வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! வைகோ இரங்கல்
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர்
த.வெள்ளையன் மறைவு!
வைகோ இரங்கல்
வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் நுரையீரல் புற்று காரணமாக 76 வயதில் இன்று (10.09.2024) காலமானார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். சாதி, மதம் கடந்து வணிகர்களை ஒரு குடையின்கீழ் திரட்டிய வெள்ளையன் அவர்கள், தன்னலம் சிறிதுமின்றி வணிகர் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.
மே-1 அன்று, மே தின விழாவை தொழிலாளர்கள் கொண்டாடுவதைப்போல, மே 5 அன்று வணிகர் தினத்தை கொண்டாட செய்ததிலும், அன்னிய பொருள்களை புறக்கணித்த இயக்கம் நடத்தியதிலும், ஜி.எஸ்.டி., வாட் போன்ற வரிகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியதிலும் சகோதரர் வெள்ளையன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
தமிழ் பாதுகாப்பு தளத்திலும், தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதிலும், தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து நம்மோடு போராடியதிலும், தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் தீக்குளித்து மடிந்தபோது இறுதி நிகழ்ச்சிகளை முனைப்போடு செய்ததிலும் சகோதரர் வெள்ளையன் அவர்களின் பணிகள் பாராட்டத்தக்கது.
அவரது பிரிவால் துயரத்தில் இருக்கும் நம்முடைய சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கும், வெள்ளையன் அவர்களின் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கத்தினருக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
10.09.2024