பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு விருதுநகர் - செப்டம்பர் 15, 2013 தீர்மானங்கள்

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மருத்துவம், மனித உரிமை, சர்வதேசம், சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள், அறிவிப்புகள், சொற்பொழிவுகள்

Date: 
Sun, 15/09/2013

 

 

 

 

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு
விருதுநகர் - செப்டம்பர் 15, 2013

தீர்மானங்கள்

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்த நாள் விழா,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2013) விருதுநகரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1

நாடாளுமன்றத் தேர்தலில்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழல் அரசை அகற்றுவோம்!

காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆன ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறித் திளைத்து இருக்கின்றது. நாட்டின் 66 ஆண்டுகால ஆட்சியில், மன்மோகன்சிங் அரசு காலத்தில் நடந்த இமாலய ஊழல்களால் இந்திய நாடே தலைகுனிய வேண்டிய நிலை உலக அரங்கில் உருவாகி உள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் ரூ 1.86 இலட்சம் கோடி, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை எழுப்பினார். உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த ஊழல் வழக்குகளை விசாரித்து வருகிறது.

மேலும் மராட்டியத்தில் இராணுவத்தினருக்கு வீடு கட்டும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் ரூ 3,000 கோடி ஊழல், ரூ 70,000 ஆயிரம் கோடி செலவில் டெல்லியில் நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ரூ 3,600 கோடி செலவில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல், இராணுவத்திற்கு டிரக் வாகனங்கள் வாங்கியதில் ஊழல் என, அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது என்றும், மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஊழல் காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றுவதை இலக்காக கொண்டு வியூகம் வகுப்பது என்றும் இந்த மாநாடு பிரகடனம் செய்கிறது.

முன்மொழிபவர் : வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் உயர்நிலைக்குழு உறுப்பினர்

வழிமொழிபவர் : டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்டச்செயலாளர்

தீர்மானம் 2

பொருளாதார இறையாண்மை மீட்டு எடுப்போம்

மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், இந்தியப் பொருளாதாரம் பெரும் அபாயகரமான கட்டத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது.

1991 இல் காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகள், உலகமயம் - தனியார்மயம் - தாராளமயம், 22 ஆண்டுகளில் இந்திய நாட்டை திவால் ஆகும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது.

சமச்சீரான வளர்ச்சி இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நாட்டின் 80 சதவீதமக்கள் தாங்கொணாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். உற்பத்தி தொழிற்துறை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு உள்நாட்டு தொழில்கள் முற்றிலும் சிதைந்துவிட்டன.

நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கியதால், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்து இருக்கின்றது.

ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ 70 ஆக வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேளாண்மைத் தொழில் நலிவு அடைந்து, இதுவரை 2 1/2 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இதை நம்பி உள்ள கோடிக்கணக்கான சிறுவணிகக் குடும்பங்களின் வாழ்வு பறிக்கப்படுகிறது.

தொலைபேசித்துறை, மின்சார உற்பத்தித்துறை விமான போக்குவரத்து, இராணுவத்தளவாட உற்பத்தி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து, நாட்டின் பொருளாதார இறைமையை அந்நிய நிறுவனங்களிடம், காங்கிரஸ் கூட்டணி அரசு அடகுவைத்து விட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் ‘பொருளாதார சீர்திருத்தங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பப்பெற மாட்டாது; இன்னும் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்’ என்று, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இன்றி கருத்துத் தெரிவித்து உள்ளார்.

இந்திய நாட்டின் பொருளாதார இறையாண்மையை மீட்டு எடுக்கவும், தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகளைச் செயற்படுத்தவும், மத்தியில் மாற்று அரசு ஒன்றை அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று மறுமலர்ச்சி தி.மு.க.கருதுவதுடன் அதற்காக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மக்களை தயார்படுத்தும் பணியில் முழுவீச்சில் இறங்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முன்மொழிபவர் : பாலவாக்கம் க. சோமு காஞ்சி மாவட்டச் செயலாளர்

வழிமொழிபவர் : வேலூர் என். சுப்பிரமணி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்

தீர்மானம் 3

தமிழ் ஈழமே தீர்வு

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஈழ விடுதலைக்காகப் போராடுகிறது.

முள்ளிவாய்க்கால் கோரப்படுகொலைகளுக்கு பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொது வாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஜ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் பிரகடனம் செய்தார்கள்.

இந்தக் கருத்து, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த, ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம், சுதந்திரத் தமிழ் ஈழத்தை அமைப்பதையும், ஒரே இலக்காகக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும் தரணி எங்கிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

முன்மொழிபவர் : வழக்கறிஞர் வீரபாண்டியன் சட்டதுறைச் செயலாளர்

வழிமொழிபவர் : த. முனியாண்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்

தீர்மானம் 4

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது;

அந்த அமைப்பில் இருந்து, இலங்கையை வெளியேற்ற வேண்டும்

பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள அரசை, அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குரல் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் மான உணர்வு உள்ள தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கும் நிலையை மாற்றுவதற்காகவே , தமிழர்களின் புதைகுழியின் மீது, தமிழ்க்குலத்தின் மரண ™ஓலம் ஒலித்த இடத்தில், காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17,18 தேதிகளில் கொடியவன் ராஜபக்சே தலைமையில் நடத்துவதற்கு இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதன் மூலம் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற வேண்டிய கொலைபாதகன் ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்புக்கே தலைவர் ஆகி விடுவான். நீதியை புதைகுழிக்கு அனுப்பவே இந்திய அரசும், சிங்கள அரசும் வஞ்சகமாகச் செயல்படுகின்றன.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி, இனக்கொலை செய்த குற்றவாளி இராஜபக்சேவை தப்பிக்க வைக்க, தொடர்ந்து துரோகம் இழைக்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு.

சுமார் 25 லட்சம் பூர்வகுடி தமிழர்களை நாடற்றவர்களாக்கிய கொடுங்கோலன் இராஜபக்சே ஆட்சியாளனாக இருக்கின்ற இலங்கையில் நவம்பர் 2013 இல் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும்;

ஈழத்தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும் காமன்வெல்த் அமைப்பை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : ஆர்.டி.மாரியப்பன் திருப்பூர் மாவட்டச்செயலாளர்

வழிமொழிபவர் : வீர. தமிழ்ச்செல்வன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச்செயலாளர்

தீர்மானம் 5

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக!

தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நாள்தோறும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கும், சாலை விபத்துக்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கும், தமிழ்நாடு எல்லா வகையிலும் சீரழிந்து வருவதற்கும் முழு முதற்காரணம் தமிழக அரசு நடத்திவரும் “மதுக்கடைகள்தான்”.

தமிழ்நாடு போற்றிப் பின்பற்றிய விழுமிய பண்பாட்டு அடையாளங்கள் தொலைந்து வருவதும், மேற்கத்திய கலாச்சாரச் சூட்டில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாய் இளைய சமுதாயம் தம்மை இழந்து வருவதும், தமிழ்நாட்டின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் கவலை அடையச் செய்து உள்ளது.

மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி,அதில் ஒரு பகுதியை இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு செலவிடுவது என்பது, கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.

இலட்சக்கணக்கான உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் சொற்ப வருமானத்தையும் ‘டாஸ்மாக்’ கடைகளின் மூலம் சுரண்டிவிட்டு, அவர்களைச் சார்ந்த குடும்பங்களை தெருவில் நிறுத்திவிட்டு, நலத்திட்டங்களை அளிக்கிறோம் என்று விளக்கம் அளிப்பதை எந்த ஒரு மக்கள் நல அரசும் செய்யாது.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுகள், கூச்சம் இன்றி இந்த அநீதியை மக்களுக்கு இழைத்து வருகின்றன.

மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க சிலுவைப்போரை பிரகடனம் செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ‘முழு மதுவிலக்கே! எங்கள் இலக்கு!’ என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 12 இல் நெல்லை உவரியில் தொடங்கி, 2013 ஏப்ரல் 29 இல் ஈரோடு வரை மூன்று கட்டமாக 38 நாட்கள் 1100 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அதன் விளைவாக, இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல ஊர்களில் பெண்களும், இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.

தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டு இருப்பதை உணர்ந்து கொண்டு, தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : ந. தில்லைசெல்வம் குமரி மாவட்டச்செயலாளர்

வழிமொழிவோர் : இராணி செல்வின் மாநில மகளிர் அணித் துணைச்செயலாளர்

கிரிஜா சுப்பிரமணியன் மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர்

தீர்மானம் 6

உணவு பாதுகாப்புச் சட்டம்

இந்தியாவின் கூட்டு ஆட்சி முறைக்கு எதிராகவும், மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கவும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றது. காங்கிரஸ் அரசின் திட்டங்களால் நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, மறுபுறம் 75 சதவீத மக்கள் உணவுக்கு வழியின்றி அல்லல்படுவதால் உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று கூறி, உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைபடுத்துவது முரண்படாக இருக்கின்றது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோக முறையை அடியோடு சீர்குலைக்கவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. மாநில அரசுகளின் கருத்துகளை அறிந்து, நாடாளுமன்றத்தில் தேவையான விவாதங்களை நடத்தி, முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் ஏற்று, முறையாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக, குறைபாடுகள் நிரம்பிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் மூலம் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு கண்டனம் தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் 36.78 இலட்சம் மெட்ரிக்டன் அரிசியை கிலோ ரூ.3 விலையிலேயே தொடர்ந்து வழங்க வேண்டும் என்று, மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : எம்.டி.சின்னசெல்லம் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்

வழிமொழிபவர் : கே.எம்.ஏ. நிஜாம் அரசியல், ஆலோசணை குழு உறுப்பினர்

தீர்மானம் 7

தாய்மொழிக்கல்வியைத் தடுக்காதே!

தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 2013-14 ஆம் ஆண்டு கல்விப் பருவத்தில் தமிழ்நாடெங்கும் ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை, ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப் பயிற்றுமொழிப் பிரிவும் இருக்கும். ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்பும் இருக்கும். தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்பில் மாணவர் சேர்க்கை மேலும், மேலும் குறையும். இதைக் காரணம் காட்டி, தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளை அரசு மூடிவிடும்.

இப்போது ஒன்றாம் வகுப்பு தொடங்கி +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாக உள்ளது. தமிழ் அவ்வாறு கட்டாய மொழிப்பாடமாக இல்லை. அது போதாதென்று, அறிவியல், சமூகவியல், கணிதம், வரலாறு, வணிகவியல் என அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலமொழி மூலமே கற்க வேண்டும் என்று அரசு திட்டம் வகுத்துச் செயற்படுகிறது.

தமிழ்நாட்டின் கல்வி முழுமையாக ஆங்கில மயமாகிவிட்டால், தமிழ்மொழியின் பயன்பாட்டுத்தேவை அற்றுப்போய், தமிழ்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும்.

சொந்தச் சிந்தனையும் அறிவுத்திறனும் தாய்மொழிவழிக் கல்வி மூலம்தான் உருவாகும் என்பது உலகக் கல்வி வல்லுநர்களின் முடிவு .

எனவே, தமிழக அரசு ஆங்கில மொழிவழி பயிற்றுத் திட்டத்தைக் கைவிட்டு, தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்கு ஆக்கம் தர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது

முன்மொழிபவர் : ப.ஆ. சரவணன் நெல்லை மாவட்டச்செயலாளர்

வழிமொழிவோர் : திண்டுக்கல் கி. இராமசாமி அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
செ. திவான் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்

தீர்மானம் 8

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்!

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்தொழிலுக்குச் செல்லும் நமது தமிழக மீனவர்களை, சிங்கள் கடற்படை சுட்டுக் கொல்வதும், அவர்களை கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்வதும், மீனவர்களின் உடைமைகளை நாசமாக்குவதும், அன்றாடச் செய்திகள் ஆகிவிட்டன.

இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் வேட்டையாடப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை, தமிழக மீனவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்து உள்ளனர். இன்று கச்சத்தீவுக்கு அருகில் செல்லவும் முடியாத நிலைமையில் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

இலங்கையின் அத்துமீறல்களை தட்டிக்கேட்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என்று உபதேசிப்பதும், கச்சத்தீவு விவகாரம் முடிந்துவிட்டது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் புதுடெல்லிக்கு வந்து கூறி இருப்பதை அப்படியே வழிமொழிவதும், இலங்கை இந்தியாவின் நட்புநாடு என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கூறுவதும் கடும்கண்டனத்துக்கு உரியதாகும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா-இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடற்பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் எந்த நாட்டுக்கும் கொடுக்கப்படவில்லை” என்று, உண்மைக்கு மாறான தமிழகத்திற்கு பச்சைத் துரோகமான கருத்தைத் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : வேளச்சேரி பி. மணிமாறன் தென் சென்னை மாவட்டச்செயலாளர்

வழிமொழிவோர் : நக்கீரன் மாநில மீனவரணிச் செயலாளர்
கோட்டாறு கோபால் தணிக்கைக் குழு உறுப்பினர்

தீர்மானம் 9

கூடங்குளம் அணு உலையை அகற்றுக!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசு அமைத்து உள்ள அணு உலை, தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து இருக்கின்றது. அணு உலைகளால் ஏற்படும் கதிர் இயக்கம் மனித குலத்தை எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதற்கு, 1978 இல் மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவும், 1986 இல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ரஷ்யாவும் சான்றுகளாக உள்ளன.

2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் நாட்டின், புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், 80 சதவீத ஜப்பானியர்கள் அணு உலைக்கு எதிராக வாக்கு அளித்து இருக்கின்றனர்.
ஜெர்மனி, புதிய அணு உலைகள் திறக்கத் தடைவிதித்து உள்ளதுடன், பழைய அணு உலைகளையும் மூடிவருகிறது.

2034 ஆம் ஆண்டுக்குள், அனைத்து அணு உலைகளையும் மூட சுவிட்சர்லாந்து அரசு முடிவு எடுத்து உள்ளது. இன்று உலகில் உள்ள 205 நாடுகளில், 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு அணுமின் நிலையங்களைச் சார்ந்து உள்ளன. உலகில் கிடைக்கும் யுரேனியத்தில் 23 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை.

அணுமின் நிலையங்களின் செயல்பாட்டில் இருந்து உண்டாகும் அணுக்கழிவுகள் வெளியேற்ற முடியாதவை. அவற்றை அழிக்க ஆக்கபூர்வமான முறையில் எந்தத் திட்டமும் இதுவரை நடைமுறையில் இல்லாததால், அணு உலை இயங்கும் பல நாடுகள் தவித்துக் கொண்டு இருக்கின்றன.

அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் ரத்தப்புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் முதலிய கொடிய நோய்கள் பரவுவதாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெளிவாக்குகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி இடிந்தகரையில் இரண்டு ஆண்டுகாலமாக மக்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு இடிந்தகரை மக்கள் நடத்திவரும் அணு உலைக்கு எதிரான போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

மாறி வரும் உலக மக்களின் கண்ணோட்டத்தை உணர்ந்து கொண்டு, மத்திய அரசு, கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்றும்

இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் மேலான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக நிபந்தனை இன்றித் திரும்ப பெற வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : வழக்கறிஞர் எஸ். ஜோயல் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர்

வழிமொழிபவர் : எஸ்.பெருமாள் நெல்லை மாநகர் மாவட்டச்செயலாளர்

தீர்மானம் 10

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்கு முறைக்குழு அமைத்திடுக!

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி இறுதித்தீர்ப்பை அளித்தது. இதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்புகளுக்குத்தான், காவிரி நீரை தேக்கி வைத்திருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி மற்றும் ஹேரங்கி ஆகிய அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணிக்கவும், தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடவும் சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்ட உடனேயே மத்திய அரசு, நடுவர் மன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளவாறு இவ்விரு அமைப்புகளையும் உருவாக்கி இருக்க வேண்டும்.

மாறாக, கர்நாடக மாநிலத்தின் வஞ்சகத்துக்குத் துணைபோகும் வகையில் மத்திய அரசு அமைத்துள்ள சட்டபூர்வ அதிகாரமற்ற காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது.

எனவே, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெறும் வகையில், நடுவர் மன்றம் தெரிவித்தவாறு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக்குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும் என்று, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : பரணி கே. மணி கரூர் மாவட்டச் செயலாளர்

வழிமொழிவோர் : வழக்கறிஞர் எஸ். வெற்றிவேல் சட்டத்துறைச்செயலாளர்
டாக்டர் வி.எஸ்.சுப்பாராஜ் மாநில மருத்துவரணி செயலாளர்

தீர்மானம் 11

மணல் கொள்ளையைத் தடுத்திடுக!

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு, பெண்ணையாறு போன்ற 33 ஆற்று நீர்ப் படுகைகளில், அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு இயற்கை வளம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற மணல்கொள்ளை இப்போதும் தங்கு தடையின்றித் தொடர்கிறது.

மணற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது குறித்து, கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று சென்னை உயர்நீதிமன்றம், ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

தமிழக ஆறுகளைப் பாதிக்காத வகையில் மணல் அள்ளப்படுவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு ஆற்றிலும் எந்த அளவு ஆழத்தில் மணல் அள்ளலாம் என்றும் குறியீடு நிர்ணயிக்க வேண்டும் என அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இதுபோலவே தாமிரபரணி மணல் கொள்ளை தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அளித்த தீர்ப்பிலும் சுட்டிக் காட்டியது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, ஆளும் கட்சியினர் அதிகாரிகள் கூட்டாக, மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இதன் விளைவாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் கார்னெட், இலுமனைட், ரூட்டைல் ஜிர்கான், மோனசைட் ஆகிய தாதுமணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த தாதுமணல் கொள்ளையைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்

2013, ஆகஸ்டு 5 ஆம் தேதி, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் நாடு முழுவதும் மணல் எடுக்கும் இடங்களில் மணல் அள்ளத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை ஏற்று சட்டவிரோத மணல் கொள்ளைகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : சீமாபஷீர் அமைப்புச் செயலாளர்

வழிமொழிவோர் : என். செல்வராகவன் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
வழக்கறிஞர் ம.கார்கண்ணன் தணிக்கைக் குழு உறுப்பினர்

தீர்மானம் 12

தென்னக நதிகளை இணைத்திடுக!

வருங்கால சமுதாயத்தின் நலனைக் கருத்திற்கொண்டு இந்திய நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் என இந்திய நாடளுமன்றத்தில் 2000ஆம் ஆண்டு மே திங்கள் 5ஆம் நாள் தனி நபர் மசோதா கொண்டு வந்து அனைத்து கட்சிகளையும் ஆதரித்துப் பேசவைத்த சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் நமது பொதுச்செயலாளர் வைகோ அவர்களே ஆவார்.

இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசிடம் நதிகள் இணைப்பு குறித்து தீர்க்கமான பார்வையோ தெளிவான செயல் திட்டங்களோ இல்லை என்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்பதோடு வருங்காலத்தில் நிலவக்கூடிய பெரும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதுகாத்திட நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் எனவும், முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : குழித்துறை அ. ஜெயராஜ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்

வழிமொழிவோர் : ஆ. மோசஸ்சுந்தரம், தீர்மானக்குழுச் செயலாளர்
சாத்தூர் எஸ்.கண்ணன் மாநில இலக்கிய அணிப் பொருளாளர்

தீர்மானம் 13

இரயில்வே திட்டங்களை நிறைவேற்றுக!

தென்தமிழ்நாட்டின் கல்வி, சமூக, பொருளாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் சிவகாசி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்த போது விருதுநகர் முதல் செங்கோட்டை வழியாக கொல்லம்; தென்காசி முதல் திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை 247 கிலோ மீட்டர் தூர அகல இரயில் பாதை திட்டத்தை பெற்றுத்தந்து பெரும் சாதனை படைத்தார்கள்.

இன்றைய மதிப்பீட்டில் சுமார் 2 ஆயிரம் கோடியிலான இத்திட்டத்தின் செங்கோட்டை முதல் கொல்லம் வரை 200 கோடி ரூபாய் மதிப்பிலான அகல இரயில்ப்பாதை வேலைகள் முற்றுப்பெறாமல் 13 ஆண்டுகாலமாக ஆமை வேகத்தில் நடந்துவருகிறது என்பதற்கு உதாரணமாக நடப்பு ஆண்டில் ரூபாய் 20 கோடி மட்டுமே இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும்,

செங்கோட்டையில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக ஈரோடு வரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தினசரி இரயில் இன்னும் இயக்கப்படவில்லை என்பதோடு இந்த இரயிலை கோவை வரை இயக்கிடவும், இவ்வழித்தடத்தில் பெங்களுர் வரை தினசரி இரயிலையும், மும்பை வரை வாராந்திர இரயிலையும், இயக்கிட வேண்டும் எனவும்,

மிக முக்கிய ஆன்மீகத்தலமாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் சென்னை செல்லும் விரைவு இரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

தென்மாவட்டங்களில் கல்வி, தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விருதுநகர் சந்திப்பு இரயில் நிலையத்தை இரயில்கள் வந்து புறப்படும் வகையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்திட வேண்டும் எனவும்,

கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் தொடர் முயற்சியின் விளைவாக கொண்டு வரப்பட்ட விருதுநகர் முதல் அருப்புக்கோட்டை வழியாக மானமதுரை வரை செல்லும் 67 கிலோ மீட்டர் தூர அகல இரயில் பாதையில் அமைந்துள்ள பகுதி மக்கள் பயன் பாட்டிற்கு விருதுநகர் சந்திப்பில் இருந்து சென்னை, பெங்களூர் சென்று வரும் பயணிகளுக்கான இணைப்பு இரயில்களை இயக்கிட வேண்டும் எனவும்,

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ; மணியாச்சி முதல் தூத்துக்குடி வரை விரைவான போக்குவரத்துக்காக இரட்டை இரயில் பாதைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும்,

விருதுநகரில் இருந்து சென்னை வரை மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விருதுநகரில் இருந்தே மின்சாரசக்தியின் மூலம் இரயில்களை இயக்கிட வேண்டும் எனவும், விருதுநகர் முதல் குமரி வரை முழுமையாக மின்பாதை விரைந்து அமைத்திட வேண்டும் எனவும்,

சிவகாசி - திருத்தங்கல் சாலை; சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலை ; விருதுநகர் இராமமூர்த்தி சாலை ஆகியவற்றில் நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிவருகின்ற இரயில்வே மேம்பாலங்களை விரைந்து அமைத்திட வேண்டும் எனவும்,

விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை - குமரி -

சென்னை - செங்கோட்டை; சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் கூடுதலாக சரக்கு இரயில்களை இயக்கிட முன் வர வேண்டும் எனவும் இந்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : க.விநாயகமூர்த்தி, விருதுநகர் மாவட்டப்பொருளாளர்
வழிமொழிவோர் : டாக்டர் ஜி. தமிழ்மணி, மாநில மருத்துவரணி துணைச்செயலாளர்
ஆர்.கோதண்டராமன், விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
கு.குமரேசன், விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
சூலக்கரை மா.இலட்சுமணன், விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்

தீர்மானம் 14

மதுரையில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குக!

தென்மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும், பல்வேறு அரபுநாடுகளிலும் வேலை செய்து வருகின்றார்கள் என்பதோடு இந்நாடுகளுக்கு வணிகத் தொடர்பும் உள்ளதை கருத்தில் கொண்டு மதுரை விமானநிலையத்தில் இருந்து அரபுநாடுகளுக்கும், கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சர்வதேச விமானச்சேவை அளித்திட வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் : தேனி எஸ். சந்திரன், தேனி மாவட்டச்செயலாளர்

வழிமொழிவோர் : வழக்கறிஞர் ஆ. வேல்முருகன், சட்டத்துறை துணைச்செயலாளர்

கம்மாபட்டி வெ.இரவிச்சந்திரன்,தலைமைச் செயற்குழு உறுப்பினர்

வி.தாமோதரக்கண்ணன், தீர்மானக்குழு உறுப்பினர்

‘தாயகம்’                                  தலைமைக் கழகம்
சென்னை-8                           மறுமலர்ச்சி தி.மு.க.
15.09.2013

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)