விளைநிலங்களைப் பாதிக்கும், கெயில் நிறுவன எரிவாயு திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது வைகோ வலியுறுத்தல்

விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், மருத்துவம், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, அரசியல், வறுமை, புறநகர், அறிவியல் தொழில்நுட்பம்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 07/10/2017

 

 

 

 

 

விளைநிலங்களைப் பாதிக்கும், கெயில் நிறுவன எரிவாயு திட்டத்திற்கு
தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது
வைகோ வலியுறுத்தல்

ந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (Gail) கேரள மாநிலம் கொச்சி, திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரை, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக, 310 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்வதற்காக, 2007 ஆம் ஆண்டு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் இருந்து அரசு ஆணை பெற்றது.

அதற்காக 7 மாவட்டங்களிலும் சுமார் 5,842 பட்டாதாரர்களுக்குச் சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமைகளை ‘பெட்ரோலிய தாதுப்பொருட்கள் குழாய் பாதை’ என்ற திட்டத்தின் கீழ் பெற்றது. விளை நிலங்களில் சுமார் 20 மீட்டர் அகலம், 3 அடி ஆழத்தில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை 2013 இல் தொடங்கியது.

எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதால், நீண்ட வேர்களைக் கொண்ட தென்னை, மா, பலா, வாழை, கொய்யா போன்றவற்றை விளைவிக்கக் கூடாது;
வெங்காயம், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற ஆழம் செல்லாத வேர்கள் கொண்ட பயிர்களையே சாகுபடி செய்ய வேண்டும்;  
எரிவாயு குழாய்கள் செல்லும் 20 மீட்டர் பாதையில் வீடுகள், கட்டிடம், மரம், ஆழ்குழாய் கிணறு, கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது;
பாதையின் ஒரு பகுதியில் இருந்து குழாய் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீரை மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கண்ட பாதையினைத் தாண்டியும் செல்லக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பாலானவை ஒன்று முதல் இரண்டு ஏக்கர் வரையிலான சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலம் ஆகும். எரிவாயு குழாய்கள் நிலத்தில் ஒரு ஓரத்தில் செல்லாமல், விவசாய நிலத்தில் நடுப்பகுதியில் சாகுபடி நிலங்களின் குறுக்கே செல்வதாகத் துண்டாடப்பட்ட நிலத்தில், பாசன நீரை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்லவும் முடியவில்லை.

விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட மிக குறைவான தொகையே வழங்கப்பட்டது.

மேற்கண்ட காரணங்களால் வாழ்வாதாரத்தை இழக்கின்ற நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 7 மாவட்டங்களிலும் விவசாயிகள் கொந்தளித்துப் போராடினர்.

விவசாயிகள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,
2013 மார்ச் மாதம் கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்;
வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களைப் பதிக்க வேண்டும்;
ஏற்கனவே தோண்டியுள்ள குழிகளைச் சமன்படுத்தி, அவற்றை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்;
ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் 2013, ஏப்ரல் 2 ஆம் தேதி கெயில் நிறுவனத்திற்கு மேற்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றம் சென்று தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை ஆணை பெற்றது.  இதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2013 நவம்பர் மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 2014 ஜனவரி 17 இல் சென்னை உயர்நீதிமன்றம் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்தது. 2016 இல் பிப்ரவரி 2 இல் இறுதித் தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று கூறிய உச்சநீதிமன்றம், எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் திட்டத்தைத் தொடரலாம் என்றும், மத்திய அரசின் திட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இன்னும் இவ்வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இந்நிலையில், தற்போது இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. டெல்லியில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தபோது, பெட்ரோலிய அமைச்சகம், கெயில் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்கி ஒரு ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

விளை நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நெடுஞ்சாலையின் ஓரமாக குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் பிடிவாதமாக மறுத்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

கொச்சி - பெங்களூரு, குஜராத் அகமதாபாத் -காந்தி நகர் போன்ற திட்டங்கள் நெடுஞ்சாலை வழியாகவே எரிவாயு கொண்டு செல்கின்றபோது, தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் உத்தரவு போடுவதை ஏற்க முடியாது.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒருபோதும துணை போகக்கூடாது; கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                      வைகோ
சென்னை - 8                                           பொதுச் செயலாளர்,
07.10.2017                                         மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)