ஸ்டெர்லைட் தீர்ப்பு வைகோ அறிக்கை!

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மருத்துவம், மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 01/10/2010

ஸ்டெர்லைட் தீர்ப்பு
வைகோ அறிக்கை!

குஜராத் தொழில் அதிபர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் அமைத்த நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று, பதினைந்து ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டம், மகத்தான வெற்றி பெற்று உள்ளது.


இந்த நாசகார தாமிரத் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், செப்டெம்பர் 28 ஆம் நாள் தந்த தீர்ப்பு, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் மைல்கல் ஆன தீர்ப்பு ஆகும்.


குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் இந்தத் தொழிற்சாலையை அமைக்க முயன்று தோற்று, பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் நிறுவப்பட்டபோது, அங்கே விவசாயிகள் கிளர்ந்து போராடியதால், அங்கிருந்து அகற்றப்பட்டு, தமிழ்நாட்டில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது.


21 தீவுகளை உள்ளடக்கிய தேசிய கடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்து உள்ள இப்பகுதியில், கடல் எல்லைக்கு 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற விதியைக் காற்றில் பறக்கவிட்டு, இந்தத் தொழிற்சாலை,
தூத்துக்குடிக்கு ஏழு கிலோ மீட்டர் அருகில் அமைக்கப்பட்டது.


இதனால், கடல் வாழ் உயிர் இனங்கள் அழியும்; மீனவர்கள் வாழ்க்கை பாழாகும்; 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, விளைநிலங்கள், வேளாண்மை செய்ய முடியாத பொட்டல் காடாக ஆகும்; இலட்சக்கணக்கான மக்கள், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைக் காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல், சருமம் மற்றும் புற்றுநோய்க்கு ஆளாவார்கள். தாமிரம் உற்பத்தி செய்வதால் வெளியாகும் கந்தக வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, பின்னர் கந்தக அமில மழையாக, குடிநீர், கடல் நீர், நிலம் அனைத்திலும் கலக்கும்.


அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல், மூடப்பட்டது. 500 சதவீதம் கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது.


எனவே, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொடர் போராட்டங்களை நடத்தியது. 1996 பிப்ரவரி 24 இல்,
தூத்துக்கு வ.உ.சி. திடலில்,ஸ்டெர்லைட்டை எதிர்த்து, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில், ஆலையை அகற்றும்வரை போராடுவோம் என்று அறிவித்தேன்.


96 மார்ச் 5 ஆம் நாள், என்னுடைய தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

மார்ச் 12 ஆம் நாள், தூத்துக்குடியில், கடை அடைப்பும், கருப்புக் கொடி போராட்டமும் நடைபெற்றது. வணிகர் சங்கங்களும், மீனவர் அமைப்புகளும், பெருமளவில் பங்கு ஏற்று ஆதரவு அளித்தனர்.

96 ஏப்ரல் 1 ஆம் நாள், என்னுடைய தலைமையில் பிரமாண்டமான பேரணியைத், தூத்துக்குடியில் நடத்தினோம்.

96 டிசம்பர் 9 ஆம் நாள், தூத்துக்குடி குரூஸ் பர்ணாந்து சிலைக்கு அருகில், என்னுடைய தலைமையில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு ஏற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

97 பிப்ரவரி 24 ஆம் நாள், தூத்துக்குடி மாவட்டத் துணை ஆட்சியர் அலுவலகம் எதிரே, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு ஏற்றனர்.

97 ஜூன் 2,3,4, ஆகிய மூன்று நாள்களில், என்னுடைய தலைமையில், திருவைகுண்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் நடைபயணமாகப் புறப்பட்டு, கிராமங்கள்தோறும் சென்று, ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு மக்கள் சக்தியைத் திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.


ஆகஸ்ட் 30 ஆம் நாள், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்தினோம். நானும், 20,000 க்கும் மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டோம்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பேசும்போது, இரத்தினகிரியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடைத்து நொறுக்கியதைப் போல, நாம் இங்கு வன்முறையில் ஈடுபடப் போவது இல்லை. அது பிரச்சினையைத் திசை திருப்பி விட்டு விடும். எனவே, ஆலையை மூடுவதற்கு நீதிமன்றத்தில் போராடுவேன் என்று அறிவித்தேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுததேன்.

அதேநாள் இரவில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். ஸ்டெர்லைட் நிர்வாகம், இது விடுதலைப்புலிகளின் சதி வேலை என்று பழி சுமத்தியது.

ஆனால், அப்போது தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜாங்கிட், இது நாச வேலை அல்ல; தொழிற்சாலை இயந்திரங்களால் ஏற்பட்ட விபத்துதான் என்ற உண்மையை அறிவித்தார்.

மற்றொரு விபத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் வெளியான நச்சுப்புகையால், அருகில் இருந்த ரமேஷ் பிளவர்ஸ் என்ற செயற்கைப் பூக்கள் நிறுவனத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்த 200 பெண்கள் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கு இடையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். தாயகத்தில் என்னைச் சந்தித்து, ஸ்டெர்லைட்டால் பாதிப்பு இருக்காது. வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஒருக்காலும் வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறினேன்.

ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநர் அகர்வால் உங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டார்.


அவரைச் சந்திப்பதே தேவை அற்ற, பொய்யான வதந்திகளுக்கு இடம் கொடுத்து விடும். எனவே நான் சந்திக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டேன்.

அதன்பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த, டெல்லியிலும், தமிழ்நாட்டிலும் அதிரடி அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கின்ற ஒரு பிரபலமான ஆசாமியும் என்னைத் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொண்டபோதும், இதே பதிலைத்தான் கூறினேன்.


அதன்பின்னர், தற்செயலாக சென்னை விமான நிலைய வரவேற்பு அறையில், தானாக வந்து என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அனில் அகர்வால், பத்து நிமிடங்கள் தன்னைச் சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு கேட்டபோதும், எனக்கு உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் கிடையாது; ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலை தென் மாவட்டங்களுக்கு நாசம் ஏற்படுத்தும் என்பது எனது உறுதியான கருத்து. எனவே, உங்களைச் சந்திக்க நான் விரும்பவில்லை. நீதிமன்றத்தில் நமது போராட்டம் நடக்கிறது என்று கூறினேன்.

ஏற்கனவே, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் ஒரு ரிட் மனு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


எனவே, எனது ரிட் மனுவை ஏற்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் வாதாடியதை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

98 டிசம்பர் 9,10,11 ஆகிய நாள்களில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி லிபரான், மூத்த நீதிபதி பத்மநாபன் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதாடுவதற்கு, வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் தூத்துக்குடி கிருஷ்ணன், வழக்கறிஞர் தேவதாஸ் ஆகியோர் பெரிதும் உதவினர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில், புகழ்மிக்க உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.


சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார்.

இந்த மூன்று நாள்களிலும், மொத்தம் 7 மணி நேரம் ஸ்டெர்லைட்டை எதிர்த்து எனது வாதங்களைத் தக்க ஆவணங்களுடன் எடுத்து உரைத்தேன்.


இந்த விசாரணையின்போதுதான், தலைமை நீதிபதி லிபரான், ‘வைகோ அவர்களே, உங்களுடைய நேர்மைக்கும், நாணயத்துக்கும் எவரும் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நீதிமன்றமும் அறியும். இந்த வழக்கில் மிகத் திறமையாக வாதாடினீர்கள் என்றார்.

ஒரு கட்டத்தில் அவர், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்தானே கலந்து கொண்டார்கள்? என்று கேட்டார்.


சுதந்திரப் போராட்டத்தில், 40 கோடி மக்கள் இருக்கும்போது, சில ஆயிரம் பேர்தானே போராடினார்கள்? என்று நான் கூறியதை, நீதிமன்றம் வரவேற்றது.

 

நாக்பூரில் உள்ள நீரி ( National Environmental Engineering research Institute-NEERI) என்ற அமைப்பின் நேர்மையான இயக்குநர் டாக்டர் கண்ணா, கூண்டில் ஏறி, இந்த ஸ்டெர்லைட் ஆலை, நீர், நிலம், சுற்றுச்சூழல் அனைத்தையும் நாசமாக்கி விடும் என்று வாக்குமூலம் கொடுத்தார்.

வழக்கில் ஆலையை மூடும் உத்தரவு வந்து விடும் என்று பயந்த ஸ்டெர்லைட் நிறுவனம், நீதிபதி பத்மநாபன், வைகோவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்; வைகோவுக்கு வேண்டியவர்; எனவே, இந்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் புகார் செய்தனர்.

உச்சநீதிமன்றம் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிடினும், நீதிபதி பத்மநாபன், இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

இதனால், வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அந்த அமர்விலும், டிசம்பர் 16 ஆம் நாள், ஒரு மணி நேரம் வாதாடினேன்.

பின்னர் நாக்பூர் நீரி நிர்வாகத்தில் புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்களை ஸ்டெர்லைட் நிறுவனம் சரிக்கட்டி விட்டது. எனவே, இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், பிரதான வழக்கு நிலுவையிலேயே இருந்தது.

2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நீதிபதிகள், தர்மாராவ், பால் வசந்தகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. எனது சார்பில், வழக்கறிஞர் கிருஷ்ணசாமி வாதாடினார்.

ஸ்டெர்லைட்டை உள்ளடக்கிய வேதாந்தா நிறுவனத்தின் தொழிற்சாலை, ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்குக் கேடு செய்கிறது என்பதால்தான், அந்த நிறுவனம் அங்கேயும் மூடப்பட்டு விட்டது.

2004 ஆம் ஆண்டு நார்வே அரசு அமைத்து இருக்கின்ற பொதுநல அமைப்பு (Council on Ethics), ஆய்வு நடத்தி, ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுப்புறச் சூழலுக்கு நாசம் விளைவிக்கும்; மக்கள் உடல் நலனை அழிக்கும்’ என்று தந்து உள்ள அறிக்கையையும், உச்சநீதிமன்றம், 2006 ஆம் ஆண்டு அமைத்த ஆய்வுக்குழு, ஸ்டெர்லைட்டுக்கு விரோதமாகத் தந்த அறிக்கையையும், என்னுடைய தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இப்போது, தென் தமிழகத்து மக்களைப் பாதுகாக்கின்ற வகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற உன்னதமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தந்து உள்ளது.

இடைக்காலத்தில், என் மீது அபாண்டமாகப் பழி தூற்றியவர்களின் கன்னத்தில் விழுந்த அறையாக இந்தத் தீர்ப்பு வந்து உள்ளது.


துளி அளவும் சமரசம் செய்து கொள்ளாமல் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து உள்ளது.

இந்த ஆலையில், ஆயிரக்ககணக்கான கோடிகளைக் கொள்ளை அடித்த நிர்வாகம், அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்குப் பெருமளவு நிவாரணத்தைக் கொடுக்க வேண்டும்.

94 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். இதர தொழிலாளர்களின் உடல் நலமும் உறுதியாகப் பாதிக்கப்படும். எனவே, நட்ட ஈடு தருவதோடு, மாற்று வேலைக்கும், அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் தற்போதைய தீர்ப்பை முடக்குவதற்கு, எல்லா வழிகளையும் கையாளப் பார்க்கும். ஆனால், அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலும் மறுமலர்ச்சி தி.மு.க. போராடும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துவதற்கு மீனவர் அமைப்புகளும், வணிகர் சங்கங்களும், பொதுநல அமைப்புகளும் மிக உறுதியாகப் போராடினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை, தமிழ்நாட்டில் இருந்தே விரட்டப்படும் நாள்தான், நமக்கு முழு வெற்றி ஆகும். அதுவரை, நம்முடைய போராட்டத்தை அனைத்து வழிகளிலும் தொடர்வோம்!

 

வைகோ

பொதுச் செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’                                                                   
சென்னை - 8                                                            
01.10.2010                                                                

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)