மூன்று தமிழர்கள் தூக்கு குறித்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, சட்ட ஒழுங்கு
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்
19 அக்டோபர் 2011
மூன்று தமிழர்கள் தூக்கு குறித்த வழக்கு;
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் ஒரு அமைப்பின் சார்பில் போடப்பட்ட மனு, இன்று (19.10.2011) உச்சநீதிமன்றத்தில் அல்டாமஸ் கபீர், நீதி அரசர் டத்து, நீதி அரசர் சி.கே. பிரசாத் ஆகிய மூவர் அமர்வின் முன்பு, விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில், 29 ஆவது வழக்காகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நீதிமன்றம் தொடங்கியவுடன் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் எழுந்து,
‘இதுபற்றிய விசாரணை, ஏற்கனவே நீதி அரசர் சிங்வி அமர்வில் நடத்தப்பட்டு விட்டது; வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு உள்ளன; அதுபற்றித் தான் முடிவு செய்து இருக்கும் தீர்ப்பை, தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு பதிலை எழுத்துமூலமாகத் தருவதற்கு அவகாசம் கேட்டதால், தற்பொழுது அறிவிக்கவில்லை என்று கூறி நீதி அரசர் சிங்வி தெரிவித்து உள்ளார்’ என்று ராம் ஜெத்மலானி சொன்னவுடன், நீதி அரசர் கபீர், ‘அப்படியானால், இந்த அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது’ என்று கூறி விட்டார்.
எனவே, இந்த வழக்கு, மீண்டும் நீதி அரசர் சிங்வி அமர்வுக்கே செல்லும் வாய்ப்பு இருக்கின்றது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை எட்டு மணிக்கே ராம் ஜெத்மலானி அவர்களுடைய இல்லத்துக்குச் சென்று, இவ்வழக்கு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். அங்கிருந்து ஜெத்மலானி, வைகோவைத் தம் காரிலேயே உச்சநீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார் .
வழக்கு விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம் ஜெத்மலானி, ‘மூன்று தமிழர்கள் உயிரைக் காப்பாற்ற, வைகோ உணர்வுபூர்வமாகப் போராடி வருகின்றார். இன்று உள்ளாட்சித் தேர்தல்; அதில் வாக்கு அளிக்க வேண்டிய நிலையிலும், அவரது கிராமத்தில் இருந்து, இதற்காகவே இரவெல்லாம் பயணித்து வந்து இருக்கின்றார். விசாரணையை மாற்ற வேண்டும் என்கின்ற மனு, தள்ளுபடி செய்யப்படும் என்றும், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, மூன்று பேர்களுடைய உயிரையும் உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று சொன்னார்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
19.10.2011

