முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும்!

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும்!

January 29, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும்!

வைகோ அறிக்கை

இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954 இல், விதி எண் 6 இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய பாஜக அரசு குறிப்பு ஆணை வெளியிட்டு, அவற்றை மாநில அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அனுப்பி கருத்துக்களை கேட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு நினைத்தால் மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம். மாநில அரசின் ஒப்புதலுடன்தான் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை ஒன்றிய அரசிற்கு பணி இடமாற்றம் செய்ய முடியும் என்று நடைமுறையில் உள்ள விதியைத்தான் பாஜக அரசு திருத்தம் செய்ய முனைந்து இருக்கிறது.

மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்யத் தேவை இல்லை; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., அலுவலர்களை விடுவிக்க மாநில அரசின் தடை இல்லா சான்று அவசியம் இல்லை;
ஒன்றிய அரசு வரையறுத்துள்ள காலக்கெடுவிற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிடினும், அவர் குறிப்பிட்ட தேதியில் இருந்து ஒன்றிய அரசு அதிகாரியாகவே கருதப்படுவார்.

ஒன்றிய அரசின் பணியிட மாற்றத்தில் மாநில அரசுக்கு கருத்து வேறுபாடு எழுந்தால், இறுதியில் ஒன்றிய அரசின் முடிவை ஏற்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழி இல்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு இருக்கும் இந்திய ஆட்சிப்பணி விதி 6 இன் திருத்தங்கள், முழுக்க, முழுக்க ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தை மாநில அரசுகளின் மீது திணிக்கும் முயற்சியாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்து எறிந்து, கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு உலை வைக்கும் இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளன.
‘ஒன்றிய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ள இந்திய ஆட்சிப்பணிகள் விதி திருத்தங்கள், மாநில சுயாட்சிக்கு எதிரானது; ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழலுக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும்’ என்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் எதிர்த்து இருக்கின்றனர்.
மாநில அரசுகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றிய அரசு, இந்திய ஆட்சிப்பணிகள் விதிகள் திருத்தம் குறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மாநில அரசுகளை நகராட்சிகளைப் போல கருதி நசுக்கி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு, ஆட்டிப்படைத்து ஆதிக்கம் செய்ய நினைப்பது மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை செல்லரிக்கச் செய்துவிடும்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக ஆட்சிப்பணி தேர்வு எழுதாமல், வெளியாட்களையும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களையும் நியமிக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, ஆட்சிப்பணி முறைமையை சீர்குலைத்துவிட்டது பா.ஜ.க. அரசு. தற்போது விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசுகளை கிள்ளுக் கீரையாக கருதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை விருப்பம்போல பந்தாடலாம் என்று முடிவெடுத்து இருப்பது அரசுப்பணி நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்துவிடும்.

எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
29.01.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 04-02-2022
Next Post
பம்பரம் சுழலட்டும்..!

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin