அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் கேரள மாநில முதல்வருக்கு வைகோ பாராட்டு

விவகாரங்கள்: மனித உரிமை, தொழிலாளர், தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 09/10/2017

 

 

 

 

 

 

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்
கேரள மாநில முதல்வருக்கு வைகோ பாராட்டு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டில் தந்தை பெரியார் எழுப்பிய முழக்கத்தை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது. கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தோர் 6 பேர்  என்பது சிறப்புக்கு உரியது. கேரள அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம செய்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது வரலாற்றின் வைர வரிகள் ஆகும். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி,  சமூக நீதியைநிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்திய கேரளாவில் பெற்ற வெற்றியை, பெரியார் பிறந்த தமிழகத்தில் ஈட்ட முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது.

தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு படிநிலையாகத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற குரலை எழுப்பினார். அக்கோரிக்கைக்கு செயல் வடிவம் தரும் வகையில் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 1970 டிசம்பரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் புரட்சிகரமான சட்டத்தை இயற்றி, இந்தியாவிற்கு வழிகாட்டினார். இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். உச்சநீதிமன்றம் அப்போது தடை விதிக்கவில்லை என்றாலும் அர்ச்சகர் நியமனத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு பரிகாரம் தேடலாம் என்று தீர்ப்பில் கூறி இருந்தது. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது.

மீண்டும் கலைஞர் ஆட்சியில் 2006 இல் இதற்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சைவ, வைணவ ஆகம பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுவிட்டனர்.

2015 டிசம்பரில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்புக் கூறினர். இதிலும் அர்ச்சகர் நியமனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குப் போட்டால், சட்டப் பரிகாரமே தீர்வு என்றும், சேசம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டதாக கலைஞர் அவர்கள் கூறினார்கள்.

கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்து, தந்தை பெரியார் அவர்களின் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 

தாயகம்                                                                         வைகோ
சென்னை - 8                                                      பொதுச் செயலாளர்,
08.10.2017                                                               மறுமலர்ச்சி தி.மு.க.,
 

இந்த அறிக்கையில் உள்ள செய்திகள் உள்ளடக்கிய பாராட்டுக் கடிதத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு வைகோ அவர்கள் அனுப்பி அனுப்பி உள்ளார்.

 

 

 

 

 

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)