மேலாண்மை பொன்னுசாமி மறைவு வைகோ இரங்கல்

விவகாரங்கள்: தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 30/10/2017

 

 

 

 


மேலாண்மை பொன்னுசாமி மறைவு

வைகோ இரங்கல்

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.

எனது பக்கத்து கிராமமான மேலாண்மறைநாட்டில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்; ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

தொடக்கப்பள்ளிக்கு மேல் படிக்க வழி இல்லை என்றாலும், தானாகவே வாசிக்கத் தொடங்கி,  இலக்கியத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கதை, கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

தென் மாவட்டங்களில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தனது எழுத்துகளில் பதிவு செய்தார். கிராமத்து மனிதர்களின் மனப்போக்கு, சாதி மதத்திற்கு எதிரான முற்போக்குக் கருத்துகளைப் பதிவு செய்தார். தென் மாவட்ட இலக்கியத்தில் இவரது வழி தனிவழி.

இன்று போல தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத அந்த நாள்களிலேயே, நிறைய சிற்றிதழ்களில்  எழுதினார். பொது உடைமை இயக்க ஏடுகள் தவிர, பொதுவான இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விகடனில் வெளிவந்த முத்திரைக் கவிதைகளில் தொடர்ச்சியாக எழுதி முத்திரை பதித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கி, பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்துப் பெருமை சேர்த்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டி வளர்த்தார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி எழுதி வந்ததால், முதுமையிலும் தளராது இயங்கி வந்ததால், ‘மின்சாரப் பூஎன்ற படைப்பிற்காக சாகித்ய அகடமி விருது இவரைத் தேடி வந்தது. 

எனக்கு நீண்டகால நண்பர். கலிங்கப்பட்டியில் நான் நடத்திய இலக்கிய விழாக்களுக்கு சைக்கிளிலேயே வந்து போவார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, எனது வேட்புமனுவில் ஆதவுக் கையெழுத்து இட்டதுடன், எனக்காகப் பிரச்சாரமும் செய்தார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்கள், இலக்கிய நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாயகம்                                                                    வைகோ
சென்னை - 8                                                  பொதுச் செயலாளர்,
30.10.2017                                                           மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)