திலீபனுக்கு வீரவணக்கம் மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 26/09/2017

 

 

 


திலீபனுக்கு வீரவணக்கம்

மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ

 

ஜெனீவாவில் உள்ள ஐ,நா, மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் 2017 செப்டெம்பர் 26 ஆம்நாள், வைகோ அவர்கள் இரண்டு முறை உரை ஆற்றினார்.

 

முதல் உரை

 

இந்த நாள்,செப்டெம்பர் 26 ஆம் தேதி தமிழர்களுக்குத் துக்க நாள் ஆகும். 1987 செப்டெம்பர் 26 ஆம் தேதியன்றுதான். தமிழ் ஈழத்தின் மாவீரனும் தியாகியுமான திலீபனின் உயிர்ச்சுடர் அணைந்தது. இலங்கையின் தமிழர் தாயகத்தில், வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளுக்காக, செப்டெம்பர் 15 இல் உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 12 ஆம் நாள் தியாகதீபம்  திலீபன்  உயிர் நீத்தார்,

 

1987 ஜூலை 29 ஆம் தேதி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நயவஞ்சகமமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். வெகுபுகழ் குவித்த பிரபாகரன் அவர்கள் சுதுமலையில், ஆகஸ்ட்  4 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றும்போது, எங்கள் மீது இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை எங்கள் விருப்பத்திற்கு எதிராகத் திணித்து இருக்கின்றது. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கி விடும். ஈழத்தமிழர்களை அடிமைகள் ஆக்க முயலும் என்று குறிப்பிட்டார்.

 

அயர்லாந்து மக்களின் விடுதலைக்காக மகத்தான உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தியாகி பாபி சாண்ட்ஸ், 1981 மே 5 ஆம் தேதியன்று உயிர் நீத்தார். உலகெங்கிலும் உள்ள மனித உரிமைக் காவலர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். எங்கள் மாவீரன் திலீபன், ஒரு சொட்டுத்  தண்ணீர்கூட அருந்தவில்லை. இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் கணைக்கால் இரும்பொறை, சிறைச்சாலையில் அவமதிக்கப்பட்டதற்காக தண்ணீர் பருகாமலேயே உயிர் நீத்ததைப் போல, திலீபனும் தன் ஆவியைத் தந்தார்.

 

மனித உரிமைகள் மீறலின் விளைவுதான் திலீபனின் சோக மரணம் ஆகும். 

 

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தாத அறப்போராட்டத்தை நடத்தியதற்கு சிங்கள அரசின் குண்டுவீச்சும், துப்பாக்கி வேட்டும்தான் எதிர்வினை ஆனதால், விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்த நேர்ந்தது என்பதை, இந்த மனித  உரிமைகள் கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

 

மாவீரன் திலீபனுக்குத் தமிழர்கள் ஆகிய நாங்கள் வீர வணக்கம் செலுத்துகிறோம். சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசத்தை அமைக்கச் சபதம் ஏற்கிறோம்.

 

வைகோ ஆற்றிய இரண்டாவது உரை பின்வருமாறு...

 

மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் அவர்களே,

 

அனைத்துலக நாடுகளின் சட்டத்தின்படியும், கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளின்படியும், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள், சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்கள் ஆவர். அனைத்துலக நாடுகளின் குடிமை அரசியல் ஒப்பந்தத்தில், இலங்கை அரசும் கையெழுத்து இட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 1, எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறுகிறது. இலங்கைத் தீவில் சிங்கள அரசின் இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மிகக்கோரமான இனப்படுகொலை, தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்துகிறது.

 

உலகெங்கிலும்  பல தேசிய இனங்கள், ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவோ அல்லது ஐ.நா.மன்றத்தின் ஏற்பாட்டின் மூலமாகவோ பொது வாக்கெடுப்பு நடத்தி, சுய நிர்ணய உரிமையின் மூலம் சுதந்திர நாடுகள் ஆகி விட்டன.

 

இதோ பட்டியல் இடுகிறேன்;

 

1905 நோர்வே, 1944ஸ்லாந்து, 1958 கினியா, 1990 ஸ்லோவேனியா, 1991 ஜார்ஜியா, குரேசியா, மாசிடோனியா மற்றும்  உக்ரேன், 1992 போஸ்னியா ஹெர்சகோவினா, 1993 எரித்ரியா, 1994 மால்டோவா, 1999 கிழக்குத் தைமூர், 2006 மாண்டிநீரோ, 2011 தெற்கு சூடான் ஆகிய இத்தனை நாடுகளும் பொது வாக்கெடுப்பில் சுதந்திர நாடுகள் ஆகின.

 

1914 இல் மாமேதை லெனின், எல்லா தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று முழக்கம் இட்டார். 1941 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு, அட்லாண்டிக் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

 

இலங்கையில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளானதால், 1976 இல் வட்டுக்கோட்டை  தீர்மானத்தின் மூலமும் அதன்பின்னர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும், இறையாண்மை உள்ள சுதந்திர ஈழத்தமிழ் தேசத்தை அமைக்கப் போராடினர்.

 

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பதெல்லாம், தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், உலகெங்கிலும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்பதுதான்

 

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

தாயகம்                                                          தலைமைக் கழகம்
சென்னை - 8                                                  மறுமலர்ச்சி தி.மு.க.,
26.09.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)