மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்தும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்! வைகோ அறிக்கை
மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்தும்
நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்!
வைகோ அறிக்கை
நுழைவுத் தேர்வு என்ற பெயரில், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, தமிழ்நாட்டில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் காவு வாங்கிய நீட் நுழைவுத் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் மோசடிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மறுமலர்ச்சி திமுக பொருளாளர் மு.செந்திலதிபன், திமுக மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
நீட் நீக்கப்பட வேண்டும், ஏன்? என்றத் தலைப்பில் கழக மாணவர் அணி நடத்தும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று மறுமலர்ச்சி திமுக குரல் கொடுத்து வருகின்றது. அதற்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் கழக மாணவர் அணி நடத்துகின்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர் அணி நிர்வாகிகள், சென்னை மண்டல கழக நிர்வாகிகள் மற்றும் நாட்டின் எதிர்காலமாகிய மாணவச் செல்வங்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
09.08.2024