஆச்சார்யா கிருபளானி அவர்கள், ஆளுநர் பதவி குறித்து அன்று கூறியது இன்றைக்கும் மிகப் பொருத்தமாக இருக்கின்றது.

களைத்துப் போன அரசியல்வாதிகளுக்கு ஆளுநர் மாளிகைகள் ஓய்வு மடங்களாக இருக்கின்றன; தங்களுக்குப் பதவி வழங்கிய மத்தியத் தலைவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கனவான்களாக ஆளுநர்கள் இருப்பதால், அவர்கள் தங்களை மத்திய அரசின் ஏஜெண்டுகள் என்றே கருதிக்கொண்டு செயல்படுகின்றார்கள்என்று சொன்னார்.


மத்திய அரசின் கொள்கையை வலியுறுத்தி, அதைப் பாதுகாக்கின்ற ஏஜெண்டாக இருப்பவர்தான் ஆளுநர் ஆவார்.


இதைச் சொன்னவர், சுதந்திரப் போராட்ட வீரரான மகாவீர் தியாகி ஆவார்.


சொன்ன இடம், இந்திய அரசியல் அமைப்புச் சபை.


ஆளுநர் பதவி தேவை அற்றதுஎன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள்.


1980 ஜூலை 25 ஆம் நாள், மாநிலங்கள் அவையில், ஆளுநர் பதவி குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புபேஷ் குப்தா அவர்கள் கொண்டு வந்த தனி நபர் மசோதாவில் நான் பேசும்போது, ‘ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஏராளமான தொகையைத் தண்டத் தீனியாக விழுங்கிக் கொண்டு இருக்கும் ஆளுநர் பதவி தேவைதானா?’ என்பதே நமது அடிப்படை கேள்வி; ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்என வலியுறுத்தினேன்.


தங்களுக்கு இசைவாக மாநில அரசுகள் செயல்படவில்லை எனில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு எனும் கொடுவாளை வீசி, மாநில அரசைக் கலைப்பதற்கு ஆளுநர்கள், கைக்கருவிகளாகச் செயல்பட்டார்கள். அப்படி இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. 


மனசாட்சி உள்ள மனிதராக இருந்த தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள்தான், 1991 ஆம்  ஆண்டு, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு அறிக்கை தர மறுத்தார். அப்போது, ‘வேறு வழிகளிலும் கலைக்கலாம்என்ற வரியைப் பயன்படுத்தி தி.மு.க. அரசைக் கலைத்தார்கள்.


எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புதான், ஆட்சிக் கலைப்புக்குக் கடிவாளம் போட்டது.


இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற காமன்வெல்த் நாடுகளில் மட்டும்தான் ஆளுநர்கள் இருக்கின்றார்கள். இதர கூட்டு ஆட்சி நாடுகளில், ஆளுநர் பதவி கிடையாது.


அமெரிக்காவில் மாநில முதல்வர்களை மக்களே வாக்கு அளித்து நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றார்கள். அந்தப் பொறுப்புக்குத்தான் அங்கே ஆளுநர்என்று பெயர்.


டெல்லியிலும், புதுவை மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுகளை உதாசீனம் செய்துவிட்டு, சர்வாதிகாரிகளைப் போலச் செயல்படுகின்றார்கள். அந்த வரிசையில், இப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சேர்ந்து இருக்கின்றார். அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கின்றார். இங்கே ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்பதே அவருக்கு நினைவு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.


ஆளுநரின் செயல், தமிழகத்தின் மாநில உரிமைகளின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற வேலை; அதை நாம் அனுமதிக்க முடியாது; மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது.


ஆளுநர் தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம்; விழாக்களில் பங்கேற்கலாம்; ஆனால், அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது என்பது, அவரது அதிகார வரம்பை மீறிய செயல்; தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த மரபை அவமதிக்கின்ற செயல்.

 

தாயகம்                                                                            வைகோ
சென்னை - 8                                                      பொதுச்செயலாளர்,
15.11.2017                                                                மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)