கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போர்! நவம்பர் 5 தென்மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்; வைகோ ஒருநாள் உண்ணாநிலை அறப்போர்!

விவகாரங்கள்: திறன், சுற்றுச்சூழல், மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 31/10/2011

 

 

 

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போர்!
நவம்பர் 5
தென்மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்;
வைகோ ஒருநாள் உண்ணாநிலை அறப்போர்!

பேரழிவை ஏற்படுத்தக் கூடியதான கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலைநோக்கோடு நடத்தப்பட்டு வருகின்ற அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம், மிகவும் நியாயமான, தேவையான போராட்டம் ஆகும்.

1988 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில், இந்திய நாட்டுக்கு வருகை தரும், சோவியத் அதிபர் மிகாயில் கோர்பச்சேவை வருகை குறித்து வரவேற்புத் தந்த அறிக்கையில், இந்தியாவும், சோவியத் ரஷ்யாவும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களைப் பற்றி, பொதுவாகக் குறிப்பிட்டார்.

அதில், இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்தம் போடப்படுகின்றது என்று, பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட்டார். அதை எதிர்த்து, நான் மாநிலங்கள் அவையில் பிரதமரிடம் விளக்கம் கேட்டபோது,

‘தமிழ்நாட்டில் கூடங்குளத்தில்தான் அணுமின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டு உள்ளீர்கள். ஏற்கனவே அமெரிக்காவில், மூன்று கல் தீவு அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தும், சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தும், பெரும் நாசத்தை ஏற்படுத்தி விட்டன. அவைகள் மூடப்பட்டும்கூட, இன்னும் அணுக்கதிர்வீச்சுக் கசிவு, நெடுந்தொலைவுக்கும், பொதுமக்களுக்குப் பெரும் துன்பத்தைத் தருகின்றது. இந்நிலையில், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கக்கூடாது  என்று, சுற்றுச்சூழல் வல்லுநர்களும், அப்பகுதி வாழ் மீனவ சமுதாய மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். ஒரு சதவீத விபத்துக்கு வாய்ப்பு இருந்தாலும், எங்கள் தென்தமிழகத்தின் தலைமுறைகளும் அழிந்து போகும் என்பதால், அணுமின் நிலையத்தை அமைக்கக்கூடாது’ என்றேன்.

அதற்குப் பதில் அளித்த பிரதமர் ராஜீவ் காந்தி, அணுமின் நிலையத்தைவிட, அனல்மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் அதிகம் என்று, அதன் அடிப்படையைக் கூடத் தெரிந்து கொள்ளாத அறியாமையை வெளிப்படுத்தினார். அதனைச் சுட்டிக்காட்டி நான் விமர்சித்தவுடன், அவையில் காங்கிரசார் பலத்த கூச்சல் எழுப்பினர். அதன்பிறகு, அவர் தான் சொன்னதை மாற்றிக்கொண்டு, அனல்மின் நிலையத்துக்கான உபகரணங்களையும் நாங்கள் விலைக்கு வாங்குகிறோம் என்று சொன்னதைத்தான், உறுப்பினர் தவறாகப் புரிந்துகொண்டு விட்டார் என்று, தான் கூறியதைத் திருத்திச் சொன்னார்.

ஆனால், அவர் முதலில் கூறியது மாற்றப்படாமல், பதிவு ஏடுகளில் இன்னமும் அப்படியே நீடிக்கின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் நேராது என்று, ரஷ்ய நாட்டு நிபுணர்கள் தரும் அறிக்கைகளையும், இந்திய அணுசக்தி கமிஷன் தரும் அறிக்கைகளையும், மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது.

இடிந்தகரையில் போராட்டம் நடத்துகின்ற மீனவ மக்கள், தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் பட்டினிப் போர் நடத்துகின்றார்கள். ஆனால், அந்த மீனவ சமுதாய மக்களைக் கொச்சைப்படுத்தியும், களங்கப்படுத்தியும் சிலர் அறிக்கைகள் தருகின்றார்கள். அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்திய அணுமின் துறையின் தலைவர் எஸ்.கே.ஜெயின் என்ற பேர்வழி, அந்நிய நாட்டுச் சக்திகள் இந்தப் போராட்டத்தைப் பின்னிருந்து இயக்குவதாகக் கூறி இருப்பது, அந்த அதிகாரியின் அதிகார வரம்பை மீறிய, அக்கிரமமான செயல் ஆகும். போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதற்காக இப்படிக் கூறி இருக்கின்ற இந்த அதிகாரி, ரஷ்யாவிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு இப்படி அறிக்கை தருகின்றார் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

ஏற்கனவே கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு விட்டது என்று சிலர் புலம்புகின்றார்கள். கோடானுகோடி பணத்தைக் கொட்டி, உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன், ஜப்பானிய அரசு அமைத்த புகுஷிமா அணுமின் நிலையம், சுனாமியால் நாசமாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து, மூன்றரை இலட்சம் பேர் வசிப்பிடத்தை இழந்து விட்டனர்.

இதன்பின்னரே, அணுமின் நிலையங்கள் அனைத்தையும் மூட, ஜப்பான் அரசு முடிவு செய்தது. ‘மின்சாரம் தேவைதான்; அதற்காக, உயிர்களைப் பலியிட நாங்கள் தயாராக இல்லை. வேறு வழிகளில் மின்சாரம் தயாரிப்போம்’ என அறிவித்து விட்டது. இதில் பாடம் கற்றுக்கொண்டதால்தான், ஏற்கனவே அணுமின் நிலையங்களை அமைத்து உள்ள ஜெர்மனியும், இத்தாலியும் அணுமின் நிலையங்களை மூடப் போகிறோம் என அறிவித்து விட்டன. புதிதாக அணுமின் நிலையங்களை அமைப்பது இல்லை என்று ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்து
விட்டன.

ரஷ்ய நாட்டுச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் அண்மையில் தந்து உள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ஆயிரம் ரீயாக்டர்கள், வெறும் காயலாங்கடைச் சரக்குகள் என்று தெரிவித்து உள்ளனர்.

கடல்கோளால் தமிழகத்தின் பெரும்பகுதி முன்னர் அழிந்தது. மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டால், தென்தமிழ்நாட்டில், கூடங்குளம் அணுமின் நிலையத்தால், கற்பனை செய்ய முடியாத பேரழிவு ஏற்படும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் படுகொலை, சிங்களரால் தமிழக மீனவர்கள் நாளும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, மூன்று நிரபராதித் தமிழர்களின் உயிர் முடிக்கத் திட்டமிடும் நடவடிக்கை என அனைத்துப் பிரச்சினைகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும், மன்னிக்க முடியாத துரோகங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறாவிட்டால், அதனால் கேடு ஏற்படும் என்று, அணுசக்திக் கமிஷன் தலைவர், மக்களிடம் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்த மிரட்டிப் பார்க்கின்றார்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கக் கூடாது; அகற்றப்பட்டே தீர வேண்டும் என்ற போராட்டத்தை, அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுநலனுக்காகவே போராடி வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசின் தூண்டுதலால், கிறித்தவ மதத்தினரைக் குற்றம் சாட்டுவதும், போராட்டக்காரர்கள் மீது பொய்ப்பழி சுமத்துவதும் நடைபெறுகின்றன.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும், தமிழக மக்கள் நலனைக் காக்க விரும்புவோரும், அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் மதுரையில் மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, நவம்பர் 5 ஆம் தேதி, தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்திட அழைப்பு விடுத்தார். அந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். பழ.நெடுமாறன் அவர்கள், மதுரையில்
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.

அதே நாளில், நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, காலை 9.00 மணி முதல், இடிந்தகரையில், அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, என்னுடைய தலைமையில், உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் முன்னிலை ஏற்பார்.

நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. தோழர்கள், இந்த உண்ணாநிலை அறப்போரில் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

‘தாயகம்’                              வைகோ
சென்னை - 8                         பொதுச்செயலாளர்
31.10.2011                               மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)