“எந்த சக்தியாலும் எங்கள் பயணத்தைத் தடுக்க முடியாது!” மறுமலர்ச்சி தி.மு.க. திருச்சி மண்டல மாநாட்டில் வைகோ சூளுரை.

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

Date: 
Sat, 19/09/2009

“எந்த சக்தியாலும் எங்கள் பயணத்தைத் தடுக்க முடியாது!” மறுமலர்ச்சி தி.மு.க. திருச்சி மண்டல மாநாட்டில் வைகோ சூளுரை.

திருச்சியில் 15.09.2009 அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடந்தேறியது. இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை....

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து இமையவர் உறையும்
இமயப் பிடர்த்தலையில்
கொடுவரி ஒற்றிக் கொள்கையில் பேர்ந்த

கரிகாலன் உலவிய பொன்னியின் பூமியில், ‘கதிர்மணியின் குவியல் பார், கதலிவாழைத் தோட்டம் பார், செங்கரும்புக் கூட்டம் பார்’ என்று வளம் கொழித்த காவிரிதீரத்தில், தீரர்கள் உலவிடும் திருச்சிராப்பள்ளி மாநகரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், திருச்சி மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், வெள்ளம்போல் திரண்டு இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, வணக்கம்.

தூத்துக்குடியில் இருந்து ஜான்ஸிபார் வரை; டாஸ்மேனியாவில் இருந்து டிம்பக்டூ வரை, இந்தப் பூமிப்பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகின்றார் களோ, அவர்களின் இதயச் சிம்மாசனத் தில் நிரந்தரமாகக் கொலு வீற்று இருக்கின்ற தலைவன் என்று 64 ஆம் ஆண்டு, ‘இல்லஸ்ட்ரேட் வீக்லி’ ஏடு வர்ணித்ததே, அந்தத் தமிழ்த் தாயின் தவப்புதல்வன், நமது சகாப்த நாயகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை, திருச்சி மண்டல மாநாடாக, திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தைத் திடலில், நம் நெஞ்சில் உயிரோவியமாக இடம் பெற்று இருக்கின்ற வீர.இளவரசன் பெயரால் அமைந்து உள்ள அரங்கத்தில், இலட்சக் கணக்கான தமிழர்கள் சூளுரை மேற்கொள்ளத் திரண்டு இருக்கின்ற சூழலில், கொட்டும் மழையில், மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

செப்டம்பர் 15 இல் அண்ணாவின் பிறந்த நாள் மலர்ந்த அந்த நாளில், நூற்றாண்டு நிறைவு விழாவாக மலைக்கோட்டை நகரத்தில் நடத்தப்போகிறோம் என்று அறிவித்த வேளையில், இயக்கத்தின் வீறுகொண்ட தொண்டர் படைத் தம்பிகள், தணல் ஏந்தி வருவார்கள்; அண்ணாவின் சுடரைக் கைகளில் ஏந்தி வருவார்கள்; சூழும் இருள் அகற்ற, இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு மீண்டும் அண்ணாவைக் கொண்டுவந்து நிறுத்த, தமிழகத்தின் நாலாத் திசைகளிலும் இருந்து சுடரை ஏந்தி வருகிறார்கள்’ என்று அறிவித்தேன். அதைப்போலவே, அவர்கள் அந்தச் சுடரை ஏந்தி வந்தார்கள்.

அதிர்ச்சி தருகின்ற ஆபத்துகள், உயிர் களைச் சூறையாடுகின்ற கோரத் தாக்குதல்கள், பயணத்தை இடை மறிக்கப் பாய்ந்தோடும் காட்டு ஆறுகள், நெருப்பை வாரி இறைக்கின்ற எதிர்ப்பு எரிமலைகள், இவையனைத்தையும் ஒருசேர அழைத்துக்கொண்டு வருகின்ற மரண பயங்கரம், அதையும் எதிர் கொண்டு சந்திக்கின்ற தீரர்கள் கூட்டம் தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீரர்களின் கூட்டம் என்பதை நாட்டுக்கு நினைவூட்டுகின்ற வகையில் சுடர் ஏந்தி வந்தார்கள். இந்தச் சுடரை ஏந்துகின்ற தகுதி எங்களுக்கு உண்டு.

ராபின்சன் பூங்காவில் அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கம், ஆற்றலா ளர்களைக் கொண்டு தொடங்கிய இயக்கம்.வானம் முழங்கிடும் மீனம் படினும், அலைகள் பொங்கினும் மலைகள் வீழினும், தன்னிலை மாறாத தன்மையாளரான அண்ணாவால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம்.

‘கோடானுகோடி மக்கள் நெஞ்சில், இதோ ஒரு மாமனிதன் இருக்கிறார்; அவர்தான் எம்.ஜி.ஆர்’ என்று அண்ணா சுட்டிக்காட்டியதை நினைவூட்டினாரே ஓ.பன்னீர்செல்வம், அந்த மக்கள் திலகத்தை அரவணைத்து, ‘தம்பி வா, தலைமை ஏற்க; உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம்’ என்று நடமாடும் பல்கலைக் கழகமாம் டாக்டர் நாவலரை சுட்டிக்காட்டி, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர், அண்ணன் அன்பிலார், மன்னை என கணக்கற்ற அறிவாளர்கள் அனை வரையும் அரவணைத்து உருவாக்கிய இயக்கம், இரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கிய இயக்கம்.

தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, எங்களை வெறுக்க முடியாமல் உள்ளுக்குள் நேசித்துக் கொண்டு இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய தோழர்களே, அண்ணாவை இதயத்தில் வைத்து வணங்குகின்ற அண்ணாவின் தம்பிகளே,
எந்த மண்ணிலே அண்ணா அவர்கள், 1950 ஜனவரி தலைநாளில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினாரோ, அதற்கு ஆறாண்டுக் காலம் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் பிரவேசிப்பதா? இல்லையா?, ஜனநாயகத்தின் உரைகல் இந்த இயக்கம் என்பதை நாட்டுக்குக் காட்டுகின்ற விதத்தில், மாநாட்டுப் பந்தலில் வாக்குப் பெட்டிகளை வைத்து வாக்கு அளிக்கச் சொல்லி, மாற்றத்தைக் கொண்டுவரத் தேர்தலைச் சந்திப்பதே ஏற்றது, பொருத்தமானது என்று பெரும்பான்மையோர் வாக்கு அளித்துத் தீர்மானித்தத் திருச்சி மாநகரில் கூடி இருக்கின்றோம்.

தமிழகத்தைச் சூழ்ந்து இருக்கின்ற இருளில் இருந்து, நம்மைக் காக்கின்ற ஒரே தலைவர் அண்ணாதான். அண்ணா மறைந்துவிட்டார், கடல் அலைகள் தாலாட்டுகிற வங்கக் கடற்கரை மணலுக்கு உள்ளே அல்லவா கண் உறங்குகின்றார் என்று யாராவது கூறினால், ‘இல்லை, அண்ணாவுக்கு மரணம் இல்லை, அண்ணா வாழுகிறார், நம்மை வழி நடத்துகிறார், அண்ணாதான் இந்தத் தமிழகத்தை மீண்டும் எழுப்ப முடியும், தாழ்ந்து, தரம் இழந்து, தன்மானம் கெட்டு, அதலபாதாளத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிற இந்தத் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பித் துhக்கி நிறுத்த முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, சூளுரைப்பதற்காக இந்த மாநாடு.

என் நெஞ்சில் அலைமோதுகின்ற பல உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள அல்ல, உங்கள் நெஞ்சில் விதைப்பதற்கு ஒரு வாய்ப்பு. என்னுடைய வாழ்நாளில், மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா? எனக்குத் தெரியாது. ஆகவேதான், கார்மேகங்கள் சூழ்ந்து, இடிமுழக்கங்கள் எழுந்தபோது, வானத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு மின்னல் கீற்றாகப் பாய்ந்தபோது, பெருமழை கொட்டியபோது, ‘ஓ.பி.எஸ். அவர்களும் நீங்களும் பேசி முடியுங்கள்’ என்று என்னுடைய அன்புச் சகோதரர்கள், பேச வேண்டியவர்கள், உரையாற்ற வேண்டிய இயக்கத்தின் காவலர்கள், தலைமைக் கழகத்தைக் கட்டிக் காக்கின்றவர்கள் வந்து சொன்னபோது, ‘மழை பொழிந்தாலும் பரவாயில்லை, அனைவரும் பேசட்டும்’ என்று சொன்னேன். இயற்கை வாய்ப்பு கொடுக்குமானால் நாம் பேசுவோம் என்று கருதினேன்.

இது ஒப்புக்குப் பேசுகிற பேச்சு அல்ல. அல்லது, இன்றைக்கோ நாளைக்கோ வரப்போகிற தேர்தலை மட்டும் நினைத்துப் பேசுகிற பேச்சு அல்ல. எந்தக் கொள்கைகளுக்காக இளமைப் பருவத்தில் இருந்து இந்த வாழ்க்கையை, இங்கே இருக்கிற நாம் எல்லோரும் ஒப்படைத்துக் கொண்டோமோ, நம் கண் முன்னால் எல்லாம் பாழாகி நாசமாகிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைமையில், அதில் இருந்து மீட்பதற்கு ஒரு வழிகாட்ட அண்ணாவைக் காட்டுவோம் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.

நான் பகுத்தறிவுவாதி, அடுத்த பிறப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால், என்னுடைய எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த மேடையை அமைத்துத்தந்த மலர் மன்னனை, நடராசனை அவர்களுக்குத் தோள் கொடுத்து நின்ற இரண்டு மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகளை, அவர்கள் ‘எள்’ என்றால் எண்ணெயைத் தந்த ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்களை, தொண்டர்களை, எண்ணுகையில்,

‘பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல், உங்களை மறவாமை வேண்டும்’

என்ற மொழியை எண்ணிப் பார்க்கிறேன்.

முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அண்ணா வருகிறார் திருச்சிக்கு, தந்தையைக் காண. நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவன் என்று கூறிவந்த, அந்த ஈரோட்டு எரிமலையைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றார். அந்த அண்ணன், முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றதற்குப் பின்னர் திருச்சிக்கு வந்தார். ஒருபோதும், கோடீஸ்வரர்கள் வீட்டைத் தேட மாட்டார் அண்ணா. எங்கே மலர் மன்னன்? அவர் வீட்டுக்கு உணவருந்த வருகிறேன் என்று வந்தாரே, அதை மின்னல் முகமது அலி இங்கே கண்காட்சியாக வைத்துக் காட்டினாரே, அந்த மலர்மன்னன் மாநாட்டுக்குத் தலைமை ஏற்க, அண்ணாவின் கொள்கைக்காகவே போராடிக்கொண்டு இருக்கிற ஒரு வீரச்சிங்கம் மண்ணச்ச நல்லுhர் நடராசன் இந்த மாநாட்டைத் திறந்து வைக்க, அவர்கள் அமைத்துத் தந்து இருக்கிற இந்த மேடையில் இருந்து, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்களைக் கேட்கிறேன்.

அண்ணா மறைந்தபிறகு கட்சி உங்கள் கையில்; கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சக் கோவிலில் அணையாத தீபமாக ஜொலித்துக் கொண்டு இருக்கிற எம்.ஜி.ஆர். அவர்கள் உங்களைத் தலைவர் நாற்காலியில் உட்கார வைப் பதற்குத் தோள்கொடுத்தார். கட்சி - ஆட்சி - அனைத்தும் உங்கள் கையில். ஐந்துமுறை நீங்கள் முதல் அமைச்சர். முதலமைச்சர் அவர்களே, அண்ணா வுக்கு அடுத்த நூற்றாண்டு என்றால் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துத்தான் வரும். அப்படிப்பட்ட முதலாவது நூற்றாண்டு தொடங்கியது கடந்த வருடம். நிறைவு பெற்றது இந்த வருடம்.

இப்போது நீங்கள் நாட்டுக்கு முதல் அமைச்சர். ஏன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் அண்ணாவுக்கு விழா நடத்தவில்லை? என்று, மதுரையம் பதியில் நாங்கள் மாநாடு நடத்தியபோது கேட்டோம். செப்டம்பர் 15 இல் பிறந்த நாள் விழா கொண்டாடாமல், 21 ஆம் தேதி திருச்சி நகரத்தில் உங்கள் பெயரில் ஒரு மண்டபத்தைக் கட்டி, அந்தத் திறப்பு விழாவோடு சேர்த்து நடத்துவதாகச் சொல்கிறீர்களே? என்று கேட்டோம்.

இது ரமலான் நோன்புக் காலம். என்னுடைய இÞலாமிய சகோதரர்களுக்குச் சொல்வேன்.

‘நூல் இழையைப் போல் காட்சி அளிக்கின்ற பிறையே, உன்னுள்ளே பூரணசந்திரன் பொதிந்து கிடக்கிறானே’ என்று கவிஞர் இக்பால் சொன்னாரே, அந்தப் பிறை தோன்றுகின்ற நாளில் ரமலான் தொடக்கம்; மீண்டும் பிறை தொடங்குகிற நாளில் ரமலான் நிறைவு.

எந்த இஸ்லாமியன் இதை மாற்ற ஒப்புக் கொள்வான்?

எந்தக் கிறிஸ்தவன், கிறிஸ்துமஸ் பண்டிகையை வேறு ஒரு நாளில் நடத்த ஒப்புக் கொள்வான்?

எந்த முருக பக்தன், விசாகத் திருநாளை வேறொரு நாளில் கொண்டாட ஒப்புக் கொள்வான்?

நாங்கள் மதவாதிகள் அல்ல.

லிங்கனின் நூற்றாண்டை வேறொரு நாளில் அமெரிக்கர்கள் கொண்டாடுவார்களா? மாவோவின் நூற்றாண்டை, மஞ்சள் நதிக்கரையில் அவனை நேசித்த எந்தக் கம்யூனிஸ்டுத் தோழன், வேறொரு தேதியில் நடத்த ஒப்புக் கொள்வான்? பாட்டாளித் தோழர்களின் புரட்சிக் கொடியை உயர்த்திய லெனின் நூற்றாண்டை, ஒரு பொதுவுடைமை தோழர் வேறொரு தேதியில் நடத்த ஒப்புக் கொள்ள மாட்டார்.

ஆனால், நீங்கள், அண்ணாவின் பிறந்தநாளை, சென்ற ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாளில் நடத்தினீர்கள்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர், அண்ணா நூற்றாண்டு விழாவுக்கு அரசு விடுமுறை என்று அறிவித்த செய்தி வந்தபிறகு, அண்ணா நூற்றாண்டுத் தொடக்கவிழாவை அரசு விடுமுறை என்று நீங்கள் அறிவித்தீர்கள்.

இப்பொழுது நான் கேட்கிறேன்.

எதற்கெல்லாமோ விடுமுறை விடுகிறீர்களே, ஏன் நீங்கள் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அரசு விடுமுறை அளித்துக் கொண்டாடவில்லை? (பலத்த கைதட்டல்)

உங்களுக்கு எத்தனை விழாக்கள் கொண்டாடுகிறீர்கள்? ஐந்துமுறை முதல்வராக இருந்த கலைஞர் அவர்களே, உங்களைக் கேட்கிறேன். ஒருமுறையாவது நாட்டின் தலைமை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாவுக்கு நீங்கள் விழா எடுத்தது உண்டா? ஒருமுறையாவது? உங்களுக்கு எத்தனை விழாக்கள்?

ஆண்டு முழுவதும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்? வடநாட்டுத் தலைவர்கள், தென்னாட்டுத் தலைவர்கள் எல்லோரையும் அழைத்து வந்து கொண்டாடுகிறீர்கள்.

எல்லா வாய்ப்பு வசதிகள், ஆள் - அம்பு - பரிவாரம் - ஐஸ்வரியம் என எல்லாம் குவிந்து இருக்கிறபோது, அதிகார பீடத்தில் இருந்த போதும் இல்லாதபோதும், ஏன் மாநில முதல்வர்கள், கட்சிகளின் தலைவர்களை அழைத்துவந்து அகிலம்வியக்க அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை?

1969 ஆம் ஆண்டே மறைந்து விட்டார் அண்ணா. இது 2009. கடந்த 40 ஆண்டுகளில் என்றாவது ஒரு முறை யாவது அகிலம்போற்ற அண்ணாவுக்கு நீங்கள் விழா நடத்தியது உண்டா? உங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரம் பதவியை வைத்துச் சொல்கிறேன். உங்களுக்கு இருக்கிற அதிகாரச் செல்வாக்கை வைத்துச் சொல்கிறேன். நீங்கள் நினைத்தால், முயன்றால், உலகத் தலைவர்களைக்கூட அழைத்துக் கொண்டுவந்து நடத்தி இருக்கலாம். ஏன் உலகம் போற்றுகின்ற நெல்சன் மண்டேலா உள்பட தலைவர்களை அழைத்துக் கொண்டுவந்து விழா நடத்தி இருக்கலாம். ஏன் நடத்தவில்லை?

ஆனால், உங்களுக்கு விழா நடத்த, உங்கள் பிள்ளைகளுக்கு விழா நடத்த, பட்டாபிஷேகத்துக்கு ஒத்திகைபார்க்க, எத்தனை விழாக்கள்? பிறந்த நாள் விழா மட்டுமா? 38 ஆண்டுகள் மட்டுமே சட்டமன்றத்தில் இருந்துவிட்டு, ஐம்பது ஆண்டு பொன்விழா என்று ஒரு போர்ஜரி விழா நடத்தினீர்களே, அந்த விழாவுக்கு நீங்கள் அழைத்தபோது, மாட்சிமை தங்கிய அப்துல் கலாம் உண்மையை அறிந்து, அந்த விழாவில் முகத்தைக் காட்டினால் தனக்கு அவமானம் என்று தவிர்த்துக் கொண்டார். காங்கிரசின் கைப்பொம்மையாக இயங்கிக் கொண்டு இருந்த நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியைக் கொண்டுவந்து சட்டசபையில் உட்கார வைத்து கொண்டாட்டம் நடத்தினீர்கள். மறுநாள் தீவுத்திடலில், மத்திய ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்ற சோனியா காந்தியையும் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து விழா நடத்தினீர்கள். இத்தனை விழாக்களையும் உங்களுக்கு - உங்களுடைய குடும்பத்தினருக்கு நடத்த முடிகிறது. ஏன் அண்ணாவுக்கு நடத்தவில்லை?

ஒருவகையில் நல்லதுதான். அண்ணாவின் கொள்கைகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்ட கலைஞர் கருணாநிதி, இந்த விழாவை நடத்தினால் கல்லறைக்கு உள்ளே இருக்கிற அண்ணாவுக்குக்கூட மனதில் அல்லவா புழுக்கம் ஏற்படும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சொல்கிறேன். நாங்கள் சாமான்யர்கள். நாங்கள் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இல்லாதவர்கள். ஆனால், அண்ணாவுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய உத்தமர்களாக இந்த இயக்கம் இருப்பதால், 1994 இல், 1600 கிலோ மீட்டர் எழுச்சி நடைப்பயணம் நிறைவு பெறுவதும் அண்ணா பிறந்த நாளில்தான் என்று அறிவித்தோம். பத்து ஆண்டுகள் கழித்து 2004 இல், நதிகள் இணைப்புக்காக 1200 கிலோ மீட்டர் மறுமலர்ச்சி நடைப்பயணம் நிறைவு பெறுவதும் அண்ணா பிறந்த நாளில்தான் என்று அறிவித்தோம். 1998 ஆம் ஆண்டு, இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களையும் அழைத்துக் கொண்டுவந்து இலட்சக்கணக்கானவர்கள் திரண்ட மறுமலர்ச்சிப் பேரணி கடற்கரை மாநாட்டையும் நாங்கள்தான் நடத்தினோம்.

அண்ணா நூற்றாண்டு தொடக்கவிழா மாநாட்டை மதுரையில் நடத்தினோம். நிறைவு விழாவை இன்றைக்கு இங்கே திருச்சியில் நடத்துகிறோம்.
இந்த விமர்சனங்களுக்கு அஞ்சித்தான், கலைஞர் கருணாநிதி ஒரு அறைக்கு உள்ளே அண்ணா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார். நாணயம் வெளியிடுகின்ற விழாவாம். இன்னும் சில நாள்கள் கழித்து, 26 ஆம் தேதி காஞ்சியில் விழா. அண்ணாவின் பெயரைச் சொல்லி விழா நடத்திக்கொண்டு, அங்கேயும் பல்லாண்டு பாடுவது எல்லாம் கருணாநிதிக்குத்தான்.

எந்தத் திருச்சி மாநகரில், 1964 ஆம் ஆண்டு சிங்கத் தமிழன் சின்னச்சாமி தன் உயிரைக் கொடுத்தானோ, செந்தமிழுக்காக. அந்தத் திருச்சியில், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறோம். நமது இயக்கத்தை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பார்த்தார்.

தழலை எடுத்துக் கொண்டுவந்த தம்பிமார்களுக்குச் சொன்னேனே, அந்தச் சுடரைக் கொண்டுவருகின்ற தகுதி நமக்குத்தான் உண்டு. கருணாநிதியின் குடும்ப அரசியல் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றுதான், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஐந்துபேர் தீக்குளித்து மடிந்தார்கள். நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், கோவை காமராசபுரம் பாலன். இவர்களெல்லாம் நெருப்புக்குத் தங்கள் ஆவியைத்தந்து மடிந்தார்கள். அந்த நெருப்பின் மடியில் பிறந்த கட்சிதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

எரிமலையின் சீற்றத்தைக் கண்ட இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று கருதி கலைஞர் கருணாநிதி தொடுத்த பாணங்கள் எத்தனை? ஏவிய அஸ்திரங்கள் எத்தனை? மறுமலர்ச்சி தி.மு.கழகமா? அப்படி ஒரு கட்சி இருக்கிறதா? வைகோ என்கின்ற ஒரு நபர் அரசியல் அரங்கத்தில் உலவுகிறானா? என்று கேட்டார்.

எங்கே இருக்கிறது மறுமலர்ச்சி தி.மு.க. என்று கேட்டீர்களே, இடி ஓசைக்குப் பின்னரும் இங்கே திரண்டு இருக்கிற கூட்டத்தைப் பார்! பொங்கிவரும் பிரளயம் என எழுந்து இருக்கிற என் கண்மணிகளைப் பார்! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க கங்கணம் கட்டி இன்று வரையில் அஸ்திரங்களை ஏவி வருகிறார்.

அழிக்க முடியாது. புராணத்தில் இப்படித்தான் பாண்டவர்களை அழிக்கத் திட்டமிட்டான் துரியோத னன். வஞ்சக சகுனியின் யோசனையைக் கேட்டு, வாரணாவதத்தில் கட்டப்பட்ட அரக்கு மாளிகைக்கு உள்ளே பாண்டவர்களை வைத்துத் தீ வைக்க, விண்ணை முட்டுகின்ற விதத்தில் தணல்பற்றி எரிய, அந்த நெருப்புக்கு உள்ளே சிக்கிய பாண்டவர்கள், தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், குந்தி தேவி என பாண்டவர்கள் எல்லோரும் நெருப்பில் கருகிச் சாம்பலானார்கள் என்று குதூகலித்துக் கிடந்தான் துரியோதனன்.

ஆனால், அவர்கள் மடியவில்லை. சாம்பலாகவில்லை. மீண்டு வந்தார்கள். குருஷேத்திரப் போர்க்களத்துக்கு வந்தார்கள். நரிக்கூட்டங்களின் மீது சிங்கங்கள் பாய்வதைப் போலப் பாய்ந்தார்கள். கெளரவர் கூட்டத்தைச் சின்னாபின்னமாக்கினார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கலாம் என்று நினைக்கக்கூடிய கருணாநிதிக்குச் சொல்வேன். கொள்கைக்காகவே வாழுகின்ற இந்தக் கூட்டத்தையும், எந்தக் காலத்திலும் நீங்கள் அழிக்க முடியாது.

நாங்கள் இந்த மாநாட்டை நடத்துவதற்குத் தேர்ந்து எடுத்து இருக்கிற இடம் திருச்சி. சரித்திரத்தில் புகழ் வாய்ந்த இடம். ஆயிரம் மடங்கு அக்ரோணி சேனைகள் வந்தாலும், எதிர்த்துப் போரிடுகின்ற உறுதி உலவிய பூமி.

இதே மண்டிலத்தில், அன்றைக்கு ஒரு மன்னன் பட்டத்து யானை மீது அமர்ந்து போனான். மதர்த்து வருகிற யானையை, ஒரு சேவல் எதிர்த்தது. துதிக்கையின் மீது பாய்ந்து கொத்தியது. யானை மிரண்டது. திடுக்கிட்டுப் போனான் மன்னன். இந்த மண்ணுக்கு வீரம் இருக்கிறது. இனி, நான் உறையும் ஊர் இந்த ஊர்தான். நான் அமைக்கும் தலைநகரம் இந்த ஊரில்தான் என்று உறையூரைத் தலைநகரமாக ஆக்கினான். அவன்தான் கரிகாலன்.

அப்படி வீரம் கொப்பளித்த மண்ணில், பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் அஞ்சாத வேலும் வாளும் தாங்கிய பாஞ்சாலங்குறிச்சிப் படை வீழ்த்தப்பட்டு, கட்ட பொம்மனைத் தூக்கில் இட்டபிறகு, ‘நம்பி வந்த ஊமைத்துரைக்காக நாங்கள் தலை கொடுப்போம்’ என்று மருது பாண்டியர்கள் வாள் ஏந்திப் போக்களத்துக்குச் செல்கின்ற வேளையில், பிரிட்டிஷ் படைகளின் பீரங்கித் துப்பாக்கிகளுக்கு அஞ்ச மாட்டோம் என்ற சின்ன மருதுவின் பிரகடனம் ஒட்டப்பட்ட தலைநகரத்தில்தான், இந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

‘அண்ணாவின் இலட்சியப் பயணம்’ என்ற வாசகங் களைத் தாங்கிய ஒரு கப்பல் இங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது. என்ன நேர்த்தியாக அமைத்து இருக்கிறார் கள் - மலர்மன்னனும், நடராசனும், ஷேக்கும்! ஆம்; நீலக் கடலை நினைவூட்டுகின்ற நீரலைகளுக்கு மத்தியில் கப்பல். துள்ளியோடும் மீன்கள் அங்கே. அந்தக் கப்பலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓங்கி உயர்ந்த கொடிக் கம்பத்தில் எங்கள் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

1942 ஆம் ஆண்டு தமிழகத்தின் அரசியலில் முதன் முதலாக திராவிட இயக்கச் சரித்திரத்தில், ‘மறுமலர்ச்சி’ என்ற பெயரைப் பயன்படுத்தி, ஒரு அமைப்பை உருவாக்கினார் அண்ணா. 1942 இல், ‘மறுமலர்ச்சி மன்ற’த்தைக் காஞ்சிபுரத்தில் அமைத்த அண்ணா அவர்கள், 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி, ‘திராவிட நாடு’ இதழைத் தொடங்குகிறார். அதுதான் முதல் இதழ். அந்த முதல் இதழில், அண்ணாவின் தலையங்கம். வருங்காலத்தில் நம்மைப் போன்ற தம்பிகள், அவர்களுடைய வழிவந்தவர்கள், எந்தத் திசையில் செல்வது என்று திகைக்கக்கூடாது என்பதற்காக அன்றைக்கே எழுதுகிறார்.

அவர் எழுதுகிற தலைப்புக்குப் பெயர் “கொந்தளிப்பில்”. அதில் அவர் வடித்த வாசகங்களை அப்படியே சொல்கிறேன். இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது தெரியுமா? எப்படித்தான் சத்யாவுக்கும், மலர் மன்னனுக்கும், நடராசனுக்கும் இந்த எண்ணம் வந்ததோ? எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது! கப்பல் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? அண்ணாதான் கொடுத்து இருக்கிறார்.

அண்ணாவின் வழிவந்த தம்பிகள் அல்லவா? இந்தப் பிள்ளைகள் மனதில் இந்த எண்ணங்கள் ஏற்பட வேண்டும் என்றுதான் ஒரு கப்பல் அமைக்கச் சொல்லி இருக்கிறார். அந்த இதழ் உரையில் சொல்கிறார்.

‘காற்று அடிக்குது. கடல் குமுறுது. கப்பல் பயணத்தைத் தொடங்கி விட்டது. இருண்ட வானம், சுருண்டு எழும் அலைகள். ஆனாலும் பிரயாணம் நடந்தே தீர வேண்டும். கொந்தளிப்பிலும் கப்பல் சென்றுதான் ஆக வேண்டும்.’

இதுதான் அண்ணாவின் முதல் தலையங்கம்.

அவர் திராவிட நாட்டில் முதன்முதலாக எழுதிய தலையங்கத்தின் முதல் வாசகமே ‘கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கி விட்டது. மையிருட்டில் அலைகளுக்கு மத்தியில் செல்கிறது. பயணம் கடினம்தான். ஆனால், அதை நடத்தித்தான் தீர வேண்டும்’ என்று சொன்னாரே, அப்படிப்பட்ட பயணத்தை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சூறைக்காற்றுக்கும் சுறாமீனுக்கும் அஞ்சாது இந்தக் கலத்தைச் செலுத்த முடியும் என்பதனால்தான், ஆழிப்பேரலையே வந்தாலும் எதிர்த்துச் செல்லக் கூடிய அதை நடத்திச் செல்லக்கூடிய தீரர்கள்தான் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார்கள். எண்ணற்ற கிரகங்களை உள்ளடக்கிய இந்த அண்ட பகிரண்டமே வெடித்துச் சிதறினாலும், நீலவிதானத்து நித்திலப் பூக்களைப்போலச் சிதறிக் கிடக்கின்ற இலட்சக் கணக்கான நட்சத்திரங்களே நொறுங்கி விழுந்தாலும், பர்வதங்களே நடுங்கிச் சாய்ந்தாலும், பெருங்கடலே பிரளயமாக எழுந்து வந்தாலும், எதற்கும் அஞ்சாது செல்லக்கூடிய வீரர்கள்தாம் மறுமலர்ச்சித் தீரர்கள்.

‘To Strike, to strive and not to yield' ‘எந்தச் சோதனைகள் வந்தாலும், கடலில் போய்க்கொண்டே இருக்கும் என்னுடைய கப்பல்’ என்றான் கிரேக்க புராணத்திலே யுலிசெஸ்.

‘இதோ புறப்பட்டு விட்டோம்;’ 1956 நவம்பர் 25 ஆம் தேதி கிராண்மா கப்பலில் புறப்பட்டபோது சொன்னான் ஃபிடல் காஸ்ட்ரோ, ‘ஒன்று மடிவோம், அல்லது வெல்வோம்.’ என்று.

நாங்கள் இந்தக் கப்பலை இங்கே அமைத்து இருப்பதற்குக் காரணம், அண்ணா என்கின்ற கலங்கரை தீபம், எங்களுக்கு வழியையும் வெளிச்சத்தையும் காட்டுகிறது. எங்கள் பயணத்தை எந்தச் சக்தியும் தடுக்க முடியாது’ என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்! எப்படிப்பட்ட காலகட்டத்தில் இந்தப் பயணம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது?

பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகள், அவருடைய இலட்சியங்கள் எல்லாம் நாசமாக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகி இருக்கிற நேரத்தில் நாம் இந்தப் பயணத்தை நடத்துகிறோம்.

ஜனநாயகத்தின் பேரொளியாகத் திகழ்ந்தார் அண்ணா. இங்கே எனக்குமுன்பு உரையாற்றியவர்கள் குறிப்பிட்ட தைப்போல, மாளிகையில் இருந்த அரசியலை மண்குடிசைக்குக் கொண்டு வந்தவர் அண்ணா. ஆனால், இன்று ஜனநாயகம் அழிக்கப்படுவதற்கு உயிர்க் கொல்லிகளை ஏவிவிட்டார் கருணாநிதி.

அவருடைய பணநாயகமும், வாரிசு அரசியலும், அதுவும் ஊழலில் திரட்டப்படுகிற பணநாயகம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் திரட்டப்பட்ட பணத்தால் நடத்தப்படுகிற பணநாயகம். பரம்பரை வாரிசு பாத்தியதையைக் கொண்டாடுகிற குடும்ப அரசியலும் ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கின்ற கொடுமைகளைச் செய்து கொண்டு இருக்கிறது.

தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்.........

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)