இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவர் தொண்டமான் பெயர் நீக்கம் வைகோ கண்டனம்

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 08/11/2017

 

 

 


இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின்
மாபெரும் தலைவர் தொண்டமான் பெயர் நீக்கம்

வைகோ கண்டனம்

லங்கை மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்கிய திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களிலிருந்து நீக்கி இருப்பது உலகத் தமிழர்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்டவர்கள்தான் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் ஆவர். மலையகத் தமிழர்களின் உழைப்பால்தான் இலங்கையில் காபி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் செழித்து ஓங்கின. இரத்தம் சிந்தி கடுமையாக உழைத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களாலும் அதன் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களாலும் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர்.

1939 இல் பண்டித  ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியின் கம்பளைக் கிளைத் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.  இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மலையகத்தமிழர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக அக்கட்சி குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்றனர். ஆங்கிலேய அரசு இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது என்று மறுத்தது. இதனால் 1940 மே மாதத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவானது. இந்தத் தொழிற்சங்கத்தின் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று மாற்றப்பட்டபோதும் தொண்டமான் அதன் ஈடற்ற தலைவராக விளங்கினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொண்டமான் தலைமையில் சமரசமின்றிப் போராடியது.

1948 இல் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் பதவி ஏற்ற டி.எஸ்.சேனநாயக தலைமையிலான சிங்கள அரசு, 10 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்கள் ஆக்கியது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், பெருந்தோட்டத் தொழில் முன்னேற்றத்திற்காகவும் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாய் உழைத்து உருக்குலைந்த மலையகத் தமிழர்களின் குடிஉரிமையைப் பறித்தது ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு.

மலையகத் தமிழர்களின் குடிஉரிமையை மீட்க அறவழிப் போராட்டங்களை மிகுந்த எழுச்சியுடன் நடத்தினார் தொண்டமான். அதன் விளைவாக 1964 இல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. 5 இலட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொண்டது.  3 இலட்சம் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடிஉரிமை உறுதி செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை இலட்சம் மலையகத்  தமிழர்கள் இலங்கை இந்தியக் குடிஉரிமை மறுக்கப்பட்டு கைவிடப்பட்டனர். ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும், மலையகத் தமிழர்களின் குடிஉரிமைக்காகக் குரல் எழுப்பினார். தொண்டமானின் தொடர் முயற்சியால் 1987 இல் குடிஉரிமை அனைவருக்கும் கிடைத்தது.

1947 ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டு காலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், பலமுறை இலங்கை அமைச்சராகவும் பணியாற்றிய தொண்டமான், மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமை, கல்வி, பொருளாதார உரிமை உள்ளிட்ட அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டார்.

மலையகத் தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவராக மட்டுமல்ல, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டவர் தொண்டமான் என்பதை மறுக்க முடியாது. 1972 இல் தந்தை செல்வா அவர்கள் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது, அதில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயல்பட்ட வரலாறும் உண்டு.

இலங்கை மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிலை எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மைத்திரிபால சிறிசேனா அரசு தற்போது இலங்கை மத்திய மாகாணத்தில் அட்டனில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், ரம்படவில் உள்ள கலாச்சார மண்டபம், நார்வுட்டில் உள்ள விளையாட்டு மைதானம் ஆகிய அரசு அமைப்புகளுக்கு சூட்டப்பட்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் இலங்கை அரசின் இத்தகைய அநாகரிக நடவடிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் மதிப்புக்குரிய தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் பெயரை மீண்டும் சூட்ட இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தாயகம்                                                                      வைகோ
சென்னை - 8                                                      பொதுச்செயலாளர்,
08.11.2017                                                              மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)