முரசொலி செல்வம் அவர்களின் மறைவு; திராவிடர் இயக்கத்திற்கே ஓர் பேரிழப்பு! வைகோ இரங்கல்
திராவிடர் இயக்கத்திற்கே ஓர் பேரிழப்பு!
முத்தமிழ் அறிஞர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையான, முரசொலியை அரை நூற்றாண்டு காலம் தன் தோளில் சுமந்தும், அறிவார்ந்த கட்டுரைகளால் முரசொலியை செழுமைப்படுத்தியும் அரும்பணியாற்றிய முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) இயற்கை அடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு திடுக்கிட்டுப்போனேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை கல்லூரி மாணவர்களின் பாசறையாக உருவாக்கி எண்ணற்ற இளைஞர்களை மொழி உரிமை காக்கும் போராளிகளாக வார்ப்பித்து அண்ணாவும், கலைஞரும் கண்ட கனவை நனவாக்கும் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்ட திராவிட இயக்க கொள்கை வேழம்தான் முரசொலி செல்வம் ஆவார்.
‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகளை அண்மைக்காலமாக தொடர்ந்து எழுதி வரும் முரசொலி செல்வம் அவர்கள், மறைவதற்கு முன்பு கூட முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்கான குறிப்புக்களை தயார் செய்து கொண்டு இருக்கும்போதே, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் மரணத்தை சந்தித்திருக்கிறார்.
முரசொலி வளர்ச்சிக்கும், திமு கழகத்தின் எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட முரசொலி செல்வம் அவர்கள் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்கும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அண்ணா திமுக அரசு நடைபெற்ற காலத்தில் முரசொலி மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டு சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை அரங்கேற்றியபோது முரசொலி செல்வம் அவர்கள் கூண்டில் ஏற்றி விசாரிக்கப்பட்டார். அஞ்சா நெஞ்சுடன் அந்த நிலையிலும் அறிவார்ந்த வாதக்கணைகளை அப்போது தொடுத்து ஆட்சியாளர்கள் அளித்த தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட கொள்கை சிங்கம்தான் முரசொலி செல்வம் ஆவார்!
கடந்த காலங்களில் அவருடன் பழகிய நினைவுகள், முரசொலி செல்வம் அவர்கள் என் மீது அன்பு காட்டிய பல நிகழ்வுகள் பசுமையாக இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. சட்டக்கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்தபோது நடைபெற்ற மாணவர் தேர்தலில் என்னை போட்டியிட வலியுறுத்தி எனக்காக தேர்தல் பணிகளிலும் முழுமையாக முரசொலி செல்வம் அவர்கள் ஈடுபட்டதை, இந்த வேளையில் நான் எண்ணிப்பார்க்கிறேன்.
எவரிடமும் அதிர்ந்து பேசாத பண்பாளர் அவர். அனைவரிடமும் இன்முகத்துடன் நட்பு பாராட்டும் குணம் நிறைந்தவர் அவர். பொதுவாழ்க்கையில் உதாரண புருஷராக விளங்கி அனைவரையும் வியக்க வைத்தவர் அவர். அறிவாற்றல், கடும் உழைப்பு, எதிர்ப்பு கண்டு அஞ்சாமை ஆகிய பண்பு நலன்களுடன் முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர், தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர்களுக்கு தோன்றாத் துணையாக தொண்டாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் போர்வாளான முரசொலி ஏட்டையும் காப்பாற்றி வந்ததில் பெரும்பங்கு முரசொலி செல்வம் அவர்களுக்கு உண்டு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து களங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வாகை சூடி வரும் இந்த நேரத்தில், சங்பரிவார் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடுகளவும் இடமில்லை என்று நாற்பதுக்கு நாற்பது நமது அணி வெற்றிபெற்றுள்ள இந்த நேரத்தில், இமயக் கொடுமுடியான காஷ்மீரத்திலும் நாம் வெற்றியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் முரசொலி செல்வம் அவர்களின் எதிர்பாராத மறைவு நம்மை சோக வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது.
முரசொலி செல்வம் அவர்களின் மறைவு, முரசொலி ஏட்டிற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே பேரிழப்பாகும். அவரது பிரிவுத் துயரால் வேதனையில் துடிக்கும் தமிழக முதல்வர், திமு கழக தலைவர், மாண்புமிகு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முரசொலி செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சகோதரி செல்வி அவர்களுக்கும் முரசொலி செல்வம் அவர்களின் அன்பு மகள் ஜோதிமணி அவர்களுக்கும், முரசொலி நிர்வாகிகள் – வாசகர்கள் ஆகியோருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
10.10.2024 மறுமலர்ச்சி தி.மு.க.