அதிகாரங்கள் இல்லாமல் நசுக்கப்படுகிறோம் என்றால்.. உரிமைக்குரல் எழுப்ப கூட்டமைப்பை ஏற்படுத்துவோம்! தஞ்சையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில் வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 04/11/2017


 

 

 

 

 

அதிகாரங்கள் இல்லாமல் நசுக்கப்படுகிறோம் என்றால்..

உரிமைக்குரல் எழுப்ப கூட்டமைப்பை ஏற்படுத்துவோம்!

தஞ்சையில் நடைபெற்ற

பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில் வைகோ

திகாரங்கள் இல்லாமல் நசுக்கப்படுகிறோம் என்றால்.. உரிமைக்குரல் எழுப்ப கூட்டமைப்பை ஏற்படுத்துவோம்! என்று செப்டம்பர் 15, 2017 தஞ்சையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
மணக்கொள காந்தளூர்ச் சாலை களமறுத்தருளி
வேங்கை நாடுங் கங்கைப் பாடியும்
தடிகைபாடியும் குடமலை நாடும்
கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்த்தர ஈழ மண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
பழந்தீவு பன்னிராயிரமும்
திண்டிறல் வெண்டித் தண்டாற் கொண்ட
தேசுகொள் கோ இராஜகேசரி வருமானம் ராஜ ராஜ கேசரி

என்ற மெய்க் கீர்த்தியைக் கல்வெட்டுக்களில் தாங்கி நிற்கின்ற பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார் கோயிலை இத்தஞ்சை மாநகரிலே நிர்மாணித்த ராஜராஜ சோழனின் புகழ்பாடும் தஞ்சை மாநகரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டின் தலைவர், திராவிட இயக்கக் குடும்பத்திலே பிறந்தவர். ஆண்டுகள் பலவற்றுக்கு முன்னால் அண்ணன் அன்பிலார் அவர்கள் காவிரி தீரத்தில் திமுகவைக் கட்டிக் காத்து வளர்த்தவர்களில் ஒருவர் என்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்தமிழ்ச் செல்வன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றாரே, அவரது அன்பு மருமகனும், இயக்கம் உதித்த நாள் முதல் எதையும் எதிர்பாராமல் சலனத்துக்குச் சற்றும் இடம் கொடுக்காமல், ஒரு காவல் அரணாக இயக்கத்துக்குத் திகழ்ந்து வருகிற உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் மாவட்டச் செயலாளருமான ஆருயிர்ச் சகோதரர் வழக்கறிஞர் சின்னப்பா அவர்களே,

1956 ஆம் ஆண்டில் சின்னஞ்சிறு இளம் பிராயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அறுபது ஆண்டுகளாக திராவிட இயக்கத் துக்குப் பாடுபட்டுவரும், இரண்டு முறை நான் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது எந்த கணதனவான் வீட்டு வாசலுக்கும் செல்லாமல், எந்த லட்சாதிபதிகளிடமும் போய் கட்சிக்கு நிதி வேண்டும் என்று கேட்காமல், இயக்கத்தில் எனது பெருமையை மக்கள் மன்றத்தில் உயர்த்தி இருக்கிற என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் உயர்நிலைக்குழு உறுப்பினர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முக சுந்தரம் அவர்களே,

இந்த மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த் தியவர், நாடுகள் பலவாகப் பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய சோழவள நாட்டில் ஒரு பகுதி நாட்டினுடைய குறுநில மன்னர்கள் வழியில் வந்த குடும்பத்தில், அண்ணாவின் இயக்கத்தில் மக்கள் செல்வாக்கைப் பெற்று 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 50 ஆயிரம் வாக்காளர்கள் தேர்வு செய்கிற பதவியில் இரண்டு பெரிய கட்சிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றவரும், இயக்கத்தில் எல்லா காலத்திலும் எனக்கு பக்க பலமாக உறுதுணை செய்கின்றவரும், இந்த மாநாட்டின் வெற்றிக்கு தம்பி உதய குமாருக்கு பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்து, கழகம் தஞ்சைத் தரணியில் தலை நிமிர்வதற்கு காரணமாக இருக்கின்றவர் களில் ஒருவரான கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களே, கழகத்தின் பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்கள் எனது ஆருயிர்ச் சகோதரர்களான மல்லை சத்யா அவர்களே, ஏ.கே.மணி அவர்களே, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஈழவாளேந்தி செந்திலதிபன் அவர்களே, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் அவர்களே, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களே, கொள்கை விளக்கச் செயலாளர் அழகுசுந்தரம் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கொடி உயர்த்திய கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஆருயிர்த் தம்பி பொறியாளர் ஈஸ்வரன் அவர்களே, பேரறிஞர் அண்ணா அவர்களின் சுடரை உயர்த்திய நம் நெஞ்சில் வாழும் நம்மாழ்வார் தன் இறுதி நாட்களிலே எந்த இல்லத்தில் தங்கினாரோ அந்த இல்லத்துக்கு உரியவரான விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்களே, போராட்டக் களங்களாகவே மாறிவிட்ட என் வாழ்வில் அந்தக் காட்சி களை எல்லாம் மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இளம் தோழர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணையதளத் தோழர்களும், ஆர்வம் கொண்ட சகோதரர்களும் சேர்ந்து அமைத்த கண்காட்சியைத் திறந்து வைத்த கொள்கையாளர் புலவர் முருகேசன் அவர்களே, மாநாட்டுத் தலைவரை முன் மொழிந்த தம்பி வெல்லமண்டி சோமு அவர்களே, வழிமொழிந்த தம்பி ஏ.எஸ்.மோகன் அவர்களே, இந்த மாநாடு இங்கே நடைபெறுவதற்கு தொடக்கத்திலே காரணமாக இருந்தவரும், திராவிட இயக்கத்தை எந்த திசையிலே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு எனக்கு பக்கபலமாக ஆலோசனைகளைத் தந்து வருகிறவரும், இந்த இயக்கத்தில் நல்ல பொறுப்புக்கு வாருங்கள் என்று நான் எவ்வளவோ கூறியும் மறுத்தவரும், கட்டாயத்தின் பெயரில் உயர்நிலைக் குழு உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்ட வருமான என் ஆருயிர்ச் சகோதரர் வழக்கறிஞர் வீரபாண்டியன் அவர்களே, அள்ளிக் கொடுக்கின்ற வள்ளல் கொடை உள்ளம் கொண்ட சேக் முகமது அவர்களின் அருமைப் புதல்வியும், தந்தையின் குணநலனோடு இந்த இயக்கத்துக்கு வாரி வழங்குகின்ற மனப் பக்குவமும் கொண்ட மகளிர் அணியை வழிநடத்திச் செல்லுகின்ற ஆளுமைத் திறனும், மனிதாபிமான மருத்துவர் என்று மக்கள் மன்றத்தில் புகழ்பெற்றவருமான அன்புச் சகோதரி மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களே, ஈழ வாளேந்தியைப் போலவே சங்கொலி ஏட்டுக்கு அற்புதமான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்ற நமது அமைப்புச் செயலாளர், தன்மான வீரர் வந்தியத்தேவன் அவர்களே, இன்னும் பல நிமிடம் இவர் பேசியிருக்க மாட்டாரா? என்று நீங்களெல்லாம் ஏங்குகிற அளவுக்கு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நமது சொற்பொழிவாளர் அரங்க நெடுமாறன் அவர்களே, ஈரோட்டில் இருந்தும், காஞ்சியில் இருந்தும், கலிங்கப் பட்டியில் இருந்தும் மாணவர் பெரும் படையின் பிரச்சார பரப்புரைப் பயணத்தை நடத்த ஏற்பாடு செய்த தம்பி மணவை தமிழ்மாணிக்கம் அவர்களே, எரிமலைபோல் வார்த்தைகளை வாரி வீசிய வரகவி தம்பி கவிஞர் மணிவேந்தன் அவர்களே, கடல் கடந்த வளைகுடா நாடுகளில் இயக்கத் துக்கு வலுவூட்டுவதற்கு துணை புரிந்து கொண்டு இருக்கின்ற கண்ணியத்திற்குரிய வல்லம் பசீர் அவர்களே, என் நெஞ்சை உருக வைத்த என் தம்பி ஸ்டாலின் பீட்டர் அவர்களே, இளந்தளிர் பிரபாகரன் அவர்களே, 1330 குறளில் எந்த அதிகாரத்தைக் கேட்டாலும் அதிகார எண்ணின் தலைப்பையும் சொல்லி, பத்துப் பாடல்களையும் சொல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கக்கூடிய செக்கடிக்குப்பத்தின் மாணவச் செல்வங்களே,

இந்த மாநாடு வெற்றிக்கு பெருமளவு காரணம் பந்தல் கலைத் திலகம் என் ஆருயிர்ச் சகோதரர் சிவா என்று முகமண் கூறுவதற்காகவோ, புகழ்ச்சிக்காகவோ நான் கூறவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை நான் சந்தித்தேன். திருச்சி மாநில மாநாட்டில் அவரது கைவண்ணம் கண்டேன். இன்றைக்கு இந்தியாவில் சிவாவுக்கு நிகரான பந்தல் கலை வீரன் எவரும் கிடையாது. நான் எந்த மாநிலத்திலும் சொல்வேன். அது மரபு வழி வந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பெருவுடையார் கோயிலை எழுப்பிய மரபு, இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் வழி வந்த மரபணு. ஆகவே மனதிலே கற்பனை செய்து அமைக்கக்கூடிய அந்த ஈடுபாடு, வணிக நோக்கமின்றி கலை நோக்கத்தோடு, நான் படுகின்ற துன்பங்களைப் பக்கத்திலே இருந்து பார்த்து அதிலே பங்கெடுத்துக் கொள்கிற எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினரைப்போல் இருக்கிற என் சகோதரன் பந்தல் சிவா அவர்களே, ஒளி ஒலி அமைப்பில் என்னை பிரம்மிக்க வைத்துவிட்ட அன்புச் சகோதரர் பந்தல் கோவிந்தராஜன் அவர்களே, தமிழகத்தில் எங்கே கழக நிகழ்ச்சிகள் என்றாலும் இந்த கொடிக்கு நிகரான கவர்ச்சிகரமான கொடி எந்தக் கட்சிக்கும் இல்லை என்பதால் காணும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறக்கின்ற கொடிகளை நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் இரவு பகலாக இருந்து உயர்த்துகிற என் தம்பி தொண்டர் படை வீரன் மதுரை சுந்தர் அவர்களே, கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அப்பாலும், பந்தலுக்கு வெளியிலும் இலட்சக்கணக்கிலே திரண்டு இருக்கின்ற தமிழ் பெருமக்களே,

திரும்பும் திக்கெல்லாம் செந்நெல் வயல்கள், செங்கரும்புத் தோட்டங்கள், தென்னந் தோப்புகள், வாழைத் தோட்டங்கள் என்று பொன்னி நதி அரவணைத்துத் தழைத்துச் செழித்த தஞ்சை பூமி, நிரந்தரப் பஞ்சப் பிரதேசமாகி விடுமோ என்ற கவலையோடு வேதனையில் வாடிக் கொண்டிருக்கின்ற நொந்துபோன உள்ளத்தோடு இந்த மாநாட்டுக்கு வந்திருக்கின்ற விவசாய பெருமக்களே, வியர்வைத் துளிகளையே அடையாளமாகக் கொண்டிருக்கின்ற தொழிலாளத் தோழர் களே, அரசு ஊழியர்களே, இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காப்பார்கள் என்று நான் நம்பிக் கொண்டிருக்கின்ற புதிய வார்ப்புகளான மாணவச் செல்வங்களே, இணையதள தம்பிமார்களே, ஆயிரக்கணக் கிலே திரண்டு இருக்கிற நான் வணங்கு கின்ற தாய் மாரியம்மாளைப் போல நான் மதிக்கின்ற என் அன்புத் தாய்மார்களே, அருமைச் சகோதரிகளே,

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்க்கும் ஆற்றல் அதுவே படை என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு இணங்க ஈட்டி பாய்ந்தாலும் இமை கொட்டாது மார்பு காட்டுகின்ற இந்த வீரர் கூட்டத்தைக் கட்டிக் காக்கின்ற மாவட்டச் செயலாளர்களே, அரசியல் ஆலோசனைக்குழு, ஆட்சிமன்றக்குழு, ஆய்வு மைய உறுப்பினர்களே, செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்களே, ஒன்றிய - நகர செயலாளர்களே, கிளைக் கழக நிர்வாகி களே, அரசியல் கட்சி களின் எல்லைகளைக் கடந்து வைகோ என்ன பேசுகிறார் 6 மணிக்கு என்று செவி மடுக்க வந்திருக்கின்ற என் மரியாதைக்குரிய தமிழ்ப் பெருமக்களே, செய்தியாளர்களே, தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களே வணக்கம்.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் மாநாடு. அஸ்தமிக்காத சூரியன், தேயாத முழு நிலவு. திகட்டாத மலைத் தேன். வாடாத மல்லிகைப் பூ, தென் பொதிகைப் பூங்காற்று, ஆகாயம்போன்ற தாய் உள்ளம். ஆழ்கடல் போல் பறந்த ஞானம். ஆங்கிலப் புலமை. எளிமைக்கோர் இலக்கணம். வான்புகழ் படைத்த நேர்மை. கற்பனைக்கும் எட்டாத தொலைநோக்கு இவற்றின் மொத்த வடிவமாக தமிழ்ப் பூமியில் பிறந்த பேரறிஞர் அண்ணா அவர் களின் 109ஆவது பிறந்த நாள் விழா.

தந்தை பெரியாரின் நிழலாகச் சென்ற அண்ணா 1939 ஆம் வருடம் இந்த சோழ மண்டலத்தில் கரிகால் பெருவளத்தான் தலைநகராகக் கொண்டு ஆண்டானே அந்த உறையூரில் 1939 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க திருச்சி மாவட்ட மாநாடு. அந்த மாநாட்டில் முதன் முதலாக அண்ணாவை தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பேச்சை அச்சடித்துக் கொண்டு வந்து பேச வேண்டும். பெரியார் கட்டளை. அண்ணா மறுக்கிறார். நான் பேச்சை எழுதி தயாரிக்காமலே பேசிவிடுகிறேன் என்கிறார் அண்ணா. அதெல்லாம் கூடாது. என்ன பேசப்போகிறீர்கள் என்பதை அச்சடித்துக் கொண்டுவந்து வாசிக்க வேண்டும் என்கிறார் பெரியார். அண்ணாவால் மறுக்க முடியவில்லை. அச்சடித்துக் கொண்டுவந்து பெரியாரிடம் காட்டினார். ஆனால் மேடையில் ஒலிபெருக்கிக்கு முன்னால் வந்து நின்றவுடன், அச்சடித்தத் தாளை மடித்து ஒரமாக வைத்துவிட்டு, அண்ணா பேசத் தொடங்கினார்.

தந்தை பெரியார் அவர்கள் வைத்த விழி மாறாமல் அண்ணாவையே பார்த்துக் கொண்டு இருந்தார். உலக நாடுகளின் சரிதங்கள். விடுதலை இயக்கச் சரித்திரங்கள். மடமையை, மவுடீகத்தை, வர்ணாசிரமக் கொடுமையை உடைத்து நொறுக்குகின்ற வாதங்கள் என பேசப் பேச பெரியார் அப்படியே தலையை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். மூன்று மணி நேரம் பேசினார். அண்ணா பேசி முடித்த பிறகு தந்தை பெரியார் ஒலிபெருக்கிக்கு முன்னால் வந்தார். என்னைவிட மிக அழகாக கருத்துக்களை அண்ணா அவர்கள் சொல்லி விட்டார்கள். அவர் படித்தவர், பகுத்தறிவாளர், ஆழ்ந்த புலமை உள்ளவர், சிறந்த எழுத்தாளர், நான் சொல்ல முடியாத அளவுக்கு உலக நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும், பல நாட்டு வரலாறு களையும் நமது கொள்கையைப் பாது காப்பதற்காக இங்கே அவர் பேசிய பாங்கு என்னை முழுமையாக ஈர்த்து விட்டது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ஒரு வாரிசு கிடைத்துவிட்டான் என்று அண்ணா அவர்கள் 1939 இல் ஆற்றிய உரையை தந்தை பெரியார் பாராட்டினார்.

நான் காலத்தின் அருமைகருதி பத்தாண்டு கடந்து வருகிறேன். தூத்துக்குடி திராவிடர் கழக மாநாட்டுக்கு அண்ணா வரவில்லை. அண்ணா வரவில்லையா? என்று கேட்டு பெரியார் கோபித்தார். இயக்கத்துக்குள் ஏற்பட்ட குழப்பத்தைச் சரி செய்வதற்காக ஈரோட்டில் சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்தார் தந்தை பெரியார். 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் ஈரோட்டில் மாநாடு. மாநாட்டுக்குத் தலைவராக பேரறிஞர் அண்ணா அவர்களை தந்தை பெரியார் அறிவித்தார். அண்ணா எழுது கிறார், காங்கேயத்துக் காளைகள், பட்டக்காரர் தொழுவத்தில் நிற்குமே அதைப்போன்ற காளைகள், ரெட்டைக் காளைகள் பூட்டிய வண்டியில் என்னை அமர வைத்து பெரியார் வெண்தாடி காற்றில் அசைய இதுதான் திராவிடத்துச் செங்கோல்தானோ என்று சொல்லக்கூடிய விதத்தில் தடியை வலது பக்கமும், இடது பக்கமும் அசைத்துக்கொண்டு முன்னாலே நடந்து சென்றாரே அந்தக் காட்சி எனக்கு இன்பச் சிலிர்ப்பு ஏற்படுத்திய காட்சி. அதை நான் மறக்க முடியாது என்று. மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். எனக்கும் வயது அதிகமாகிவிட்டது. என்னுடைய பொறுப்புக்களை ஒரு கொள்கையாளனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதற்கு இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்ற அண்ணாவைவிட வேறு யார் தகுதியானவர்கள்? அவர் தகுதியானவர் என்பதை அவர் நிருபித்துவிட்டார்.

எனவே பெட்டிச் சாவி என்னிடத்தில் இருப்பதில் பந்தபஸ்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும், எத்தனை நாளைக்கு நானே பெட்டிச் சாவியை வைத்துக்கொண்டு இருப்பது. பெட்டிச் சாவியை உங்கள் எல்லோர் முன்னிலையிலும் நான் அண்ணாவிடம் தருகிறேன். நான் நல்ல ஜெயிலாகப் பார்த்து ஒரு நல்ல இடத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது பெரியார் பேச்சு.

அண்ணா வருகிறார். தந்தை பெரியார் அவர்கள் என்னிடம் பெட்டிச் சாவியைத் தந்து விட்டதாகச் சொன்னார். தந்தை என் கடமையைச் செய்துவிட்டேன். தனயன் பொறுப்புணர்ந்து கடமையாற்ற வேண்டும் என்று பெரியார் குறிப்பிட்டதை மனதில் வாங்கிக்கொண்டு அண்ணா சொல்கிறார், அவர் பணப் பெட்டிச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டதாக நான் கருதவில்லை. இந்த இயக்கத்தினுடைய கொள்கைப் பெட்டிச் சாவியை, சிறையின் பூட்டைத் திறக்கின்ற சாவியை என்னிடம் தந்திருக்கிறார். ஒரு நல்ல இடமாகப் பார்த்து ஜெயிலுக்குப் போவேன் என்றார் அல்லவா? பெரியார், அந்த ஜெயிலின் பூட்டையும் திறக்கிற சாவி என்னிடம் இருக்கிறது என்று அண்ணா கூறினார்.

அப்படிப்பட்ட அந்த மாநாட்டில் அன்னை நாகம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. யார் இந்த அழகிரிசாமி. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வர்ணிக்கிறார்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி அஞ்சா நெஞ்சன். எதிரிகளுக்கு அதிரடி போன்றவன். பேச்சு என்னவோ பெருங்காட்டு வெள்ளம். மேடைப் பேச்சு கோடை மாரி. அச்சம் என்பதை அணுவும் அறியான். தலைவர் என்று எவரையும் விழியான். தோழரே என்று விழிக்கும்போது செந்தழல் நெருப்பு அந்த விழிப்பில் எழும்! அந்த வீராதி வீரன் பாராட்டிவிட்டுச் சொல்கிறான், எனக்கு ஒரு மனக்குறை அழகிரிசாமி தம்பிடிகூட சேர்த்துக் கொள்ளவில்லையே? அந்த மாநாட்டில் நடந்ததை இரா.செழியன் அவர்கள் திராவிட நாடு இதழில் 1949 ஜனவரி 14 ஆம் தேதி இதழில் எழுதுகிறார். மாநாட்டு மேடையில் அந்த மாவீரன் தளர்ந்து மெலிந்து நலிந்து நாற்காலியில் உட்கார்ந்தவாறு பேசினான். அழகிரிசாமி பேசுகிறார், நான் தளர்ந்துவிட்டேன். நோயால் நலிந்து மெலிந்துவிட்டேன். இனியொரு முறை உங்களை எல்லாம் காண்பேனா? என்று சொல்ல முடியாது. காண்பதற்கு வாய்ப்பு இல்லை. கடைசி யாக என் தோழர்களை ஒருமுறை பார்த்து வணக்கம் சொல்லுவதற்காக இந்த மாநாட்டுக்கு வந்தேன் என்று பேசிய போது, மேடையில் இருந்தவர்கள் மட்டுமல்ல, திரண்டிருந்த ஐம்பதாயிரம் பேரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். பலர் கதறினார்கள்.

ஆம்! சோகத்தின் இறுக்கம், துன்பப் புயல் போல மனதை இறுக்கியது. செழியன் வர்ணிக்கிறார். மாவீரன் தளர்ந்து விட்டான். ஏன்? அவன் மார்பிலே குண்டு பாய்ந்து விட்டது. எதற்கும் அஞ்சாத அந்தத் தீரனுடைய மார்பிலே குண்டு பாய்ந்து விட்டது. வறுமையும், வசதியின்மையும் தந்த குண்டுகள். நெஞ்சக்கூடெல்லாம் சயரோகக் கிருமிகள். அக்டோபரில் இது நடக்கிறது. சயரோகத்தின் பிடியில் உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறபோது, டி.பி. சானிட்டோரியத்தில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்டு, கடைசியாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டைக்குப் போய் விடலாம் என்று அவர் புகைவண்டியில் அமர்ந்திருக்கிறபோது, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா வருகிறார். டபுள்யு.கே.தேவராஜ் என்ப வரிடம் தன் வாழ்நாளில் எவரிடமும் கைநீட்டிக் காசு கேட்காத அண்ணா அவர்கள் 250 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு பெட்டியில் அமர்ந்திருக்கின்ற அழகிரிசாமியைப் பார்க்கிறார். கண்களில் படர்ந்திருக்கின்ற நீர்நிலைகளை ஊடுருவிக் கொண்டு அழகிரிசாமியின் கண்கள் அண்ணாவைப் பார்க்கின்றன. அண்ணா தான் கொண்டுபோன பணத்தைக் கொடுக்கிறார். எவரிடத்திலும் கையேந்தாத அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி, இரண்டு கைகளை நீட்டி அதை வாங்குகிறார். இடியென முழங்கி, சிங்கமென கர்ஜிக்கின்ற அழகிரிசாமிக்கு பேச்சு வரவில்லை. பேச முடியவில்லை. அண்ணாவும் பேசவில்லை. அழகிரிசாமியும் பேசவில்லை.

அழகிரிசாமி தஞ்சை வந்து பட்டுக் கோட்டைக்குச் செல்கிறார். மேலும் 400 ரூபாயைத் திரட்டி மதியழகனிடம் அனுப்புகிறார். அதற்கு முன்பே ஈரோடு மாநாடு முடிந்தவுடன், என்னை பொதுக் கூட்டத்துக்கு அழைக்கின்றவர்கள் பட்டுக் கோட்டை அழகிரிசாமிக்கு நூறு ரூபாய் மணியார்டர் செய்து விட்டு, அந்த ரசீதை எனக்கு அனுப்பினால் நான் தேதி தருகிறேன் என்று அண்ணா அறிவித்திருந் தார். நானூறு ரூபாயை கடைசியாகத் திரட்டி அனுப்புகிறபோது, மதியழகனிடம் சொல்லுகிறார் அழகிரிசாமி, நான் அண்ணாவைப் பற்றி என்னென்னவோ எண்ணி இருந்தேன். தங்கமான குணம். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள், இயல்புகள் அனைத்தும் அவரிடம் இருக் கிறது. மதியழகா நான் மகிழ்ச்சியோடு சாகிறேன் என்று சொல். கடைசியாக நண்பன் யார்? பகைவன் யார்? என்பதையும் அழகிரிசாமி புரிந்துகொண்டான் என்று அண்ணாவிடம் போய்ச் சொல்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பார்க்க வருகிறார் அழகிரிசாமியை. மிகுந்த கவலையோடு இருக்கிற அழகிரிசாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. சிங்கமடா நீ! ஏன் அழுகிறாய்? என்றபோது, ஒன்றுமில்லை. குடும்ப நிலைமையில் நான் விருதுநகரில் ஒருவரிடம் பிராமிசரி நோட் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கினேன், இப்பொழுது நான்காயிரம் வட்டி சேர்ந்து ஏழாயிரம் ஆகிவிட்டது. கடனைத் திருப்பிக் கொடுக்காமல் சாகப்போகிறேனே என்றுதான் கவலை என்றவுடன், கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அழகிரி கவலைப்படாதே. அந்தக் கடனை நான் அடைக்கிறேன் என்று சொல்கிறார்.

1949 ஆம் வருடம் மார்ச் 28 ஆம் தேதி அழகிரிசாமி மறைந்தார். மே மாதம் 5 ஆம் தேதி தஞ்சையில் கடனை அடைப்பதற்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நிதி திரட்டுகிற கூட்டம். காந்தி மகான் கதை வில்லுப்பாட்டு. கிந்தனார் கதா கலட்சேபம். நிகழ்ச்சிக்கு அண்ணா தலைமை தாங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் கலைஞர் கலந்துகொள்கிறார். நாவலர் கலந்து கொள்கிறார். எஸ்.வி.லிங்கம் கலந்து கொள்கிறார். சுல்தான் கலந்து கொள்கிறார். மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் வசூலாகிறது மொத்தத்தில். ஒரு ரூபாய் என்பது இன்றைக்கு பத்தாயிரம் ரூபாய்க்குச் சமம். கலைவாணர் என்.எஸ்.கே. அதனோடு 2500 ரூபாய் போட்டு, பாலு பிரதர்ஸ் வரைந்து கொடுத்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி படத்தை ஏலத்துக்கு விடுகிறார்கள். துரைராஜ் என்பவர் 250 ரூபாய்க்கு எடுக்கிறார். ஏறத்தாழ 6250 ரூபாய் பணத்தோடு விருதுநகருக்குச் சென்று பணத்தைக் கொடுத்து பிராமிசரி நோட்டை திரும்ப வாங்கிக்கொண்டு வந்தார்கள். அவருடைய கல்லறை இங்குதான் இருக் கிறது. சில நாட்களுக்கு முன்பு அந்தக் கல்லறைக்கு கணேசமூர்த்தியோடும், உதயகுமாரோடும், பாலகிருஷ்ணனோடும் போனேன். நெஞ்சம் வெடித்தது. எல்லாம் சாக்கடையும், குப்பையும் காணச் சகிக்காத அருவருப்பான பொருட்களும் கிடக்கிற அந்த இடத்தில் அழகிரிசாமியின் நினைவுச் சின்னம் இருக்கிறது.

அந்த நினைவுச் சின்னம் 1949 ஆம் வருடம் இதே செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் திராவிடர் கழக தோழர்களால் அமைக்கப்பட்டது. அதில், திராவிடநாடு திராவிடருக்கே! பட்டுக்கோட்டை அழகிரி சாமியினுடைய நினைவுச் சின்னம். நாள் 10.9.1949. திறந்து வைத்தவர் கி.ஆ.பெ.விசுவநாதம் என்று எழுதியிருக்கிறது. துரைராஜ் தலைமையில் கூட்டம். அன்று மாலையில் பொதுக்கூட்டம். அழகிரிசாமியின் நினைவிடம் சிதலமடைந்து கிடக்கிறது. நான் அரசாங்கத்துக்குச் சொல்கிறேன், அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய குப்பைக் கூழங்கள், அருவருப்பான பொருட்கள் அனைத்தையும் அகற்றுங்கள். திராவிட இயக்கத் தோழர்களின் கல்லறைகள் அங்கு இருக்கின்றன. அதைச் சுத்தப்படுத்துங்கள். அந்த நினைவுச் சின்னத்தை பளிங்கு மாளிகையைப் போல் சலவைக் கற்களால் நாங்கள் அமைப்போம். இடத்தை மட்டும் நீங்கள் தூய்மைப்படுத்துங்கள். பழைய கல்வெட்டு அப்படியே இருக்கும். அதை நாங்கள் மாற்ற மாட்டோம். அழகிரிசாமியின் நினைவுச் சின்னம் சிதிலமடைந்ததைச் சரிசெய்வது, சிதிலமடைந்திருக்கின்ற திராவிட இயக்கத்தைச் சரி செய்வதற்கான உணர்வோடு நாங்கள் சரி செய்வோம்.

அன்புக்குரிய தோழர்களே, திராவிட இயக்கத்துக்கு ஆபத்துகள் சூழ்ந்துவிட்டன என எனக்கு முன்பு உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள். ஆம்! இந்த திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் 1912 ஆம் வருடத்தில் முகப்புரை எழுதப்பட்டது. திராவிட மாணவர் இல்லம் அமைத்த டாக்டர் நடேசனார், சென்னை ஐக்கிய சங்கம் அமைத்தார். அவர் பெரிய மருத்துவர். மனிதாபிமானி, செல்வம் படைத்தவர். ஏழை எளிவர்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்கிறவர். அவர்தான் நடேசனார்.

அடுத்து பிட்டி தியாகராயர். அவர் கல்விக் கூடத்துக்கு வருகிறபோது, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில்தான் வருவார். கார்கள் அறிமுகமானபிறகு புதிய காரில்தான் அவர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு வருவார். அப்படிப்பட்ட செல்வச் சீமான். உலகத்தில் லண்டன் மாநகருக்கு அடுத்தபடியாக மாநகராட்சி அமைக்கப்பட்ட ஒரு நகரம் சென்னை மாநகரம். அந்த சென்னை மாநகரத்தின் முதல் பிரசிடெண்ட் பிட்டி தியாகராயர். ஆம் 1919 இல் இருந்து 1923 வரை நான்கு வருடம் அதற்குத் தலைவர். அவர் அவமானப்படுத்தப்பட்டார், கபாலீஸ் வரர் கோவில் விழாவில். பார்ப்பனர் ஆதிக்கத்தின் கொடுமையை உணர்ந்தார். அவர் வண்டியை நேராக நடேசனார் வீட்டுக்கு விடு என்றார். கருத்து வேறுபாடு இருக்கக்கூடிய நடேசனார் வீட்டுக்கு. அதன்பிறகு அவர் நாயரைச் சந்திக்கிறார். எந்த நாயர்? தரவாட் மாதவன் நாயர். லண்டன் எடிபிரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் அவருக்கு நிகரான பேச்சாளர் அந்தக் காலத்தில் எவரும் கிடையாது. தமிழில் எவரும் கிடையாது. ஸ்பெர்ட்டாங் ரோடு பேச்சு படித்தால் நரம்புகளில் மின்சாரம் பாயும். அவருடைய ஆங்கில உரையைப் படித்து இப்படி ஒருவரால் உரையாற்ற இயலுமா? என்று நான் வியந்தேன். அவர்தான் சொல்லுகிறார், என்னதான் நான் டாக்டராக இருந்தாலும் எங்கள் ஊர் ஐயருக்கு நான் சூத்திரன்தானேடா. நீதிபதியாகவே இருக்கட்டும் அவனை சூத்திரன் என்றுதானேடா நினைக்கிறான் என்று சொன்ன தாரவட் மாதவன் நாயர் ஒருமுறை கப்பலில் போகிறபோது கேப்டன் தவறாக ஏதோ சொல்லிவிட்டான். இடுப்பில் இருந்த பிஸ்டலை எடுத்து மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் சுடுவேன் என்றார். இவர்கள் இணைந்து உருவாக்கிய 1916 ஆம் வருடம் நவம்பர் 20 ஆம் நாள் வேப்பேரி எத்திராஜ் முதலியார் இல்லத்தில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் (சௌத் இண்டியன் லிபரல் பெடரேசன்) அமைத்து, அன்று மாலையில் பக்கத்திலே இருக்கக்கூடிய விக்டோரியா அரங்கத்தில் மாநாடு.

திராவிட இயக்கம் தொடங்கி 1920 நவம்பர் 20 தொடங்கி 30 நாட்கள் கழித்து பிட்டி தியாகராயர் ((Manifesto of non brahmin movement) பிராமணர் அல்லாத இயக்கத்து கொள்கைப் பிரகடனம் வெளியிடுகிறார். அவர் உரையாற்றுகிறார், திருவள்ளுவரோ, ஒளவையாரோ கடவுள் என்று கருதிக்கொண்டு எந்தப் பாட்டையும் பாடியது கிடையாது. இவன் இடுப்பில் பிறந்தவன், இவன் நெற்றியில் பிறந்தவன், இவன் தோளில் பிறந்தவன், இவன் காலில் பிறந்தவன், இவன் பஞ்சமன், பாதத்துக்குக் கீழே இருக்கிறவன் என்ற கொடுமையை உடைத்து எறிய வேண்டும். தோழர்களே, அலைகள் வருகிறபோது அதன் மேலே படகைச் செலுத்தி சவாரி செய்கிறவன்தான் வெற்றி பெற முடியும். சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும். அப்படி நாம் சபதம் பூண வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார்.

ஒரு வருடம் கழித்து 1921 ஆம் வருடம் டிசம்பர் 27, 28 இல் ஓராண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. பிரஞ்சு நாட்டில் அதிபரானவன் நாயருக்கு மிக நெருக்க மானவன். அவன் Reidcal Republications என்ற கட்சியை நடத்தி வந்தான். தீவிரவாத குடியரசுக் கட்சியினர். ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் பத்திரிகைக்குப் பெயர் Law Justice அதே பெயரை பத்திரிகைக்கு வைத்தார்கள். எடிட்டர் டி.எம்.நாயர். கட்சியின் பெயரும் நீதிக்கட்சி என்று ஆயிற்று. கட்சியின் கொடி சிவப்பு நிறத்தில். முற்போக்கு எண்ணம் படைத்தவர்கள் அல்லவா? நமது முன்னோர்கள். சிவப்பு நிறத்தில் தராசு சின்னம். இதுதான் கொடி. 1923 இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. என்ன செய்தது தாழ்த்தப்பட்டவர்களுக்கு? ஒடுக்கப்பட்டவர்களுக்கு? தலித்துகளுக்கு? நண்பர்கள் கேட்கிறார்கள். விளக்கம் அளிக்க வேண்டியது எங்கள் கடமை.

இந்திய நாட்டுச் சரித்திரத்திலேயே ஒடுக்கப் பட்டவர்களுக்கு, வர்ணாசிரமத்தின் பெயரால் நசுக்கப்பட்டவர்களுக்கு, தலித்துகளுக்கு விடியல் தேடிக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். நீதிக்கட்சி என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்வேன். இந்தச் சிந்தனை இந்தியாவில் எங்கும் எழாத காலத்தில், செய்து முடிக்க முடியும் என்று யாரும் நினைக்காத காலத்தில் டபுள்யு பி.ஏ.சௌந்திரபாண்டிய நாடார் ஜில்லா போர்டு பிரசிடெண்ட். பேருந்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பயணம் செய்யக்கூடாது என்ற உத்தரவை உடைத்து எறிந்து, அவர்களும் சமமாக உட்காரலாம் என்று சொன்னார். மார்ட்டின் லூதர் கிங் அங்கே போராடினார். இங்கே எங்கள் நீதிக்கட்சி அதை செய்து கொடுத்தது. இலவசமாக உறைவிடம். இலவசமாக உணவு. பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. தெருவில் செருப்பைப் போட்டு நடக்கக்கூடாது என்ற கொடுமையை தடை செய்து சட்டம் போட்டார்கள். இதை எவர் செய்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, தலித் மக்களை ஆலயத்துக்குள் அழைத்துப் போனவர்கள் நீதிக் கட்சிக்காரர்கள். நாங்கள் உங்கள் சகோதரர்கள். என் தலித் சகோதரர்களே நீங்கள் எந்தக் கட்சில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், உங்களுக்குப் பூட்டப் பட்ட அடிமை விலங்குகளை உடைப்பதற்கு சம்மட்டி ஏந்திய கூட்டம் எங்கள் கூட்டம் என்பதை நான் நினைவூட்டுகிறேன்.

தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம். சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டராக முடியும். அதை உடைத்து எறிந்தது நீதிக்கட்சி ஆட்சி. அதே வாரிசுகள்தான் நீட் கொண்டு வருகிறார்கள்.

1928 இல் முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி இட ஒதுக்கீடு கொண்டாடுவது திராவிட இயக்கமும், நீதிக்கட்சியும் தானே தவிர இந்தியாவில் எந்தக் கட்சியும் இல்லை. இந்திய உபகண்டத்துக்கே விடியலை சமூக நீதியைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது நீதிக்கட்சி. பின்னாளில் அது திராவிட இயக்கம். அந்த வகையில் எவரும் செய்ய முடியாததை சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டைச் செய்து கொடுத்தது திராவிட இயக்கம்.

1944 இல் சேலத்தில் மாநாடு. ஆகஸ்டு திங்கள் 27, 28 பெரியார் மனதில் வேதனை யோடு மாநாட்டுக்கு வர மறுத்தார். அண்ணா வற்புறுத்தி அழைத்து வந்தார். அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்ற பெயரை அங்கே சூட்டுகிறார். அந்த மாநாட்டில்தான் தந்தை பெரியாரை திராவிடர் கழகத் தலைவர் என்று அறிவிக்கிறார்.

நான் 1949க்கு வருகிறேன். செப்டம்பர் 17 ஆம் தேதி மதியழகனின் நோட்டுப் புத்தகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதுகிறார் அண்ணா. மறுநாள் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கூட்டம். மழை கொட்டுகிறது. அப்போது நாற்காலிகள் கிடையாது. தண்ணீர் தேங்கியதால் அமர முடியாமல், ஆங்காங்கு பெண்கள் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அண்ணா பேசுகிறார், திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல தி.மு.க. இது ஒட்டுமாங்கனி. அதே கொள்கைதான் எங்களுக்கும். சமுதாயத் துறையிலே சீர்திருத்தம். பொருளாதாரத்துறையிலே சமதர்மம். அரசியல் துறையில் வடநாட்டு ஏகாத்திபத்தியத்தில் இருந்து விடுதலை. இப்படி முழங்குகிறார்.

1949 இல் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கூட்டத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பங்கேற்றார். கே.கே.நீலமேகம் பங்கேற்றார். இப்போது நான் எந்தத் தரணியில் நின்று பேசுகிறேன் தெரியுமா? தஞ்சைத் தரணியில். பனி படர்ந்த இமயத்தின் கொடுமுடியிலே புலிக்கொடியை உயர்த்திய கரிகால் பெருவளத்தானும், திருப்புறம்புயத்தில் வீரவாள் வீசிய விஜயாலயனும் படை நடத்தி பராக்கிரமசாலியாகத் தோன்றிய பராந்தகனும், நாடெல்லாம் வெற்றி பெற்று பெருவுடையார் கோயிலை எழுப்பிய ராஜராஜசோழனும், வேங்கையின் மைந்தனாக கடாரம், புஷ்பகம், சாவகம் உள்ளிட்ட அத்துனை நாடுகளையும் வெற்றி பெற்று ஒரு பேரரசை நிர்மானித்தானே ராஜேந்திர சோழனும், இவனுக்கு நிகராக படை நடத்தியவன் எவனும் இல்லை என்று சரித்திரத்தில் மறைக்கப்பட்டாலும், வீரத்தை நிலைநாட்டிய ரகுநாதனும், அவன் படையில் வீரவாள் வீசி சங்கிலி மன்னனுக்குத் துணையாகப் போனானே படையோடு அந்த வருணகுலத்தானும் உலவிய பூமி இந்தத் தஞ்சை தரணி.

என் தோளுக்கு இட்ட மாலையை பெரியாரின் தாழுக்கு இடுகிறேன் என்று சொன்ன சர் ஏ.டி.பன்னீர்செல்வமும், சோழனின் சொந்தக்காரர்களே, பாண்டியன் பரம்பரையினரே, சேரனைச் சேர்ந்தவர்களே என்று கேட்கும்போதே உள்ளத்தில் கிளர்ச்சியூட்டிய உரை நிகழ்த்திய கலைஞர் கருணாநிதியும், தம்பி வா தலைமையேற்க வா உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம் என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனும், தமிழ் மணக்கும் பேச்சால் இவன் பைந்தமிழ் தேர்ப்பாகன் என்று அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட எனக்குக் கவலை ஏற்படுகிறபோதெல்லாம் அந்த இல்லத்தில் இருந்துதான் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கிறேன் என்ற பாராட்டைப் பெற்ற பேராசிரியர் அன்பழகனாரும், என் மீது எல்லையற்ற அன்பைக் கொட்டிய அண்ணன் மன்னை நாராயணசாமியும், என்னை வாஞ்சையால் நெஞ்சத்தில் வார்த்துக்கொண்ட அன்பில் தர்மலிங்கமும், என்னை உயிராக நேசித்து சிறையில் என்னோடு இருந்த அண்ணன் கோ.சி.மணியும், மாயவரம் நடராசனும், மூவலூர் மூதாட்டியும் உலவிய சோழ மண்டலத்தில் இந்த மாநாடு நடக்கிறது.

எனது அன்பிற்குரியவர்களே 1956 இல் திருச்சியில் மாநாடு. தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்று, அன்பில் அழைக்கிறார் என்று அண்ணா தம்பிகளுக்குக்குக் கடிதம் எழுதிய மாநாடு. 1956 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அப்பொழுதெல்லாம் ஒருவர் தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர் என்று சொன்னால், இன்றைய அமைச்சர் பதவியை விட உயர்ந்த பதவி. நான் கிளைக் கழகத்தின் வட்டப் பிரதி நிதியாக இருந்து, அந்த வட்டத்திலிருந்து பொதுக் குழுவுக்கு மாவட்டக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு அடுத்த தேர்தலில் தலைமைச் செயற்குழு உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிமட்டத் திலிருந்து கட்சியில் வந்தவன்.

1956 திராவிட முன்னேற்றக் கழகத் தேர் தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்களில் மூன்று பேர்தான் இன்று உயிரோடு இருக்கிறார்கள். ஒருவர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள், இன்னொருவர் நான் பிறந்த நெல்லை மாவட்டத்தில் அரசியலில் என்னை ஆளாக்கி வளர்த்து, போகிற மேடைகளில் எல்லாம் என் தம்பி பேசுவான் என்று என்னை ஒரு மணி நேரம் பேச வைத்து, வழக்கறிஞர் தொழிலிலும் ஜூனியராக வைத்து என் அரசியல் வாழ்வின் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து மண்டல் கமிசன் தீர்ப்பு எழுதினாரே அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் இரண்டாமவர். மூன்றாமவர் யார் தெரியுமா? இதோ அமர்ந்திருக்கின்ற எங்கள் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள்.

1956 இல் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன், காங்கிரஸ் கோட்டை யாக காட்சி அளிக்கும் என்று கருதினோமே, 1952 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலில் மீண்டோமே ராஜாஜியின் சாணக்கியத்தால். இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி வளர்கிறதே. அது திராவிட நாடு கேட்கிறதே. தனி நாடு கேட்கிறதே என்று கலக்கமுற்றார் ஆசிய ஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு. இதை வளர விடக் கூடாது. தம்பி செந்திலதிபன் சொன்னதைப் போல நாகர்கள் கலகக் கொடி உயர்த்துவதற்கு முன்பு உருவிய வாளுடன் பஞ்சாபை பெற்றுத் தருவேன் என்று தாராசிங் வாளை உருவுவதற்கு முன்பு தனி நாடு கேட்ட இயக்கம், எங்கள் இயக்கம். ஆகவே அஞ்சினார்கள். பிரிவினை தடைச் சட்டம் கொண்டுவருகிறார்கள். அண்ணா வேலூர் சிறையில்.

சீனம் படை எடுத்தது. திலா வீழ்ந்தது. இந்தியப் பகுதிகள் வீழ்ந்தன. நாற்பதினாயிரம் சதுர கிலோ மீட்டர் பறிபோயிற்று. நா தழுதழுக்க பண்டித நேரு வானொலியில் உரையாற்றியதைக் கேட்ட கோடிக்கணக்கான இந்திய மக்கள் கண்ணீர் விட்டார்கள். சிறையில் இருந்தவாறு வானொலியில் நேருவின் உரையைக் கேட்டார் பேரறிஞர் அண்ணா. உபகண்டத்துக்கே ஆபத்து வந்து விட்டது. இந்தக் கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நேரு அரசாங்கம் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் துணையாக இருப்போம். தோள் கொடுப்போம். 75 ஆயிரம் ரூபாயை அன்றைக்கு நிதியாகக் கொடுத்தார் மக்கள் திலகம், அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அவர்கள். அந்தக் கட்டத்தில் நாங்கள் ஆதரவு கொடுப்போம். நாட்டுக்கு ஆதரவு கொடுப்போம். எல்லையில் ஆபத்து. பகைவன் படையெடுத்து வந்துவிட்டான் என்று கூறிய அண்ணா அவர்கள். 1962 இல் குறி வைத்து அண்ணாவைத் தோற் கடித்த பிறகு பிரிவினை தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறார்கள். அண்ணா தோற்றுப்போனார். நான் சவேரியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் படித்துக் கொண்டு இருக்கிறேன். அண்ணா தோற்றுப் போன செய்தியை வானொலியில் கேட்டு நாங்கள் கண்ணீர்விட்டு அழுதோம். அண்ணா அறுபடையும் அணிவகுப்பும் என்று தம்பிமார்களுக்கு எழுதினார். ஐம்பது பேர் வெற்றிபெற்றுவிட்டார்கள். அண்ணா தோற்றதால் தி.மு.கழகத் தோழர்கள் கண்ணீர்விட்டுக் கலங்கினார்கள்.

வயற்காட்டு வரபிலே அறுக்கப்பட்ட கதிர்க் கட்டைச் சுமந்துகொண்டு வருகிறபோது, அந்த நிலத்துக்குச் சொந்தக்காரன் அரிவாள் காலிலே பட்டு கீழே கிடக் கிறான். அனைவரும் சுமந்துகொண்டு செல்கிறார்கள். அவன் மகிழ்ச்சியோடு விளைந்தது, அறுவடை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியோடு இருக்கிறான். அதுபோலத்தானடா தம்பி, எல்லோரும் அறுவடையில் வெற்றி பெற்றுச் செல்லு கிறபோது காலில் காயம் பட்டவன் கீழே கிடந்து மகிழ்வதைப் போல் நான் மகிழ்கிறேனடா தம்பி என்று எழுதினார். அடுத்துச் சொல்லுகிறார்.

சிலுவைப் போர்களை வர்ணிக்கிறார். அப்போது சொல்கிறார் ஜெருசலத்துக்கு ரிச்சட்டின் படை நெருங்குகிறது. கிறிஸ்து மார்க்கத்தின் சார்பாக. சலாவுதீன் மன்னன் பெரும் படையோடு உள்ளே இருக்கிறான். ஜெருசலத்துக்குள் நுழைய முடியவில்லை. சலாவுதீன் மன்னன் தூது அனுப்புகிறான். ரிச்சர்டு மன்னனின் படை ஜெருசலத்துக்குள் வரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை தளபதி ரிச்சர்ட் மட்டும் வரக்கூடாது. மகிழ்ச்சியோடு தன் படையினரை உள்ளே அனுப்பி வைத்து விட்டு புன்னகை பூத்தவாறு வெளியே நின்றுகொண்டு இருந்தான். தம்பி அன்று ரிச்சர்ட் உள்ளே சென்ற படை வீரர்களைப் பார்த்து மகிழ்ந்ததைப்போல என் தம்பிமார் ஐம்பது பேர் சட்டசபைக்குள்ளே செல்வதைப் பார்த்து நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இப்படிச் சொல்வதனால் அண்ணாதுரை தன்னை ரிச்சர்ட்டாக நினைத்துக்கொண்டான் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.

அந்தத் தேர்தல் களத்தில் தோற்றபிறகு மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டார் அண்ணா. தென்னாட்டை, திராவிட நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று சொல்கிற அண்ணா அவர்கள் நாடாளு மன்ற மாநிலங்கள் அவைக்கு வருகிறார். அங்கே பிரிவினை தடைச் சட்ட மசோதா விவாதத்துக்கு வருகிறது. அண்ணா பேசத் தொடங்குகிறார். காங்கிரஸ்காரர்கள் குறுக்கிடுகிறார்கள். புபேஸ்குப்தா எழுந்து சொல்கிறார், இது அவருடைய கன்னிப் பேச்சு, குறுக்கீடு கூடாது. அதுதான் சபையின் மரபு. அண்ணா சொல்கிறார், நான் குறுக்கீடுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை. குறுக்கீடுகள் வரட்டும் நான் பதில் சொல்கிறேன். அற்புதமான உரை. தன்னந்தனியாகப் பேசுகிறார்.

அவர் சொல்கிறார், கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தில் வேண்டும். நான் சொல்கின்ற கருத்து தவறு என்று மக்களிடம் சொல்லுங்கள். நான் தனி ஆள்தானே? நான் நோஞ்சான்தானே? நான் பலவீனன் தானே? நீங்கள் இத்தனைபேர் இருக்கிறீர்கள் அல்லவா? கம்யூனிஸ்டுகளும் அவர்களோடுதானே! எல்லோரும் வாருங்கள். புபேஸ்குப்தாவும் வாருங்கள். மக்களிடம் செல்வோம். நீங்கள் சொல்லுங்கள். என் கருத்தையும் சொல்கிறேன். அதை விட்டுவிட்டு கருத்துச் சுதந்திரத்தையே நசுக்க முற்படுவது நியாயம்தானா? ஒரே ஒரு மனிதனுக்காக, ஒரே ஒரு இயக்கத்துக்காக இந்திய நாட்டில் சட்டம் கொண்டுவந்தார்கள் என்பது நியாயம்தானா? என்று கேள்விகளை அடிக்கிக்கொண்டே போகிறார். எங்கள் கருத்து சரியில்லை என்று எங்களிடத்தில் எடுத்துச் சொல்லுங்கள்.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு யாரை நீங்கள் தலைவராகப் போட்டிருக்கிறீர்கள் தெரியுமா? சர்.சி.பி. இராமசாமி ஐயரை அல்லவா போட்டிருக்கிறீர்கள். அவர் இந்திய நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபட்ட எப்பேர்ப்பட்ட தேசபக்தர். 1947 ஆகஸ்டு 15 இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, அவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு திவான். அவர் அறிவிக்கிறார், திருவிதாங் கூர் இந்தியாவோடு சேராது. அது தனி நாடு. பாகிஸ்தானோடு நேரடி உறவு வைத்துக்கொள்ளும் என்று அறிவித்தவரை தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்குத் தலைவராகப் போட்டிருக்கிறீர்கள். உங்கள் குழு வந்தது. தி.மு.க.வைச் சந்தித்ததா? கருத்துக் கேட்டதா? நான் சிறையில் இருக்கிறேன். வெளியில் மனோகரன், ராஜாராம், என்.வி.நடராசன் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்திருக்கலாமே? சர்.சி.பி. இராமசாமி ஐயரே சிறையில் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று கருதவில்லை. நான் மிகவும் சாதாரணமானவன். சி.பி.இராமசாமி ஐயர் சிறைக்கு அனுப்பித்தான் பழக்கப் பட்டவரே தவிர, சிறைக்குச் சென்று பார்த்துப் பழக்கப்பட்டவர் அல்ல என்று அண்ணா பேசும்போது சபையே நிசப்தமாக இருக்கிறார்கள். மாடம் நிரம்பி வழிந்திருக்கிறது. அத்துனை பேரும் அவர் பேச்சைக் கேட்டு அப்படியே பிடிப்புண்டு இருக்கிறார்கள். அப்பொழுது அவர் சொல்கிறார், இந்த ஒரு சட்டத்தின் மூலமாக எங்கள் கொள்கையை நசுக்க நினைக்கிறீர்கள். நாங்கள் கேட்பது நியாயம் அல்ல என்றால், 1773 க்குப் முன்பு இந்தியாவில் மத்திய அரசு இருந்ததா? நடுவண் அரசு இருந்ததா? இந்தியா என்ற ஒரு அரசு இருந்ததா? மத்தியில் அதிகாரம் இருந்தால்தான் நாட்டைக் காப்பற்ற முடியும் என்கிறீர்களே!

மௌரிய சாம்ராஜ்யம் வலுவாக இருந்தது நீடித்ததா? குப்த சாம்ராஜ்யத்தைப் பொற் காலம் என்றார்கள். நீடித்ததா? அதன் பிறகு மொகலாயப் பேரரசு வந்தது. என்ன அருமையான வாதங்கள் இவை அனைத் தையும் எடுத்து வைத்துவிட்டு, மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நிலைமை சரியாக இருக்குமானால் அடுத்த ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் என்று அண்ணா சொல்கிறார்.

அண்ணா பிரிவினையைக் கைவிட்டு விட்டார். தனிநாடு கோரிக்கையைக் கை விட்டுவிட்டார். சில மேதாவிகளுக்கு மிக இளப்பமாகப் போய்விட்டது, எழுது வதில், கட்டுரைகள் தீட்டுவதில், பேசு வதில். அண்ணா ஒரு கோழை. திராவிட நாடுதான் இலட்சியம் என்றார், அதைக் கைவிட்டுவிட்டார் பதவிக்காக. பரிதாபத்துக்கு உரியவர்களே, சரித்திரம் அறியாதவர்களே உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா அவர்கள் மிக மிக போற்றிய தலைர்களில் ஒருவர் அயர்லாந்து நாட்டின் டிவேலரா. உனக்கு ஐரீஸ் மொழி விடுதலை வேண்டுமா? நாட்டு விடுதலை வேண்டுமா? என்றால், முதலில் என் ஐரீஸ்மொழி விடுதலை வேண்டும் என்று முழங்கியவர். அந்த யேமன் டிவேலரா சிம்பன் இயக்கத்தின் தலைவர். பிரித்தானியப் பேரரசியிலிருந்து அயர்லாந்து தனி நாடாக வேண்டும் என்று போராடுகிறது. தேர்தல் வருகிறது. சிம்பன் இயக்கம் வெற்றி பெறுகிறது. டிவேலரா உள்ளிட்டவர்கள் எம்.பி.க்களாக வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் காமன் சபையில் நுழைய வேண்டும். ஜார்ஜ் மன்னருக்கு ராஜவிசுவாச பிரமாணம் செய்தால்தான் எம்.பி.யாக அமர முடியும். காமன் சபை உறுப்பினராக அமர முடியும். டிவேலரா மறுக்கிறார். நாங்கள் அயர்லாந்து தனி நாடாக வேண்டும் என்று கேட்கிறோம். அயர்லாந்து மக்கள் எத்தகைய தியாகம் செய்தார்கள்?

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இதற்கு முன்னர் ஒரு மாநாட்டில் ராபர்ட் எம்மட் என்கிற கல்லூரி மாணவனின் சோக சரித்திரத்தைச் சொன்னேன். அயர்லாந்து நாட்டின் விடுதலைக்காக ஆயுதப் புரட்சிக்கு ஆள் திரட்டினான். பிடிபட்டான். தூக்குத்தண்டனை என்று நீதிபதிகள் சொல்லுகிறபோது அவன் தெரிவித்தான், இங்கே இருக்கிற ஜூரி களுக்குச் சொல்வேன், மரணம் என்கின்ற புதைகுழி உறைபனியோடு என்னை வரவேற்கக் காத்துக்கொண்டு இருக்கிறது. நான் அந்த புதைகுழிக்குள் செல்வேன். என் கல்லறை மீது என் பெயரை எழுதாதீர்கள். என்றாவது ஒரு நாள் என் தாயகம் தனி சுதந்திர நாடு ஆகும். அயர்லாந்து தனிநாடு ஆகும். அப்போது யாருக்காவது நான் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அன்றைக்கு வேண்டுமானால் என் கல்லறையில் பெயரை எழுதுங்கள் என்று சொன்னான்.

அயர்லாந்து நாட்டில் புரட்சி நடந்த அந்தப் பகுதியில்தான் யேமன் டிவேலரா உள்ளிட்ட அத்தனைபேரும் பதவி இழந்தார்கள். மீண்டும் தேர்தல். மீண்டும் வெற்றி பெற்றார்கள். ராஜவிசுவாச பிரமாணம் எடுத்து எம்.பி.க்களாக உள்ளே சென்று அமரப் போகிறார்களா? அல்லது முடியாது என்று மீண்டும் பதவி இழக்கப் போகிறார்களா? கொள்கைதான் பெரிது என்று கருதப்போகிறார்களா? டிவேலரா யோசிக்கிறார். ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்கிறேன் என்று எடுக்கிறார். அவரோடு அத்துனை பேரும் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்கிறார்கள். காமன் சபையில் உறுப்பினர்களாக அமர்கிறார்கள். தந்தை செல்வா காங்கேசன்துறையில் வெற்றி பெற்று அமர்ந்ததைப் போல.

சிறிது காலம் சென்றது. அதே காமன் சபையில் அயர்லாந்து சுதந்திரத் தனி நாடு என்று பிரகடனம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். மக்களைத் திரட்டினார்கள். பிரித்தானியத்திலிருந்து அயர்லாந்து விடுதலை பெற்றது. தனி நாடு ஆயிற்று. டிவேலரா கொள்கையை சமரசம் செய்து விட்டாரா? டிவேலரா கொள்கையை காவு கொடுத்துவிட்டாரா?

ஏன் லாங் மார்ஸ் படித்திருப்பீர்கள் எட்கார் ஸ்லோவன்போ எழுதியிருக்கக்கூடிய புத்தகம் படித்திருப்பீர்கள். கம்யூனிஸ்டு கட்சியின் உயிர் நாடியாக தான் வாழும் நாட்களில் திகழ்ந்தவன் மாசேதுங். அப்பொழுது ஷியாங்கே சேக் அதிகாரக் கொடுமுடியில் இருக்கிறான். இராணுவத்தின் தளபதி. அவனே ஜனாதிபதி. சர்வாதிகாரி. கம்யூனிஸ்டு கட்சி வளர்கிறது. மாசே துங் அதற்கு மூல காரணமாக இருக்கிறான். மாலேஸ் மாசேதுங்கை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறான். தலைக்கு விலை வைக்கிறான். மரண வளையம் அமைக்கிறான். இராணுவம் சுற்றி வளைக்கிறது மாவோவை. மாவோ இராணுவ வளையத்தை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறார். காட்டாறுகளில் நீந்துகிறார். பனிப் பாறைகளில் நடக்கிறார். தனக்கு இருந்த காலணிகளை இன்னொரு வீரனுக்குக் கொடுத்துவிட்டு வெறுங் காலோடு நடக்கிறான். அப்போது அவரது மனைவி காணாமல் போய்விட்டார். அவரது ஒரு மகன் காணமால் போய்விட்டான். கடைசிவரை கிடைக்கவில்லை. அப்படிச் சென்றான்.

குடியானவர்கள் ஆயுதங்களோடு திரண்டார்கள். நாளுக்கு நாள் வலிமை வளர்ந்தது. மாவோ வெறும் படைவீரன் மட்டுமல்ல, லெனினைப் போல தலை சிறந்த எழுத்தாளர். சிந்தனையாளன். அப்போது ஜப்பான் படையெடுத்தது. சீனா தோற்றது. ஷியாங்கே சேக் படைகள் தோற்றன. ஜப்பான் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தது. ஷியாங்கே சேக் தூது அனுப்பினான். தலைக்கு விலை பேசிய ஷியாங்கே சேக் தூது அனுப்பினான். மாவோ எங்களோடு சேர்ந்து ஜப்பானியர்களை விரட்ட வேண்டும். தீர்க்கமாக இரவெல்லாம் யோசித்தார். ஏற்றுக்கொள்கிறேன். ஷியாங்கே சேக் இராணுவமும் தாக்குகிறது, மாவேவின் செம்படையும் ஜப்பானியர் களைத் தாக்குகிறது. ஜப்பான் தோற்று ஓடுகிறது. பீகிங்கை நெருங்கி வந்து விட்டான் மாவோ. ஷியாங்கே சேக் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறான்.

பாடுபட்டு இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, உயிர்களைப் பலி கொடுத்து, கட்டி எழுப்பிய செம்படையைக் கலைக்கிறான். எல்லோரும் காரி உமிழ்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு, ஆறாயிரம் மைல்கள் நடந்து கட்டி எழுப்பிய அனைத்தையும் நாசமாக்கி விட்டான் மாசேதுங். அவனுக்கு புத்தி கெட்டுப் போய்விட்டது. கோழையாகி விட்டான். சமரசம் செய்துவிட்டான். இலட்சியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டான் என்று கேலி செய்தார்கள். மாவோ அமைதியாக இருந்தான். ஆறு மாதம் கழிந்தது. சரியான தருணம் வாய்த்தது. ஒரே நாள் உத்தரவில் கலைந்துசென்ற தனது மொத்த செம்படையையும் திரட்டினான். திரட்டிய செஞ்சேனை ஆயுதங்களை எங்கெங்கே வைத்திருந்தார்களோ அவற்றை எடுத்துக் கொண்டு வந்தார்கள். பீகிங்கின் மீது படை எடுத்தான். ஷியாங்கே சேக் ஓட்டம் பிடித்தான் பார்மோசாவுக்கு. பீகிங் ராஜமாளிகையில் செங்கொடியை உயர்த்தினான் மாவோ. மாவோ கொள்கையை சமரசம் செய்துவிட்டாரா? மாவோ இலட்சியத்தைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டாரா?

வன்னிக் காட்டில் சத்யா இங்கே சொன்னதைப் போல அண்ணன் கோபால சாமி அவர்கள் மரணத்தைத் துச்சமாகக் கருதி, உயிரைப் பொருட்படத்தாமல், இனத் துக்காகவும், மொழிக்காவும் என்னையும் என் சகாக்களையும் பார்ப்பதற்கு இங்கே வந்தாரே அதை நினைக்கிறபோது, என் தமிழ் நிலத்துக்காகவும், ஈழத்துக்காகவும் எத்தனைமுறை வேண்டுமானாலும் நான் சாகலாம் என்ற மனத்தெம்பு ஏற்படுகிறது. இதைவிட என்னப்பா வேண்டும் வைகோ வுக்குப் பாராட்டு. யார் கொடுப்பது? உலகத்தின் ஈடு இணையற்ற தலைவர் பிரபாகரன் கொடுத்த பாராட்டு. திருச்சி மாநாட்டில் இந்தப் பாராட்டை அச்சிட்டு பத்திரிகையாளர்களிடம் கொடுத்தேன். ஒரு பத்திரிகைகூட அதை வெளியிடவில்லை. வாழ்க பத்திரிகையாளர் தர்மம்!

ஒரு படை நடத்தியவன், உலகத்தை நடுங்க வைத்தவன், ஏழு அணுஆயுத வல்லரசுகளை எதிர்த்து நின்றவன் தமிழனுக்குத் தரணியில் முகவரியைத் தேடிக் கொடுத்தவன், ஒழுக்க சீலன், காஸ்ட்ரோவைவிட, சேகுவேராவைவிட, மாவோவைவிட, கோசிமினைவிட வீரத்தில் சிறந்தவன் என் தலைவன் பிரபாகரன். அவன் எழுதினான் இந்த சாமானியனை. இந்த சாதாரண மனிதனை. 27 ஆண்டுகள் வைத்துவிட்டு இப்பொழுது ஏன் வெளியிடு கிறார் என்று கிண்டல் செய்து ஒரு பத்திரிகை எழுதியது. நான் எத்தனை நாள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் சொன்னேன், ஒரு வேளை ஆறு மாதத்தில் செத்துவிட்டால், இந்தக் கடிதம் வெளியிட வேண்டும் என்று வெளியிட்டேன்.

பத்திரிகையாளர்கள் மீது கோபம் எல்லாம் கிடையாது. என்னைவிட கடுமையாக நிந்திக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. என்னைப் பாராட்டியதைப் போல பத்திரிகைகள் யாரையும் பாராட்டியதும் இல்லை. 1993 இல் நான் வெளியேற்றப்பட்டபோது அனைத்து பத்திரிகையிலும் எட்டு காலச் செய்தி வைகோ பெயர்தான் மூன்று மாத காலம் வந்தது. குடவாசலுக்கு பத்தாயிரம் வாகனங்கள் வந்தன என்று எழுதியது பத்திரிகைகள்தான். அந்த நன்றியை நான் மறக்கவில்லை. ஆனால் என் வாழ்நாளில் பிரபாகரன் எழுதிய பட்டயத்தைப் போல இன்னொரு பட்டயம் எனக்குக் கிடைக் குமா? அவரைவிட சிறந்த ஒரு மனிதனோ, தலைவனோ உலகத்தில் இருப்பதாக நான் கருதவில்லை.

நானும், கிட்டுவும், பிரபாகரனும் அமர்ந்திருக்கிறோம். பிரேமதேசாவிடமிருந்து செய்தி வருகிறது. பிரேமதேசா அந்த ஓலையில் எழுதியிருக்கிறார். விடுதலைப் புலிகளோடு நாங்கள் சமரசம் செய்துகொள்கிறோம். உங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்த மாட்டோம். நமது பிரச்சினைகளை நமக்குள் பேசித் தீர்த்துக்கொள்வோம். சிங்கள அரசும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் பேசித் தீர்த்துக்கொள்வோம். இதுதான் அந்தத் தகவல். தலைவர் பிரபாகரன் ஜனநாயகவாதி. அண்ணே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் என்ன சொன்னேன் தெரியுமா? இவ்வளவு நேரம் சொன்ன டிவேலரா சரித்திரத்தையும், மாவோ சரித்திரத்தையும் மட்டும் சொன்னேன். சிரித்தார். அந்த புன்சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி இருந்தன.

பிரபாகரன் கொள்கையை விட்டுவிட்டாரா? இலட்சியத்தை விட்டுவிட்டாரா? அண்ணா கொள்கையை இலட்சியத்தை விடவில்லை. முதலமைச்சர் ஆனார். அண்ணன் துரைசாமி குறிப்பிட்டதைப் போல ஜூலை 18 ஆம் தேதி இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தார். எவ்வளவு தொலைநோக்கோடு பெயர் வைத்திருக்கிறார். நாடு எங்கள் நாடு. நான் பிறந்த நாடு. நான் பிறந்த தமிழ்நாடு. என்னை ஈன்ற தமிழ்நாடு. இந்தியா ஒரு இடைக்கால ஏற்பாடு. மத்திய உளவுத் துறையினரே வார்த்தை பிசகாமல் இந்தச் செய்தியை நரேந்திர மோடிக்கு அனுப்புங்கள்.

அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் வைத்துவிட்டு, சங்கரலிங்கனார் கனவை நனவாக்கிவிட்டு, எல்லா கட்சித் தலைவர்களும் எழுந்து முழக்கமிட்ட தனாலே மகிழ்ந்து, ஆலயங்களை எதிர்க்க வில்லை. ஆலயங்களில் நடக்கும் திருமணங் களை எதிர்க்கவில்லை. ஆனால் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டால், அதுவும் சட்டமாக்கப்படும் என்று இந்து திருமண திருத்த மசோதாவைச் சட்டமாகக் கொண்டுவந்து, அதே ஜூலை 18 இல் நிறைவேற்றினார் அண்ணா.

இந்திக்கு இங்கு இடம் இல்லை. சேட் கோவிந்ததாசின் இராணுவமாமே வரட்டும் பார்ப்போம் என்று முழக்கமிட்டவன் நான். ஆபட்ஸ்பரி மாளிகையில் ஜனநாயக பாதுகாப்பு மாணவர் மாநாடு. முதலமைச்சர் அண்ணா அங்கே வருகிறார். ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்று இருக்கிறாரே, மாவட்ட அவைத் தலைவராக இருந்த குழந்தைவேலு அந்த மாநாட்டின் பொருளாளர். இலட்சியவாதிகள் எல்லாம் இங்கே இருக்கிறோம். அந்த மாநாட்டில் நானும் ஐந்து நிமிடம் பேசினேன்.

அண்ணா பேசும்போது சொன்னார், நான் திராவிடநாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டேன். ஆனால் பிரிவினை கேட்ட தற்கான காரணங்கள் ஒன்றையும் நான் கைவிடவில்லை. அந்தக் காரணங்கள் அப்படியே உயிரோடு இருக்கின்றன என்று மாநாட்டில் பேசியதோடு இல்லாமல் சட்ட சபையிலும் அதையே பதிவு செய்தார் அண்ணா.

இயற்கை பொல்லாதது. கடல்கோளால் எங்கள் கபாடபுரத்தை விழுங்கியது. தென் மதுரையை விழுங்கியது. 47 மடங்கு பரந்து விரிந்து இருந்த தமிழகத்தை விழுங்கியது. எங்கள் அண்ணாவை இயற்கை காவு கொண்டது புற்றுநோய் வடிவத்திலே. The Last Cristian புத்தகம்தான் அவர் கடைசியாகப் படித்தது. அவரைப் பார்க்கச் செல்கிறார் அவருடைய உயிர் நண்பர் காங்கிரசைச் சேர்ந்த செங்கல்வராயன் வழக்கறிஞர். அண்ணா அவர்களே நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னவுடன், அண்ணா சிரித்துக் கொண்டே சொல்கிறார், என்ன ஓய்வு என் நண்பரே நிரந்தரமான ஓய்வுதானே இனி கூறியவுடன் செங்கல்வராயன் அழுது விட்டார்.

அண்ணா உயிர் பிரிகிறபோது பத்து மணிக்கு அடுத்த அறையில் படுத்துக்கிடந்தவன் நான். சட்டக் கல்லூரியில் தகராறு ஏற்பட்டு, அந்தக் கைகலப்பில் நான் ஒருவனை அடித்து மிதித்துவிட்டேன் என்று சட்டக்கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பு அடையாறு மருத்துவமனையில் ஏழு நாட்கள் இருந்தேன். முரசொலி செல்வம் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். எல்.கணேசனும், சீனிவாசனும் வந்து எனக்கு அவ்வப்போது துணி, சாப்பாடு வாங்கிக்கொடுத்தார்கள். அண்ணா இறந்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டு பத்து மணி பத்து நிமிடத்துக்கு உள்ளே ஓடுகிறேன். டாக்டர்கள் டியூப்களை கழட்டிக் கொண்டு இருக்கிறார்கள். யாரும் இல்லை. நாவலர் நின்றுகொண்டு அழுது கொண்டு இருக்கிறார். ஒரு ஓரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் அழுதுகொண்டே மாதவன் முதுகைத் தட்டிக்கொண்டு இருக்கிறார். கலைஞர் இன்னொரு பக்கம் உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கிறார்.

அதன்பிறகு அண்ணாவின் உடல் வேனில் ஏற்றப்பட்டு, மன்னை நாராயணசாமியும், சிட்டி பாபுவும், கலைஞரும், நாவலரும் அண்ணாவின் உடலோடு நுங்கம்பாக்கத் திற்குச் சென்றார்கள். டி.வி.நாராயணசாமி என்னை காரில் ஏற்றிக்கொண்டு தேனாம் பேட்டை எஸ்.எஸ்.ஆர். வீட்டிற்குச் சென்றார். எஸ்.எஸ்.ஆர். கதறினார். எஸ்.எஸ்.ஆரும், நானும் டி.வி.என்.னும் அண்ணா வீட்டுக்குச் செல்கிறோம். அப்பொழுதுதான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வந்து கதறிக் கதறி அழுதுகொண்டு இருந்தார். அவர் இன்னும் இருபது ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்திய உபகண்டத்தின் சரித்திரம் வேறு திசையில் போயிருக்கும். தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். தமிழனுக்கு உலகத்தில் ஒரு நாடு மலர்ந்திருக்கும். இந்த சனாதனிகளின் கொட்டமெல்லாம் எழுந்திருக்காது. ஊழல் வந்திருக்காது. திராவிட இயக்கம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்காது. பழிக்கு ஆளாகி இருக்காது. பரிகாசத்திற்கு ஆளாகி இருக்காது. ஏளனம், ஏகடியத்திற்கு ஆளாகி இருக்காது. இயற்கை பொல்லாதது அண்ணாவைக் கொண்டு சென்றது.

அண்ணா மறைந்தபோது கவிக்கோ அப்துல் ரகுமான் நெஞ்சம் உடைந்து கண்ணீரோடு எழுதினார். கவிக்கோ அண்ணாவை நெஞ்சில் உயிராகப் போற்றியவர்.

இங்கே புதைக்கப்பட்டது
சாதாரண மனித உடல் அல்ல
எங்கள் வரலாற்றுப் பேழை
குருடர்கள் நாம்,

காணக் கிடைக்காத புதையலை
எங்கள் கைகளில் கிடைத்த பிறகும்
மறுபடியும் புதைத்துவிட்டோம்.
எங்கள் விடியலுக்காக

விடிய விடிய எரிந்த தீபம்
காலை கிரணங்கள்
கண் விழிக்கிற நேரத்தில்
அணைந்து போனது
வீரவாள் வசிக்கும் வைர உறையில்
ஈர மலர்களை நிரப்புதல் போல்

அண்ணனே நீ
உன்னுடைய ஆட்சியில்
நீர் இல்லை கண்களிலே
நிழல் இல்லை ஊழலுக்கு
பசி இல்லை ஊர் வசிக்க
உடை இல்லை உண்மைக்கு
அண்ணனே நீ அழும்போதும்
மேகம்போல் அழுதாய்
விழும்போதும் விதையைப் போல் விழுந்தாய்
அந்த அண்ணன்தான் மறைந்தார்!

அந்த அண்ணா அவர்கள் எந்தக் கொள்கையைக் கட்டி எழுப்பினார். நான் அதற்கு நிச்சயம் வருவேன். எனக்கு இருக்கக் கூடிய கவலை எல்லாம் எட்டு மணிக்கு மேல் எல்லா தொலைக்காட்சிகளும் சர்ச்சை விவாதங்களுக்குப் போய்விடுவார்கள். அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டது நீங்கள் ஆறு மணிக்கு பேச ஆரம்பிக்க வேண்டும். எட்டு மணிக்குள் முடிக்க வேண்டும் என்று. ஆனால் நான் ஒலிபெருக் கிக்கு வருவதற்கே 6.30 ஆகிவிட்டது. முக்கியமான செய்திகளை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

என் பேச்சின் போக்கை நான் மாற்றிக் கொள் கிறேன். இனி ஒரு பதினைந்து நிமிடம்தான் நீங்கள் ஒளிப்பதிவில் காட்ட முடியும். தொலைக்காட்சி மூலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டு களித்துக் கொண்டு இருக்கக்கூடிய சகோதரர்களே, தாய்மார்களே! எல்லா தொலைக்காட்சி களும் வெளியிடுகின்றன. எங்கள் ஏழைக் குடும்பத்துத் தொலைக்காட்சி மதிமுகம் தொலைகாட்சியும்கூட ஒளிபரப்பு கிறது. மிகவும் சிரமப்பட்டு, கடன் வாங்கி நொறுங்கிப் போன என் தம்பி மார்கள் தங்க துரையும், செல்வபாண்டியன் மைத்துனர் ராமசாமியும் நடத்துகிற தொலைக்காட்சி. அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அனைத்துப் பத்திரிகையாளர் களுக்கும் நன்றி தெரிவிக் கிறேன். நான் இன்னும் பேசுவதற்கு அதிக செய்திகள் இருக்கின்றன. ஆனால் சுருக்கமாக அவற்றைப் பதிவு செய்துவிடு கிறேன்.

நதிகள் இணைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். விசுவரூபம் எடுப்பவர்கள்கூட நதிகள் இணைப்புக்காகப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்கள். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லுகிற கலை உலகத்து நண்பர்கூட நான் வந்தால் நதிகளை இணைத்து விடுவேன் என்று சொல்லுகிறார். சபாஷ். நான் அதை யெல்லாம் வரவேற்கிறேன். மகிழ்ச்சி. ஆனால் நதிகளை இணைக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் 67 ஆண்டுகளில் ஒரு மசோதா வந்தது உண்டா? ஒரே முறை வந்தது. அந்த மசோதா மீது மூன்று மாதம் விவாதம் நடந்தது. அந்த மசோதாவைக் கொண்டு வந்தவன் இந்த ஒலிபெருக்கிக்கு முன்னாலே நின்று கொண்டிருக்கிற வைகோ. இந்திய நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டிப் பேசினார்கள்.

இமாலய நதிகள், வடக்கே இருக்கின்ற நதிகள், தீபகற்ப நதிகள், மகாநதிக்குத் தெற்கே இருக்கிற நதிகள். வடக்கே இருக்கிற இமாலய நதிகளைப் பின்னால் இணையுங்கள். தெற்கே இருக்கிற நதிகளை தேசிய நதிகளாக அறிவியுங்கள். தேசிய நெடுஞ்சாலையைப்போல. மகாநதியில் இருந்து கோதாவரி. கோதாவரியிலிருந்து கிருஷ்ணா. கிருஷ்ணாவிலிருந்து காவிரி. காவிரிலிருந்து வைகை. வைகையிலிருந்து தாமிரபரணி என்று இணைத்துவிடுங்கள். இந்தியா பொருளாதாரத்தில் சுபிட்சம் அடையும். கோடிக்கணக்கான விவசாயி களின் விழிநீர் துடைக்கப்படும். இந்தியா உலக பொருளாதார வல்லராகும். வடக்கே இருக்கிற நதிகளைப் பின்னால் இணை யுங்கள். முதலில் தென்னக நதிகளை இணை யுங்கள் என்றதை ஏற்றுக் கொண்டது வாஜ்பாய் அரசாங்கம்.

அதன்பிறகு சிறைச்சாலைக்கு வந்து கூட்டணி முடிந்தபோது, உங்களிடமிருந்து விலகிச் செல்கிறேன் என்று வாஜ்பாய் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு அவர் கண்ணீர்விட்டு அழுதார் என்று அவரது மகள் கூறினார். நினைவற்ற நிலையில் ஏழு ஆண்டுகளாக இருக்கிறார்கள் வாஜ்பாயும், ஜார்ஜ் பெர்னாண்டசும். தமிழ் இனம் என்றைக்கும் நன்றி காட்ட வேண்டிய தலைவர்கள் அவர்கள். கட்சி கடந்து தமிழ் ஈழத்துக்கு உதவிய தலை வர்கள். பிரியரஞ்சன்தாஸ் முன்சியும் நினைவில்லாமல் இருக்கிறார். நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அந்த வீட்டில் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வருகிறேன். ஒரு நாள் இரவு பதினொரு மணிக்கு விளக்கு அணையவில்லை. அப்போது அறையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தேன். மேஜைக்கு முன்பாக தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தார். அருகில் சென்றேன். கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடிக்கொண்டு இருந்தது. என்னப்பா என்று கேட்டேன். நீங்கள் சிறையில் இருந்து அவருக்கு எழுதிய கடிதம் என்று கடிதத்தை வாஜ்பாய் மகள் என்னிடம் நீட்டினார். இது சத்தியம்.

நான் சிறையைவிட்டு வெளியே வந்தேன். அண்ணன் கலைஞர் அவர்கள் சிறையில் என்னை இருமுறை சந்தித்தார். மூன்றாவது முறை நீதிமன்றத்துக்கு வந்து நீ ஜாமினில் வர வேண்டும். நாடாளு மன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். அதற்காக வந்தேன். நான் போட்டியிடவில்லை. தேர்தல் முடிந்து பதவிப் பிரமாணம் நடந்து முடிந்து, அசோகா ஹாலில் அனைவரும் தேநீர் அருந்தும்போது நானும் தேநீர் அருந்திக் கொண்டு இருந்தேன். என் முதுகில் யரோ தட்டுவது போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன் வாஜ்பாய். எழுந்து கும்பிட்டேன். என் மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? என்றார். ஐயா உங்கள் மீது நான் கோபப் படுவேனா? நான் வீட்டுக்கு வருகிறேன் என்றேன். சிறையில் வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். பிரதமர் செல்லக்கூடாது. புரோட்டக்கால் அனுமதிக்காது என்று சொன்னார்கள். அடுத்து ஒருவர் தோளைத் தட்டினார். திரும்பிப் பார்த்தேன். ஜனாதிபதியாக இருந்த முகர்ஜி. நதிகள் இணைப்புக்காக நீங்கள் கொடுத்த செயல்திட்ட வாசகங்களை அப்படியே எங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்த்து விட்டோம் என்றார். என்னைத் தவிர வேறு ஒரு தலைவர் சேர்த்திருந்தால் தமிழ்நாட்டில் அத்துணை பத்திரிகளை களிலும் செய்தியாகி இருக்கும்.

நான் சாதாரணமானவன். நதிகள் இணைப் புக்குச் செயல்பட்டது மட்டுமல்ல, சிறு நீரகங்கள் கெட்டு, புற்றுநோய் வந்து மரண வாசலில் இருந்த வி.பி.சிங்கை பல்லடம் மாநாட்டுக்கு அழைத்து வந்தேன். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 9, 10 தேதிகளில் நடைபெற்ற பல்லடம் மாநாட்டுக்கு அழைத்து வந்தேன். விமான நிலையத் திலிருந்து மோகன்குமார்தான் அழைத்து வந்தார். அப்பொழுது சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் சொன்னார், வைகோவினுடைய திட்டம் மட்டும் நிறைவேறி, நதிகள் இணைக்கப்பட்டால் இந்திய உலக வல்லரசு ஆகும். சுபிட்சம் அடையும் என்று. அடுத்து வேடசந்தூரில் மாநாடு 2005 பிப்ரவரி 5, 6 தேதிகளில். அதற்கு மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி வந்தார். அவர் சொன்னார், வைகோ போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு வராதது மிகப்பெரிய தவறு. அவர் மட்டும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கும் என்று. மாநாட்டுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

இப்பொழுது அந்த முயற்சியில் ஈடுபடு வோம். மாநிலங்கள் எல்லாம் பகையாக இருக்கிறதே? இந்த மாநிலங்களோடு நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்று பொருளாளர் லட்சியவாதி கணேச மூர்த்தி சொல்கிறாரே. அவைத்தலைவர் வழி மொழிகிறாரே. கேரளம் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? கர்நாடகம் காவிரியில் தண்ணீர் கொடுக்கிறதா? ஆந்திரா பாலாற்றில் தண்ணீர் கொடுக்கிறதா? இது நடைமுறைக்குக் சாத்தியமா? என்ற கேள்விகள் எழும். நான் அதற்குப் பதில் சொல்கிறேன். கேரளம் எங்களுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. கடலில் 2000 டி.எம்.சி.வீணாகிறது.

காவிரி மேகதாட்டு வில் அணைகட்டுகிறான் மேட்டூருக்குத் தண்ணீர் வராது. ஆந்திரம் பாலாற்றுக்குக் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகிறது அதனால் நமக்குப் பாதிப்பு. இவர்களோடு என்ன நட்பு? சரி. மத்திய அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதே? நீ அல்லவா வஞ்சகம் செய்கிறாய்? பஞ்சாயத்து செய்தாயா? ஒழுங்கு செய்தாயா? பிரச்சினைகளைத் தீர்த்தாயா? உன்னோடு ஒட்டி இருந்து இந்தியா என்ற ஒரு அமைப்பே கிடையாது என்று நீலம் சஞ்சீவிரெட்டி ஜனாதிபதி உரையில் சொன்னார். அக்பர் காலத்திலும், அசோகன் காலத்திலும் இந்தியா கிடையாது. பிரிட்டிஸ்காரனின் லத்திக் கம்பும், துப்பாக்கியும்தான் இந்தியாவை உருவாக்கியது என்று சொன்னவர் ஜனாதிபதி சஞ்சீவிரெட்டி. எட்டு வருடம் சிறையில் இருந்தவர். இந்த மத்திய அரசாங்கத்தில் நாங்கள் ஒட்டிக்கொண்டு இருப்பதால் கர்நாடக பிரச்சினையைத் தீர்த்து விட்டாயா? ஆந்திரத்தின் பிரச்சினையைத் தீர்த்து விட்டாயா? கேரளத்தின் பிரச்சினையைத் தீர்த்து விட்டாயா? எதற்காக உன்னோடு ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும். இந்தக் கேள்வி வருங்கால இளைஞர்களிடம் எழும்.

தனித்தனிநாடுகளாக ஐரோப்பா இருக்கிறது. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்கின்றன. அதுபோன்ற நிலைமை ஏற்படலாமே? கிருஷ்ணய்யர் அவர்களிடம் நான் கேட்டேன். இதே அண்ணா பிறந்தநாள் விழா 1996 இல் மாநில சுயாட்சி மாநாடக நடத்தியபோது, ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் சொன்னார் நான் மந்திரியாக இருக்கும்போது சொன்னேன், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுப்போம் தமிழ்நாட்டிலிருந்து உணவுப் பண்டங்கள் எல்லாம் வாங்கிக்கொள்வோம். நம்பூதிரி பாடு ஒத்துக்கொண்டார். மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இது கிருஷ் ணய்யர் என்னிடம் சொன்னது. அதேபோல பேசுவோம். நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம். உங்களுக்கு என்ன தேவையோ தருகிறோம். எங்களுக்கு என்ன தேவையோ தாருங்கள்.

கர்நாடகத்துக்காரன் நமக்குப் பகையாகத்தான் இருக்கிறான். ஆனால், சித்தராமையா இந்தியை ஒழிப்பேன் என்கிறாரே அதை நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். சபாஷ் சித்தராமையா. பேசிப் பார்ப்போம். உன்னோடு இருந்து நாங்கள் வஞ்சிக்கப்படுகிறபோது, உன்னோடு இல்லாமலேயே எதிர்காலத்தில் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும் என்று நினைத்தால் நேரடியாகவே ஐ.நா. மன்றத்துக்குப் போகலாமே? உலகநாடுகள் மன்றத்துக்குப் போகலாமே? என்ற எண்ணம் ஏற்படாதா?

ஆகவே தொலைக்காட்சிக்காரர்களுக்கு நான் கடைசியாகச் சொல்லப்போவதை இப்பொழுது சொல்லிவிடுகிறேன். மாநில சுயாட்சியை நசுக்க நினைக்கிறது மத்திய அரசு. நான் அண்ணா அவர்கள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 12 ஆம் தேதி ஹோம்ரூல் பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் சொல்கிறார், மாமேதை டாக்டர் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை யாத்துத் தரும்போது என்ன சொன்னாரோ, அதைச் சொல்கிறார். அதிகாரங்களை எல்லாம் மத்தியில் குவித்துவிட்டீர்கள். மாகாண அதிகாரங்களை எல்லாம் எடுத்துக் கொள்கிறீர்கள். எஞ்சிய அதிகாரங்களை எல்லாம் மத்தியில் கொடுத்துவிட்டீர்கள்.

எங்களுக்கு அதிகாரங்கள் இல்லாமல், நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று மாநிலங்கள் உரிமைக்குரல் எழுப்பத்தான் செய்யும். அவர்கள் உரிமைகளைப் பெறுகிற ஒரு கூட்டமைப்பு. ஒரு சமஷ்டி அமைப்பு ஏற்பட வேண்டும். அம்பேத்கர் எழுதியதை, ஹோம்ரூலில் அண்ணா மடிவதற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிக் காட்டுகிறார். அதைப்போல மாநில சுயாட்சி என்பது பிரிவினை அல்ல. நான் மசோதா கொண்டுவந்தவன்.

மாநில சுயாட்சிக்கு மாநில அதிகாரங்கள், மத்திய அதிகாரங்கள், பொதுப்பட்டியல் மூன்றையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் 67 வருடத்தில் ஒரு மசோதா வந்தது கிடையாது. ஒரே ஒரு மசோதாதான் வந்தது. அது உங்கள் முன்னால் இருக்கிற வைகோ கொண்டுவந்த மசோதா. 2001 ஆம் வருடம் நவம்பர் மாதம் விவாதம் நடந்தது.

அந்த விவாதத்தில் இந்தியா என்பது ஒரு நாடால்ல என்று சொல்லியிருக்கிறேன். எஞ்சிய அதிகாரங்கள் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதைப் போல, ஆஸ்திரேலியா அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதைப் போல மாகாணங் களுக்குத்தான் இருக்க வேண்டும். மத்தியில் இருக்கக் கூடாது. இந்த மசோதா ஒருமுறைதான் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. வைகோ கொண்டுவந்த தனிநபர் மசோதா. அந்த மசோதாவை பல தலைவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். ஆக நான் எம்.பி.யாக இருந்தபோது மாநில உரிமைகளுக்கு அண்ணாவின் கனவை நனவாக்கச் சொல்லிவிட்டு, இன்னொரு மசோதா தாக்கல் செய்தேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சிமொழியாக வேண்டும். எட்டாவது அட்டவணையில் இருக்கக்கூடிய அனைத்து மொழிகளும் ஆட்சிமொழிகளாக வேண்டும். இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. எந்த மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்றால், எங்கள் இன்பத் தமிழ்மொழி என்றார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். அரசியல் நிர்ணய சபையிலே. அதைப்போல மாநிலங்களுக்கு அதிகாரங்கள்.

நெருக்கடி நிலை காலத்தில் நான் பாளை சிறையில், சேலம் சிறையில் பலரும் சிறையில் எல்லோரும் சிறையில். தலைவர் கள் எல்லாம் சிறையில். சர்வாதிகாரக் கொடுங்கோல் ஆட்சி நடந்தபோது, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போன அயோக்கியத்தனத்தை இந்த அரசு செய்தது. அதன் விளைவாக ‘நீட்’டில் தலையை நீட்டுகிறான் வர்ணாசிரமத்துக் காரன். கார்ப்ரேட் கம்பெனிகளுடைய ஏஜெண்ட் வேலை பார்க்கிற அரசாங்கம்.

மாநில சுயாட்சிக்கு வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களின் தலைவர்களை நான் திரட்டுவேன். ஏன் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலம் பெறாமலே குதிரை பேரம் நடத்தி வடகிழக்கு மாகாணங்களில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. கொதித்துப்போய் இருக்கிறார்கள். நான் பஞ்சாப் சென்று அகாலிதளத் தலைவரைப் பார்ப்பேன், பிரகாஷ்சிங் பாதலை அழைப்பேன். நான் ஸ்ரீநகர் சென்று என் நண்பரை அழைப்பேன். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்களை அழைப்பேன். நன்கு யோசனை செய்து தேவைப்பட்டால் சித்தராமையாவையும் கூப்பிடுவேன்.

காவிரிப் பிரச்சினையை விட்டுக்கொடுப்பது இல்லை. நிச்சயமாக என் நண்பன் தோழர் காம்ரேடு பினராயி விஜயனை அழைப்பேன். சுதாகர் ரெட்டியை அழைப்பேன். பட்நாயக்கை அழைப்பேன். அந்த மாநாடு எப்பொழுது நடக்கப் போகிறது. திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட நவம்பர் 20 ஆம் நாள். நூறாண்டு முடிந்துவிட்டது. நூற்று ஓராவது ஆண்டு தொடங்கும்போது சென்னையில் காமராஜர் அரங்கத்தில் காலை 9 மணி முதல் அந்த மாநாடு நடக்கும். இதை நான் கடைசியாக பிரம்மாஸ்திரமாகப் போடலாம் என்று பார்த்தேன். தொலைக்காட்சிக்காரர்கள் நிறுத்தி விடுவார்களே.

மாநாடு நடப்பது எதற்குத் தெரியுமா? ஒவ்வொரு அரசியல் கட்சியும் வலிமையைக் கூர்படுத்துவதற்கும், கொள்கையைத் தீர்மானிப்பதற்கும், எந்த திசையில் போக வேண்டும் என்று கட்சியினுடைய தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் விளக்குவதற்கும், பிரகடனம் செய்வதற்கும் நமது வலிமை கூடி இருக்கிறது என்பதை நிருபிப்பதற்கும் உலகத்தில் எல்லா கட்சிகளும் மாநாடு நடத்துகின்றன. 250..... அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மாநாடு நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடு நடத்தி, நிறைவு மாநாடு நடத்து கிறது. அதற்குப் பிறகு தோன்றிய ஜனநாயகக் கட்சி நடத்துகிறது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி ஆண்டுதோறும் மாநாடு நடத்துகிறது. கம்யூனிசம் அகிலம் அப்பொழுதே மாநாடு நடத்தியது. போஸ்விக்குகள் 17க்கு முன்பு மாநாடு நடத்தினார்கள். அதற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டுதோறும் மாநாடு நடத்துகிறது. சீனாவில் ஆண்டு தோறும் மாநாடு நடத்துகிறது. வியட்நாமில் மாநாடு நடக்கிறது. பிரான்சில் நடக்கிறது. ஜனநாயக நாடுகள் அனைத்திலும் ஆண்டு தோறும் மாநாடுகள் நடக்கின்றன.

இந்தியாவில் ஆலக் ஆக்டேவியன் கியூம் என்ற வெள்ளைக்காரன் தொடங்கிய காங்கிரஸ் கட்சி பல மாநாடுகள் நடத்தி இருக்கிறது. பிரச்சித்தமான மாநாடுகள். சூரத் மாநாடு கலகத்துக்குப் பெயர் போனது. நாற்காலிகள் பறந்தன. சூரத் மாநாட்டில் இருந்து இன்றைக்குள்ள சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் ஐம்பது பேர் சேர்ந்தால் 25 பேர் சட்டையைக் கிழித்துக்கொண்டுதான் வெளியே வருவார்கள். நான் சொல்ல வில்லை சரித்திரம் சொல்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தைக் கொன்று நாசமாக்கி நேதாஜியை வெளியேற்றிய அரிபுரா மாநாடு. அகாலிதளம் மாநாடு நடத்துகிறது. சேக் அப்துல்லா தொடங்கிய கட்சியின் பெயரே தேசிய மாநாட்டுக் கட்சி. காங்கிரஸ் என்றாலே மாநாடு என்றுதான் அர்த்தம். அதைப்போல திராவிட இயக்கம் மாநாடு நடத்துகிறது. அண்ணா மாநாடு நடத்தினார். தி.மு.க. மாநாடுகள் நடத்தியது. அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழாவை ஆண்டு தோறும் நாங்கள் மாநாடாக நடத்துகிறோம்.

நான் மதிக்கின்ற, நல்ல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிற சிறப்பான அந்தத் தமிழ்ப் பத்திரிகையில் ஒரு கார்டூன் வந்திருக்கிறது. நம்மவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நம் தலைவர் படத்தையே போட மாட்டார்கள். கறுப்புத் துண்டை மூன்று இடத்தில் போட்டு அல்லவா கார்டூன் போட்டு இருக்கிறார்கள்.

அதில் சொல்கிறார்கள், இந்தியாவில் மூன்றாவது அணியை அமைப்பேன். அதற்கு அவர் பதில் ஏன் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சேர்த்தே நீங்கள் ஒரு கூட்டணி அமைச்சிடலாமே? கிண்டல் கேலி. சபாஷ். நான் மிகவும் ரசித்தேன். ஆனால் கார்ட்டூன் போட்டவருக்குச் சொல்கிறேன், லஷ்மண் மாதிரி கார்டூன் போட வேண்டும். தினமணியில் முன்பு போட்ட மதி போன்று கார்டூன் போட வேண்டும். விஷய ஞானம் இருக்க வேண்டும். சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். வரலாறு தெரிந்திருக்க வேண்டும். கிண்டல் செய்வதற்காக, நெஞ்சில் இருக்கின்ற நஞ்சைக் கக்கு வதற்காக என் மீதுள்ள வெறுப்பைக் காட்டு வதற்காக கார்டூன் போடக்கூடாது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குக் கயிறை அறுத்தது ஜெத் மலானியின் வாதம். வைகோவின் முயற்சி. கட்சித் தொண்டன் கொடுத்த 75 இலட்ச ரூபாய் நாங்கள் செலவு செய்தோம். நாங்கள் நன்றியை எதிர்பார்த்துச் செய்யவில்லை. தமிழன் யாராக இருந்தாலும், எங்கே துன்பப் பட்டாலும் அவன் கண்ணீரைத் துடைப் பதற்கு பாடுபடுகிற இயக்கம். மூன்று பேர் தூக்கு உறுதிப்பட்டபோது, நான் படியில் தடுமாறி கலங்கிக் கண்ணீர் விட்டதை கணேசமூர்த்தி அறிவார். யார் அறிவார்கள்? ஜெத்மலானி வரமுடியாது என்றபோது வந்து தீர வேண்டும் தமிழனுக்காக என்று அழைத்து வந்தவன் நான். தடை வந்தவுடன் பத்திரிகையாளர்கள் நன்றி சொன்னபோது, Don’t thank myself, thank Vaiko என்று சொன்னவர் ஜெத்மலானி. அவருடைய பிறந்தநாள் வருடந்தோறும் செப்டம்பர் 14 அன்று வருகிறது. 15 மாநாடு என்பதால் நான் போகமுடியாது. இது 94 ஆவது பிறந்தநாள். அதனால் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்றேன். பொன்னாடை போர்த்தினேன். அந்த அறையில் ஏலக்காய் மணக்கட்டும் என்று ஏலக்காய் மாலை கொண்டு சென்றேன். காங்கிரஸ், பி.ஜே.பி.யை இந்தியாவில் ஒழிக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் வெளிநாட்டு சுவிஸ் பணத்தை நாங்கள் கொண்டுவர மாட்டோம் என்று சொன்னார்கள். இவர்கள் அதைவிட திருடர்கள். இவர்கள் வெளிநாட்டில் இருக் கின்ற எந்தப் பணத்தையும் கொண்டு வர மாட்டார்கள். 645 மில்லியன் டாலர் கொடுத்து ஜெர்மனிக்காரன் அந்த ரகசியத்தை வாங்கினான். இந்தியா கேட்டால் கொடுப்போம் என்று சொன் னார்கள். மோடி அரசாங்கம் வந்த வுடன் கேட்டோம். இவர்கள் ஜெர்மனியிடம் போகவில்லை. நான் ஜெர்மனியில் போய் கேட்டேன். உங்கள் அரசாங் கத்தைக் கேட்கச் சொல்லுங்கள், நாங்கள் பட்டியலைக் கொடுக்கிறோம் என்றார்கள். கொதித்துப்போய் இருக்கிறார் ராம் ஜெத்மலானி. இந்த இரண்டும் இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும். நீ எனக்கு உதவ வேண்டும் என்றார். நான் என்ன சொன்னேன் என்பதை அந்தச் செய்தியாளரிடம் சொன்னேன். எனக்கு ஒரு எம்.எல்.ஏ., எம்.பி.கூட கிடையாது. நான் உங்களுக்கு என்ன உதவிட முடியும்? என்று கூறினேன். இதை நான் செய்தியாளர்களிடத்தில் சொன்னேன். அனைத்துத் தொலைக்காட்சியும் இருந்தது. அதையெல்லாம் மறைத்துவிட்டார்கள். அதற்கு ஜெத்மலானி என்ன சொன்னார் தெரியுமா? நீ என்னுடன் இருந்தாலே இந்தியாவில் பல தலைவர்கள் என்னுடன் வருவார்கள் என்றார். இதை நான் செய்தி யாளர்களிடம் சொல்லவில்லை.

ஆனால், தமிழ்ப் பத்திரிகை இந்தியாவிலே மூன்றாவது அணி அமைக்கப்போகிறாராம்! என்று கிண்டல் செய்துள்ளது. நான் இப்பொழுது சொல்லவா, இந்தியாவில் உள்ள அத்துணை தலைவர்களையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து அண்ணா பிறந்தநாள் விழாவை வைகோதான் நடத்த முடிந்ததே தவிர, தி.மு.க.வோ, அண்ணா தி.மு.க.வோ அல்ல. தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தலைவரும் அல்ல. இந்த வைகோ அழைத்தால் இந்தியாவில் உள்ள அத்துணை மாநிலத் தலைவர்களும் வருவார்கள். கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பஞ்சாப் முதல்வர் பாதல், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஈரோட்டில் மாநாடு. தலைவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்கள். பேருந்து நிலையத்தில் இறங்குவது போன்று. கணேசமூர்த்தி நடத்தினார்.

அந்த மாநாட்டில்தான் அத்வானி சொன்னார், இரண்டு முறை கேபினெட் மந்திரியாகும்படி நானும், வாஜ்பாய் அவர்களும் சொன்னோம் இவர் முடியாது என்று கூறிவிட்டார். அரசியலில் ஒரு வித்தியாசமான அபூர்வமான மனிதர் வைகோ என்று அந்த மாநாட்டில்தான் சொன்னார். என்னிடம் பெரிய வாக்கு வங்கி இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஆனால் அத்தனைத் தலைவர்களையும் அழைத்து வந்து அண்ணா பெரியாருக்கு விழா நடத்துவதற்கு எங்களைத் தவிர தமிழ் நாட்டில் யாரும் கிடையாது.

ஒரு வாரப்ப பத்திரிகை இப்படித்தான் கார்டூன் போட்டது. கோட்டைக்குச் செல்கிறார்களாம் என்று கழுதை மேல் உட்கார வைத்து அறிஞர் அண்ணாவை, ராஜாஜியை, காயிதே மில்லத்தை, ஆதித் தனாரை, மூக்கையாத்தேவரை, சோசலிஸ்ட் கட்சித் தலைவரை, மார்க்சிஸ்ட் கட்சி ராமமூர்த்தியைப் போட்டார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது? கழுதை அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்குச் சின்னம். கழுதையைப் போல மனிதனுக்கு விசுவாசமாக வேலை செய்கிற மிருகம் எதுவும் இல்லை. என்னால் இத்தனை தலைவர்களையும் அழைக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவன்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர் தலைவர் களை அழைக்க வேண்டும் என்று வைகோ நினைத்தால், அனைவரையும் அழைக்க முடியும். பினாங்கு முதலமைச்சருக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா இல்லை. மோடியிடம் சென்றேன். எங்கள் மண்ணில் பிறந்த பூர்வீகக் குடிமகன் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி எங்கள் நாட்டுக்கு வரக்கூடாது. கொலை காரன் ராஜபக்சே பதவிப் பிரமாணத்துக்கு வருவானா? என்றேன். Vaiko i will do it என்றார். நீங்கள் என் மீது கோபமாக இருப்பீர்கள் என்று நினைத்தேன் என்றேன். your on emotional man ஈழத்தமிழர் விசயத்தில் மிக வேகமாக இருப்பீர்கள். நான் உடனே செய்கிறேன். என்று தாளை எடுத்து எழுதி, விசா கொடுத்தார். பேராசிரியர் இராமசாமி அவர்கள் வந்தார்கள்.

என்னை கோலாலாம்பூருக்குள்ளும் விட மாட்டார்கள். எந்த நாட்டுக்குள்ளும் விட மாட்டார்கள். என்னை விடுதலைப் புலி என்று முத்திரை குத்திவிட்டார்கள். நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் பிறந்த தமிழ்நாட்டில் நான் எங்கும் போகலாம் அல்லவா? உலகத் தலைவர் களை எல்லாம் அழைக்க முடியும். காலம் இப்படியே இருக்காது.

நதிகள் இணைப்பைச் சொன்னேன், மாநில சுயாட்சியைச் சொன்னேன். முக்கிய மாகச் சொல்ல வேண்டியது மதுவை ஒழிப்பது. என் தாய் மாரியம்மாள் மதுவை ஒழிப்பதற்காக 100 ஆவது வயதில் போராடினார். அவர் உண்ணாவிரதம் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று அப்பல்லோ மெயின் மருத்துவ மனையில் எச்சரிக்கை செய்தார்கள். எங்கள் பிள்ளை பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டானே? சிங்களக் கொடியோர் அவனது மெய்க்காப்பாளர்களான விடுதலைப் புலிகள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றதற்குப் பிறகு ஐந்து தோட்டாக்கள் அவன் மார்பிலே பாய்ந்ததே! ஐந்து மெய்க்காப்பார்களை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு அவன் கண்களில் அச்சம் இருந்ததா? அவன் கண்களில் பயம் இருந்ததா? அவன் கண்களில் கலக்கம் இருந்ததா? அவன்தான் பிரபாகரன் பிள்ளை. அந்தக் கண்கள் ஆயிரம் கதை சொல்லும். இலட்சம் வீரர்களை உருவாக்கும் பாலச்சந்திரனின் கண்கள்.

பாலச்சந்திரனைச் சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் ஊர்ப் பெண்களைத் திரட்டி எங்கள் அம்மா உண்ணாவிரதம் இருந்தார்கள். என்னையும் கேட்கவில்லை, என் தம்பி இரவிச்சந்திரனையும் கேட்கவில்லை. நான் உண்ணாவிரதத்தில் தண்ணீர் குடிக்க மாட்டேன். ஏன் தெரியுமா? இவர் குளுகோஸ் உள்ளேபோட்டுக் குடிக்கிறார் என்று எவனாவது வேண்டாதவன் எழுதிவிடுவான் என்பதால். என் தாயாரும் அதனால் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பச்சைத் தண்ணீர்கூட குடிக்கவில்லை. உடல்நலன் கெட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு நானும், என் துணைவியாரும் தூக்கிக்கொண்டு சென்றோம். இறந்துவிடுவார்கள் என்று நினைத்தோம். மருத்துவம் செய்து காப்பாற்றினார்கள். அவர்களுக்கு சர்க்கரை, இரத்தக்கொதிப்பு இருக்கிறது. உண்ணா விரதம் இருக்கக்கூடாது என்றார்கள்.

சசிபெருமாள் கொல்லப்பட்டார் என்று பந்த்க்கு அறிவித்தவுடன் எனக்கும், என் தம்பிக்கும் தெரியாமல் என் அம்மா ஆயிரம் பெண்களைத் திரட்டி உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். நான் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களோடு செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு இரவு செல்கிறேன். இரவு கடையை மூடி விட்டார்கள். மறுநாள் காலையில் கடையைத் திறக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். காவல்துறையினர் 300 பேரை வைத்துக் கொண்டு கடையைத் திறந்தார்கள்.

என் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். சொந்த ஊரில் கடையை மூட முடியாதவர், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை மூடச் சொல்கிறார் என்று கேட்பார்களே! இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியது. இருப்பது ஓர் உயிர். என்றைக்காவது போகத்தானேப் போகிறது. நான் என்ன வன்முறையாளனா? இரண்டு மணிக்கு ஏம்பா கலகம் வரும் என்கிறார்களே என்றார்கள் எனது தாய். கலகம் வந்தால் என்ன? நீங்கள் தைரியமாக இருங்கள் என்றேன். இல்லப்பா ஏதாவது ஆயிருமோ? என்றார்கள். ரவி வீட்டில் இருக்கட்டும். நான் செல்கிறேன் என்று நான் சென்றால், எனக்கு முன்பாகவே ரவி அங்கு நின்றிருந் தான். காயம்பட்ட விடுதலைப் புலிகளை வீட்டில் வைத்திருந்ததற்காக அவன் விலங்கு போட்டு ஒரு வருடமாக சிறையில் இருந்தவன். உன் தம்பி உன்னைத் தூக்கி எறிந்து விட்டு, உச்சிக்குச் சென்று விட்டான் என்றார் கோ.சி.மணி. அவன் தான் அடிவாங்கினான். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் அவன் உடம்பில்தான் விழுந்தது. என்னை சுடுவதற்கே முயற்சித் தார்கள். சுடு என்று கூறினேன்.

எங்களை அடித்தார்கள், கடையை நொறுக்கி, கடையில் உள்ள பாட்டீல் களை எல்லாம் உடைத்து தீ வைத்தார்கள். இந்து வில் முதல் பக்கத்தில் படம் வந்திருந்தது. தாய்மார்களே மதுக் கடைகளை உடைத்து நொறுக்குங்கள். குடிப்பழக்கம் இல்லாத மாணவர்களே டாஸ்மாக் கடைகளை உடைத்து நொறுக்குங்கள் என்றேன். வன் முறையைத் தூண்டுகிறான் என்று என்னை வசைபாடினார்கள். என் தாயார் அதிலிருந்து 60 ஆவது நாள் இறந்துபோனார். நான் பக்கத்தில் இல்லை. பஞ்சாபில் பாதலைப் பார்க்கச் சென்றிருந்தேன். என் தம்பியும், என் தம்பியின் துணைவியாரும், என் துணைவியாரும், என்னுடைய அக்காள் களும்தான் உடன் இருந்தார்கள். கடைசி நேரத்தில் என்னைப் பார்ப்பதற்கு அவர்கள் ஆசைப்பட்டிருப்பார்கள்.

என் தாய் மாரியம்மாள் நூறாவது வயதில் இறந்துபோனார். அவர் மீது ஆகஸ்ட் 1 ஆம் தேதி கலவரம் செய்ததாக தமிழ் நாடு காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந் தார்கள். ஏ1 இரவிச்சந்திரன், ஏ2 ஜோதிராஜ், ஏ3 மாரியம்மாள். எனக்கு என்ன பெருமை தெரியுமா? நாகம்மை, கண்ணம்மை கள்ளுக்கடை மறியலில் கைது செய்யப் பட்டார்கள். ஆனால் நூறாவது வயதில் இந்தியாவில் எந்த ஒரு மூதாட்டி மீதும் வழக்குப் போடப்பட்டதாக நான் கேள்விப் பட்டது இல்லை. அப்படிப்பட்ட வீரத்தாயின் மணிவயிற்றில் பிறந்தவன் என்ற தகுதியோடு உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில்தானே வழக்குப் பதிவு செய்தீர்கள். மூன்றாது நாள் காவல் துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக என் மீது கொலை முயற்சி வழக்கு. ஏ1 வைகோ, ஏ2 இரவிச் சந்திரன். எடப்பாடி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள் கிறேன் நீங்கள் சார்ஷீட் போடுங்கள். எனக்கு நானே வாதாடிக்கொள்கிறேன்.

என் இனிய சகோதரர்களே, தமிழகத்தின் நிலைமை என்ன தெரியுமா? இலட்சக்கணக் கான தமிழர்களைக் கொன்று குவித்தானே கொடியவன். எங்கள் இளம் பெண்கள் நாசமாக்கப்பட்டார்களே, இசைப்பிரியா நாசமாக்கப்பட்டாளே! கர்ப்பிணித் தாய்மார் களின் வயிற்றைக் கிழித்து அதனுடைய சிசுக்களை எடுத்து மண்ணில் போட்டான். இதை ஹிட்லர் செய்யவில்லை, முசோலினி செய்யவில்லை. இடிஅமீன் செய்யவில்லை. கொலைகார ராஜபக்சே கூட்டம் செய்தது.

இதற்கு ஒரே தீர்வு பொதுவாக்கெடுப்புதான். 2011 ஜூன் 1 ஆம் தேதி பிரஸ்ஸல்சில் நான் பேசினேன். அந்த மாநாட்டில் எனக்கு மட்டும் அதிக நேரம் கொடுத்தார்கள். இவ்வளவு செய்திகளை உங்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? என்று வீரபாண்டியன் என்னிடம் கேட்டார். அப்போது எங்காவது ஒரு சிங்களப் பெண்ணுக்கு விடுதலைப் புலிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என்று நிரூபித்தால் நான் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிடுகிறேன். இதை ஒரு சவலாகச் சொல்கிறேன்.

நான் கர்ப்பம் அடைந்துவிட்டேன். என் கணவன் தளபதிக்குத் தெரியாமல் வந்து என்னுடன் 10 நாட்கள் தங்கி இருந்து விட்டுச் சென்றார். இப்பொழுது உங்கள் கைதியாக இருக்கிறார். அவரை விடுவித்து அனுப்பா விட்டால் என்னைச் சந்தேகப்படுவார்கள். நான் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வழியில்லை என்று சொன்னாள் ஒரு சிங்களத்துப் பெண். உடனே பிரபாகரன் அவளது கணவனை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட மனிதாபிமானி பிரபாகரன்.

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து செய்தி வந்திருக்கிறது. மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் ஜோர்டன் இளவரசர் சேக் அல்ராத் உசேன் சொல்லி இருக்கிறார், இலங்கையில் இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் செய்தது. அதற்கு விசாரணை நடத்த வில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இதுபற்றி விசாரணை நடக்கலாம். மனித உரிமைகள் ஆணையத்தின் 36 ஆவது அமர்வு தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. 11 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். யார்? மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் அல்ராத் உசேன். அது யுத்தக் குற்றமல்ல, இனப்படுகொலை! இந்தளவுக்காவது வந்துவிட்டார்களே. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. அடுத்து சொல்வதுதான் டாப். என்னுடைய கோரிக்கையில் 25 சதவிகிதம் நிறைவேறிவிட்டதே. அல்ராத் உசேன் சொல்கிறார், தமிழர்கள் தாயகத் திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். உலகத்தின் அனைத்து நாடு களிலும் தமிழர்கள் இருக்கிறோம். அத்தனை நாடுகளை எதிர்த்து யூதர்களே வெற்றி பெற்றார்களே! அதைவிட உலகம் முழுவதும் இருக்கிறோம்.

இந்த செய்தியைக் கொடுத்துவிட்டு, அதே கூட்டத்தில். எடப்பாடி அரசாங்கத்திற்குச் சொல்கிறேன். மானம் கப்பலேறிவிட்டது. வைகோ சொன்னால் நியாயம் இருக்கும் என்று யோசிக்க வேண்டுமல்லவா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரம் கொடுப்பதாக வளர்மதி என்ற பெண் மீது வழக்குத் தொடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத் தீர்கள். நீதிமன்றம் செவிட்டில் அடித்து விடுதலை செய்துவிட்டது. திருமுருகன் காந்தி மதிநுட்பம் உள்ள இளைஞன். பதவி ஆசை இல்லாத இளைஞன். அவரைப் போன்ற இளைஞர்கள் வளர வேண்டும் என்று விரும்புகின்றவன் நான். ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக் கிழமை கடற்கரையில் கண்ணீர் சிந்துவதற்கு நினைவேந்தல் நடத்துவார். நானும் கலந்து கொள்வேன். மறைந்து போன வீரத்தியாகி ஓவியர் வீரசந்தனமும் அதில் கலந்து கொள்வார். ஒருமுறை பஸ்வானை அழைத்துக் கொண்டு வந்து உட்கார வைத்து, சுதந்திரத் தமிழ் ஈழம் என்று பேச வைத்தேன். இந்த வருடம் நான் செல்லவில்லை. புழல் சிறையில் இருந்தேன். திருமுருகன் காந்தி மீது ஏன் குண்டர் சட்டம் பதிவு செய்தீர்கள். அந்தப்பிள்ளைக்கு கல் எடுத்து எறியக்கூட தெரியாதே. அவன் வன்முறையாளனா? எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்திற்குச் சொல் கிறேன், உங்கள் டி.ஜி.பி. குற்றவாளி யாக நிறுத்தப்பட வேண்டியவர். அவர் சொல்கின்ற யோசனையால் நீங்கள் ஜனநாயக உரிமைகளை எல்லாம் கழுத்தை முறித்துவிடுவீர்களா? பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யச் சொன்னேன். செய்யவில்லை. ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இரண்டு பேர் பேசிவிட்டார்கள். கடந்த ஆண்டு இங்கு வந்து பேசிய திருமுருகன் காந்தியை தமிழ்நாடு அரசாங்கம் குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது. மனித உரிமைகள் நசுக்கப்பட்டுவிட்டன என்று மனித உரிமைக் கவுன்சிலில் முந்தைய நாள் பேசிவிட்டார்கள். இனியும் பேசுவார்கள்.

திருமுருகன் காந்தி பிரம்மன் தீர்ப்பாயத்தில் பேசியதை வாங்கி நான்தான் பத்திரிகை களுக்கு அறிக்கையாகக் கொடுத்தேன். பத்திரிகைகள் வெளியிட்டன. சென்ற வருடம் ஏழுமுறை கவுன்சிலில் பேசினார். அங்கு ஒரு நாட்டின் பிரதிநிதிக்கு இரண்டு நிமிடங்கள்தான் நேரம். ஒரு அமைப்பின் பிரதிநிதிக்கு கடந்த வருடம் இரண்டு நிமிடம். இந்த வருடம் ஒன்றரை நிமிடம்தான். நான் நான்கு நிமிடம், ஏழு நிமிடம் கொடுத்ததையெல்லாம் சொல்கிறீர்களே, மனித உரிமைகள் ஆணையத்திற்கு நானே சென்றாலும் எனக்கு ஒன்றரை நிமிடம்தான். அதுதான் அந்த அமைப்பின் விதிமுறை.

நீங்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்படுகிறீர்கள். மத்திய அரசு என்ன செய்கிறது? கௌரியைக் கொன்றார்கள். கல்புர்கியைக் கொன்றது. கோவிந்த் பன்சாரியைக் கொன்றார்கள். நரேந்திர தபோல்கரைக் கொன்றார்கள். அவர்கள் இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் மதவெறியைக் கொண்டுவந்து திணித்து, எல்லாவற்றையும் நசுக்கி, ஒரே மொழி; ஒரே கலாச்சாரம் என்ற ஒரு நிலைமைக்கு வருவது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இங்கே நீங்கள் அந்த விஷப் பரிட்சையில் இறங்கிப் பார்க்கலாம். அது நடக்காது.

இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். கே.வி.கே.சாமி சிந்திய இரத்தத் துளிகள், தாலமுத்து நடராஜனின் மரண தியாகம், மரத்திலே உயிரற்று ஊசலாடிய உடையார்பாளையம் வேலாயுதத்தின் தியாகம், வண்ணைப் பாண்டியன் நெல்லிக் குப்பம் மஜீத் செய்த தியாகம், இலட்சக் கணக்கான தமிழர்கள் செய்த தியாகம், சிவலிங்கம், சின்னச்சாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சத்தி மங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி உயிர்த் தியாகம் செய்தார்களே!

இந்த இயக்கத்தை உருவாக்கத் தணலுக்குத் தங்களைத் தந்தார்களே நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜகாங்கீர், உப்பிலி பாளையம் வீரப்பன், கோவை காமராஜபுரம் பாலன் ஆகியோரின் தணலில் பிறந்த கட்சி நம் கட்சி. தியாக நெருப்பில் பிறந்த கட்சி. ஆகவே அண்ணாவின் கொள்கை, அண்ணாவின் இலட்சியம் என்று சொல்கிறபோது, ஊழல் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

எல்லாம் சொல்கிறார், கூட்டணி பாதை என்னவென்றே தெரியவில்லையே? என்று நினைக்கிறீர்கள். அண்ணா சொல்வது போன்று ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பேன். திராவிட இயக்கத்தைக் காக்க வேண்டும். வர்ணாசிரம வைதீகக் கூட்டத்தின் படையெடுப்பைத் தடுத்துத் தகர்த்துத் தூள் தூளாக்க வேண்டும். அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் அங்கே மலர வேண்டும். மலரும், உறுதியாக மலரும். சுதந்திரத் தமிழ் ஈழ தேசக் கொடி பறக்கும்.

1984 இல் 678 பேருக்கு தி.மு.க.வில் கடிதம் எழுதினேன். எல்லா நாட்டுக் கொடிகளும் பறக்கின்றன. தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை; இங்கே கொடி இல்லை என்று நான் கடிதம் எழுதினேன். தி.மு.க.வினர் நிறையப் பேர் அந்தக் கடிதத்தை இன்னும் வைத்திருக்கிறார்கள்.

யாருக்கும் தெரியாத ஒரு செய்தியைச் சொல்கிறேன். மல்லை சத்யா பேசும்போது முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் அவர்கள் என்று சொன்னார். அதற்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைப்பதற்கு துணைக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவை அழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் என்னிடம் சொன்னார். சங்கர் தயாள் சர்மா அவர்களுக்கு நான் செல்லப் பிள்ளை. அவரிடம் செய்தியைக் கூறினேன். கேட்ட தேதியிலேயே வருகிறேன் என்று கூறினார். கலைஞரைப் பற்றி நீங்கள் நல்லவிதமாகப் பேச வேண்டும் என்றேன். நான் கலைஞரைப் பற்றியும், அவர் எழுதிய குறலோவியத்திலிருந்து, ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் கொண்டு சென்று துணை குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா அவர்களிடம் கொடுத்தேன்.

நாளைக்கு துணைக் குடியரசுத் தலைவர் செல்லும் தனி விமானத்தில் நான் செல்கிறேன். நீயும் உடன் வந்துவிடு என்று கூறிவிட்டார். புறப்படுவதற்கு முதல்நாள் காலையில் சென்று கலைஞரைப் பாராட்டு வதற்கு பேச்சு எழுதிவிட்டீர்களா? என்று கேட்டேன். பேச்சு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் உங்கள் கைக்கு பேச்சு வந்துவிடும் என்று கூறிவிட்டு, அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். பேச்சைக் கொடுத்தார்கள். மதங் களைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்கள். கலைஞரைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. பேச்சைத் தயார் செய்தவனுக்கு தி.மு.க. மீதும், நம் மீதும் அவ்வளவு வெறுப்பு இருந்திருக்கிறது.

சங்கர்தயாள் சர்மா அவர்களது இல்லத்துக்கு உடனே சென்று, நான் இருபது புத்தகங்கள் கொடுத்தேன் முதலமைச்சர் கலைஞரைப் பற்றி ஒருவரி இல்லை. நாளை நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்றேன். கோபால்சாமி கவலைப்படாதீர்கள். நீங்களே ஒரு பேச்சை தயார் செய்து கொண்டு வாருங்கள். நான் பேசிவிடுகிறேன் என்றார். நான் பட்டிக்காட்டு ஆங்கிலம். ராஜீவ் காந்தி உன்னுடைய ஆங்கிலம் புரிய வில்லை என்றார். ஐயா நீங்கள் டூன்ஸ் பள்ளியில் படித்தவர். நான் பட்டிக்காட்டில் படித்தவன். என்னுடைய ஆங்கிலம் உங்களுக்குப் புரியாது என்றேன். அவர் அங்கு பெயிலானது எனக்கு மட்டும்தான் தெரியும்.

மதிய உணவு அருந்தினால் தூக்கம் வந்து விடும் என்பதால், நாடாளுமன்றத்தில் இருந்த நாட்களில் ஒரு நாள்கூட நான் மதிய உணவு அருந்தியது இல்லை. இரண்டு ரொட்டி, தேநீர் மட்டும்தான். அதிகாலை இரண்டு மணி வரை பேச்சைத் தயார் செய்தேன். கலைஞரைப் பற்றி தயார் செய்த பேச்சை எடுத்துக் கொண்டு காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் செல்கிறேன். விமானத்தில் ஏறியாகி விட்டது. விமானத்திற்கு டைப் ரைட்டிங் மெசினும், கம்யூட்டரும் வந்து விட்டது. பேச்சு தயாராகிக் கொண்டு இருக்கிறது. விமானம் திருச்சிக்கு வந்து விட்டது. திருச்சியிலிருந்து தஞ்சா வூருக்கு ஹெலிகாப்டர். தஞ்சாவூரில் இறங்கிய வுடன், இந்தப் பேச்சை பிரதிகள் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.

அன்றைக்கு சங்கர்தயாள் சர்மா அவர்கள் கலைஞரைப் பாராட்டிப் பேசிய பேச்சின் முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரைக்கும் இருந்தது நான் எழுதியது. அதனால் மொழிபெயர்ப்பது எனக்கு மிகவும் எளிதாகிவிட்டது. நான்தான் அதில் ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்’ என்று எழுதினேன். தாய்க்கு பெயர் பிள்ளை வைத்தது கிடையாது. ஆனா, இந்த தாய்நாட்டுக்கு அண்ணா என்ற பிள்ளை ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தது. குருவுக்கு சிஷ்யன் பட்டம் கொடுக்க முடியாது. ஆனால் என்னுடைய விஷயத்தில் குருவுக்கே இந்த சிஷ்யன்தான் பட்டம் கொடுத்தான். துணைக்குடியரசுத் தலைவர் நன்றாக பேசினார் என்று கலைஞருக்கு மிகவும் மகிழ்ச்சி. அதனால் ஒரு நல்ல பேனாவும் பரிசு கொடுத்தார். அந்தப் பேச்சை எழுதியது நான்தான் என்பது யாருக்கும் தெரியாது.

நான் திராவிட இயக்கத்துக்கு விசுவாசமானவன். கொள்கைகளுக்கு விசுவாசமானவன். நான் பதவிகளுக்காக வாழ வில்லை. ஏதோ ஒரு பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டு வாழவில்லை. நான் பிறந்த பொன்னாடு இந்தத் தமிழ்நாடு. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் மூலம் இந்தப் பொன்னாட்டை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். நேற்றைக்கு முந்தைய நாள் பசுமைத் தீர்ப்பாத்திற்குச் சென்றேன். ஜெம் லேபரட்டரிக்காரர்கள் 5 ஆவது ரெஸ்பாண்டன்ட் அபிடவிட் போட்டிருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு எனக்கு அனுமதி கொடுத்துவிட்டது. ஜெம் லேபரட்டரி கம்பெனிக்காரர்கள் கர்நாடகத்தில் பா.ஜ.க. குடும்பத்துக்காரர்கள். நான் ஷேல் வாயு, மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பேன். யாரும் தடுக்க முடியாது என்று அபிடவிட் போட்டிருக்கிறார்கள்.

யார் கொடுக்கிற திமிர்? மோடி கொடுக்கிற திமிரா? நெடுவாசலில் ஆறு மாதங்களாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த எரிவாயு எடுத்தால் தஞ்சைத் தரணி பாலைவனமாகி, சுடுகாடு ஆகிவிடும். கார்ப்ரேட்காரன் அனைத்து நிலத்தையும் வாங்கிவிடுவான். கீழே உள்ள நிலக்கரி படுகை, அதற்குக் கீழே உள்ள எண்ணெய், அதற்குக் கீழே உள்ள எரிவாயு எடுத்தால் இந்தியாவுக்கு வருடா வருடம் பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். நமது நிலங்கள் அழிந்து, பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டு, எத்தியோப்பியாவைப் போல நமது பிள்ளைகள் பிச்சைக்காரர்களாக எலும்பும், தோலுமாக சாகிற நிலைமை ஏற்படும். வாழ வைத்த தமிழகம். ஆசியாவின் நெற்களஞ் சியமான தமிழகம் பஞ்சப் பிரதேசமாகும்.

முல்லைப் பெரியாறைப் பாதுகாக்கப் போராடினோம். இடுக்கி அணைக்கும் ஆபத்து வருகிறது என்று சொல்லித்தான் நியூட்ரினோவை இந்த வைகோ தடுத்து வைத்திருக்கிறேன். வைகோ என்ன சாதித்தார்? என்கிறார்கள். 1500 கோடி மத்திய அரசின் திட்டத்தை தனி மனிதன் வைகோ இரண்டு வருடங்களாகத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை உலக பாரம்பரியச் சின்னம். அம்பரப்பர் மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதில் ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போட முடியாது. இந்த வாதத்தில் நான் வெற்றி பெற்றேன்.

நேராக கேரளாவுக்குச் சென்று அச்சு தானந்தன் அவர்களைப் பார்த்தேன். நியூட்ரினோ திட்டம் வந்தால் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்துபோகும். இடுக்கி அணையும் உடைந்துபோகும். கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்களைச் சந்தித்தேன். இன்றைய முதல்வர் பினராயி விஜயன் அவர்களைச் சந்தித்தேன். நியூட்ரினோவை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மேதாபட்கரை அழைத்துக்கொண்டுவந்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தேன். அகிலன், லெனின் ராஜப்பா, பொன்னையன் உள்ளிட் டோர் வந்தார்கள். ஆக, தமிழ்நாட்டிற்கு வந்த ஆபத்தை தடுத்து நிறுத்த மதிமுகவைப் போல எந்தக் கட்சியும் போராடி வெற்றிபெறவில்லை.

ஸ்டெர்லைட்டில் வெற்றி பெற்றிருப்பேன். உச்சநீதிமன்றத்தில் நீதி சாகடிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்றேன். உச்சநீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நானே வாதாடினேன். எதிர் தரப்பைப் பார்த்து நீதிபதி கூறினார், வைகோ வாதத்தை நீங்கள் வெற்றி பெற முடியாது என்றார். தீர்ப்பு சொல்ல வந்தபோது என் முகத்தையே பார்க்கவில்லை. அப்பொழுதே தெரிந்துவிட்டது. தீர்ப்பு நம்மை முடித்து விட்டது என்று. ஸ்டெர்லைட் ஓடவில்லை என்றார். மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்களே, நான் ஒரு கருத்தைச் சொல்லலாமா? அதுவரைக்கும் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தவர் அன்றைக்கு என் முகத்தையே பார்க்கவில்லை. சொல்லுங்கள் என்றார். இதே ஸ்டெர்லைட் ஆலையை மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சம்மட்டி, கடப்பாரை வைத்து உடைத்தார்கள். முதலமைச்சராக இருந்த சரத்பவார் வழக்குப் போடவில்லை. மூன்றாவது நாள் அனுமதியை ரத்து செய்துவிட்டார். அந்த மராட்டிக்காரர்களை விட நாங்கள் வீரம் குறைந்தவர்களா? அவர்களைவிட வீரமானவர்கள் தமிழர்கள். நாங்கள் தூத்துக்குடியில் உடைக்க முடியாதா? வன்முறையில் ஈடுபட வேண்டாம். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நினைத்தேன். நான் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன்.

வைகோ அவர்களே உங்களை நான் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறேன். வழக்கை முடித்த பிறகு என்னத்த பாராட்டப் போகிறீர்கள்? மறுபடியும் ரிட் போட்டிருக் கிறேன். எதற்காக? ஓட்டுக்காகவா? நம் கட்சியினர் எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்பதற்காகவா? தமிழகத்தைக் காப்பாற்ற, வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற விவசாயி களைக் காப்பாற்ற சுற்றுச் சூழலைக் காப்பாற்ற.

எதற்காக வேலிக்கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என்று சொன்னோம். சீமைக் கருவேல மரங்கள் தமிழ்நாட்டை அழித்து விட்டது. நீதியரசர் செல்வம் அவர்களும், நீதியரசர் பொன் கலையரசன் அவர்களும், வைகோ நீங்களே தொண்டர் களைக் கொண்டு மக்களைத் திரட்டி வெட்டுங்கள் என்றார். அடுத்த வாய்தாவுக்குச் செல்லும்போது அவ்வளவு வேகமாக உங்கள் கட்சி வேலை செய்ய வில்லையே? என்றார். எப்படி மறுமலர்ச்சி பெறும் தமிழ்நாடு? என்றார் நீதிபதி. அனைத்து இடங்களிலும் வெட்டி அகற்றினோம், நானும் சென்று வெட்டி அகற்றினேன். அதற்கும் ஒரு கிண்டல். கணக்கே கிடையாதுப்பா.

நான் காலையில் சென்று வெட்டுவது போன்று போஸ்கொடுத்துவிட்டு வந்துவிட வில்லை. காலையில் 8 மணி முதல் இரவு 7 மணி வரை வெட்டி அகற்றினேன். மதிய நேர சிறிது ஓய்வுகூட அங்கேயேதான். நான் சிறைக்குச் சென்றேன், சென்னை ஐ.ஐ.டி.காரன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சில் தடை வாங்கிவிட்டான். சிறையைவிட்டு வந்து தலைமை நீதிபதி பெஞ்சில் வாதாடினேன். சுந்தரேசன் என்னைப் பற்றி ஏதோ நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறார். தலைமை நீதிபதி நீங்கள் பேசுங்கள் என்றார்கள். தடை ரத்து, சீமைக் கருவேல மரங்களை எல்லாம் அகற்றலாம். வேகமாக வேலை செய்யலாம். மாணவர்களும், பொதுமக்களும் இதில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு அழிந்தே போகும். நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சிவிடும். ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அனைத்தும் அழிந்துபோய்விடும். ஏற்கனவே நிலத்தடி நீர் இல்லை. நேற்று மேட்டூர் 78 அடி உயர்ந்திருக்கிறது. அவன் மேகதாட்டுவில் அணை கட்டினால் பத்து அடி கூட தண்ணீர் வராது.

சீமைக் கருவேல மரங்களை வழக்குத் தொடுத்து நானே களத்தில் இறங்கினேன். வாஜ்பாய் அவர்களிடம் கூறி நெய்வேலியை மீட்டுக்கொடுத்தது நாங்கள். இல்லை என்றால் நெய்வேலி எப்பொழுதோ தனியாரிடம் சென்று சேர்ந்திருக்கும். இப்படித்தான் நாங்கள் மக்களுக்காகப் பாடுபடுகிறோம். தாய்மார்களே உங்கள் பிள்ளைகளுக்காகப் பாடுபடுகிறோம். வருங்கால தமிழகம் இத்தனை ஆபத்து களை எதிர்நோக்கி இருக்கின்ற நேரத்தில் மீத்தேன் அலுவலகத்தை பூட்டி விட்டுச் செல்லவில்லை என்றால் அலுவலகத்தை உடைத்து நொறுக்கு வோம் என்று தஞ்சாவூரில் பேசினேன். இரவோடு இரவாக மூன்று லாரிகளில் அனைத்துப் பொருட்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு, அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். ஊர் ஊராக வந்து சொல்லி, மக்களைத் திரட்டினேன்.

தஞ்சாவூர்காரர்கள் இடுப்பில் ஒரு பச்சை பெல்ட்டைக் கட்டிக் கொள்வார்கள். நல்ல விரால் மீன் குழம்பு வைத்து சாப்பிட வேண்டியதும், வெத்தலையைப் போட வேண்டியதும், அந்தக் கால பழைய வீரங்களைச் சொல்லிக் கொண்டும், கச்சேரி பார்ப்பதுமாக இருப்பார்கள். நாங்கள் கரிசல் காட்டில் மண்வெட்டி வைத்து வெட்டி சிரமப்பட்ட விவசாயி. காலிலேயே மடையைத் திருப்பி விடுவீர்களே நீங்கள். நீங்கள் எங்களை விட சிரமப்படப் போகிறீர்கள். உங்களுக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

மீத்தேன் வாயு, ஷேல் வாயு, ஹைட்ரோ கார்பன் வாயு கொண்டு வருவேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். நான் ஆடுதுறை முருகனை வைத்து வழக்குத் தொடுத்தேன். பி.ஆர்.பாண்டியனும் வந்தார். நீதிபதி ஜோதிமணி கமிட்டி அமைக்கச் சொன்னார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா எக்ஸ்பர்ட் கமிட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தலைமையில் போட்டு, அறிக்கை வாங்கி, மீத்தேனை தமிழ் நாட்டுக்குள் நுழைய விடமாட்டேன் என்று சொன்னார். ஆனால் மோடி அரசாங் கத்தின் மந்திரி தர்மேந்திர பிரதான் சொல்கிறார், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேசன்காரன் உரிய காலத்தில் அதை முடிக்கவில்லை என்று ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டோம். மீத்தேனைக் கொண்டு வருவோம் என்கிறார். நான் மத்திய அரசை கேட்கிறேன், எப்படிக் கொண்டு வருவீர்கள்? பழைய வீரமெல்லாம் செத்துப் போய்விட்டது என்று நினைக்காதே. பாட்டன், பூட்டன் காலத்தில் வேல் கம்பு, அருவாளைத் தூக்கிக்கொண்டு பல நாடுகளை வென்றவர்கள். ஊர் ஊருக்கு வந்து ஓட்டுக் கேட்க மாட்டேன். எரிவாயு நிறுவனங்களை உள்ளே விடக்கூடாது என்று இளைஞர்களைத் தூண்டி விடுவேன்.

மாவட்டச் செயலாளர்களே ஊர் ஊராக வரப்போகிறேன். பயணத்திட்டத்தை வகுத்துவிடுங்கள். மதிமுகவுக்கு ஆள் பிடிக்க அல்ல. ஓட்டுக் கேட்க அல்ல. இளைஞர் சமுதாயத்தை, விவசாயிகளை திரட்டுவதற்காக. மீத்தேன் வாயு, ஷேல் வாயு, ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு ஒரு இயந்திரத்தைக்கூட தமிழ்நாட்டில் நுழையவிடக்கூடாது. ரோஷம் உள்ள தமிழர்களே, தெலுங்கானா மாணவர்களும், மக்களும் இரண்டு வருடம் இரத்தம் சிந்திப் போராடினான் மாகாணம் அமைப்பதற்கு. நம் மாநிலம் அழிந்துவிடாமல் காப்பதற்குப் போராடுவோம். ஊர் ஊராக வருவேன். மக்களைத் திரட்டுவேன்.

தேர்தலில் யாருக்கு வேண்டுமென்றாலும் ஓட்டுப் போட்டுவிட்டுப் போகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. நம் ஆட்கள், நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம், ஓட்டுக் கேட்க வேண்டாம் என்று சொல்கிறீர்களே என்கிறார்கள். கேட்டவுடன் போட்டுவிடு வார்களா? ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் போடுகிறவன், நீ கேட்டவுடன் போட்டு விடுவானா? அவர்கள் மகாத்மா காந்தயின் சிஷ்யர்களாகி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. காந்தி சிரித்தால்தானே ஓட்டே போடுகிறான். நம்மிடம் மகாத்மா காந்தி மிகவும் குறைவு.

வீராதி வீரர்கள் என் பிள்ளைகள் இருக் கிறார்கள். என் தம்பிமார்கள் இருக்கிறார்கள். எனக்கு என்ன கவலை? எங்கள் கட்சியில் 24 வருடங்களாக இருக்கிற எவருக்கும் பதவி இல்லை ஒன்றும் இல்லை. ஒவ்வொருத் தரும் செலவழித்த கைக் காசை கணக்குப் பார்த்தால் இலட்சக்கணக்கில் இருக்கும். உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். நான் விடியற்காலை நான்கு மணிக்குப் பேசினாலும் இருப்பார்கள். செய்தித் தாள்களில் ஒருவரி போட மாட்டார்களே என்றுதான் ஆறு மணிக்கு ஆரம்பித்தேன். இப்பொழுதும் போடுகிறார்களோ என்னமோ தெரியவில்லை எனக்கு. அதைப் பற்றி கவலை இல்லை நம் கடமையைச் செய்வோம்.

உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, ராம்ஜெத்மலானி ஒரு யோசனையைச் சொன்னார். நான் எந்த முடிவும் எடுக்க வில்லை. ஆனால் நவம்பர் 20 மாநில சுயாட்சி மாநாடு நடக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலைவர்கள், முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் வருவார்கள். அதிலே சரியான தீர்மானம் தீட்டப்படும். இந்தியா வின் எதிர்காலத்தைக் காக்க. இந்தியா வின் மதச்சார்பின்மையைக் காக்க. இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட. ஜனநாயகத்தைக் காப்பாற்றப் பாடுபடுவோம்.

தமிழ்நாட்டு நிலைமை ஒன்றும் சொல்ல வில்லையே? நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதாவது நிறைய கஷ்டப் பட்டிருக்கிறோம். எந்தப் பதவி ஆசை கனவிலேயும் நான் இல்லை. என் தம்பிமார்கள், தோழர்களுக்கு இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு எங்களைவிட சேவை செய்கிற ஒரு இயக்கம் எதுவுமே கிடையாது. மிருகங்கள்கூட காட்டில் சுதந்திரமாக அலையலாம். பறவைகள்கூட அலையலாம். தாய்மார்களே உங்கள் பெண் பிள்ளைகள் சுதந்திரமாகப் போக முடியாது. வெறி பிடித்த மிருகங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டது. குடிகார மிருகங்கள். நான்கு வயதுக் குழந்தையை நாசமாக்கி, கழுத்தைத் திருகிக் கொள்கிறான். ஒரு டாஸ்மாக் கடை தமிழ்நாட்டில் எங்கும் இருக்கக்கூடாது. அதற்குப் போராடுவோம்.

மாநில அரசுக்கு பாசிச நடவடிக்கைகளை விட்டுவிடுங்கள். செய்யுங்கள். ஆதித்தனார் என் திருமணத்திற்கு முன்னிலை வகித்தவர். நான் அவரது சிலையை திரும்ப வைக்க வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்னதற்குப் பிறகு பலர் அறிக்கை விட்டார்கள். தற்போது சிலையை வைக்கப் போகிறார்கள். நாளைக்காவது திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்யுங்கள். இல்லை என்றால், மனித உரிமைக் கவுன்சிலில் இன்னும் பலரை விட்டு பேச வைப்பேன்.

1970 வரை ஊழல் கிடையாது. அண்ணா வரை ஊழல் கிடையாது. எங்களிடம் ஊழல் இல்லை. கை சுத்தமாக இருக்கிறது. 1500 கோடி வாங்கிவிட்டதாகச் சொன்னார் களே! வாழ்க்கையில் கொஞ்சப் பழியாப்பா? உயிருக்கும் மேலாக நேசித்த தலைவனையே கொலை செய்யப் போகிறான் என்று பழி. அதைவிட கொடிய பழியப்பா இது. பத்து பைசா எவரிட மாவது நான் வாங்கி இருப்பேனா? அது ஒரு பொழப்பா? அடேயப்பா பேண்ட் சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டியது, கடைத் தெருவில் நிற்க வேண்டியது 1500 கோடி வாங்கிட்டாராம்லா? என்று சொன்னவர்கள் எல்லாம் பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு வந்தவர்கள். நான் யார் என்று சொல்ல விரும்பவில்லை. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எவ்வளவோ மாமனிதர்களையே பழித்தது உலகம். நான் சாதாரணமானவன். என் தோழர்களே நீங்கள் என்னை நம்புகிறீர்கள் அல்லவா? அது போதும் எனக்கு.

இவன் யோக்கியன், நாணயமானவன், நேர்மையானவன். சாகிறவரை இப்படித் தான் இருப்பான் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அது போதும் எனக்கு.

அனைவரும் பத்திரமாக ஊருக்குச் செல்லுங்கள். இதில் யாருக்கு நன்றி சொல்வது என்றால், இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். தம்பி உதயகுமார், பாலகிருஷ்ணன் கட்சித் தோழர்கள். இங்கு ஒரு மாநகர செயலாளர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? எங்காவது முகத்தைக் காட்டியிருப்பாரா? அவரைப் போன்று இருப்பவர்களைத்தான் வைகோ அதிகமாக மதிப்பான். தமிழ்ச்செல்வன். நான் அனைவரையும் கவனிப்பேன். யார் உழைத்துக் கொண்டு தன் முகத்தை நீட்டாமல் இருக்கிறார்களோ அவர்களை மதிப்பேன்.

சீமைக்கருவேல மரங்களை எதிர்த்துப் போராடுவதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு உதவியவர்களில் முக்கிய மானவர் யார் தெரியுமா? உடுமலை ரவி. ‘பாலைவனமாக்கும் தமிழகம்’ என்று ஒரு நூல் எழுதினாரே நம்முடைய ஆர்.டி.மாரியப்பன் அவர்களின் மருமகன். அவர் பேராசிரியராக இருந்தவர். அவர்தான் அதிகமான செய்திகளைத் திரட்டிக் கொடுத்தார் நான் வாதாடுவதற்கு. எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரிய வில்லை. இப்படி ஒரு அரங்கம் அமையாது. பிரகதீஸ்வரர் அருளே சிவா வடிவத்தில் வந்துவிட்டது போல் இருக்கிறது.

பொன்னியின் செல்வனைப் படித்து தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும் காதல் கொண் டவன் நான். வந்தியத்தேவனைப் படித்துத் தமிழ் மீது காதல்கொண்டவன் நான். எத்தனையோ மாநாடு நடத்தியிருக்கிறோம். தஞ்சாவூர் மாநாடு போன்று இதுவரை ஒரு மாநாடு எனக்கு அமையவில்லை. பத்திரமாகச் சென்று வாருங்கள். நன்றி, வணக்கம்.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

சங்கொலி, 29.09.2017 / 06.10.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)