தினத்தந்தி பவள விழா! வைகோ வாழ்த்து பத்திரிகை உலகின் வான் சிகரம்; ஜனநாயக சுவாசம் தினத்தந்தி காலத்தை வென்று வாழ்க!

விவகாரங்கள்: தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 06/11/2017


 

 

 

 

 

 

தினத்தந்தி பவள விழா! வைகோ வாழ்த்து

 

பத்திரிகை உலகின் வான் சிகரம்;

ஜனநாயக சுவாசம் தினத்தந்தி

காலத்தை வென்று வாழ்க!

 

ல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த பைந்தமிழுக்கு உயிரைத் தருவேன் என தரணி போற்ற வாழ்ந்த பெருமகனார், கடல் அலைகள் தாலாட்டும் திருச்சீரலைவாய் மருங்கில் காயாமொழி என்ற கன்னல் தமிழ்ப் பெயர் கொண்ட மூதூரில் தோன்றிய தமிழர் தந்தை ஐயா ஆதித்தனார் அவர்கள் காய கல்பமாய், கற்பகத் தருவாய், ஜனநாயகத்தின் மூச்சுக் காற்றாய் பத்திரிகை உலகத்துக்கு வழங்கிய மரகத மணிப் பேழையாம் தினத்தந்திநாளிதழ் வெள்ளி விழா கண்டு, பொன் விழா ஆரம் தாங்கி, பவள விழா மகுடம் ஏந்தும் விழா 2017 நவம்பர் திங்கள் 6 ஆம் நாள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைப் பட்டணத்தில் புகழ் மணக்கும் விழாவாய் ஒளிவீச இருக்கிறது.

 

உலகுக்கு உழைப்பை உணர்த்தும் தாரக மந்திரம்; காலத்தை வென்று ஞாலத்திற்கு வழிகாட்டும் வெற்றியின் சூட்சம சக்தி; தன்னம்பிக்கையின் மூலதனம்; தங்கத் தமிழை சீரிளமை செந்தமிழை மாளிகை முதல் மண் குடிசை வரை தவழவிட்ட சங்கீதம்; பழகு தமிழை பாமரருக்குத் தந்திட்ட பல்கலைக் கழகமாம் தமிழர் தந்தை தரணிக்குத் தந்த தந்திநாளிதழ் 1942 நவம்பர் 1 ஆம் நாள் நான்மாடக் கூடலில் வெளிவந்து, கடந்த அகவைகள் 75.

 

1968 இல் வெள்ளி விழா, 1993 இல் பொன் விழா, 2017 நவம்பர் 1 இல் முகிழ்த்திடும் பவள விழா. எண்ணும்போதே உள்ளத்தில் உவகையின் வெள்ளம் பொங்குகிறது.

 

1905 ஆம் ஆண்டு. அயர் லாந்து நாடு விடுதலைக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்த வேளை. ருஷ்யப் புரட்சி சூல் கொண்டு இருந்த காலம். செப்டெம்பர் 27 ஆம் நாள், சிவந்தி பால சுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கும், கனகம்மாள் அவர்களுக்கும் அருமைப் புதல்வராகப் பிறந்தார் ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள்.

 

தொடக்கப்பள்ளியை அமைத்துத் தந்ததால், ‘பள்ளிக்கூட நாடார்என்று அழைக்கப்பட்ட பெரியவர் வாழ்ந்த ஊர் காயாமொழி. நான்காம் வயதில் திருவைகுண்டத்தில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் போட்ட கணக்குப் புதிருக்கு எவரும் விடை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு வேளையில், அந்தச் சின்னஞ்சிறு பாலகன்  விடையளித்ததால், அடுத்த வகுப்புக்கு முன்னேற்றம் கிடைத்து, பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுதுகையில் பத்து மாதங்கள் வயது குறைவு என்பதால் காத்திருக்க நேரிட்ட பெருமைக்குரியவர் ஐயா ஆதித்தனார் அவர்கள். அவரது தந்தையார் திருவைகுண்டத்தில் சிறந்த வழக்குரைஞர். அங்குதான்  தமது கல்வியைத் தொடங்கினார். 

 

தொழில்துறையில் அவரது திறமை எப்படி வெளிப்பட்டது?

 

கொல்கத்தாவில் வாசனாதி திரவியங்கள் விற்கின்ற ஒரு தொழிற்சாலை, ஏடுகளில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. எங்களது பொருட்களின் விற்பனையைக் கூட்டுகின்ற வகையில் விளம்பரம் தருவதற்குச் சிறந்த கருத்துப்படத்தை யார் வரைந்து அனுப்புகின்றார்களோ, அவருக்குப் பரிசு வழங்கப்படும் என்றது அந்த விளம்பரம். 

 

அப்போது ஆதித்தனாருக்கு வயது 15. அந்த வயதில் அவரே ஒரு கருத்துப்படத்தை வரைந்தார். அதில் என்ன கருத்தைச் சொல்லுகிறார்?

 

வாசனாதி திரவியங்களை விற்கின்ற வணிகன் அரசவைக்குள் வருகின்றான். திரவியங்கள் நிறைந்த பாட்டிலைத் திறக்கின்றான். அதன் உள்ளிருந்து மணம் கமழ்கின்றது; அது, முல்லையின் நறுமணம் தென்றலில் பரவுவது போல அரசவையை நிரப்பி, அங்கிருந்து மேலும் பரவி, அந்தப்புரத்தில் அம்ச தூளிகா மஞ்சத்தில் அமர்ந்து இருக்கின்ற பட்டத்து ராணியின் நாசியில் பட்டு, அந்த மணத்தில் அவர்கள் கிறங்கிச் சாய்வதைப் போல வரைந்து அனுப்புகின்றார். 

 

இந்தியா முழுமையும் நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் ஆதித்தனார் பரிசை வென்றார். 

 

15 வயதில் அத்தகைய ஆற்றலைப் பெற்ற ஐயா அவர்கள், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்றார்.  பார் அட் லா படிப்பதற்காகத் தமது 22 ஆம் வயதில் இங்கிலாந்து நாட்டுக்கு, தேம்ஸ் நதி தீரத்தில் லண்டன் மாநகருக்குச் செல்லுகின்றார். அங்கே முதல் வட்டமேசை மாநாடு நடைபெறு கின்றது. 

 

போர்பந்தரில் பிறந்து, கத்தியின்றி இரத்தமின்றி அறவழிப் போரை நடத்திக் கொண்டு இருந்த அண்ணல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றார். இங்கே செய்தியாளர்கள் முற்றுகை போட்டு இருப்பதுபோல, அன்றைக்கு இலண்டன் மாநகரிலும் செய்தியாளர்கள் குவிந்து இருந்தார்கள். அவர்களுள் ஒருவராக பார் அட் லா படித்துக் கொண்டு இருந்த மாணவர் ஆதித்தனார் அவர்களுக்கும் இருக்கின்றார்கள். ஆம்; ஐயா அவர்கள் அங்கே தான் பத்திரிகையாளராக மாறுகின் றார்கள்.

 

மாநாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மகாத்மா காந்தி திடீரென எழுந்து வெளியே போகின்றார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே வருகின்றார். அவர் எதற்காக வெளியே சென்று வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. மறுநாள் லண்டன் ஏடுகள், இடையில் பத்து நிமிடங்கள் காந்தி வெளியே சென்று வந்தார் என்று மட்டுமே எழுதின. ஆனால் அவர் எதற்காகச் சென்றார்? என்பது எவருக்கும் தெரியவில்லை. 

 

ஆனால் நம்முடைய காயாமொழி தந்த வித்தகர் இருக்கின்றாரே, அவர் கண்டுபிடித்து விட்டார். மகாத்மா காந்திக்கு ஒரு பல் ஆடிக்கொண்டு இருந்தது. தாம் பேசுகின்ற போது அந்தப் பல் உதிர்ந்து விழுந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், மகாத்மா வெளியே சென்று தம் கையால் அந்தப் பல்லைப் பிடுங்கிப் போட்டு விட்டு வந்தார் என்பதை ஆதித்தனார் கண்டுபிடித்து விட்டார்.

 

அந்தச் செய்திதான் இந்திய ஏடுகளில் பரபரப்பூட்டியது. அப்போதே இப்படி ஒரு முக்கியச் செய்தியைப் தந்தவர்தான் நம்முடைய ஐயா அவர்கள்.  

 

அடுத்து சிங்கப்பூருக்கு வருகின்றார். கோவிந்தம்மாள் அவர்களை 1933 செப்டம்பர் 1 இல் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கின்றார். அங்கே சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு ஏட்டுக்குத் தூணாகத் தோளாக நின்றார். அதன்பிறகு தாமே ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு 20,000 பணம் தாருங்கள் என மாமனாரிடம் கேட்க, ‘அரிசி பருப்பு விற்றால் பணம் கிடைக்கும்; பத்திரிகை விற்றால் என்ன கிடைக்கும்?’ என அவர் மறுக்க, அதன்பிறகு, வழக்கறிஞர் தொழிலில் முழு மூச்சோடு ஈடுபட்டுத் தம் திறமையால் பணம் திரட்டினார். 

 

தமிழ்நாட்டுக்கு வருகிறார். மதுரையில் நாடார் மகாசன சங்கத்தின் 14 ஆவது மாநாடு நடக்கிறது. அதன் வரவேற்புக் குழுச் செயலாளர் பொறுப்பை ஏற்கிறார். அந்த மாநாட்டுச் செய்திகளுக்காக மகாஜனம்என்ற இதழை வெளியிடுகிறார். அந்த ஏடு, நாடார் மகாசன சங்கத்தின் ஏடாக இன்றைக்கும் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றது. அதன்பிறகு, மதுரை முரசு என்ற ஏட்டைத் தொடங்குகிறார். 

 

ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை. அதில் ஈடுபட்டுச் சிறை சென்று விடுதலையாகி வந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு  மதுரை வடக்குமாசி வீதியில் மாடர்ன் கபேயில் வரவேற்பு. ஆதித்தனார் கலந்து கொள்கின்றார். சில மாதங்கள் கழித்து பசும்பொன் தேவர் திருமகனார் விடுதலை ஆகிறார். அவரைத் தமது பத்திரிகை அலுவலகத்திற்கே அழைத்துக் கொண்டு  வந்து வரவேற்பு விழா நடத்தி விருந்து தருகிறார். 

 

மதுரை முரசு ஏட்டை நாளேடாகத் தொடங்கியபோது, இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் அடக்கு முறையில் துப்பாக்கிச் சூடு நடக்கின்றது. காந்தியப் போராட்டத்தில் ஈடுபட்ட தேச பக்தர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். இந்தச் செய்தி ஏடுகளில் வரக் கூடாது என்று காவல்துறை ஆணை யிடுகிறது.  ஆனால் எதற்கும் அஞ்சாத சிங்கம் அல்லவா ஆதித்தனார்? அவர் மதுரை முரசு ஏட்டில், மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு; மூன்று பேர் சாவு என்று கொட்டை எழுத்துகளில் எட்டுக்காலம் செய்தி வெளியிடுகிறார். உடனே அந்த ஏடு தடை செய்யப்படுகிறது. 

 

அதே 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் நாள், தமிழன் என்கின்ற வாரம் இருமுறை இதழைத் தொடங்குகிறார். முதல் இதழில் பாவேந்தர் பாரதிதாசன் படத்தைப் போடுகிறார். 

 

நமது நோக்கம் என்று குறிப்பிட்டு, பாரதிதாசன் பாடலையே வைக்கிறார். 

 

நமதடா இந்த நாடு, நாமெல்லாம் தமிழ் மக்கள்; தமிழர் என்று சொல்லுவோம் பகைவர்தமை நடுங்க வைப்போம்; இமைய வெற்பின் முடியில் கொடியை ஏற வைத்த வீரனடா தமிழன் என்ற பாடலையும் அதில் பிரசுரித்தார்.

 

கடல் கடந்த நாடுகளில் மகோன்னதமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஜாவா, சுமத்திரா, போர்னியோ, பழந்தீவுகள் பன்னீராயிரத்தில் எங்கள் தமிழ்க் கொடி பறந்தது. உலகாண்ட தமிழர்கள் சுதந்திரத் தமிழ் அரசை அமைக்க வேண்டும்; அதுவே நமது நோக்கம் என்று குறிப்பிடுகிறார்.

 

கல்கி ஆசிரியர் அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மூதறிஞர் இராஜாஜிக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவர். அவர் தமது கல்கி ஏட்டில் பாராட்டி எழுதுகிறார். தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தமிழன் ஏடுதான் இரண்டு வண்ணங்களில் அச்சாகி சாதனை படைத்து இருக்கின்றது  என்று சொல்லிவிட்டு, ஆதித்தனாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள்; அதுபோல சுதந்திர நாடு அமைக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து போற்றற்குரியதுஎன்று எழுதி அனுப்புகிறார். 

 

உடனே ஆதித்தனார் பதில் கடிதம் எழுதுகிறார்.  உங்கள் பண்புள்ளத்திற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். உலகத்தின் பல்வேறு நாடுகளில் வணிகம் நடத்திக் கொடி உயர்த்தி, ரோமாபுரி கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் வணிகம் நடத்திச் சிறப்போடு வாழ்ந்தோம். நமக்கு ஓர் அரசு அமைய வேண்டும். நீங்கள் இப்போது பார்த்திபன் கனவு எழுதினீர்கள். அதுபோல இந்த ஆதித்தன் கனவும் ஒரு நாள் நிறைவேறும்என்று கல்கிக்குப் பதில் எழுதுகிறார். 

 

இப்படிப் பத்திரிகைகள் தொடங்கி,  1942 அக்டோபர் 15 ஆம் நாள், தந்தி இதழைத் தொடங்கப் பதிவு செய்கிறார். நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து தந்தி நாளிதழ் வெளிவருகிறது. தொடர்ச்சியாகக் காகிதம் கிடைப்பதில் பெருஞ்சிரமம். தனி வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி, சோதனைகள் முற்றுகை இடுகின்றபோது, ஆபத்துகள் சூழுகின்றபோது, கலங்காமல் போரிட வேண்டும் என்றால், அதற்கு வழி காட்டும் துருவ நட்சத்திரமாக ஐயா ஆதித்தனார் அவர்கள்  இருக்கின்றார்கள் என்பதற்கு, அவரது வாழ்க்கையில் இருந்து பல்வேறு சான்றுகளை என்னால் எடுத்துக்காட்ட முடியும். 

 

காகிதத் தட்டுப்பாடு. காகிதம் வாங்க முடியவில்லை. வைக்கோலை தண்ணீரில் ஊற வைத்துக் கூழாக ஆக்கி, அதை ஒரு பத்திரிகை அளவிற்கு வடிவமைத்து, அதில் எழுத்துகளை அச்சிட்டுப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தியவர் இந்தப் பூவுலகில் ஐயா ஆதித்தனாரைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. 

 

தந்தி சென்னையில் இருந்து வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. ஜப்பான்காரன் குண்டு வீசப் போகிறான் என்று செய்தி வருகிறது. மின்சாரம் இல்லை. அந்த நிலையிலும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை வைத்துக் கொண்டு ஓடியாடி வேலை பார்க்கிறது உருவம்; தன்னுடைய தோழர்களை ஊக்கப் படுத்திக் கொண்டு இருக்கின்றது. அடுத்த நாள் காலையில் வழக்கம் போல ஏடு வெளிவந்தது. அந்த உழைப்பாளிதான் ஆதித்தனார்.  

 

அதற்கு முன்பே, காலை எழுந்த வுடன் தந்தி; காபி குடிப்பது பிந்தி என்ற விளம்பரத்தை அந்நாள்களிலேயே தந்தி ஏடு வெளியிட்டது. 

 

47 இல் சேலத்தில் தினத்தாள்

 

48 இல் திருச்சியில் தினத்தூது.

 

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் தந்தி; அடுத்து மயிலை லஸ் முனையில் தந்தி. அதன்பிறகு எழும்பூரில் இடம் வாங்கி எழுநிலை மாடம் போலக் கட்டடங்களைக் கட்டி எழுப்பினார். 

 

1961 ஏப்ரல் 14. முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தினந்தந்தி நாளேட்டைத் தொடங்கி வைக்கின்றார். இன்றைக்குப் 17 பதிப்புகள். பல கோடி மக்கள் படிக்கின்றார்கள்.  வளைகுடாவில் துபையில் இருந்து வெளியாகின்றது என்று சொன்னால், இவ்வளவு சாதனைகளையும் படைத்த அந்தப் பெருமகன் ஒரு கொள்கைக்காக வாழ்ந்தார். தாம் ஏற்றுக் கொண்ட இலட்சியங்களுக்காகத் துன்பங்களைச் சுமந்தார். தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் அமைப்பைத் தொடங்கினார். கலை, பண்பாடு, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் தமிழர்களை ஊக்குவித்துக் கொண்டு இருந்த அவர், சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு என்று 1958 ஆம் ஆண்டு மன்னார்குடியில்  நடத்தினார். தலைவர் சி.பா. ஆதித்தனார். திறப்பாளர் ஈரோட்டுச் சிங்கம் அறிவாசான் தந்தை பெரியார்.  சிறப்பு விருந்தினர் ஜி.டி. நாயுடு. 

 

அந்த மாநாட்டில் ஓர் தீர்மானம். தமிழ்நாடு தவிர்த்த, இந்திய பூபாகத்தின் வரைபடத்தைத் தீயிட்டுக் கொளுத்துவது என்ற தீர்மானம். அப்பொழுது பெரியார் சொன்னார்: எங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆதித்தனார் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைக்கப் புறப்பட்டு விட்டார். நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன்என்றார். இருவருமே கைது செய்யப் பட்டார்கள். 

 

இத்தகைய உணர்வுகள்தான் ஆதித்தனாரின் நெஞ்சில் கனன்று கொண்டு இருந்தன. 

 

1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து இந்தி விரட்டப்பட்ட போது, அதற்கு சிங்கப்பூரில் விழா கொண்டாடினார். தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூருக்குச் சென்று இருந்தபோது ஆதித்தனாரின் இல்லத்தில்தாம் தங்கி இருந்தார்.

 

மீண்டும் 1965 இல் இரத்தம் பொங்கிய இந்தி எதிர்ப்புப் புரட்சி வெடித்தது. மாணவர்கள் போராட்டத்தைத் தூண்டுகிறார் என்று சொல்லி, அக்டோபர் 9 ஆம் நாள் ஆதித்தனாரைக் கைது செய்தார்கள். கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே துன்பங்களுக்கு ஆளானார்.  25 பவுண்டு உடல் எடை குறைந்தது. நாடித்துடிப்பு குறைந்தது; இனி அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றே சொன்னார்கள்.

 

அத்தகைய துயரம் நேருமானால் நாடு கொதித்து எழும் என்று கருதி, 1966 ஜனவரி ஏழாம் நாள் விடுதலை செய்தார்கள். மாத்தூரில் விவசாயிகள் போராட்டம். நானே களத்திற்கு வருகிறேன்என்று அறிவித்தார். தோழர்களை அனுப்பி வைத்தார். காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுக் காட்டு வழியாக நடந்து சென்று போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். மாதர்கள் வெற்றித் திலகம் இட்டார்கள். அதன்பிறகு கைது செய்யப்பட்டார். 

 

ஈழத்தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்று கருதினார். தந்தை செல்வா குரல் கொடுத்தாரே, பிரபாகரன் ஆயுதம் தூக்கினாரே, அந்த எண்ணத்திற்கு வித்து இட்டவர் ஆதித்தனார்தாம் என்று, பாலசேனா, சிறிசேனா என்ற இரண்டு சிங்கள எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் நூல் எழுதி வெளியிட்டார்கள். சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான கரு விதைக்கப்பட்டது ஆதித்தனாரால், அவரது பத்திரிகையால் என்று குறிப்பிட்டார்கள். 

 

1967 சென்னை விருகம்பாக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்கு நாள் மாநாடு. அங்குதான், 1966 டிசம்பர் 29 ஆம் தேதி ஐயா ஆதித்தனார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள். சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான வேட்பாளர் பட்டியலை அண்ணா வெளியிடுகின்றார். ஆதித்தனாரின் பெயரும் இடம் பெறுகின்றது. தி.மு.கழகம் ஆட்சி அமைக்கின்றது. ஆதித்தனார் சட்டப்பேரவைத் தலைவர் ஆகிறார். பட்ஜெட் கூட்டத் தொடர். 1967 ஜூன் 17 ஆம் நாள். 

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுஎன்ற குறளைச் சொல்லிப் பேரவை நடவடிக்கைகளைத் தொடங்கினார் ஐயா ஆதித்தனார். வரலாற்றில் ஒரு பொன்னேட்டை எழுதினார். இன்றைக்கும் அந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது. 

 

அன்றைக்கு அண்ணா சொன்னார்: தமிழ்த்தாயே இங்கே வந்து பாடம் நடத்துவதைப் போல இருக்கின்றது. ஆதித்தனார் சபை நடத்துவதைக் கண்டு தமிழர் உலகம் பெருமைப் படுகின்றதுஎன்றார். ஆரூயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் தமிழர் தந்தை அமைச்சர் ஆனார். ஏழை எளியவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். 

 

ஈழத்தமிழர்களுக்காக காசி ஆனந்தன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் உணர்வாளர்களை உருவாக்கிக் கொடுத்தார்.

 

1961 இல் தமிழ் தினசரிகளில் அதிக அளவில் விற்பனை என்ற பெருமையைப் பெற்று, 56 ஆண்டுகளாக அதனைத் தக்க வைத்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல, இன்றைக்கு உபகண்டத்திலேயே அதிக அளவில் விற்பனையாகும் நாளிதழாகவும் இமாலய சாதனை படைத்துவிட்டது தினத்தந்தி.

 

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சாவூர், திண்டுக்கல், திருப்பூர், புதுச்சேரி, பெங்களூரூ, மும்பை, துபாய் ஆகிய பதினேழு நகரங்களிலிருந்து ஆதவன் உதிப்பதற்கு முன்பே ஐயா ஆதித்தனார் படைத்த தினத்தந்தி மக்கள் கண்களில் மலர்கிறது.

 

ஐயா ஆதித்தனார் அவர்கள் 1971 ஜூன் 14 ஆம் நாள் இந்த எளியவனின் திருமணத்திற்கு முன்னிலை ஏற்று வாழ்த்தினார்கள். 1973 ஏப்ரல் 5 இல் என் தந்தையார் மறைந்தபோது, என் இல்லத்திற்கு வந்து உங்கள் மகனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று என் அன்னையிடம் ஆறுதல் கூறினார்கள்.

 

1959 மே 2 ஆம் நாள் தமிழர் தந்தையின் திருப்புதல்வர் ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியின் பொறுப்பை கவனிக்கத் துவங்கினார். ரயிலில் தானே பார்சலை ஏற்றச் சென்றதும், அலுவலத்தில் ஊழியர்களுக்கான உடையையே தாமும் அணிந்து பணியாற்றிதும் ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஈட்டிய வெற்றிக்கு இலக்கணங்கள்.

 

திருமுருக குருபானந்த வாரியார் அவர்கள் நவரத்தின பாமாலை என்று ஒன்பது நேரிசை வெண்பா பாடியுள்ளார். அதிலே,

 

சீரார் சிவந்தி ஆதித்தனார் தென்காசி

பாரார் பராக்கிரம பாண்டியனே - நேராக

வந்துயர் கோபுரத்தை வானளாவச் செய்ததனால்

செந்தமிழ்போல் வாழ்க செழித்து

 

என்று பாராட்டினார்.

 

தன் தந்தையாரைப் போலவே தமிழர்களின் விளையாட்டுக் கலைகளை ஊக்குவித்து, கைப்பந்தாட்டப் போட்டிகளில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் உலக விருதுகளைப் பெற்றுத் தந்தார் ஐயா சிவந்தி ஆதித்தனார்.

 

தமிழகத்தின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968 தினத்தந்தி வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, “ஆதித்தனார் அவர்கள் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்தியதோடு, அதனை நடத்திச் செல்ல நல்ல பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்என்று பாராட்டினார்கள்.

 

அன்று காஞ்சித் தலைவன் சொன்னது தீர்க்கதரிசனமானது. தன் தந்தையின் கனவுகளை நனவாக்கிய ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தூக்கித் தந்த தினத்தந்தி எனும் ஒளிமணிச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்யும் வகையில் அவரது புதல்வர் இளைய ஐயா எனப்படும் பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களும் முன்னெடுத்துச் செல்கிறார்.

 

வாழையடி வாழையாக தினத்தந்தியின் வான்புகழ் உயர்த்தும் குடும்பமாக தமிழர் தந்தையின் குடும்பம் திகழ்கிறது!

 

ஜனநாயகத்தின் சுவாசமான தினத்தந்திபல நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடும். தமிழ்கூறும் நல்லுலகில் காலத்தால் அழியாத பொன்னேடாய் புகழ் குவிக்கும்!

 

நீடு வாழிய தினத்தந்தி!!

 

அன்புள்ள

வைகோ

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)