சென்னை மட்டுமின்றி, காவிரி டெல்டா கடலோர மாவட்டங்களிலும் வெள்ளத் தடுப்பு மீட்புப் பணிகளை முடக்கி விடுக! வைகோ வலியுறுத்தல்

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 03/11/2017

 

 

 

 


சென்னை மட்டுமின்றி, காவிரி டெல்டா கடலோர மாவட்டங்களிலும்
வெள்ளத் தடுப்பு மீட்புப் பணிகளை முடக்கி விடுக!

வைகோ வலியுறுத்தல்

மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. சென்னையில் பெய்து வரும் கன மழையால் மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் 2015 ஆம் ஆண்டு போன்ற வெள்ள சேதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னையைச் சுற்றி இருக்கும் ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளதால், பல இடங்களில் ஏரி உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உருவாகி உள்ளது. மழை, வெள்ள மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு மற்றும் மண்டல வாரியாக அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. எனினும் மிகுந்த காலதாமதமான நடவடிக்கை ஆகும்.

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே திட்டமிட்டிருந்தால் மழை வெள்ளத் தடுப்புப் பணிகளை வேகமாக முடுக்கி விட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் காட்டிய அலட்சியத்தால்தான் சென்னை மாநகரம் நான்கு நாள் மழைக்கே தாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

நீர் வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வடிகால் வாய்க்கால்கள் தூர் வாருதல், நீர் பிடிப்புப் பகுதிகளைக் கண்டறிந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் கவனம் செலுத்தவில்லை. 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

சென்னை கொடுங்கையூர் - கிருஷ்ணமூர்த்தி நகரில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு மின்வாரியம் மட்டுமல்ல, தமிழக அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில் சென்னை முழுவதிலும் மின் விநியோகத்திற்காக டிஸ்டிரிபூஷன் பேனல் எனப்படும் பில்லர் பெட்டிகள் சாலை ஓரங்களில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த மழை வெள்ளத்தின் போது இவை அனைத்தும் மூழ்கி விட்டதால் மூன்று அடி உயரத்தில் அவற்றை மாற்றி அமைக்க 2016 இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் 80 விழுக்காடு பணிகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை தமிழக மின்துறை அமைச்சசர் தனது அறிக்கையில் சொல்லாமல் விட்டுவிட்டார்.

மின் வாரியத்தில் கீழ்நிலை ஊழியர்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் இல்லாமை போன்வற்றால்தான் மின் வாரியப் பராமரிப்புப் பணிகள் சரிவர நடக்கவில்லை. மேலும் மின்வாரியத்தில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மின் வாரிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இவற்றையெல்லாம் கவனிக்கவோ, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவோ நேரம் இல்லை. மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எனும் பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்களே தவிர, மாவட்ட வாரியாக மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான வீராணம் ஏரி இரண்டு நாள் மழையால் நிரம்பி வழிகிறது. முறையாகத் தூர் வாரப்படாததால் வீராணம் ஏரியும் முழு கொள்ளளவுக்கு குறைவாகவே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது. விவசாயிகளை நீர் நிலைகளில் மண் எடுத்துக்கொள்ள அனுமதித்ததால்தான் ஓரளவிற்கு தூர் வாரும் பணிகள் நடந்துள்ளன. ஆனால் இதற்காக  அரசு சார்பில் 450 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறுவது எந்த அடிப்படையில் என்று முதல்வர்தான் விளக்கம் தர வேண்டும்.

சென்னை மட்டுமல்லாமல், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வெள்ளத் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


தாயகம்                                                                        வைகோ

சென்னை - 8                                                பொதுச்செயலாளர்,
03.11.2017                                                          மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)