மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்; முழு விசாரணை தேவை வைகோ வலியுறுத்தல்

விவகாரங்கள்: கல்வி, மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 04/11/2017

 

 

 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்;
முழு விசாரணை தேவை

வைகோ வலியுறுத்தல்

ருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட்திணிக்கப்பட்டதால், தமிழ்நாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, ஆதிக்கம் செலுத்த முனைந்து, ‘நீட்டுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த எதிர்ப்புக்களை அலட்சியப்படுத்தியது. இந்நிலையில்தான், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நீட்தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தகுதி வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்ற போதே, வெளி மாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று அளித்து மருத்துவப் படிப்பில் சேர முயற்சி செய்தனர். அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர், “போலி இருப்பிடச் சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அறிவித்தார். மேலும் கலந்தாய்வின்போது 9 பேர் போலி சான்றிதழ் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நீரஜ் குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து வெளி மாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நீரஜ்குமார் எனும் மாணவர், தனக்கு திருச்சியிலிருந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாறுதல் வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 104 வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 440 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டு இருக்கிறது.

போலி இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 6 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழுச் செயலாளர், மருத்துவ மாணவர் சேர்க்கைப் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நீட்தேர்விலிருந்து விலக்குப் பெற்றுத்தர முடியாமல், கிராமப்புற ஏழை, எளிய, சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவர் கனவை பொசுக்கியதால்தான் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது அதிர்ச்சி தரத்தக்க அளவில் மாணவர் சேர்க்கையில் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து வெளி மாநில மாணவர்கள் 440 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது எப்படி? இதன் பின்னணியில் நடந்துள்ள ஊழல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வரும்.

மருத்துவக் கல்லூரியில் போலி இருப்பிடச் சான்றுகள் மூலம் இடம் பெற்ற  மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழலில் தொடர்புடையவர்கள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தாயகம்                                                                       வைகோ
சென்னை - 8                                                     பொதுச்செயலாளர்,
04.11.2017                                                              மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)