மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் தற்போதைய மீனவர் பிரச்சினைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வைகோ கேள்வி
மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில்
தற்போதைய மீனவர் பிரச்சினைப் பற்றி விவாதிக்கப்பட்டதா?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வைகோ கேள்வி
மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில், தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? என்று ஒன்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு 27.07.2023 அன்று பதில் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
கேள்வி எண்-859
(அ) அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைத் தாக்கி, படகுகளை சேதப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) விடுவிக்கப்பட்ட மற்றும் இன்னும் காவலில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஈ) நிலைமையைச் சமாளிக்க இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?
(உ) மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?
(ஊ) மீன்வளம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில், தற்போதைய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதா? பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் வழி காணப்பட்டதா?
(எ) அப்படியானால், அதன் விவரங்கள், இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் பதில்:
(அ முதல் ஈ வரை) சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அரசு தூதரகத்தின் மூலம் இலங்கை அரசிடம் அதுகுறித்து விசாரணை நடத்துகிறது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 2 தாக்குதல்கள் நடத்தப்பட்டு, 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(உ முதல் எ வரை) இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உட்பட அரசாங்கம் உயர் மட்டத்தில் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.
மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்தாமல் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, மீன்பிடித்துறை தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தின் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீன்வளம் தொடர்பான கூட்டுக் குழுக் கூட்டம் அண்மையில் இரு தரப்புக்கும் இடையே 2022 இல் நடைபெற்றது. மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட அனைத்து மீன்பிடி பிரச்சினைகளையும் கூட்டு செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
05.08.2023