அறிஞர் அண்ணாவின் மறுமலர்ச்சிப் பாதை! வைகோ கடிதம்

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: கடிதங்கள்

Date: 
Mon, 14/09/2009

அறிஞர் அண்ணாவின் மறுமலர்ச்சிப் பாதை! வைகோ கடிதம்

வான்புகழ் கொண்ட வரலாற்று நாயகர்கள் காலத்தை வென்ற காவியத் தலைவர்கள் ஆவர். இப் பூவுலகம் எங்கும் அம்மாமனிதர்களின் பிறந்த நாளினைப் போற்றிடும் திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்வர். தமிழ்கூறும் நல்லுலகம் தவம் இருந்து பெற்ற தமிழ்த்தாயின் புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் 15ஆம் நன்னாளை தமிழ்க்குலம் கொண்டாடுகிறது. வரப்போகும் நூறுநூறு தலைமுறைகளும் உச்சிமேல் வைத்து மகிழ்ந்து கொண்டாடும் பெருமை பெற்ற காஞ்சித் தலைவனின் பிறந்த நாளினை உரிமையோடு விழா எடுக்கும் இயக்கம் தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.

முடிவுடை வேந்தரையும், நுண்மாண் நுழைபுலத்தால் உயர்ந்தோரையும் அவர்தம் ஒளி தொழுது ஏத்தும் மரபினை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பெற்று இருந்தனர். அப்பெருமக்களின் பிறந்த நாளினைக் கொண்டாடும் வழக்கத்தை தொல்காப்பியத்தின் பொருளதிகாரம்

“சிறந்த நாளினை செற்றம் நீக்கிப்
பிறந்த நாள் வயின் பெருமங்கலமும்”

என வர்ணிக்கிறது.

‘பிறந்த நாள் பெருமங்கல நாள்’ எனப்படும். பிறந்த நாள் வருங்காலம் போர் நிகழுங்காலமானால் மன்னர் போருக்குரிய சினத்தை நீக்கிப்போரை நிறுத்தச் செய்வர். மக்களுக்கு வரி நீக்கம் செய்து ஈகைபுரிந்து அறஞ்செய்வர். வெண்ணிறப் புத்தாடை உடுத்திப் பல்லோர் வாழ்த்தப் பெருமங்கலம் பெறுவர்.

“அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன்
பிறந்தநாட் சிறப்புரைத்தன்று”

‘அறத்தை உண்டாக்கும் செங்கோன்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது’ என பாடாண் படலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது.

சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டம் நீர்ப்பாடை காதையில் வடபுலத்து மன்னர்களின் மதில்களை அழித்து வாகைசூடிய குடநாட்டு மன்னனாகிய சேரன் செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவில் பகை அரசர்களின் கால் விலங்குகள் அகற்றப்படும். அன்று எருதுகளின் கழுத்துகளிலும் நுகத்தடியைப் பூட்டுவதில்லை என இளங்கோ கூறுகிறார். எந்தப் பகலையும்விட மன்னன் குலோத்துங்கனின் பிறந்த நாள் பகல் சிறந்தது என்று கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் பாடினார். அத்தமிழர்தம் மரபுப்படி அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் புகழ்பாடுகிறோம். ஆகÞட் 15 இந்தியாவின் விடுதலை நாள். செப்டம்பர் 15 தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி நாள் ஆகும். செப்டம்பர் 15 இல் தான் 1821 இல் எல்சால்வடார் நாடும், கெளதமாலா நாடும், கோÞடாரிகா நாடும் விடுதலை பெற்றன.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்கவிழாவினை வைகைக் கரையில் நான்மாடக்கூடலில் மதுரை மண்டல மாநாடாகக் கொண்டாடினோம். இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அண்ணாவின் இலட்சியங்களின் வீர முழக்கம் அங்கே எழுந்தது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் 1998 செப்டம்பர் 15 இல் அண்ணன் கண் உறங்கும் வங்கக் கடற்கரையில் பார் புகழும் வகையில் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் பங்கேற்க விழா எடுத்தோம். திராவிட இயக்கத்தின் கருவறைகளில் ஒன்றான திருச்சியில் நிறைவு விழா நடத்துகிறோம். இங்குதான் 1917 அக்டோபரில் உறையூர் நாச்சியார் அம்மன் கோவில் தெரு இராம மடாலயத்தில் உருவான திராவிட சங்கத்தில் பி.டி.தியாகராயரும், டி.எம்.நாயரும் கலந்து கொண்டனர். டி.எÞ.பொன்னுசாமி தேவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் கூரத்தாழ்வார், சிவப்பிரகாசம் பிள்ளை, கரூர் சிவானந்த முதலியார், இரங்கய நாயுடு, வீரபிள்ளை பங்கேற்றனர். நீதிக்கட்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம், இரத்தினவேலு தேவர், தி.போ.வேதாசலம், கே.எம்.பாலசுப்பிரமணியம், சிவஞானம் பிள்ளை, தங்கவேல் பிள்ளை பணியாற்றினர்.

இம் மலைக்கோட்டை நகரில்தான்,

1923 இல் பிராமணர் அல்லாதார் மாநாடு
1932 இல் துறையூர் தமிழர் மாநாடு
1933 இல் திருவரங்கம் சுயமரியாதை இயக்க மாநாடு
1935 இல் பிராமணர் அல்லாதார் மாநாடு
1936 இல் சுயமரியாதை சமதர்ம மாநாடு
1937 இல் மூன்றாவது தமிழர் மாநாடு நடைபெற்றன.

வேழத்தையும் கோழி எதிர்த்த இந்த வீரபூமியில் இருந்துதான் 1938 ஆகÞட் 1 இல் இந்தி எதிர்ப்புப் படையை அஞ்சா நெஞ்சன் அழகிரி நடத்திச் சென்றார்.

1944 ஆகÞட் 27 இல் சேலத்தில் திராவிடர் கழகம் எழுந்தபின், 1945 செப்டம்பரில் திருச்சியில் நடைபெற்ற கழக மாணவர்களின் மாநில மாநாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நாவலர் பங்கேற்றனர். மறுமாதத்தில் பெரியார் கருஞ்சட்டை தொண்டர் படை அமைத்தார். 1946 மார்ச் 17 இல் திருச்சி சோளிங்கநல்லூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் அர்ஜூனன் தலைமையேற்றார்.

1949 இல் அண்ணாவின் ஆரிய மாயைக்கு அரசின் தடையும், அண்ணாவுக்கு சிறையும் அமைந்தன. 1949 செப்டம்பர் 17 இல் கழகம் முகிழ்த்த நான்கு மாதங்களுக்கெல்லாம் திருச்சியில் கூடுகிறோம் என்று அண்ணா வர்ணித்த முதல் தி.மு.க. மாநாடு 1950 ஜனவரி முதல் நாள் முருகன் திரையரங்கத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி வள்ளிமுத்து தலைமையேற்க, பெத்தாம்பாளையம் பழனிச்சாமி துவக்கி வைக்க, சங்கரன் வரவேற்புக்குழுத் தலைவராகப் பணியாற்ற, இம்மாநாட்டில் கலைவாணர் பாடல் இசைக்க, அண்ணாவின் சந்திரமோகன் நாடகத்தில் அவரும் ஈ.வி.கே.சம்பத்தும், நடிப்பிசைப் புலவரும் நடித்தனர்.

17 ஆண்டுகள் கழித்து 1967 செப்டம்பர் 17 இல் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா திருச்சியில் நடந்தது. அன்பில் தர்மலிங்கம் சாரத்தியம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பெரியாரும், அண்ணாவும் அமர்ந்துவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இடைப்பட்ட காலத்தில் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் இலட்சோப இலட்சம் வாலிபர்களை அவரது பாசறையில் கொண்டுவந்து சேர்த்தது. நானிலத்தில் எந்த இனமும் பெற்றிடாத பெருமை கொண்டு புகழ்மிகு இசைபட வாழ்ந்த இனமாம் தமிழ் இனம், தாழ்ந்து கிடப்பதோ என்ற அண்ணாவின் முழக்கம் ஒரு பிரளயத்தின் வலிவு கொண்டு எழுந்தது.

1956 மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் மாநில மாநாட்டுக்கு ‘அன்பில் அழைக்கிறார்’ எனும் தலைப்பில் தம்பிக்கு அண்ணா எழுதிய மடலில் நம் நாடி நரம்புகளில் கிளர்ச்சி ஊட்டும் அம்மடலில் தேன்பாயும் அத்தமிழைக் காணுங்கள்.

“திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கொடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும். கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும்.

இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணைநின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து சிந்தைக்குப் புதுவிருந்து கிடைத்தது.”

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து” நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டுவந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது - இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறைகூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித்திடக் காண்கிறோம்!

சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று, செய்வதென்ன வென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான், ‘கள்ளத் தோணி’ என்றல்லவா ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலைமுடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க ‘அனுமதி’ கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான்.

ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன். விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக்கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர் தம் வழிவந்தோர், பிற்காலப் புலவர்கூட, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!” என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில் செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா, கதற வேண்டி இருக்கிறது.

கலங்கா உள்ளம் படைத்தோரே கடமையை உணர வாரீர்! கருத்தளிக்கவும், காரியமாற்றவும் திரண்டு வாரீர்! அன்னையின் பணிக்காக அருமந்த மக்காள் அனைவரும் வருக என்றெல்லாம் கூறி அழைக்கிறார் அன்பில் தர்மலிங்கம்.”

அன்று அண்ணா எழுதியது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

அகிலமெங்கும் வாழும் தமிழர்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்து சென்று விம்மலும் அழுகையுமாக பரிதவிக்கும் ஈழத்தமிழர்கள் படும் துயரினையும் ஈழ மண்ணில் முள்வேலி முகாம்களில் துன்பக்கடலிலே தத்தளித்து மரணத்தின் பிடியிலே துடிதுடிக்கும் தமிழர்களையும் நினைக்கையில் நம் அண்ணா இல்லையே! நம் உடன்பிறந்தோர் சிங்களக் கொடியோரால் கொன்று குவிக்கப்பட்ட கொடுமையைத் தடுக்க கதி அற்றுப் போனோமே எனக் கதறுகிறது நம் உள்ளம்.

ஈழத்தில் நடக்கும் அவலத்தைச் சொல்லக் கூடாதா? உலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத வீரச்சமர் புரிந்த விடுதலைப் புலிகளின் பெயர்களைக்கூட உச்சரிக்கக்கூடாதா? நடப்பது என்ன சலாசரின் சர்க்காரா? இடி அமீன் ஆட்சியா? நாஜிகள் தர்பாரா? கருத்து சுதந்திரத்தை எந்த சர்வாதிகாரியும் அழித்துவிட்டு அதிகாரத்தில் நிலைத்தது இல்லை. இத்தகைய கேடும், கொடுங்கோல் ஆதிக்கமும் வளைக்க முற்பட்டால் உடைத்தெறிவோம் என போர் முழக்கம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால்தான் 1967 இல் அண்ணாமலை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் இளந்தமிழர் சமுதாயத்தை அண்ணா அறைகூவி அழைத்தார். ஆதிக்கக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போர்தொடுக்க அழைக்கிறேன் - அறிவுப் போர் - பொதுநலப் போர் - சமுதாயத்தை செம்மைப்படுத்திட புனிதப்போர் நடத்திட வாரீர்.

1949 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் தி.மு.கழகம் தனது இயக்கத்தை நிறுவுவதற்கு ஒன்பது திங்களுக்கு முன்னரே கருத்துரிமை குறித்து அண்ணா சொன்னது - அன்று எழுதினால், பேசினால் அடக்குமுறைச் சட்டம் பாயும் என மிரட்டுகிற சர்க்காருக்கு சவுக்கடியாய் அமைகிறது.

“இன்றைய அரசிலே பேச்சுரிமை கொலை செய்யப்படுகிறது. மக்கள் உணர்ச்சி உள்ளவர்கள், வெறும் மரக்கட்டைகள் அன்று! மண் பதுமைகளுமன்று!
பேச்சுரிமை என்பது எவர் ஆட்சியிலும் இருந்து தீரவேண்டிய அடிப்படையான உரிமைகளில் ஒன்றாகும்.

பேச்சுரிமையை கல்லறைக்கு அனுப்புகின்றார்கள். அடக்குமுறைப் பாணங்கள் பாய்ந்து சென்ற வண்ணமே உள்ளன. எதேச்சதிகார வெறி, உச்சிக்குப்போய் ஊர்த்தாண்டவமாடுகிறது. அணையும் தீபத்தின் கடைசிச்சுடர் நிலையோ இந்த ஆளவந்தாருக்கு என்று ஐயம்வந்து நிற்கிறது நம் கண்களின் முன்னால்.

எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் பேசி அவற்றுக்காகப் போரிட்டு, ஆட்சி பீடம் அமர்ந்தோர்தான் இன்றைய ஆளவந்தார்கள். எனினும் அதிகாரம் கையில் இருப்பதால் மாற்றுக் கட்சியினர் பேனாவையும், எழுத்தையும் தடுத்து முறித்து விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்விளைவாகவே.... வழக்குத் தொடர்ந்தும், விடாது தொல்லைகள் தந்தும் வருகின்றனர். இதுவரையில் பொறுத்திருந்து விட்டோம். இனியும் பொறுத்துப் போவதாக எண்ணமில்லை. உரிமையை நிலைநாட்ட உரிமைப்போர் தொடுக்கத் தயங்கோம்.”

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை காக்க சங்கநாதமாய் எழுந்த அண்ணா கூறுகிறார் : மக்களுடைய உணர்ச்சியை அடக்குமுறைச் சட்டம் தடுக்க முற்பட்டால் அப்படி அணைபோடும் தடைகளை உடைத்தெறிந்து மக்கள் சக்தி பிரளயத்தின் வெள்ளமாய் பாய்ந்து செல்லும். ஆணவம் அகங்காரம், அதிகாரச் செல்வாக்கு, செல்வச் செருக்கு ஆகியவை எந்த உருவத்தில் ஆதிக்கம் செலுத்த தலைதூக்கினாலும் அந்த ஆதிக்க கொடுமையை அடக்கு முறை பிடியினை அடியோடு முறித்து எறியுங்கள்” என அறப்போருக்கு அறை கூவி அழைத்தார் அண்ணா.

தான் கண் மலர்ந்த காஞ்சிபுரத்தில் 1942 இல் மறுமலர்ச்சி மன்றம் அமைத்தவர் அண்ணா. அந்த அண்ணாவின் இலட்சிய கீதம் பாடும் வானம்பாடிகள்தாம் நாம் என்பதால் அண்ணா உருவாக்கிய இயக்கத்தில் சுயநல குடும்ப அரசியலும், சூது மதியினர் ஆதிக்கமும், பொதுநலம் பேணாத தன்னல வெறியும் தமிழ் இனம் காக்கும் கடமை மறந்த கயமையும் தலைதூக்கி விட்டதால், அந்த இழிநிலையைப் போக்க திராவிட இயக்கமும், தமிழ் இனமும் மறுமலர்ச்சி காண 16 ஆண்டுகளுக்கு முன்னர் தர்மயுத்தம் தொடங்கிய நாம் தியாகத் தணலில் பூத்த நம் அமைப்புக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டினோம். மறுமலர்ச்சி குறித்து அண்ணா கூறியதை இங்கே நினைவூட்டுவோம்.

“தன்னைத்தான் அறியத் தொடங்கிய பிறகு தமிழன் தான் இழந்தவைக்காகத் தேடத் தொடங்குகிறான். தேடிக் கொண்டும் இருக்கிறான். தனது அழிவுக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்ததுபோல் இன்று தமிழரிடையேயும் எழுச்சி உண்டாகி இருக்கிறது. இந்த மறுமலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கிறோம்.

தமிழ் மொழி துவங்கி தமிழ்நாடு என்ற எண்ணம்வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது. வழிதவறி அலைந்தவன் நேர்வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது செந்நாய் சீறினாலும் சிறுத்தை உறுமினாலும் சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை விட்டு நாம் அகலோம் என்ற உறுதிகொள்ள வேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?”

இத்தகைய மறுமலர்ச்சி, இன எழுச்சி இயல்பு. இதுபோல் பல்வேறு நாடுகளில் நடந்து உள்ளன. ஆனால், இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை.

15, 16 ஆவது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலே பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின.
பிரிட்டனிலே டியூடர் மன்னர் காலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத் துறையிலே சீர்திருத்தம், மக்கள் மன்றத் துறையிலே மாறுதல்கள், கலையிலே ஓர் புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளிவந்தன.

தன்னாட்டினர்
தன்மொழிப் பற்று
தன்மானம் ஆகியவை
தாண்டவமாடின
பின்னரே பிரிட்டன் பலமுள்ளதாயிற்று

பிரிட்டிஷ் கப்பல்கள் திரைகடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்கள் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது.

ஐரோப்பாக் கண்டத்திலே அறிவுலகமும், வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும் விதமான புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், ரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள், அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது! இறந்தது!

இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தான் போகிறது

“கடல் அலையை
கைத்தடி கொண்டு
அடிக்க முயலுவோனின்
கை சலிக்குமேயொழிய
அலை சலிக்காது”

ஆனால், மற்ற நாடுகளிலே, நடந்ததற்கும், இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள் வெறும் பழமை விரும்பிகள். இங்கு எதிர்ப்பவர்கள் பழமை விரும்பிகள் மட்டுமல்ல, இன்று இருக்கும் முறையினால் ஆதிக்கம் செலுத்திவாழும் கூட்டத்தினர்.

மறுமலர்ச்சி பழமையையும் பாழாக்குமோ என்பது அல்ல, அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமே என்பதே அவர்களின் திகில். எனவே தான், இங்கு எதிர்ப்புக் கடுமையாக இருக்கிறது. இந்தக் கடுமையைப் பொருட்படுத்தாமல் புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னணிப் படையினர் தேசத்துரோகி என்று ஏசப்பட்டு, தூற்றப்பட்டு வருகின்றனர்.

ஆனால், அந்த முன்னணிப் படைபோட்டு வைக்கப் போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும். மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து சென்று வாழ்வார், என்பது திண்ணம்.

மறுமலர்ச்சி என்பது மாண்புகளை மாய்த்திடும் நஞ்சு அல்ல. மாண்புகளை மாய்க்கும் நச்சுப் பூச்சிகளை அழித்திடும் முறை” என்றார் அண்ணா.

தமிழ்நாடு எனும் தோட்டத்தில் கள்ளி காளான்களைக் களைந்தெறிந்து, மண்டிக் கிடக்கும் முட்புதர்களை வெட்டிவீழ்த்தி, தோட்டத்தைத் துப்புரவு செய்வோம். தடைபட்டுக் கிடந்திடும் தென்றல்காற்று உட்புகுந்து வீசட்டும். துர்நாற்றம் தூரவிலகட்டும். பட்டமரம் துளிர்க்கட்டும். பசுமை செழிக்கட்டும். பாழ்மண்டபமான உலவிடவும் முடியாத சோலை மீண்டும் எழிற் பூங்காவாகத் திகழட்டும். உயர் எண்ணங்கள் மலர்ந்திடட்டும். புத்தம் புதிய எண்ணங்கள், புத்தம் புது ஆராய்ச்சிகள், காலவேகத்தையொட்டி ஏற்பட்டுள்ள கருத்து மாற்றங்கள் நமது சிந்தனைப் பூங்காவினுள் தென்றலென தெளியவும் தெம்பும் பிறந்திட வழியமைப்போம்! வாரீர்! வாரீர்! இதுவே நமது வேலை! வேலைச்சுமை என்பேன்!

நம்மவர் வாழ்ந்தவிதம் காண்போம்!
அவ்விதம் நாமும் வாழ்வோம்!
அதற்குத் தடையாக உள்ளனவற்றைத்
தகர்த்தெறிவோம்!
நம்மை உணர்வோம்!
உண்மை உருவினைத் தெரிந்து கொள்வோம்!
அப்பெருமித வாழ்வினை
மீண்டும் படைத்திடுவோம்!
திடநோக்குடன் பாடுபடுவோம்
என்று உங்களை அழைக்கின்றேன்.

தூரதூர தேசங்களில் எல்லாம் பல்வேறு தட்பவெட்பங்கள் படைத்திட்ட பெரும் நிலப்பரப்புகள் எங்கிலும் புகழ்க்கொடி நாட்டிப் பரப்பிய புகழ் பூத்த பொற்காலம் கண்ணெதிரே தெரிகின்றது. நமது மரபு வழிப் பொற்காலம் காண்போம்! வாரீர்!

நம்மால்தான் இருண்ட சூழ்நிலைகளைக் கிழித்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட முடியும்! தடைக்கற்களைத் துச்சமென மதித்துத் தொண்டுள்ளம் காட்டும் வழி நடப்போம்!
சமுதாயத்திற்காக கடமையாற்றுவோம் என்ற தன்னம்பிக்கையோடு புறப்படுங்கள்! வாழப் புறப்படுங்கள்; உமது வாழ்வின் வளங்காணும் நேரத்துடன், சமுதாய நலன் கண்டிடும் நெஞ்சத் துடிப்பும் உமைவிட்டு அகலாதிருக்கட்டும்! வெற்றி நமதே!”

இவ்விதம் எழுத்தோவியம் தீட்டினார் அண்ணா.

தமிழர் வரலாறில் வாராது வந்த மாமணியாய் உதித்தவர் அண்ணா. அவரது உள்ளம் ஆகாயம் போல் பரந்த தாய்உள்ளம். அவர்தம் சிந்தனையும், செயலும் மடமைக் காடுகளை அழித்திட்ட நெருப்பு வெள்ளம். அறிவுப் புனலும், பாசத் தென்றலும் இணைந்திட்ட அண்ணா எனும் நந்தவனத்தில் வாசமலர்கள் என்றும் வாடாது மணம் வீசும். அறிஞர் அண்ணா தமிழ் குலத்துக்கு எந்நாளும் வழிகாட்டும் தூயவர். அண்ணா எனும் பட்டறையில் வடிக்கப்பட்ட வார்ப்படங்கள் நாம். பட்டம், பதவி, கோட்டை, கொடிமரம், அதிகாரம் நமக்கில்லை. ஆனால், அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் வீரர் கூட்டம் நாம். திராவிட இயக்கக் குறிக்கோளையும், கோட்பாட்டினையும் நெஞ்சில் அணையாத சுடராக ஏற்று இருப்போம் நாம்.

நாம் பிறந்த பொன்னாட்டுக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி, பகுத்தறிவு பாதையைச் செப்பனிட்டு சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டத்தின் அங்கீகாரம் வழங்கி இன்பத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏகாதிபத்திய இந்தி நுழையவிடாமல் தடுத்து நேர்மையின் சிகரமாய், எளிமையின் ஏந்தலாய், மனிதநேயத்தின் இமயமாய், அரசியல் நாகரிகத்திற்கு ஓர் இலக்கணமாய், முதல்வர் எனும் பதவிக்கு புகழ்மகுடம் சூட்டியவராய், தமிழ்க் குலத்தின் மணிவிளக்காய், காலங்களை வென்று வாழும் அறிஞர் அண்ணாவின் ஒரு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது.
இன்னும் பலப்பல நூறு நூறு ஆண்டுகள் அண்ணாவின் புகழ் ஓங்கிட, கனவுகள் நனவாகிட அவர் காட்டிய மறுமலர்ச்சி வழி அமைக்கும்.

பொதுவாழ்வுத் தோப்பில் இலையுதிர் காலம் மட்டும் ஏற்படுவதில்லை. கனி குலுங்கும் காலமும் உண்டு என்றார் அண்ணா. வெற்றிக் கனிகள் நமது தோட்டத்திலும் குலுங்கிடும் காலமும் நம்மைத்தேடி வரத்தான் செய்யும்.

என் உயிரினும் இனிய கண்ணின்மணிகளே, தீரமும், தியாகமும் நிறைந்த நம் இயக்க வரலாற்றில், திக்கெட்டும் பரணி பாடும் வரலாற்றுச் சாசனம் ஆகப் போகிறது இந்த மாநாடு.
சர்வபரித் தியாகத்துக்கும் தம்மை அர்ப்பணிக்கும் கூட்டம்தான் நமது கூட்டம் என்பதைத் தமிழர் உலகம் உணரப்போகிறது.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம், வீடு, வாசல் என்ற சுயநல வலைகளை அறுத்து எறிந்து, தமிழர் நலம் காண விண்ணில் சிறகு விரிக்கும் இலட்சிய வானம்பாடிகள் நாம் என்று நாளைய உலகம் சொல்லத்தான் போகிறது.

அதற்கான அரங்கேற்றம்தான் திருச்சி மாநாடு.

இந்த இயக்கம், நாம் அனைவரும் சேர்ந்து கட்டியது.

விதைத்தீர்கள், முளைவிடக் கண்டு மகிழ்ந்தீர்கள்; உரம் தந்தீர், நீர் பாய்ச்சினீர், வேலி அமைத்துப் பாதுகாத்தீர், வெட்டுக் கிளிகள் நுழையவிடாமல் தடுத்தீர்.
வளர்ந்து ஓங்கி நிற்கின்றது. வலிய விருட்சம் ஆகிவிட்டது.

துயருற்றோருக்கெல்லாம் சரணாலயமாக, ஆயிரமாயிரம் கிளைகளை விரித்துப் பரந்து நிற்கின்ற இந்த விருட்சத்தின் ஆணிவேரும், சல்லி வேரும் நீங்களே.
தமிழர் தாயகம் காக்கும் கற்பக விருட்சம்தான் நாம் கண்ட இயக்கம்; அண்ணாவின் கொள்கை காக்கும் இயக்கம் என்று வருங்கால வரலாறு வாழ்த்தத்தான் போகிறது.

சக்திக்கு மீறிக் கைக்காசைச் செலவழித்தும், கடன் வாங்கிப் பயணப்பட்டும், பதினைந்து ஆண்டுகளாக இயக்க நிகழ்ச்சிகளை வாகைக் காட்சிகள் ஆக்கிய நீங்கள், இப்போதும் தவறாது வருவீர்கள்.

நாளும் சாலை விபத்துகள் பெருகிவரும் நிலைமையையும் கருதி, அதிக வேகம் கொள்ளாமல், விழிப்போடும் கவனத்தோடும் பயணித்து மாநாட்டுக்கு வாருங்கள் என அழைக்கிறேன். மாநாடு நிறைவுற்று, அண்ணாவின் கொள்கை காக்கும் தூதர்களாய், ஊர் திரும்பும் நீங்கள் பத்திரமாக வீடு போய்ச் சேருகிறவரை, உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே நான் ஆழ்ந்து இருப்பேன் என்பதும் நீங்கள் அறியாதது அல்ல.

இருகரம் கூப்பி மீண்டும் அழைக்கிறேன்.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா, பீடு கெழு விழாவாய், தமிழ்க் குலத்தின் நலிவு நீங்கச் சூளுரைக்கும் விழாவாய், வெற்றிக் காவியம் படைக்க வீறுகொண்டு வாருங்கள் என அழைக்கிறேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்
வைகோ

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)